Monday, April 04, 2016

நினைவழியா நாட்கள் கே.எஸ். இரத்தினம் நினைவுக் குறிப்பு

-வண்ணைத்தெய்வம்-
கலைஞர்களுடன் கைகுலுக்கி
 நாளெல்லாம் நீ,நடந்த பாதையெல்லாம் 
 உன் மூச்சின்றி முகாரி பாடுதடா!!!
பூஞ்செடிகள், இன்னும், இன்னும் இத்தியாதி, இத்தியாதிகள். யாரையும் மறக்கமுடியவில்லை! 1983ம் ஆண்டு கார்த்திகை மாதம்;, நான் பிறந்து ஓடி விளையாடிய எனது தாய் மண்ணை விட்டு பிரிந்த அந்த நாள், 33 வருடங்கள் உருண்டோடி விட்டது! மறக்கமுடியவில்லை!.... என்னால் மறக்க முடியவில்லை!எனக்கு பிரியாவிடை தந்தனுப்பிய எனது நண்பர்கள் உறவினர்களுடன் நான் பிறந்த வீடு, நான் வாழ்ந்த வீடு, நான் வளர்த்த செல்லப்பிராணி வீமன் என்ற நாய்க்குட்டி, எவையையும் மறக்கமுடியவில்லை! 

இது கலைஞர்கள் வாழ்கின்ற பூங்காவனம். புகழ்பெற்ற பெரும் கலைஞர்கள் 'நவாலியூர் நா.செல்லத்துரை மாஸ்ற்ரர், 'கலைக்காவலர்" சி.தர்மலிங்கம் மாஸ்ற்ரர், குணநாயகம் மாஸ்ற்ரர். இந்த பெரும் கலைஞர்கள் வாழ்ந்த அந்த மண்தான் நண்பன் கே.எஸ்.இரத்தினத்தின் பிறப்பிடமும். இரத்தினம; நான் மறக்கமுடியாத அந்த நண்பர்களில் ஒருவர். ஏன் இவன் எனக்கு நண்பன் மட்டுமல்ல, எனது கலை வாழ்வின் குருவும்கூட! 1970ம் ஆண்டு என நினைக்கின்றேன் 'நல்வாழ்வு" என்னும் நாடகத்தில் நடிப்பதற்காக இயக்குனர் கே.எஸ். இரத்தினத்தினத்துடன் அறிமுகமாகி, இனிய நண்பர்களாகிய நாங்கள் இறுதிவரை நண்பர்களாகவே இருந்தோம். மறக்கமுடியாத அந்த நினைவழியா நாட்களை இன்று மீண்டும் இரை மீட்டிப் பார்க்கின்றேன்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு மிக மிக அண்மையில் ஆத்திப்புலம் என்னும் சிற்றூர். ஆத்திசூடி வீதிக்கு முன்பாக புகையிரதத் தண்டவாளம். அதனைத் தாண்டினால் ஆத்திப்புல மக்களுக்கே பல்கலைக்கழகம்போல் விழங்கிய 'கலைமகள் சனசமூக நிலையம்" அதற்கு பின்னால் ஒரு அகண்ட பெரிய ஓலையால் வேயப்பட்ட வீடு. அதுதான் இரத்தினத்தின் இல்லம். இரத்தினத்தின் கலை வாழ்விற்கு வீட்டில் எந்தவிதமான எதிர்ப்பும் இருந்ததில்லை. இவருடைய இல்லத்தில்த் தான் நாடக ஒத்திகை பார்ப்போம். இதனால் தினமும் இரவு ஏழு மணியானால் நான் இவர்களின் வீட்டிற்கு தவறாது செண்றிடுவேன். முகம் தெரியாத வெளியாட்கள் வீட்டுக்கு வந்தாலும் ஒரு உற்ற சகோதரனைப்போல் கனம் பேணுவது இரத்தினத்தின் துணைவியார் போக்கு; நாடக ஒத்திகைக்கு வருபவர்களில் நான் ஒருவன்தான் வெளியாள். மற்றவர்களான கிங்ஸிலி செல்வக்குமார், சி.ரி.பி. ஜெயா அண்ணன், தேவன் நாகராசா போன்ற அனைவரும் அயலவர்கள்தான். ஓரிரு வாரங்களிலேயே நான் நன்கு அறிமுகமாகிவிட பின்பு அவர்களின் குடும்ப நண்பனாகிவிட்டேன்;.

இவரின் செல்ல மகள் சாந்தி. ஐந்து வயது இருக்கும். பார்ப்பதற்கு லக்ஸ்பிறே மாரின்னில் இருக்கும் குழந்தையின் படம்போல மொழு மொழுவென இருப்பார். நான் சென்றதும் என்னை வரவேற்கும் முதல் ஆள் இவர்தான். இரத்தினத்தின் தந்தையார் ஒரு கலா ரசிகன். நாங்கள் ஒத்திகை பார்க்கும் பொழுது அவரும் ஒரு இயக்குனராகவே மாறி நடிப்பின் நுணுக்கங்களைச்; சொல்லித்தருவார். இப்படியான நினைவழியாத அந்த நாட்கள் என்றும் மறக்கமுடியாதவை.

'செஞ்சுடர் கலா மன்றம்" இது எங்கள் நாடக மன்றத்தின் பெயர். இதனூடாக பத்திற்கும் மேற்பட்ட நாடகங்களை நூற்றுக்கும் மேற்பட்ட மேடைகளில் மேடையேற்றியிருப்போம். 'திருநெல்வேலி முற்போக்கு வாலிபர் சங்கம்" என்னும் பெயரில் நாம் அமைத்த சங்கத்தில் நண்பர்கள்; நவரட்ணம், யோகராஜா, குணரட்ணம், கி.மணியம் இப்படியாக சில வாலிபர்கள் இணைந்திருந்தோம். இது சீனக் கம்யூனிஸ்ற் கட்சியின் திருநெல்வேலிக் கிளையாக இயங்கியது. (பின்னார் இது செஞ்சுடர் முற்போக்கு வாலிபர் சங்கமாக பெயர் மாற்றம் பெற்றது) இச்சங்கத்தினூடாக பல சமூகவிடுதலைப் போராட்டங்களை நடத்தியிருக்கின்றோம். அப்படியான போராட்டங்களில் எல்லாம் நண்பன் இரத்தினமும் ஒருவனாக எங்களோடு இருந்திருக்கின்றார். நினைவழியாத அந்த நாட்களெல்லாம் மறக்கமுடியாதவை!

யோ.பெனடிக் பாலன் எழுதிய வாழவேணும், நீ ஒரு பெக்கோ, கிழமைச்சீட்டு, நான் எழுதிய தங்கையா? தாரமா? இரத்தக்கடன், வீரம் விளைந்தது, மற்றும் ஏகலைவன், இப்படியான பல நாடகங்களில் நகைச்சுவை, குணசித்திரம், தந்தை கதாநாயகன் என பலவிதமான பாத்திரங்களில் தனது நடிப்பாற்றலைக் காட்டியிருக்கின்றார். கலையின் வித்தையை அபரீதமாகக் கொண்டிருந்த இரத்தினம் அவர்கள் வித்யா கர்வம் கொஞ்சமும் இல்லாத அபூர்ப பிறவி. பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். பண்பு நிறைந்தவர். மரியாதை தெரிந்தவர். இன்று எங்கள் கொள்கை பரப்புச் செயலாளர்போல செயல்ப்பட்டு விளம்பரப்படுத்தும் ஃபேஸ்புக், ட்விட்டர், யு டியூப் போன்ற சமூக வலைத்தளங்களும், சாட்டலைற் சேனல்களும் அறிமுகம் ஆகியிருக்காத அந்தக்காலத்திலேயே தனது சக கலைஞர்கள் மத்தியிலும், ஏராளமான ரசிகர்கள் மத்தியிலும் நீண்ட காலமாக ஒரு சினிமா ஹீரோவைப்போல வாழ்ந்தவன் என் நண்பன் இரத்தினம். இப்படியான நினைவழியாத அந்த நாட்கள் மறக்கமுடியாதவை!

நான் 'சாட்டை" என்னும் இலக்கியப் பத்திரிகையை ஆரம்பித்தபோது 'கரவை சாந்தி" என்னும் புனை பெயரில் கட்டுரைகளைத் தந்து எனது பத்திரிகைப் பணிக்கு வலதுகரமாக இருந்தவன். நான் தனியாக 'நந்தினி கலைத் தென்றல்" என்னும் நாடக மன்றத்தை உருவாக்கி எனது கதை வசனம் இயக்கத்தில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 'சாவுக்குச் சவால்" என்னும் நாடகத்தை மேடையேற்றியபோது சிறப்பு விருந்தினராக மேடைக்கு வந்து ஆற்றிய உரை கல்வெட்டினைப்போல இன்றும் எனது நெஞ்சில் பதிந்திருக்கின்றது. நினைவழியா அந்த நாட்கள் மறக்கமுடியாதவை!

நான் வெளிநாடு புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக எனது இல்லத்திற்கு வந்து பல மணிநேரங்கள் என்னுடன் உரையாடிவிட்டுச் சென்றான். அதன் பின்னர் ஏழெட்டு வருடங்களுக்கு முன்னராக பிரான்ஸில் வாழ்கின்ற தனது மகனைப் பற்றி அறிவதற்காக இரண்டொருமுறை தொலைபேசியினூடாக கதைத்துக் கொண்டோம். அப்பொழுது நான் எழுதிய 'காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்து கலைஞர்கள்" என்னும் புத்தகத்தில் அவரைப் பற்றி எழுதும்போது அவரது புகைப்படம் இல்லாததால் போடமுடியவில்லை என ஆதங்கப்பட்டேன். அடுத்த வாரம் அவரது புகைப்படம் ஒன்றை எனக்கு அனுப்பி வைத்திருந்தார் அவ்வளவுதான் எங்கள் தொடர்;. இடையிடையே இவரின் மருமகன் தாசிடம் இவரைப்பற்றி விசாரித்துக்கொள்வேன். இரண்டு மாதங்களுக்கு முன்னதாக தாஸ் அவர்கள் தொலைபேசில் தொடர்பு கொண்டு 'மாமா சுகயீனமாக இருக்கின்றார்" என்ற தகவலைச் சொல்லும்போது நான் அதை சாதரணமாகவே எடுத்துக்கொண்டேன். இரண்டு வாரங்களுக்கு முன்னர் இவரின் மகன் என்னுடன் தொடர்பு கொண்டு என் நண்பனின் மரணச்செய்தியைச் சொன்னபோது என் காதுகள் நம்ப மறுத்துவிட்டன. கலைத்துறை ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டது. மனைவி பிள்ளைகள் மருமக்கள் என அனைவரும் நல்லதொரு குடும்பத் தலைவனை இழந்துவிட்டார்கள். உறவுகள் நல்லதொரு மனிதனை இழந்துவிட்டார்கள். நான் நல்லதொரு நண்பனை இழந்துவிட்டேன். நண்பா! இங்கு நான் சொன்னவைகளைவிட சொல்லாதவைகள் நிறைய உண்டு. அந்த நினைவழியா நாட்கள் மறக்கமுடியாதவை


காதோடு கொஞ்சும் மென்மொழியும் முகமெல்லாம் நந்தவனப் பூச்சிரிப்பும் தேர்போன்று அசைந்து புல்நுனியும் கசங்காது நடந்துவரும் மென் நடையுமாய்
வாழ்வாங்கு வாழ்ந்தவனே -எங்கள்
இரத்தினமே! நவரத்தினங்களில் இரத்தினம் நீ - நின் புகழ் என்றும் மங்காது ....................


கலைஞர்களுடன் கை,குலுக்கி நாளெல்லாம் நீ,நடந்த பாதையெல்லாம் உன் மூச்சின்றி முகாரி பாடுதடா! முத்துச் சப்பரம்போல் அரங்கமெல்லாம் ஜொலித்திருப்பாய் நித்தம் ஒரு மேடையென் சாதனை படைத்து வந்தாய் - இன்று சத்தமில்லாமல் செத்து மடிந்தாயோ? கண்ணுக்குள் நிக்கின்றாய் - எமது காதுகளில் கதைக்கின்றாய் கனவுகளில் வருகின்றாய் - எம் மனங்களில் வாழ்கின்றாய். - வண்ணை தெய்வம் - 'கலைஞர் காவலர்" 'மனிதருண்"

No comments: