பாகிஸ்தானிய Social Media ஸ்டாரான கன்தீல் பலூச் அவரது சகோதரனினால் "கெளரவக் கொலை" செய்யப்பட்டுள்ளார். தமது சமூக, கலாச்சார, மத நெறிமுறைகளை "மீறும்" பெண்களை குடும்ப கெளரவத்தை பாதுகாத்தல் என்ற பெயரில் கொலை செய்வது இறுக்கமான கட்டமைப்பு கொண்ட, சனாதன கீழைத்தைய சமூகங்களில் ஒரு வழமையாகவே இருந்து வருகிறது. நாம் வன்மையாக கண்டிக்கத்தக்க, இழித்துரைத்து அழித்தொழிக்கப்பட வேண்டிய மனிதாயமற்ற பயங்கரவாத பண்பாடு இது.
பாகிஸ்தான் போன்ற நாடுகளின் சமூக அமைப்புகள் மிகவும் பழமைவாத தன்மை கொண்டவை. பின்தங்கிய சமூக மதிப்பீடுகளை கொண்டவை. இந்தியாவில் காலனித்துவத்துக்கு எதிரான Anti Thesis போன்று தேசியம் உருப் பெற்றது போன்று (இது வரலாற்றாய்வாளர் பிபின் சந்திராவின் கருத்து) பாகிஸ்தானில் முற்போக்கான நவீனத்துவ பண்பாடு உருப் பெறவில்லை. காந்தி, நேரு, ராஜாராம் மோகன்ராய், அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களும் பாகிஸ்தானில் உருவாகவில்லை. இமாம் அபுல் அஃலா மெளதூதி போன்றவர்களின் செயல்வாதங்கள் பாகிஸ்தானின் மைய நீரோட்டத்தை விட்டு விலகி விளிம்பில் தள்ளப்பட்டே இருந்தன. ஆக பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடாக இருந்தும் இஸ்லாத்தின் அகிலத்துவ மதிப்பீடுகளிலிருந்து உருவான சமூக செயல்திட்டம் பாகிஸ்தான் சமூகத்தில் ஆளப் பதியவில்லை. அஹ்லே ஹதீத் ஸலபிகளும், பிரேலவி சூபிகளும், தேவ்பந்திகளும் தான் பாகிஸ்தான் மைய நீரோட்டத்தை வழிநடாத்தும் தீர்மானகரமான சக்திகள். இவை Dogmatic ஆனவை. Literal Interpretation களை தாண்டி வெளிவர முடியாதவை. எனவே இந்த சிந்தனை போக்குகளினால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒரு போதுமே தடுத்து நிறுத்த முடியாது. காரணம், இவர்களின் புனித பிரதிகளின் மீதான வாக்கியவாத அணுகுமுறை ஒரு போதுமே பெண்களை சமூக களத்தில் ஆண்களுக்கு நிகராக நடை போட ஒவ்வாதவை. பிற்போக்கான, தந்தை வழி சமூக மதிப்பீட்டில் ஆழ வேர்விட்டு நின்றிருக்கும் பாகிஸ்தானிய சமூகத்தில் அல் குர்ஆன் முன் வைக்கும் பால் சமத்துவம் மற்றும் சமூக நீதி இரண்டுமே சரி வர உருப் பெறவில்லை என்பதே உண்மை. ஸெய்யித் குத்ப் கூறுவது போல இவை இஸ்லாத்திற்கு முற்பட்ட அநாகரீக காலகட்டத்தை ஒத்த "ஜாஹிலிய்யத்" சமூகங்களே. இது சட்ட ரீதியான தீர்ப்பல்ல, மாறாக இதுவொரு Value Based அடிப்படையில் உலகியல் விவகாரங்களை அணுகிடும் பார்வையை கொண்ட அணுகுமுறை.
மஹ்மூத் கஸ்னவி, தைமூர் லங்க், அஹ்மத் ஷா அப்தலி போன்ற மன்னர்களின் வன்முறை தன்மையின் அடிப்படை அவர்களின் இறையியல் சார்ந்த நம்பிக்கையான இஸ்லாம் அல்ல. மாறாக அவற்றின் வேர்களை குறித்த மன்னர்களின் ஆப்கானிய, மொங்கோலிய வேர்களில் தான் தேடிட வேண்டும். ஏனெனில் மக்கா வெற்றியின் போது நபிகளாரின் மேன்மையான வரலாற்றுப் பாத்திரம் எவ்வளவு புகழுக்குரியதாக அமைந்திருந்தது என்பது அனைவரும் அறிந்த விடயம். தமது எதிரிகளை கூட மன்னித்து அருள் புரிந்த நபிகளாரின் விசாலமான கருணையின் பின்னணி, அவரின் இஸ்லாமிய நெறிமுறையன்றி வேறென்ன? அல் குர்ஆன் பழிவாங்கலை விட மன்னிப்பை முற்படுத்தவில்லையா? மூன்றாவது கலீபாவான உஸ்மான் இப்னு அப்பான் (ரழி) தன்னை கொலை செய்ய வந்தவர்களிடத்தில் எவ்வளவு மென்மையாக நடந்து கொண்டார்? விளைவாக அந்த நீதி நெறிமிக்க, நேர்வழி பெற்ற மகத்தான ஆளுமை படைத்த ஆட்சியாளர் படுகொலை செய்யப்படவில்லையா? இதற்கெல்லாம் காரணம், இஸ்லாம் சாந்தியின், சமாதானத்தின் மார்க்கம் என்பதே.
பெண்கள் தான் குடும்ப கெளரவத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் "காவிகள்" என்ற கருத்தியல் வலிமை பெற்று இருக்கும் வரைக்கும் இத்தகைய கெளரவக் கொலை ஈனங்களை எம்மால் சமூகத்தின் சட்டகத்தில் இருந்து அகற்ற முடியாது. கன்தீல் பலூச்சின் படுகொலையின் பின்னணி இஸ்லாமிய நெறிமுறை அல்ல. அது பாகிஸ்தானிய பண்படாத மனதின் தர்க்க சஞ்சாரம். பிற்போக்கான, பெண்களை பண்டமாக கருதிக் கொள்பவர்களின் வன்முறை அது. அதற்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நாம் கன்தீல் பலூச் படுகொலையை கண்டிக்கிக்கும் அதே நேரத்தில் இதற்கு இஸ்லாமிய நெறிமுறைகளை காரணம் காட்டுபவர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம். ஏனெனில் பாகிஸ்தான் இன்றளவும் நிலமானிய சமூக அமைப்பை ஒத்த மதிப்பீடுகளை கொண்ட தேசமே. பாகிஸ்தானில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள், ஆனால் "இஸ்லாம்" இல்லை.
கன்தீல் பலூச்சின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்..
நன்றி:லபீஸ்
நன்றி:லபீஸ்
No comments:
Post a Comment