Tuesday, November 26, 2019

எங்கள் தோழர் சண்முகம் வல்லி காலமானார் ..

-கரவைதாசன்- 
தோழர் முறிகண்டி என அறியப்பட்ட எங்கள் தோழர் சண்முகம் வல்லி அவர்கள் தனது அறுபத்தி ஒன்பதாவது வயதில்   காலமாகிவிட்டார். என்ற செய்தி மிகுந்த துயரத்தினை வரவழைத்து நிற்கின்றது. 

இலங்கைத்தீவினில் இனவாதமே அரசியலின் மூலதனமாக போயுள்ள சூழலின் இடையே, அறுபதுகளில் கார்ல்மாக்சின் மூலதனத்தினை செவிவழியே உள்வாங்கிக்கொண்டு பொதுவுடைமைச்  சமுதாயத்தின் முதல் படி சோஷலிச சமூகமே எனும் அரசியல் பட்டறிவில் வடபகுதியின் கன்பொல்லைக் கிராமத்தில் சமத்துவத்துக்கான போராட்டத்தில் தனது ஆற்றல் மிகு கரத்தில் ஆயுதம்  ஏந்தி மாற்றம் வேண்டி நின்றவர்  எங்கள் தோழர். 

1966களில் தொடங்கிய போராட்டம் 1971வரை நடைபெற்றது. அன்று தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் தலைமறைவாக வாழவேண்டிய சூழல். தலைமறைவில் ஒருநாள், அப்போது அவர் வாழ்ந்த வீடு ஸ்ரீநாரத வித்தியாலயத்தின் மைதானத்தினை ஒட்டியிருந்தது ஒரு மாலை வேளை போலீஸ்காரர்கள்  அவரை கைது செய்ய சூழ்ந்து கொண்டார்கள். ஒரு சாஜனும் இரண்டு கான்ஸ்சடுபிளுமென மூவர் அவரை  சூழ்ந்து நின்றனர். வேறு வழியின்றி மூவரையும் அடித்து சாய்த்து விட்டு தப்பித்துக் கொண்டார். அவ்வழக்கு உட்பட சிவானந்தன் எனும் சாதிவெறியனை நெல்லியடிச் சந்தியில் வைத்து  தாக்கியது, சாதியம் பேசிய வல்லிபுரம் அவர்களின் மஹாத்மா சினிமா தியேட்டரினை சேதப்படுத்தியது, நெல்லியடி தேனீர்க்கடைப்   பிரவேசம், ஆனையிறவில் வைத்து சாதிவெறியர்களின் வாகனங்களைத் தாக்கி  திருப்பிவிட்டது, கொடிகாமத்திலும் சாவாகச்சேரியிலும் சாதிவெறியர்களின் வாகனங்களைத் தாக்கி  திருப்பிவிட்டது என  இவர் மீதும் இவரது தோழர்கள் மீதும் எட்டு வழக்குகள் போடப்பட்டிருந்தன. 1) முத்தன் தவராசா. 2)ஆழ்வான் சிவகுரு. 3)நல்லதம்பி இளையதம்பி. 4)இராசன் மார்க்கண்டன். 5)  சண்முகம் வல்லி. 6)பசுவர் செல்வராசா. 7)வேலுப்பிள்ளை கிருஸ்ணபிள்ளை என எழு பேர் மீது   கைக்குண்டு தயாரித்து தாக்கிய வழக்குகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டதில் இவர் ஐந்தாம் எதிரியாக அடையாளம் காணப்பட்டார். 

வடமராட்ச்சிப் பகுதியில் நெல்லியடி, மந்திகை, பருத்தித்துறை போன்ற நகரங்களில் இரட்டை குவளை முறை ஒழிக்கபட்டு பொதுஇடங்களில் இன்று சமத்துவம் பேணப்பாடுகின்றதென்றால் இவர்   சிந்திய இரத்தமும் வேர்வையும் கூட ஆகுதியாகிப் போயிருக்கின்றது. அவரது குடும்பத்தின் துயரில் பங்குகொண்டு தோழருக்கு செங்கொடியினை தாழ்த்தி கனத்த இதயத்துடன் அஞ்சலிகள். 


No comments: