Wednesday, December 28, 2016

குதித்த குதியும் ஆடியபாதங்களும்! நினைவில் நிற்கும் நாட்டுக்கூத்து கலைஞர்கள்

- கரவைதாசன் - 

தமிழிலே மேலைத்தேயவரின் வருகையும் அவர்களின் வருகைக்கு பிற்பட்ட புனைகதை (Fiction) முறையும் அறிமுகமாவதற்கு முன்பு வரலாறு, சோதிடம், வைத்தியம், இலக்கியம் என எல்லாம் கவி வடிவிலேயே இருந்திருக்கின்றன. முன்னெல்லாம் சபைகளிலே கவிதையிலேதான் கதைத்தார்கள் என்று  காணக்கிடக்கின்றது. அந்தவகையில் பாடற்கலையும் ஆடற்கலையும் இணைந்து கூத்து அல்லது நாடகம் என்ற வடிவம் மிகச் சிறப்பான ஓர் இடத்தில் அமைந்திருந்ததாக அறியக்கூடியதாக விருக்கின்றது. பழம்பெரும் நூல்களான சாத்தனாரின் கூத்த நூலிலும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திலும், பரதருடைய நாட்டியசாஸ்திரத்திலும் நாடகம் பற்றிய பல செய்திகள் காணக்கிடக்கின்றன. சிந்து, தரு, ஓடம் தண்டகம், விருத்தம், பத்யம், சுலோகம், ஓரடிதரு, ஓரடிபதம் எனப் பல்வேறு இசைவடிவங்களை இசைநாடகங்களில் கையாண்டதாகக் காணக்கிடக்கின்றது. 

கூத்து என்பது இசையோடு இணைந்த ஆட்டமாகும். ஈழத்திலே தமிழர் பாரம்பாரியமாக வாழ்ந்து வரும் பகுதிகளிலே கூத்து பல்நெடும் காலமாக ஆடப்பட்டு வந்திருக்கின்றது. இவை வடமோடி, தென்மோடி, வட்டக்களாரி, காத்தான்கூத்து, மகுடிக்கூத்து, வீரபத்திரா; ஆட்டம், காமன்கூத்து எனப்பல வகைப்படும். உண்மையில் கூத்து தமிழர்கள் வாழ்வில் எப்போதும் சிறப்பான ஓர் இடத்தில் அமைந்திருந்ததாக அறியக்கூடியதாகவிருக்கின்றது. 

ஆனால் கிராமங்கள் நகரங்களாகியபோதும், பார்சிய வடிவிலான ஸ்பெசல் நாடகமுறையின் வருகையாலும், சினிமாவின் வருகையாலும் கிராமத்தினிலேயே இக்கூத்து வடிவம் வித்தூண்டி நின்றபோது நகரத்து மக்களால் இக்கூத்து வடிவம் நாட்டுக்கூத்து என அழைக்கப்பட்டது. 

Monday, November 21, 2016

"எங்களை கொல்வதை எப்போது நிறுத்தப்போகிறீர்கள் ?" கக்கூஸ் என்றொரு ஆவணப்படம்!

மதுரையைச் சேர்ந்த சமூக-அரசியல் செயற்பாட்டாளரான திவ்யபாரதி, மலக்குழியில் இறந்தி உயிர்விட்ட தொழிலாளிகள் குறித்து  ‘கக்கூஸ்’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.  மக்களிடம் நிதி பெறப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் படமாக்கப்பட்டது இந்த ஆவணப்படம்.

“நானும் ஒளிப்பதிவாளர்களாக குமார், கோபால் என மூவருமாக மட்டுமே தமிழகம் முழுக்க சுற்றி இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறோம். நண்பர்கள், தோழர்கள், முகநூல் மூலமாக நிதி திரட்டினோம். நிறைய கடன் வாங்கியிருக்கிறேன். என்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்திருக்கிறேன். ஒரு ஊருக்குப் போகும்போது குறைந்த பட்சம் ரூ. 3 ஆயிரமாவது செலவாகும்.  இத்தனைக்கும் ஒரு நண்பர் கேமராவையும் இன்னொரு நண்பர் மைக்கையும் ஆவணப்படம் முடியும்வரை பயன்படுத்தக் கொடுத்தார்கள்.

படப்பிடிப்பில் குழுவினருடன் திவ்யபாரதி...

மதுரை, தலப்பாகட்டு, நெய்வேலி போன்ற இடங்களில் நடந்த ஒரு சில மரணங்கள் மட்டுமே ஊடகங்களில் பதிவாயுள்ளன.  அக்டோபரில் தொடங்கி இதுவரைக்கும் எனக்குத் தெரிந்து 16 மலக்குழி மரணங்கள்.  மறைக்கப்பட்ட மரணங்கள் இன்னும் இருக்கலாம். ஒவ்வொரு மரணத்தின் பின்னணியையும் படமாக்கும் பொருட்டு 15 மாவட்டங்களுக்குப் பயணமானோம். மலக்குழி இறப்புகளை மட்டுமல்லாது, துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் ஆவணப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. அதையும் செய்திருக்கிறோம்.”

நன்றி: The times tamil 
‘கக்கூஸ்’ ஆவணப்பட டிரெயிலர் இங்கே:

Monday, October 17, 2016

மல்லிகை தொடர்ந்தும் வரும்

ல்லிகை சஞ்சிகை வராத காலத்தில் கூட மல்லிகை ஆசிரியர் என்று நெஞ்சை நிமிர்த்தி பெருமை கொள்கிறேன் என மல்லிகை சஞ்சிகையின் ஆசிரியர் டொமினிக் ஜீவா தெரிவித்தார்.

மேலும் நான் இல்லாத காலத்திலும் மல்லிகை வரும், மணம் வீசும். தமிழ்பேசும் இம்மண்ணில் மிகவும் அதிகமாக நேசிக்கப்பட்ட சஞ்சிகை மல்லிகை ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் கலை இயக்கியப் பெருமன்றத்தின் ஏற்பாட்டில் நானிலம் இணையத்தின் ஊடக அனுசரனையில் ‘ஜீவாவுடன் ஓரு மாலைப் பொழுது’ நிகழ்வு  16.10.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி தொடக்கம் 6 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்…
இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு யாழ்ப்பாணத்தில் இருந்த காலகட்டத்தில் திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்களில் இருந்து வந்திருந்த தமிழ்இன சிப்பாய்கள் மல்லிகை சஞ்சிகையை 30 சதம் கொடுத்து வாங்கி வாசித்தார்கள்.

Saturday, October 15, 2016

பாலியல் லஞ்சம் கொடுத்த மனைவியின் உண்மைக் கதை


பிரசன்ன விதானகே அவர்களின் உருவாக்கத்தில்  "silence in tha courts" உசாவிய நிஹண்டாய்  " நீதிமன்றத்தில் அமைதி " என்ற சிங்கள  திரைப்படம் திரையிடலுக்கான  அனுமதி மறுப்பினை  நீதி மன்றத்திலிருந்து  எதிர்நோக்கியுள்ளது. இலங்கையின் நீதித்துறையில்   இருள் படிந்த  சம்பவங்களை  ராவயின் முன்னாள் ஆசிரியர்  விக்டர் ஐவன்  அவர்கள் தனது நொனிமி அரகலய  என்ற  நூலில்  விரிவாக எழுதியிருந்தார் .  அதில்  லெனின்  ரத்நாயக  என்ற முன்னாள் நீதிபதி  மஹவ நீதி மன்றத்தில்  கடைமை ஆற்றிய காலத்தில்  ஒரு ஏழைப் பெண்ணிடம் கட்டாயத்தின் பேரில்  பாலியல் லஞ்சம்  பெற்றதினை  குறிப்பிட்டுள்ளார் .  இந்த  உண்மையினை அடிப்படையாக வைத்து  எடுக்கப்பட்ட  திரைப்படமே  தடையை  எதிர்கொண்டுள்ளது.

Sunday, October 09, 2016

தீண்டப்படாத முத்தம் - கொடூரத்தை மீண்டும் உரத்து ஒலித்து நிற்கின்றது.

-ந.சுசீந்திரன்-
சுகிர்தராணியின் „தீண்டப்படாத முத்தம்“ என்ற கவிதைத் தொகுப்பில் முதலாவது இடம்பெறும் கவிதை –விடுதலையின் பதாகை. 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி மகாராஷ்டிராவில் நிகழ்ந்த „கயர்லாஞ்சிப் படுகொலைகள்“ நினைவாக இக் கவிதை எழுதப்பட்டிருகின்றது. மிக நன்றாக எழுதப்பட்டிருக்கும் இவ் வரலாற்றுப் பதிவு, கழிந்துவிட்ட பத்து வருடங்களின் பின்னரும் „கயர்லாஞ்சிப் படுகொலையின் கொடூரத்தை மீண்டும் உரத்து ஒலித்து நிற்கின்றது.
அண்ணல் அம்பேத்கார் அவர்களின் ‚சாதி ஒழிப்பு‘ என்ற நூலின் விளக்கங்களும் விமர்சனங்களும் கொண்ட நவீன பதிப்புக்கு ”டாக்டரும் புனிதரும்” என்ற தலைப்பில் அருந்ததி ராய் அவர்களால் மிக நீண்ட முன்னுரை ( அடுத்த வருடம் இது ஒரு தனி நூலாகவும் வெளியிடப்படுகின்றது.) எழுதப்பட்டிருக்கின்றது. இந் நூல் பற்றிய ஓர் அறிமுகக் கூட்டத்தில் இதே தலைப்பில் அருந்ததி ராய் அவர்கள் சிறப்புரை யாற்றும்போது கயர்லாஞ்சிப் படுகொலை பற்றி மிக விபரமாகக் குறிப்பிடுகின்றார். எவ்வாறு கயர்லாஞ்சிப் படுகொலை இன்றைய சந்தை-ஜனநாயக உலகால் கவனங்கொள்ளப்படாமல் விடப்பட்டது என்பதை பாக்கிஸ்தான் நாட்டின் மாணவி மலலாவிற்கு கிடைத்த அங்கீகாரத்துடன் ஒப்பிட்டு, இன்றும் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்திய சாதி அமைப்பின் குரூரத்தையும் கொடூரத்தையும் விளக்கியுள்ளார்.
‚விடுதலையின் பதாகை‘ என்ற தலைப்பிடப்பட்டிருக்கும் இக் கவிதை ஜெர்மன் மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் இக் கவிதையின் மூலத்தில் காணப்படும் சுகிர்தராணியின் படிமங்களையும் சொல்லாட்சியையும் இம் மொழிபெயர்ப்பில் காணமுடியவில்லை. எடுத்துக் காட்டாக:
“… மூங்கில் கூடையில் வெளிச்சம் வாரப்பட்ட
வீட்டின் முற்றத்தில்
நிர்வாணமாய்க் கிடத்தப்பட்டிருக்கிறேன்
கால்களும் கட்டப்பட்டிருக்கின்றன …”

Monday, July 25, 2016

கபாலி - வரலாற்றினை மாற்றும் உரிமை ரஞ்சித்துக்கு இல்லை

-முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன்


கபாலி படத்தில் விவேகானந்தர், அம்பேத்கர், சேகுவேரா, கார்ல் மார்க்ஸ்,பாப் மார்லி போட்டோக்கள் எல்லாம் செட் பிராப்பர்ட்டியாக வருகிறது ஆனால் இவர்களில் எவரும் மலேஷிய தோட்டத்தொழிலாளர்களுக்காக போராடியவர்கள் இல்லை. ஆனால் செட்பிராப்பர்ட்டியில் ஒருவர் படம் இல்லை அது பெரியார்... ஆனால் வேடிக்கை மலேஷிய தோட்டத் தொழிலாளர்களுக்காக போராடியது தந்தை பெரியாரே!

கபாலி திரைப்படம் ஒடுக்கப்பட்டவர்களுக்கானது என்றும், அடிமைப்படுத்தப்பட்ட சமூகத்தின் போராட்டங்களை பதிவுசெய்திருக்கும் ஒரு அரும்பெரும் படைப்பு என்றும் எங்கும் போற்றப்பட்டுவருகிறது. ஒரு சினிமாவாக மட்டுமே கபாலியை முன்னிலைப்படுத்தும் வரையில், அதில் நாம் எந்தவொரு அரசியல் காரணங்களையும் கற்பிக்கத் தேவையில்லை. ஆனால், கபாலி திரைப்படம் இதிலிருந்து வேறுபட்டது. விவேகானந்தர், அம்பேத்கர், சேகுவேரா, கார்ல் மார்க்ஸ் ஏன், பாப் மார்லியின் படத்தைக்கூட வைத்திருக்கிறார்கள் படத்தில். இவற்றையெல்லாம் மனதில்கொண்டு அடுத்துவரும் கட்டுரையைப் படியுங்கள்.

1833ஆம் ஆண்டு, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அடிமை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, பல்லாயிரக்கணக்கான ஆப்பிரிக்க நாட்டு அடிமைகள் விடுதலை பெற்றனர். ஆனால், ஆப்பிரிக்க அடிமைகள் உதறிச்சென்ற அடிமைச் சங்கிலியில் பூட்டப்படுவதற்குப் பொருத்தமானவர்களாக, உலக வல்லாதிக்கங்கள் தேர்வுசெய்த இனம் தமிழினம். அன்று தொட்டு, ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்க நாடுகளின் கரும்பு வயல்கள், ஈயச் சுரங்கங்கள், தேயிலை, ரப்பர்த் தோட்டங்களில் தமிழர்களை நாற்றாக நடும் பணி இருநூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்து நடைபெற்றது. இவ்வாறு தமிழர்கள் லட்சக்கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகளுள் மலேசியாவும் ஒன்று. இரப்பர்த் தோட்டங்களில், கூலிகளாகத் திரிந்த இத்தமிழரின் வரலாறு கண்ணில் நீர் கசிய வைப்பதாகும்.

Monday, July 18, 2016

இணுவையூர் சக்திதாசன் எழுதிய ‘தொட்டுவிடும் தூரத்தில்’

புலம்பெயர்ந்து டென்மார்க் தேசத்தில் வசிக்கும் இணுவையூர் சக்திதாசன் எழுதிய ‘தொட்டுவிடும் தூரத்தில்’ கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது, 17.06.2016 ஞாயிற்றுக் கிழமை, பிற்பகல் மூன்று மணிக்கு வவுனியா நகரில் அமைந்துள்ள குடியிருப்பு பூங்காவில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு பண்டிதர் வீ.பிரதீபன் தலைமை தாங்கினார். தமிழ்மொழி வாழ்த்து இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து வரவேற்புரையினை ஜெசிதா ஆனந்தமூர்த்தி வழங்கினார்.

ஆசியுரையினை தமிழ்மணி அகளங்கன் அவர்கள் வழங்கினார். வாழ்த்துரையினை தமிழ்மணி மேழிக்குமரன் அவர்கள் வழங்கினார். நூலின் அறிமுக உரையினை கவிஞர் வே.முல்லைத்தீபன் நிகழ்த்தினார்.

நூலின் வெளியீட்டு நிகழ்வுகளை செல்லமுத்து வெளியீட்டகம் இயக்குநர் யோ.புரட்சி நெறிப்படுத்தி வழங்கினார்.

நூலினை திரு.திருமதி இணுவையூர் சக்திதாசன் ஆகியோர் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை வவுனியா அறிவாலயம் புத்தகசாலை உரிமையாளர் ஜெ.கோபிநந்தன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் உரையாடல்கள்



தமிழ்ச் சூழலில் காத்திரமான கலந்துரையாடல்கட்கும் அறிவுப்பகிர்வுக்குமான களமாக தேசிய கலை இலக்கியப் பேரவை பௌர்ணமி தோறும் நிகழ்த்தும் 'உரையாடல்கள்' நிகழ்வின் இம்மாத நிகழ்வு'பிரிக்ஸிட்டும் இலங்கையும்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றமும் இலங்கையில் அதன் தாக்கமும்;' என்ற தலைப்பில் நிகழவிருக்கிறது

காலம்: செவ்வாய்க்கிழமை 19ம் திகதி மாலை 05.00 மணிக்கு
இடம் : 121. ஹம்டன் லேன், வெள்ளவத்தையில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடம். 

தயாபரன் ரெஷாங்கன் நெறியாள்கை செய்ய கருத்தாளர்களாக சுதாகரன் பேரம்பலமும் அனோஜன் திருக்கேதிஸ்வரநாதனும் பங்குபற்றுகின்றனர்.

பொதுவெளியில் பயனுள்ள உரையாடல்கள் நிகழ்தற்கான களத்தை உருவாக்கும் முயற்சியில் பங்கேற்கவும் கலந்துரையாடவும், கருத்துப் பரிமாறவும் தேசிய கலை இலக்கியப் பேரவை அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.   

Sunday, July 17, 2016

கன்தீல் பலூச் அவரது சகோதரனினால் "கெளரவக் கொலை" செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானிய Social Media ஸ்டாரான கன்தீல் பலூச் அவரது சகோதரனினால் "கெளரவக் கொலை" செய்யப்பட்டுள்ளார். தமது சமூக, கலாச்சார, மத நெறிமுறைகளை "மீறும்" பெண்களை குடும்ப கெளரவத்தை பாதுகாத்தல் என்ற பெயரில் கொலை செய்வது இறுக்கமான கட்டமைப்பு கொண்ட, சனாதன கீழைத்தைய சமூகங்களில் ஒரு வழமையாகவே இருந்து வருகிறது. நாம் வன்மையாக கண்டிக்கத்தக்க, இழித்துரைத்து அழித்தொழிக்கப்பட வேண்டிய மனிதாயமற்ற பயங்கரவாத பண்பாடு இது.

பாகிஸ்தான் போன்ற நாடுகளின் சமூக அமைப்புகள் மிகவும் பழமைவாத தன்மை கொண்டவை. பின்தங்கிய சமூக மதிப்பீடுகளை கொண்டவை. இந்தியாவில் காலனித்துவத்துக்கு எதிரான Anti Thesis போன்று தேசியம் உருப் பெற்றது போன்று (இது வரலாற்றாய்வாளர் பிபின் சந்திராவின் கருத்து) பாகிஸ்தானில் முற்போக்கான நவீனத்துவ பண்பாடு உருப் பெறவில்லை. காந்தி, நேரு, ராஜாராம் மோகன்ராய், அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களும் பாகிஸ்தானில் உருவாகவில்லை. இமாம் அபுல் அஃலா மெளதூதி போன்றவர்களின் செயல்வாதங்கள் பாகிஸ்தானின் மைய நீரோட்டத்தை விட்டு விலகி விளிம்பில் தள்ளப்பட்டே இருந்தன. ஆக பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடாக இருந்தும் இஸ்லாத்தின் அகிலத்துவ மதிப்பீடுகளிலிருந்து உருவான சமூக செயல்திட்டம் பாகிஸ்தான் சமூகத்தில் ஆளப் பதியவில்லை. அஹ்லே ஹதீத் ஸலபிகளும், பிரேலவி சூபிகளும், தேவ்பந்திகளும் தான் பாகிஸ்தான் மைய நீரோட்டத்தை வழிநடாத்தும் தீர்மானகரமான சக்திகள். இவை Dogmatic ஆனவை. Literal Interpretation களை தாண்டி வெளிவர முடியாதவை. எனவே இந்த சிந்தனை போக்குகளினால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒரு போதுமே தடுத்து நிறுத்த முடியாது. காரணம், இவர்களின் புனித பிரதிகளின் மீதான வாக்கியவாத அணுகுமுறை ஒரு போதுமே பெண்களை சமூக களத்தில் ஆண்களுக்கு நிகராக நடை போட ஒவ்வாதவை. பிற்போக்கான, தந்தை வழி சமூக மதிப்பீட்டில் ஆழ வேர்விட்டு நின்றிருக்கும் பாகிஸ்தானிய சமூகத்தில் அல் குர்ஆன் முன் வைக்கும் பால் சமத்துவம் மற்றும் சமூக நீதி இரண்டுமே சரி வர உருப் பெறவில்லை என்பதே உண்மை. ஸெய்யித் குத்ப் கூறுவது போல இவை இஸ்லாத்திற்கு முற்பட்ட அநாகரீக காலகட்டத்தை ஒத்த "ஜாஹிலிய்யத்" சமூகங்களே. இது சட்ட ரீதியான தீர்ப்பல்ல, மாறாக இதுவொரு Value Based அடிப்படையில் உலகியல் விவகாரங்களை அணுகிடும் பார்வையை கொண்ட அணுகுமுறை.

Sunday, July 10, 2016

இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
வடமாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்படும் நியமனங்களில் அரசியல்வாதிகளின் தேவையற்ற தலையீடுகளும் பிரதேசவாதங்களும் செல்வாக்கு செலுத்துவதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கிளி/சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் அதிபர் நியமனம் வழங்கப்பட்டிருந்த பெருமாள் கணேசனுக்கு - கல்வியமைச்சின் செயலாளருடைய கடிதத்தின் பிரகாரம் கலைமகள் வித்தியாலயத்தில் கடந்த 07.07.2016 அன்று கடமையைப் பொறுப்பேற்கவிருந்த நிலையில் - அவருக்கு தொலைபேசி மூலமாக ஒரு இடைநிறுத்த அறிவித்தல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மூலமாக  வந்திருப்பதாக - அவை தொடர்பான செய்திகளும் தகவல்களும் ஏற்கனவே ஊடகங்களிலும் பரவலாக வந்துள்ளன.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட அநீதி கண்டனத்துக்குரியது.

 இத்தகைய செயற்பாடுகள் வடமாகாண கல்வி அமைச்சின் முறைகேடுகளின் மற்றுமொரு பரிமாணமாகவே பார்க்கப்படவேண்டியுள்ளது.  இந்தத் தவறான - முறையற்ற நடவடிக்கைகளால், சமூகத்தில் பகையும் மோதலும் அணிபிரிதல்களும் உண்டாகக்கூடிய பொறுப்பற்ற செயற்பாடுகளில் வடமாகாண கல்வியமைச்சு ஈடுபட எத்தனித்துள்ளதாகவே பார்க்கவேண்டியுள்ளது.

அரசியல் அதிகாரங்கள் தேவையற்ற விதமாக கல்வியில் குழப்பங்களை உருவாக்க முயலுமாயின் - அது வடமாகாண கல்வியில் இனியும் மீளமுடியாத பின்னடைவை உருவாக்கிவிடும்.
எனவே - இவ்விடயத்தில் வடமாகாண முதலமைச்சர் தலையிட்டு - பாதிக்கப்பட்ட அதிபருக்கு நீதியான தீர்வை வழங்கவேண்டும்.

ஜோசப் ஸ்ராலின்
பொதுச்செயலாளர்,
இலங்கை ஆசிரியர் சங்கம்.

Sunday, April 24, 2016

இருள் இன்னும் முற்றாக விலகவில்லை

(இது புனைகதை அன்று உண்மை)
இக்கதை நிகழ்ந்த காலம் 2007
-சி மௌனகுரு -


சந்திரகுப்த தேனுவர இலங்கையின் நவீன பாணி ஓவியர்களுள் புகழ் பெற்ற ஒருவர். தனக்கென ஓவியத்தில் ஒரு பாணியைத் தோற்றுவித்ததுடன் தனக்கென ஒரு மாணவ பரம்பரையையும் கொண்டவர். சிங்கள மக்கள் மத்தியில் கௌரவத்துடன் கணிக்கப்படுவர். கொழும்பிலுள்ள கட்புல அவைக் காற்றுக் கலைப் பல்கலைக்கழகத்தில் (University of Visual and Performing Arts ) கட்புலக்கலைத் துறைத் தலைவர் நெருக்கமான என் நண்பர்களுள் ஒருவர்.விடுமுறையைக் கழிக்க அவர் தன் மனைவி குமுதினியையும் ஒன்பது வயது மகனான சாருதத்தனையும் மட்டக்களப்பிற்கு அனுப்பி வைத்தார். “ஆட்கடத்தல்கள், கொலைகள், அடக்குமுறைகள் மலிந்திருக்கும் இடம் என்றும் ஊடகங்களால் வர்ணிகக்கப்படும் மட்டக்களப்புக்கு இப்போது போகத்தான் வேண்டுமா” என்ற கொழும்புச் சிங்கள நண்பர்களின் பயமுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாது ஒரு அதிகாலையில் மட்டக்களப்பு ரெயிலில் தன் மகனுடன் எம் வீட்டுக்கு வந்தார் குமுதினி. இரண்டு நாட்களும் மிக அருமையாகக் கழிந்தன. என் மனைவி சித்திரலேகாவும் நானும் அவர்களை மட்டக்களப்பின் இயற்கை வளம் நிறைந்த இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றோம்.மட்டக்களப்பு வாவி (ஆறு) கடலோடு கலக்கும் கழிமுகமான முகத்துவாரம், அதனருகே நிறைந்து கிடந்த மிருதுவான வெண்மணல், எழுவான் கரைத் தீவும் அதன் கடல் அழகும், டச்சுபாரின் அழகிய கடற்கரை, மட்டக்களப்பு வாவியின் இருபுறமும் மதாளித்து வளர்ந்து காற்றிலே அசைந்து நின்ற இளம் தென்னைகள் கண்ணாப் பத்தைகள்,

Thursday, April 07, 2016

அமரர் சி.சண்முகநாதன்!

-மா.சித்திவிநாயகம்-

மாவோயிஸ்டுகள் வர்க்கம் பற்றி மாத்திரம் சிந்திக்கவில்லை; தேசியம் குறித்தும் சிந்தித்தார்கள் என்பதற்கு தோழர் சி.சண்முகநாதன் மகத்தான உதாரணம்


நெடுந்தீவு தந்த தன்னேரில்லா முற்போக்குச் சிந்தையாளர் தோழர் சி. சண்முகநாதன் அவர்கள் இன்று கனடாவில் இயற்கையெய்தினார் என்கின்ற துயரச் செய்தியை துயரத்தோடு பதிவிடுகின்றேன்.தன் இளவயது முதல் சக மனிதர்களின் நலனுக்காய் குரல்கொடுத்து மக்களை மலினப்படுத்தும் அனைத்து அடக்கு முறைகளுக்கும் எதிராகப் போராடி வந்த கம்யூனிசச் சிந்தாந்தவாதிகளுள் முதன்மையானவர் இவர்.சாதியத்தின் கொடூர அடக்குமுறைக்கு ஆட்பட்டிருந்த குடாநாட்டுத் தமிழர்களின் வாழ்வில் தீண்டாமை ஒழிப்பு,பெண்ணுரிமை போன்றவற்றின் முக்கியத்துவங்களைத் தொடர்ந்து பேசியவர் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டவர் அதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் போராடியவர். அண்மையில்தான் அவர் கனடாவிற்குப் புலம் பெயர்ந்திருந்தார். மிகச் சிறந்த மானிட நேயனை இழந்த துயர் நெஞ்சத்தைத் தின்கின்றது .

ஒப்பாரி புலம்பல் ஓயாத அழுகை ஒலி என
எப்போதும் இழவே எம் தமிழர் விதி எனினும் 
பத்தோடு ஒன்றா இவர் பாதியிலே போவதற்கு 
வித்தல்லோ ஊரை உறவுகளை 
வேரை விழுதுகளை ஒன்றிணைக்கப் பாடுபட்ட 
சொத்தல்லோ 
வல்ல உழைப்பால் வளமார் தமிழினத்தை 
வாழவைக்கப் பாடுபட்ட நல்ல மனிதரை 



-நந்தினி சேவியர்-  அனுபவக்குறிப்பு

1971 இல் யாழ் / தொழில் நுட்பக்கல்லூரியில் நான் வணிகத்துறையில் ஒரு மாணவன். எனது சகமாணவன் நெடுந்தீவில் இருந்து வந்த சண்முகநாதன்.!.
இடதுசாரி சிந்தனயால் நாம் இருவரும் ஒன்று பட்டோம்.
அம் முறை தொழில் நுட்பக்கல்லூரி வணிக மாணவர் மன்ற தேர்தலில் தலைவர் செயலாளர், பொருளாளர் பதவிக்கான வாக்கெடுப்பு.. உடனடியாக ஆட்களின் பெயர் பிரேரித்து வழி மொழியப்பட்டு கைகள் உயர்த்தி வாக்கு எண்ணப்படும் தலைவர் பொருளார் பதவிகளுக்கு பெயர்கள் ஏகமனதாகத் தெரிவிக்கப் பட்டுவிட்டன.
நான் எதிர்பாராதவண்ணம் சண்முகநாதன்.!எனது பெயரை செயலர் பதவிக்கு முன் மொழிந்து விட்டான். “நயினை நாக.பஞ்சாட்சரம்” என்னும் தமிழ் அபிமானியை செயலாளராக்குவதாக உள்ளூர தீர்மானிக்கப் பட்டிருந்தது அதிலும் முதலாண்டு மாணவர்கள் தேர்தலில் நிற்கக் கூடாது என்கின்ற எழுதாச்சட்டமும் இருந்து..
எனது பெயர் முன் மொழியப்பட்டு பத்து நிமிடங்கள் வழி மொழிய யாரும் முன் வரவில்லை. அப்போது நான் ஈழநாடு நாவல் போட்டியில் பரிசு பெற்று எனது வகுப்பு மாணவர்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தேன். சடுதிஎன எனது வகுப்பு மாணவி ஒருவர் (ராஜிவி) எழுந்து என்னை வழி மொழிந்தார்....வாக்கெடுப்பு நடந்தது.
190 வாக்குகள் எனக்கும் 10 வாக்குகள் நயினை நாக.பஞ்சாட்சரம் அவர்களுக்கும் கிடைத்தது.(முழு பெண் வாக்குகளுமேஎனக்குத்தான் கிடைத்தது எனது அபிமானத்தினால் அல்ல ராஜீவிக்காக கிடைத்தது ) . முடிவை அறிவித்ததும்.....வணிகப் பகுதி பொறுப்பாளர் ஒரு வேண்டுகோளை என்னிடம் பகிரங்கமாக விடுத்தார்.
“முதலாம் ஆண்டு மாணவர்கள் இந்த பதவிகளுக்கு போட்டியிடக்கூடாது
என்கிற எழுதா விதிக்கமைய “சேவியர்” இபோட்டியில் இருந்து விலகி மற்றைய போட்டியாளருக்கு இடம் வழங்குமாறு கேட்டுகொள்ளுகிறேன்..”
ஒலிவாங்கி என்னிடம் தரப்பட்டது. நான் பேசத்தொடங்கினேன்.....
அனைவருக்கும் வணக்கம் ! உண்மையில் இந்த பதவிக்கு போட்டியிடும் எண்ணம் எனக்கு கிஞ்சித்தும் இருக்கவில்லை. நயினை நாக.பஞ்சாட்சரம்..என்து நல்ல நண்பர். வணிகப் பகுதி பொறுப்பாளரின் கருத்து நியாயமானதுதான்......அனால் இந்தப் பதவிக்கு என்னை முன் மொழிந்த சண்முகநாதனையும், வழி மொழிந்த ராஜீவியையும்....எனக்கு வாக்களித்த 190 சகோதர சகோதரிகளையும் ஒரு கணம் நினைத்துப் பார்கிறேன்...நான் வாபஸ் பெறுவதன் மூலம் அவர்களுக்கு ஒரு தலைக் குனிவை ஏற்படுத்த நான் விரும்பவில்லை..எனவே இப்பதவியை நான் ஏற்றுக்கொண்டு செயல்ப் படுவேன் என்றேன்.
கைதட்டலால் மண்டபம் அதிர்ந்தது.
பின்நாட்களில் . வணிக மன்ற செயல் பாடுகளில் நான் பலவித நெருக்கடிகளை அனுபவித்தேன் சண்முகநாதன் எனக்கு உறுதுணையாக இருந்தான்.. இன்று அவனது மரணச் செய்தி எனக்குக பழைய நினைவை கிளறி விட்டது.
அவனும் நானும் இருவேறு அணிகளாக அரசியலில் இறங்கினோம்...மிக நீண்ட பிரிவு..... அவன் எங்கோ.....நான் எங்கோ....இன்று தான் அவன் கனடாவில் வாழ்ந்தான் இறந்தான் என அறிகிறேன்..
.கனடாவில் எனது “நந்தினி சேவியர் படைப்புகள்” நூலை அவன் வாங்கி இருக்கலாம்..வாசித்தும் இருக்கலாம் ...
அவனுக்கு எனது மௌன அஞ்சலி.! அவனது குடும்பத்தாருக்கு என்ஆழ்ந்த அனுதாபங்கள்!!

Monday, April 04, 2016

நினைவழியா நாட்கள் கே.எஸ். இரத்தினம் நினைவுக் குறிப்பு

-வண்ணைத்தெய்வம்-
கலைஞர்களுடன் கைகுலுக்கி
 நாளெல்லாம் நீ,நடந்த பாதையெல்லாம் 
 உன் மூச்சின்றி முகாரி பாடுதடா!!!
பூஞ்செடிகள், இன்னும், இன்னும் இத்தியாதி, இத்தியாதிகள். யாரையும் மறக்கமுடியவில்லை! 1983ம் ஆண்டு கார்த்திகை மாதம்;, நான் பிறந்து ஓடி விளையாடிய எனது தாய் மண்ணை விட்டு பிரிந்த அந்த நாள், 33 வருடங்கள் உருண்டோடி விட்டது! மறக்கமுடியவில்லை!.... என்னால் மறக்க முடியவில்லை!எனக்கு பிரியாவிடை தந்தனுப்பிய எனது நண்பர்கள் உறவினர்களுடன் நான் பிறந்த வீடு, நான் வாழ்ந்த வீடு, நான் வளர்த்த செல்லப்பிராணி வீமன் என்ற நாய்க்குட்டி, எவையையும் மறக்கமுடியவில்லை! 

இது கலைஞர்கள் வாழ்கின்ற பூங்காவனம். புகழ்பெற்ற பெரும் கலைஞர்கள் 'நவாலியூர் நா.செல்லத்துரை மாஸ்ற்ரர், 'கலைக்காவலர்" சி.தர்மலிங்கம் மாஸ்ற்ரர், குணநாயகம் மாஸ்ற்ரர். இந்த பெரும் கலைஞர்கள் வாழ்ந்த அந்த மண்தான் நண்பன் கே.எஸ்.இரத்தினத்தின் பிறப்பிடமும். இரத்தினம; நான் மறக்கமுடியாத அந்த நண்பர்களில் ஒருவர். ஏன் இவன் எனக்கு நண்பன் மட்டுமல்ல, எனது கலை வாழ்வின் குருவும்கூட! 1970ம் ஆண்டு என நினைக்கின்றேன் 'நல்வாழ்வு" என்னும் நாடகத்தில் நடிப்பதற்காக இயக்குனர் கே.எஸ். இரத்தினத்தினத்துடன் அறிமுகமாகி, இனிய நண்பர்களாகிய நாங்கள் இறுதிவரை நண்பர்களாகவே இருந்தோம். மறக்கமுடியாத அந்த நினைவழியா நாட்களை இன்று மீண்டும் இரை மீட்டிப் பார்க்கின்றேன்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு மிக மிக அண்மையில் ஆத்திப்புலம் என்னும் சிற்றூர். ஆத்திசூடி வீதிக்கு முன்பாக புகையிரதத் தண்டவாளம். அதனைத் தாண்டினால் ஆத்திப்புல மக்களுக்கே பல்கலைக்கழகம்போல் விழங்கிய 'கலைமகள் சனசமூக நிலையம்" அதற்கு பின்னால் ஒரு அகண்ட பெரிய ஓலையால் வேயப்பட்ட வீடு. அதுதான் இரத்தினத்தின் இல்லம். இரத்தினத்தின் கலை வாழ்விற்கு வீட்டில் எந்தவிதமான எதிர்ப்பும் இருந்ததில்லை. இவருடைய இல்லத்தில்த் தான் நாடக ஒத்திகை பார்ப்போம். இதனால் தினமும் இரவு ஏழு மணியானால் நான் இவர்களின் வீட்டிற்கு தவறாது செண்றிடுவேன். முகம் தெரியாத வெளியாட்கள் வீட்டுக்கு வந்தாலும் ஒரு உற்ற சகோதரனைப்போல் கனம் பேணுவது இரத்தினத்தின் துணைவியார் போக்கு; நாடக ஒத்திகைக்கு வருபவர்களில் நான் ஒருவன்தான் வெளியாள். மற்றவர்களான கிங்ஸிலி செல்வக்குமார், சி.ரி.பி. ஜெயா அண்ணன், தேவன் நாகராசா போன்ற அனைவரும் அயலவர்கள்தான். ஓரிரு வாரங்களிலேயே நான் நன்கு அறிமுகமாகிவிட பின்பு அவர்களின் குடும்ப நண்பனாகிவிட்டேன்;.

இவரின் செல்ல மகள் சாந்தி. ஐந்து வயது இருக்கும். பார்ப்பதற்கு லக்ஸ்பிறே மாரின்னில் இருக்கும் குழந்தையின் படம்போல மொழு மொழுவென இருப்பார். நான் சென்றதும் என்னை வரவேற்கும் முதல் ஆள் இவர்தான். இரத்தினத்தின் தந்தையார் ஒரு கலா ரசிகன். நாங்கள் ஒத்திகை பார்க்கும் பொழுது அவரும் ஒரு இயக்குனராகவே மாறி நடிப்பின் நுணுக்கங்களைச்; சொல்லித்தருவார். இப்படியான நினைவழியாத அந்த நாட்கள் என்றும் மறக்கமுடியாதவை.

Monday, March 28, 2016

குமார்குணரத்தினத்தின் நீதிமன்ற உரை

எனது அரசியற் செயற்பாடுகள் ஒருவிதத்தில் இந்த நாட்டு ஜனநாயகம் புதையுண்டு இருந்த இவ்வாறான நிலையில், ஜனநாயகத்தை ஒருவிதத்தில் வெற்றிகொள்ள நடைபெற்ற போராட்டத்துடன் தொடர்பு கொண்டது.

கௌரவ நீதிபதி அவர்களே!

கேகாலை நகரில் பிறந்து வளர்ந்த என்னை விசா காலம் முடிந்தும் இங்கு வசித்த வெளிநாட்டவன் என்ற காரணத்தைக் காட்டி கைது செய்து வைத்துள்ளனர்.

எனது வீட்டின் முன்வாசலுக்கு வந்தால் என்னால் பொது மயானத்தைக் காணமுடியும். எனது தந்தை உட்பட எனது சொந்தங்கள் அடக்கம் செய்த, தகனம் செய்த மயானம் அதுவாகும். நான் வீட்டில் இருந்து கொழும்பு-கண்டி வீதிக்கு வந்தால் றோமன் கத்தோலிக்க மயானத்தைக் காண முடியும். அங்கு எனது தாயின் சொந்தங்கள் எனது தந்தைவழி பாட்டனார் ஆகியோர் அடக்கம் செய்யப்ட்டுள்ள புதைகுழிகள் இன்றும் இருக்கின்றன.

Tuesday, March 15, 2016

கலைஞர் கே.எஸ்.இரத்தினம் - ஓர் அஞ்சலிக் குறிப்பு.

-வைரமுத்து திவ்வியராஜன்- 

கம்யுனிசக் கட்சியில் இணைந்தும் , தேசிய கலை இலக்கியப் பேரவையில் இணைந்தும் பொதுத் தொண்டுகள் ஆற்றிய வகையிலும் இவருடன் நான் நெருக்கமாக பழகி இருக்கிறேன்

கலைஞர் கே.எஸ்.இரத்தினம் அவர்களை நான் திருமணம் முடித்து கரவெட்டிக்கு வந்தபின்னரே நேரடியாகப் பழகவும் அவரது கலைப் பங்களிப்பினை காணவும் வாய்ப்பு ஏற்பட்டது. காலம் பறித்து சென்றுவிட்ட கலைஞர்கள் நாடகத்திலகம் நற்குணம் , அமரர் தங்கமணி ,அமரர் தங்க பாஸ்கரன்,இவர்களுடன் இணைந்து இவர் ஆற்றிய கலைப் பங்களிப்புகளும் சிறி நாரதா வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பங்களிப்புக்களும் எவரும் நன்றியோடு நினைவு கூரத்தக்கவை . இதனை விட கம்யுனிசக் கட்சியில் இணைந்தும் , தேசிய கலை இலக்கியப் பேரவையில் இணைந்தும் பொதுத் தொண்டுகள் ஆற்றிய வகையிலும் இவருடன் நான் நெருக்கமாக பழகி இருக்கிறேன். இவர் மனித உரிமை செயற்பாட்டாளரும் போராளியும் ஆவார். . எப்போதும் அமைதியான- மென்மையான பேச்சும் , சிரித்த முகமும், வசீகரிக்கும் தோற்றமும் அடக்கமாகவே தன்னை பெரிதுபடுத்தாமல் ஆற்றிய பொதுத் தொண்டுகளும் எல்லோராலும் நினைவு கூரத் தக்கவை .இவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிள்ளைகள் குடும்பத்தவர் அனைவருடனும் நாமும் துயரத்தினை பகிர்ந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறோம். அவரது நாமம் வாழட்டும்.

மக்கள் கலைஞர் கே.எஸ். இரத்தினம்



Saturday, March 05, 2016

அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் - சிறுகதை

-நந்தினி  சேவியர்- 







இடதுசாரியச் சிந்தனையாளரான நந்தினி சேவியர்  அவர்களின்  இச் சிறுகதை 1972 ல் மல்லிகையில் வெளிவந்தது. தொடர்ச்சியில்  1994 ல் சுதந்திர இலக்கிய விருதினையும் அதே ஆண்டில் தமிழின்பக் கண்காட்சி விருதினையும் பெற்றது .
நாங்கள் வழமைபோல குந்தியிருக்கும் ஞான வைரவர் கோவில்ஆலமரத்தின் கீழ் குந்தியிருந்தோம். சின்னையரின் தேநீர்க்கடைஇன்னமும் திறக்கவில்லை. முன்புறத்துத் தட்டியை இழுத்துச்சாத்திக் கட்டியிருக்கும் கயிற்றின் முடிச்சு வழமைபோல இறுகியேஇருந்தது. மனிதர் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு தட்டியைஅவிழ்க்க ஆறுமணியாகிவிடும். அது எங்களுக்குத்தெரிந்துதானிருந்தது. காலைநேர வயிற்றுப் புகைச்சலைத் தவிர்க்கசின்னையர் போட்டுத்தரும் தேநீருக்காக நாங்கள் காத்துக்கிடந்தோம்.எங்களது அணியச் சாமான்கள் ஒதுக்குப்புறமாக விழுதுகளில்சாய்த்து வைக்கப்பட்டிருந்தன .
முதல்நாள் ஆறுமுகத்தானின் "வாய்ச்சி "ஆணியொன்றில்பட்டுவிட்டதால் எங்களது அணியத்தில் ஒரேயொரு பொருள் மட்டும்குறைந்திருந்தது .


"கம்மாலைக்குப் போய் அதைத் தோய்வித்துவிடவேண்டும்"

என்று ஆறுமுகம் அடிக்கடி முனகிக் கொண்டிருந்தான். வலதுகை ஊனமாகிவிட்டது போன்ற  மனவருத்தம் அவனுக்கு. ஆப்புகளைப்போட்டுக் கட்டியிருக்கும் சாக்குப் பையையும் ‚வல்லுட்டுக் குத்தி‘யையும் எடுக்கப்போன செல்லையன் இழுகயிறை எடுத்துவரும்கந்தனோடு தொலைவில் வருவது தெரிந்தது. வாய்க்கசப்பைத் தீர்க்கவெற்றிலையைக்கூடப் போடமுடியாமல் சின்னையர்கடைத்தட்டியைத் திறப்பதை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தோம். அந்தஅதிகாலை வேளையில் எம்மைப்போல் எத்தனையோ மனிதப்பிரகிருதிகள் இப்படித் தொழிலுக்குத் புறப்பட்டுப் போவதையும்காத்துக் கிடப்பதையும் நாங்கள் மனப்பூர்வமாக அறிவோம். வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்துக்கொண்டுபோகும் இந்தநாட்களில் எம்போன்றோரின் அவல நிலைகளை நாம் எமக்குள்எண்ணிப்பார்த்துப் புழுங்குவோம். எமது கைகளின் வலுவானதுசற்றுத் தொய்யுமாக இருந்தால் நாம் மழை இல்லாதபயிர்களாகிவிடுவோம் என்பது எமக்குத் தெரியாமலில்லை.இவற்றைப் பற்றிச் சிந்திக்குந்தோறும் நாம்உணர்ச்சிவசப்பட்டுவிடுவோம்.



எங்களது மனைவி மக்கள் எங்களோடு சேர்ந்து பாடுபட்டபோதிலும்எம்மால் அன்றாடச் செலவுகளைக் கூடச் சரிக்கட்டமுடியாதுசங்கடங்கள் எறபடுவதைப் பற்றித் தீவிரமாக சம்பாஷிப்போம்.படிப்பறிவற்ற எம்மைப்போன்றோருக்கு இவையாவும் புதிர்களாகஇருந்த காலமொன்றிருந்தது. நமது பிள்ளைகளை நாம் ஓரளவிற்குப்படிக்கவைத்தோம் .அவர்கள் ஓரளவிற்காவது நமக்குச்சகலவற்றையும் விளக்கக்கூடிய வல்லமை பெற்றவர்களாகஇருந்தார்கள். எமது கிராமம் பின்தங்கிய நிலையிலிருந்து விடுபடஎமது வாலிபப் பிள்ளைகள் உற்சாகத்தோடு உழைத்தார்கள்.  நாமும்அதற்கு உடந்தையாக இருந்தோம். எமது கிராமம் ஒரு மாறுபட்ட –வித்தியாசமான - மறுமலர்ச்சியுடன் புத்துயிர் பெற்று வருவதை நாம்அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இதற்கு எல்லாம் மூல காரணம்எமது ஒற்றுமையும் விட்டுக்கொடுக்கும் தன்மையும் நமதுபிள்ளைகளின் உற்சாகமுமே.

Saturday, February 27, 2016

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 15 -16)

-விஜய பாஸ்கரன்-

அச்சுவேலியில் ஏற்பட்ட சம்பவத்தில் அரியரத்தினம் கொல்லப்பட்டார்.இது தொடர்பாக யாரும் எந்த தகவலும் பொலிசாருக்கு கொடுக்கவில்லை.உண்மை விபரங்களை வெளியிடவும் இல்லை.எனக்குத் தெரிந்த விசயங்களை பகிரவிரும்பவில்லை.இறப்பதற்கு முதல்நாள் எங்கள் வீட்டுக்கு வந்து தன் தோட்டத்துக்கு பனை ஓலை வாங்கிக்கொண்டு போனார். மறுநாள் இந்த தகவல் கிடைத்தது.அவர் பிரபாகரன் பாணியில் செயற்பட முனைந்தார்.புரிந்தவரகள் விளங்கிக் கொள்ளவும்

இரத்தினம் கொலை செய்யப்பட்டபின் கொடிகாம்ம் அய்யா எமது ஊர் தொடர்புகளை விட்டுவிட்டார்.தவராசன் கொல்லப்பட்ட சில மாதங்களின் பின் எமது எதிரிகள் அய்யாவை கொடிகாம்ம் பஸ் நிலையத்தில் வைத்து சுட்டுக்கொன்றனர்.1956ம் ஆண்டு தேர்தலோடு தொடங்கிய மோதல் 1969இல் அய்யா கொல்லப்பட்டார்.இந்த மோதல் காங்கிரஸ் கட்சியால் ஆரம்பிக்கப்பட்டது .
அய்யா கொலையை தமிழரசுக்கட்சி கண்டித்தது.அவரது மரணச் சடங்கில் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.இதைவிட அதிக பங்களிப்பை அவர்களுக்கு கொடுத்தவர் இரத்தினம்.யாருமே கண்டு கொள்ளவில்லை .எமது எதிரிகள் காங்கிஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.எமது ஊரவர்கள் தமிழரசுக்கட்சியின் கட்சி ஆதரவாளர்கள்.சாதி காரணமாக எதிரிகளுக்கே கை கொடுத்தனர்.

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 12- 13 - 14)

-விஜய பாஸ்கரன்-

சம உரிமைப் போராட்டமாக தொடங்கி எதிரிகளின் கொலைவெறியால் இப்போது சமூகங்களிடையேயான பழிவாங்கலாக மாறிவிட்டது.நமது சமூகத்தினர் திடீரென அமைதியானார்கள்.வழமைபோலவே செயற்பாடுகள் இயல்பு நிலை திரும்பின.ஆனாலும் இரத்தினம் பற்றிய பேச்சு தொடர்ந்தது.இரத்தினம் இல்லாத்தால் மீண்டும் அவர்கள் ஊரைத் தாக்கலாம் என்ற அச்சம் சிலரிடையே இருந்தது.அவரகளும் அமைதியாக செயலாற்றினார்கள்.அவரகளில் சிலர் இரண்டு கைக்குண்டுகளை கொண்டுவந்தார்கள்.இது திரியை வாயால் இழுத்து எறிவது.இது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.ஆனால் இதை யார் வைத்திருப்பது,எங்கே வைத்திருப்பது என்ற பிரச்சினை உருவானது.வைத்திருப்பவர் கண்டிப்பாக அதனுடன் இருக்க வேண்டும்.இது உயிர் பாதுகாப்பு சம்பந்தமானது.அத்துடன் பொலிஸ் கெடுபிடியும் கூடியது.அப்போது எமது ஊரில் எல்லா வீடுகளும் குடிசைகளே.அது என்னவென்றே தெரியாதவர்கள்.ஆகவே இதை காட்டில் உள்ள கூழா மரத்தின் அடியில் வைத்திருந்தனர்.இதை யாழ்பாண நகரில் இருந்து ஊருக்கு கொண்டுவர இரண்டு நாட்கள் எடுத்தன.

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் -மந்துவில்( பகுதி 9 - 10 - 11)

-விஜய பாஸ்கரன்-

சாதி வெறியர்கள் ஊருக்குள் புகுந்து நடத்த இருந்த திட்டம் தோற்றது.ஆனால் எமது பகுதி இளைஞர்கள் அதே வழியை சிந்திக்க தொடங்கினர்.இதே வேளை இதற்கு தலைமை தாங்கும் எதிரிகளை கொல்லும் முடிவுக்கு வந்தனர்.இது தொடர்பாக இரத்தினத்திடம் கேட்க அவர் மறுத்துவிட்டார்.அப்படி செய்வதாயின் ஒரே நாளில் சத்தமின்றி அவர்களை அழிக்கலாம்.நமது நோக்கம் அதுவல்ல.அவரகளை நம் கண் முன்னே பணிய வைக்க வேண்டும்.

இரத்தினம் அந்த நாட்களில் பல ஊர் சண்டியர்களை எல்லைக்கோடு தாண்டவிடாமல் தடுத்தவர்.பலர் அந்த எல்லைகளை தாண்டவே பயந்தனர்.இவரைக, கண்டாலே ஓடி விடுவர்.எனவே பழிவாங்கும் திட்டம் கைவிடப்பட்டது.
கொலை வழக்கில் சத்தியேந்திரா உதவ வந்தபின்னர் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தொடர்ச்சியாக வருகை தந்தனர்.சிலர் அவர்களுடன் உறவுகளை பலபல படுத்தினர்.எம்.பி.நவரத்தினம் விமர்சனத்துக்கு உள்ளாக தொடங்கினார்.இது நடராசா மாஸ்ரருக்கு பிடிக்கவில்லை.நேரடியாக இன்றி மற்றவரகளை தூண்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 6 -7- 8 )

-விஜய பாஸ்கரன்-

நவரத்தினம் என்பவர் கொலை செய்யப்பட்டதை சாக்காக வைத்து பொலிஸ் நமது ஊருக்குள் புகுந்தது.இக் கொலையில் மாணிக்கம் இராசன்,சின்னத்தம்பி செல்லத்துரை ,நல்லையா ஆறுமுகம்,சோலையன் செல்லப்பா ஆகியோரை குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.

அன்று பல சட்டத்தரணிகள் யாழ்ப்பாணத்தில் இருந்தனர்.யாரும் உதவ முன்வரவில்லை .தமிழரசுக்கட்சி,தமிழ் காங்கிரஸ் கட்சி ஆகியவை இதில் ஒன்றாக நின்றன.முன்னாள் பனம் பொருள் அபிவிருத்திச் சபை தலைவர் நடராசா சாவகச்சேரி பா.உ. வி.என.நவரத்தினத்தின் பரம விசுவாசி.அவரும் நவரத்தினம் மூலமாக ஒழுங்கு செய்வதாக கூறுனார்.எதுவும் நடக்கவில்லை.
இக்காலத்தில் செல்வநாயகம் இது இந்துக்கள் பிரச்சினை. எனவே நான் தலையிட மாட்டேன் என்று நழுவினார்.அமிர்தலிங்கம் சங்கானை ஒரு வியட்நாமாக மாறி வருகிறது என கம்யூனிஸ்ட் சாயம் பூசி திசை திருப்ப முயற்சித்தார்.இப் போராட்டத்தை கேவலப்படுத்தி பேசினார்.அன்று உள்ளூராட்சி அமைச்சாராக தமிழரசுக்கட்சி சார்பில் இருந்தவர் எம்.திருச்செல்வம்.அவர் நினைத்திருந்தால் கட்டுப்படுத்தி இருக்கலாம்.அவரின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இவை.

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 3 - 4 - 5 )

-விஜய பாஸ்கரன்-

இரத்தினம் மீது கொண்ட அபிமானம் காரணமாகவே டானியல் பஞ்சமர் நாவலை மந்துவிலை வைத்து இரத்தினம் என்ற பாத்திரத்தை கொண்டுவந்தார்.அவர் பற்றிய சில தகவல்கள்.
இரத்தினம் மிக உயரமான திடகாத்திரமான மனிதர்.அவருடன் யாரும் சண்டை போட்டு வென்றதில்லை.எப்போதும் எதிரிகளுடன் சமாதானமாகவே பேசுவார்.யாருடனும் கும்பலாக தாக்குவதில்லை.அவருக்கும் பல சகாக்கள் இருந்தனர்.அவரகளை சண்டை போட அனுமதிப்பதில்லை .
இவர் இல்லாவிட்டால் தமிழரசுக்கட்சி சாவகச்சேரியில் கால்பதித்திருக்க முடியாது.காங்கிரஸ் கட்சியின் அடாவடித்தனங்களை தன் நண்பர் அய்யாவின் நட்புக்காக முறியடிக்க உதவியவர்.இவரின் உடல் பலத்துக்கும் துணிவுக்கும் எல்லோரும் அஞ்சி நடந்தனர்.பல எதிரிகள் இவரை பொலிஸ்காரன் போல கண்டு ஓடினர்.
எமது ஊரில் வெள்ளாள சாதியைச் சேர்ந்த விதானை ஒருவர் மகன் கோவியரகளோடு ஏற்பட்ட தகராறில் ஒரு கோவியரை அடித்துக் கொலை செய்து விட்டார்.அங்கே கோவியரை யாரும் பகைத்து வாழ முடியாது.கொலை செய்தவர் தலை மறைவாகிவிட்டார்.அங்கே வெள்ளாளர் ஒருவர் இறந்துவிட அவரின் சடலத்தை சுடலைக்கு எடுத்துச்செல்ல கோவியர்கள் தடுத்தனர்.வெள்ளாளரால் அவர்களை மிஞ்ச முடியவில்லை .அவரகளில் வரதர், என்பவர் இரத்தினத்திடம் கள் அருந்துபவர்.அவர் மூலமாக இரத்தினத்தின் உதவியை வெள்ளாளர் நாடினர்.
இரத்தினம் தனியாக அங்கு சென்று பிணத்தை அவர்கள் காவிவர அவர் முன்னே சுடலைவரை சென்று ஈமக்கிரியைகளை முடிக்க உதவினார்.எவரும் ஒரு எதிர்பைக் கூட காட்ட துணியவில்லை.
இப்படி இன்னும்பல கதைகள் அவரைப் பற்றி ஊரில் உண்டு.அன்றைய பல போராளிகள் மந்துவில் என்றாலேயே இரத்தினத்தை விசாரிப்பார்கள்
இந்தப் போராட்டமானது பொது இடங்களில் சம உரிமைகோரி நடத்தப்பட்டது.தனிப்பட்ட ரீதியில் யாருடனும் பகை தீர்க்க இல்லை.சாதிவெறியர்கள் பகை தீர்பதிலேயே குறியாக நின்றனர்.எமது கிராமங்களைச் சுற்றி பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட சாதியினர் இருந்தனர்.ஆனாலும் பங்குபெற முன்வரவில்லை.தார்மீக ரீதியாக பல பொருளாதார ஒத்துழைப்புகளை மானாவளை பகுதியினர் வழங்கினர்,.கொடிகாம்ம்,மிருசுவில்,வரணி, அல்லாரை, வேம்பிராய் போன்ற இடங்களில் அதிகமாக சிறுபான்மை தமிழர்கள் இருந்தும் ஆதரவளிக்க தயங்கினர்.இதேபோலவே சங்கானையிலும் நடந்தது.அங்கேயும் சங்கானை ஒரு பகுதியினர்,சண்டிலிப்பாய் போன்ற இடங்களின் ஒத்துழைப்பு குறைவாக இருந்தது.நிச்சாம்ம் மட்டும் தனியே களமாடியது.
இப்போராட்ட காலத்தில் இரத்தினத்தை கொலை செய்ய எடுத்த முயற்சிகள் யாவும் தோற்றன.ஒரு தடவை அவர் தென்னைமரத்தில் இருந்தபோது கொல்ல முயற்சித்தனர்.அது ஓரளவ உயரமான மரம்.குதிக்க முடியாது.யாரையும் அழைக்கவும் முடியாத தூரம்.வேறு வழி இல்லை.அவர் கவனிகாத்துபோல் நின்று தென்னை ஓலையின் வழியாக கொலையாளிகள் நடுவே உருவி வீழ்ந்தார்.எல்லோரும் பயந்து அலறி ஓடிவிட்டனர்.
அதன்பின் மிகுந்த எச்சரிக்கையுடன் கைத்துப்பாக்கி சகிதமாக திரிந்தார்.அவரிடம் துணிவு இருந்தபோதும் தன்னை எப்படியும் கொல்வாரகள் என திடகாத்திரமாக நம்பினார்.ஆனால் பயம் அவரை நெருங்கவில்லை.அவரின் வீடு ஊர் எல்லையில் இருந்தபோதும் அங்கேயே உறங்குவார்.சாதிவெறியர் பகுதிக்குள்ளால் தனியாக போய் வருவார்.
இரத்தினம் கொலை முயற்சிகள் யாவும் தோல்வி கண்டதை அடுத்து ஊரையே பழிவாங்க திட்டம் போட்டார்கள்.இவரகளுக்கு முன் எச்சரிக்கையாக எமது ஊரவர்கள் இரவு வேளைகளில் தெருக்கள்,பற்றைகள் எல்லாம் இரவுகளில் வலம் வந்தனர்.இதனால் இலகுவாக திட்டம் தீட்ட முடியவில்லை.இதை அறிந்த அவர்கள் பொலிசார் உதவியை நாடி நமது ஊரவர்களை சோதனைகள் போட வைத்தனர்.எமது ஊரில் எல்லைகளில் தமிழ் பொலிசார் நடமாடி அவர்களைக் பாதுகாக்க உதவினர்.
ஒரு தடவை திட்டம் தீட்டி எல்லையில் நின்றபோது எமது இளைஞர் ஒருவரின் காதலி கோவியர் சமூகத்தை சேர்ந்தவர்.அவர் மூலமாக தகவல் கிடைக்க எமது ஊரவர்கள் அணி அணியாக செல்ல அவரகள் ஓட்டம் பிடித்தனர்.
இரண்டாவது தடவை அவரகள் இருட்டோடு இருட்டாக ஓரிடத்தில் எமது ஊரை தாக்க தயாராக நின்றனர்.இதை அறிந்த கொடிகாம்ம் அய்யாவின் தம்பி தபால் சாமி என்பவர் தகவலை பரிமாற்றங்கள் செய்ய வசதியற்ற காரணத்தால் தன் வீட்டில் உள்ள துப்பாக்கியால் வெடி வைத்து எம்மவரகளை உசாராக்கினார்.எம்மவரகள் ஆயதங்கள் எதுவுமின்றி அவ்விடம் செல்ல அவர்கள் வேலி ஒன்றைக் கொழுத்தி விட்டு தன் பின நின்று துப்பாக்கி பிரயோகம் நடாத்தினர்.எம்மவரகள் படுத்துக் கிடந்தனர் .ஓடவும் முடியாது போராடவும் முடியாத நிலை.
இந்நிலையில் ஏனையவர்கள் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு அவ்விடம் வந்தார்கள்.எதிரிகளின் சரியான திசையை பார்க்க நெருப்பு பகை தடையானது.அவரகளின் குறி இவர்களை நோக்கி சரியாகவே வந்தன.இதைக் கேட்ட ஒரு 18 வயது இளைஞரும் புறப்பட்டு வந்தார்.அவருக்கு ஊர் எல்லையிலுள்ள வீட்டில் வைக்கப்பட்ட துப்பாக்கி தெரியும். அதை எடுத்து வரும்போது ஒரு மரத்தில் இருந்து டோரச் லைற் ஒளி எமது ஊரவர்கள் மீது விழுவதை அவதானித்தார்.அந்த இருட்டிலும் அவர் குறி தவறவில்லை.அங்கிருந்து ஒருவர் அலறி வீழ்ந்தான்.அத்துடன் எதிரிகள் நிலை குலைய வேலையைத் தாண்டி எமது ஊரவர்கள் அவர்கள் பகுதிக்குள் நுழைந்தனர்.பலர் வெடிகாயங்களுடன் தப்பி ஓடினர்.எம்மவரும் எந்த காயமும் இன்றி தப்பி வந்தனர்.
மறுநாள் இறந்த இளைஞன் யாரென்று அடையாளம் கண்டனர்.அவரதான் இரத்தினத்தால் எச்சரித்து அனுப்பப்பட்ட நவரத்தினம்.வெள்ளாள சமூகத்தவர்.நம்மை எச்சரித்து துப்பாக்கி வெடி வைத்தவர் தபால் சாமி.இவர் கோவியர் கொடிகாம்ம் அய்யாவின் தம்பி. பின்னர் சாமியின் வீட்டைக் கொழுத்தி அவரை ஊரை விட்டு காலிபண்ண வைத்தனர்

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்( பகுதி 2)

-விஜய பாஸ்கரன்-

இந்தப் போராட்டத்தை அச்சுவேலியிலும் தொடங்க சிலர் முன் வந்தனர்.அங்கே பெரிய சமூகமாக பொருளாதார பலத்துடன் இருந்தாலும் போராட யாரும் முன் வரவில்லை .அங்கேயும் கோவியர் சமூகத்தைச் சேர்ந்த தவராசன் என்பவன் தலைமையில் சாதி வெறியர்கள் அணி திரண்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவான சக்திகள் எமக்கு 5 துப்பாக்கிகளை அன்பளிப்பாக வழங்கினர்.இதில் மூன்றை எமது ஊரவரகளும் இரண்டை அச்சுவேலிக்கும் கொடுக்கப்பட்டது.அச்சுவேலி புத்திசாலி வீர்ர்கள் அதை கிணற்றில் போட்டு மறைத்து வைத்திருந்தனர் .சில நாட்களின் பின் எடுத்தபோது அவை கறள்பட்டு செயலிழந்து விட்டன.
எம்மிடம் தரப்பட்டவை மிக அப்பாவிகள் சந்தேகத்துக்கு இடமில்லாத ஊர் எல்லையை அண்டிய வீடுகளில் ஒழித்து வைக்கப்பட்டன.

இக் காலகட்டத்தில் சங்கானை அச்சுவேலி மற்றும் பல பகுதிகளைச் சேர்ந்த போராட்ட ஆர்வலர்கள் எமது ஊருக்கு வந்து போவார்கள்.இவரகளை இணத்துச் செயற்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சியினரும் வந்து போவார்கள்.இது சம்பந்தமான கலந்துரையாடல்கள் எமது ஊர் பாடசாலைகளில் நடக்கும்.இது எமது ஊரின் மையப் பகுதிதான்.

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி1)

-விஜய பாஸ்கரன்-

1966ம் ஆண்டு சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவோடு தொடங்கப் பட்ட போராட்டத்தில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது .இதை எமது பகுதியில் முன்னெடுக்க மீசாலை வடக்கு வேம்பிராய் பாரதி வாசிகசாலையில் ஒரு கருத்தரங்கை அப்பகுதி மக்கள் நடத்தினர்.இதற்கு எமது ஊருக்கும் அழைப்பு விடுத்தனர்.இதில் முன்னாள் பனம்பொருள் அபிவிருத்திச் சபைத் தலைவர் நடராசா இரத்தினம் என்பவரையும் அழைத்துச் சென்று கலந்துகொண்டார் .இந்தப் போராட்டத்தை இரத்தினத்தை தலைமை தாங்குமாறு வேண்டிக் கொண்டனர்.மிகுந்த தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டார்

மீசாலை பள்ளர் சமூகத்தையும் மந்துவில் நளவர் சமூகத்தையும் கொண்டது.மீசாலையைச் சேர்ந்தவர்கள் இது ஒரு சாதாரண போராட்டம் என நினைத்தே இதை தொடங்க நினைத்தனர்.சாவகச்சேரியைப் பொறுத்தவரை சாதியமைப்பு மிகவும் தளர்வு நிலையில் இருந்தது.ஒரு சில சலூன் உரிமையாளர்கள் மட்டும் உயர்சாதியினருக்கு சேவகம் பண்ணினார்கள்.கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை அடுத்து எல்லா உணவகங்களும் திறந்துவிட்டனர்.உண்மையில் அங்கே பாகுபாடு பொது இடங்களில் இல்லை.
கொடிகாமத்தில் சிலர் மறுப்புத் தெரிவித்தனர்.எமது ஊரில் இரண்டு கோவில்கள் இருந்தன.கேலத்து அம்மன் கோவில்.இது அய்யருக்கே சொந்தமானது.அவர் பூரண சம்மதம் தெரிவித்தார்.இன்னொன்று தெருவாரம் பிள்ளையார் கோவில்.இவரகளும் சம்மதித்தனர்.ஆனால் கோவில் பூசைகள் நிறுத்திவிட்டார்கள்.இந்த கடும் எதிர்ப்பாளர்கள் வெள்ளாளர் அல்ல.கோவியர்களே.அதில, முக்கியமானவரகள்அந்த சமூகமே மரியாதை தராதவரகள்.வழிப்பறி திருட்டு சம்பந்தப்பட்டவர்கள்.மீசாலை தெருவாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இந்தப் போராட்டத்துக்கு எமது ஊரிலும் அதிக ஆதரவு இருக்கவில்லை .எமது ஊரிலும் இரு பிரிவுகள் இருந்தன.ஒரு பிரிவு விலகிவிட்டது.கொடிகாமத்தில் போராட முடிவு எடுக்கப்பட்டது.இதை தொடங்கிய மீசாலையைச் சேர்ந்தவர்கள் தலைமறைவாகி விட்டனர்.எனினும் இரத்தினமும் அவரது சகாக்களும் திட்டமிட்டபடி தேனீர்கடை பிரவேசம் செய்தனர்,.இரத்தினம் ஏற்கனவே பிரபலமானவர்.அவரை எதிர்க்க எவரும் முன்வரவில்லை .ஆதரவும் தரவில்லை.கொடிகாம்ம் அய்யா இரத்தினத்தின் நண்பர்.அவரும் மதில்மேல் பூனையாக நின்றார்.

Saturday, February 20, 2016

"நாம்தாம் இந்த நாடு. இந்த மண்ணை நாம் நேசிக்கிறோம்." ஜே.என்.யூ. மாணவர் சங்கத்தலைவர் கன்னையாகுமாரின் உரை

(டெல்லியின் புகழ் பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர்  கன்னைய குமார்  2016 பிப்ரவர் 12இல் இந்த உரையை நிகழ்த்தியதற்காக தேசதுரோகக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார். இப்போது அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்)
COUNTERCURRENTS.ORG, 18 FEBRUARY, 2016 இதழில் வெளியாகியுள்ள இவ்வுரையை தோழர். எஸ்.வி.ராஜதுரை தமிழாக்கம் செய்துள்ளார்.
  மூவண்ணக் கொடிய எரிக்கின்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்ட சாவர்க்கரின் கைக்கூலிகள். அவர்கள்தாம் இப்போது ஹரியானாவில் ஒரு விமான நிலையத்திற்குச் சூட்டப்பட்டிருந்த தியாகி பகத்சிங்கின் பெயரை அகற்றிவிட்டு  சங் பரிவாரத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரைச் சூட்டியுள்ள கட்டார் அரசாங்கத்தை நடத்துகிறார்கள். இதில் நாம் முடிவுக்கு வரவேண்டியது என்னவென்றால், நாம் தேசிய வாதிகள் என்னும் சான்றிதழை வழங்க நமக்கு ஆர்.எஸ்.எஸ். தேவையில்லை என்பதுதான்.

நாம்தாம் இந்த நாடு. இந்த மண்ணை நாம் நேசிக்கிறோம். இந்த நாட்டில் ஏழைகளாக உள்ள 80 விழுக்காடு மக்களுக்காக நாம் போராடுகிறோம். நம்மைப் பொறுத்தவரை இதுதான் தேசபக்தி. பாபாசாகெப் மீது நமக்கு முழு நம்பிக்கை உள்ளது. நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மீது நமக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. சங் பரிவாரத்தினரோ,வேறு யாரொ இந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மீது கை வைப்பார்களேயானால் நாம் அதை சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதை உறுதியாக அறுதியிடுகிறோம். ஆனால் ஜண்டேன்வாலாவிலும் நாக்பூரிலும் கற்பிக்கப்படும் அரசமைப்புச் சட்டத்தின் மீது நாங்கள் நம்பிக்கை வைக்கமாட்டோம். மனுஸ்மிரிதி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த நாட்டில் ஆழமாக வேறூன்றியுள்ள சாதி அமைப்பின் மீது எங்களுக்குப் பற்றுறுதியோ, நம்பிக்கையோ இல்லை. அதே இந்திய அரசமைப்புச் சட்டமும், அதே பாபாசாகெப் டாக்டர் அம்பேத்கரும் அரசமைப்புச்சட்டரீதியான நிவாரணிகளைப் பற்றிப் பேசுகின்றனர். அதே பாபாசாகெப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் மரண தண்டனையை ஒழித்துக்கட்டுவது பற்றிப் பேசினார். அதே பாபாசாகெப் டாக்டர் அம்பேத்கர், கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசினார். நாங்கள் அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிக்க விரும்புகிறோம்; நாங்கள் எங்களது அடிப்படை உரிமையை, அரசமைப்புச்சட்டரீதியான  எங்களது உரிமையை உயர்த்துப் பிடிக்கிறோம்.

Sunday, February 14, 2016

பல்துறையாளன் நாடகக் கலைஞன் அரசையா

சி .மௌனகுரு 
அன்புமிக்க நாடக ஆர்வலர்களே!
விசேடமாக யாழ்ப்பாணத்தில் நாடகம் செய்யும் இளம் நாடகக் கலைஞர்களே!,

உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். அரசையா என நாடக உலகில் அழைக்கப்பட்ட  திருநாவுக்கரசு அவர்கள் தமக்கு எண்பத்திரண்டு வயதாகிய நிலையில்
உடற் சுகயீனமுற்று  மிக மிகத் தளர்ந்து போய் இருப்பதாக அறிந்தேன். இன்று என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் தன் மன ஆதங்கங்களை மள மளவென ஒரு மணி நேரம் என்னிடம் கொட்டினார் தளதளத்த குரலில் கொட்டினார். அக்கொட்டலுக்குள் மிகுதியான அவர் மனத் துயரங்களும்அதிகமான பல உண்மைகளும் இருந்தன. இவற்றையெல்லாம் சுமந்து கொண்டு அந்த முதியவர் தனிமையில் வாடுகிறார்  என்பதை எண்ணி என் மனமும் வாடுகிறது. 1950 1960,1970 களில் யாழ்ப்பாண நாடக உலகில் புகழ் மிக்க இப்பெரியவர் கலையரசு சொர்ணலிங்கம் 90 வயதாகி நவாலியில் வாழ்ந்த காலத்தில் அடிக்கடி அவர் வீடு சென்று பார்த்துப் பராமரித்து வந்தவர். அவருடன் நானும் ஓரிரு தடவைகள் கலையரசின் முதுமைக் காலத்தில் அவர் வீடு சென்று வந்துள்ளேன். நாடக டிப்புளோமா எடுக்கக் கொழும்புப் பல்கலைக் கழகம் செல்லும்படி குழந்தை சண்முகலிங்கம் அவர்களை 1970 களில் வற்புறுத்தி அனுப்பி வைத்தவர்களுள் முக்கியமானவர். அரசையா 1970 களின் பிற்பகுதியில் நாடக அரங்கக் கல்லூரியை வளர்த்த முதன்மையருள் ஒருவர். அன்று யாழ்ப்பாணப் பாடசாலைகள் பலவற்றில் நாடகங்கள் பழக்கி மாணவர் மத்தியில் நாடக ஆர்வத்தை வளர்த்தவர் பிற்காலத்தில் மிகச் சிறந்ததோர்  ஒப்பனைக் கலைஞனராகப் பரிணமித்தவர். குத்து விளக்குத் திரைப்படத்தில் நடித்தவர் சின்னமணி அவர்களின் வில்லுப்பாட்டுக் குழுவில் இருந்தவர். சிறந்த புகைப்படப் பிடிப்பாளர், பல் திறன் மிகுந்த ஓர் கலைஞர். இன்று மாணவர்கள் இவர் பற்றி அறியார். யாழ்ப்பாணத்தில் இன்று பல நாடக மன்றங்கள் காத்திரமான நாடகச் செயற்பாடுகளில் ஈடுபடுவது மகிழ்ச்சி தருகிறது.

Sunday, February 07, 2016

ஓர் புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை

''நாங்கள் பட்டினியால் சாக மாட்டோம்... துப்பாக்கிக் குண்டுகளால் சாவோம்''

-சாரு மஜூம்தார்

(Tamil version of an article from ''Charu Mazumdar- The Man and His Legacy''- Liberation Publication)

தமிழில் :சி. மதிவாணன் 



(ஆகஸ்ட் 8, 2015ல் இதே பக்கத்தில் வெளியான கட்டுரையின் மறு பிரசுரம்- புதிய வாசகர்களுக்கா)


சாரு மஜூம்தார் 1919ஆம் ஆண்டு வாரனாசியில் பிறந்தார். தேதி சரியாகத் தெரியவில்லை. அது ஜெய்த்திசியா என்ற வங்காள மாதம். ஆங்கிலக் கணக்குப்படி மே-ஜூன் மாதம். அவருக்கு 7 வயது இருக்கும்போது சிலிகுரியில் உள்ள அவரின் பெற்றோர் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.



சிலிகுரி என்ற ஊர் தற்போதைய மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் இருக்கிறது. சிலிகுரி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் அவரை ஆறாம் வகுப்பில் சேர்த்தார்கள். அவர் அங்கு மெட்ரிகுலேஷன் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் (தற்போது வங்கதேசத்தில் இருக்கும்) பாப்னாவில் உள்ள எட்வர்டு கல்லூரியில் 1937ஆம் ஆண்டு சேர்ந்தார். அவர் மிகச் சிறந்த மாணவர். இருந்தபோதும் படிப்பை முடிக்காமலேயே சிலிகுரிக்கு வந்து சேர்ந்தார்.



அவர் பள்ளியில் படிக்கும்போதே தேசிய விடுதலை இயக்கத்தில் ஆர்வமுள்ளவராக இருந்தார். 1938ல் காங்கிரஸ் சோசலிசக் கட்சியில் சேர்ந்தார். அவரது தந்தை பிரேஷவர் மஜூம்தார் டார்ஜிலிங் மாவட்டக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். அவருடைய தாய் உமா சங்கரி தேவி மிகவும் முற்போக்கான பெண்மணி. அவர் மக்கள் இயக்கங்களையும் பல்வேறு நல்ல பணிகளையும் ஆதரித்து வந்தார். சாருவின் வாழ்க்கையை வடிவமைப்பதில் அவர் தாயின் பங்கு மிகவும் முக்கியமானது.