Thursday, July 08, 2010

இரு மொழி அமுலாக்கம்

இலங்கையில் நிர்வாக ,அரசமொழிகளாக இரு மொழி அமுலாக்கம், மற்றும் இனப்பிரச்சினையின் தொடக்கம்
-தர்ஷாயணி லோகநாதன்-


மொழியானது தொடர்பாடலுக்கும் அறிவைப் பெருக்குதலுக்குமான ஒரு கருவியாகும். ஒரு நாட்டில் வாழும் மக்களின் பிரதானமான தொடர்பாடல் மையம் மொழி, அது பெரும்பான்மை, சிறுபான்மை இரு சாராருக்கும் பொதுவானதே. இருப்பினும் பொது வழக்கில் அரச கரும மொழியாக தத்தமது சுய மொழிப் இருப்பது குறித்ததே இன்றைய அச்சம்.

'' உங்களுக்கு இரு மொழியுடனான தேசமா? அல்லது ஒரு மொழியுடனான இரு தேசங்களா வேண்டும் ? எமது நாட்டின் சுதந்திரத்திற்கும் அதன் உட்கூறுகளின் ஒற்றுமைக்கும் ஆனா வழி, சமத்துவம் என்றே நம்புகிறோம் . இல்லையென்றால், ஒரு சிறிய நாட்டிலிருந்து இரத்தம் சொட்டுகின்ற துண்டாகிப் போன இரு நாடுகள் தோன்றும் -''
இலங்கையின் தேசிய மொழியாக சிங்கள மொழி மட்டும் என்று சட்டம் -1956நிறைவேறிய போது கலாநிதி கொல்வின் ஆர் டீ சில்வா தெரிவித்தது .
இன்றும் இதுவே நாட்டில் இரு மொழி அமுலாக்கம் என்றவுடன் ஞாபகத்திற்கு வருகிறது.

அரசியலமைப்புக்கான 16ம் திருத்தச் சட்டத்தின் கீழ் ஏதாவது ஒரு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மொத்த சனத்தொகையில் சிங்கள, அல்லது தமிழ் மொழிச் சிறுபான்மையினரின் விகிதாசாரத்தைக் கருத்திட் கொண்டு ,ஏதேனும் பிரதேச செயலகப் பிரிவொன்றில், சிங்களம், அல்லது தமிழ், அல்லது இரு மொழிகளையும் அரச கரும மொழியாக்கக் கூடிய நிறைவேற்று அதிகாரம் நாட்டின் சனாதிபதிக்கு உண்டு என்பது இங்கு முக்கிய அம்சமாகும். இருப்பினும் இந்நிலை நீண்ட காலமாக தேக்கத்திலேயே உள்ளதும் குறிப்பிடத்தக்கது .

நாட்டில் வாழும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நிரந்தரக் குடி மக்களின் மொழி ரீதியான உரிமையை நசுக்கி விட்டு எந்தவொரு சனநாயகமும் சிங்கள மொழியை தனியே அரச கரும மொழியாக்குவது கண்டிக்கத்தக்கது. மொழி உரிமை தெரியாத சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்கு தடை போடுவதே இது. அரச மொழி தெரியாத ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அரச சேவையின் கதவு மூடப்படக் கூடாது. மூல மொழியில் சேவைகள் நிரந்தரமாக்கப் பட வேண்டும் .

இலங்கையைப் பொறுத்த மட்டில் இரு சிறுபான்மையினரான முஸ்லிம்கள் , தமிழர், இருவரது பொது மொழியாகவும் தமிழ் இருக்கின்றது. ஒருவர் தனது சொந்த நாட்டில் தனது சொந்த மொழியை பூரணமாக உபயோகிக்கக் கூடிய உரிமை சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப் பட்டுள்ள இந்நிலையில் தமிழ் மொழி அரசகரும மொழியாகுதலில் ஏகப்பட்ட சிக்கல்கள்.


இலங்கையில், 1930களிலேயே மொழியுரிமை, உரையாடலுக்குரிய சர்ச்சையாக வெளிவந்து விட்டது. ஆரம்பகாலத்தில் பிரித்தானியக் காலனியாதிக்கத்தில் அரச கரும மொழியாயிருந்த ஆங்கிலத்திற்குப் பதிலாக, சிங்கள, தமிழ் மொழிகளை அரச கரும மொழியாக்குதல் பற்றியமைந்தது அது. ஆனால் சுதந்திரத்துக்குப் பின்னைய இலங்கையில், சிங்கள மொழியை ஒரே அரச கரும மொழியாக்கியமை மூலம் தமிழ் மொழியின் சம அந்தஸ்து மறுக்கப்பட்டமை இனப்பிரச்சினைக்கான உணர்வு பூர்வமான ஆதிக்கமாயிற்று.

அதற்கான சில சட்டரீதியான ஆதாரங்கள் பின்வருமாறு.

# 1965 ம ஆண்டில் பாராளுமன்றத்தில் சிங்கள மொழி இலங்கையின் ஒரே அரச கரும மொழியாதல் வேண்டும் என்ற விதந்துரைப்பு ஏற்படுத்தப் பட்டமை.

# 1972ம ஆண்டு யாப்பின் படி சிங்கள மொழி அரச கரும மொழியாக்கப் பட்டது . தமிழ் மொழியின் உபயோகம் அனுமதிக்கப் பட்டாலும் நாட்டின் நிர்வாக மொழியாகவோ அரச கரும மொழியாகவோ அது இருக்கவில்லை.


#அதே ஆண்டு( 1972 ) மேன்முறையீட்டு நீதிமன்றங்களில், தீர்ப்புகள், மேன் முறையீடுகள், நிகழ்வுகள், அனைத்தும் சிங்கள மொழியிலேயே இருக்கும் என்ற விதந்துரைப்பும் ஏற்படுத்தப் பட்டது . இவை சிறுபான்மை மக்களின் அத்தியாவசியத் தேவைப் புறக்கனிப்புக்கொத்தவையாகும் .

# 1987 இல் இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் பெயரில் தமிழ் மொழி ஒரு அரச கரும மொழியாக 18ம் உறுப்புரை திருத்தியமைக்கப்பட்டு மாற்றப்பட்டது, இருப்பினும் அதன் விளைவுகள் ஏற்படவே இல்லை.

அரசியல் யாப்புக்கள் எப்படித்தான் மாற்றப்பட்ட போதிலும் 2008 ம ஆண்டு உட்படுத்தப்பட்ட ஆய்வின் படி 77 சதவீதத்திற்கு இற்கு மேற்பட்டவர்கள் பொதுத்துறையில் தமிழ் மொழியைப் பயன்படுத்தும் திறன் குறைந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.
மேலும் 2006ம் ஆண்டு வரவு செலவுத்திட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்த 960 திணைக்களகங்களிலும் 114 மட்டுமே, தமிழ் மொழியை அரச கரும மொழியாக்குதலுக்கான நிதி ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு உடன்பட்டிருந்தன. அரச மொழிக் கொள்கையாக தமிழ் மொழியைப் பயன்படுத்துவதட்கு, ௨/3 அரச நிறுவனங்கள் இன்னும் தயாராகவில்லை என்பதையே இது குறிக்கிறது. இதனால் பாதிப்படையக் கூடிய மக்கள் பிற மொழி மட்ட அறிவில்லாத சிறுபான்மையினரே ஆவர்.
# அரச கரும மொழியாக, தமிழ் மொழி- அமுலாக்கம்.
#அரச சேவையில் இணைவதற்கான பரீட்சையின், மொழி மூலமாக தமிழ் அமுலாக்கம்.
#வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில், நிர்வாக மொழியாக தமிழ் மொழி அமுலாக்கம் போன்றன, அமுல்ப்படுத்த சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் பட்டும் இன்னும் இவை சீரான அமுலாக்கத்தில் இல்லை.


தமிழ் மொழி பேசும் மக்களில் அநேகமானவர்கள் ,அதாவது வடக்கு, கிழக்கு, மலையகத்தைச், சார்ந்த மக்களே வாழ்கின்றனர். 2006ஆம் ஆண்டளவில் இவர்களது எண்ணிக்கை 2937900ஆக இருந்ததுடன், நாட்டில் தமிழ் பேசும் சனத்தொகையில் 64 சதவீதமாகிறார்கள் . அதனால் இந்த மாகாணங்களில் தமிழ் மொழியில் நிருவாக சேவைகளை வழங்குதலில் தீவிரமாக்கப்பாடல் வேண்டும்.


தொகை மதிப்பு புள்ளிவிபரத்தினக்களம்2000 ம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்ட கணக்கெடுப்புப் படி இந்த ஆண்டில் 835651 சேவையாளர்கள் இருந்தனர் . தற்போதைய எண்ணிக்கை 900000இலும் கூடியதாக இருக்கும் என நம்பப் படுகிறது.

இலங்கை நிருவாக அரசு ,இலங்கை திட்டமிடல் சேவை , நீதித்துறை அலுவல்கள், இலங்கைப் போலீஸ் பிரிவு, சட்ட அலுவலர்கள், சுங்க சேவையாளர்கள், இலங்கை விஞ்ஞான பொறியியல் சேவையாளர்கள், அரச மருத்துவ சுகாதாரப் பரிசோதகர்கள், கிராம அலுவலர்கள், இலங்கைக் கல்வி சேவையில் இருப்போர் போன்றவர்களுக்கு அறிமுக தமிழ் மொழி அத்தியாவசியமாகிறது. மக்களின் அத்தியாவசியத் தேவைகளுடன் பரீட்சார்த்தம் கொண்டவர்கள் கட்டாயமாக இருமொழிக் கொள்கையுடன் உடன்பட்டிருத்தல் வேண்டும்.


இதன் மூலம்,
# நிர்வாக நடவடிக்கைகளை இரு மொழிகளிலும் எடுத்துச் செல்லக் கூடிய நிலை தோன்ற வேண்டும்.
# அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் அந்தஸ்தானது நேரடியாக பாராளுமன்றத்துடன் தொடர்புடையதாக்கப் பட வேண்டும்.
# சகல பிரஜைகளதும், சகல மட்ட எதிர்ப்பார்ப்புக்களை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டும் .


பல தசாப்தங்களாக நிலவி வரும் இன முரண்பாட்டை சுமூகமாக்குதளுக்கு மொழிப் பன்மைத்துவக் கலாசாரம் அவசியமாகிறது இதற்காக நிர்வாக சீர்திருத்தங்களில் இரு மொழி கொள்கையை அரசு ஏற்க வேண்டும் .


1987ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இரு அரச கரும மொழிக் கொள்கையின் அமுலாக்கத்தின் மோசமான நிலைமையை இப்போது அனுபவித்து வருகிறோம். தமிழ் பேசும் மக்களுடனான தொடர்புகளின் போதும், அவர்களுக்கான சேவைகளை வழங்குதலின் போதும் அவர்களது மொழிப் பயன்பாட்டில் குழப்பமில்லாத நிலை பேணப்பட வேண்டும் என்பது மொழி உரிமை ஆவணங்கள் அதிகரித்தலுக்கான தேவை மட்டுமல்ல, சிங்கள,தமிழ் மொழிகளுக்கிடையிலான, மக்களுக்கிடையிலான சமத்துவ நிலையினை பாரபட்சமின்றிப் உறுதிப்படுத்தக் கூடியதாயும் அமையும் . இனக்குழுமங்களின் மறுக்கப் பட்ட உரிமைகளை பூர்த்தி செய்வதையும் அமையும்.

பல்வேறு கால நிலைமைகளில் அரச மொழியாக்கம் குறித்து பல்வேறு உரையாடல்களும், உறுதிப் படுத்தப் பட்ட போதிலும் அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் என்பது பொறிமுறை ரீதியில் அமுலாக்கத்திட்கு வரவேயில்லை. தேர்தல் சூடு பிடிக்கும் இக்கால கட்டத்தில் இது பற்றி மீள ஆய்வுக்குத் படுத்துவது சிறப்பானதாய் இருக்கும்.


இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் வாழக்கூடிய பதுளை மாநகரசபையில், 450உத்தியோகத்தர்களுள் ஒருவரே தமிழில் எழுத வாசிக்கத் தெரிந்தவர். கொழும்பு தலைநகர, மாநகரசபையில் 12000பேர்களுள் 100பேரே தமிழில் எழுத வாசிக்கத் தெரிந்தவர். ஹட்டன் போலீஸ் நிலையத்தில்250 பேரில் 20பேரும் , கண்டி கச்சேரிப் பதிவாளர் அலுவலகத்தில் 60பேரில் ஒருவருமில்லை.நுவர எலியா ஆதார வைத்திய சாலையில் 450பேரில் 85மட்டுமே, மேலும் இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் 60இல் தமிழ் மொழி மூலம் தகவல் தெரிவிக்கக் கூடியவர் ஒருவருமே இல்லை. இவை அரச காரியாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய புள்ளி விபரங்கள் . மக்களுக்கு அரசிடமிருந்து சேவை தேவைப்படும் இவ்வாறான இடங்களில் சிறுபான்மையினர் புறக்கணிக்கப் படுகின்றமை இங்கு கண் கூடு இவை சில உதாரணங்களாகும ;

இலங்கையில் தமிழ் மொழியை, சிங்கள மொழியுடன் இணைந்து அரச கரும மொழி, மற்றும் நிருவாக மொழியாக்கல் மூலம் , சிறுபான்மை மக்களது பாதுகாப்பு, நிர்வாகத்திறன், பொதுவுடைமை, அரச மற்றும் பிற தொழில் முன்னேற்றம், சமூக ரீதியிலான பாரிய கட்டமைப்பு மாற்றம்,பொருளாதார, கல்விநிலை ஏற்றம் என்பன நாட்டில் ஏற்படக் எதுவாகவிருக்கும் . ஆதிக்க மொழியினது பயன்பாட்டாளர்களின் நிர்ணயம் மாற்றப் படுதலுடன் நாடு ஒரு குடைக்குக் கீழே கொண்டு வரப்படும். இலங்கையில் தற்போதைய சூழ் நிலையில் இது கட்டாயமும் நியதியுமாகும்.


(மேலே கூறப்பட்ட அனைத்து புள்ளி விபரங்களும், சட்டக் கோர்வைகளும் உண்மையான, நம்பகமான தகவல்களே, அரசாங்க புள்ளி விபரத் திணைக்களத்திலிருந்து பெறப்பட்டவை


1948
இல் ஏற்பட்ட அரசியல் மாற்றமானது இலங்கையின் மொழிக் கொள்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இனப்பிரச்சினையை உண்டு பண்ணின.1956இல் திரு. பண்டார நாயகம் அவர்களது ஐக்கிய மக்கள் முன்னணி ஆட்சி பீடம் ஏறியது. ஆட்சிக்கு வந்து 24மணி நேரத்தில் சிங்களம் அரசகரும ,நிர்வாக மொழியாக மாற்றப்படும் என்ற கோரிக்கையுடனேயே அரசு பதவிக்கு வந்தது. சிங்கள மக்களைப் பொறுத்த வரையில் அது ஒரு சிறப்பான நடவடிக்கையாயும் தேர்தல் வாக்கு மூலம் நிறைவேற்றப்படும் உன்னதமான தருணமாயும் இருந்தது .

ஆனால் தமிழ் மொழிக்கு, மக்களுக்கு, அரசினது கடப்பாடு இல்லாத இச் செயல் இனவாதத்தை மேலும் அதிகரிக்கும் செயலாக அமைந்தது. சிங்கள மொழி அரச கரும மொழியாக்கப் பட்டதன் காரணமாக பல தமிழ் அரச ஊழியர்கள் ஓய்வு பெற நிர்ப்பந்திக்கப் பட்டனர். பலர் வெளி நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்குச் சென்றனர். நேரடியாக தமிழர் ஒருவர் அரச சேவையில் இருப்பது குதிரைக் கொம்பாக இருந்தது.
.

சம்பள ஊதிய ஏற்றங்கள் இடை நிறுத்தப்பட்டன. அந்தக் குறித்த காலத்தில் சிங்கள மொழித் தேர்ச்சி பெறாதவர்கள் வலிய வேலைகளில் இருந்து தூக்கப் பட்டனர் .
இந்தச் சந்தர்ப்பத்தில் சட்டம் மூலமும் தமக்கு அநீதி ஏற்பட்டதாக தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

(சிங்களத்தில் பணியாற்ற முடியாதவர்கள் மொழிமாற்றத்திற்கு பழக்கமடைவதட்கு ஒரு கணிசமான கால நீட்சியை வழங்கினர். )

சிங்கள மொழியை தேசிய மொழியாக்கப்படுவதட்கான சட்டத்தினை ஏற்படுத்தவல்ல பாராளுமன்றக் குழுவானது 1960ஜனவரி முதலாம் திகதி வரை ஆங்கிலம், மற்றும் தமிழை சாதாரண நிர்வாகத்தின் பொது பயன்படுத்திக் கொள்ள ஒரு உப சரத்தினை வழங்கியது, )மேலும் இன்னொரு உப சரத்து அமுல்ப்படுத்தப்பட்டது. 1956யூன்5 இல் சிங்கள மொழி அரச கரும மொழியாக்கப்பட்டது. 1956ம் ஆண்டின் 33 ம் இலக்க அரசகரும மொழிகள் சட்ட ஏற்பாட்டின் படி தமிழ், தமிழ் அல்லது ஆங்கில மொழி மூலம் அரச கருமத்தில் இணைந்து கொள்பவர்கள் மூன்றாண்டுகளில் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் பட்டது.


பெரும் பாலும் அந்தக் காலத்தில் ஆங்கில மொழி மூலம் கற்றறிந்தவர்கள் தமிழர்களே எனும் உண்மை நிலையைப் போக்குவதற்காகவே சிங்கள மொழிய அரச கரும மொழியாக்கினர் என்பர் அறிந்தவர்கள்.

மக்கள் ஐக்கிய முன்னணி ஆதரவாளரும் இலங்கை பல்கலைக் கழகத்தின் பொருளியல்துறை விரிவுரையாளருமான சிறந்த கல்விமான், எப்.ஆர். ஜெயசூர்ய , இந்த அரைச் சட்டத்திற்கு எதிராக, பாராளுமன்ற வளாகத்துக்கு முன்பாக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து இந்த உப சரத்தை மறுசீரமைப்பதாக பிரதமர் பண்டாரநாயக்கா தெரிவித்ததும் தான் ஓய்வுக்கு வந்தார்.

இதன் போது, எஸ்.ஜே .வி .செல்வநாயகம் ( தமிழரசுக் கட்சி )தலைமையில் காலி முகத்திடலில் சிங்கள அமுலாக்கத்திட்கு எதிராக சத்யாக்கிரகம் நடை பெற்றது 1956. ஜூன் 5ம திகதி . இதுவே தமிழர் உரிமைக்காக எடுக்கப் பட்ட முதலாவது போராட்டமாகும்.


இந்த நிலையில் எப்.ஆர். ஜெயசூர்ய அவர்களது போராட்டக் கோரிக்கைக்கே பிரதமர் அவர்கள் தலை சாய்த்ததும்,
(1947சோல்பரி அரச யாப்பின் 29(௨)உருப்புரைப்படி) கோட்டீஸ்வரன் என்கிற ஓர் தமிழ் அரச உத்தியோகத்தர், சிங்கள மொழியில் குறித்த காலத்துக்குள் போதிய தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக அவருடைய சம்பள உயர்வு இடை நிறுத்தப்பட்டது. எனவே அவர் தனக்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பாக மாவட்ட நீதி மன்றத்தில் அரசுக்கு அதற்கான அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்தார்.


(அப்போது இலங்கையில் உயர் நீதி மன்றம் அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளை எடுத்துக் கொள்வதில்லை ) அதை மாவட்ட நீதி மன்றம் ஏற்றுக் கொண்டது. ஆனால் இதனை மறு பரிசீலனை செய்ய மேன்முறையீட்டு நீதி மன்றத்துக்கு முறையீடு செய்தது.


அதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அரச பதவியில் இருப்பவர் அரசுக்கெதிராக வழக்குத் தொடுக்க முடியாது என்றும் அரசு ஊழியர்களின் சேவையை அரசு மாற்றி அமைக்க முடியும் என்றும் கூறி மாவட்ட நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பைத் நீக்கி, வழக்கை தள்ளுபடி செய்தது.


privy souncil என்கிற எமது நாட்டில் மறு பரிசீலனை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் பரிசீலனை செய்யும் அதிகாரம் கொண்ட பிரித்தானிய அரச நீதி மன்றத்தை கோடீஸ்வரன் நாடினார்.


1947 சோல்பரி அரச யாப்பின் படி 29ம் உறுப்புரைக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றம் அமுல்ப்படுத்தியுள்ள அதிகார பூர்வ சிங்கள மொழிச் சட்டம், சட்ட விரோதமானது என privy council உண்மையாகத் தீர்ப்பளித்தது.


இதனால் இலங்கை அரசு ( பண்டார நாயக்க தலைமையிலான ) பெரும் சிரமத்தை எதிர் நோக்கியது.


# இலங்கையின் இறைமை பற்றியும்,
# ஏனைய இனங்களின் உரிமைகளைப் பாது காப்பது பற்றியும் மக்கள் சிந்திக்கத்தொடங்கினர்.ஆனால் இவை எதையுமே அரசு செயற்படுத்த வில்லை. மேலதிக சிறு பான்மையினர் அடக்கும் கொள்கைகளைப் பிரயோகித்து அடக்கு முறையையே கையாண்டது.
இருப்பினும் அரசிடம் இருந்த அடிப்படைப் பயம் காரணமாக, இது தொடர்ந்து பிட் போடப்பட்டு இலங்கை குடியரசு யாப்பு அமுலுக்கு (1972)வந்தவுடன் முதல் காரியமாக சட்ட ரீதியாகவே மேற்படி தீர்ப்பை செல்லுபடியற்ற தாக்கினர்.


# இது தமிழ்க் கட்சிகளின் சமஷ்டிப் போக்கிற்கு வழி வகுத்தது.


தமிழ்ப்பிரதேசங்களில் இரு மொழி மூலமும் நிருவாகம் மேற்கொள்ளப் பட வேண்டும் என்பதை அடிப்படையாக்கக் கொண்டே சமஷ்டி எண்ணக் கரு ஆரம்பத்தில் வைக்கப் பட்டது. மேலும் இவ் இரு பிற தேசங்களையும் ஒருங்கிணைக்க மத்திய அரசு அமைய வேண்டும் என்றும் கருதப் பட்டது.


இனக்குழுக்களுக்கிடையிலான தவறான அபிப்பிராயத்தை முதலிலேயே நீக்கி விடத் துணிந்த பண்டரநாயக்க,தான் சேர்ந்து போதலைக் காட்டுவதற்காக, சமஸ்டிக் கட்சியுடன் ஒப்பந்தத்திற்குத் தயாரானார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அதிகாரப் பரவலாக்கத்தின் பேரில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதில்லை என்றும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியில் நிருவாகம் நிகழும் என்பதைச் சட்ட ரீதியாகக் கொண்டு செல்லலே அவ் ஒப்பந்தத்ததின் பிரதான நோக்கம்.


பண்டா- செல்வா ஒப்பந்தம் 1957.6.26 இல் நடை பெற்றது. இந்த உடன்படிக்கை முன்னில் சிவில்ப் போராட்டங்கள் தற்காலிகமாக கைவிடப் பட்டன.


ஆனால், இது நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கு ஒப்பானதென்று அன்றைய எதிர்க்கட்சி, ஜே. ஆர் ஜெயவர்த்தனவின் தலைமையில்- கண்டி, தலதா மாளிகையை நோக்கி பாத யாத்திரையை மேற்கொண்டு , கண்டனங்களையும் தாக்குதல்களையும் மேற்கொண்டது, 1958ஆம் ஆண்டு 9 ம திகதி

ரோசமீட் வாசச்தலத்திலுள்ள (பிரதமர் ) அவரது வீட்டின் முன் சுமார் ௨௦௦ பௌத்த துறவிகளும் 300 பேர் கொண்ட சிங்கள மக்கள்க்கூட்டமும், பௌத்த துறவி விமலவன்ச தேரரின் தலைமையில் ஒப்பந்தத்தை நீக்கும் படி சாகும் வரை உண்ணா விரதம் இருந்தனர்.

இதனால் ஒப்பந்தம் ரத்தாக்கப் பட்டது. திருப்திப் படாத பிக்குகள் ஒப்பந்தத்தைக் கிழித்துப் போடுவதாக எழுதி வாங்கிக் கொண்டனர் . இதனால் சிங்கள ஸ்ரீ எழுத்துக்கு எதிராக தமிழ் மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இது தொடர்ந்து பெரும் கலவர நிகழ்வுக்குள்ளாகியது. பண்டாரநாயக்க போராட்டக் குழுக்களுடன் முழுமையாக இணைந்தார். தேசிய மொழிச் சட்டத்துக்கான, தமிழ் மொழிக்கு எதிரான, பிரேரணையை முன் வைத்தார்.

தொடர்ந்து பிரதமரால் பண்டா - செல்வா ஒப்பந்தம் கிழிக்கப்பட்டது .

முழுமையான சிறுபான்மை ஒடுக்கம் இதன் போது தலை நீட்டியது .பின் தமிழரசுக் கட்சியின் ஐந்தாவது மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள் மீது , புகையிரதத்தில் தாக்குதல் நடை பெற்றது 1958 .இல். இதுவே இனப்பிரச்சினைக்கான அடித்தூண்டு கோலாக இருந்தது . இவ்வாறான பல சம்பவங்கள் இலங்கையில் இரு மொழி ஆதிக்கத்திற்கு எதிராகவே காணப் படுகின்றன.

இவ்வாறான இலங்கையின் பெரும் கலவரங்கள் அனைத்துமே இரு மொழிக் கொள்கையின் அடிப்படையிலேயே எழுந்தவை. மொழிப் பயன்பாட்டுத் திட்டமானது மக்களது அடிப்படை அறிவை மழுங்கச் செய்வதாயே இங்கு காலங்காலமாக இருந்து வருகின்றது. இந்த நிலை மாற வேண்டும்.
இறையாட்சியின் அட்சிமையின் பெயரில் ஒரு சனநாயக நாட்டின் முழு நிகழ்வும் மக்கள் மொழியினால் நடை பெற வேண்டும் என்பதே இயல்பியல்ச் சட்டம். இலங்கையில் மட்டும் இக்கொள்கை மாறியது ஏன்?.........

அவரவரது மொழிப் பயன்பாடு என்பது ஒரு சிறு பிள்ளையை தானாக இயங்க வைப்பது போன்ற நிகழ்வு. இங்கு வன் புகுத்துதல் என்பது கட்டாயமாக தவிர்க்கப்படல் வேண்டும்.

இந்த விழிப்புணர்ச்சியானது பெரும்பான்மை மக்களை விட சிறு பான்மையினருக்கே அதிகளவில் தேவை. வன்முறை கலாசாரத்தை அரசியலில் கொள்வதாதது நிரந்தர சுமூகமற்ற தீர்வையை நீடிக்கச் செய்யும் ஒரு செயல்.


மக்களுடைய செயல் நிலையை மாற்றுவது சனநாயகத்தின் தலையாக கடமை.
புதியவொரு அரசியலைமைப்பு உருவாகப் போகிற இந்தக் கால கட்டத்தில் இந்தச் செயலைச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருப்போம்........

No comments: