Sunday, July 31, 2011

குண்டலினி யோகா

 யோகமும் குண்டலினியும்
-ராஜ சங்கர் -
 யோக முறைகள் இப்போது கூவிக்கூவி விற்கப்படுவதால் எதுக்கும் எதுக்கும்
சம்பந்தமின்னு நிறைய பேருக்கு தெரியலை. சரி, நமக்கு தெரிஞ்சத சொல்லி
வைப்பமேன்னு இந்த பதிவு.

ஒருத்தர் குண்டலினி யோகத்தில் சேர்ந்தது என்கிறார். இன்னொருவர், இல்லை  என்கிறார். மூன்றாவது ஆள் யோகம் பழகினாலே குண்டலனி எழும் அதுனால தகுந்த குரு
இல்லாம செய்யக்கூடாது என்கிறார். இதெல்லாம் எந்த அளவு உண்மை என பார்க்கலாம்.

அஞ்சலி

தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் தலைவர்   க. கிருஸ்ணபிள்ளை  காலமானார்

கதிர்காமு கிருஸ்ணபிள்ளை  (மாயக்கை கிருஸ்ணபிள்ளை) 27.07.2010 அன்று தொண்டமானாற்றில் காலமானார்.
 யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் 21.10.1979 இல் நடைபெற்ற, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க மாநாட்டு மேடையில் இடமிருந்து வலமாக இரண்டாவதாக அமர்ந்திருப்பவர் கே. கிருஷ்ணபிள்ளை. அருகே கே. டானியலும் எஸ் ரி. என். நாகரெத்தினமும். சண்முகதாசனின் வாழ்த்துச் செய்தியை வி. ரி. இளங்கோவன் வாசிக்கிறார்

இச்செய்தியினை எனக்கு எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் அறிவித்தார்.
அவரை பற்றி மேலும் அக்குறிப்பில் நந்தினி சேவியர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்
.

'சாதி ஒடுக்கு முறையால் பின்தள்ளப்பட்ட வடமாராச்சியின் கிராமங்களில் ஒன்றான மாயக்கையின் முக்கிய மனிதராக கிருஸ்ணபிள்ளை இருந்திருக்கிறார்.
(எனது ‘அயல்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்
சிறுகதையில் அக்கிராமத்தை அடையாளப்படுத்தியிருக்கிறேன்.)
அவரை நான் அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாசாலையில் ஒரு ஆசிரியராக அடையாளம் கண்டேன். இன்னொரு கிருஸ்ணபிள்ளை அங்கு ஆசிரியராக இருந்தமையால், இவர் ‘மாயக்கை கிருஸ்ணபிள்ளை யென ஊர்ப் பெயரால் அழைக்கப்பட்டார்.

பாரதியாரின் தலைப்பாகை கட்டுடன் கம்பீரமாக சைக்கிளில் வருவது எனக்குத் தெரியும். கவிஞர் அல்வாய் மு.செல்லையா வுடன் கவியரங்குகளில் அவர் கவிதை பாடியதை நான் அறிவேன்.
பின் நாட்களில் திருமண பந்தத்தினால் தொண்டம
னாறு வாசியாகினார்.

தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட நாட்களில் அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிட்டியது.

S. T. N. நாகரத்தினத்திற்கு பின்னர் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் தலைவராக அவர் இருந்தார்.
எழுத்தாளர். கே.டானியலுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.

அவர் ஒரு இடதுசாரியாக இல்லாதிருந்த பொழுதும், சாதியத்துக்கெதிரான போராட்டங்களில் முன்னணி பங்காளாராக முழு மனதுடன் ஈடுபட்டார்.
சாதி ரீதியான ஒடுக்கு முறைகளை அனுபவித்த தன் வெளிப்பாடே  அவரை தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் பால் ஈர்த்தது. என்பது மறக்க முடியா உண்மை.

சாதியம் மீண்டும் தலை தூக்க விளையும் இந்த நேரத்தில் அவரது இழப்பு மிக வருத்தத்துகுரியது.

அவருக்கு எம் தோழமை நிறைந்த அஞ்சலிகள்
’’


- V. T. ELANGOVAN



எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் எழுதிய அஞ்சலிக்குறிப்பு

‘’சாதி ஒடுக்கு முறையால் பின்தள்ளப்பட்ட வடமாராட்சியின் கிராமங்களில் ஒன்றான மாயக்கையின் முக்கிய மனிதராக கிருஸ்ணபிள்ளை இருந்திருக்கிறார். (எனது ‘அயல்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ சிறுகதையில் அக்கிராமத்தை அடையாளப்படுத்தியிருக்கிறேன்.)
அவரை நான் அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாசாலையில் ஒரு ஆசிரியராக அடையாளம் கண்டேன். இன்னொரு கிருஸ்ணபிள்ளை அங்கு ஆசிரியராக இருந்தமையால், இவர் ‘மாயக்கை கிருஸ்ணபிள்ளை’ யென ஊர்ப் பெயரால் அழைக்கப்பட்டார். பாரதியாரின் தலைப்பாகை கட்டுடன் கம்பீரமாக சைக்கிளில் வருவது எனக்குத் தெரியும். கவிஞர் அல்வாய் மு.செல்லையா வுடன் கவியரங்குகளில் அவர் கவிதை பாடியதை நான் அறிவேன். பின் நாட்களில் திருமண பந்தத்தினால் தொண்டைமனாறு வாசியாகினார்.
தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட நாட்களில் அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிட்டியது. எஸ்.ரி.என் நாகரத்தினத்திற்கு பின்னர் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் தலைவராக அவர் இருந்தார். எழுத்தாளர். கே.டானியலுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. அவர் ஒரு இடதுசாரியாக இல்லாதிருந்த பொழுதும், சாதியத்துக்கெதிரான போராட்டங்களில் முன்னணி பங்காளாராக முழு மனதுடன் ஈடுபட்டார். சாதி ரீதியான ஒடுக்கு முறைகளை அனுபவித்ததன் வெளிப்பாடே அவரை தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் பால் ஈர்த்தது என்பது மறக்க முடியா உண்மை.
சாதியம் மீண்டும் தலை தூக்க விளையும் இந்த நேரத்தில் அவரது இழப்பு மிக வருத்தத்துக்குரியது. அவருக்கு எம் தோழமை நிறைந்த அஞ்சலிகள்’’

Saturday, July 23, 2011

பொன் .கந்தையா

 நினைவில் தோழர் பொன். கந்தையா  
-கரவைதாசன்-

வர்க்க உணர்ச்சியும், உண்மையான ஜனநாயகப் பிரியமும்புரட்சிகர உணர்ச்சியும் கொண்ட வர்களை எப்பொழுதும் கொம்யூனிஸ்டுகள் வசீகரிப்பதைப்போல் வேறெவரும் வசீகரிப்பதில்லை. ஐம்பதுகளில் இலங்கைத் தீவே வர்க்கத்துருவப்பட்டிருந்தபோது வடமராட்சியில் கம்யூனிஸ்ட்கள் தோழர் பொன் கந்தையா அவர்களை வசீகரித்திருந்ததில் வியப்பேதும் இல்லை!


அன்று தமிழ்மக்கள் பாராளுமன்ற அங்கத்தவராகத் தேர்ந்தெடுத்த ஒரேயொரு இடதுசாரி பாராளுமன்ற அங்கத்தவர் தோழர் பொன். கந்தையாதான்.

Friday, July 22, 2011

சர்வதேசச் சமூகம் தற்போது யுத்தத்தை விற்கிறது

சர்வதேசச் சமூகமும் வரலாறும் விடுதலையும்: சில குறிப்புகள்
-அஸ்வத்தாமா-

அறிமுகம்
இன்று லிபியாவில் நேற்று ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் என எல்லாவற்றிலிலும் ‘சர்வதேசச் சமூகம்” எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதைப் பற்றி வியப்பதற்கு எதுவுமில்லை. அது எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படித்தான் நடந்து கொள்கிறது. இதற்கிடையில் லிபியாவில் பொதுமக்களைக் காப்பாற்ற தலையிட்ட ஐ.நாவும் சர்வதேசச் சமூகமும் இலங்கைத் தமிழர் விடயத்தில் அவ்வாறு நடந்துகொள்ளாமல் தமிழர்களை ஏமாற்றிவிட்டதாகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. நாங்கள் வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இற்றைக்குப் பதினேழு ஆண்டுகளுக்கு முன் ருவாண்டாவில் நூறு நாட்களில் எட்டு இலட்சம் டுட்சி சிறுபான்மையினர் படுகொலை செய்யப்பட்ட போது ஐ.நாவும் சர்வதேசச் சமூகமும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. இக் காலப்பகுதியில் ஐ.நாவின் அமைதிகாக்கும் படைகளுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் ரோமியோ டிலார் (Romeo Delaire) தனது ‘பிசாசுடன் கை குலுக்குதல்” (Shaking Hands with the Devil) என்ற நூலிற் பின்வருமாறு எழுதுகிறார்:

Thursday, July 21, 2011

டாக்டர் முத்துலட்சுமி

முதல் இந்தியப் பெண்டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

 நினைவுநாள் யூலை22
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி குறித்து தமிழ் கூடல் எனும் வலைத்தளத்தில் 2007ஆம் ஆண்டில் வெளியான கட்டுரை இது. தமிழ் கூடலுக்கு நன்றி தெரிவித்து அதனை மறுவெளியீடு செய்திருக்கிறேன். மக்கள் இந்த அம்மையாரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்பதே நமது அவா! மீண்டும் நன்றி "தமிழ் கூடல்".
   
பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக புரட்சிப் பெண்ணாகத் தோன்றியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (Dr. Muthulakshmi Reddy).
அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்த்து, அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைக்கும் அவ்வை இல்லம், புற்று நோய்க்கு உயர்தர சிசிக்சைகள் அளிக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை போன்றவற்றை அமைத்தவர்.

என் கண்ணீரோடு சேர்ந்து...

 யோ .கர்ணனின் கதைகள்: தேவதைகளின் தீட்டுத்துணி.
-ச .தமிழ்ச்செல்வன் -

இலங்கையிலிருந்து வரும் எந்த ஒரு படைப்பும் எம்மை முதலில் பெரும் குற்ற உணர்வுக்குள்ளாக்கும். எத்தனை சௌகரியமான –அமைதியான-ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ,நிற்க நிழலில்லாமல் ஓடித்திரியும் ஒரு வாழ்வைப்பற்றிய கதைகளை-கவிதைகளை- நாங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறோம் என்கிற குற்ற மனம்.முன்பு ஷோபா ஷக்தியின் ம்.. நாவல் குறித்து ஓரிரு பக்கங்கள் எழுதினேன்.ஆனால் அன்று இருந்த மனம் இன்று எனக்கில்லை.அன்று புலிகளும் இருந்தார்கள்.அவர்கள் மீதான எம் காட்டமான விமர்சனங்களும் சண்டைகளும் இருந்தன.இலங்கைப் பிரச்னையை அன்று நான் பார்த்த விதமும் வேறு.ஏதோ ஒரு நம்பிக்கை அன்று எல்லா வாக்குவாதங்களுக்கும் சண்டைகளுக்கும் பிறகு மிச்சமாக இருந்துகொண்டேயிருந்த்து.
யோ.கர்ணனின் தேவதைகளின் தீட்டுத்துணி சிறுகதைத்தொகுப்பை வாசிக்கும் இன்றைய என் மனநிலை முற்றிலும் வேறாக இருக்கிறது.முள்ளிவாய்க்காலில் எம் மக்கள் கதறிய வார்த்தைகள் எம் செவிகளில் விழுந்தும் ஏதும் செய்ய இயலாதவர்களாக-ஏதும் செய்யாதவர்களாக-ஏதேதோ வார்த்தைகளில் அல்லது வாதங்களில் முகம் புதைத்துக் கிடந்தோம்.எப்போதுமே தமிழ்நாட்டில் நாங்கள் இலங்கைத் தமிழ்மக்களின் பிரச்னைகளை எங்களின் அரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டிருந்தோமே ஒழிய ஆழப்புரிந்து கொண்டு அக்கறையான முயற்சிகளைச் செய்தோமில்லை என்கிற கசப்பே என் அடி நாவில் படிந்து கிடக்கிறது. இன்றும்கூட அப்படித்தான் இருக்கிறோம்.ஐந்தாம் கட்டப்போரை கொழும்புவில் நடாத்துவோம் என்று வீர உரைகள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம்.அல்லது இன்னும் தனி ஈழத்துக்குறைவாக எதையும் ஏற்க மாட்டோம் என்று அதே குரலில் இங்கே நின்று பேசிக்கொண்டிருக்கிறோம்.
எங்கள் முகத்தில் அறைகின்றன யோ.கர்ணனின் இக்கதைகள்.

Sunday, July 17, 2011

சாயிபாபா வெறும் வித்தைக்காரர்


 தெய்வீக ஆற்றல்  கொண்டவரா சாயிபாபா?
சுத்தப் பொய், அவர் வெறும் வித்தை காட்டுபவரே.

-அறிவியல் அறிஞர் எம். பார்கவா இந்துவில் எழுதிய ஆய்வுக் கட்டுரை-
-தமிழில் த.க.பாலகிருட்டிணன்-
(புஷ்பா எம். பார்கவா தேசிய அறிவியல் ஆணையத்தின் முன்னாள் தலைவ ராகவும், தேசிய பாதுகாப்பு ஆலோ சனைக் குழுவின் முன்னாள் உறுப் பினராகவும், அய்தராபாத் செல்லுலர் மற்றும் மொலகுலர் பயாலஜி மய்யத்தின் தோற்றுநரும், முன்னாள் இயக்குநராகவும்  இருந்தவர்.)
சென்னை, மே 15- புட்டபர்த்தி சாயிபாபா தெய்வீக சக்தி கொண்டவர் என்பதெல்லாம் கடைந்தெடுத்த பொய்யே, அவர் வெறும் சாதாரண வித்தை காட்டுபவரே (மேஜிக் செய்பவரே) என்பதைப் பிரபல அறிவியல் அறிஞர் எம். பார்கவா  இந்து ஏட்டில் எழுதியுள்ளார். அதன் மொழியாக்கம் வருமாறு:

Friday, July 15, 2011

பிரான்ஸ் பாஸ்டிலே தேசிய விடுமுறைதினம்

பிரான்சில் ஆண்டுதோறும் ஜூலை 14ஆம் தேதி புரட்சி தினமான பாஸ்டிலே தேசிய விடுமுறை தினமாக கொண்டாடப்படுகிறது. பிரான்சில் கடந்த 1789ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி பாரிசில் உள்ள பாஸ்டிலே சிறைச்சாலையை புரட்சியாளர்கள் திரண்டு தாக்கினர்.


அந்த கொந்தளிப்பு போராட்டம் பிரான்சில் புரட்சி ஏற்பட வழிவகுத்ததுடன் விடுதலையும் பெற்று தந்தது. எனவே ஒவ்வொரு ஆண்டும் பாஸ்டிலே தினம் தேசிய விடுமுறை கொண்டாட்ட நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

பிரான்சில் நேற்று முன் தினம் பாஸ்டிலே தினம் கொண்டாடப்பட்டது. ராணுவ அணி வகுப்பும் நடைபெற்றது. அனைத்து மக்களும் உற்சாகமாக இருந்தார்கள்.  பிரான்சில் கடந்த 1789ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி பாரிசில் உள்ள பாஸ்டிலே சிறைச்சாலையை புரட்சியாளர்கள் திரண்டு தாக்கினர்.

அந்த கொந்தளிப்பு போராட்டம் பிரான்சில் புரட்சி ஏற்பட வழிவகுத்ததுடன் விடுதலையும் பெற்று தந்தது. எனவே ஒவ்வொரு ஆண்டும் பாஸ்டிலே தினம் தேசிய விடுமுறை கொண்டாட்ட நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

பிரான்சில் நேற்று முன் தினம் பாஸ்டிலே தினம் கொண்டாடப்பட்டது. ராணுவ அணி வகுப்பும் நடைபெற்றது. அனைத்து மக்களும் உற்சாகமாக இருந்தார்கள்.
 காணொளி இணைக்கப்பட்டுள்ளது 

ராபர்ட் இங்கர்சால்


 பகுத்தறிவாளர் மேதை ராபர்ட் இங்கர்சால்

-பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன்-


இந்த உலகம் கண்ட பகுத்தறிவு மேதைகள் மேற்கிலும், கிழக்கிலும் பலராவர்.  கிழக்கில் இந்திய மண்ணில் தந்தை பெரியாரைப் போற்றி மகிழ்வது போல் கிழக்கு வானில் தோன்றிய வெளிச்சம் போல், மேற்கில் தோன்றிய மேதை இங்கர்சால். ஆனால் ஒரு வேறுபாடு  அய்யா தந்தை பெரியார் தேர்தல், போட்டி என்று தேர்தல் களத்தில் இறங்காமல் தொண்டாற்றி மறைந்தார்.  இங்கர்சால் வாழ்க்கை தேர்தல் களத்தில் தொடங்கி விரிகிறது.
 

Thursday, July 14, 2011

நூல்வெளியீடு

 தீண்டாமைக் கொடுமைகளும் தீமுண்ட நாட்களும்
-தோழர்.யோகரட்ணம்-

கடந்த 03-07-2011 ஞாயிறு மாலை 3மணியளவில் தோழர் யோகரட்ணம் அவர்களால் எழுதப்பட்ட ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்டநாட்களும்‘ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வானது  பாரிசின் மையப்பகுதியான லாச்சப்பல் எனும் இடத்தில் நடைபெற்றது.  பிரான்சில் இயங்கிவரும் ‘இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணியின் அமைப்பாளர்களாலும், அவ்வமைப்பின் ஆதரவாளர்களின் பாரிய ஒத்துழைப்பின் மூலமாகவே நூல்வெளியீட்டு நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.
இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பலர் வருகைதந்திருந்தனர். பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் 25 வருடத்திற்கும் மேலான புகழிடவாழ்வின் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை அரசாங்கத்தின் மந்திரி ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்த நிகழ்வாகவும் இந்நிகழ்வு அமைந்தது. பல சிங்கள சகோதர, சகோதரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதானது வரும் காலங்களில் சிங்கள, தமிழ் சமூகங்களுக்கிடையேயான உறுவுகளின் நெருக்கத்தை பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் இதைக்கருதக்கூடியதாக இருக்கின்றது. அதற்கான  ஓர் தொடக்கப்புள்ளியை பாரிஸ் மையத்தில் பதியவைத்த சம்பவமானது  வராலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் நிகழ்வாகவே இலங்கைத் தலித் சமூகமேம்பாட்டு முன்னணியினராகிய நாம் கருதுகின்றோம்.

Thursday, July 07, 2011

பேரறிஞர் கா.சிவத்தம்பி மறைவு -பாலசிங்கம் .சுகுமார்



இருபதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டுபெயர்களை அறிஞர்கள் இணைத்துக்கூறுவர்.க.கைலாசபதி ஒருவர்.மற்றவர் கா.சிவத்தம்பி.தமிழ்ப் பேராசிரியர்களாக ஈழத்தில் பணிபுரிந்த இவர்கள்அமைதியான, அதே நேரத்தில் மிகப்பெரிய ஆய்வுகளை நிகழ்த்தி மேற்குலகத்தில் பரவியிருந்த தவறான சில புரிதல்களை நீக்கித் தமிழின் சிறப்பை முன் வைத்தவர்கள்.

மாக்சுமுல்லர் உள்ளிட்ட பலர் சமற்கிருதமொழி இந்தியா முழுவதும் பரவியிருந்தமொழி எனவும் இலக்கண,இலக்கிய வளங்களைப் பிறமொழிக்கு வழங்கியமொழி எனவும் கருத்துகளைப் பரப்பி மேற்குலகம் முழுமைக்கும் சமற்கிருத முதன்மையைப் பதிவு செய்திருந்த காலத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள்கிரேக்க,உரோமை இலக்கியங்களுக்கு நிகரான பழைமையை உடையது,சிறப்பினை உடையது எனத் தக்க சான்றுகளுடன் நிறுவிக்காட்டிச் சங்க நூல்கள் மேற்குலகில்கவனம்பெற உழைத்த க.கைலாசபதி, கா.சிவத்தம்பி எனும் இருவரும் என்றும் தமிழர்களால் நன்றியுடன் போற்றத்தக்கவர்களே.

Wednesday, July 06, 2011

பேராசிரியர் கா. சிவத்தம்பி புலமைத்துவத் திமிர் இல்லாத ஆசானின் இழப்பு -என் . சரவணன்-


இலங்கையிலிருந்து sms மூலம் வந்த அவரது இழப்பு குறித்த செய்தி ஒரு கனம் அதிர்ச்சியையும் வலியையும் ஏற்படுத்திவிட்டது. பேராசிரியரின் இழப்பு தமிழ் சமூகத்துக்கும் புலமைசார் சமூகத்துக்கும் ஒரு பேரிழப்பு.

சரிநிகரில் நான் இணைந்த போது எனக்கு வயது 18. குறிப்பிட்ட ஒரு கட்டுரைக்கென அவரிடம் பேட்டி எடுப்பதற்காக தொலைபேசியில் “சிவதம்பியுடன் கதைக்க முடியுமா” என்று கேட்டேன். அப்போது இந்த அடைமொழியுடன் அழைப்பதை, அண்ணா, அக்கா என்று எவரையும் அழைப்பதை பொதுவாக தவிர்த்து தோழர் என்றோ பெயர் கூறியோ அழைக்க தொடங்கியிருந்தேன். அவரை அப்படி பெயர் கூறி அழைத்ததற்காக பின்னர் மிகவும் வெட்கப்படிருக்கின்றேன். குறுகியிருக்கிறேன்.

அதன் பின்னர் ஊடக வேலைகளுக்காக அவருடன் அவ்வப்போது தொடர்புகளை தொடர்ந்தோம். அவரது நூல்களை ஒரு தடவைக்கு மேல் படித்திருக்கிறேன். இலக்கிய கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள் என அவர் மீதிருந்த மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்திருந்தது. சில கூட்டங்களில் ஒன்றாக உரையாற்றும் சந்தர்ப்பங்களும் கிடைத்தன. கொழும்பு பல்கலைகழகத்தில் ஊடகத்துறை கற்ற போது அவரது விரிவுரை நாட்களை தவற விடுவதில்லை. எப்போதுமே அவரிடமிருந்து புதிய கோணம், புதிய வெளிச்சம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

இயல் விருது வாங்க கனடா வந்திருந்த எஸ்.பொ விடம் ஒரு இடைமறிப்பு.

-கற்சுறா-

கற்சுறா:  2011 ஜனவரிமாதம்  நடந்த கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டினை எதிர்த்து முதற் கொள்ளி வைத்தவர் நீங்கள். கலை இலக்கிய ரீதியாக இலங்கைத் தமிழினத்தை அடிமைப் படுத்தும் ராஜபக்சேவின் திட்டம் தான் உலக எழுத்தாளர் மாநாடு என்றும் சிங்கள மொழி மேலாண்மையை தமிழர்களை ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்ளச் செய்வதுதான் மாநாட்டின் ஒட்டுமொத்த நோக்கம் என்றும் சொல்லி அறிக்கை விட்டு மாநாட்டைப் புறக்கணித்தவர் நீங்கள். தற்போது மாநாடு முடிந்து இவ்வளவுகாலத்தின் பின் மாநாடு நடத்திவிட்டு தற்போது ஐந்து லட்சம் நட்டம் என்கிறார்கள். இவ்வளவு நட்டப்பட்டு ஏன் மாநாடு நடாத்துவான் என்று கிண்டலடிக்கிறீர்கள்.  மாநாடு நடத்தியவர்கள் அரசிடம் பணம் பெற்றார்கள் பதவி பெற்றார்கள் என்றும் அரசுதான் பின் நின்று நடாத்துகிறது என்றும் ஆரம்பத்தில் சொன்ன நீங்கள் தற்போது அதை மறந்து அவர்கள் பட்ட நட்டம் குறித்து பேசுகிறீர்கள். அண்மையில் அஸ்ரப் சிகாப்தீன் அவர்கள் மாநாட்டின் செயற்பாடுகள் குறித்து கொடுத்த பேட்டி பற்றி மிக மோசமாகக் கிண்டலடிக்கிறீர்கள். முஸ்லீம்களும் தமிழ்தானே பேசுகிறார்கள் பின் என்ன முஸ்லீம் மாநாடு என்று சொல்கிறார்கள் என குசும்பு பேசுகிறீர்கள்? தற்காலத்தில் உங்களைப் பிடித்து ஆட்டும் தமிழ்த் தேசிய வெறியும் புலித்தேசிய விருப்பும் தானே மாநாட்டை கண்மூடித்தனமாக எதிர்க்கவைத்தது?
எஸ்.பொ:  இதற்கு மிக இலகுவாகப் பதில் சொல்ல முடியும். ஆனால் அது நீண்ட பதிலாக அமையும். முருகபூபதி சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை செய்வதற்கு ஆரம்பித்த பொழுது அதற்கு ஆதரவாக முன்னோடியாக முன்னுக்கு நின்றவர்கள் இரண்டுபேர். ஒன்று லண்டனில் இருந்து ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் மற்றது அவுஸ்ரேலியாவிலிருந்து டாக்டர் நோயல் நடேசன். இந்த இருவரும் முள்ளிவாய்க்கால் போரின் பொழுது அரச சார்பாக கொழும்பில் செயற்பட்டவர்கள் என்பதற்கு முழு ஆதாரங்களும் என்னிடம் உண்டு. அதற்கு மேல் பிற் கட்டத்திலே ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ராஜபக்சே அரசாங்கத்தினுடைய நம்பிக்கைக்குரிய உளவாளி என்பதை “த கார்டியன்” பத்திரிகை நிரூபித்திருக்கிறது. முருகபூபதி இலங்கையில் வாழ்ந்த காலத்திலேயே தமிழ்த் தேசியத்தை நிராகரித்த ஒரு அரசியல் நிலைப்பாட்டுடன் வாழ்ந்தவர். அத்துடன் அவர் எக்காரணம் கொண்டும் தமிழீழப் பகுதிகளின் பிரதிநிதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள, பிறப்பாலும் உரிமையற்றவராவார். அடுத்து நான் இந்த மநாட்டினை எதிர்த்ததற்கு ஒரேயொரு காரணம் இந்த இரத்த வெடில் இன்னமும் மாறவில்லை. இந்த இரத்த வெடில் மாறாத நிலையில் இந்த மாநாட்டை அவசர அவசரமாகக் கூட்ட வேண்டாம் என்றுதான் என்னுடைய வேண்டுகோள் இருந்தது. நாம் ஊகித்தது நிச்சயமாக இராஜபக்ச அதற்கு உதவி செய்வார் என்று. ஏனென்றால் அவர்களுக்குச் சாதகமாக இந்த மாநாடு இருந்தது. மாநாட்டுக்குப் போய் வந்தவர்களிடமிருந்து அறிந்து கொண்டேன் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடைய ஆசீர்வாதக் கைகள் பின்னால் இருந்துகொண்டே இருந்ததை. ராஜபக்ஸவினுடைய பணபலத்துடன் நடைபெறுகின்றது என்ற குற்றச்சாட்டிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்காகச் சிலசமயங்களில் அந்த உதவியைப் புறக்கணித்துவிட்டு தங்களுடைய நேர்மையை நிலைநாட்டியிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு.
அடுத்து இந்த முஸ்லிம்களது விடையம். நான் நம்புறன் இலங்கையில் முஸ்லீம்களுடைய எழுத்து வல்லபங்களை முன்னெடுப்பதிலே என்னைப் போன்ற வேறு எந்தத் தமிழனும் உயிர்ப்புடன் பங்களிப்புச் செய்ததில்லை. இதற்கு பாணந்துறை முகைன் சமீமைக் கேட்கலாம் அல்லது ஓட்டமாவடி எஸ். எல். எம். ஹனீபாவைக் கேட்கலாம். குச்சவெளி தொடக்கம் பாணும வரையிலே பரந்து வாழ்ந்துகொண்டிருக்கும் முஸ்லீம்கள் மத்தியில் வாழுகின்ற இலக்கியச் சுவைஞர்களைக் கேட்கலாம் எல்லோரும் இதனைச் சொல்வார்கள். “இஸ்லாமும் தமிழும்” என்று- நான் நினைக்கிறன் 1970களிலே எழுதியவன் நான். அதுதான் முதல் முதலாக இலங்கையிலேயே- ஈழநாட்டிலே முஸ்லீம்களுடைய தமிழ் நேசிப்பும் பங்களிப்பும் காத்திரமானதென்று. இந்த முறை கனடாவுக்கு வந்தபொழுது கூட அதில் இரண்டுபிரதிகள் கொண்டு வந்து விற்கப்பட்டுள்ளது. எனவே நான் முஸ்லீம் விரோதியாக இலட்சியத்தில் என்னை அடையாளப்படுத்திக் கொண்டவன் கிடையாது. நான் பெருமைப்பட்டு என்னால் வளர்க்கப்பட்ட இலக்கியகாரர்கள் முஸ்லீம்கள் மத்தியிலே இருக்கிறார்கள். ஆனால் இந்த ஒன்று கூடலுக்குக் குரல் கொடுத்து அந்தப் பணியிலே முன்னணியில் நின்ற எந்த முஸ்லீம் எழுத்தாளர்களாவது ராஜபக்சேவினுடைய புதிய தந்திரங்களை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.
என்னவென்றால் இலங்கையில் இரண்டு மொழி. சிங்களம் அல்லது தமிழ். ஒரு முஸ்லீம் சிங்களத்திலே எழுதினால் அவன் சிங்கள எழுத்தாளன். ஒரு முஸ்லீம் தமிழிலே எழுதினால் அவன் தமிழ் எழுத்தாளன். ஆனால் ராஜபக்சே இதே முருகபூபதி எல்லோரையும் வைத்துக் கொண்டு சிங்கள தமிழ் முஸ்லீம் என்ற மூன்று பிரிவை உண்டாக்கி வைத்துக் கொண்டு மாநாட்டை நடாத்தியிருக்கிறார்கள். இந்த மூன்று பிரிவை தலை நிமிர்ந்து ஏற்று ஆமாம் சாமி போட்ட இந்த முஸ்லீம்கள் மேற்கொண்டும் தமிழர்களுடைய இலக்கிய நலன்களையும் இலக்கிய வீறுகளையும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய தார்மீக உரிமையை இழந்துவிட்டார்கள்.
மற்றது இந்த ஒன்று கூடலை இனிய உறவுகளின் ஒன்று கூடல் என்று ஒரு சொல்லாடலை முருகபூபதி அவர்கள் திரும்பத் திரும்பக் கையாண்டார். இனிநான் சொல்லப் போவதை நீங்கள் வெட்டலாம். வெட்டாமல் விடலாம். ஆனால் உண்மைகளை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். முருகபூபதி என்னுடன் குழாயடிச்சண்டையில் ஈடுபட்டிருந்தபொழுது நான் ஏதோ யாருமேயில்லாது – சிட்னியிலே எனக்குத் தலமை தாங்க யாரும் இல்லாது செல்வாக்கிழந்திருந்த எஸ்.பொவினுடைய நூலை தான் வந்து அபயகரம் நீட்டி வெளியிட்டு வைத்ததாக எழுதியிருக்கிறார். நீ எவ்வளவு ஒரு அயோக்கியன். ஏனென்றால் அந்தக் கட்டத்திலேதான் நீ உன்னுடைய குடும்பத்தில் நடைபெற்ற சிக்கல்கள் மூலம் முடங்கி மூலையிலே இருந்தபொழுது என்னுடை மகன் என்னிடம் வந்து அப்பா முருகபூபதி அண்ணைக்கு நடந்தது very unfortunate. அவர் முடங்கிப்போய் மூலையிலே கிடக்கிறார்.அவரை எப்படியாவது வெளிச்சத்திற்குக் கொண்டுவரவேண்டும். அந்த வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது உங்கள் நூல் வெளியீட்டுடன் இருக்கட்டும். நீங்கள் ஏன் அவரைச் செய்யச் சொல்லிக் கேட்கக்கூடாது என்று சொன்னான். அதற்காக சிட்னியிலே என்னுடைய புத்தக வெளியீட்டு விழாவுக்கு ஏதாவது ஒரு தலைவர் கிடைக்கவில்லை என்று சொல்லி உன்னை இரவல் விடுத்தேன் என்று நீ எழுதலாமா? இப்படிமகா அயோக்கித்தனமான பொய்யையும் பித்தலாட்டத்தையும் நேர்மையான எந்தவொரு எழுத்தாளனும் செய்யமாட்டான். இரண்டாவதாக தமிழை நேசிக்கிறேன் தமிழுடைய விழுமியங்களைப் பாதுகாத்துக் கொள்கிறேன் என்று சொல்லும் நீ இன்று அதிலே கூடத் தோல்வியடைந்து நீ உன்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு இப்பவந்து, புலிகள் இல்லாத ஒரு கட்டத்திலே சர்வதேச தலமைத்துவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரேயொரு ஆசைக்காகத்தான் இந்த மாநாட்டிலே நீ முன்னின்று உழைத்ததாக நான் நினைக்கின்றேன்.
இன்னொன்று இந்த மகாநாடு நடந்ததிற்குப் பிற்பாடு அதில் பங்கு பற்றிவிட்டு இந்தியாவுக்கு வந்தவர்களில் ஓங்கி அந்த மாநாடு வெற்றியளித்துவிட்டது என்று சொன்னவர் என்னுடைய நண்பர் தோப்பில் முகம்மது மீரான் அவர்கள். இன்றுகூட இந்தியாவிலே பேசப்படுகிறது அங்கு அற்புதமான முஸ்லீம்களுடைய எழுத்தாளர் மாநாடு அங்கு நடந்தது என்று. அதற்கு மேல் அங்கு இந்திய சமூக எழுத்தாளர்கள் சார்பாக வந்தவர்களில் கொஞ்சம் பிரபலமாக இருந்தது சின்னப்பாபாரதி. அவர் வந்து விட்ட அறிக்கையைப் பாருங்கள். எந்த விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்று சொன்னார்.
அடுத்ததாக என்னவென்றால் நான் புலி ஆதரவாளன் என்றவகையில் நிச்சயமாக நான் அதனை எதிர்க்கவில்லை. நான் எதிர்த்தது இலக்கியவாதி என்ற அதே கோதாவிலேதான். ஏனென்றால் இலக்கியவாதிகளுடைய அக்கறைகள் அரசியல் சார்ந்த அக்கறைகளாக மாறிவிடக்கூடாது. அரசியல் பேசுவது வேறு அரசியல் சார்புகொண்டிருப்பது வேறு. ஆனால் இலக்கியம் செய்யும் எழுத்தையும் அரசியல் ஆக்கிக் கொள்ளக்கூடாது. ஆனால் முருகபூபதி போன்றவர்கள் அதை அரசியலாக்கியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனை எதிர்த்தேன். முதற்தடவை கூடவேண்டாம் என்று சொன்ன பிறகு எந்தக் கட்டத்திலும் அதனை எதிர்த்து எந்தவித அறிக்கைகளும் நான் விடவில்லை. ஒதுங்கியிருந்தேன். மற்றவர்களுக்குத் தில் இல்லை. உண்மையாக கல் எறியமுடியாதவர்களாக திராணியற்றவர்களாக இருக்கிறார்கள் என்று முதல் கல் எறிந்தவன் நான். அதன் பிறகு இதை நடாத்து – நடத்தவேண்டாம் என்று பிரசாரம் செய்ததே கிடையாது. அதற்குப் பிறகு அந்தக் கூட்டத்திலே ஒவ்வொரு பேச்சாளனாக எழுந்து என்னை ஏசியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றை விளங்கவேண்டும் நான் ஏச்சிலே பிறந்து ஏச்சிலே வளர்ந்து ஏச்சிலேயே வாழ்ந்து கொண்ருப்பவன். உங்களுடைய ஏச்சு என்னை ஒன்றும் செய்யமுடியாது. இங்கே மொன்றியலில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறீஸ்கந்தராசா என்னுடைய நல்ல நண்பன். இந்த முறை என்னை வந்து சந்திக்கவில்லை என்பது எனக்கு மகாதுக்கம். இல்லை எனில் இந்த சனிக்கிழமை மொன்றியலுக்குச் சென்றிருப்பேன். அவர் வந்து சொன்னார் ‘evrry speaker literally cruciffied you’  என்று. எவ்வளவு மகிழ்ச்சி. என்னத்துக்கு என்னைச் சிலுவையில் அறைய வேண்டும்? ஏன் நான் கடந்த 65ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டிருப்பது குற்றமா? இந்த 65 ஆண்டுகளில் இன்றும் ஈழத் தமிழர்களுடைய இலக்கியம் Archive இல்அழிக்கப்பட்டவிடும், அதைப் பாதுகாத்து நாளைய சந்ததிக்குக் கொடுக்கவேண்டும் என்று சொல்லி கடந்த நான்கு வருடங்களாக ஆறாயிரம் பக்கங்களை எடிற் செய்து கொண்டிருப்பது ஈழத் தமிழர்களுக்கு நான் செய்யும் துரோகமா?
அல்லது, இலத்தீன் அமெரிக்க இலக்கியம் தான் மூன்றவது உலக இலக்கியம் என்று இன்றும் நீங்கள் மயங்கிக்கொண்டிருக்கிறீர்கள். ஸ்பானிஸ் மொழியில் எழுதப்படும் இலக்கியம்தான் மூன்றாம் உலக இலக்கியம் என்று சொல்கிறீர்கள். ஆனால் ஆபிரிக்கக் கண்டத்தையும் தமிழ்நாட்டையும் இந்து சமுத்திரம் பிணைத்து வைத்திருக்கிறது. இந்திய நாட்டினுடைய தாக்கங்களும் கலாசாரங்களும் அங்கு இருக்கிறது. என்றைக்காவது இந்த ஆபிரிக்க நாட்டினுடைய இலக்கியங்களை தமிழ்படுத்த யோசித்திருக்கிறிர்களா? சிலசமயம் என்.கே. மகாலிங்கம் அவர்கள் இங்கிருந்து Things Fall Apart ஐ “சிதைவுகள்” என்று மொழிபெயர்த்திருக்கிறார்.Things Fall Apart என்றால் சிதைவுகள் அல்ல.
இவ்வளவும் நான் செய்ததற்கு நீங்கள் என்னைச் சிலுவையில் அறையத்தான் வேண்டும். ஆனால் தம்பிமாரே உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், சிலுவையில் அறைந்தால்தான் மீள உயிர்ததெழும் அற்புதம் நிகழும். இன்று அந்த அற்புதத்தைக் கனடாவில் நீங்களே பார்த்துக் கொண்டு அதன் சாட்சியமாக இருக்கிறீர்கள். எனக்கு மகிழ்சியாக இருக்கிறது.
எஸ்.பொ: நல்ல கேள்வி. அற்புதமான கேள்வி. இயல் விருதில் எனக்கு இரண்டு நிர்ப்பந்தங்கள் இருந்தது. ஒன்று அரசியல்ரீதியான நிர்ப்பந்தம். அந்த நிர்ப்பந்தம் என்னவென்றால் யூத இனம் 2000 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகளாக நாட்டுக்குநாடு அலைந்து, எத்தனையோ மில்லியன் மக்கள் இறந்து மொழியே இறந்த மொழியாகிப் போய் 2000வருடங்களுக்கப் பிறகு அமெரிக்காவில் வாழ்ந்த யூதர்களுடைய பணம், சாதுரியம் என்பனதான் ஒரு யூதநாடு இஸ்ரேல் தோன்றுவதற்கு சகாயித்தது. நான் வீராப்பாக இந்த இயல்விருதை வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். சொல்லியிருக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். நான் வேண்டாம் என்று சொல்லாததற்குக் காரணம் இந்த இயல் விருதை ஒரு சாட்டாக வைத்துக் கொண்டு இன்று கனடாவில் வாழும் தமிழ் ஈழர்களுடைய உணர்வுகளையும் போக்குகளையும் நேரடியாக அறிந்து கொள்ள ஆசைப்பட்டேன். இரண்டாவது எனக்கு வேறு எந்த நாட்டிலும் உள்ளதிலும் பார்க்க கனடிய நாட்டிலே உறவுகள் அதிகம். இந்த உறவுகளின் பண உதவியுடன் 6000 பக்கங்களில் நீடிக்கக் கூடிய தமிழ் ஈழர்களுடைய இலக்கியங்களை பொக்கிசங்களை பிரசுரிக்க இருக்கிறேன்.
நான் கலகக்காரனாகவே வாழ்ந்து கொண்டிருப்பதனால் விருது வேண்டாம் என்று புறக்கணித்ததாக அர்த்தப்படுத்தி- இதற்காகத்தன் இவருக்கு சாகித்தியமண்டலப்பரிசு கொடுக்கவில்லை. இவர் கலகக்காரன் எந்தப் பரிசைக் கொடுத்தாலும் நிராகரித்து விடுவார் என்ற ஒரு அவச்சொல் வரக்கூடாது என்பதும் ஒரு காரணம்.
அடுத்து இதுவரை இந்த இயல்விருது கொடுக்கப்பட்டவர்களைப் பார்க்கிறேன். சுந்தரராமசாமி என்ன சாதித்தார்? வெங்கட் சாமிநாதன் என்ன சாதித்தார்? வெங்கட் சாமிநாதனது பங்களிப்பு என்ன? அவர் விமர்சனம் மட்டும் செய்தார். ஆனால் அது அல்லாத ஒன்றே ஒன்றுமட்டும், அந்தக்காலத்திலே அருமையான வலிமையான விமர்சன போசகத்தை கைலாசபதிக்கு எதிராக ‘மார்க்ஸின் கல்லறையிலிருந்து…’ என்று எழுதினார்.அதன்பிறகு இல்லை. சரி எங்களுடைய தாசிசியஸ் என்ன சாதித்தார்? இல்லாவிட்டால் இந்தப் பத்மநாபஐயருடைய சாதனைதான் என்ன? அவ்வளவும் எனக்குத் தெரியும். ஒரேயொருவர் இதற்கு முற்றிலும் தகுதியானவர் என்றால் அது கோவை ஞானி மட்டுந்தான். இந்தமாதிரியான கேவலங்களில் இருந்து கனடாவாழும் இலக்கிய சம்பந்தமான உயிர்ப்புக்கள் இன்னும் கொஞ்சம் சேட்டமாக வளரட்டும். இந்தக் கலகக்காரனுக்கு பரிசு கொடுத்து ஏற்று இங்கு வந்து கனடாவில் வாழக்கூடிய தமிழ் இலக்கிய முனைப்புகள் அனைத்தையும் கண்டு அளவளாவிச் செய்த பிறகு வேறும் என்னைப்போன்ற கலகக்காரர்களுக்கும் தகுதியுள்ளவர்களுக்கும் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை இந்த நபுஞ்சகர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதனைச்செய்துவிட்டேன். நீங்கள் ஆதங்கப்பட்டது நியாயம். பொன்னுத்துரையும் எஸ்.பொவும் விலை போட்டானோ என்று நீங்கள் ஆதங்கப்பட்டது நியாயம்.there are own Agenda .i have my agenda.   உங்களுக்குத் தெரியாது இயல் விருதில் பேச நான் தயார் செய்து கொண்டுவந்தது ‘கனடாவில் கதைத்தது’ என்று சொல்லி ஒரு பேச்சு. அதில் இரண்டு வரிகூட நான் அங்கு பேசவில்லை. எதையாவது இவன் உளறிவிடுவானோ என்று அவர்கள் எல்லோரும் பயந்து போயிருந்தார்கள்.  என்ர பயறு எல்லா இடமும் அவியும் தம்பி.
அடுத்தது உங்கள் ஒருதருக்கும் புரியாது… என்னுடைய புலிசார்பு நிலைப்பாடுஎன்பது , அவர்களது இயக்கத்திலே அவர்களுடைய செயற்பாட்டிலே நான் கொண்டிருந்த பற்றுதல் அல்ல. நான் உணர்வு பூர்வமாக எழுதுபவன். அநேகமாக கோட்பாடுகளை வைத்துக் கொண்டு எழுதியவனே அல்ல. கூடுதலாக உள்ளுணர்வுகளை வைத்துக் கொண்டு எழுதுபவன். அந்த உள்ளுணர்வு மிக மென்மையான மனித உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது. என்னுடைய ஒரேயொரு வாரிசு மித்ராதான் அவன் ஒரு கவிஞனாகவே இருந்து என்னுடன் வாழ்ந்தவன். அவனை நான் இழந்த தவிப்பு உங்கள் ஒருவருக்கும் தெரியாது. என்னுடைய அந்த ஆதரவு நிலைப்பாடு என்னுடைய மகன் மீது கொண்டுள்ள பாசம் மட்டுந்தான். இது உண்மை.   நான் ஒருபோதும் பொய் சொல்பவனல்ல. பொய்யைத் தலைக்கள் கொண்டு திரிந்தால் என்னால் எழுதமடியாது.

Tuesday, July 05, 2011

யாழ்ப்பாணத்து சாதியம்

 யாழ்ப்பாணத்து சாதியம்: காலனித்துவ சமரசம் 

-மு.நித்தியானந்தன்-

"மப்பின்றிக் கால மழை காணா மண்ணிலே
சப்பாதி முள்ளும் சரியாய் விளையாது
ஏர் ஏறாது காளை இழுக்காது
எனினுமந்தப்
பாறைபிளந்து பயன் விளைப்பான் என்னூரான்"

என்று மகாகவி பாறை பிளந்து பயன் விளைவிக்கும் யாழ்ப்பாணத்து விவசாயியை வியந்து கவிதை வடித்தது உண்மைதான். ஆனால் கடும் பாறையை விட யாழ்மண்ணில் இறுகி வேரோடிப்போன சாதிய உணர்வினை பல நூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியாக ஆட்சி நடாத்திய ஐரோப்பிய அரசுகளாலும்கூட அசைக்கமுடியவில்லை. மாறாக யாழ்ப்பாண சமூகத்தில் மேலாண்மை செலுத்திய சாதியினர் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியைப் பயன்படுத்தி மேலும் தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதை சரித்திரம் சொல்கிறது.
பிரித்தானியப் பேரரசின் இலங்கையின் முதல் ஆளுநராகப் பதவியேற்ற பிறெடறிக் நோர்த், யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதிய அமைப்பினை தங்களின் நிர்வாகத்திற்கு வசதியானதெனக் கருதி சாதியமைப்பினை அனுசரித்துச் செல்லும் போக்கினைக் காண்கிறோம்.
யாழ்ப்பாணத்தின் கிராமிய மட்ட சமூகத் தலைமைத்துவம் சாதி வெள்ளாளர்களின் கைகளிலேயே இருந்தது. யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சாதியமைப்பினை ஆதாரமாகக் கொண்டுதான் இப்பிரதேசத்தின் சமூகப் பொருளாதர நடவடிக்கைகளும் சமூக உற்பத்தி உறவுகளும் அமைந்தன. சாதி, சமூகஅமைப்பின் மேற்கட்டுமானமாக அல்ல, அதுவே அடித்தளமாகவும் செயற்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்தின் பொருளாதாரச் சமூகத்தளம் சாதியினால் வடிவமைக்கப்பட்டு, வெள்ளாள மேலாண்மையால் நிர்வகிக்கப்பட்டு வந்திருக்கிறது. உயர் குடிப்பிறப்பும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் இழிவுபடுத்தப்படுதலும் யாழ்மண்ணில் தோய்ந்துபோனவை. யாழ்ப்பாணத்தின் அரும்பெரும் சுதந்திரவீரனாக போற்றப்படும் சங்கிலி தனக்கேற்பட்ட ‚வைப்பாட்டி மகன்’ என்ற இழிவினை நீக்க, தன் மூத்த சகோதரர்களை அழித்துத்தான் அரசகட்டிலேறுகிறான். இந்தச் சாதியப் பெருமைகளும் இழிவுகளும் பிரித்தானியர் ஆட்சியிலும் தொடர்ந்தன.
1806ஆம் ஆண்டு அரசு நிறைவேற்றிய 10ஆவது இலக்கக் கட்டளைச்சட்டம் உயர்சாதியினருக்கு வழங்கப்படவேண்டிய மரியாதைகள் தொடர்ந்து வழங்கப்படவேண்டும் என்பதைச் சட்டபூர்வமாக அறிக்கையிட்டது. பிரிட்டிஷ் ஆட்சி அதன் ஆரம்பக்கட்டத்திலேயே சாதியமைப்புப் பாரம்பரியத்தை வலியுறுத்திப்பேண முயன்றிருப்பதை இது குறித்து நிற்கிறது.
அஞ்ஞான இருளில் மூழ்கிக்கிடந்த நாடுகளிடையே அறிவியக்க ஒளிபாய்ச்ச வந்ததாகக்கூறும் ஆங்கிலேய அரசு வலியுறுத்திய சமூக ஒழுங்கு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு மற்றும் நீதி போன்ற அம்சங்களும் யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதிய அமைப்பு, பழமையான சமூக ஒழுங்கு முறைமை, சமூகத்தின் மீதான அதிகாரக் கட்டமைப்பு, சமூக ஸ்திரப்பாடு என்பவற்றுக்கும் இடையில் முரண்பாடுகள் எழுந்தபோது இவர்களால் சமூக நீதியின் பேரில் தீர்க்கமான நிலைப்பாட்டினை எடுத்துக் கொள்ளமுடியவில்லை.
யாழ்ப்பாணத்தின் சாதி அமைப்பின் தளத்தில் இருந்து சிக்கல்கள் தோன்றியபோதெல்லாம் சமூக நீதியின் அடிப்படையில் அல்லாமல் சமூகத்தில் நிலவும் ‚அமைதிக்கு’க் குந்தகம் ஏற்படாதவகையில் யாழ்ப்பாணத்தில் வேரூன்றி நின்ற பழைய அதிகாரப் படிமுறையைத் தக்க வைத்துக்கொள்ளுதலே உகந்தது என்ற ரீதியிலேயே ஆங்கிலேயரின் கொள்கை உருவாக்கம் அமைந்தது.
குடியேற்ற நாட்டுச் செயலாளரும் வரலாற்றாசிரியருமான எமர்சன் டெனண்ட்(Emerson Tennen) யாழ்ப்பாணச் சாதியமைப்பின் கொடூரத்தைப் பார்த்துத் திகைத்துப் போனார் என்றாலும் அரசின் கடந்த கால அநுபவங்களைக் கொண்டு பார்க்கின்றபொழுது சாதியமைப்பின் மீது நேரடியாகத் தலையிடுவதைத் தவிர்த்துக் கொள்வதே உசிதமானது என்று கருதினார். ஆங்கிலேய அரசு கைக்கொண்ட தலையிடாக் கொள்கையை யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பைப்பொறுத்தும் உறுதியாகக் கடைப்பிடிப்பது அவர்களுக்கு வசதியாயிற்று. இந்தச் சாதியமைப்பின் கோரத்தாண்டவத்தைக் காலம்தான் மாற்றியமைக்கும் என்றும் பகுத்தறிவு படிப்படியாக வளரும் போது இது தணிந்து போகும் என்றும் டெனண்ட் எழுதினார்.
நிலமானிய அமைப்பில் போல அரசுக்கு நேரடியாகச் சரீர ஊழியம் போன்ற கடமைப்பாடுகள் தாழ்த்தப்பட்ட சாதியினர் செலுத்தத் தேவையில்லை என்று 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய அரசு கொணர்ந்த சட்டம் குறிப்பிடத்தக்கது. எனினும் சாதியமைப்பின் வேரோட்டத்தை அதனால் எதுவும் செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணத்தின் முதல் ஆங்கிலேயக் கலெக்டராகவும் பின் அரசாங்க அதிபராகவும் கிட்டத்தட்ட நாற்பதுஆண்டுகள் (1829-1867) வடமாகாணத்தில் பணிபுரிந்த பெர்சிவல் ஏக்லண்ட் டைக்(Percival Ackand Dyke) வகுத்ததுதான் யாழ்ப்பாணத்தில் சட்டமாய் இருந்தது.
யாழ்ப்பாணத்தின் தனிக்காட்டு ராஜாவாக (‚Raja of the North’) டைக் திகழ்ந்தார். கொழும்பில்லிருந்து பிரிட்டிஷ் நிர்வாகத்தின் தொலைதூர எல்லையில் தனது ராஜாங்கத்தை எந்தத் தடையுமின்றி நடத்தி வந்தார். கடுமையான கண்டிப்புமிக்க பெர்சிவல் டைக், தன் காலத்திலும் யாழ் சாதியமைப்பிலிருந்து எழுந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியிருந்ததது.
1830இல் நளவர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் காதிலே தோடு அணிந்ததை வெள்ளாளர்கள் எதிர்த்தனர். கிராமியத் தலமைப்பீடம் வெள்ளாளர் கைகளிலே இருந்ததால் இம்மாதிரி நகை அணிகளை இனிமேல் நளவர்கள் யாரும் அணியக்கூடாதென்று அறிவுறுத்தப்பட்டதோடு, பாரம்பரியப் பழக்கவழக்கத்தை மீறியதற்குத் தண்டமும் விதித்தார்கள். சமத்துவத்தைப் போதிக்கும் அரசு, சாதிரீதியான இந்தப் பாரபட்சத்தையும் கொடுமையையும் அனுமதிப்பது சாத்தியமாயிருந்தது. அதேசமயத்தில் இத்தகைய சாதியமைப்புச் சார்ந்த நடவடிக்கைகளுக்கு முடிவுகாணவும் முயலவில்லை. காதில் காதணிகளை அணிந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனையை டைக் நீக்கினார். பாரம்பரிய மரபுகளில் தலையிடுவதில் அவதானமாக இருக்கவேண்டும் என்ற ஆட்சிநடத்தும் ஜாக்கிரதை உணர்வில் இது போன்ற பிரச்சினைகளை இனிமேல் ஏற்படுத்தவேண்டாம் என்று தனது கீழ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் கூறியதோடு நின்றுவிட்டார்.
மீண்டும் ஒரு சாதி அடிப்படையிலான பிரச்சினைய டைக் எதிர்கொள்ள நேர்ந்தது. யானை ஏற்றுமதி செய்வதற்கான துறை மேடையை அமைப்பதற்காக பனை மரத்தைக் காவிச் செல்லுமாறு திமிலர் இனத்தவர்களைக் கிராம மணியகாறர் பணித்திருக்கிறார்.
திமிலர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மணியகாறர் கட்டளைக்குப் பணிய மறுத்திருக்கிறார்கள். இத்தகைய பொதுப்பணிகளின்போது இவ்வாறு தாழ்த்தப்பட்ட சமூகத்திடமிருந்து சேவைகளைப் பெறுவது, பாரம்பரியமாக நடந்துவருவதுதானென்று மணியகாரர் தெரிவித்தார். திமிலர் இனத்தவர்களின் முறைப்பாடு தம்முன்வந்தபோது அதனைப்பரிசீலனை செய்த டைக் மணியகாரரின் நடவடிக்கை அரசாங்கத்தின் கட்டளையை மீறும் செயலே என்று கருதி பனைமரம் காவிச்சென்றதற்கான கூலியை அவர்களுக்கு மணியகாரர் தனது சொந்தப்பணத்திலிருந்தே செலுத்தவேண்டும் என்று கட்டளையிட்டார். யாழ்ப்பாணதில் கடமைக்காகத் தான் வெளியிடங்களுக்குப் போகும்போது சாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களின் ஊழியத்தை இலவசமாகப் பெற்றுத் தங்குமிடங்கள் அமைத்தல் மற்றும் ஏனைய பணிகளைச் செய்யும் நடவடிக்கைகளுக்கு டைக் முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால் யாழ்ப்பாண சமூகத்தில் வேரோடிப்போன சாதியமைப்பின் அகங்காரம் அவ்வளவு லேசாக அடங்கிவிடுவதில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் பரம்பரைபரம்பரையாக வழங்கிவந்த மரியாதைகளையும் கௌரவங்களையும் தங்களுக்கு வழங்குகிறார்களில்லை என்று 1831இல் அப்போது கலெக்டராக இருந்த டைக்குக்கு பெட்டிசன் அனுப்பியிருந்தார்கள். சாதியடிப்படையிலான இந்தக் கோரிக்கையை பெர்சிவல் டைக் கோட்பாட்டு அளவில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அந்த நிலைப்பாட்டை அவர் பூரணமாக நிராகரித்து விடவில்லை. நிர்வாகத்தைக் கொண்டு நடத்த சாதிவெள்ளாளர்களின் மணியகாரர் தலைமைத்துவம் அரசுக்கு அவசியமாயிருந்தது. எனவே டைக் இந்த வெள்ளாளத் தலைமையினரின் முறைப்பாட்டை நேரே கவர்னருக்குத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.
ஆட்சி நிர்வாகத்தில் தங்களுத் துணையாயிருக்கும் கிராமிய வெள்ளாளத் தலைமைத்துவம் உரிய மரியாதையோடும் தனித்துவத்தோடும் பேணப்படவேண்டுமென்பதில் அரசு அக்கறைகாட்டியிருக்கின்றது. பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்பக் கட்டத்தில் யாழ்ப்பாணத்துக் கச்சேரிகளின் வராந்தாவில் தரையில்தான் வெள்ளாள மணியகாரர்கள் உட்கார்ந்திருக்கவேண்டியதாயிற்று. இது ஏனைய தாழ்த்தப்பட்ட மக்களின்முன் தங்களுக்கு அவமரியாதையானது என்று சாதிவெள்ளாளர்கள் முன்வைத்த கோரிக்கையினை டைக் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு இருக்கைகள் வழங்க அனுமதித்திருக்கிறார்.
பொதுக் கிணறுகளில் எல்லா சாதியினரும் தண்ணீர் அள்ளுவதால் கிணறு ‚தீட்டுப்பட்டு’ தாங்கள் அத் தண்ணீரைக் குடிக்கமுடியாதென்று வெள்ளாளர்கள் கோரியதையேற்று அவர்களது அந்தஸ்தை நிலைநிறுத்த அவர்களுக்கென்று தனியே கிணறு வெட்டிக்கொடுக்கவும் டைக் ஏற்பாடுசெய்தார். அரசாங்க ஊழியர்களின் சுய கௌரவத்தை உயர்த்துவது அரசின் தொடர்ந்த ஆசை என்று கூறிய டைக் அவர்கள் விசேடமாகவும் தனி மரியாதையுடனும் நடத்தப்படவேண்டுமென்று கோருவது நியாயமென்று கருதினார்.
1849 மார்ச் மாதம் பருத்தித்துறை-புலோலியில் தட்டார் சமூகத்தவர்கள் சாதிவெள்ளாளர்களுக்கு எதிரான முறைப்பாட்டை அரசிடம் கையளித்தபோது கவர்னர் இப்பிரச்சினையை விசாரித்து அதனைத் தீர்த்து வைக்குமாறு யாழ்ப்பாண அரசாங்க அதிபரான டைக்கைக் கேட்டிருந்தபோது அவர் அந்த விசாரணையைச் சாதுரியமாகத் தவிர்த்துக்கொள்ளவே விரும்பினார். சாதியைப் பகிரங்கமாக அங்கீகரிக்கும் நிலையைக் கவனமாகத் தவிர்க்குமாறு விதிக்கப்படிருக்கும் அறிவுறுத்தல்களுக்கமைய இந்த முறைப்பாடும் சாதியடிப்படையில் எழுந்திருந்ததால் இதனை விசாரிக்க முற்படுவது அவசியந்தானா என்ற பாணியில் டைக்கின் பதில் அமைந்தது. தட்டார் சமூகத்தவர்கள் தங்களின் மணியகாரரான வெள்ளாளர் தமக்கு அநீதியாக நடப்பதால் தமது சொந்தச்சாதியிலிருந்தே தலைமைக்காரரைத் தெரிவுசெய்யுமாறு கோரியிருந்தனர். வண்ணார் மற்றும் முடிதிருத்துவோரிடமிருந்தும் வெள்ளாளருக்கெதிரான முறைப்பாடுகள் அரசாங்க அதிபரிடம் வந்தவண்ணம் இருந்தன.
யாழ்ப்பாணத்தில் சாதிச்சண்டைகள் தொடர்ச்சியாக சகல இடங்களிலும் நடந்துகொண்டிருந்தன. இத்தகைய சந்தர்ப்பங்களில் சமூக நீதி காக்கவேண்டிய நிர்வாகம் சாதுர்யமாக ஒதுங்கிக் கொண்டது. சாதிப்பிரச்சனைகள் வன்முறையில் முடிந்தபோது அவை குற்றவியல் பிரச்சனைகளாகி நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு விடப்பட்டன. ஊர்காவற்துறையில் ஒரு பிணத்தைப் புதைப்பது தொடர்பாக கத்தோலிக்கர்களின் மத்தியில் சாதிசார்ந்து பிரச்சினை எழுந்தபோது உள்ளூர்வாசிகளின் சடங்காசாரங்களில் அரசு தலையிட விரும்பவில்லையென்று அரசு பிரச்சனையைக் கைகழுவி விட்டது. நீதிமன்றத்திற்தான் நியாயம் கோரவேண்டுமென்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
Entrance to old Dutch Fort at Jaffna, Ceylon. Feb. 20, 1924. W.A.Sawyer in rickshaw
தச்சுத்தொழிலாளி ஒருவர் தனது மகளுடைய திருமணத்திற்குப் பந்தல் போட்டு வெள்ளைத்துணியால் அலங்காரம் செய்திருந்தார். வெள்ளாளர்கள் அதை எதிர்த்துப் பந்தலைக் கலைத்து திருமணத்தைக் குலைக்க முயன்றனர் . அரசிற்கு இது முறைப்பாடு செய்யப்பட்டபோது அரசின் உதவி அதிகாரி திருமணத்திற்கு நேரேசென்று அங்கு குழப்பம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டியதாயிற்று.
கொள்கை ரீதியாக அரசாங்கம் சாதிப்பாகுபாடை அங்கீகரிக்கவில்லையென்றாலும் அதனை உறுதியாக நடைமுறையில் எதிர்க்கவில்லை. சாதி ஒடுக்குமுறையோடு அது சமரசம் செய்து கொண்டது. பிரஸ்தாப இந்த நிகழ்ச்சியிலும் இதற்குப் பின் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பந்தல்களில் வெள்ளைத் துணியால் அலங்காரஞ் செய்ய விசேட பத்திரங்களில் வெள்ளாளத் தலைமைக்காரர்களிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டியிருந்தது. வெள்ளார்கள் அனுமதி பெறவேண்டாத அர்களுக்கே உரித்தான விசேட உரிமையாக அது அமைந்தது.
1864 இல் நல்லூரில் நொத்தாரிஸாக தட்டார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமித்த போதும் வெள்ளாளர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு உருவானது.
அரசாங்க அதிபர் பெர்சிவல் டைக் தன் ஆட்சிக்காலத்தில் தனது அதிகாரத்திற்குச் சிறிய அச்சுறுத்தலாக எது வந்தாலும் அதனை நிர்த்தாட்சண்ணியமாக எதிர்த்து வந்திருக்கிறார். ‚பிரமச்சாரியாக’ அவர் கூறப்பட்டாலும் யாழ்ப்பாணத்தில் ஒரு பெண்ணுடன் அவருக்குத் ‚தொடுப்பு’ இருந்திருக்கிறது. கோப்பாயில் மரணமான டைக் யாழ்ப்பாணத்தை விரும்பி அங்கு பதவி வகித்துவந்திருக்கிறார் என்பதைக் குறிப்பிடவே வேண்டும்.
கிறிஸ்தவ மிஷனரிகள் கல்விப் போதனைகளில் ஈடுபடுவதையும் யாழ்ப்பாண சமூகத்தின் சாதி அமைப்புகளைத் தகர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் டைக் விரும்பவில்லை. இந்த மிஷனரிகளைத் தனது அதிகாரத்துக்குச் சவாலாக டைக் கருதினார். அரசின் நிர்வாக நடவடிக்கைகளில் அனாவசியத் தலையீடு மேற்கொள்பவர்களாக அவர்களை நினைத்தார். சென். ஜோண்ஸ் கல்லூரியினைக்கூட அவர் ஒரு இடையூறாகவே கருதினார். சென். ஜோண்ஸ் கல்லூரி அதிபரை அவர் பலமுறை சந்திக்க மறுத்திருக்கிறார். வேலை காலி இடங்களுக்கு தங்கள் கல்லூரி மாணவர்களை சென். ஜோண்ஸ் கல்லூரி அதிபர் டைக்குக்குச் சிபாரிசு செய்தபோது அவர் அதனை ஒருபோதுமே கருத்தில் கொண்டதில்லை.
19ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய கிறிஸ்தவ மிஷனரிகளும் அங்கு ஆழ வேரோடியிருந்த சாதி அமைப்பினை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்னையில் வெஸ்லியன் மெதடிஸ்ற் கல்லூரியில் வண்ணார் இனத்தைச் சேர்ந்த பையனை அனுமதித்ததற்காக வெள்ளாளர்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அப் பையனைப் பாடசலையிலிருந்து வெளியேற்றவேண்டியதாயிற்று. மீண்டும் 1847இல் இப்பாடசாலையில் நளவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையன் அனுமதிக்கப்பட்டபோது வெள்ளாளர்கள் எதிர்த்தபோது பள்ளிநிர்வாகம் அதற்கு இணங்கவில்லை. இதனைச் சகிக்கமுடியாத வெள்ளாளப் பெற்றோர் தமது பிள்ளைகளைப் பாடசாலையிலிருந்து நீக்கிக்கொண்டனர்.
இந்தப் பாடசாலை அனுமதிப் பிரச்சினைகள் பற்றி ஆறுமுகநாவலர் பின்வருமாறு எழுதுகிறார்: வண்ணார்பண்ணையிலுள்ள வெஸ்லியன் மிஷன் இங்கிலீசுப்பள்ளிக்கூடத்தில் ஒரு வண்ணாரப்பையன் மூன்று நான்கு வருஷம் படித்தவன். இவ்வருஷத்திலே மற்றப் பிள்ளைகள் ‚இவ்வண்ணானை எங்களோடிருத்திப் படிப்பிக்கின் நாங்கள் இப்பள்ளிக்கூடத்தை விட்டுவிடுவோம்’ என்றார்கள். அதுபற்றி முதலுபாத்தியார் தாங் கிறிஸ்தவராயிருந்தும், வண்ணானைத் தள்ளிவிட்டார். வண்ணான் பறங்கித் தெருவில் இருக்கிற வெஸ்லியன் பாதிரியிடத்தே போய், தனக்கு கிறிஸ்து மதமே சம்மதமென்றும், தனக்கு ஞானஸ்நானம் செய்து தன்னை அங்குள்ள வெஸ்லியன் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டான். பாதிரியார் தாம் அதற்கு உடன்பட்டும், அவனைச் சேர்த்துக்கொள்ளுமபடி தமக்குக் கவர்மெண்ட் ஏசண்டு எழுதிய கடிதம் பெற்றும், அப்பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும் சுதேச குருமாரும் உபாத்தியாயர்களும் உடன்படாமையால், வண்ணானைச் சிலகாலம் அடிக்கடி அலைத்துப் பின் ஓட்டிவிட்டார். அவன் இப்போது நெடுந்தூரத்திலுள்ள கத்தோலிக்கப் பள்ளிக்கூடத்திலே படிக்கிறான்.
‚அப்பள்ளிக்கூடத்திற்றானே 1847ஆம் வருடம் ஒரு நளப்பையன் படித்தலைக்கண்டு ஏறக்குறைய ஐம்பது பிள்ளைகள் ஓட்டமெடுக்கவும் அந் நளப்பையனைத் தள்ளாத பாதிரியாரைப் பித்தரென்று நினைத்தரோ! நளவனிலும் தாழ்ந்தசாதி வண்ணானென்று கொண்டாரோ! சாதி வேற்றுமை பாராட்டுதல் கிறிஸ்து நாதருக்குஞ் சம்மதமென்று விவிலிய நூலில் எங்கேயாயினும் இப்போது கண்டாரோ? வண்ணானுடைய ஆன்மா பரமண்டலத்தில் இடம்பெறாதென்று தேவதூதன் சொப்பனத்தில் வந்து சொல்லக்கேட்டாரோ! தேவவாக்கினும் பெரிது தம்மைச் சேவிக்குஞ் சுதேச குருமார், உபாத்தியாயர்கள் வாக்கென்று தெளிந்தாரோ! வண்ணானைப் பற்றி மற்றப் பிள்ளைகளெல்லாம் ஓடிவிட்டால், அவர்கள் இருக்குஞ் சம்பளத்தினாலும் அவர்கள் பொருட்டுக் கவர்மெண்டார் உதவும் பணத்தினாலும் தமது பை நிரம்பாதேயென்று பயந்து விட்டாரோ! யாழ்ப்பாணத்திலே சாதி வேற்றுமை அறுத்துக் கிறிஸ்து மதத்தை நிலைநாட்ட வல்லவர்கள் பொருள்வாஞ்சைப் பிசாசா வேசிகளாகிய இந்தப் பாதிரிமாரும் சுதேச குருமாரும் தானோ! சபாசு! சபாசு!’
ஆறுமுகநாவலரின் இந்த நீண்ட குறிப்பு யாழ்ப்பாணத்தில் அன்று ஆழ்ந்து வேரூன்றி நின்ற சாதிவெறித் தனத்திற்கு அச்சொட்டான சாட்சியாக அமைகிறது. இவ்வளவு அழுத்தந் திருத்தமான – இறுகிப்போன சாதி அமைப்பின் பின்னணியிலே கிறிஸ்தவ மிஷனரிகள் இயங்க நேர்ந்தன. இருப்பினும் மிஷனரிமாரின் கல்வித் திட்டம் யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதியமைப்பின் கோட்டைகளில் பெரும் துளைகளை ஏற்படுத்தவே செய்தது. சாதியமைப்பினால் வட்டுக்கோட்டை செமினரியில் ஆரம்பகாலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளைப் பற்றி டெனன்ட் தனது ‚Christinanity in Ceylon’ என்ற நூலிலே குறிப்பிடுகிறார்.
மிஷனரிமார் தமது மதப்பரம்பலுக்குத் தடையாகச் சாதியமைப்பு நிலவுவதாகவே அதனை நோக்கினர். இக்காலகட்டத்தில் இலங்கையில் பணிபுரிந்த மிஷன்ரிமாரின் கடிதங்களிலும் அவர்கள் வெளியிட்ட சஞ்சிகைகளிலும் சாதி பற்றிய குறிப்புக்கள் வரும்போதெல்லாம் அது மதமாற்றத்திற்கு எவ்வாறு தடையாக அமைகிறது என்ற நோக்கத்தில் மட்டுமே பார்க்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
சாதியமைப்பிற்கு எதிராக சமயம்பரப்பலில் ஈடுபட்ட கிறிஸ்தவசமயமும் யாழ்ப்பாணத்தின் சாதியக்கொடூரத்தின் முன் சரணாகதியடைய நேர்ந்தமை இந்தச் சோக நாடகத்தின் மற்றுமொரு விரிவான கதை.
1871இல் மிஷனரிமாரின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆறுமுகநாவலர் சைவபரிபாலனசபையை நிறுவினார். அவர் நிறுவிய பாடசலையிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகள் அனுமதிக்கப்படவேயில்லை. சைவ பரிலபாலனசபை ஸ்தாபிக்கப்பட்ட ஆண்டில்தான் 1871இல் மாவிட்டபுரத்தில் சாதிக்கலவரங்கள் வெடித்தன. வெள்ளாளர், வண்ணார், அம்பட்டர், ஆகியோருக்கிடையில் சாதிமோதல்கள் எழுந்தன. அம்பட்டர்களின் உடுப்புக்களைத் தோய்க்கமுடியாது என்று வண்ணார்கள் மறுத்ததன் பின்னணியில் வெள்ளாளர்களே இருந்திருக்கிறர்கள்.
இந்தச் சாதிக் கிளர்ச்சிகள் டைக்கிற்குப் பின் பதவியேற்ற அரசாங்க அதிபர் டுவைநாம்(Twynam) காலத்திலும் தொடரவே செய்தன. இவர்களுக்கெல்லாம் பின்னால் ‚Village in the jungle’ என்ற அற்புதமான ஆங்கில நாவலை எழுதிய சிறந்த எழுத்தாளரான லெனார்ட் வூல்வ் (Leonard Woolf) யாழ்ப்பாணஹ்தில் அரசாங்க அதிபராகப் பணியாற்றினாரெனினும் அவர் யாழ்ப்பாண வெள்ளாள எதிர்ப்பின்பேரில் வெளியேறவே நேர்ந்தது. யாழ்ப்பாணக் கச்சேரியில் லெனார்ட் வூல்வ் (Leonard Woolf) பணியாற்றியபோது பிராமண வகுப்பைச் சேர்ந்த கிளாக்கர் தரையில் எச்சில் துப்பி அசுத்தப் படுத்திவிட்டதைப் பார்த்ததும் அவரையே தரையைச் சுத்தப்படுத்துமாறு பணித்துவிட்டார். தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் அவரே தரையைச் சுத்தப்படுத்தவேண்டிய நிலை அவருக்குப்பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாகக் கூறப்படுகின்றது. வூல்பின் இத்தகைய கண்டிப்பான நடவடிக்கைகளால் அவர் யாழ்ப்பாணத்தில் நிலைக்க முடியவில்லை. அவர் யாழ்ப்பாணத்தவர்களைப் பற்றி நல்லபடியாக ஒன்றும் தனது குறிப்புக்களில் எழுதவில்லை.
யாழ்குடாநாட்டில் வேரூன்றி நின்ற சாதியபிமானம் யாழ்ப்பாணத்தவர்கள் 19ஆம் நூற்றாண்டில் மலாயாவை நோக்கிக் குடிபெயர்ந்தபோது அதுவும் அவர்களோடு சேர்ந்து வெளிநாடுகளிலும் செழித்தது. 1861இல் கோலாலம்பூரில் ஸ்ரீபரஞ்சோதி விநாயகர் ஆலயத்தைக் கட்ட முன்நின்ற ஊரெழுவைச் சேர்ந்த டாக்டர் ஆறுமுகம் விஸ்வலிங்கம் தான் உயர் வெள்ளாளப் பழங்குடியில் வந்தவராகக் கல்வெட்டிலே பொறித்துச் சென்றிருக்கிறார்.
இந்தச் சாதிவெறி இருபதாம் நூற்றாண்டிலும் இன்னும் கோரமாகத் தலைவிரித்தாடியது. 1907இல் பொன். அருணாசலம்கூட சாதியமைப்பு அவசியமானது, நலம் பயப்பது என்று எழுதினார். 1921இல் யாழ்ப்பாணத்தில் ‚தமிழர் நாகரிகம்’ பற்றியுரையாற்றிய மறைமலை அடிகள் தமதுரையில் வெள்ளாளரின் நாகரிகம் குறித்தே பேசினார்.
1930இல் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முதல்முறை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டபோது அவர்களுடன் வெள்ளாள மாணவர்களுக்கும் சமபோசனம் வழங்குவதை எதிர்த்து சேர் பொன். இராமநாதன் கவர்னரிடம் முறையிட்டார்.
1929ஆம் ஆண்டு பாடசாலைகளில் இன, மத, சாதி, தேசிய வேறுபாடு காட்டாமல் எல்லாப் பிள்ளைகளுக்கும் சரியாசனம் கொடுக்கவேண்டுமென அரசு அறிவித்தபோது வெகுண்டெழுந்த வெள்ளாளர்கள் பதினைந்து பாடசாலைகளைத் தீக்கிரையாக்கினார்கள்.
தம் சொந்தச் சகோதரர்களையே அடக்கியும் ஒடுக்கியும் இழிவுபடுத்திய யாழ்ப்பாணச் சமூகத்தின் கொடூரத்தின் கதை அவலம் நிறைந்த, கறை படிந்த கதையாகும்.

கட்டுரையாசிரியர் மு.நித்தியானந்தன், அறியப்பட்ட இலக்கிய விமர்சகர், லண்டனில் வசிக்கின்றார் . 
2002 ஆண்டு கரவைதாசன், கொக்குவில் கோபாலன் இருவராலும் தொகுக்கப்பட்ட "வான்பதி" தொகுப்பிலிருந்து