Sunday, October 09, 2016

தீண்டப்படாத முத்தம் - கொடூரத்தை மீண்டும் உரத்து ஒலித்து நிற்கின்றது.

-ந.சுசீந்திரன்-
சுகிர்தராணியின் „தீண்டப்படாத முத்தம்“ என்ற கவிதைத் தொகுப்பில் முதலாவது இடம்பெறும் கவிதை –விடுதலையின் பதாகை. 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி மகாராஷ்டிராவில் நிகழ்ந்த „கயர்லாஞ்சிப் படுகொலைகள்“ நினைவாக இக் கவிதை எழுதப்பட்டிருகின்றது. மிக நன்றாக எழுதப்பட்டிருக்கும் இவ் வரலாற்றுப் பதிவு, கழிந்துவிட்ட பத்து வருடங்களின் பின்னரும் „கயர்லாஞ்சிப் படுகொலையின் கொடூரத்தை மீண்டும் உரத்து ஒலித்து நிற்கின்றது.
அண்ணல் அம்பேத்கார் அவர்களின் ‚சாதி ஒழிப்பு‘ என்ற நூலின் விளக்கங்களும் விமர்சனங்களும் கொண்ட நவீன பதிப்புக்கு ”டாக்டரும் புனிதரும்” என்ற தலைப்பில் அருந்ததி ராய் அவர்களால் மிக நீண்ட முன்னுரை ( அடுத்த வருடம் இது ஒரு தனி நூலாகவும் வெளியிடப்படுகின்றது.) எழுதப்பட்டிருக்கின்றது. இந் நூல் பற்றிய ஓர் அறிமுகக் கூட்டத்தில் இதே தலைப்பில் அருந்ததி ராய் அவர்கள் சிறப்புரை யாற்றும்போது கயர்லாஞ்சிப் படுகொலை பற்றி மிக விபரமாகக் குறிப்பிடுகின்றார். எவ்வாறு கயர்லாஞ்சிப் படுகொலை இன்றைய சந்தை-ஜனநாயக உலகால் கவனங்கொள்ளப்படாமல் விடப்பட்டது என்பதை பாக்கிஸ்தான் நாட்டின் மாணவி மலலாவிற்கு கிடைத்த அங்கீகாரத்துடன் ஒப்பிட்டு, இன்றும் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்திய சாதி அமைப்பின் குரூரத்தையும் கொடூரத்தையும் விளக்கியுள்ளார்.
‚விடுதலையின் பதாகை‘ என்ற தலைப்பிடப்பட்டிருக்கும் இக் கவிதை ஜெர்மன் மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் இக் கவிதையின் மூலத்தில் காணப்படும் சுகிர்தராணியின் படிமங்களையும் சொல்லாட்சியையும் இம் மொழிபெயர்ப்பில் காணமுடியவில்லை. எடுத்துக் காட்டாக:
“… மூங்கில் கூடையில் வெளிச்சம் வாரப்பட்ட
வீட்டின் முற்றத்தில்
நிர்வாணமாய்க் கிடத்தப்பட்டிருக்கிறேன்
கால்களும் கட்டப்பட்டிருக்கின்றன …”

”…Sie legten mich nackt auf den Hof
meines Hauses, gefesselt, auch an den Füßen.
Licht entwich durch die Ritzen der Bambuskörbe…”
மூங்கிற் கூடை நீக்கல்களூடு வெளிச்சம் ஓடியது! என்றே மொழியாகம் செய்யப்பட்டிருகின்றது. கவிதை மொழியாக்கம் செய்வது மிகவும் கடினமானது அன்றியும் முற்றிலும் வேறுபட்ட கலாசாரம், வாழ்க்கைமுறை, சிந்தனாமுறை போன்ற காரணிகளும் மொழியில் பெரியதாக்கம் செலுத்துவன.
„கயர்லாஞ்சிப் படுகொலைகள்“ நினைவாக எழுதப்பட்டிருக்கும் இக் கவிதை ஜெர்மன் மொழியில் வெளியிடப்படும் பொழுது கயர்லாஞ்சி படுகொலை பற்றிய மேலதிகக் குறிப்புக்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் கவிதை வாசிப்பு நிகழ்வு நடைபெற்ற போது இது கவனத்தில் கொள்ளப்படவில்லை. மொழிபெயர்ப்புக்கள் இடம் பெற்றிருக்கும் நூலிலும் இவை இல்லை என்பது கொஞ்சம் வருத்தமாக இருக்கின்றது.
*********************************************************************************
விடுதலையின் பதாகை
-----------------------------------
என் கிராமத்தின் தேகமெங்கும்
வர்க்கத்தின் இருள் கவிந்திருக்க
அச்சமூட்டும் துரோகியின் குறுவாளைப் போல
பிசிரின்றி
எரிந்துகொண்டிருக்கிறது இரவு
அன்று வானம் நீலமாயும்
நட்சத்திரங்கள் சீம்பாலைப் போலவும்
மின்னிக் கொண்டிருந்தன
மூங்கில் கூடையில் வெளிச்சம் வாரப்பட்ட
வீட்டின் முற்றத்தில்
நிர்வாணமாய்க் கிடத்தப்பட்டிருக்கிறேன்
கால்களும் கட்டப்பட்டிருக்கின்றன
தமையனைக் கூடச்சொல்லும் வக்கிரம்
இரவின் உச்சாடனமாய் ஒலிக்க
ஆதிக்கத்தின் கருந்திரவத்தைப் பருகியவர்கள்
என் யோனியில் பள்ளம் பறித்துப்
பருத்த கம்பொன்றை நிறுத்துகிறார்கள்
என் வலியின் ஓலத்தில்
அரங்கேறுகிறது ஒரு சாதிக்கூத்து
ஆடிக் களைத்தவர்களின் குறியிலிருந்து
வழிந்தோடிய வன்மத்தின் கால்வாயில்
வீசப்படுகிறது என் உடல்
செவிட்டுப் போர்வையிலிருந்தும்
குருட்டுத் தூக்கத்திலிருந்தும் விடுபடாத தேசத்தில்
சட்டையுரிக்கும் சர்ப்பத்தின் உக்கிரத்தோடு
மண்ணுக்குள் புதைகிறேன்
யோனியில் ஊன்றிய கம்பின் உச்சியில்
குருதியின் நிறத்தோடு பறக்கும்
எம் விடுதலையின் பதாகை.
- கயர்லாஞ்சி நினைவாக.
Die Fahne der Freiheit
Meines Dorfes Leib war von der finsteren
Macht der Kaste verhüllt,
in einer furchteinflößenden Nacht,
tückisch wie der Dolch eines Verräters.
Blau war der Himmel in jener Nacht.
Wie Biestmilch schimmerten die Sterne.
Sie legten mich nackt auf den Hof
meines Hauses, gefesselt, auch an den Füßen.
Licht entwich durch die Ritzen der Bambuskörbe.
Ihre schändliche Forderung,
ich solle meinen Bruder ficken,
hallte wie eine Beschwörung durch die Nacht.
Besoffen vom Schwarzwasser ihrer Herrschsucht
gruben sie einen Graben in meinen Schoß und rammten einen dicken Stock in meine Scheide.
Zu meinen Schreien führten sie die heillosen Tänze ihrer Kaste auf.
Als sie ermüdet waren vom Tanz ergossen die Männer
ihren Hass in den Kanal
und warfen meinen Körper hinein.
Im Land der Decken, die die Ohren versiegeln, des Schlafes, der die Augen versiegelt,
versank ich mit der Wut einer sich häutenden Schlange.
Einst wird am Stock der aus meiner Scheide ragt, die blutige Fahne unserer Freiheit wehen.
Übersetzung Orsolya Kalasz

No comments: