Saturday, February 27, 2016

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 3 - 4 - 5 )

-விஜய பாஸ்கரன்-

இரத்தினம் மீது கொண்ட அபிமானம் காரணமாகவே டானியல் பஞ்சமர் நாவலை மந்துவிலை வைத்து இரத்தினம் என்ற பாத்திரத்தை கொண்டுவந்தார்.அவர் பற்றிய சில தகவல்கள்.
இரத்தினம் மிக உயரமான திடகாத்திரமான மனிதர்.அவருடன் யாரும் சண்டை போட்டு வென்றதில்லை.எப்போதும் எதிரிகளுடன் சமாதானமாகவே பேசுவார்.யாருடனும் கும்பலாக தாக்குவதில்லை.அவருக்கும் பல சகாக்கள் இருந்தனர்.அவரகளை சண்டை போட அனுமதிப்பதில்லை .
இவர் இல்லாவிட்டால் தமிழரசுக்கட்சி சாவகச்சேரியில் கால்பதித்திருக்க முடியாது.காங்கிரஸ் கட்சியின் அடாவடித்தனங்களை தன் நண்பர் அய்யாவின் நட்புக்காக முறியடிக்க உதவியவர்.இவரின் உடல் பலத்துக்கும் துணிவுக்கும் எல்லோரும் அஞ்சி நடந்தனர்.பல எதிரிகள் இவரை பொலிஸ்காரன் போல கண்டு ஓடினர்.
எமது ஊரில் வெள்ளாள சாதியைச் சேர்ந்த விதானை ஒருவர் மகன் கோவியரகளோடு ஏற்பட்ட தகராறில் ஒரு கோவியரை அடித்துக் கொலை செய்து விட்டார்.அங்கே கோவியரை யாரும் பகைத்து வாழ முடியாது.கொலை செய்தவர் தலை மறைவாகிவிட்டார்.அங்கே வெள்ளாளர் ஒருவர் இறந்துவிட அவரின் சடலத்தை சுடலைக்கு எடுத்துச்செல்ல கோவியர்கள் தடுத்தனர்.வெள்ளாளரால் அவர்களை மிஞ்ச முடியவில்லை .அவரகளில் வரதர், என்பவர் இரத்தினத்திடம் கள் அருந்துபவர்.அவர் மூலமாக இரத்தினத்தின் உதவியை வெள்ளாளர் நாடினர்.
இரத்தினம் தனியாக அங்கு சென்று பிணத்தை அவர்கள் காவிவர அவர் முன்னே சுடலைவரை சென்று ஈமக்கிரியைகளை முடிக்க உதவினார்.எவரும் ஒரு எதிர்பைக் கூட காட்ட துணியவில்லை.
இப்படி இன்னும்பல கதைகள் அவரைப் பற்றி ஊரில் உண்டு.அன்றைய பல போராளிகள் மந்துவில் என்றாலேயே இரத்தினத்தை விசாரிப்பார்கள்
இந்தப் போராட்டமானது பொது இடங்களில் சம உரிமைகோரி நடத்தப்பட்டது.தனிப்பட்ட ரீதியில் யாருடனும் பகை தீர்க்க இல்லை.சாதிவெறியர்கள் பகை தீர்பதிலேயே குறியாக நின்றனர்.எமது கிராமங்களைச் சுற்றி பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட சாதியினர் இருந்தனர்.ஆனாலும் பங்குபெற முன்வரவில்லை.தார்மீக ரீதியாக பல பொருளாதார ஒத்துழைப்புகளை மானாவளை பகுதியினர் வழங்கினர்,.கொடிகாம்ம்,மிருசுவில்,வரணி, அல்லாரை, வேம்பிராய் போன்ற இடங்களில் அதிகமாக சிறுபான்மை தமிழர்கள் இருந்தும் ஆதரவளிக்க தயங்கினர்.இதேபோலவே சங்கானையிலும் நடந்தது.அங்கேயும் சங்கானை ஒரு பகுதியினர்,சண்டிலிப்பாய் போன்ற இடங்களின் ஒத்துழைப்பு குறைவாக இருந்தது.நிச்சாம்ம் மட்டும் தனியே களமாடியது.
இப்போராட்ட காலத்தில் இரத்தினத்தை கொலை செய்ய எடுத்த முயற்சிகள் யாவும் தோற்றன.ஒரு தடவை அவர் தென்னைமரத்தில் இருந்தபோது கொல்ல முயற்சித்தனர்.அது ஓரளவ உயரமான மரம்.குதிக்க முடியாது.யாரையும் அழைக்கவும் முடியாத தூரம்.வேறு வழி இல்லை.அவர் கவனிகாத்துபோல் நின்று தென்னை ஓலையின் வழியாக கொலையாளிகள் நடுவே உருவி வீழ்ந்தார்.எல்லோரும் பயந்து அலறி ஓடிவிட்டனர்.
அதன்பின் மிகுந்த எச்சரிக்கையுடன் கைத்துப்பாக்கி சகிதமாக திரிந்தார்.அவரிடம் துணிவு இருந்தபோதும் தன்னை எப்படியும் கொல்வாரகள் என திடகாத்திரமாக நம்பினார்.ஆனால் பயம் அவரை நெருங்கவில்லை.அவரின் வீடு ஊர் எல்லையில் இருந்தபோதும் அங்கேயே உறங்குவார்.சாதிவெறியர் பகுதிக்குள்ளால் தனியாக போய் வருவார்.
இரத்தினம் கொலை முயற்சிகள் யாவும் தோல்வி கண்டதை அடுத்து ஊரையே பழிவாங்க திட்டம் போட்டார்கள்.இவரகளுக்கு முன் எச்சரிக்கையாக எமது ஊரவர்கள் இரவு வேளைகளில் தெருக்கள்,பற்றைகள் எல்லாம் இரவுகளில் வலம் வந்தனர்.இதனால் இலகுவாக திட்டம் தீட்ட முடியவில்லை.இதை அறிந்த அவர்கள் பொலிசார் உதவியை நாடி நமது ஊரவர்களை சோதனைகள் போட வைத்தனர்.எமது ஊரில் எல்லைகளில் தமிழ் பொலிசார் நடமாடி அவர்களைக் பாதுகாக்க உதவினர்.
ஒரு தடவை திட்டம் தீட்டி எல்லையில் நின்றபோது எமது இளைஞர் ஒருவரின் காதலி கோவியர் சமூகத்தை சேர்ந்தவர்.அவர் மூலமாக தகவல் கிடைக்க எமது ஊரவர்கள் அணி அணியாக செல்ல அவரகள் ஓட்டம் பிடித்தனர்.
இரண்டாவது தடவை அவரகள் இருட்டோடு இருட்டாக ஓரிடத்தில் எமது ஊரை தாக்க தயாராக நின்றனர்.இதை அறிந்த கொடிகாம்ம் அய்யாவின் தம்பி தபால் சாமி என்பவர் தகவலை பரிமாற்றங்கள் செய்ய வசதியற்ற காரணத்தால் தன் வீட்டில் உள்ள துப்பாக்கியால் வெடி வைத்து எம்மவரகளை உசாராக்கினார்.எம்மவரகள் ஆயதங்கள் எதுவுமின்றி அவ்விடம் செல்ல அவர்கள் வேலி ஒன்றைக் கொழுத்தி விட்டு தன் பின நின்று துப்பாக்கி பிரயோகம் நடாத்தினர்.எம்மவரகள் படுத்துக் கிடந்தனர் .ஓடவும் முடியாது போராடவும் முடியாத நிலை.
இந்நிலையில் ஏனையவர்கள் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு அவ்விடம் வந்தார்கள்.எதிரிகளின் சரியான திசையை பார்க்க நெருப்பு பகை தடையானது.அவரகளின் குறி இவர்களை நோக்கி சரியாகவே வந்தன.இதைக் கேட்ட ஒரு 18 வயது இளைஞரும் புறப்பட்டு வந்தார்.அவருக்கு ஊர் எல்லையிலுள்ள வீட்டில் வைக்கப்பட்ட துப்பாக்கி தெரியும். அதை எடுத்து வரும்போது ஒரு மரத்தில் இருந்து டோரச் லைற் ஒளி எமது ஊரவர்கள் மீது விழுவதை அவதானித்தார்.அந்த இருட்டிலும் அவர் குறி தவறவில்லை.அங்கிருந்து ஒருவர் அலறி வீழ்ந்தான்.அத்துடன் எதிரிகள் நிலை குலைய வேலையைத் தாண்டி எமது ஊரவர்கள் அவர்கள் பகுதிக்குள் நுழைந்தனர்.பலர் வெடிகாயங்களுடன் தப்பி ஓடினர்.எம்மவரும் எந்த காயமும் இன்றி தப்பி வந்தனர்.
மறுநாள் இறந்த இளைஞன் யாரென்று அடையாளம் கண்டனர்.அவரதான் இரத்தினத்தால் எச்சரித்து அனுப்பப்பட்ட நவரத்தினம்.வெள்ளாள சமூகத்தவர்.நம்மை எச்சரித்து துப்பாக்கி வெடி வைத்தவர் தபால் சாமி.இவர் கோவியர் கொடிகாம்ம் அய்யாவின் தம்பி. பின்னர் சாமியின் வீட்டைக் கொழுத்தி அவரை ஊரை விட்டு காலிபண்ண வைத்தனர்

No comments: