Thursday, October 10, 2019

அசுரன் திரைப்படம்

கிளர்த்திய நினைவுகள்...... 

-கரவைதாசன்-சென்ற சனிக்கிழமை 05.10.19 வம்றுப் தியேட்டரில் "அசுரன்" திரைப்படம் பார்க்க கிடைத்தது. பூமணியின் வெக்கை நாவலின் கதைக்கருவினை இயக்குனர் வெற்றிமாறனும் அவரது குழுவினரும் திரையில் பேசுபொருள்
ஆக்கியிருந்தனர்.

நடிகர் தனுஷ் தொடக்கம் பசுபதிவரை நடிகர்கள் அப்பாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தார்கள். 

திரைக்கு வெளிச்சம் பாச்சியபோது பூமணியின் கதா பாத்திரங்கள் விம்பமாக  துலாம்பரமாக தெரிந்தன, இல்லை வாழ்ந்தன. ஆரவாரமில்லாமல் எரிச்சலுட்டாத இசை. கிராமங்களை அச்சொட்டாக உருவகப்படுத்தியிருந்த கலை,  பார்த்துப் பார்த்து செதுக்கியிருந்தார் வெற்றிமாறன். தொகுப்பு சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. சண்டைக்காட்சியில் சில சினிமாத்தனங்கள் இருந்தன வர்த்தக நோக்கில் அவை தவிர்க்க முடியாதவை. அதனிடையும் தனுஷ் தன் நடிப்பாற்றலை தெறிக்கவிட்டுள்ளார். 

தனுசும் அவரது சின்ன மகனும் போலீசிடம் அகப்பாடாமல் காட்டையண்டிய நீர்நிலைக்கூடாக பதுங்கிப் பதுங்கி செல்வதுடன் படம் தொடங்குகிறது. நீரில் நனையாமல்  கையில் வைத்திருக்கும் பைகளை அவர்கள் பத்திரப்படுத்துகிறார்கள். உருண்டை கவனம் எனும் கதையாடல் அவர்களுக்கிடையில் நடக்கின்றது. பார்வையாளர்களுக்கு பின்பு தான் தெரிய வரும் உருண்டை என்பது தனுஷின் மகனால் தயாரிக்கப்பட்ட  கைக்குண்டுகள் என . 

விரியும் கதையும் கதை காட்சிப்படுத்தப்பட்ட இடங்களும் என் நினைவுகளை கிளர்த்தி என்னை நிலைகுலைய வைத்துவிட்டன. ஆனையிறவு உப்பளம் , குறிஞ்சாத்தீவு  அதையொட்டிய சிறு பத்தைக் காடுகள் அதே மணல்தரை அதை தெரிந்தவர்களுக்கு படம் காட்சிப் படுத்தப்பட்ட இடங்களை ஒத்துப் போவதை அவதானிப்பர்.  மட்டுமன்றி ஓலைகளால் வேயப்பட்ட வீடுகள் திரைப்படத்தில் காட்டப்பட்ட கிராம மக்களிடையே காணப்பட்ட ஒற்றுமை, சொந்தமாக  தயாரிக்கப்பட்ட குண்டு  என்பன நான் வாழ்ந்த கன்பொல்லைக் கிராமத்தினையும் அறுபதுகளில் அவர்கள் நடத்திய சாதியத்துக்கு எதிரான போராட்டங்களையும் நினைவுக்கு கொண்டுவந்தன. இன்று கன்பொல்லையில் ஒரு ஓலைவீடுகூட இல்லை என்பது வேறு கதை. 

தனுஷின் பாத்திரம் கன்பொல்லைக்கிராமத்தின் சமத்துவத்துக்கான முன்னணிப் போராளிகள் மு.தவராசா, ஆ.சிவகுரு, இ .மார்கண்டன், ப.செல்வராசா, ந.இளையதம்பி, ச.வல்லி, வே.கிருஸ்ணபிள்ளை சி.காசியன் யாவரையும் ஒத்துப் போவதை நான் உணர்ந்தேன்.  

ஆயினும் திரைப்படத்தின் இயங்கு நிலை எனது ஒரு பத்து வயது காலத்துக்கு என்னை   பின்னோக்கி சரித்தது. தனுஷ் எனது தகப்பனார் தவத்தாராகவே (மு.தவராசா ) எனக்குத் தெரிந்தார். 1966 தொடக்கம் 1971 வரை சவாகச்சேரி, கொடிகாமம், பலாலி, தையிட்டி, ஆனையிறவு, எழுதுமட்டுவாள், சங்கானை, வன்னி  என அவர் தலைமறைவாக வாழ்ந்த  இடங்களையும் அந்த வாழ்வையும்  எனக்கு நினைவு மீட்டின. 

அப்போது அவருக்கு அக்கா, நான், தங்கை என மூன்று பிள்ளைகள் இருந்தோம். தலைமறைவான இடங்களுக்கு  ஆண் பிள்ளையான என்னை மட்டும் அழைத்துப் பார்ப்பார்.  அவரது மூத்த சகோதரர் அபிமன்யு அவரிடம் என்னை அழைத்துச் செல்வார். 

ஆனையிறவு குறிஞ்சாத்தீவு உப்பளம் அவர் அதிக காலம் தலைமறைவாக இருந்தவிடம் அங்கு அவரது உறவினர்கள் நிறையப்பேர் இருந்தார்கள். நான் ஐயாவை பார்க்கப் போகும்போது இயக்கச்சியிலேயே  பஸ்சிலிருந்து  இறங்கிவிடுவோம் . அங்கு  எங்களை அழைத்துச் செல்ல நடராசா மாமா, லக்குணம் மாமா அல்லது செல்வநாயகம் அத்தான், அல்லது சின்னராசா அத்தான்  அநேகமாக வந்து நிற்பார்கள். காட்டு வழியால் எங்களை அழைத்துச் செல்வார்கள்.  அந்த நிலச்சாயல் அப்படியே திரைப்படத்தில் ஒட்டியிருந்தது. செய்தியறிந்த போலிஸ் ஒரு தடவை நடராசா மாமாவை பிடித்து நையப்புடைத்தார்கள் அப்போதும் அவர் மறைவிடத்தினை காட்டிக்கொடுக்கவில்லை. திரைப்படத்தில்  இந்த ஒத்துப் போன பாங்குகள் தொண்டையை  அடைத்து கண்ணீரை வரவழைத்தன.

தமிழ்திரையுலக இயக்குநர்கள் கற்பனைகளை புனைந்து சினிமா ரசிகர்களை உணர்வு  தொற்றுதலுக்குள்  ஆட்படுத்தி வைத்திருக்கின்றனர். அந்த வாலாயத்துள்ளும்  சில செய்திகளை வைத்திருக்கும் வெற்றிமாறனை பாராட்டாமல்  இருக்கமுடியவில்லை. கல்வியும் ஒரு சிறந்த ஆயுதம் தான். (இதனை அடைய நாம் பெளத்தத்தில் சேர வேண்டியிருந்தது. என்பது எங்கள் கதை.) என் நினைவுகளைக்   கிளர்த்திய படம். நன்றி வெற்றிமாறன்.....
No comments: