புலம்பெயர்ந்து டென்மார்க் தேசத்தில் வசிக்கும் இணுவையூர் சக்திதாசன் எழுதிய ‘தொட்டுவிடும் தூரத்தில்’ கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது, 17.06.2016 ஞாயிற்றுக் கிழமை, பிற்பகல் மூன்று மணிக்கு வவுனியா நகரில் அமைந்துள்ள குடியிருப்பு பூங்காவில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு பண்டிதர் வீ.பிரதீபன் தலைமை தாங்கினார். தமிழ்மொழி வாழ்த்து இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து வரவேற்புரையினை ஜெசிதா ஆனந்தமூர்த்தி வழங்கினார்.
ஆசியுரையினை தமிழ்மணி அகளங்கன் அவர்கள் வழங்கினார். வாழ்த்துரையினை தமிழ்மணி மேழிக்குமரன் அவர்கள் வழங்கினார். நூலின் அறிமுக உரையினை கவிஞர் வே.முல்லைத்தீபன் நிகழ்த்தினார்.
நூலின் வெளியீட்டு நிகழ்வுகளை செல்லமுத்து வெளியீட்டகம் இயக்குநர் யோ.புரட்சி நெறிப்படுத்தி வழங்கினார்.
நூலினை திரு.திருமதி இணுவையூர் சக்திதாசன் ஆகியோர் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை வவுனியா அறிவாலயம் புத்தகசாலை உரிமையாளர் ஜெ.கோபிநந்தன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
நயப்புரையினை முல்லைத்தீவு மாவட்ட மேலதிக காணி மற்றும் பதிவாளர் ஜெ.கோபிநாத் வழங்கினார். தொடர்ந்து கவியுரையினை தமிழ் விருட்சம் செயலாளர் கவிஞர் மாணிக்கம் ஜெகன் வழங்கினார். நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளுக்கான நினைவுச் சின்னங்களும் நூலின் ஆசிரியரால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வினை கம்பீரக் குரலோன் நாகேந்திரராஜா தொகுத்து வழங்கினார். நூலாசிரியருக்கான நினைவுப் பரிசில்களை தமிழ் விருட்சம் மற்றும் தொலைநோக்கி ஆகிய அமைப்புக்கள் வழங்கி கெளரவித்தன.
பிரதம விருந்தினர் உரையினை, நிகழ்வின் பிரதம விருந்தினர் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் நிகழ்த்தினார்.
நூல் தொடர்பான கருத்துப் பகிர்வினை வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் ந.பார்த்தீபன் நிகழ்த்தினார்.
அறிவிப்பாளர் நாகராஜன் அவர்கள் அறிவிப்புப்பணி ஆற்றிய இந்த நிகழ்வின் ஏற்புரையினை நூலாசிரியர் இணுவையூர் சக்திதாசன் வழங்கினார். ஈழத்தின் இலக்கியப் பரப்பில் ‘தொட்டுவிடும் தூரத்தில்’ கவிநூல் இன்னுமொரு பதிவாக தன்னையும் இணைத்துக்கொண்டது. இக்கவிநூல் இணுவையூர் சக்திதாசன் அவர்கள் எழுதிய நான்காவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment