Thursday, February 22, 2018

முத்து அங்கிள்

-சந்துஸ்-
முத்து அங்கிள் ...
சப்பாத்தி முள்ளும் சரியாக முளைக்காது * என்று சொல்லப்பட்ட மண்ணிலே அரிதாகப் பூத்த அத்திப்பூ நீங்கள். அப்படித்தான் அவரை நாங்கள் அழைத்தோம். எழுபதுகளில் கொழும்பின் புறநகரான களுபோவிலவில் நாங்கள் வசித்த வீட்டின் ஒரு அறையில் இளம் தம்பதிகளான இந்திரா அன்ரியும் முத்து அங்கிளும் எங்களுடன் வசித்தனர். என் சிறு பிராயத்து நினைவுகளில் மறக்கமுடியாத ஓர் அம்சமாக அவர் இருக்கின்றார். அப்போது சிறுவர்களாக இருந்த எம்மைக் கவரும் எதோ ஒரு சக்தி அவரிடம் இருந்திருக்க வேண்டும். மாலைப் பொழுதுகளில் வேலையிலிருந்து அவர் வரும் வரை நாங்கள் காத்திருக்குமளவிற்கு அவர் எங்களுடன் நெருங்கியிருந்தார். தன்னுடைய வேலைகளுக்கு மத்தியில் எமக்கென்று செலவழிக்க அவரிடம் எப்போதும் நேரமிருந்தது. வேலையால்  வந்ததும் குளியலறையில் அவர் பெருங்குரலெடுத்துப் பாடுவதைக் கேட்பதில் தொடங்கி  அவர் எங்களுக்குச் சொல்லும் கதைகளின் வழியாக அவர் அழைத்துச் செல்லும் அந்த வினோதமான உலகத்தில் சஞ்சரிப்பது என்பது எங்கள் நாட்களின் அன்றாட அம்சமாகி இருந்தது. 
அவரிடம் இருந்தது தன்னை ஒளி த்துக் கொள்ளத் தெரியாத காற்று மனம். அவர் சத்தமான குரலில் பாடுவார். இருந்தால் போலநடனமாடுவார்.ஷேக்ஸ்பியரின் நாடகங்களின்  பாத்திரங்கள் பேசும் பெரும்பாலான வாசகங்கள் அவருக்கு மனப்பாடம்.
திடீரென்று வழமையாக அணியும் சேட் காற் சட்டையைத் தவிர்த்து national என்று சொல்லப்படும் முழுக்கைச்சேட்டும்  வெள்ளை வேட்டியும் அணிந்து திரிந்தார். அந்தக் காலத்தில் எங்களது சித்தி பத்திக் (Batique) உடைகள் தைக்கும்  வேலை செய்து வந்தார். ஒரு நாள் அவர் ஒரு வாளிக்குள் மஞ்சள் நிறக் கரைசலை நிரப்பிச் சென்றிருந்தார். அதை கண்ட முத்து அங்கிள் தனது வெள்ளை நிற தேசிய உடையைக் கொண்டு வந்து அந்த வாளிக்குள் போட்டுத் தோய்த்தெடுத்தார். அதன் பிறகு சில நாட்கள் மஞ்சள் உடையில் ஒரு துறவியைப் போலத் திரிந்தார். சில நாட்கள் தாடியும் மீசையும். சில நாட்கள் மழித்த தலையும் முழுச்சவரமும். ஒரு நாளினில் இருந்தது  போல் மறு நாளினில் இல்லை என்று கண்ணன் பாட்டில் வரும் பாரதியின் வரிகளை அவர் வாழ்ந்து கொண்டிருந்தார்.

எப்பொழுதும் தனது  வட்டத்தை விட்டு வெளியில் குதிக்க முயலும் ஒரு ஆன்மா அவருக்குள் துடித்துக் கொண்டிருந்தது. தென்றல் வீசும் போது அசையாது கல்லாகி நிற்கும் சுவர்களுக்கு நடுவில் கிளைகளை அசைத்து மலர்களைச் சொரியும் மரங்கள் உள்ளன. 
அந்த நாட்களில் அலன் என்ற ஒரு வயோதிப நண்பர் முத்து அங்கிளைச் சந்திக்க வருவதுண்டு. அவர் ஒரு ஓவியர். அன்பொழுகும் புன்னகை முகம் அவருக்கு. எப்பொழுதும் தன்னுடன் ஓவியம் வரையும் தாள்களைக் கொண்ட சிறு புத்தகத்தையும் கருப்பு மைப் பேனையையும் வைத்திருப்பார். சில செக்கன்களில் கல்லொன்றில் அமர்ந்து மீன் பிடிக்கும் தொப்பியணிந்த ஒருவரை ஒரு இழுவையில் வரைந்து விடுவார். ஓவியத்தின் அதிசயத்தை நான் முதலில் கண்டு வியந்தது அவரிடந்தான். கழுத்துவரை பொத்தான்கள் மூடப்பட்ட சேட்டும் கழுத்தில் bow வும் அணிந்து  உள்ளங்கையில்  நோட் புத்தகத்தைப் பிடித்துக் கொண்டு மறு கையால் ஓவியம் வரையும் அலன் அங்கிளின் உருவம் மறக்க முடியாத ஓவியமாக மனதில் பத்திரமாக உள்ளது.
நான் அறிவரி படித்தது சிங்கள மொழியில். பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் முதலாம் வகுப்பில் நான் சேர்க்கப்பட்ட போது தமிழ் எனக்குப் புரியாத மொழியாகவே இருந்தது. அந்த நாட்களில் இந்திரா அன்ரி எனக்கு தமிழ் எழுதச் சொல்லித் தருவார். அவர் ஒரு தாளில் அகர வரிசையை எழுதி அதைப் போல கீழே  என்னை எழுதச் சொல்வார். நான் அவற்றைப் பார்த்துப் பார்த்துக்  கீறத் தொடங்குவேன். மற்றைய எழுத்துக்களை விட இ னா எழுதுவது எனக்குச்  சிரமமாக இருந்தது. அப்பொழுது நான் இ னா வை இடியப்பம் என்று அழைத்தேன். இந்திரா அன்ரி சிரிப்பார். 
முத்து அங்கிள் ஏற்கனவே கொஞ்சம் கண்டிய நடனம் கற்றிருந்தார். அந்த நாட்களில் மௌனகுரு போன்றவர்களுடன் இணைந்து நாடகப் பட்டறை களிலும் ஈடுபட்டுவந்தார். கந்தன் கருணை நாடகம் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் மேடையேற்றப்பட்டபோது முருகன் பாத்திரத்தில் மௌனகுருவும் நாரதர் பாத்திரத்தில் முத்து அங்கிளும் நடித்திருந்தனர். அப்பொழுது வீரகேசரிப் பத்திரிகையில் வெளிவந்த நாடக விமர்சனக் குறிப்பொன்றில் மௌனகுரு ஆடினார், முத்துலிங்கம் ஓடினார் என்ற பொருள்பட எழுதப்பட்டிருந்ததை வீட்டில் எல்லோருக்கும் காட்டி வாய்விட்டு அவர் சிரித்தது நினைவிருக்கிறது.
நாங்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்று சில வருடங்களின் பின் 1977 இல் தென்னிலங்கையில் தமிழர்களுகெதிராக சிங்கள இனவாதிகளால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளையும் கொள்ளையடிப்புக்களையும் தொடர்ந்து ஏராளமான தமிழர்களை போல முத்து அங்கிளும் இந்திரா அன்ரியும் யாழ்ப்பாணம் திரும்பியிருந்தனர்.
அதன்பிறகு 1982 அளவில் மாலை தீவில் ஆசிரிய நியமனம் கிடைத்துச் செல்லும் வரை எனது யாழ்ப்பாணக் காலங்களின் மறக்க முடியாத சில பொழுதுகள் அவருடன் கழித்த நாட்களினால் ஆனவை. 1977 வன்செயல்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட லங்கா ராணி நாவலை வாசித்துக் கொண்டிருந்த அவர் அந்நாவலில் வரும் சம்பவங்களைப்பற்றி விவரித்துப் பேசுவார். அவற்றிற் சில தன்னுடைய அனுபவங்களை ஒத்திருப்பதாகச் சொல்வார். 
ஒரு மெல்லிய் அபிநயத்துடன் அவர் பாடல்களைப் பாடுவார்.
சொல்லுக்கடங்காதே பராசக்தி சூரத்தனங்கள் எல்லாம் என்றும் துள்ளி வருகுது வேல் என்றும் பாடும் போது அவருடைய உடலும் துள்ளும்.பாடும். 
மொஹொதீன் பெக் பாடிய புத்தம் சரணம் கச்சாமி பாடலையும் Lots of Chocolates me to eat (My Fair Lady) என்ற பாடலையும் முதலில் அவர் பாடித்தான் கேட்டிருக்கிறேன். வாய்க்குள் முணுமுணுக்காமல் குரலை வெளியே எறிந்து பாட வேண்டும் என்று அவர் எனக்குச் சொல்வார்.
ஒரு நாள் இரவு நான் பஸ்ஸில் வரும்போது செம்மணி மயானத்தில் சிதையொன்று எரிந்து கொண்டிருப்பதைக் கண்டேன். முதன் முதலில் கண்ட அந்தக் காட்சியால் மனமும் மூளையும் அச்சத்தினாலும் அதிர்ச்சியினாலும் விறைத்திருந்தன. வீட்டிற்கு வந்தபோது முத்து அங்கிள் அங்கு வந்திருந்தார். அதிர்ந்து பேச்சற்றிருந்த நான் அவரிடம் சுடலை விசயத்தைப் பற்றிச் சொன்னதும் வாய் விட்டுச் சிரித்தார்.
வா இப்பவே வெளிக்கிடு நாங்கள் ரெண்டு பேரும் போய் சுடலையில் எரியும் சிதைக்கு கிட்டப் போய் படுத்திருப்போம் ஒன்றுமே நடவாது, உன்ர  பயமும் போயிடும் என்றார்.
  
நீண்ட காலத்திற்குப் பிறகு அவரைக் கண்டபோது  அதே காற்று மனத்துடன் இருந்தார்.
தெருவில் அநாதரவாக விடப்பட்ட நாய் குட்டிகளுக்கு அபயமளிக்கும் சரணாலயமாக அவரது வீட்டை ஆக்கியிருந்தார். அவரது வீட்டிற்கு அருகிலிருக்கும் திருநெல்வேலிச் (தின்னைவேலி என்று சொல்வதுதான் வழமை) சந்தையடியில் அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டுக் கைவிடப்பட்டிருந்த நாய்க்குட்டியொன்றை அவர் வளர்ப்பதற்காக எடுத்து வந்திருந்தார். இந்தச் சமூகம் எத்தனை குரூரமாக இருக்கிறது என்பதற்கு இந்த நாய்க்குட்டி சாட்சி என்றார். 
எனக்கே மறந்து போய்விட்ட சில சம்பவங்கள் அவரது நினைவுகளின் இடுக்குகளில் பத்திரமாக இருந்தது சிலிர்ப்பைத் தந்தது. கொழும்பிலிருந்தபோது எங்கள் வீட்டில் இருந்த  ரிங்கோ என்ற நாயைப் பற்றியும்,  ஒரு நாள் சனத்தொகைக் கணக்கெடுப்பு அலுவலகர் ஒருவர்  வீட்டிலுள்ளவர்களின் எண்ணிக்கை விபரத்தை சேகரிக்க வந்த போது ரிங்கோவின் பெயரையும் வீட்டு உறுப்பினர்களில் ஒருவராகப் பதிவு செய்யும்படி  நான் அடம் பிடித்ததாகவும், நாயின் முழுப் பெயர் ரிங்கோ பரராஜசிங்கம் என்று எழுதிகொள்ளும்படி அந்த அலுவலகரை நான் கேட்டுக் கொண்டதாகவும் அந்தக் கதையை தனது பிள்ளைகள் சிறுவர்களாக இருந்த போது அவர்களுக்குச் சொல்லி மகிழ்வதாகவும் சொல்லி என் நினைவுகளை எனக்கு மீட்டுத் தந்தார். அத்தோடு, ஒரு நாள்  அவர் இறந்ததைப் போலப் படுத்திருக்க எனது தங்கை மாத்திரம் அழுததாகவும் உண்மையில் இறந்துவிட்டாரா என்று அறிய ஊசியால் குத்திப் பார்ப்போமா என்று மற்றைய தங்கையிடம்  ஆலோசனை செய்ததையும் நினைவூட்டினார்.
அவள் எப்படி இருக்கிறாள் அவளைப் பார்க்க ஆசையாய் இருக்கு  என்று அவர் சொன்ன போது புன்னகைக்கும் அவரது விழிகளின் ஓரங்கள் ஈரமாவதைக் கண்டேன்.
ஒரு சிறுவனாக அவரைக் கண்டதன் பின் நீண்ட பல வருடங்கள் கழித்து அவரைச் சந்தித்த போது நிறைய விடயங்கள் தொடர்பாக எமது உரையாடல் இருந்தது. தீண்டாமைக்கெதிராக வடக்கில் இடம்பெற்ற போராட்டங்கள்...அதில் அவர் சார்ந்திருத்த கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு...சுற்றுப்புறச் சூழல் ...இந்தியாவில் வந்தனா சிவா போன்றவர்களின் பல்தேசியக் கம்பனிகளுக் கெதிரான போராட்டங்கள்....பௌத்தத்தின் பல்வேறு பிரிவுகள் இப்படிப் பல...
உங்கள் கருத்துக்களை நீங்கள் ஏன் எழுதக் கூடாது எனக் கேட்டேன்.
நான் சொல்ல வேண்டியதையெல்லாம் புத்தரும் கார்ல் மாக்சும் ஏற்கனவே சொல்லிவிட்டனர், நான் சொல்வதற்கும் எழுதுவதற்கும்  ஏதுமில்லை, இந்தக் கருத்துக்களை என்னால் இயலுமானவரை பரப்ப முயல்கிறேன் அவ்வளவு தான் என்றார். வித்தாரமும் செருக்கும் வேண்டாம் செத்தாரைப் போலத் திரி என்பதான சித்தர் போக்குடன் அவர் ஊடாடத் தொடங்கியிருப்பதாகத் தோன்றியது.
1983  யூலை 23 ஆம் திகதி   யாழ்ப்பாணம்  திருநெல்வேலி பலாலி வீதியில்  13 இலங்கை அரச படையினர் கொல்லபட்ட மறுநாள் அந்த தாக்குதல் நடைபெற்ற பகுதியில் அரச படையினரால் தேடுதல் என்ற பெயரில் வெறித்தனமான துப்பாக்கிச் சூடுகள் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் பரவலாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை வெறித்தாக்குதல்களில் 51 பொது மக்கள் கொல்லப்பட்டனர். எமக்கு நன்கு பரிச்சயமான மனிதன் பத்திரிகை ஆசிரியர் விமலதாசனும் அன்று உயிரிழந்தவர்களில் அடக்கம். அப்பொழுது முத்து அங்கிள் மாலை தீவிலிருந்தார். அவரது துணைவியாரும் மூன்று சிறு பிள்ளைகளும் திருநெல்வேலியில். அவர்களுக்கு என்னவாகியிருக்குமோ என்ற பதட்டவுணர்வு அவரில் உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கி மூச்சையற்று விழச்செய்தது . இறுதி வரை அவரைத் தொடர்ந்த துயரமது.
முத்து அங்கிள் ...
சப்பாத்தி முள்ளும் சரியாக முளைக்காது * என்று சொல்லப்பட்ட மண்ணிலே அரிதாகப் பூத்த அத்திப்பூ நீங்கள்.

* ஈழத்துக் கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தியின் வரிகள்.

No comments: