Monday, March 28, 2016

குமார்குணரத்தினத்தின் நீதிமன்ற உரை

எனது அரசியற் செயற்பாடுகள் ஒருவிதத்தில் இந்த நாட்டு ஜனநாயகம் புதையுண்டு இருந்த இவ்வாறான நிலையில், ஜனநாயகத்தை ஒருவிதத்தில் வெற்றிகொள்ள நடைபெற்ற போராட்டத்துடன் தொடர்பு கொண்டது.

கௌரவ நீதிபதி அவர்களே!

கேகாலை நகரில் பிறந்து வளர்ந்த என்னை விசா காலம் முடிந்தும் இங்கு வசித்த வெளிநாட்டவன் என்ற காரணத்தைக் காட்டி கைது செய்து வைத்துள்ளனர்.

எனது வீட்டின் முன்வாசலுக்கு வந்தால் என்னால் பொது மயானத்தைக் காணமுடியும். எனது தந்தை உட்பட எனது சொந்தங்கள் அடக்கம் செய்த, தகனம் செய்த மயானம் அதுவாகும். நான் வீட்டில் இருந்து கொழும்பு-கண்டி வீதிக்கு வந்தால் றோமன் கத்தோலிக்க மயானத்தைக் காண முடியும். அங்கு எனது தாயின் சொந்தங்கள் எனது தந்தைவழி பாட்டனார் ஆகியோர் அடக்கம் செய்யப்ட்டுள்ள புதைகுழிகள் இன்றும் இருக்கின்றன.


நான் கேகாலை நகரை நோக்கி கொழும்பு-கண்டி வீதியில் நடந்து செல்லும்போது நானும் எனது சகோதரனும் எனது தாய் மாமன்மார்கள் கல்வி பயின்ற சென் மேரிஸ் வித்தியாலயத்தையும், வலது பக்கம் எனது தாய் எனது சகோதரிகள், கல்வி கற்ற சென் யோசப் கல்லூரியைக் காணலாம்.

நான் பிறந்து வளர்ந்த சொந்த இடமான கேகாலை நகரில் வைத்து என்னை ஒரு வெளிநாட்டவரென கருதி, வதிவிட விசா இல்லை என்ற காரணத்தைக் காட்டி கைது செய்தனர்.

கௌரவ நீதிபதி அவர்களே!

இது ஒரு ஜனநாயக விரோத செயற்பாடு கொண்ட நாட்டின் வெளிப்பாடு என நான் நினைக்கிறேன். எனக்கு எதிரான இவ்வாறான செயற்பாட்டு பின்னணியைப் பற்றி விளக்க ஒரு சந்தர்ப்பம் வழங்குவீர்கள் என நம்புகிறேன்.

கௌரவ நீதிபதி அவர்களே!

நான் 1981 இல் பின்னவல மத்திய கல்லூரியில் க.பொ.த உயர்தரம் கல்வி கற்கும் காலத்திலேயே அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டேன். நான் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில் பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்திற்கு உள்வாங்கப்பட்டு அங்கும் எனது இடதுசாரிய அரசியலை முன்னெடுத்தேன். நான் விருப்புடன் இந்த புரட்சிகர இடதுசாரியத்தை தேர்ந்தெடுத்த அந்நாளில் இருந்து இந்நாள் வரை அதையே செய்தும் வருகின்றேன். இன்று என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கும், எனது இடது சாரிய அரசியல் செயற்பாட்டுப் பின்னணிக்கும் சில தொடர்புகள் இருப்பதை உணர முடியும்.

எனது பிரஜாவுரிமை சார்ந்த பிரச்சனை சார்ந்த கேள்வியோ அல்லது நான் அரசியலில் ஈடுபடும் உரிமை பிரச்சனை பற்றிய கேள்வியோ இந்நாட்டின் ஜனநாயகம் தொடர்பான பிரச்சனையாவே இருக்க முடியும். நான் இடதுசாரிய அரசியலுக்குள் பிரவேசித்த 1981-82 காலப்பகுதி மற்றும் 1985-86 காலப்பகுதியில் தொடர்ந்த எனது அரசியற் செயற்பாட்டுக் காலப்பகுதிகள் இந் நாட்டின் ஜனநாயகமானது அரசியல் அதிகாரங்களைக் கொண்டவர்களால் அச்சுறுத்தப்பட்ட காலமாகும்.

1977 இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையில் ஐக்கியதேசியக் கட்சி அதிகாரத்துக்கு வந்தது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் நிறைவேற்று அதிகார ஜனநாயகமுறை கொண்டுவரப்பட்டது. அடக்குமுறைகள் தலைவிரித்தாடிய காலப்பகுதி என நாங்கள் இதனை விவரிப்போம். இந்த அடக்குமுறை ஆட்சி 1980 யூலையில் ஏற்பட்ட வேலைநிறுத்தத்தினை அடக்குமுறையால் ஒடுக்கியது.

1982 இல் மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்கான தேர்தல், அரசின் குண்டர் படைகளால் பாரிய தேர்தல் முறைகேடுகள் புரியப்பட்டு நடந்தேறியது. 1982 இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரசு அவ்வருடம் நடாத்தப்பட வேண்டிய பொதுத்தேர்தலை பிற்போட்டதன் மூலம் ஜனநாயகத்துக்கு குழிபறித்தது. 1977 பொதுத்தேர்தல் மூலம் கிடைத்த பழைய வாக்குப்பலத்தினை அடிப்படையாக்கி நடாத்த வேண்டிய பொதுத் தேர்தலை தள்ளிப்போட்டு மேலும் 6 வருடங்கள் ஜனநாயக விரோதமாக தொடர்ந்தும் ஆட்சியில் நீடித்தனர். இது ஜனநாயக வழிமுறைக்கு மாறாக ஆட்சியைக் கையகப்படுத்தியது மட்டுமன்றி சட்டவிரோதமான ஆட்சியாகவும் இருந்தது. இதே ஆட்சி தான் 1983 இல் நடந்த கறுப்பு யூலை இனக் கலவரத்தினை உருவாக்கியதன் மூலம் நாட்டினை ஒரு இனவாதப் போருக்குள் தள்ளிய ஆட்சியாகும்.  

1983 இல் கறுப்பு யூலை குழப்பங்களைப் பயன்படுத்தி, நான் இடதுசாரிய அரசியலில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணியை தடை செய்தனர். கறுப்பு யூலைக்கு எவ்வித தொடர்புமற்ற எமது கட்சியை தடை செய்து, எமது கட்சித் தலைவர்களை கைது செய்து, கொலை செய்ய கட்டளை இட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பெரும்பாலான வேளைகளில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு ஜே.ஆரின் அடக்குமுறை அரசினால் பலிகொள்ளப்பட்டனர். இதுவே தான் நான் இடதுசாரிய அரசியலுக்குள் என்னை ஈடுபடுத்திக்கொள்ளும் தீர்மானத்துக்கான சமூக அரசியல் பின்னணியாக இருந்தது.

எனது அரசியற் செயற்பாடுகள் ஒருவிதத்தில் இந்த நாட்டு ஜனநாயகம் புதையுண்டு இருந்த இவ்வாறான நிலையில், ஜனநாயகத்தை ஒருவிதத்தில் வெற்றிகொள்ள நடைபெற்ற போராட்டத்துடன் தொடர்பு கொண்டது.

1987 -1988 காலப்பகுதியில் நாட்டை கடுமையான சிவில் யுத்த நிலைமைக்குள் இழுத்து விட்டிருந்தனர் என்பதை நாம் அறிவோம். ஒரு புறத்தில் 1983 இல் வடக்கில் யுத்தம் மோசமடைந்திருந்த வேளை மறுபுறத்தில் தெற்கில் யூ.என்.பியின் ஜனநாயகவிரோத சக்திகள், நான் தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருந்த இடதுசாரி இயக்கத்தினரால் சவால்களை எதிர்கொண்டது. இந்தக் காலப்பகுதியில் எங்கள் கட்சியின் தோழர்களும், தோழியர்களும் கடத்திச்செல்லப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, ரோகண விஜேவீர சகோதரர், சகோதரர் உபாதிஸ்ஸ கமநாயக உள்ளிட்ட தலைவர்களும் கொல்லப்பட்டனர். இன்றும் அது தொடர்பான புலனாய்வுகள் இல்லை. இன்றும் அது தொடர்பான விசாரணைக் கமிசன்கள் இல்லை. அவை குறித்த விசாரணைகளோ சட்டநடவடிக்கைளோ நடாத்தப்படவில்லை. 26 வருடங்களுக்கு பின்பும் கூட அது தொடர்பான நீதி கிடைக்கவில்லை.

நான் முன்பு கூறியது போல் எனது சொந்தங்கள், எனது தந்தை, எனது சகோதரர்கள் இந்த பூமியில் எங்கோ புதையுண்டு இருப்பது போல; எனது தோழர்கள், எனது அன்புக்குரிய மூத்த சகோதரர் ரஞ்சிதம் உள்ளடங்கலாக அவர்களின் எச்சங்கள் இந்த நாடு பூராவும் சிதறப்பட்டிருக்கின்றது. இந்த ஜனநாயக விரோத அரசானது எனது சொந்த சகோதரனை என்னிடமிருந்து பறித்துக்கொண்டது. எனது குடும்பத்தையும், எனது அரசியலுக்குரிய எனது நாட்டினையும் என்னிடமிருந்து பறித்துக் கொண்டது. தற்செயலாகவே எனது உயிர் தப்பியது என்றே சொல்ல வேண்டும்.

என்னோடு ஒன்றாக கல்வி கற்ற, எனது உயிரைப் பாதுகாக்க முனைந்த பந்துல திசநாயக்க எங்கே என்பதற்கு இன்றுவரை விடையேதும காண முடியவில்லை. இடதுசாரி அரசியலில் நான் ஈடுபட்டிருந்த சூழல் இவ்வாறு தான் இருந்தது. அதற்குப் பின்னரான விசா முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்ததான குற்றச்சாட்டும் இந்தப் பின்னணி கொண்டது தான்.

எனக்கு ஏன் வெளிநாட்டுக்கு புலம்பெயரும் நிலை ஏற்பட்டது என்பதை விளக்க எனக்கு சந்தர்ப்பம் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நொறுக்கித் தரைமட்டமாக்கப்பட்டதான, எரித்து நீறாக்கப்பட்டதான அழித்தொழிப்பின் பின், இடதுசாரிய அரசியல் மேல் ஊக்கம் சரிந்து கொண்டிருந்த காலப்பகுதியில் மீண்டும் சிவப்பு கொடியை இந்நாட்டில் உயர வைக்க வேண்டும் என்ற நோக்கோடு நானும் வேறு சிலரும் இடதுசாரி அரசியல் இயக்கத்தினை மீளக் கட்டியெழுப்பும் தீர்மானத்தை எடுத்துக் கொண்டோம்.

மார்க்சியப் பார்வையில் கூறுவதாயிருந்தால், இந்த முதலாளித்துவ அரசு, இந்த நடைமுறை சமூக பொருளாதார பண்பாட்டுப் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டதல்ல. இனவாத அரசியலையோ சமுதாய ஏற்றத்தாழ்வுகளையோ தோற்கடிப்பதென்பது அதனால் முடியாததொன்று.

சோவியத் தேசம் வீழ்ந்து விட்டது. உலக சோசலிச இயக்கம் சரிவை சந்தித்துக் கொண்டிருந்தது. சோசலிசம் தொடர்பான ஊக்கம் கெட்டுப்போயிருந்தது. இவையெல்லாம் இந்த நாட்டில் இடதுசாரிய அரசியலை தூக்கி நிறுத்துவதற்கு பின்னடைவை ஏற்படுத்தியிருந்தன. ஆனாலும் இந்தப் பிரச்சனைகளையெல்லாம் தீர்க்கக்கூடிய தத்துவார்த்த மற்றும் தர்க்கவியலின் மேலிருந்த நம்பிக்கையினால் அரசியல் இயக்கமொன்றை மீட்டெடுக்கும் உந்துதலை நாம் பெற்றிருந்தோம். ஜே.வி.பி யினை சரியான அரசியலுக்குள் கொண்டுவர உந்துதல் கொண்டோம்.

சமரசமின்றிய புரட்சியாளர்களாக உருவாக வேண்டுமென்ற எங்களதும் மற்றும் அதே அவாவுடன் யூ.என்பி ஆட்சிக்காலத்திலான அடக்குமுறையினால் உயிர்நீத்த எமது தோழர்களினதும் மனச்சாட்சி எங்களது முயற்சியை வெற்றியடைய வைப்பதில் திடமாக முன்னேறுவதற்குரிய சக்தியை எமக்களித்தது.

இன்றைய முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரதான செயலாளரான சேனாதீர குணதிலக சகோதரரும் அண்மையில் உயிர்நீத்த செனவி என்று நாம் அழைத்த கமல் தேசப்பிரிய சகோதரரும் இன்னும் சிலரும் இம் முயற்சியில் ஈடுபட்டோம்.

அன்று 1994 தொடக்கம் 2011 செப்டம்பர் மாதம் வரை நாங்கள் கட்சியின் சகல செயற்பாடுகளிலும் பங்கெடுத்துக்கொண்டோம். 1994 பொதுத் தேர்தலில் போட்டியிடுவதென்ற முடிவினை எடுத்தோம். 

2004 ம் ஆண்டு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குவதிலும், பின்னர் 2005 இல் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக்குவதற்கான எமது ஆதரவினை அளித்தோம். 1997 உள்ளுராட்சி சபை தேர்தல் 1999 ஜனாதிபதி தேர்தல், 2000 பொதுத் தேர்தல், 2001 பொதுத் தேர்தல் ஆகியவற்றில் இடதுசாரிய அரசியல் இயக்கங்களில் ஒன்றாக நாங்களும் இயங்கினோhம்.

மீண்டும் மக்கள் விடுதலை முன்னணியை நம் நாட்டின் பிரதான அரசியல் நீரோட்டத்திற்குள் கொண்டு வருவதற்கு செயற்பட்டோம். நான் 1994 இல் உண்டான ஆரம்ப அமைப்பாக்கல் நிர்வாகக் குழுவில் செயற்பாடுடைய அங்கத்தவனாகவும், பின்னர் பொலிற்பீரோ அங்கத்தவனாகவும், ஜே.வி.பி யின் தீர்மானங்களை மேற்கொள்ளும் பொறுப்பிலும் இருந்தேன். நாட்டினை விட்டகன்று செல்வதற்கும் அதன் தொடர்ச்சியாய் வேறு நாட்டில் வதிவதற்குமான கட்டாயத்துக்கு நான் ஆளானேன் என்பதை விளக்குவதற்காகவே இங்கு இவற்றையெல்லாம் நான் சுருக்கமாக கூறுகிறேன். ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உருவாக்கத்தின் பின், கட்சிக்குள் ஒரு உள்ளக விவாதம் ஒன்று தொடங்கியது. முதலாளித்துவக் கட்சிகளுக்கு ஆதரவளிப்பது என்ற எமது தீர்மானம் எந்தளவு பயனுள்ளது என்ற மதிப்பீட்டினை இந்த விவாதம் கருப்பொருளாகக் கொண்டிருந்தது.

எமது ஆதரவுடனான மகிந்த ராஸபக்ஷவின் வெற்றிக்குப் பின்னர், எமது கட்சியின் அங்கத்தவர்கள் ராஜபக்ஷவின் அரசுடன் இணைந்து கொள்ள விரும்பினர். கட்சியின் பெரும்பான்மை மத்தியகுழு உறுப்பினர்கள் இந்த முடிவுக்கு எதிரான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தனர். இருந்தபோதிலும் சிலர் கட்சியை விட்டு விலகிச் சென்று மகிந்த அரசுடன் இணைந்து கொண்டனர். அது மட்டுமல்ல, இவ்வாறு கட்சியை விட்டு வெளியேறிச் சென்றவர்கள், கட்சி அரசுடன் இணைந்து கொள்வதற்கு எதிரான பிரச்சாரத்தை நானே கட்சிக்குள் முன்னெடுத்தேன் என விபரித்தனர். இதுகாலம் வரையான எமது கட்சியின் நடைமுறைக் கட்டுக்கோப்புக்கு இது ஒரு திருப்புமுனையான அமைந்ததோடல்லாமல் கட்சி ஒரு அரசியல் பின்னடைவுக்குள் வீழ்ந்ததற்கான அறிகுறியாகவும் இருந்தது.

இதன் விளைவாய், ராஜபக்ச அரசாங்கத்தின் அழித்தொழிக்கப்பட வேண்டிய விசேட இலக்காக நான் வந்திருந்தேன். இதுவே நான் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பிரதான காரணமாகும். நாட்டிலிருந்து நான் வெளியேறுவதே தகும் என்ற முடிவு கட்சியாலேயே எடுக்கப்பட்டது. அதன் நிமித்தம் 2006 ம் ஆண்டு நான் குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினேன்.

கௌரவ நீதிபதி அவர்களே!

நாட்டை விட்டு வெளியேறியது என்பதும் எனது அரசியலும் தனித்தனியானதல்ல. ஒன்றைவிட்டு மற்றொன்றென பிரித்துப் பார்க்க முடியாதவை. பேச முடியாதவை. இங்கு என்ன நன்றாக தெளிவாகிறதெனில் நாட்டில் விசாவில் குறிப்பிட்டிருந்த திகதிக்கு மேலாகவும் தங்கியிருந்ததென்ற என் மீதான குற்றச்சாட்டுக்குக்கு காரணம் திட்டவட்டமாக அரசியற் காரணமே என்பதாகும்.

எனது உயிருக்கு அச்சுறுத்தல் என்பது 2012 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ம் திகதி அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டபோது நிரூபணமாகியிருந்தது. ராஜபக்ஷ ஆட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆயுதக் குழுவொன்றினால் நான் கடத்தப்பட்டேன். என்னைக் கொல்வதே அவர்களது நோக்கமாயிருந்தது. மனிதவுரிமை இயக்கங்களாலும், அரசியற் கட்சிகளாலும், ஊடக நிறுவனங்களினாலும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரந்த எதிர்ப்பு உருவானது. இந்த விரைந்த பரந்த எதிர்ப்பு நடவடிக்கைகளே எனது உயிருக்கு சேதமின்றி என்னை விடுவிப்பதற்கு ராஜபக்ஷ அரசினை கட்டாயத்துக்குள்ளாக்கியது. ராஜபக்ஷ ஆட்சியின் அடக்குமுறைக்குள்ளிருந்து இது ஒரு அரிதான விடுவிப்பு ஆக இருந்தது.

கௌரவ நீதிபதி அவர்களே!

சிலர் சிந்திக்கலாம் எவ்வாறு ஒரு கட்சியின் உட்கட்சி விவாதம் அல்லது சர்ச்சை அல்லது கட்சியின் தீர்மானம் ஒட்டுமொத்த சமுதாயத்தின் மேல் தாக்கம் புரிய முடிமென்று.

ஒரு அரசியல் கட்சியினால் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் ஒரு சமூகத்தின் விதி, அழிவு அல்லது அந்நாட்டின் நல்லிருப்பு என்பனவற்றின் மேல் ஆற்றல் செலுத்தவல்லது என நான் நம்புகிறேன். உதாரணமாக ஜே.வி.பி யினால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய காலத்து தீர்மானங்கள் சமூகத்தின் மேல், நாட்டின் குடிமக்கள் மேல், வரலாற்றை வினைவதில் மேல் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஐக்கிய மக்கள் முன்னணி அரசாங்கத்தினை ஸ்தாபிப்பதற்கு ஜே.வி.பி எடுத்துக்கொண்ட தீர்மானமானது தீர்க்கமானது என்பதனை நான் இங்கு அழுத்திக் கூற முடியும். அப்படியான தீர்மானங்கள் வெற்றியளிப்பதாகவோ அல்லது தோல்விக்கோ வழிவகுக்கலாம். ஆனால் எனது கருத்து என்னவெனில் அவ்வாறான தீர்மானங்கள் வாழ்க்கைக்கும் சமூகத்துக்கும் முக்கியமானவையாகும்.

1971 மற்றும் 1987 காலப்பகுதிக்கு மீளச் செல்வோமாயின், விமர்சனங்கள் இருக்கலாம், கட்சியின் தீர்மானங்கள் தீர்க்கமானவை. எங்களது பழைய சகாக்கள் சிலர் ராஜபக்ஷ அரசோடு சேர்ந்து கொண்ட பின்னர், அவர்கள் தங்களது இடதுசாரிய மனோபாவத்தினையும் அரசியலையும் கைவிட்டு விட்டனர். முதலாளித்துவ அரசியலுக்குள் அவர்களுடைய செயற்பாடுகளில் அவை வெளிப்பட்டு நிற்கின்றன.

அவர்கள் கட்சியை விட்டு வெளியேறிய போதும், கட்சிக்குள் உட்கட்சி அரசியல் விவாதம் தொடர்ந்து நடந்த வண்ணமே இருந்தது. அரசியற் செயற்பாடுகளில் எனை ஈடுபடுத்திக் கொள்வதற்கும் கட்சியின் செயற்பாடுகளில் பங்கேற்பதற்குமாய் பல தடவைகள் நான் அடிக்கடி நாட்டுக்கு திரும்பி வரவேண்டியிருந்தது. 2011 செப்டம்பர் மாதம் நான் நாட்டிற்கு திரும்பவும் வந்திருந்தேன். கட்சிக்குள்ளான ஒரு குழப்பம் நோக்கி தொடங்கியிருந்த விவாதம் ஒன்றில் உடனிருப்பதற்காய் எனது தோழர்களால் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று நான் வந்திருந்தேன்.

செப்டம்பர் 23ம் திகதி 2011 இல் எனக்கு உயிரச்சுறுத்தல் இருந்தபோதும் நான் நாட்டுக்கு திரும்பி வந்திருந்தேன்.

ஒரு மார்க்சிஸ்ட் ஆகவும் நிலவுகின்ற சமுதாயத்தின் எத்தனையோ பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரு மாற்று சோசலிசமே என்று நம்பிக்கை கொண்ட கம்யூனிஸ்ட் ஆகவும் இருப்பதினால், ஒரு புரட்சியாளன் இந்த ஆபத்துக்களை எதிர்கொண்டே ஆக வேண்டும். கட்சிக்கு எவ்வித தீங்கும் விளையாதபடியான ஒரு கட்டம் வரையிலுமாவது நடைபெற்றுக் கொண்டிருந்த விவாதத்தை வழிப்படுத்துவதற்கும் அவ்விவாதத்தில் மஸ்தியத்துவப்படுத்தவும் என நான் நாட்டுக்கு திரும்பி வந்தேன். ஆனால் விளைவு அதுவல்லாது போய்விட்டது. ஒரு புதிய இடதுசாரிய இயக்கத்தினை மீள ஸ்தாபிக்க வேண்டியிருந்தது. அதுவே முன்னிலை சோசலிசக் கட்சி. அதேவேளை, எமது புதிய கட்சியின் மீது அரச ஊடகங்களும், தனியார் ஊடகங்களும் அவதூறுகளை சரமாரியாக கட்டவிழ்த்து விட்டிருந்தன. எங்களுடைய அரசியலை எல்.ரி.ரி.ஈ யுடனும், புலம்பெயர்ந்தவர்களுடனும் தொடர்புபடுத்தி எங்களை ஒடுக்குவதற்காக சந்தேகங்கள் திட்டமிட்டே விதைக்கப்பட்டன.  எம்மீதான இக்குற்றச்சாட்டின் கவர்ச்சிகரமான இயல்பாக எது இருந்ததெனில்; எமக்கெதிராக இத் தீங்கிழைக்கும் இப் பிரசாரத்தை ஜே.வி.பி யிலிருந்து விலகிக்கொண்டவர்களும், ஜே.வி.பியின் அன்றைய தலைவர்களும் அரசாங்கத்தின் பிரச்சாரத்திலிருந்து  மாறுபடா வகையில் செய்தமையே.

புதிதாக உருவாகிய எமது கட்சியினால் ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கான சாத்தியப்பாடுகள் இருப்பதாகக் அரச புலனாய்வுப் பிரிவு உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

புதிய கட்சியினை அதன் ஆரம்பத்திலேயே துடைத்தழிப்பதற்கான இலக்கு கொண்டவையாகவே இந் நடவடிக்கைகள் இருந்தன.  இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்களின் மூலம் பொதுமக்களிடமிருந்து எமது கட்சியினை அந்நியப்படுத்துவதே இச் சக்திகள் கொண்டிருந்த நோக்கமாகும். எங்கள் கட்சியினை விட்டு மக்களை விலக்கி வைக்கும் நோக்கிலும் வன்முறை வழிகளின் மூலம் எங்களை அழிப்பதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கவும் எனது தமிழ் அடையாளத்தினை அவர்கள் பயன்படுத்தினார்கள்.

2011 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் திகதி எங்கள் கட்சி ஒரு ஊடக மாநாடு ஒன்றினை நடாத்துவதற்கான முயற்சியில் இருந்தது. எங்களுடைய இரண்டு கட்சித்தோழர்கள் லலித்குமாரும், குகன் முருகானந்தனும் கடத்தப்பட்டார்கள். இன்று வரையும் அவர்கள் திரும்பி வரவேயில்லை.  மே மாதம் 2009 இல் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. வடக்கும் கிழக்கும் முற்றுமுழுதாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாகின. அரச இராணுவப் படைகள், புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் இப்பிரதேசங்கள் கொண்டுவரப்பட்டன. ஏதாவது வன்முறை வெடித்தால், அந்த வன்முறைக்கு ராஜபக்ஷ ஆட்சியே பொறுப்பாயிருந்தது. நான் விளக்கியதின்படி, எங்களுடைய அரசியல் இயக்கத்தினை நசுக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாகவே எங்களுடைய லலித் தோழரும், குகன் தோழரும் கடத்தப்பட்டனர். நான் ஈறாக எங்களுடைய பெரும்பாலான தோழர்கள் புலனாய்வுப் பிரிவினரால் பின்தொடரப்பட்டனர். என் மீதான வேட்டை ஏப்ரல் மாதம் 7 ம் திகதி 2012 ம் ஆண்டில் கிரிபத்கொடவில் வைத்து என்னைக் கடத்திச் சென்றதன் மூலம் முற்றுக்கு வந்தது. நான் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதற்கு காரணமாய் அமைந்த, நான் எனது உயிருக்கு அச்சுறுத்தலாய் உணர்ந்த இந்தச் சம்பவம் என் மீதான உயிரச்சுறுத்தலுக்கும் ஒடுக்குமுறைக்கும் தெளிவான ஆதாரமாகும்.

இருப்பினும் உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்கள் மூலமும், அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மத்தியஸ்தினூடாகவும் என்னை அவர்கள் விடுவிப்பதில் போய் முடிந்தது. நான் எங்கே கடத்திக் கொண்டு செல்லப்பட்டேன் எங்கே அடைத்துவைக்கப்பட்டேன் என்பது எனக்குத் தெரியாது.

கொழும்பை அண்மித்த பிரதேசமாக அது இருக்கக்கூடும். ஒரு சட்டத்துக்குப் புறம்பான ஆயுதக்குழுவினால் கடத்தப்பட்டடையினால் நான் இறப்பின் விளிம்பிலேயே இருந்தேன். கடத்திச்செல்வதற்கு சட்டத்திற்கு வெளியில் இயங்கிய அவர்கள் என்னை நாட்டை விட்டு வெளியேற்ற மட்டும் சட்டத்தை துணைக்கழைத்தார்கள். கட்டுநாயக்கா சர்வதேச விமானம் நிலையம் வழியாகவே நான் வெளியேற்றப்பட்டேன். அடையாளம் தெரியாத கொலைகாரர்கள் எனது கடத்தலை மேற்கொண்டிருந்தனர். ஆனால் இலங்கை பொலிசார் இந்தக் கடத்தலின் இறுதிக்கட்டத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுத்தனர். இந்தக் கூட்டினை யார் தெளிவாக உணர்வார்கள்? யார் இந்த மர்மத்தினை அவிழ்ப்பார்கள்?. கடத்தல் அறியப்படாதிருந்தது, வெளியேற்றுதலோ பொலிசாரால் நிர்வகிக்கப்பட்டது.

இது இவ்வாறு தான் நடந்தது. எனது கண்கள் துணிகளால் கட்டப்பட்டு தெமட்டகொட குற்றவியல் பிரிவில் தள்ளிவிடப்பட்டேன். அது முதல் தொட்டு சட்ட நடவடிக்கை தொடர்ந்தது. அதன் பின்னர் மட்டுமே அவுஸ்திரேலிய உயர் ஆணையரும், பிரதான செயலரும் தோன்றினர். எனது பாதுகாப்பான புறப்பாட்டினை உறுதி செய்ய அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் வரை கூட பயணித்தனர்.

அண்மையில் முன்னாள் பாதுகாப்புச் செயலர், அற்புதமான வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார். கேகாலை விளக்கமறியல் சிறைச்சாலையில், நான் தொலைக்காட்சியினை பார்த்துக்கொண்டிருந்த வேளை, ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி சேவை இணையமொன்றிலிருந்து பெற்றுக்கொண்ட பாதுகாப்புச் செயலருடைய வாக்குமூலத்தை ஒளிபரப்பியது. இந்த வாக்குமூலத்தில் அன்றைய பாதுகாப்புச் செயலர் கிரிபத்கொடவில் இருந்த அயலார் ஒருவர், நபர் ஒருவரைப் பற்றி தந்த தகவல் தந்ததாகவும், அதன்படி நபர் கைது செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார். யார் இதற்குப் பொறுப்பு? எந்த பொலிஸ் இங்கு ஈடுபடுத்தப்பட்டது? கைது செய்யப்பட்டது சம்பந்தமான ஏதாவது ஆவணங்கள் இல்லை. எதுவும் அங்கில்லை. எந்த சட்ட நடவடிக்கைகளும் பின்பற்றப்படவில்லை. சம்பவம் நடந்ததென்றதை ஒப்புக்கொண்டுள்ளார். இன்னுமொன்றையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். அவரது வாய் தவறி அவர் அதனைச் சொல்லியிருக்கிறார். இந்தக் கடத்தலுக்கு ஜே.வி.பி தலைவர்கள் ஆதரவழித்திருந்தார்கள் என்பதே அது. புகைப்படங்களின் வழி என்னை அடையாளங் காட்டியும் என்னுடைய உடற்தோற்றப்பாடுகளை விபரித்தும் என்னை அடையாளங் காண்பதற்கு உதவினார்கள் என்று கூறினார்.

இந்த கேகாலை நகரில் பிறந்த நிலையில், இங்கேயுள்ள கல்லூரியில் கல்வி பயின்ற நிலையில், இங்கே விளையாட்டு மைதானங்களில் விளையாடி இருந்த நிலையில், என்னை ஒரு வெளிநாட்டவர் போல் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். நான் நம்புவது என்னவெனில் இது நிச்சயமாக நான் இடதுசாரிய அரசியலில் ஈடுபட்டு இருப்பதன் விளைவே ஆகும். ஜே.வி.பி யினுடைய அரசியலில் ஏற்பட்ட மாற்றமும் அதனை திருத்தியமைப்பதற்கான போராட்டத்தில் தலைமைப் பாத்திமுமே, எனது வெளிநாட்டுப் பயணத்திற்கான நிச்சயமான காரணமாகும்.

கௌரவ நீதிபதி அவர்களே!

இல்லாதவர்களுக்கும் இருப்பவர்களுக்கு இடையிலான பிரிவையோ, உழைப்புச் சுரண்டல் போன்ற கடுமையான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இந்த முதலாளித்துவ அரசுகளுக்கு முடியும் என்று நான் நம்பவில்லை. எங்களுடைய நம்பிக்கைகளின்படி, எந்த சமூகப் பொருளாதார பிரச்சனைகளையும் இந்த முதலாளித்துவ ஆட்சிகளால் தீர்க்க இயலாது. பொலிஸ், நீதிமன்றுகள், சிறைச்சாலைகள், ஆயுதப்படைகள், கல்வி, ஊடகம் என்பன யாவும் இந்த முதலாளித்துவ ஆட்சியின் அங்கங்களேயன்றி வேறல்ல. இந்த முதலாளித்துவ அரசின் பாதுகாப்பையும், இருப்பையும் தாங்கிப்பிடிப்பவைகளே இவைகள் ஆகும். தங்களாலான தனிப்பட்ட கொள்ளளவுக்குள், மனிதத்தன்மையை நிறைத்திருக்கின்ற எத்தனையோ நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த அமைப்பினுடைய இருப்பினை உறுதி செய்வதற்கு நிறுவனங்களில் சேவை செய்வதன் மூலமும், சட்டத்தினையும் ஒழுங்கினையும் பாதுகாப்பதன் மூலமும் அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

கௌரவ நீதிபதி அவர்களே!

நான் முகம் கொடுக்கும் இப்பிரச்சனை, இந்த நாட்டின் சமூக வாழ்வினதும் ஜனநாயகத்தினுடையதுமான பிரச்சனை. மிக அண்மையான கடந்தகாலத்தில் விசேடமாக ராஜபக்ஷ ஆட்சி ஜனநாயகத்துக்கு முரணான நடைமுறையுடைதென குற்றம் சாட்டப்பட்டது.

சங்கிலித்தொடராக நிகழ்ந்த கடத்தல், சித்திரவதைகள், படுகொலைகள் அவர்களால் மேற்கொள்ளப்பட்டன. நாங்கள் எல்லோரும் அதனை அறிவோம். தற்போது, நல்லாட்சி அரசாங்கம் ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்பவும், ராஜபக்ஷ அரசினால் குற்றம் இழைக்கப்பட்ட குற்றங்கள் யாவற்றுக்கும் நீதியினை உறுதிப்படுத்தவும் என உருவாகியிருக்கின்றது. அது எதையுமே செய்யவில்லை. ஆனால் ஊடக நிகழ்வுகளை மட்டும் ஒழுங்கு செய்கிறது.  அரசியல் நிகழ்ச்சிநிரல் ஒன்றை பின்பற்றுவதனை விடுத்து, ஜனநாயகத்தினை மீளக்கட்டியெழுப்புவதில் அவர்கள் தங்கள் கவனத்தை செலுத்தவில்லை. ஜனநாயக மாற்றங்கள் என்று சொல்லப்படுகின்றவற்றை உருவாக்குதல் தொடர்பில் அவர்களுடைய கருத்தில் எனது சந்தேகமே உள்ளது. ஜனநாயகத்தை மீளக்கட்டியெழுப்புதல் பற்றி உரத்துப் பேசப்பட்டது. 1977 யூ.என்.பி அரசு அதிகாரத்தக்கு வந்தபோதும் கூட, 1971 இல் நடந்த போராட்டத்தினை தங்களுக்கு முன்பிருந்த அரசு ஒடுக்கியபோது இழைத்த குற்றங்களை அன்றைய அரசின் மேல் சுமத்தியபடி, இதேமாதிரியான கோஷங்களே எழுந்தன.

1994இல் மக்கள் முன்னணி அரசு, ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பதைப் பயன்படுத்தியே அதிகாரத்துக்கு வர முடிந்தது. குற்றச்சாட்டு யூ.என்.பி அரசுக்கு எதிராக இருந்தது. 1987-89 காலப்பகுதியிலான போராட்டத்திகை குரூரமாக அடக்கியதனை குறிப்பிட்டு அது நடந்தது.

அண்மையில், நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தது, ராஜபக்ஷ அரசுக்கு எதிரான சமூக எதிர்ப்பலைகளை  அறுவடைசெய்ததன் மூலம் நடந்தது. ஆனால் அதிகாரத்துக்கு வந்த பின்னர் அதிகாரத்தில் அமர்ந்திருக்கின்ற தலைவர்கள் யாரும் ஜனநாயக உரிமைகளைப் பற்றி அக்கறை கொள்வதில்லை.

குமார் குணரத்தினத்தினம் முகம்கொடுக்கும் கேள்விகள் கூட மறுக்கப்படும் ஜனநாயகத்தின் மீதான ஒட்டு மொத்த கேள்வியின் ஒரு பகுதியே ஆகும். நான் எனக்குள் என்னையே கேட்டுக்கொள்ளும் கேள்வி என்னவெனில், நீதிமன்றங்களாலோ, சட்ட நடைமுறைகளின் கட்டமைப்புக்குள்ளாலோ என்னுடைய கேள்விகள் தீர்க்கப்படுமா என்பதே.

என்னுடைய நம்பிக்கை என்னவெனில், என்னுடைய பிரஜாவுரிமை பற்றிய கேள்வி ஒரு சட்டவாதப் பிரச்சனை அல்ல. ஆனால் அரசியல் அதிகாரத்துவமுடையவர்களால் எடுக்கப்பட வேண்டிய ஒரு தீர்மானமே. சட்டவரைமுறைகளின் படியான பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதற்கு, நீ என்ன செய்தாய் என சிலர் கேட்கலாம். 2014 இன் முற்பகுதியில் நான் விசாவுக்கு விண்ணப்பித்திருந்த போதும் அது எனக்கு வழங்கப்படவில்லை. இதே குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரியே அன்றும் பணியில் இருந்தார். என்னுடைய விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதன் பின்னர், முறையீட்டு கடிதம் ஒன்றைக் கையளிக்குமாறு அவர் என்னை கேட்டுக்கொண்டார். இது சாதாரண விசா வழங்கும் நடைமுறை விதிக்கு உட்படாத ஒன்றாகும். அவ்வாறு கேட்டுக்கொண்ட கடிதத்தில் நான் நாட்டுக்கு வருவதற்குரிய எனது அரசியல் தன்மையினை தெளிவாக விளக்கியிருந்தேன். அதன்படி விசா வழங்குவதற்கு அவர் இணங்கிக் கொண்டார். ஜனவரி முதலாம் திகதி 2015 இல் நான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினேன். நாட்டுக்கு வந்ததன் பின்னர், ஜனவரி 31 ம் திகதி விசாவினை நீடிப்பதற்கென விண்ணப்பத்தினை சமர்ப்பித்தேன். அதற்கான பதிலும் வழங்கப்படவில்லை. பெப்ருவரி 2ம் திகதி என்னுடைய மரபார்ந்த பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பம் ஒன்றினை சுப்ரீம் கோட்டில் சமர்ப்பித்தேன். அதற்கான பதில், இது விடயத்தில் அரசியல் மட்டத்தில் தான் முடிவு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. பெப்ரவரி 18ம் திகதி உள்நாட்டலுவல்கள் அமைச்சருக்கு எனது மரபார்ந்த பிரஜாவுரிமையை கோரி விண்ணப்பித்திருந்தேன். பிரஜாவுரிமை சட்டத்தின் 8ம் ஷரத்தின் அடிப்படையின் படி நான் அதற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பித்தேன்.

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது. சட்டவரைமுறைகளின்படியான எனது முயற்சிகளால் கிடைத்த மேற்கண்ட அனுபவங்களின்படி, என்னுடைய பிரச்சனையை இட்டான தீர்மானம் அரசியல் தலைமைகளாலேயே எடுக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகியது. எனவே இது குறித்த எத் தீர்மானமும் இது தொடர்பான அமைச்சரினாலோ அல்லது அரசாங்கத்தினாலோ தான் எடுக்கப்பட முடியும்.

ஜனவரி 16ம் திகதி அட்ரோனி ஜெனரல் (அரச சட்டநிபுணர்) முன்னர் எடுத்த முடிவினை மாற்றி இருப்பதாக ஒரு கடிதம் எனக்கு அனுப்பினார். என்னுடைய பிரஜாவுரிமைக்கான விண்ணப்பத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு குடிவரவு-குடியகல்வு திணைக்கள அதிகாரிக்கு தான் அறிவுறுத்தி இருப்பதாக அது இருந்தது. ஒருபுறத்தில் தீர்மானம் அரசியல் மட்டத்தில் எடுக்க வேண்டியதொன்றாக இருக்கின்றது. மறுபுறத்தில் குடிவரவு-குடியகல்வு திணைக்கள அதிகாரி, அட்ரோனி ஜெனரல் போன்ற அரச அலுவலர்கள் தமது முடிவுகளை, அதே கேள்விக்கான முடிவுகளை மாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

எனவே இங்கு இக்கேள்வியில் அரசியல் தன்மை வெளிப்பட்டு நிற்கின்றது. ஒரு விடயம் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிறது. அது எதுவெனில் ஒவ்வொரு அரச அதிகாரிகளும், அரச நிறுவனங்களும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. என்னைக் கைது செய்த பொலிஸ் அதிகாரிகள், என்னுடைய அடையாளத்தினை வெளிப்படுத்துவதில் முரணான தகவல்களை குறிப்பிட்டிருந்தார்கள். ஒரு தடவை என்னுடைய அடையாளத்தை நான் உரியமுறையில் அத்தாட்சிப்படுத்த முடியாததிருந்த படியினாலேயே கைது செய்ய வேண்டி வந்தது என்றார்கள். ஆனால் எனக்கு நிச்சயமாக தெரியும் என்னவெனில், அவர்கள் நான் யார் என்பதை அறிந்தே கைது செய்தார்கள். எனக்கு பொலிஸிலும், இராணுவத்திலும், அரச நிர்வாகத்திலும் மனிதப் பெறுமதியுடையோர் உள்ளார்கள் எனத் தெரியும். ஆனால் அவர்கள் இருக்கின்ற ஒழுங்கினை காப்பாற்றுவதற்காகக் கொடுக்கப்படுகின்ற கட்டளைகளை நிறைவேற்றும் கட்டாயத்திலிருக்கின்றார்கள். ஆகவே என்னுடைய கேள்வி அரசியல் மட்டத்திலேயே முடிவாக்கப்படவிருக்கிறது. ஜனநாயகத்தின் நெருக்கடியினை இது வெளிப்படுத்தி நிற்கின்றது. என்னுடைய அரசியல் ஈடுபாட்டின் காரணமாகவே நான் நாட்டை விட்டு வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டேன் என்று விளக்கம் தரப்படுகிறது.

கௌரவ நீதிபதி அவர்களே!

எந்ந நாடென்றில்லாமல் எங்கு நான் வசிக்க நேரிட்டாலும், நான் எனது இடதுசாரிய கொள்கைகளைக் கைவிடப் போவதில்லை என அந்த நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். 34 வருடங்களாக இடதுசாரிய அரசியலில் என்னுடைய வாழ்க்கையினை தொடர்ந்த நிலையில், நான் வலிமையுடனும் நம்பிக்கைப்பற்றுடனும் அதனையே தொடர்வேன். நான் இங்கு வலிமை எனக் குறிப்பிடுவது யாதெனில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குரிய பிரச்சனைகள் எதனையும் இந்த அமைப்பினால் தீர்க்க முடியாது என்ற தத்துவத்தின் மற்றும் தர்க்கவியல் நிலையாகும்.

நான் நம்பிக்கைப்பற்று எனக் கூறும்போது, சோசலிசத்துக்கான போராட்டத்தில் தம்முயிரைத் தியாகம் செய்த தோழர்களோடு எனது மனச்சாட்சியை இணையாவதை குறிப்பிடுகிறேன்.

முடிபாக, உண்மையான ஜனநாயகத்துக்கானதும், நீதிக்குமானதுமான போராட்டத்துடன் எனது கேள்வி தீர்வைப் பெறும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

அந்தப் போராட்டத்தில் என்னை தொடர்ந்தும் ஈடுபடுத்துவேன் என்பதை உறுதியளிக்கிறேன். என்னுடைய இந்த விளக்கத்தினை சொல்ல வாய்ப்பினை வழங்கியதற்காக கௌரவ நீதிபதி அவர்களுக்கு நன்றி.

நன்றி :NDPF

No comments: