Wednesday, January 27, 2010

தேர்தலில் சிறுபான்மை மக்கள் சொந்தத் தலைமைகளை
நிராகரித்துள்ளனர் - என் . சரவணன்

6வது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான 5வது ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளின் படி மகிந்த ராஜபக்ஷ வென்றுள்ளார். தெர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் வழங்கும் செய்தி என்பதன் சாராம்ச விளக்கமே இது.


யாழ் மாவட்டத்தில் 26.66 சதவீத மக்களே வாக்களித்துள்ளனர். அதிலும் அளிக்கப்பட்ட வாக்குகளில் 3,65 வீத வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அளிக்கப்பட்ட வாக்குகளில் 64 சதவீதம் சரத் பொன்சேகாவுக்கே அளிக்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் ஒரு தெரகுதியில் அதாவது ஊர்காவற்துறை தொகுதியில் மாத்திரமே மகிந்த வென்றுள்ளார் அதுவும் 635 வாக்குகள் மட்டுமே மேலதிகமாக பெற்றுள்ளார்.


வன்னி மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் சரத் பொன்சேகா வெற்றி பெற்றுள்ளார். கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் மகிந்த படு தோல்வியடைந்துள்ளார் சரத் பொன்சேகா 69 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். திருகோணமலையில் சேருவில தொகுதியைத் தவிர மூதூர் திருகோணமலை தொகுதிகளில் மகிந்த தொல்வியடைந்துள்ளார். அம்பாறையிலும், அம்பாறை தொகுதியைத் தவிர எனைய 3 தொகுதிகளிலும் மகிந்த தோற்கடிக்கப்பட்டுள்ளார்.


சரத் பொன்சேகா வெற்றி பெற்ற இன்னொரு மாவட்டம் மத்திய மாகாணத்திலுள்ள மலையகத் தமிழர்கள் அதிகமாக வாழும் நவரெலிய மாவட்டமாகும். அங்கும் சரத் பொன்சேகா வெற்றிபெற்றுள்ளார். கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வாழும் தொகுதிகளில் அனைத்திலும் மகிந்த தொல்வியடைந்துள்ளார். 15 தொகுதிகளில் 6 தொகுதிகளில் சரத் பொன்சேகா வென்றுள்ளார்.



தேர்தலுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கணிப்புகளின் படி தமிழர்களின் வாக்குகள் திசை தெரியாதபடி சிதைந்துள்ளதாக கணிப்புகள் வெளியிடப்பட்ட போதும், இன்றைய தேர்தல் முடிவுகளானது வேறும் பல செய்திகளை வெளிப்படுத்தியிருக்கிறது.


அரசுடன் இணைந்த அனைத்து தமிழ் கட்சிகளும் இத்தேர்தலில் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அரசுடன் உள்ள முக்கிய தமிழ் கட்சிகளான, வடக்கில் ஈ.பி.டி.பி, புளொட், மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் கட்சி, கிழக்கில் டி.எம்.வி.பி என்பன மகிந்தவுக்கு ஆதரவாக எத்தனை பிரச்சாரம் செய்த போதும் அவர்களின் கருத்தை மக்கள் ஏற்காது தமது சொந்த முடிவினையே எடுத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படை. தமிழ் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவின் கூட்டில் இருந்தது ஒரு பொருட்டல்ல. அவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதே வெளிப்பாடு ஏற்பட்டிருக்கும் என்று கருதத் தோன்றுகிறது.



சரத்பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் சரத் பொன்சேகாவை வெற்றிபெறச் செய்ய அளிக்கப்பட்ட வாக்குகளில்லை. மகிந்தவை தோல்வியடையச் செய்வதற்காக அளிக்கப்பட்ட வாக்குகளே என்று கூறலாம். கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகதிகளில் அளிக்கப்பட்ட வாக்குகள் சரத் பொன்சேகாவுக்கே அளிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
கொழும்பில் சரத் பொன்சேகா வென்ற தொகுதிகளில் கிடைத்த வெற்றியில் மனோ கணேசனுக்கு பங்குண்டு என்றும் கூறலாம்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் 14 வீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. குறைந்தளவு வாக்குகள் பதிவான மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டமே. மக்கள் தேர்தலில் ஆர்வமில்லையென்பதை இவை நிருபித்துள்ளன. வவுனியா மாவட்டத்தில் 43 வீத வாக்குகளும், மன்னாரில் 34 வீத வாக்குளுமே பதிவாகியுள்ளன. ஆக மொத்தத்தலில் வடக்கில் அனைத்து 5 மாவட்டங்களிலும் 50 வீதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. இதற்கு மக்களின் இடப்பெயர்வு ஒரு காரணமாக இருந்த போதும், அது முழுமையான காரணமாக இருக்க முடியாது என்று தெரிகிறது. ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்குப் பின் வடக்கில் முழு பிரதேசங்களிலும் தேர்தல் இடம்பெற்றுள்ளன. முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த மக்கள் இறுதி நேரத்தில் அவசர அவசமாக குடியேற்றப்படுவதற்கு தேர்தல் ஒரு முக்கிய காரணமாகவே இருந்தது.


ஆக மொத்தத்தில் இம்முறை தேர்தலானது, இலங்கை தேர்தல் வரலாற்றிலேயே சிறுபான்மைத் தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்களில் பெரும்பாலானோர் தெட்டத்தெளிவாக தென்னிலங்கை "தேசிய" அரசியல் நீரோட்டத்தில் இருந்து பிரிந்து நிற்பது வெளிப்படையாகத் தெரிகிறது.


குறிப்பாக தமிழ், மலையக மக்கள் தமது அரசியல் தலைமைகளுக்கு ஆப்பு வைக்கவும் எம்மால் முடியுமென்று நிரூபித்திருக்கிறார்கள். மக்களின் அரசியல் அபிலாசைகளை அத்தலைமைகள் பிரதிபலிக்கவில்லை என்றும் அர்த்தம் கொள்ளலாம்.



மகிந்த அரசு வெளிப்படையாகவே ஒட்டுமொத்த அதிகாரத்தையும், அரச வளங்களையும் துஸ்பிரயோகம் செய்து தமது மோசமான அராஜகத்தையும், அட்டுழியங்களையும் செய்தே இந்த வெற்றியை பெற்றனர் என்பது கண்கூடு.


ஊழல், மனித உரிமை உரிமை மீறல், கருத்துச் சுதந்திரப் பறிப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் இடது சாரிப் போராட்டங்களை மோசமாக அரச இயந்திரத்தைக் கொண்டு தொடர்ச்சியாக நசுக்கி வந்தமை என மகிந்த அரசுக்கு எதிரான அலை மிகுந்திருந்தது.


போர் வெற்றி மாத்திரமே தென்னிலங்கையில் மகிந்தவின் ஒரே ஒரு துருப்புச் சீட்டாக இருந்தது. அந்த வெற்றி மயக்கத்திலிருந்து மக்கள் மீள்வதற்குள் அந்த வெற்றியை பயன்படுத்த வேண்டுமென மகிந்த அரசாங்கம் திட்டமிட்டது. அதற்கான தேர்தல் தான் இப்போது நடந்து முடிந்தது. அதே வெற்றியை சம அளவில் பங்கு போடக்கூடியவரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை எதிர் கட்சிகள் பொது வேட்பாளராக நிறுத்தியபோதும் இறுதியில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்திருக்கிறதென்றால் அதற்கான முக்கிய காரணங்கள் அரசின் அதிகார துஸ்பிரயோகமும், போர் வெற்றி மயக்கத்திலிருந்து தென்னிலங்கை மக்கள் இன்னமும் மீளவில்லை என்பதுமே.




வெகு விரைவில் நடத்தப்படவிருக்கிற பாராளுமன்றத் தேர்தலுக்கான ஒத்திகையாகவும் இந்தத் தேர்தலை அரசாங்கம் கருதியிருந்தது. அப்படி நாடிபிடித்தறிவதற்கு இந்தத் தேர்தல் போதுமானதா என்பது கேள்விக்குறியே. இந்த இடைப்பட்ட காலத்தில் நிகழவிருக்கும் தேர்தல் கூட்டணிகள் மற்றும் மக்கள் மீது ஏற்படுத்தப்படும் நம்பிக்கைகளே அதன் முடிவைத் தீர்மானிக்கும். போர் வெற்றி எவ்வளவு காலம் அரசாங்கத்துக்கு கை கொடுக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.


தேர்தல் முடிவுகளை முழுமையாக பார்வையிட
Election results

நன்றி -தலித்தியம்

No comments: