Wednesday, December 28, 2016

குதித்த குதியும் ஆடியபாதங்களும்! நினைவில் நிற்கும் நாட்டுக்கூத்து கலைஞர்கள்

- கரவைதாசன் - 

தமிழிலே மேலைத்தேயவரின் வருகையும் அவர்களின் வருகைக்கு பிற்பட்ட புனைகதை (Fiction) முறையும் அறிமுகமாவதற்கு முன்பு வரலாறு, சோதிடம், வைத்தியம், இலக்கியம் என எல்லாம் கவி வடிவிலேயே இருந்திருக்கின்றன. முன்னெல்லாம் சபைகளிலே கவிதையிலேதான் கதைத்தார்கள் என்று  காணக்கிடக்கின்றது. அந்தவகையில் பாடற்கலையும் ஆடற்கலையும் இணைந்து கூத்து அல்லது நாடகம் என்ற வடிவம் மிகச் சிறப்பான ஓர் இடத்தில் அமைந்திருந்ததாக அறியக்கூடியதாக விருக்கின்றது. பழம்பெரும் நூல்களான சாத்தனாரின் கூத்த நூலிலும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திலும், பரதருடைய நாட்டியசாஸ்திரத்திலும் நாடகம் பற்றிய பல செய்திகள் காணக்கிடக்கின்றன. சிந்து, தரு, ஓடம் தண்டகம், விருத்தம், பத்யம், சுலோகம், ஓரடிதரு, ஓரடிபதம் எனப் பல்வேறு இசைவடிவங்களை இசைநாடகங்களில் கையாண்டதாகக் காணக்கிடக்கின்றது. 

கூத்து என்பது இசையோடு இணைந்த ஆட்டமாகும். ஈழத்திலே தமிழர் பாரம்பாரியமாக வாழ்ந்து வரும் பகுதிகளிலே கூத்து பல்நெடும் காலமாக ஆடப்பட்டு வந்திருக்கின்றது. இவை வடமோடி, தென்மோடி, வட்டக்களாரி, காத்தான்கூத்து, மகுடிக்கூத்து, வீரபத்திரா; ஆட்டம், காமன்கூத்து எனப்பல வகைப்படும். உண்மையில் கூத்து தமிழர்கள் வாழ்வில் எப்போதும் சிறப்பான ஓர் இடத்தில் அமைந்திருந்ததாக அறியக்கூடியதாகவிருக்கின்றது. 

ஆனால் கிராமங்கள் நகரங்களாகியபோதும், பார்சிய வடிவிலான ஸ்பெசல் நாடகமுறையின் வருகையாலும், சினிமாவின் வருகையாலும் கிராமத்தினிலேயே இக்கூத்து வடிவம் வித்தூண்டி நின்றபோது நகரத்து மக்களால் இக்கூத்து வடிவம் நாட்டுக்கூத்து என அழைக்கப்பட்டது. 


ஈழத்திலே நாட்டுக்கூத்தென்றதும் கிழக்கிலங்கையும், மலையகமும் மன்னார் முல்லைத்தீவு எனக்கரையோரப்பகுதிகளும், வடபகுதியின் கரையோரக் கிராமங்களான நாவாந்தறை, பாசையூர், குருநகர், ஊர்காவற்துறை போன்றவையும் அளவெட்டியில் ஆடப்பட்டுவரும் வட்டக்களரி ஆட்டமும் மலையகத்திலே ஆடப்பட்டு வரும் காமன் கூத்தும்தான் எனச் சிலாகிக்கப்படுகின்றன. இங்கெல்லாம் இக்கலைவடிவம் காக்கப்பட்டு வருகின்றன என்பது உண்மையே. அதுவன்றி இங்கெல்லாம் ஆடப்பட்டதற்கான பதிவுகளை ஈழத்திலிருந்து இத்துறை சார்ந்து சொற்பமாக வந்த நூல்களிலும் காணக்கிடக்கின்றன.  ஆனால் வடபகுதியின் வடமராட்சிப் பகுதியிலே இந்நாட்டுக் கூத்துக் கலைவடிவம் செழித்தோங்கி வளர்ந்திருந்திருக்கின்றது. பருத்தித்துறை தும்பளைப் பகுதியிலும், புறாப்பொறுக்கியிலும் (அண்ணாசிலையடி) கரவெட்டிமேற்கு கன்பொல்லைக் கிராமத்திலும் இந்நாட்டுக்கூத்து பரம்பரை பரம்பரையாக காத்து வளர்க்கப்பட்டு வந்திருக்கக் காணக்கிடக்கின்றது. என் நினைவுக்குட்பட்டவரை இறுதியாக சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பாக "பூதத்தம்பி " நாட்டுக்கூத்து கன்பொல்லைக் கிராமத்திலே ஆடப்பட்டது. இக்கட்டுரையின் நோக்கமும் நினைவில் நிற்கும் இக்கலைஞர்கள் பற்றிய நனவிடை தோய்தலாகும். 

பருத்தித்துறை தும்பளையில் அண்ணாவியார் தம்பு நாடறிந்த அண்ணாவியராக இருந்து இக்கலையினை பேணி வந்திருக்கின்றார். இவர் உச்சஸ்தானியில் பாடும் வல்லமை கொண்டவராகவும் ஆர்மோனியம், மத்தளம் போன்ற இசைக் கருவிகளை இசைக்க வல்லவராகவும் இருந்திருக்கிறார். புறாப்பொறுக்கியில் அண்ணாவியார் வல்லிபுரம் சின்னையா, அண்ணாவியார் முத்தையா போன்றவர்கள் இக் கலையினை காத்து நின்றிருக்கிறார்கள். இவர்களுடன் புறாப்பொறுக்கியைச் சேர்ந்த சீன்காரக் கண்டு என்பவர் சிறந்த நாட்டுக்கூத்து ஒப்பனைக்காரரும் ஆட்ட நுணுக்கங்கள் நன்கறிந்த நாட்டுக்கூத்துக் கலைஞருமாவர். 

கரவெட்டிமேற்கு கன்பொல்லைக் கிராமத்திலே சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பாக ஆடப்பட்ட  "பூதத்தம்பி " நாட்டுக்கூத்து தென்மோடி வகையினைச்சேர்ந்ததாக கூறக்கிடக்கின்றது. ஈழத்திலே நாட்டுக்கூத்துக் கலைவடிவமானது பிரதேசங்களுக்கமைய ஆடப்படும் முறையிலும் இசைக்கப்படும் இசைக்கருவிகளும் வேறுபட்டிருக்கும். மட்டக்களப்பு நாட்டுக்கூத்திலே மத்தளமும் தாளமும் பிரதான இசைக்கருவிகளாகும். மலையகத்திலே தப்பு பிரதான இசைக்கருவியாகும். யாழ்ப்பாணத்திலே ஆர்மோனியம், டோல்க்கி, கடம், மத்தளம் போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன. மட்டக்களப்பிலும் மலையகத்திலும் ஆட்டம் பிரதானமாக அமைந்திருக்க ஏனைய இடங்களில் பாட்டு மரபு தூக்கலாக பேணப்பட்டு வருவதாக சிலர் குறிப்பிடுகின்றனர். அவ்வாறன்றி கன்பொல்லையில் ஆடப்படும் நாட்டுக்கூத்தில் ஆட்டமும் பாட்டுமென இரண்டுமே தூக்கலாகவிருக்கும். 

இக்கூத்திலே ஆடப்படும் ஆட்டங்கள் கட்டியம், உலா, குத்துமிதி, எட்டு, பாய்ச்சல், ஒய்யாரம் அடந்தை, தட்டடி, எனப்பலவகைப்படும். இவ்வாட்டங்களுக்கேற்ப பாடப்படும் பாட்டுக்களும் வேகமாகப்பாடப்படும் பாட்டு, மெதுவாகப்பாடப்படும் பாட்டு, நடுத்தரமாகப்பாடப்படும் பாட்டு, குழுவினர் பாடும் பாட்டு, தனியாகப்பாடப்படும் பாட்டு எனப் பலவகைப்படும். இங்கு வட்டவடிவில் மேடைஅமைத்தே (வட்டக்களரிஅமைத்து) கூத்தாடப்படும்.. அண்ணாவியார் ஆறுமுகம் தம்பு (இராசப்பா) அவர்கள் கையிலே தாளத்தைவைத்துக் கொண்டு கூத்தினை நடத்துவார். உதவியாக அண்ணாவியார் சின்னத்தம்பி இராசன், அண்ணாவியார் நாடகத்திலகம் கே.வி.நற்குணம் பாட்டிசைத்தும் கூத்து நடத்தவும் உதவுவார்கள். புறாப்பொறுக்கியைச் சேர்ந்த சீன்காரக் கண்டுதான் இவர்களின் நிரந்தர ஒப்பனைக்காரர். சில தருணங்களில் யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டத்திலிருந்து ஒப்பனைக்காரர்கள் வந்து ஒப்பனை செய்வதுமுண்டு. மிருதங்கவித்துவான் வல்லி. தங்கமணி மத்தளமடிக்க (மிருதங்கத்திற்குப்பதிலாக இங்கு மத்தளமே அடிக்கப்படும்.) அண்ணாவியார் காத்திப்பாவின் மகன் காத்தி கிருஸ்ணன் (லிங்கம்) ஆர்மோனியம் இசைக்க, பக்கப்பாட்டுக்காரர்கள் பக்கப்பாட்டுப்பாட, ஆட்டமும் பாட்டுமாக கூத்து நடக்கும். கூத்தில் பாடப்படும் ராகங்கள் தக்கேசி, செந்துருத்தி, மேகாரக்குறிஞ்சி, பொன்னி, முத்தம்மா எனத்தமிழ்ப்பெயர்கள் கொண்டே அழைக்கப்பட்டன. இவ்ராகங்கள் கர்நாடக இசையில் வேறு பெயர்கொண்டு அழைக்கப்படுகின்றன உதாரணமாக தக்கேசிதான் இன்றைய காம்போதி, செந்துருத்திதான் இன்றைய மத்தியமாவதி. இந்த விசயதானங்களை அண்ணாவியார் நாடகத்திலகம் கே.வி.நற்குணம் அவர்கள்தான் எனக்கு விளக்கிக் கூறுவார் நானும் சிறிது காலம் அவருடைய நாடகப்பட்டறையில் பயின்றவன். அண்ணாவியார் நாடகத்திலகம் கே.வி.நற்குணம் அண்ணாவியார் காத்தியப்பா, அண்ணாவியார் ஆழ்வாரப்பா போன்றவர்கள் கார்நாடக சங்கீதத்திலும் பாண்டித்தியம் உள்ளவர்களாவர். அண்ணாவியார் கே.வி.நற்குணம் அவர்கள் சிறந்த ஆசுகவியுமாவார். இவர் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுக்களை (அந்தியேட்டி நினைவுமலர்) யாத்தும் பாடியும் உள்ளார். 

கூத்து அரங்கேற்றம் காண்பதற்கு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பே அதற்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டுவிடும். பயிற்சிக் காலங்களில் ஒவ்வொருநாளும் மாலை நேரங்களில் பயிற்சி நடக்கும். ஒவ்வொரு கலைஞரும் ஆடிய பாத்திரத்தினை அடுத்த தலைமுறையில் அவரது மகன் அல்லது அவரது நெருங்கிய உறவுக்காரர்ஆடுவார். பயிற்சிக்காலங்களில் முந்திய தலைமுறையில் ஆடிய கலைஞர்கள் அண்ணாவியாரின் அனுமதியுடன் அடுத்த தலைமுறையில் ஆடும் கலைஞருக்கு ஒத்தாசையாக இருப்பார். சாரியாகச் சொல்வதானால் கூத்திலே பாத்திரம் என்ற பதம் பாவிப்பதில்லை வேசம் கட்டுதல் என்றே கூறுவார்கள். ஒருதலைமுறை பயின்று அரங்கோற்றம் கண்டால் தொடர்ந்து ஏழு ஊரில் ஏழு களம் அமைத்து ஆடியே ஓய்வார்கள். அப்படி ஏழு களம் கண்டு ஆடாது போனால் தலைமைக்கார (கதாநாயகன்) வேசம் கட்டியவருக்கு ஏதாவது தீது நேர்ந்துவிடும் என்பதை ஓர் ஐதீகமாக இவர்கள் நம்பினார்கள். நான் அறிந்த வரை கன்பொல்லைக் கிராமத்திலுள்ள செல்லிசீமான் முருகன் ஆலயத்திலும், அவ்வூரிலேயுள்ள சகாதேவன் குடியிருப்பு ஞானவைரவர் ஆலயத்திலும், நெல்லண்டைகாளி கோவிலிலும், வதிரியிலும், மாதனையிலும், பருத்தித்துறை கோட்டடி அம்மன் கோவிலிலும், கரவெட்டி அத்துழு அம்மன் கோவிலிலும் இவர்களால் ஆடப்பட்டு ”பூதத்தம்பி” நாட்டுக்கூத்து களம் கண்டது. 

வடமராட்சி கரவெட்டிமேற்கு கன்பொல்லைக் கிராமத்தில் நினைவில் நிற்கும் மகாப் பெரிய இந்த அண்ணாவிமார் யாரும் இன்று உயிருடன் இல்லை. இருந்தபோதும் இந்நாட்டுக் கூத்தோடு தொடர்புடைய காவடி, கரகாட்டம் போன்ற கலைவடிவங்கள் இன்றும் இவ்வூரில் பேணப்பட்டு வருவதைக் காணலாம். அத்தோடு இன்றும் இவ்வூர் கலைஞர்களிடம் காத்தான் கூத்து வாழ்ந்து வருகிறது. ஆனந்தக்காவடி அல்லது ஆட்டக் காவடி என்று இக்கிராம மக்களால் அழைக்கப்படும் காவடிக் கலை இக்கிராமமக்களுக்கே உரிய தனித்துவமான கலைவடிவமாகும். அண்ணாவியார் காத்தியப்பாவும், அண்ணாவியார் ஆழ்வாரப்பாவும் இக்கலையில் விற்பண்ணர்களாவர். இக்கன்பொல்லைக் கிராமத்தில் இருந்து குடிபெயர்ந்து ஆனையிறவு உப்பளத்தில் ஒரு பகுதி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். (அது யாழ்ப்பாணத்து நிலவுடமைச் சமுதாயத்தின் கொடிய வரலாறு. அதனை பிறிதொரு கட்டுரையில் விபாரிக்கலாம்.) அங்கும் இவ்வாட்டக்காவடிக் கலையினை அண்ணாவியார் அராவர் அவர்கள் பேணிக்காத்து வந்தார். 

ஒவ்வொரு வருடமும் தொண்டமானாறு செல்வச்சந்நிதி கோவில் உற்சவத்தின்போதும் பருத்தித்துறை வல்லிபுரக்கோவில் உற்சவத்தின்போதும் இக்காவடி ஆட்டமும், கரகாட்டமும் ஆடப்பட்டு வருகிறது. இக்கோவில் உற்சவங்களின் கொடியேற்றத்தின் அன்று இவ்வண்ணாவிமாரின் வீட்டு முற்றத்தில் மாலை நேரம் பயிற்சி ஆரம்பமாகும். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி, வல்லிபரக்கோவில் தேர்த்திருவிழாவின் அன்று மாலை கன்பொல்லை கிராமத்தில் அமைந்துள்ள செல்லிசீமான் முருகன் ஆலயத்திலும், அவ்வூரிலேயுள்ள சகாதேவன் குடியிருப்பு ஞானவைரவர் ஆலயத்திலும் இக்காவடி ஆட்டம், கரகாட்டத்திற்கான வெள்ளோட்டம் நடைபெறும். இதனை சலங்கை கட்டல் என அழைப்பார்கள்.  காவடியாட்டத்தில் குத்துமிதித்தல், கோலாட்டம், கப்பலாட்டம் எனப் பலவகைப்பட்ட ஆட்டங்கள் ஆடப்படும். மிருதங்கம், ஆர்மோனியம், டோல்கி போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்பட அண்ணாவியார் பாடி தாளத்தினை கையில் வைத்துக் கொண்டு ஆட்டத்தினை நடத்துவார். பக்கப்பாட்டுக்காரர்கள் பாட்டிசைப்பார்கள். இளைஞர்களும், சிறுவர்களும் காவடியினை தோளில் வைத்துக் கொண்டு தாளத்திற்;கமைய பம்பரமாக ஆடுவார்கள். அடுத்த நாள் காலையில் செல்லிசீமான் முருகன் ஆலயத்திலும்,  சகாதேவன் குடியிருப்பு ஞானவைரவர் ஆலயத்திலும், ஆட்டம் ஆரம்பமாகி நெல்லியடிச் சந்தி, மாலிசந்தி, புறாப்பொறுக்கிச் சந்தி ஆகிய இடங்களில் ஆட்டம் கண்டு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலோ அல்லது வல்லு¢புரக்கோவிலிலோ ஆட்டம் முற்றுப்பெறும். கரகாட்டத்தின்போது உடுக்கும், தாளமும் பிரதான இசைக்கருவிகளாக இசைக்கப்படும். ”ஓரான கண்ணே கண்ணே, எங்கள் உமையாள் பெற்ற பாலாகனே” என்ற பாடலுடன் கரகாட்டம் ஆரம்பமாகி மங்களப்பாட்டுடன் ஆட்டம் நிறைவுபெறும்.

இன்று தமிழ் சார்ந்தும் தமிழ்க்கலை சார்ந்தும் உழைப்போர். இக்கலைவடிவங்களை பேணிக்காப்பதுடன் இக்கலைவடிவங்களினுடே தமிழைப்புதுப்பித்தல் தகும். இதற்கு கடந்த சில சகாப்தங்களில் நெல்லியடி அம்பலத்தாடிகளின் காத்தான் பாணிசை ”கந்தன் கருணை” நாடகம் நல்லதொரு உதாரணமாக அமையும். கன்பொல்லைக் கிராமத்து கலைஞர்களின் பங்களிப்பும் அங்கு செறிந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். 
  


வேசங்கள் (பாத்திரம்)   வேசம்கட்டியோர் (நடிகர்கள்)

1)பூதத்தம்பி (பூதன்) வல்லி. தங்கராசா (இவருக்கு முதற் தலைமுறையில் இவரது தகப்பன் வேலன். வல்லி பூதன் பாத்திரத்திற்கு     வேசம் கட்டியிருந்தார்)
2)மங்கிலியநாச்சி   (பூதனின் மனைவி) அருச்சுணர். மூத்தான்
3)அழகவல்லி  (பூதனின் தங்கை(தோழி)) சிங்கர். தம்பையா
4)சொக்கன்  (பூதனின் மகன்) தங்கராசா.தங்கராணி
5) அழகவல்லியின் அண்ணன் கறுவல் சூரர்
6)அந்திராசு முன் அந்திராசு :- சின்னப்பொடி இரத்தினம். பின் அந்திராசு :- ஆறுமுகம் கந்தப்பு.
7)யாழ்ப்பாணத்து அட்மிரல் அமுல்ராசன் கன்னையர் குருக்கள்.
8)கோட்டைஅரசன் -  (மோட்டுராசா)  முருகன். சின்னத்துரை
9)கட்டியகாரன் -  மாணிக்கம். செல்லையா
10) செட்டியார்  கணபதி கறுவல்.
11) பறை சாற்றுவோன் - கோமாளி (பபூன்) சித்தன் தருமன்.
12) சேவகர்கள் 1) கத்தையா முருகுப்பிள்ளை
2)வல்லி கணபதி .
13) சின்னஉலாந்தேசு (பூதனின் தோழன் வெள்ளைக்காரத்துரை) கறுவல் சண்முகம் (இவருக்கு முதல்  தலைமுறையில் இவரது தகப்பன் பூசாரி கறுவல் இப்பாத்திரத்திற்கு வேசம்கட்டியிருந்தார்).
14) கண்டி அரசன் சின்னத்தம்பி இராசன் (கன்பொல்லை கிராமத்தில் வாழ்ந்த நாட்டுக் கூத்து அண்ணாவியர்களில் ஒருவர்).

நன்றி: இனி இதழ் 1  (2005)

No comments: