Monday, October 17, 2016

மல்லிகை தொடர்ந்தும் வரும்

ல்லிகை சஞ்சிகை வராத காலத்தில் கூட மல்லிகை ஆசிரியர் என்று நெஞ்சை நிமிர்த்தி பெருமை கொள்கிறேன் என மல்லிகை சஞ்சிகையின் ஆசிரியர் டொமினிக் ஜீவா தெரிவித்தார்.

மேலும் நான் இல்லாத காலத்திலும் மல்லிகை வரும், மணம் வீசும். தமிழ்பேசும் இம்மண்ணில் மிகவும் அதிகமாக நேசிக்கப்பட்ட சஞ்சிகை மல்லிகை ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் கலை இயக்கியப் பெருமன்றத்தின் ஏற்பாட்டில் நானிலம் இணையத்தின் ஊடக அனுசரனையில் ‘ஜீவாவுடன் ஓரு மாலைப் பொழுது’ நிகழ்வு  16.10.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி தொடக்கம் 6 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்…
இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு யாழ்ப்பாணத்தில் இருந்த காலகட்டத்தில் திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்களில் இருந்து வந்திருந்த தமிழ்இன சிப்பாய்கள் மல்லிகை சஞ்சிகையை 30 சதம் கொடுத்து வாங்கி வாசித்தார்கள்.


தமிழுக்கு அர்ப்பணித்த இந்திய எழுத்தாளர்களான பாரதியார், புதுமைப்பித்தன், ஏனைய இலங்கை இந்திய எழுத்தாளர்கள் பணமில்லாமல்தான் இலக்கியச் சேவையை செய்தார்கள். நான் மல்லிகை சஞ்சிகையை ஆரம்பித்தேன். அதனால் பல பிரச்சனைகளை முகம் கொடுக்க வேண்டிவந்தது.

ஒரு கல்லூரியின் துடிப்பான மாணவன் ‘இந்த சவத்தை எல்லாம் யார்தான் படிப்பார்கள்’ என்று என்னிடமே கேட்டான். நான் அவனுக்கு நன்றி தெரிவித்தேன். என் மல்லிகை சஞ்சிகையால் பல அவமானங்களை சந்தித்தேன். மொட்டைக்  கடிதங்கள் அனுப்பப்பட்டன. இவற்றை எல்லாம் தாக்குபிடிக்க முடியாத நிலையில் இவற்றை எல்லாம் கடந்து சாதிக்க முடிந்தது.

இந்த மண்ணில் பணத்தை விட நல்ல உள்ளங்களை கொண்டே இலக்கியப் பணி செய்யலாம். மல்லிகை சஞ்சிகை வெளியாகி கால்நூற்றாண்டைக் கடந்தும் இலங்கை, தமிழ்நாட்டு அறிவுஜீவிகள் மத்தியில் மல்லிகை சஞ்சிகை வேரூன்றி இருந்தது. அதுதான் எனது அர்ப்பணிப்பு. இன்றைக்கு நடக்கும் நிகழ்வு அதற்கு சரியான எடுத்துக்காட்டாக இருக்கிறது.

இன்றைக்கு மல்லிகை சஞ்சிகை வராத காலத்தில் கூட மல்லிகை ஆசிரியர் என நெஞ்சை நிமிர்த்தி பெருமை கொள்கிறேன். நான் இல்லாத காலத்திலும் மல்லிகை வரும் மனம் வீசும். எதிர்வரும் காலத்திலும் தொடர்ந்து இலக்கியப் பணியை தொடருங்கள் என்றார்.

நன்றி: நானிலம் 

No comments: