Friday, February 25, 2011

38வது இலக்கியச்சந்திப்பில்"தீண்டாமைக்கொடுமைகளும் தீ மூண்டநாட்களும்" நூலுக்கான அறிமுகம் 

-ஜீவமுரளி-

தோழர் யோகரத்தினம் தனது சாதியப்போராட்ட அனுபவங்களையும் தான் சந்தித்த தீண்டாமையின் கொடுமைகளையும் சிறு நூலாக பதிவு செய்திருக்கிறார். இவரின் அனுபவப்பதிவுகளின் ஒருபகுதி ஏற்கனவே வடு சஞ்சிகையில் அப்பப்போ பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் என்ற தலைப்பில் இது நூல் வடிவம் பெற்றுள்ளது.

தமிழ் அரசியற்பரப்பில் கடந்த காலங்களில் எவையெவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பதிவுசெய்யப்ட்டிருக்கின்றன, எவையெவை வரலாற்று முக்கியத்துவம் அற்றவையாக இருந்திருக்கின்றன என்பதை இந்த நூல் அறிமுகத்துடன் சேர்த்து நான் இங்கே கிளறிப் பார்க்க விருப்புகிறேன். நீங்களும் அதை தாராளமாகச் செய்யவேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட.

தமிழுக்கும் சைவத்திற்கும் ஆறுமுகநாவலர் தொண்டு செய்தார் என்று நம்பவும் உச்சரிக்கவும் அதை மனப்பாடம் செய்தும், உடல் முழுக்க ஆழமாக பதிவு செய்யவும் பழக்கப்பட்டிருக்கின்றோம். அதை பச்சைப் பாலகரிலிருந்து முதுமை வரைக்கும் இன்னும் மரணம் வரைக்கும் காவிச் செல்லவும் பழக்கப்பட்டுவிட்டோம்.

எல்லாளன் சங்கிலியன் என்ற தமிழ் கதாநாயகர்களில் தொடங்கி ஆறுமுகநாவலர், செல்வநாயகம், அமிர்தலிங்கம், ஜி .ஜி பொன்னம்பலம், சிவசிதம்பரம், ஆனந்தசங்கரி, சம்பந்தன் ஈறாக சந்திரகாசன், குட்டிமணி, தங்கத்துரை, பாலகுமார், பத்மநாபா, சிறிசபாரத்தினம், உமாமகேஸ்வரன், பிரபாகரன் என்று நீழுகின்ற. தமிழ் தேசிய அரசியற் கதாநாயகர்களின் காவியங்கள் தமிழில் திரும்பத்திரும்ப இன்னமும் பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் பதினாறாயிரம் தடவைகளுக்கு மேல் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பதற்கு சாட்சியாக பல நூல்களும், சஞ்சிகைகளும், துண்டுப்பிரசுரங்களும் எங்கள் முன்னே பரவிக்கிடக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இணையத்தளங்களும் பேஸ்புக்கும் இவற்றை பல ஆயிரம் தடவைகள் பதிவுசெய்துவிட்டன. இந்தப் பதிவுகள் எல்லாம் யாருடைய வரலாறாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன எனக் கேட்டால் அது ஆதிக்கச் சாதிகளின் அரசியல் வரலாறாகவே பதிவுசெய்யப்பட்டுள்ளன. இன்னும் தொடர்ந்தும் பதிவு செய்யப்பட்டுக்கொண்டு இருகின்றன.

மேற்குறிப்பிடட் பெயர்களின் அரசியற் தலைமகைளின் தொடர்ச்சி இதை வலுவாக உறுதிசெய்கினறது. இவை ஒன்றும் தமிழ் தேசிய வரலாற்றில் தற்செயலான நிகழ்வுகள் அல்ல. இந்தத் தலைமைகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஆதிக்க சாதி ஆரசியலின் தொடர்ச்சி என மீண்டும் நான் உங்களுக்கு அழுத்திச் சொல்கிறேன். இந்தத் தலைமைகள் ஒன்றும் தற்செயலானவை அல்ல. இந்த ஆதிக்கச் சாதியின் கதாநாயக சாதி அரசியலின்
பிறள்வாகவும் எதிர்வினையாகவும் தோழர் யோகரத்தினத்தின் நூல் அமைகிறது. மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட சொல்லப்படாத பல சம்பவங்களை இந்த நூல் சொல்கிறது.

நாங்கள் சாதியெல்லாம் பாக்கிறேல்லை. இப்ப ஆர் உதையெல்லாம் பார்க்கினம். அதைப்பற்றி இப்ப ஏன் பேசுவான். அது பழைய கதை. இதைவிட்டிட்டு தமிழற்ரை போராட்டத்தைப் பற்றிக் கதையுங்கோ என்ற நயவஞ்சகமான குரல்களின் அரசியலின் மறுதலிப்பதாகவே தோழர் யோகரத்தினத்தின் இந்த நூல் அமைகிறது.

பழையன கழிதல் புதியன புகுதல் என்ற பிரபலயமான தமிழ் பழமொழி ஒன்று உண்டு. அது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கக் கூடும். ஆனால் இந்த சாதித் திமிரை பொறுத்தவரைக்கும் பழையன கழிவதேயில்லை. புதியன புகுவதேயில்லை என்பது தான் வரலாற்றுப் பதிவாக இருக்கின்றது. இதிலிருந்து இந்தத் தமிழ் பழமொழி சாதித்திமிரிடம் தோற்றுப் போய் விட்டது என்ற முடிவுக்கு வருகிறேன். நாம் கற்றதால் ஆன பயன் என்ன என்பதை திரும்பத் திரும்ப கேட்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

நாங்கள் எல்லோரும் இங்கே சர்வதேசத் தமிழர்களின் ஒரு அங்கமாகவே இங்கே கூடியிருக்கிறோம் என்று சொல்லலாமா? ஆம் இல்லை எனத் தீர்மானிப்பது அவரவரின் தெரிவு. ஆனால் இந்த தெரிவு அரசியலின் பின் சாதித் திமிரின் செல்வாக்கை கண்டுகொள்வதென்பது கடினமான விசயம் அல்ல.

எங்கள் குழந்தைகள் தேவராம் திருவாசகம் நரியை பரியாக்கிய கதை, பாட்டி வடை சுட்ட கதை சீ. . சீ . . இந்தப் பழம் புளிக்கும் கதை, திருக்குறள் கூடவே தமிமழ்த் தேசியக் குறள்களையும் கசடறக் கற்று வருகிறார்கள். இந்தக் கற்றதால் ஆய பயனின் தொடர்ச்சியாக குழந்தைகளிடமும் இந்த சாதித் திமிரின் வரலாறு தொடர்கிறது. மறுபக்கத்தில் கந்தன் சுப்பன் காலத்தில் தொடங்கி, மனிக்பாம் வரைக்கும் இரட்டை குவளை முறைக்கு ஒப்பான பழக்கவழக்கங்கள் அமுலில் இருந்திருக்கின்றன. சாதிக்கொரு அடுப்பு மூட்டப்பட்டிருக்கிறது. நாங்கள் கற்றதால் ஆய பயன் என்ன என்றால் ஒன்றுமேயில்லை என்பதே பதிலாக கிடைக்கின்றது. தோழர் யோகரத்தினத்தின் நூலை வாசிக்கும் பொழுது, இதனை மிகவும் ஆழமாக உணரமுடிந்தது.

மந்திரமாவது நீறு
வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு
துதிக்கப்படுவது நீறு

என எல்லாம் திருநிறாய்ப் போன தீருநீற்றுக்குள் அடங்கிவிட்ட சர்வதேசத் தமிழர்களின் இந்துமத தத்துவ வழிபாட்டு வாழ்வு, சாதித்திமிர் அரசியலின் தொடர்ச்சியாக உள்ளது. இதற்கு சாட்சியாக சர்வதேசம் எங்கும் 30 வருட காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட நூற்றுக் கணக்கான இந்துக் கோவில்கள் இருக்கின்றன.

உங்களில் பலர் சங்காய்யைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். மாஓ சே துங் இன் நெடும்பயணத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்பீகள். ஆனால் சங்கானைப் போரட்டத்தைப் பற்றி கேள்விபட்டிருப்பீர்களோ தெரியாது?
சங்கானையில் சின்ன வியட்னாம் போராட்டம் ஒன்று நடக்கின்றது என்ற அமிர்தலிங்கத்தின் நக்கல் பாராளுமன்ற உரையைப் பற்றி நீங்கள் ஒருக்கால் கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் பராளுமன்ற நக்கல் வாக்கு மூலம் எங்கெங்கே பதிவுசெய்ப்பட்டுள்ளது என்று பார்த்தால் அவை சாதி எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பான பதிவுகளிலும், சாதிய எதிர்ப்புப் போராட்டங்களைச் செய்தவர்களின் பதிவுகளிலும் மட்டுமே பெரும்பாலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் அரசியல் வரலாறு பதினாறயிரம் தடவைகளுக்கு மேல் தமிழில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் கல்வித் தரப்படுத்தலால் தான் தமிழீழப் போராட்டம் உருவானது என்ற கட்டுக்கதையைப் பல உபகதைகளாக, நெடுங்கதைகளாக, பெருங்கதைகளாக, கதைகதையாக நாங்கள் கேள்விப்பட்டிருக்கின்றோம் . யாழ்பாணத் தமிழர்களின் வாரிசு உரிமைச் சொத்தான யாழ் நூல்நிலையம் ஆசியாவிலையே மிகப் பழமைவாய்ந்தது என்று சொல்லப்பட்ட நூல்நிலையம் சிங்கள ராணுவத்தால் தீ மூட்டி எரிக்கப்பட்டது என்ற செய்தியை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தச்செய்தி பத்திரிகைகளிலும் இணையங்களிலும் பல ஆயிரம்தடவைகள் திரும்பத்திரும்ப இன்றளவும் பதிவுசெய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

யாழ்.நூல்நிலையம் தீமூட்டி எரிக்கப்பட்டதை பற்றி டானியலிடம் கேட்டபொழுது, தென்மராட்சித் தொகுதியிலுள்ள மீசாலைக் கிராமத்தின் தலித் சிறுவர்களினது பாடப்புத்கங்கள் சாதிவெறியர்களால் பறித்து தீயிட்டு எரிக்கப்பட்டதை நினைவுகூறியிருந்தார். இலங்கையரசு கல்வித்தரப்படுத்தலை கொண்டுவருவதற்கு முன்இ வடபகுதிகளில் கல்வித்தரப்படுத்தல் முறை அமுலில் இருந்திருக்கின்றது. ஆதிக்கச்சாதியிரால் தலித்சமூகங்களிமன் மீது கல்வித்தரப்படுத்தல் செய்யப்ட்டுவந்தன என்பதற்கு டானியலின் பதில் தெளிவானதொரு சாட்சியமாக இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் செல்லன் கந்தையன் என்ற பெயர் பதிவு அரசியலில் மிகக் கவனமாகத் தவிர்க்கப்பட்ட சாதித்திமிரின் குறியீடு. யாழ் நூல்நிலையம் ஒரு பறையனால் திறந்து வைக்கப்பட்டது என்ற வரலாற்றுப் பதிவிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது.

நடந்து முடிந்தவைகள் யாவும் வெறும் சம்பவங்களாகவே எடுத்துக்கொள்ள நாங்கள் பழக்கப்பட்டுவிட்டோம். நடந்து முடிந்த சம்பவத்தை பல ஆயிரம் தடவைகள் பதிவுசெய்வதற்கும், இன்னொருசம்பவத்தை சில பத்துத்தடவைகள் பதிவுசெய்வதற்கும் உள்ள பதிவு அரசியலை, அந்தப் பதிவு அரசியலின் இடைவெளியையும் அதன் அரசியற் சூதையும் நாங்கள் அக்குவேறு ஆணிவேறு சாதிவேறு பால்வேறாக, தமிழ்வேறு, மதம்வேறு, இனம்வேறாக பிரித்தறிய வேண்டியவர்களாக இருக்கின்றோம். அப்படியொரு பிரித்தறிதல் மூலமே கடந்த காலங்களின் வன்முறையாக நிகழ்த்தப்பட்ட சம்பவங்களை அறிவுபூர்வமாக, அரசியல்சார்ந்து விளங்கிக்கொள்ள உதவும் அல்லது அவை வெறும் சம்பவங்களாகவும் வன்முறையாகவுமே தொடர்ந்தும் பதிவுசெய்து வைத்திருப்போம்.

1977ம்ஆண்டுக்கு முன் தீண்டாமைக்கு எதிராக பல இடங்களிலும் கிராமம் கிராமமாக தீ மூண்டிருக்கிறது. இவை முழுமையாக இன்னும் பதிவு செய்யப்படவில்லை. டானியல், டொமிக்ஜீவா, என். கே. ரகுநாதன், செந்தில் வேல், தெணியான், எஸ். பொன்னுத்துரை இவர்களுக்குபின் தோழர் யோகரத்தினம் சண்டிலிப்பாய் கிராமத்தை முன்வைத்து சாதி எதிர்ப்பு போராட்டத்தையும், அதன் குரூரத்தையும், "தீண்டாமையும் தீமூண்டநாட்களும்" என்ற இந்த நூலின் மூலம் தனது அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார்.

பறையர்கடவை, தச்சக்கடவை, நளக்குறிச்சி, வண்ணாரத்துண்டு, அம்பட்டக்கடவை என ஆதிக்கச் சாதியினரால் அழைக்கப்பட்ட கிராமங்களின் குரலை, அங்கு வாழ்ந்த மக்களின் குரல்களை தோழர் யோகரத்தினம் முடிந்தளவு தனது நூலில் பதிவு செய்திருக்கிறாரர். சண்டிலிப்பாய் கேணிக்கட்டு குறிச்சியில் பிறந்த தோழர் யோகரத்தினம் சாதி எதிர்பபுப் போராட்டத்தில் தனது சொந்த அனுபவங்களையும் தனது மூதாதையரிடமிருந்து பெற்றுக்கொண்ட சாதியக்கொடுமைகளின் அனுபவங்களையும் இந்த நூலில் பதிவுசெய்திருக்கிறார்.

தனது பாடசாலைக் காலங்களின் தான் எதிர் கொண்ட சாதித் திமிரை,
தனது கிராமங்கள் எதிர்கொண்ட சாதித்திமிரை.
தனது முன்னோர்கள் எதிர்கொண்ட சாதித் திமிரை
இந்த நூலில் நினைவு கொள்கிறார்.

அன்றைய இடது சாரிகள் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் உறுதுணையாக நின்றதை நன்றியுடன் நினைவு கொள்கிறார். இன்றும் வி. பொன்னம்பலம், வினோதன் போன்றவர்களையும் நினைவுகொள்கின்றார்.

இந்த நூலில் முக்கியமான பதிவு என்னவென்றால் 100தலித் இளைஞர்களின் பௌத்த மதமாற்றம் பற்றிய குறிப்பு. இது சாதி ஒடுக்குமுறைக்கும் சாதித்திமிருக்கும் எதிரான ஒரு அரசியல் விமர்சனமாக இந்த மதமாற்றம் இருந்திருக்கின்றது. அன்றைய சூழலின் தலித் இஞைர்களின் எதிர்ப்பரசியலாக தொழிற்பட்டிருக்கின்றது.

"யோகரத்தினம் தோழருக்கு 1977 ம் ஆண்டுக்குப் பிறகு ஒண்டுமே தெரியாது. அவர் திரும்பத் திரும்ப பழசையே சொல்லிக்கொண்டிருப்பார்‘‘ என்ற கேலிகளையும், நக்கல்கயையும் நண்பர்களும் தோழர்களும் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இந்த நக்கல்காரரர்களுக்கு பதிலாகவும், விமர்சனமாகவும் இந்த நூல் அமைகிறது.

சங்கானையில் என்ன நடந்தது, கன்பொல்லையில் என்ன நடந்தது, சோல்பரி ஆணைக் குழுவை கன்பொல்லையை பார்வையிட யார் யார் உறுதுணையாகவிருந்தனர், மாவிட்டபுர கோவில் போராட்டத்தில் என்ன நடந்தது, பனையோட சேர்த்து எப்பிடி கந்னையும் சுப்பனையும் தறிச்சு விழுத்தினாங்கள், பெண்கள் மேல்ச்சட்டை போட்டால் கொக்கத்தடியால் எப்பிடிப் கிழித்தெறிஞ்சாங்கள், சிரட்டையிலை எப்பிடியெல்லாம் கஞ்சி தந்தாங்கள், தமிழ்த்தேசிய அரசியலின் பெயரால் நாங்கள் எப்பிடியெல்லாம் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டோம் என்பதை திரும்பத் திரும்ப இன்னும் நூறு வருடங்களுக்கு சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம்.

சாதி எதிர்ப்புபோராட்டம் பற்றிய பல புதிய பதிவுகளைத் தோழர். யோகரட்ண்ம் இந்த நூலில் செய்திருக்கின்றார். இலங்கையில் உள்ள பல்வேறு சிறுபான்மைச் சமூகத்தினரின் அரசியல் அபிலாசைகளை குறைந்த பட்சம் புரிந்துகொள்வது எப்படி?, பரஸ்பரம் ஒருவவருக்கொருவர் மதிப்பளித்து வாழ்வது எப்படி என்ற கேள்விகளுக்கு இந்த நூல் விடையாக கூட அமைகின்றது. இன்றும் தொடர்கின்ற சாதித் திமிர் அரசியலுக்கு விமர்சனமாகவும் இந்த நூலின் முக்கியத்துவம் அமைகின்றது. 

நன்றி : அப்படியா 

No comments: