Monday, January 03, 2011

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும் தேசிய இன முரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும்
 (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது
-சே.போ.கோபிநாத்- 
 இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்.
30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்திய பூகோளமயமாக்கல் சம்பந்தப்படுகின்றது? என்ற கேள்வி எழக் கூடும். ஏகாதிபத்தியம் என்ற உலக ஒழுங்கை ஆட்டிப் படைக்கும் அதிகாரங்களின் செயற்பாடும், தற்கால உலகின் முக்கிய பகுதிகளில் ஒன்றாகிப் போன பூகோளமயமாக்கலும், தேச எல்லைக்குள் கட்டுப்பட்டுப் போய் உள்ள தேசிய இன முரண்பாட்டில் எவ்வாறு சம்பந்தப்படும் என்ற கேள்வியும் பலருக்கு இருக்கக் கூடும்.
இதனை தெளிவாக புரிந்துக் கொள்வதற்கு ஏகாதிபத்தியம், பூகோளமயமாக்கல், தேசிய இன முரண்பாடு என்ற சொற்றொடர்களை தனித்தனியாக விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஏகாதிபத்தியம் என்பதற்கு பல நிலைகளிலும், பல்வேறுபட்ட விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பேரரசு ஒன்றை உருவாக்கும் அல்லது அதனைப் பேணும் நோக்குடன், ஒரு வெளிநாட்டின் மீது தொடர்ச்சியான கட்டுப்பாட்டையோ, மேலாதிக்கத்தையோ செலுத்துவது ஏகாதிபத்தியம் என அழைக்கப்படுகின்றது. ஆட்சிப்பகுதிகளை கைப்பற்றுதல், குடியேற்றங்களை ஏற்படுத்துதல், மறைமுகமான வழிகள் ஊடாக அரசியல் அல்லது பொருளாதாரத்தின் செல்வாக்கு செலுத்துதல் அல்லது கட்டுப்பாட்டை வைத்திருத்தல் என்பதன் மூலம் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சுருக்கமாக கூறினால், ஒரு நாடு தொலைவிலுள்ள நாடுகளின் மீது கொண்டிருக்கும் மேலாதிக்கக் கொள்கையாகும். இதுவே பொதுவாக பயன்படுத்தப்படும் விளக்கமாகும். இதனையே லெனின், புதிய சந்தைவாய்ப்புக்களையும், வளங்களையும் தேடுவதற்காக முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்தை தூண்டிவிட்டதாக கூறுகின்றார். அதனை அடுத்து ஸ்டாலினின் பார்வையில் யுத்தம், இரத்தம், சதை என்பதே ஏகாதிபத்தியம்.
இந்த மூன்று விளக்கங்களும் எந்த வகையிலும் வேறுபட்டவை அல்ல. அனைத்தும் கூற வரும் விடயம் ஒன்;றுதான். இந்த விளக்கங்களை நன்கு புரிந்து கொள்வதன் மூலம் இந்த ஏகாதிபத்திய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நாடு எது, அதன் அதிகார மையம் எது என்பது தொடர்பில் உங்களால் இலகுவில் அடையாளங் கண்டு கொள்ள முடியும்.
உலகின் வலிமை வாய்ந்த அரசுகளின் நிலவுடைமை ஆசையின் வடிவமான காலனியாதிக்க கனவுகளில் சிக்கி நூற்றாண்டுகளை கடந்து, உலக அரசுகள் தமக்கிடையில் சண்டையிட்டு முதலாம், இரண்டாம் உலக யுத்தங்கள் நிறைவடைந்ததன் பின்னரான காலத்தில் இருந்து எமது இன்றைய நிலையை சிந்தித்து பார்க்க வேண்டியிருக்கின்றது. உலக ஒழுங்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தில் முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் வௌ;வேறு வடிவங்களில் உலகின் ஆண்டான்களாக தமது இருப்பை உறுதி செய்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். இன்றைய உலக ஒழுங்கை தீர்மானிக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்றாக இரண்டாம் உலக மகா யுத்தம் காணப்படுகின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் முடிவுடன் மேலோங்கிய சக்தியாக எழுந்து வந்த அமெரிக்கா இன்று வரை உலக நாடுகளில் அரசியல் ரீதியான, இராணுவரீதியான, பொருளாதார ரீதியான ஏகாதிபத்திய பண்பை வெளிப்படுத்தி வருகின்றது. எல்லா விதத்திலும் உலகில் மேலாதிக்க போக்கை செலுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் முயற்சிகள் பல்வேறு வழிகளிலும், அமெரிக்க ஆதரவு நாடுகளாலும் பல வடிவங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னரான உலக வரலாற்றிலே, உலக ஒழுங்கின் சீர்கேட்டுக்கு அமெரிக்காவின் ஏகாதிபத்திய செயற்பாடுகள் எவ்வாறு காரணியாக இருந்தன என்பதனை இலத்தீன் அமெரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்க நாடுகளின் அரசியல் வரலாற்றை ஆராயும் போது புரிந்து கொள்ள முடியும். ஆப்கானிஸ்தானில் தொடங்கி, ஈராக்கில் இறங்கி, இன்று ஈரான் மீது தமது அதிகார கட்டளைகளை விதித்து வருவது. கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளில் முட்டி மோதிக் கொண்டது என அமெரிக்காவின் ஏகாதிபத்திய நடவடிக்கைகளினை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

அமெரிக்காவின் வரலாற்றை அறிந்து கொள்ள முனையும் எவரும் எளிதில் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். தனது சுயநலனைக் காத்துக் கொள்வதற்காக எந்தவித தார்மீக நெறிமுறைக்கும் உட்படாமல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளும் குணம் கொண்டது அமெரிக்கா என்பதே அது!

2001ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 11ஆம் திகதி அமெரிக்க உலக வர்த்தக மையக் கட்டடங்கள் தாக்கி அழிக்கப்பட்டதன் பின்னரான அமெரிக்காவின் உலகு குறித்து செயற்பாடுகளும் மிகவும் முக்கியமானவையாக அமைந்துள்ளன.

செப்ரம்பர் 11க்குப் பின்னரான அமெரிக்க ஏகாதிபத்திய நடவடிக்கைகள் எவ்வாறு பூகோளமயமாக்கலின் உதவியுடன் தேசிய இன முரண்பாட்டை தூண்டி விட்டன என்பதனை பார்ப்பதற்கு முதல் பூகோளமயமாக்கல் என்றால் என்ன என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.

தொலைத்தொடர்பு, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் ஆகிய முன்னேற்றங்களினால் உலக சமூகங்களுக்கு இடையில் அதிகரிக்கும் தொடர்பும், அதனால் ஏற்பட்டுள்ள ஒருவரில் ஒருவர் தங்கி வாழ வேண்டிய நிலையும் பூகோளமயமாக்கல் எனப்படுகின்றது. இன்னும் தெளிவாக சொல்லப் போனால் பூமியை ஒரு குடையின் கீழ், ஒரே அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலையை உடையதாக மாற்றும் செயற்பாடு எனக் குறிப்பிடலாம்.

இந்த பூகோளமயமாக்கல் என்பது இன்று முக்கியமான இரண்டு வழிகளில் முன்னெடுக்கப்படுகின்றது.

முதலாவது, ஒடுக்கப்படும் மக்கள், தம்மை சுரண்டும் மக்களின் அடையாளங்களுக்குள் ஐக்கியப்படுத்தப்படுவது.
மற்றையது, சுரண்டும் குழுக்கள் ஒன்றிணைந்து சுரண்டலை முன்னெடுத்துச் செல்வது.

இந்த இரண்டு வழிகளின் ஊடாகவும் உலக நன்மைக்காகவோ, அல்லது தேசத்தின் நன்மைக்காகவோ ஏதேனும் இடம்பெறும் என நம்புவது வீணான கற்பனை மாத்திரமே.

பூகோளமயமாக்கல் என்ற புதியதொரு வடிவத்தில் நவகாலனித்துவம் மீண்டும் தனது சுவடுகளைப் பதித்து வருகின்றது. விஞ்ஞான, தொழில்நுட்ப உபகரணங்களின் ஊடாக சிந்தனை ரீதியிலான திணிப்பை ஏற்படுத்தி, அடிமைத்தனத்தை புகுத்தும் பணியை வெகு இலகுவாக ஊடகங்களின் வழியாக பூகோளமயமாக்கல் செய்து கொண்டிருக்கின்றது. மேற்கத்தைய வாழ்க்கை முறைகள், பழக்க வழகங்கங்கள் ஊடகங்கள் வழியாக பிரசாரப்படுத்தப்படுகின்றன. தேசிய மொழிகள் மூலமான கல்விக்கான முக்கியத்துவம் பயனற்றதாக விளம்பரப்படுத்தப்பட்டு, தனித்து ஆங்கில மொழிமூலக் கல்வி மீண்டும் ஊக்குவிக்கப்படுகின்றது. இவ்வாறு தேசிய பண்பாட்டுக் கோலங்களை சீர்குலைக்கும் பணியை சிக்கலே இல்லாமல் பூகோளமயமாக்கல் செய்து வருகின்றது.

அடுத்தது தேசிய இன முரண்பாடு. இது மிகவும் எளிதாக விளங்கிக் கொள்ளக் கூடிய சொற்றொடர். தேசிய இனங்களுக்கு இடையில் ஏற்படும் முரண்பாடு. நாம் அனைவரும் அதன் சாட்சியங்களாக இன்று இருப்பதனால் இது தொடர்பில் பெரிதான விளக்கம் ஒன்றையும் முன்வைக்க நான் விரும்பவில்லை. ஆனால் இந்த தேசியம் என்பது ஒரு முதலாளித்துவக் கோரிக்கை என்பதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஏனெனில், மக்கள் கூட்டம் ஒன்று ஒடுக்கப்படும் நிலையில், அதில் தமக்கான பங்கினைக் கோரும் கோரிக்கை சுரண்டும் வர்க்கத்திடம் இருந்தே வருகின்றது. உதாரணமாக, இரண்டு இனப்பிரிவுகளின் ஆதிக்கத்தை கொண்டிருக்கக் கூடிய சுரண்டல் வர்க்கங்கள் மோதிக் கொள்ளும் போது ஏற்படும் யுத்தமானது அவை சார்ந்த ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் சுமையாக வைக்கப்படுகின்றது. உண்மையில் இங்கே, இந்த போராட்டமானது ஓடுக்கப்படுபவர்களினால், சுரண்டப்படுபவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் போராட்டமாக இல்லை. அது தனியே, இரண்டு சுரண்டும் குழுக்களுக்கு இடையிலான போராட்டமாகவே இருக்கின்றது.

இந்த வகையில் நாங்கள் இன்று புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விடயமாக இருப்பது இந்த தேசிய இன முரண்பாட்டுக்கு ஏகாதிபத்திய பூகோளமயமாக்கல் என்பது தூண்டற் கருவியாக அல்லது அடிப்படையாக இருக்கின்றது என்பதனையாகும்.

பூகோளமயமாக்கல் எனும் நிகழ்ச்சி நிரலின் உதவியுடன் உலகில் உள்ள தேசிய செல்வங்கள் பல்தேசிய நிறுவனங்களினால் கொள்ளையடிக்கப்படுகின்றன. இதனை தீவிரப்படுத்தும் வகையில் பல்தேசிய நிறுவனங்கள் பொருளாதார சுரண்டலின் மூலம் உலகத்தை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளன. இங்கு ஏகாதிபத்தியத்திற்கும் ஒடுக்கப்படும் மக்களிற்கும் இடையில் இருக்கும் இன்னும் ஒரு அங்கத்தையும் நாம் அவதானிக்க வேண்டியுள்ளது. அந்த அங்கம்தான் தேசிய முதலாளித்துவம் என்பதாகும். ஏகாதிபத்திய நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு சேவை செய்பவர்களாக இவர்கள் மாறியுள்ளனர். இந்த தேசிய முதலாளிகள் என்ற பிரிவில்தான் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, அரசாங்கத்தை அமைக்கும் ஆளும் கட்சியும் உள்ளடங்குகின்றது. ஏகாதிபத்தியம் பூகோளமயமாக்கலின் ஊடாக செயற்படுத்த விரும்பும் செயற்பாடுகளை தேசிய ரீதியில் அமுலாக்கும் இயந்திரங்களாக இவர்கள் இருக்கின்றனர். இந்த அதிகரித்த செயற்பாடு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்கள் எழுச்சியை உருவாக்குகின்றது. இதில் முன்னிற்பவர்களாக பாட்டாளிகள் இருக்கின்றனர். இந்த பாட்டாளி வர்க்கத்தினை பிரிக்கும் சூழ்ச்சியாகவே இந்த தேசிய இன முரண்பாட்டை ஏகாதிபத்தியம் கையாளுகின்றது. பாட்டாளிகளுக்குள் பிளவை ஏற்படுத்துவதற்காக ஒரு தேசிய இனத்திற்கு முன்னுரிமை அளித்தும், இன்னொரு தேசிய இனத்தை தாழ்த்தியும் இன முரண்பாட்டை உருவாக்குகின்றது ஏகாதிபத்தியம். இந்த சந்தர்ப்பத்தில், இந்த தேசிய இன முரண்பாட்டை மேலும் தூண்டிவிடும் செயலை தேசிய முதலாளித்துவமான அரசாங்கம் என்ற அமைப்பு செய்கின்றது. இதில் அரசாங்கத்தின் இருப்பு என்பது தங்கியுள்ளது. ஏனெனில், இந்த ஏகாதித்திய சக்திகளுக்கு இசைந்து போகாவிடில் அரசாங்கத்தை மாற்றிவிடும் அதிகாரத்தையும் இந்த ஏகாதிபத்திய சக்திகள் உருவாக்கி வைத்துள்ளன. இலங்கையின் இன முரண்பாட்டை நன்கு ஆராய்ந்து பார்க்கும் போது, இந்த நிலையை நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

எனவேதான், பாட்டாளி வர்க்கம் என்ற அடிப்படையில் மக்கள் அணிதிரள்வது ஏகாதிபத்தியத்திற்கு மாத்திரமல்லாது, தேசிய இன முரண்பாட்டுக்கும் தீர்வாக அமையும் என்ற ஆணித்தரமான கருத்து முன்வைக்கப்பட்டு வருகின்றது.

பல தேசிய இனங்கள் வாழும் எமது நாட்டிலும் இந்த தேசிய இன முரண்பாடு என்ற போர்வையில் ஏகாதிபத்தியம், எமது நாட்டு அரசாங்கங்களை தமது கைக்கூலிகளாக வைத்துக் கொண்டு நிகழ்த்தி முடித்த இனப்படுகொலைகளும், சொத்து அழிப்புக்களும் நம் கண் முன்னே சாட்சியங்களாக இருக்கின்றன. ஆனால், இன்றும் நாங்கள் இந்த அழிவுகளுக்கு காரணம் மற்றைய தேசிய இனம் என்ற முட்டாள்தனமான கருத்தில் இருக்கின்றோம். அதனால்தான் பல தசாப்தங்களாக தொடரும் எமது நாட்டின் தேசிய இன முரண்பாட்டிற்கான சரியான தீர்வினை அடைய முடியாது தவித்துக் கொண்டிருக்கின்றோம். 2009 ஆம் ஆண்டு மே 19ஆம் திகதிக்கு பின்னர் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலையை ஆழமாக பகுப்பாய்வு செய்து பார்க்க வேண்டியுள்ளது. மேலோட்டமாக, யுத்தம் நிறைவடைந்து விட்டது, குண்டுகள் வெடிப்பதில்லை, சோதனைகள் அதிகம் இல்லை, அடையாள அட்டை இல்லாமல் பயமின்றி வெளியே செல்லலாம் என்ற சூழ்நிலை காணப்படுகின்றது. ஆனால், இவற்றிற்கு எல்லாம் பின்னால் நாட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஜனநாயக ரீதியானதாக அங்கீகரிக்கப்பட்டு புதியதொரு வடிவில் வெளிக்கிளம்பி வருகின்றது. இன்னொரு வகையில் பார்க்கும் போது நாட்டு சொத்துக்களும், சேவைகளும் தனியார்மயமாக்கப்படுவதும், அபிவிருத்தி என்ற பெயரில் அயல்நாடுகளிற்கு தாரை வார்க்கப்படும் செயற்பாடுகளும் தொடர்கின்றன. 1980களில் உலக அரங்கில் அறிமுகமான ப+கோளமயமதால் என்ற ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரல் இலங்கையில் அன்றாட நடவடிக்கைகளில் வேரூன்றி செல்கின்றது.

யுத்த காலத்தில் மக்கள் நேரடியாக அழிவை எதிர்நோக்கினர். ஆனால், அந்த அழிவு மறைமுகமாக அமைதி, சமாதானம் என்ற பெயரில் தற்போது ஏற்பட்டு வருவதனை உணரக் கூடியதாகவுள்ளது. யுத்தகாலத்தின் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தூண்டிவிட்டு, ஆயுதங்கள் மூலம் மக்களின் அமைதி சீர்குலைக்கப்பட்டது. இன்று தனியார்மயமாதல், தாரளாமயம், திறந்த பொருளாதாரம், நுகர்வு கலாசாரம் என்ற போர்வையில் நாட்டின் அரசியல், பண்பாட்டு, இராணுவ கட்டமைப்புக்களை ஆளும் சூழ்ச்சியை ஏகாதிபத்தியம் மேற்கொண்டு வருகின்றது. சமாதானம் என்ற ஒரு சொல்லை வைத்துக் கொண்டு, பயம், வறுமை, கொலை, கொள்ளை, கடத்தல், நுகர்வு கலாசாரம், வரி, லஞ்சம், கருத்துச் சுதந்திரம் இன்மை, சட்ட பயமின்மை என்ற வடிவங்களில் மக்களின் வாழ்வை சூறையாடி வருகின்றது.

இலங்கையில் பாராளுமன்ற பெரும்பான்மையை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் அரசாங்கங்களும் ஏகாதிபத்திய நலன்களுக்குச் சேவை செய்யும் நிறுவனங்களாகவே செயற்பட்டு வருகின்றன. நாட்டையும், நாட்டு மக்களையும் கொள்ளையிட முயற்சி செய்யும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு, இலங்கையில் முதலீட்டு சந்தர்ப்பங்களை வழங்குவதன் ஊடாக அரசாங்கம் உதவி புரிகின்றது. அமெரிக்கா, ஜப்பான், சீனா, இந்தியா என விரியும் வெளிநாட்டு முதலீடுகள் இவற்றுக்கு உதாரணங்களாக இருக்கின்றன. அதேவேளை, இவ்வாறான கொள்ளையிடும் செயற்பாடுகளை மறைக்கும் வகையில் சில அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக உதவி வழங்கி தம்மை நல்லவர்களாக காட்டிக் கொள்ளும் பணியை இந்த வெளிநாடுகள் செய்கின்றன.

இந்த செயற்பாடுகளை ஆழமாக சிந்தித்துப் பார்க்கும் போது உதவி என்ற பெயரில் ஏகாதிபத்திய சக்திகள் நவகாலனித்துவத்தை எத்தனை வேகமாக நிறுவிவருகின்றன என்பதனை அன்றாடம் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் சிரித்த முகத்துடன் காட்சி தரும் வெளிநாட்டு, அரசாங்க பிரதிநிதிகளின் படங்கள் எமக்கு விளக்குகின்றன.

உலக வங்கியின் நிதியுதவியின் பேரில் வழங்கப்படும் கடன்களை மாத்திரம் கவனத்திற் கொள்ளும் நமக்கு, அதன் பின்னால் எம்மைப் போன்ற ஊழியர்களின் ஈ.பி.எப், ஈ.ரி.எப் வைப்புக்கள் பணயமாக வைக்கப்பட்டிருப்பதனை மறைக்கும் அரசாங்கம் ஏகாதிபத்திய நலனுக்காக பகுதி, பகுதியாக நாட்டையும், மக்களையும் அடகு வைக்கின்றது.

கடந்த 30 வருடங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திய இந்த யுத்தத்தின் அடிப்படை காரணியாக இருப்பது என்ன? இனமுரண்பாடு என்று எம்மால் எளிதாக கூறிவிட முடியும். ஆனால், இந்த இன முரண்பாடு என்பது யாரால் திட்டமிடப்பட்டது. இதனை ஒழுங்குபடுத்திக் கொண்டிருப்பவர்கள் யார்? 2002ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கை என்ற பெயரில் மேலைநாடுகள், அதாவது ஏகாதிபத்தியமானது பூகோளமயமாக்கலை இலங்கையில் முழுமையாக அமுல்படுத்தியமையும், இலங்கையின் தேசிய சொத்துக்கள் தனியார்மயமாக்கப்பட்டதையும், தாராளமயம் என்ற பேரில் ஏற்பட்டிருக்கக் கூடிய அந்நிய கலாசார புகுத்தல்களையும் நாம் அவதானிக்கத் தவறிவிட்டோம். அதற்கு இந்த தேசிய முதலாளித்துவம் முன்வைத்த உபாயம்தான் ஏ9 வீதி திறப்பு, வடக்கு பயணம் என்பனவெல்லாம்.

தற்போதைய நிலையை எண்ணிப் பாருங்கள், அமைதி ஏற்பட்டுவிட்டது என்றதன் பேரில் கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் என புதிய அபிவிருத்தி பணிகள் என்ற போர்வையில் புதிய வீதிகள் நிர்மாணிக்கப்படுகின்றன, புதிய துறைமுகம், புதிய விமான நிலையம் என ஏகாதிபத்திய கடன்கள் இதற்குள் கொண்டு வரப்படுகின்றன. ஏகாதிபத்திய பொருளாதாரத்தின் மத்தியில் தேசிய பொருளாதாரம் என்பது மிகவும் கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. நாட்டின் சுயதேவைக்கான அரிசி இல்லாத நிலையில் ஏற்றுமதி என்பதன் பேரில் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதன் காரணமாக நாட்டில் வறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

எதிர்பார்க்க முடியாதவகையில் ஏகாதிபத்தியமானது உதவிகள், கடன்கள் என்பவற்றை வாரி வாரி வழங்குகின்றது. இதன் ஊடாக நேரடியான சுரண்டல் மற்றும் கடனுக்கான வட்டி என்ற வகைகளில் இலங்கையின் தேசிய வளங்கள் சுரண்டப்படுகின்றன.

இவ்வாறாக ஏகாதிபத்தியத்தின் தலையீடுகளுக்கு அரசாங்கமும் தாரளமய கொள்கையுடன் அனுமதி அளிக்கின்றது. அவ்வப்போது மக்கள் மத்தியில் ஏற்படும் கிளர்ச்சிகளை சமாளிப்பதற்கு பொருத்தமில்லாத பிரச்சினைகளை வெளிக் கொணர்ந்து மக்களின் கவனத்தை இலகுவாக திசை திருப்பி விடுகின்றது. அண்மையில் தேசிய கீதம் தொடர்பில் எழுப்பப்பட்ட பிரச்சினை இதற்கு சிறந்த உதாரணமாகும்.

தமிழர், சிங்களவர் என்ற பேத உணர்வை மக்கள் மத்தியில் நீடிக்கச் செய்வதற்கான ஒரு உபாயமாகவும் இது அமைந்துள்ளது.

இவ்வாறு ஏகாதிபத்திய செயற்பாடுகளின் உதவிக்கரமாக இலங்கை அரசாங்கம் இருக்கின்றது. அண்மைக்காலமாக அதிகம் பேசப்படும் விடயமாக மாறியுள்ள விக்கிலீக்ஸ் இணையத்தளம். இன்றைய தமிழ் பத்திரிகை ஒன்றில், இந்திய பத்திரிகையில் வெளிவந்த கார்ட்டூன் ஒன்றை பார்த்தேன். சர்வதேச அரசியல் என்ற 2010 பொறிக்கப்பட்ட உலக உருண்டை நிர்வாணமாக இருப்பது போன்ற காட்சி. எத்தனை உண்மை. அரசாங்கங்கள் பகிரங்கமானதாக இருப்பதற்கு நாம் உதவி செய்கின்றோம் என்ற தொனிப்பொருளுடன் இயங்கும் விக்கிலீக்ஸ், ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வாறு மதப்பிரிவுகளுக்கு இடையிலான முரண்பாடுகளை தூண்டிவிட்டது, அது நடத்திய மனிதப் படுகொலைகள் என்பதனை விளக்குகின்றது. அதுமாத்திரமின்றி, உலகெங்கிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் எவ்வாறு குறித்த நாட்டின் அரசியல் செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்துகின்றன என்பதனையும் வெளிக்கொணர்ந்தது.

காலத்துக்கு காலம் முதலாளித்துவம் தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக பல்வேறு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் ஏகாதிபத்தியத்தின் கருத்தியல் சார்ந்த கொள்கையாக தற்போது பின்நவீனத்துவம் என்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் மக்களை குழுக்களாகப் பிரித்து அவர்களுடைய செயற்பாடுகளில் தேக்கத்தை கொண்டுவருவது அல்லது முற்றாக செயற்பாடுகளை இல்லாது செய்வது என்பதே இதன் நோக்கமாக உள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில், ஏகாதிபத்தியம் தொடர்பான பகுப்பாய்வு ஒன்றினை நடத்தி முதலாளித்துவத்தின் விதையாக தூவப்பட்டுள்ள ஏகாதிபத்திய பூகோளமயாதலுக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஏகாதிபத்தியத்தின் கால்களில் மிதியுண்டு நைந்து போயுள்ள பல நாடுகள் நாளாந்தம் யுத்தமும், இரத்தமும், சதையுமாய் அல்லலுறுவதனை நாளாந்தம் அறிந்து கொண்டுதான் இருக்கின்றோம். இஸ்ரேல், பலஸ்தீனம், லெபனான், ஈராக், ஆப்கானிஸ்தான், ஆபிரிக்க நாடுகள் என விரியும் இந்த பட்டியலில் நாமும் இணையப் போகின்றோமா? அல்லது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் ஒன்றாக இணைந்து ஏகாதிபத்திய பூகோளமயமாக்கல் மற்றும் தேசிய முதலாளித்துவத்திற்கு எதிராக போராடப் போகின்றோமா?

மக்கள் சமுதாயம் மிகவும் பயங்கரமான பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. மிகவும் மோசமான எதிர்காலத்தினை நோக்கிய இந்த பயணத்தில் ஏகாதிபத்தியத்தின் பணயக் கைதிகளாக இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் இருக்கப் போகின்றோம்? ஜனநாயகத்தின் பேரால், ஏகாதிபத்தியக் கனவுகளை இளைஞர்களில் விதைத்து, எதிர்காலத்தை சூன்யமாக்கும் முதலாளித்துவத்திற்கு எதிராக, இனபேதங்களை மறந்து, பாட்டாளிகள் என்ற அணியில் ஒன்று திரள வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

ஒற்றுமை வழிஒன்றே வழியென்பது
ஓர்ந்திட்டோம்- நன்கு தேர்ந்திட்டோம்
மற்ற நீங்கள் செயுங்கொடு மைக்கெலாம்
அலைவுறோம்- சித்தம்- கலைவுறோம்
-பாரதியார்-

நன்றி:கோபிநாத்

No comments: