Tuesday, February 25, 2014

செங்கை ஆழியன் பல கதைகள் - எனக்கு பிடித்தவை

-நாவுக் அரசன்-

யாழ்பானத்தில் இளவயதில் வாசித்த எழுத்தாளரில், கொஞ்சம் ஜனரஞ்சகமா சுவாரசியமா , தினசரி பத்திரிகை ,மல்லிகை போன்ற முற்போக்கு பத்திரிகை , வேறு பல இலக்கிய வெளியிடுகளில் நாவல் ,சிறுகதை எழுதிய ஒருவர் செங்கை ஆழியன் என்ற புனைபெயரில் எழுதிய, குணராசா மாஸ்டர் என்ற பெயரில புவி இயல் படிப்பித்த , உதவி அரசாங்க அதிபரா இருந்து ,பின்னர் யாழ் பல்கலைகழக பதிவாளரா, புவியியலில் டாக்டர் பட்டம் பெற்ற கலாநிதி கந்தையா குணராசா. அவர் எப்படியான இலக்கிய வகை எழுத்தாளர் எண்டு எனக்கு சொல்ல முடியவில்லை ,பலராலும் அதிகம் வாசிக்கப்பட்ட ஒரு எழுத்தாளர் , 30 வருடங்களின் முன் அவர் எழுதி ஏறக்குறைய 30 வருடங்களின் முன் நான் படித்த சில நாவல்கள் பற்றி சொல்லுறேன் .


அவர் எழுதிய ஒரு முக்கியமான நாவல் வாடைகாற்று, நெடுந் தீவில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிபடையில்,அவர் அந்த தீவில் அரசாங்க அதிகாரியா வேலை செய்த பொது எழுதிய கதை. மன்னாரில் இருந்து வாடைகாத்து சீசனுக்கு, வாடி அமைத்து தற்காலிகமா தங்கி , தங்கு தொழில் செய்யவந்த ஒரு மீனவ இளைஞனுக்கும்,உள்ளுரில் இருந்த ஒரு இளம் மீன்கொத்திப் பெண்ணுக்கும் இடையில் வந்த காதலில்,சம்மடியார் ,கரைவலை ,கருவாடு சகிதம்,வில்லன்களும், வில்லங்களும் வர ,அந்தக் கதையைப் பின்னர் இலங்கை இந்திய தயாரிப்பா படம் ஆகினார்கள் "வாடைக்காற்று" என்ற நாவலைச் சினிமா ஆக்குமாறு முன் மொழிந்தவர் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்த பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா என்கிறார்கள்!

Thursday, February 20, 2014

லெனின் எம். சிவம் அவர்களின் A GUN & A RING


-ந.சுசீந்திரன்- 

லெனின் எம். சிவம் அவர்களின் திரைப்படம் A GUN & A RING 17.02.2014 அன்று ஜெர்மனியில் பெர்லினில் திரையிடப்பட்டது. நல்ல திரைப்படங்களின் தரத்தில், இந்திய வணிக, வெகுஜன சினிமாக்களின் பாதிப்பு பெருமளவு இல்லாமல், தமிழ் வெகுஜனங்களுக்கு என்று இல்லாமல் உலகப்பொதுப் பார்வையாளரை நினைத்து எடுக்கப்பட்டிருக்கின்றது இத் திரைப்படம். 2013 இல் சீனாவின் சங்காய் சர்வதேச 16 ஆவது திரைப்பட விழாவிலும் அதே ஆண்டு கனடாவின் மொன்றியல் சர்வதேச 37 ஆவது திரைப்பட விழாவிலும் காட்சிக்காகத் தேர்வுசெய்யப்பட்டதுடன் 2013 ஆண்டின் கோல்டன் கோப்பிலட் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 

மிகக் குறைவான நிதி ஆதாரங்களுடன் அதேவேளை தொழில் நுட்பரீதியில் நிறைவாகத் தயாரிக்கப்பட்டிருப்பதும், அனேகமாக புகலிடத்தில் வாழும் ஈழத் தமிழர்களையே நடிக்க வைத்திருப்பதும், ஆர்ப்பாட்டம் இல்லாத கனேடிய நிலைக்களன்களும், காட்சிகளும் இயக்குனர் லெனின் எம். சிவம் அவர்களுக்கு பாரிய சவாலை எதிர்கொள்ளும் துணிவு இருப்பதையும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வந்து விடுவார் என்று நாம் நம்பிக்கை கொள்ளவும் முடிகின்றது. 

Wednesday, February 19, 2014

ஈழத்தில் எதிர்ப்பு இலக்கியம் எதுவரை ?

-கோபால் நாதன்- 
ஈழத்து தமிழ் இலக்கிய மரபில் எதிர்ப்பு இலக்கியம் மிக முக்கிய இடத்தைப் பெற்று வருகின்றது. ஈழத்து சமூக அரசியல் வரலாற்றின் தோற்றம் முக்கியமான ஒரு மாற்றத்தை எதிர் கொண்டது. பல்லின சமூகங்கள் வாழ்கின்ற ஒரு சூழலிலே மக்களது வாழ்வு நிலையை சமூக அதிகார மேலாதிக்கங்கள் பாதிப்புறச் செய்த போது எழுந்த எதிர்ப்புணர்வுகளை சித்தரிக்கும் முகமாக இத்தகைய இலக்கியங்கள் தோற்றம் பெறுகின்றன.

பொதுவாக இலக்கியம் என்பதே சமூகத்தின் பொதுப் போக்கிலிருந்தும் சமுதாயத்தின் ஒழுக்க சட்டகங்களிலிருந்தும் ஏதாவதொரு வகையில் மாறுபட்டதாகவே அமைந்திருக்கும் பொதுப் போக்குடன் முட்டி மோதுவதாகவே இருக்கும் இந்த மாறுபாடு அல்லது மோதுகை தீவிர நிலைப்பட்டதாகவும் இருக்கலாம் அல்லது சில முரண்பாடுகளை அடையாளப்படுத்துவதாகவும் இருக்கலாம். அது அந்த படைப்பு தோன்றும் புறச் சூழலை அனுசரித்த ஒன்றாகும் .இப்படியான தன்மையிலிருந்து விலகும் எழுத்துக்களை நாம் ஜனரஞ்ச எழுத்துக்கள் என்போமே தவிர இலக்கியம் என்பதில்லை .எனவே இலக்கியம் சமூகத்தின் பொதுப் போக்கிலிருந்து மாறுபடும் அது எதிர்ப்புக் கூறுகளை உட்கொண்டாதாகவே இருக்கும்.அந்த வகையில் நாம் இலக்கியம் என்பதே எதிர்ப்பு நிலைப்பட்ட ஒன்றுதான் என்று சொல்ல முடியும் ஆனால் எதிர்ப்பு இலக்கியம் என்னும் அழுத்தமான வகைப்படுத்தல் இவ்வாறானதொரு பொது நிலை வகைப்படுத்தல் அல்ல அது ஓர் அரசியல் உள்ளடக்க நோக்கிலான வகைப்படுத்தலாகும்.

Sunday, February 09, 2014

பிரேம்ஜியின் வாழ்க்கைச் சுவடுகள்

-ராஜா ஸ்ரீகாந்தன்- 
பிரேம்ஜியின் வாழ்க்கைச் சுவடுகளைப் பதிவு செய்யும் வகையில் அவர் குறித்து, எழுத்தாளரும் முன்னாள் தினகரன் ஆசிரியருமான அமரர் ராஜ ஸ்ரீகாந்தன் எழுதிய ஒரு கட்டுரையும், இன்னும் சில பதிவுகளும் பிரேம்ஜியின் நினைவாக ...
வரலாற்று நிகழ்வுப் போக்குகளும் காலத்தின் தேவைகளும் பொருத்தமான சூழற்புலங்களும் சமாந்தர சிந்தனைப் போக்குள்ளவர்களின் கூட்டு முயற்சிகளும் தனிப்பட்ட முன்னெடுப்புகளுமே சங்கங்களையும் இயக்கங்களையும் உருவாக்குகின்றன. இருந்த போதிலும் கொள்கைப் பற்றுள்ளஇ இலட்சிய வீறுகொண்டஇ மனித நேயமும் ஜனநாயகப் பண்பும் கொண்ட 'ஒரு சில மனிதர்களின்' இடையறாத முயற்சிகளும் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகளுமே இந்த இயக்கங்களை வெற்றியின் நெடுஞ்சாலையில் ஆர்முடுகலுடன் உந்திச் செலுத்துகின்றன. இந்த வகையைச் சேர்ந்த 'ஒரு சில மனிதர்களில்' ஒருவராக பிரேம்ஜி ஞானசுந்தரன் திகழ்கின்றார். இந்த 'ஒரு சில மனிதர்களின்' சொந்த வாழ்க்கையினைப் பயின்றறிதல் கூட பயன்மிக்க பாடமாயிருக்கும்.

யாழ்ப்பாணத்திற்கு வடக்கேஇ சந்நிதி முருகன் ஆலயத்திற்கு முன்னே ஓடாது நிற்கும் தொண்டமான் ஆற்றிற்கு அண்மையில்இ பனைமரங்களும் பயிர்ச்செய்கை நிலங்களும்இ பழத்தோட்டங்களும் நிறைந்த பசுமை கொஞ்சும் அழகிய கிராமம் அச்சுவேலி. அங்கே நடராஜா பவளம்மா தம்பதிகளின் மூன்றாவது மகனாக 1930.11.17 ஆந் திகதி பிறந்தார் பிரேம்ஜி. பெற்றோர் சூட்டிய பெயர் ஸ்ரீP கதிர்காம தேவ ஞானசுந்தரம். மூத்த தமையனார் மாணிக்க நடராஜா. சிறுவர் நலன்புரி ஆணையாளராகப் பணியாற்றியபின் காலமாகிவிட்டார். இரண்டாவது தமையனார் ஞானசம்பந்தர். அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்று தற்போது ஐக்கிய ராஜ்யத்தில் வாழ்ந்து வருகிறார். இவர்கள் மூவரதும் ஒரே சகோதரியான திருமதி கருணாதேவி சிவகுருநாதன் தற்போது கந்தர்மடத்தில் வாழ்ந்து வருகிறார். நெடுங்காலம் வாழ்ந்தஇ கடைசிமகனில் கொள்ளையன்பு வைத்திருந்த அன்னையார் பவளம்மா அண்மையில் காலமாகி விட்டார்.

பிரேம்ஜி தனது ஆரம்பக் கல்வியை அச்சுவேலி கிறீஸ்தவக் கல்லூரியில் தொடங்கி கனிஷ்ட பாடசாலைப் பத்திர வகுப்பு வரை கற்றார். 10-15 வயதிற்கிடைப்பட்ட இக் காலத்தில்; 'வீரகேசரி' செல்லத்துரை அவர்கள் மூலமாக பாரதி கவிதைகள்இ பகவத் கீதைஇ சத்திய சோதனை உட்பட பல பல நூற்றுக்கணக்கான நூல்களைப் பெற்றுப் படித்தார். திரு.வி.க. வினதும் சுவாமிநாத சர்மாவினதும் நூல்கள் இவரது பிஞ்சு உள்ளத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தின.

யாழ். பரமேஸ்வராக் கல்லூரியில் சிரேஷ்ட பாடசாலைப் பத்திர தயார் நிலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது இளம் ஆசிரியர் ஒருவர் பிரேம்ஜியிடமும் இன்னொரு மாணவனிடமும்இ 'நீங்கள் இருவரும் வகுப்பில் மிகவும் திறைமைசாலிகளாக இருக்கிறீர்கள். எனவே அடுத்த ஆண்டில் எடுக்க வேண்டிய இறுதிப் பரீட்சையை நீங்கள் இருவரும் இந்த ஆண்டு இறுதியிலேயே எடுக்க வேண்டும்' என்று மகிழ்வுடன் கூறினார்.

பிரேம்ஜிக்கு இது பிடிக்கவில்லை. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு 'நான் இங்கு படிக்க வந்தது பரீட்சை எழுதுவதற்காகவல்லஇ அறிவை வளர்ப்பதற்காகவே' என்றார்.

Sunday, February 02, 2014

எனக்குள் அண்ணன் கொக்குவில் கோபாலின் கடக்க முடியா நினைவுகள்

-கரவைதாசன்-
அண்ண! இது கண்ணீர் அஞ்சலி செலித்தி தீர்க்க கூடிய துயரல்ல, உன் பிரிவுத் துயர்.உனது அர்த்தமுள்ள வாழ்வின் பக்கங்களில் சுமார் பதினேழு வருடங்களுக்கு முன்பாக உன்னை  நான் சந்தித்தேன். அதற்கு முன்பாகவே உன்னைப்  பற்றி அறிந்து வைத்திருந்தேன். எல்லோருக்கும் கிட்டும் நாடகம், இலக்கியம், அரசியல் சமூகச்செயற்பாடு, மாயஜாலம் வானொலி இயக்குனர் எனப் பன்முகம் கொண்ட உன்னைச்  சந்தித்து பழகும்  அனுபவம் தான் முதலில் எனக்கும் எட்டியிருந்தது.  அதனிடையே, யாழ்பாணத்தின் சராசரித்தமிழர்களில் ஒருவராகத்தான் உன்னையும் எண்ணியிருந்தேன், பின்னாளில் உனது  செயற்பாடுகளை அவதானித்த போதுதான்  வானத்துக்கும் பூமிக்கும் இடையேயான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உன்னை இணைத்துக் கொண்டு பிரக்ஞை பூர்வமாக இயங்கும் உன் சிந்தனைப் போக்கும், துடிப்பும் "அநீதியை எதிர்த்து நிற்பதில் நீயும் நானும் ஒரே மன உறுதி கொண்டவர்கள் என்றால் நீயும் நானும் தோழர்களே " என்ற சேயின் பிரசன்னம் உன்னிடம் தெறிப்புக்கொள்வதைக் கண்டேன்.

முதலில் என்னை நீ தம்பி என அழைத்தாய், பின் தாசர் என்பாய், கேட்டல் எனக்கு நீதான் அயோத்தி தாசர் என்றாய். என் தந்தையைப் பற்றி எனக்கு நீ சொன்னாய் எனது பெரியப்பா உனக்கு உறவு என்றாய். "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" என்ற வாசகத்தை அப்படியே தலை கீழாக புரட்டிப் போட்டாய். அண்ணன் உடையான் ஆருக்கும் அஞ்சான் என்றுதான் வலம் வந்தேன்.

உன் தோள்களில் இருந்து என் கைகளை நான் உயர்த்தினேன். என் தோள்களில் இருந்து உன் கைகளை நீ உயர்த்தினாய்.