Thursday, August 12, 2010

நூல் விமர்சன நிகழ்வு

நூல் விமர்சன நிகழ்வு
உலகமயம் பண்பாடு எதிர்ப்பு அரசியல்

-
லெனின் மதிவானம்-

இடம்; பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம், கொழும்பு-
காலம்: 15- 08- 2010, நேரம்: பி.ப 4.30
தலைமை:
நீர்வை பொன்னயன்

விமர்சன உரைகள்
பேராசிரியர் சபா ஜெயராசா
கலாநிதி செல்வி திருச்சந்திரன்
திரு. செ. கிருஷ்ணா


பதிலுரை:
திரு லெனின் மதிவானம்
ஏற்பாடு : இலங்கை முற்போக்குக் கலை இலக்கியமன்றம்
______________________________________________________________________________________________________________________



திறனாய்வு + நூலறிமுகம்
------------------------------------
உலகமயம் - பண்பாடு - எதிர்ப்பு அரசியல்
-நீர்வை பொன்னையன்-


ஆசிரியர்- லெனின் மதிவானம்
வெளியீடு- இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்.
விலை- ரூ. 250 (இலங்கை)


உலக மயமாக்கல் ஒரு விஷவிருட்சம். அதன் விதைகள் ஒரு நாட்டில் விதைக்கப்பட்டால், அவைகள் பெரும் விருட்சங்களாகி அந்த நாட்டின் பொருள்வளம், மனித வளம், பாரம்பரிய பண்பாடு, மனித விழுமியங்கள் எல்லாவற்றையும் சிதைத்துச் சீரழித்து, அந்த நாட்டை சர்வநாசத்திற்குள்ளாக்கிவிடும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகநாடுகளில் ராணுவ ரீதியில் தலையிடுவதற்குப் பதிலாக தனது அடியாட்களான பல்தேசியக் கம்பெனிகள், சர்வதேச நாணய நிதியம், உலகவங்கி, சர்வதேசபொருளாதாரக் கழகம் ஆகியவற்றினூடாக மேற்கொள்ளும் உலகமயமாக்கல் வாயிலாக அனைத்து நாடுகளையும் தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வருகின்ற செயற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

உலகமயம் என்றால் என்ன? அமெரிக்க மூலதனம் முழு உலகையும் தன் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வந்து, பண்டங்களை மூலதனமாக்குவதற்குப் பதிலாக, மூலதனத்தையே உலகமயமாக்கும் செயல்பாடுதான் உலகமயம். அத்துடன் இலாபத்தைப் பெருமளவில் பெருக்கிக் கொள்ளும் நோக்குடன், மூலதனம் எதுவித தங்குதடையுமின்றி வேகமாக வியாபிப்பதற்கு ஏதுவாக, உலக அரசியல் கட்டமைப்பை தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் பெருமுயற்சிதான் உலகமயமாக்கல். இம் முயற்சியில் மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகின்றது அமெரிக்க ஏகாதிபத்தியம். இதற்கு பண்பாட்டுத் துறையையும் ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாக உபயோகிக்கின்றது. இதற்குப் பல்தேசியக் கம்பெனிகளைப் பயன்படுத்துகின்றது.

மூர்டோக்கின் ,நியூஸ் கோப்பறேசன், சொனி, டிஸ்னி,டைம்வார்ணஸ், விவேண்டி, ஏச். எம். வி. போன்ற ஏழு பல்தேசியக் கம்பெனிகள் அமெரிக்காவின் அனைத்து தொலைக்காட்சி அவை வரிசைகளையும் கட்டுப்படுத்தி, தங்கள் ஆதிக்கத்துக்குள் வைத்திருக்கின்றன. ஹொலிவூட்டின் பெரும்பாலான ஸ்ரூடியோக்கள் இவர்களுக்கே சொந்தம். உலகத்தின் ஒலிநாடா, இசைத்தட்டுச் சந்தையின் 85 வீதம் இக்கம்பெனிகளுக்குச் சொந்தம். நூல் வெளியீட்டுத் துறைகள், தொலைக்காட்சி அலை வரிசைகளின் பெரும்பகுதிகள் இந்த ஏழுபல்தேசியக் கம்பெனிகளுக்கே சொந்தம். சொனி, ஏச். எம்.வி. ஆகிய இரு பல்தேசியக் கம்பெனிகள் இந்தியாவிலும் இலங்கையிலும் ஒளிநாடா, ஒலித் தகடுகள் சந்தையைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. உதாரணத்திற்கு இந்திய சுதந்திரப் போராட்ட வேள்வியில் ஜனித்த வந்தே மாதரம் என்ற புனித தேசிய கீதத்தின் ஆத்மாவை திரைப்பட இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானின் துள்ளலிசையின் மூலம் படுகொலை செய்த பெருமை பல்தேசிய சோனிக் கம்பெனிக்கே உரியது. இதே போல மூன்றாவது உலக நாடுகளின் பாரம்பரிய பண்பாட்டுச் சின்னங்களை, தங்கள் வக்கிர வன்முறை தகரடப்பா இசை மூலம் இதை சீரழித்துக் கொண்டிருக்கின்றன இப்பல்தேசியக் கம்பெனிகள்.

பல்தேசியக் கம்பெனிகளின் மூலதனச் சந்தையைச் சார்ந்தவர்கள் நுகர்வுப்பண்பாட்டை மக்கள் மீது திணிப்பதன் மூலம் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுகின்றனர். குறைந்த முதலீட்டில், குறுகிய காலத்தில் கூடிய லாபத்தைப் பெற்றுக் கொள்வதுதான் நுகர்வுப் பொருளாதார வர்த்தகர்களின் பிரதான நோக்கம். நுகர்வுப் பொருள்கள் எவ்வளவு தரங்குறைந்தவையாக இருந்ததாலும் சரி இப்பொருட்களை இவர்கள் குறைந்த விலையில் இறக்குமதி செய்கின்றனர். இந்த தரம் குறைந்த பொருள்களை நவீன விளம்பர யுத்திகள் மூலம் மக்களின்

மனதைக் கவர்ந்து, இப்பொருள்களை கூடிய விலையில் விற்று கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றனர்.இவர்களது வலுவான ஆயுதம் விளம்பரந்தான். மக்களின் மனங்களை, குறிப்பாக இளைஞர்களின் மனங்களை சுண்டி இழுக்கக்கூடிய வகையில், மிருக உணர்ச்சியையும் வன்முறையையும் தூண்டுகின்ற வகையில் பெண்களின் அரை நிர்வாண ஆபாச விளம்பரங்கள், பதாகைகள், சுவரொட்டிகள், வீடியோக்கள், நூல்கள், ஆகியவற்றை தாராளமாகத் தயாரித்து அல்லது இறக்குமதி செய்து விற்று கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றனர். அதே வேளை எமது பாரம்பரியப் பண்பாட்டையும் கலாசாரத்தையும் சிதைத்துச் சீரழிக்கின்றனர்.

மக்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர்கள் அறியாமலே, அவர்களது மனதை மிகவும் சாதுரியமாக, சூட்மமான வழிகளில் அடிமைப்படுத்தி, மக்களை ஏற்றுக்கொள்ள வைக்கும் விளம்பரத் தந்திரோபாயங்களையும் யுக்திகளையும் இவர்கள் கையாள்கின்றனர். வெகுஜன ஊடகங்களூடாக ஒளி, ஒலி சாதன விளம்பரங்களை, கவர்ச்சிகரமான சுவரொட்டிகள் விளம்பரத் தட்டிகள், பதாகைகள் போன்ற பிரச்சார வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தமக்கு விரோதமானவற்றைக் கூட தம்மை அறியாமலே மக்களை ஏற்றுக் கொள்ளவைக்கும் மனப்பான்மையை உருவாக்குவதும் ஒரு வழிதான் இது. கனவுகளை விற்பனை செய்து மக்களை ஏமாற்றும் முறையாகும் . இப்புல்லுருவிகள் விளம்பரத் துறையில் பெண்களை ஒரு கவர்ச்சிப் பண்டமாகப் பயன்படுத்துகின்றனர். எமது கீழைத்தேச பாரம்பரியத்துக்கும் பண்பாட்டிற்கும் ஒவ்வாத வகையில், பெண் குலத்தையே அவமானப்படுத்தும் வகையில் பெண்களைக் கவர்ச்சிப் பண்டமாகப் பயன்படுத்துகின்றனர். நுகர்வுப் பொருளாதாரத் துறையையும் விளம்பரத்துறையையும் சார்ந்த பெரும்பாலான நவீன சாதனங்களது விளம்பரங்களில் பெண்களை மையப்படுத்தி துகிலுரி படலத்தை நடத்தி வருகின்றனர். பெண்குலத்தையே அவமானப்படுத்துகின்ற இந்த சீர்கெட்ட செயலில் இப்பல்தேசியக் கம்பெனிகள் ஈடுபட்டு வருகின்றன.

அமெரிக்காவில் பெரும்பான்மையான மக்கள் தண்ணீர் குடிப்பது மிகவும் குறைவு. பதிலாக பெப்சி, கொக்கோகோலா பானங்களையே குடிக்கின்றனர். இக் குளிர்பானங்கள் ஒரு விதபோதை தருகின்றன. இப்பானங்களில் கொக்கெயின் செறிவுள்ளதால், நீண்டநாள் பாவனையால் நரம்புத்தளர்ச்சி ஏற்பட வாய்புண்டு. இதனால் சிலநாடுகளில் இப்பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கூட விஞ்ஞான ஆய்வின் பின் சில மானிலங்களில் இப்பானங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அதே வேளை பெப்சி ,கொக்கோகோலா பானங்களின் ஆக்கிரமிப்பால் உள்நாட்டு குளிர்பான உற்பத்தி பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. இலங்கையில் கிராமங்களில் கூட கொக்கோகோலாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியுள்ளது.

பல்தேசியக் கம்பெனிகளில் ஒன்றான மெக்டொனால்ட் நிறுவனம் மரபணு தொழில்நுட்ப முறை தானியத்தால் உணவுகளை தயாரிக்கின்றது. இதனை உட்கொள்ளும் ஆயிரக்கணக்கான மக்களின் உடல் நிலை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு எதிராக பல வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இந்த நிறுவனத்திற்கு பல மில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டதுடன் அம்மாநிலங்களில் இந்த உணவுகள் தடைசெய்யப்பட்டுள்ள. நமது நாட்டில் சில நகரங்களில் மெக்டொனாள்ட், பஸ்கசா ஹப், கே.எவ்.சி. சரியாட் போன்ற றெஸ்ரோறென்கள் ஆரம்பிக்கப்பட்டு இளைஞர்கள் கவர்ந்திழுக்கப்படுகின்றனர். இந்த நிறுவனங்கள் காலப்போக்கில் எமது பாரம்பரிய உணவுகளை உட்கொள்வதிலும், எமது பண்பாட்டிலும் சீரழிவை ஏற்படுத்தும் நிலைமை நிச்சயமாக ஏற்படும்.

எமது நாட்டின் பொருளாதாரம், கல்வி, பண்பாடு அரசில் ஆகிய துறைகளில் இப்பல்தேசியக் கம்பெனிகளால், முன் எடுத்துச் செல்லப்படுகின்ற உலக மயமாக்கலை எத்தைகைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்ற நுண் ஆய்வுகள் பல வெளியாக வேண்டும். இவ்வகையில் முன்னெடுத்துச்செல்லும் பல்தேசியக் கம்பெனிகளின் மக்கள் விரோத, தேச விரோத, எமது நாட்டின் பாரம்பரிய பண்பாட்டை சர்வநாசமமாக்கும் செயல்பாடுகள் போன்றவற்றை தடுத்து நிறுத்தி எமது பண்பாட்டை பாதுகாக்க போராடுவது அவசர அவசியமாக உள்ளது.

மாக்ஸிம் கார்க்கியிலிருந்து முருககையன் வரையில் மறைந்த முற்போக்கு இலக்கிய முன்னோடிகளுக்கான நினைவுப் பேருரையை திரு. லெனின் மதிவானம் நிகழ்த்தியுள்ளார். அந்த நினைவுப் பேருரையின் விரிவாக்கத்தை அவர் நூலாக தந்துள்ளார். இந்த நூலில், திரு.லெனின் மதிவானம் அவர்கள் பண்பாட்டில் உலகமயமாக்கத்தின் தாக்குதலும் புத்துயிர்ப்பும், பண்பாடு தோற்ற மும் வளர்ச்சியும், அதன் மாற்றம், உலகமயமாக்கல் சூழலில் நாம் நோக்கும் நெருக்கடிகள் அவற்றுக்கு எதிராக முகம்கொடுப்பது, போராடுவது போராட்ட யுக்திகள் போன்ற பல விடயங்களை அவர் விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறியுள்ளார். இப்படிப்பட்ட நூல்கள் இன்றய சூழலில் எமக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றன. இந்த நூலை இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம் பதிப்பித்து வெளியிடுவதில் பெருமைப்படுகின்றது. தமது வேலைப் பழுவுக்கு மத்தியிலும் இந்நூலை சிறப்புற ஆக்கித் தந்தமைக்கு இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம் திருலெனின் மதிவானம் அவர்கட்கு நன்றி கூறக்கடப்பாடுடையது.

(லும்பினிதளத்திலும் பதிவாகியுள்ளது)


No comments: