Wednesday, October 14, 2015

மடக்களப்பு அரங்க ஆய்வு கூடத்தில் கந்தன் கருணை இளைய பத்மனாதன்.

-பேராசிரியர்.சி.மௌனகுரு-
பத்தண்ணா எனப் பலராலும் அழைக்கப் படும் இளைய பத்மனாதன் இன்றும் நாடகம் கற்றுக்கொண்டிருக்கும் ஒருவர்.
78 வயதினர்.
நாடக நடிகர்,
நெறியாளர்,
நாடக எழுத்தாளர்,
நாடக ஆய்வாளர்
1970 களில் காத்தான் கூத்துப் பாணியில் கந்தன் கருணை என்ற சமூகப் பிரச்சனை சார்ந்த நாடகம் போட்டதன் மூலம் ஈழத்து நாடக உலகில் அறியப்பட்டவர். தொடர்ந்த அவர் யாழ்ப்பாணத்தில் நெல்லியடி மகா வித்தியாலய மாணவிகளைக் கொண்டு தயாரித்த மரபு வழி நாடகமான ஏகலைவன் அவரை மேலும் நாடக உலகுக்கு அறிமுகம் செய்தது. அதில் அவர் யாழ்ப்பாண,மன்னார் மரபுவழி நாடகக் கூறுகளை இணைத்திருந்தார்.  அதற்கு அவர் புது மோடி நாடகம் என்று பெயர் இட்டிருந்தார்


1970 களில் நடிகர் ஒன்றியம் தயாரித்து தாஸீசியஸ் நெற்யாள்கை செய்தகந்தன் கருணையில் நான் கந்தனாக நடித்தேன் அவர் பக்தராக வந்தார். காத்தான் கூத்துப் பாணியை அங்கு அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். எனக்குத் தெரிந்த வடமோடிப் பாணியை அங்கு அவர் பெற்றுக் கொண்டார்.

அவரோடுநா.சுந்தரலிங்கம் நெற்யாள்கை செய்த அபசுரம்,தாஸீசியஸ் நெறியாள்கை செய்த புதியதொரு வீடு முதலான நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பும்1970 களில் கொழும்பில் கிட்டியது

Saturday, October 10, 2015

என்ன மண்ணால் அடித்தார்களா?

-கரவைதாசன்- 


இலங்கையின் வட புலத்தில் கிராமம் என்பது சாதியக் குறியீடாகவே இருக்கின்றது என்பது நாகரிகமற்ற உண்மை. நீ உன் கிராமத்தினை சொல்லு உனது சாதியினை நான் கண்டறிவேன் என்பது ஆதிக்கசாதி மனோபாவமாக இருக்கின்றது. இதனாலேயே  ஒழுங்கை ,குறிச்சி விசாரிப்புக்கள் இரண்டு ஈழத்தமிழர்களின் முதல்ச்சந்திப்பினிலே  மிக இயல்பாக அரங்கேறும்  முடிந்தால் கண்டுபிடி  என்ற வகையில் ஒருவர் உச்சுவதும் இந்தாபார் உன்னையறிகின்றேன் என்றவகையில் மற்றவரின் தொடுப்புமாக இருக்கும். இறுதியில் அவரைத் தெரியுமோ அவர் எனக்கு உறவுக்காரன் என ஒரு பிரபலத்தினை இழுத்துச்  சாதி அறிந்து கொள்வார்கள். எனக்கோ இவர் விடுகிறார் என்ற ஆதிக்கச் செருக்கோடு ஒருவரும். விடுகிறான் இல்லை என்ற நளுவலுடன் மற்றவர் நளுவுவதுமாக பல சம்பவங்களை  கண்டு நாகரிகமுள்ள மனிதர்கள்  அருவருத்திருக்கின்றார்கள் . 
அனால் நாகரிகமற்ற இந்தச்  சமத்துவமின்மைக்கு எதிராக ஒவ்வொரு காலத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து சிலர் வெளிக்கிளர்ந்து சில போராளித்தலைமையின்  கீழ்ப்போராடி வந்திருக்கின்றார்கள். வடபுலத்தின் பல்வேறுபட்ட கிராமங்களில் பல்வேறு வடிவங்களில் அந்தக் கால சூழ்வினைக்கேற்ப இந்த போராட்ட வடிவங்கள் அமைந்திருக்கின்றன. அந்த வரலாறுகள் சில இன்னும் பதிவு செய்யப்படாமலே செவிவழிக்கதைகளாகவே கடத்தப்படுகின்றன. சில அழிந்து தொலைந்து போகின்றன. தொலையாது நிலைக்க நான் கேட்டறிந்த ஒரு சம்பவத்தினை இன்று குறித்து வைப்பதே இக்கணத்தின் நோக்கம். 

Monday, October 05, 2015

"தமிழில் சமகாலத்தில் எந்தப் பாடலாசிரியனும் நல்ல கவிஞன் என்ற பட்டியலில் இல்லை "

-திருமாவளவன்-
நேர்காணல் கருணாகரன் 
இலங்கையில் யாழ்ப்பாணத்தின் வடக்கில் உள்ள வருத்தலைவிளான் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த திருமாவளவன் இப்போதிருப்பதும் இலக்கியத்தில் இயங்குவதும் கனடாவில். அரசியலும் அரங்கும் கவிதையும் திருமாவளவனின் ஈடுபாடுகள். என்றாலும் அரசியல்வாதியல்ல. கவிஞர். அரங்காடி. ஒத்தோடியல்ல. மறுத்தோடி. இதனால் வாழ்வின் பெரும்பகுதியும் சவால்களோடுதான் திருமாவளவனுக்குக் கழிந்திருக்கிறது. இந்த நேர்காணலும் அந்தக் குணத்தையே கொண்டிருக்கிறது. பெரும்போக்கு, பொது இயல்பு போன்றவற்றை அனுசரிக்க வேண்டும் என்ற அவசியத்தைப் புறந்தள்ளியவை. ‘கவிதைக்கும் கவிஞனுக்கும் இடையில் எப்படி இடைவெளி இருக்க முடியும்? கவிதையை எப்படிச் செய்ய முடியும்?’ என்றெல்லாம் கேட்கும் கவிஞர், ‘வாழ்தலே கவிதை. என்னுடைய வலிகளும் வாழ்வின் அடையாளமும் அனுபவங்களுமே அவை’ என்கிறார். இதுவரையில் ‘பனி வயல் உழவு’, ‘இருள்யாழி’, அஃதே பகல் அஃதே இரவு’, ‘முதுவேனில் பதிகம்’ என நான்கு கவிதை நூல்கள் வெளியாகியிருக்கின்றன.
முந்நூறு ஆண்டுகள் உழுதோம் / எங்கள் நிலத்தில் அவர்க்கு / இனியும் உழுவோம் / அவர்கள் நிலத்தை அவர்க்கே’
என்று மேற்குலகத்தினருக்காக உழைத்து மாளும் நம் அவலத்தைச் சொன்ன கவி திருமாவளவனின் தந்தை கனகசிங்கம் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் மலேசிய விடுதலை அமைப்பில் போராளியாக இயங்கியவர். பின்னர் இலங்கை திரும்பி இடதுசாரி அரசியலின் ஆதரவாளராக இருந்தார். அந்த இடதுசாரி அரசியல் ஊற்றே திருமாவளவனின் ஆதாரம். திருமாவளவின் இளைய சகோதரர் கலைச்செல்வன் புலம்பெயர் படைப்பாளிகளில் முக்கியமானவர். பள்ளம், எக்ஸில், உயிர் நிழல் ஆகியவற்றின் மையத்தில் இருந்தவர். புகலிட சினிமாவின் ஆதாரமாகவும் விளங்கியவர். இலக்கியச் சந்திப்பின் இயக்கத்தில் முக்கிய பங்களிப்பாளர். திருமாவளவனும் கலைச்செல்வனும் இளவயதில் இருந்தே சேர்ந்தும் விலகியும் தோழமையோடும் சசோதரத்துவத்தோடும் இயங்கினர். இந்த நிலையில் கலைச்செல்வனின் இழப்பு பெரும்பாதிப்பை திருமாவளவனுக்கு ஏற்படுத்தியது. எனினும் அவருடைய இயக்கம் தளர்வடையவில்லை. இப்பொழுது தன்னுடைய பத்திகளையும் கதைகளையும் தொகுத்து நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்த நேர்காணல் மின்னஞ்சல் வழியாக கடந்த ஒரு ஆண்டாக மேற்கொள்ளப்பட்டது.