Sunday, March 05, 2017

மக்கள் கலைஞர் கே.எஸ். இரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு


மக்கள் கலைஞர் கே.எஸ். இரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவில் நாம் நிற்கிறோம்.  இவ்வேளையில் அரசியல்  கலை இலக்கியத் தளங்களில் இவரோடு சேர்ந்து இயங்கிய இவரது சகா எஸ். தர்மன் (ஜெர்மனி)அவர்கள், கே.எஸ். இரத்தினம் அவர்கள் இறப்பெய்தியபோது அனுப்பி வைத்த பிரிவுச் செய்தியினை பதிவேற்றுகின்றேன். 

அம்மான் என நாம் அன்பாக அழைக்கும் கே.எஸ். இரத்தினம் அவர்கள் யாழ் கொக்குவிலைச் சேர்ந்தவர். பெரியோர்களின் ஆசிர்வாதத்துடன் கன்பொல்லைக் கிராமத்தில் எனது கற்கண்டு சித்தப்பாவின் மகள் எனது சகோதரி முறையான இராசு அவர்களை திருமண பந்தத்தில் சேர்த்துக்கொண்டு பலரும் புகழ்ந்து போற்றும் வகையில் வாழ்ந்து வந்தார். திருமண பந்த வழியில் வந்தவர் நண்பனுக்கு நண்பன் போலும் மைத்துனருக்கு மைத்துனர் போலும் அன்பாக பண்பாக பழகினார். நாம் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து எல்லாக் காரியங்களையும் ஒன்று சேர்ந்து செய்வோம். அச்சூழல் காரணமாக கே.எஸ். இரத்தினம் அவர்களின் மூலம் சீனசார்பு கம்யுனிஸ்ட் கட்சியில் இணைந்து வெகுஜன இயக்க மூலம் பல சாதியப் போராட்டங்களில் பங்காற்றினோம்.  இதில் முக்கியமாக கன்பொல்லையில் சாதிவெறியர்களுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். மேலும் நானும் கே.எஸ். இரத்தினம் அவர்களும் வேறு தோழர்களோடு இணைந்தும் பல முற்போக்கான வேலைகளை செய்தோம். மக்கள் சீனத்துக்கு எதிராக அமெரிக்க எடுத்த Shoes of the Fisher men  ஆங்கிலப் படத்தினை யாழ் றீகல்  தியேட்டரில் ஓடவிடாமல் தடுத்து ஓர் தாக்குதலை நடத்தினோம். படம் திரையிடப்பட்டபோது வெளியில் கைக்குண்டு வெடிக்கவைத்து கலகம் விளைவிக்கப்பட்டபோது நாம் தியேட்டரின் திரைக்கு உள்ளேயிருந்து  கோழிமுட்டைக் கோதுக்குள் கொண்டு சென்ற பெயின்ரினை அடிக்க வேண்டும் அத்தாக்குதலை வெற்றிகரமாகச் செய்தோம். இத்தாக்குதலுக்கு தோழர் இக்பால், சலீம்,   சி.கா.செந்திவேலும் , ஆத்திசூடி நவரத்தினம்  கிளிநொச்சியினை  சேர்ந்த  தோழரும் வெளியில் நின்று செயற்பட்டனர்.  மேலும் பல முற்போக்கான வேலைகளை செய்ததோடு பல நாடகங்களையும் நடித்து மேடைகள் பல ஏற்றினோம். இப்படியாக நண்பனுக்கு நண்பன் போலும் தோழனுக்கு தோழன் போலும் இணைந்து பல காரியங்களை செய்து வந்ததினை நினைக்கும்போது  அவர் ஞாபகம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றது . அவரைப்போல் அன்பு காட்ட தோளோடு தோள்  கொடுக்க வேறு யாருமில்லை. இன்று என் கையை நழுவிப் போய்விட்டார். அவரின் சிரிப்பு, நகைச்சுவையான கதைகள், பண்பான பழக்க வழக்கங்கள். என் கண்முன் நிற்கின்றது . இனி அவரை எப்போது காண்பேன் என மனம் ஊசலாடும். தோழன் ச.தர்மன் (ஜெர்மனி).

Wednesday, February 01, 2017

தொட்டுணர்ந்த ஏழு தேவதைகள் பற்றிய கதை.

-கரவைதாசன்- 
தமயந்தியின் ஏழு  கடல் கன்னிகள்  வாசிப்பு மனநிலை!

அலை ஒதுங்கிய கரையில் விசாரணை செய்! எனும் அரசியல் கோரிக்கையுடன் விரிகிறது பக்கங்கள்.
ஓலசுண்டின் அலை ஒதுங்கிய கரையொன்றில் தானை வைத்து கடல் நுகப்பினை கணக்கிட்டு தூண்டில் எறிந்த களைப்பு தீர முன்னே வங்கு நிறைந்த மீன் அளைந்த கைகளை உப்புநீரிலேயே அலம்பிவிட்டு ஈரமான கைகளை தன் சாரத்திலே துடைத்து விட்டு உழைப்பேறி மரத்துப்போன விரல் நீட்டி அழைக்கின்றார் .  கதை சொல்ல...

மொழிகளில் யார் தேவதைகளை பிரசவித்தவர்களோ அவர்களே அறிவர், தேவதைகளை காண முடியாது, பேசமுடியாது, நுகர முடியாது,  சுவைக்க முடியாது, தொட்டுணரவும் முடியாது.

எனினும்  மாந்திரீக எதார்த்தம் செய்த காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் கதைகளிலே வருகின்ற ஒரு இருளுடனோ அல்லது இருண்ட வீட்டுடனோ அல்லது  எச்.சி. அனசனின் கதைகளில் வருகின்ற ஏதாவது ஒரு அஃறினை பொருளுடனோ உறவாடுவதுபோல் இக்கதைகளினிலே வருகின்ற தேவதைகளுடன் சிரித்துப் பேசி கும்மாளமிட்டு குதூகலிக்க  முடிகிறது, கண்டு வரத்துகள் வாங்க முடிகிறது, சேர்ந்து நுகர்ந்து சல்லாபிக்க முடிகிறது, கிள்ளி எறிந்து வாயினிலே விட்டு மென்றும் மீதியினை கொப்பளிக்கவும் முடிகின்றது. என்றால் பிள்ளைவாளும் பறையனாரும் சபையினில் விவாதம் செய்கின்றனர் என்பது போல் சமன் செய்யப்படுகின்றது . மையத்தினை உடைத்து உதைத்து உதைத்து விளிம்பினில்  வைத்து அழகு செய்யப்படுகின்றது . இது தமயந்தி என்ற கதை சொல்லியால் முடிந்திருக்கின்றது.  தமிழ் மொழியினிலே தேவதை என்ற சொல் உசத்தியானது என்ற ஆதிக்க மனோபாவத்துக்கே பட்டா ஆகிப்போயிருக்கும் மனோநிலையில் முட்டியை உசத்தி "எங்களதும்  தேவதைகள் தான்! வயல்  உனக்கு சாமி என்றால் கடல்  எனக்கு தேவதை!" இதுவும் கர்வமான ஒரு இலக்கியச் செல்நெறிதான். அவர் உருவகித்த அந்த தேவதைகள் ராட்சத இரும்பு  இயந்திரங்கள் கொண்டு உழுது கிழிக்கப்படுகின்றபோது வீசும் இரத்தவாடை, கந்தகம் விழுந்து வெடிக்கின்றபோது எழும் கரும் புகை போன்ற  சொற் கூட்டங்கள் அவரின் எழுதுகோலினால்   வரிகளில் குந்தி  இருக்கச் செய்கின்றபோது வாசிப்போரின்   கண்களை  சிவக்க வைக்கின்றார்.

Tuesday, January 31, 2017

“இரண்டாம் இடம்” (மொழியெர்ப்பு நாவல்)

-ரவீந்திரன்.பா-
வரலாறு முக்கியம் அமைச்சரே !
* * ******************************
குறிப்பு: 29.01.2017 அன்று சூரிச் "வாசிப்பும் உரையாடலும்" நிகழ்ச்சியில் உரையாடலுக்காக "இரண்டாம் இடம்" நூல் எடுக்கப்பட்டது. தோழர் யோகராஜா வினால் இந் நூல் இன்னொரு கோணத்தில் விரிவாக அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து எல்லோரினதும் உற்சாகமான உரையாடலாக விரிந்தது. அதில் நான் வைத்த கருத்துகளை கொஞ்சம் விரிவாக செழுமைப்படுத்தி இங்கு பதிவிடுகிறேன்.

மலையாள எழுத்தாளர் வாசுதேசன் நாயர் அவர்களால் எழுதப்பட்டது. குறிஞ்சிவேலன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்
மகாபாரதக் கதையின் மீதான ஓர் மறுவாசிப்பாக உருவாகிய நாவல் “இரண்டாம் இடம்”. மகாபாரதத்தில் அதன் கதைமாந்தர்கள் மீது சூட்டப்பட்ட ஒளிவட்டங்கள், புனிதங்கள் மனிதஜீவியிடமிருந்து மிதப்பாக அவர்களை நிலைநிறுத்துகிறது. இந்தப் புனிதங்களையும் ஒளிவட்டங்களையும் சிதைத்து அவர்களின் மனிதப் பாத்திரத்தை வெளிக்கொணருகிற வேலையை “இரண்டாம் இடம்” நாவல் செய்கிறது. எல்லோரும் தவறுகளோடும் சரிகளோடும் இயங்குகிற மனிதத் தளத்தில் அவர்கள் காண்பிக்கப்படுகிறார்கள்.
கிருஸ்ணன், கர்ணன், தர்மன், குந்தி... என எல்லோரினது பிம்பங்களும் மனிதக் கட்டமைப்புக்குள் இறக்கிவைக்கப்படுகிறது.
திரௌபதையின் துகிலை துச்சாதனன் உரிகிறபோது ஈஸ்ட்மென் கலரில் சீலைகள் படையெடுத்துவந்து அவன் களைத்து விழுந்ததாய், கிருஸ்ணனின் சீலைவிடலை கண்டு நிம்மதிகொண்ட வாசக மனதுக்கு மாதவிடாயுடன் இரத்தம் ஒழுக அவளது ஒற்றைச் சீலையை துச்சாதனன் இழுத்துக்கொண்டபோது ஏமாற்றமாய் இருத்தல் கூடும். சரி..ஒரு விஜய் ஒரு ரஜனி புயலாய் வருவதுபோல் வீமன் களத்தில் இறங்கமாட்டானா என நாசமாய்ப்போன இன்னொரு மனசு எதிர்பார்க்கவும்கூடும். எதுஎப்படியோ கிருஸ்ணனின் புனித பிம்பம் காணாமலே போய்விடுகிறது.

Thursday, January 26, 2017

மலைநாட்டு தமிழ் மக்களின் உரிமைப் போர்த் தளபதிகள்

- லெனின் மதிவானம் - 
மலைநாட்டு தமிழ் மக்களின் உரிமைப் போர்த் தளபதிகள்: திருமதி கோகிலம் சுப்பையா, ஸி.வி. வேலுப்பிள்ளை.
(ஸி.வி. வேலுப்பிள்ளையின் இக்கட்டுரை திரு. லெனின்மதிவானம் அவர்களால் சேகரிக்கப்பட்டது.பாக்கியாபதிப்பகத்தின் வெளியீடாக வரவுள்ள ஸி.வி.யின் 'மலைநாட்டு தலைவர்களும் தளபதிகளும்' என்ற தொகுப்பிலிருந்து பிரசுரிக்கின்ற கட்டுரை).
திருமதி கோகிலம் சுப்பையா தோட்டங்களுக்குப் புதியவர். திரு.சுப்பையாவின் மனைவியாயிருப்பதனால் காங்கிரஸில் சேர்ந்தார். காங்கிரஸிலே கணவன்மாரின் வேலையைப் பகிர்ந்துகொள்ளும் வெகு சில பெண்களில் அவரும் ஒருவர். ஏனென்றால், மற்றும் காங்கிரஸ்காரர்களின் மனைவிமார் திருமதி சுப்பையாவைப்போலன்றித் தங்கள் கணவன்மாருக்குச் சுறுசுறுப்பாக உதவி செய்யப் பல்வேறு வசதிக் குறைவுகளைக்கொண்டுள்ளனர்.
தலைமை வகிக்கப் பேராற்றல்
''மாதர் காங்கிரஸ்'' எனப்படும் காங்கிரஸின் மாதர் பகுதி தேவையான பணிபுரியப் போதிய திறமைசாலிகளின்றி நெடுங்காலமாகச் செயலாற்றாதிருந்து வந்தது. ஆனால் திருமதி கோகிலம் சுப்பையா வந்து சேர்ந்ததும், இந்த நெடுங்காலத் தேவை நிறைவேறியது. 1948ம் ஆண்டு முதல் அவர் மாதர் காங்கிரஸில் சுறுசுறுப்பாகச் சேவைசெய்து வருகிறார். திரு.சுப்பையாவுடனும் தாமே தனியாகவும் சகல தோட்டங்களுக்கும் சென்று, பெண்களைச் சந்தித்து, அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றி அவர்களுக்குச் சொற்பொழிவாற்றியுள்ளார். இவ்விதமாகத் திருமதி கோகிலம் சுப்பையா பெண்களிடையே மட்டுமன்றி ஆடவர்களிடையேயும் பிரபலமடைந்துவிட்டார். 
காங்கிரஸ் காரியக் கமிட்டி அங்கத்தினராகவும் மாதர் காங்கிரஸ் தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்ட காலத்திலிருந்து, அவர் கமிட்டி ஆலோசனைகளிலும் பொதுமேடைகளிலும் சமூக வைபவங்களிலும் தமது பங்கையெடுத்துள்ளார். இப்பங்கெடுப்பதற்காக முன்னணிக்குச் செல்வதில் ஒருவேளை அவர் காட்டிய துணிவையும் விரைவையும் கண்டு ஆடவர்கள் கூடப் பொறாமைப்பட்டனர் எனலாம்.
தலைவரென்ற முறையில், அவர் மற்றும் ஸ்தாபனங்களில் தம்மைப்போன்று தலைமை வகிப்பவர்களுக்கு எவ்விதத்திலும் சளைத்தவரல்லர். அவர் திருமதி தேஜா குணவர்த்தனாவுடன் அரசியலைப்பற்றிப் பேசியுள்ளார்@ திருமதி குளோதா ஜயசூரியாவுடன் அரட்டையடித்திருக்கிறார்@ கைத்தொழில்களில் சமாதானத்தைச் சீராக்க வேலைநிறுத்துங்கள் அத்தியாவசியமாகுமெனக் கவர்ச்சிகரமான இங்கிதங்களுடன் திருமதி சதுரு குலசிங்காவிடம் அவர் சொல்ல முடிந்தது. அவர் ஓரிடத்துக்கு வந்து போகும்போது விட்டுச் செல்லும் வசீகரத்தின் நறுமணமும் கலகலப்பான சிரிப்பொலியும் 'யார் அந்தப் பெருமாட்டி?" என்று மற்றவர்களைக் கேட்க வைத்துவிடும். வேறெவரும் பதிலளிக்கு முன்பு திருமதி கோகிலம் சுப்பையாவே சொல்வார் "நான் திருமதி கோகிலம் சுப்பையா - மாதர் காங்கிரஸின் தலைவர்."
மாதர் சங்கம் பெற்ற புத்துயிர்உண்மையில், அவர் வந்து சேர்ந்தபிறகுதான் மாதர் காங்கிரஸ் புதிய தோற்றத்தைப் பெற்றது. அவர்கள் தங்கள் ஆண்டு மகாநாட்டுக்கு அணியும் ஜாக்கெட்டுக்கும் போர்க்கோலமுள்ள சிவப்பு நிறத்தைத் தெரிவுசெய்தனர்; தங்களுடைய சுலோகங்களைப் பெருமிதத்துடன் இசைக்க முஷ்டியைக் காட்டத் தொடங்கினர்.

Wednesday, January 11, 2017

கன்பொல்லை தவம் இரண்டாம் ஆண்டு நினைவுகள்

- கரவைதாசன்- 
இன்று கன்பொல்லை தவம் (முத்தன் தவராசா) அவர்களின் நினைவுகளை மீட்டு நிறுத்தும் இரண்டாம் ஆண்டு. அவரைப் பற்றி அவர் எனக்கு தந்தை எனச் சிலவும் சமத்துவத்துக்கான போராளியெனச் சிலவும் பொதுவுடமைக் கட்சியாளரெனச் சிலவுமென பலதும் பத்துமாக பல்வேறு நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக இணைந்தும் பிரிந்தும் வந்தேகின்றன. அண்மையில் இலக்கிய நண்பர் சிவராசா கருணாகரன் அவர்கள் ஆனையிறவு உப்பளம் பல மில்லியன் செலவில் இலங்கை அரசினால் புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் அரசாங்கம் உப்பளத்தினை தனியாருக்கு கையளிக்கப்போவதாகவும் இதனால் காலகாலமாக இவ்உப்பளத்தில் வேலை செய்து வந்த மாசியப்பிட்டி, தட்டுவன்கொட்டி, எழுதுமட்டுவாள், கரவெட்டி போன்ற கிராமத்து மக்களுக்கு திரும்பவும் வேலை கிடைப்பதிலுள்ள நிச்சயமின்மை குறித்தும் விசனப்பட்டு ஒரு பதிவு போட்டிருந்தார். அதனை படிக்க கிடைத்தபோது ஏனைய கிராமங்கள் ஆனையிறவுக்கு அயல் கிராமமாக இருக்கும்போது கரவெட்டியிலிருந்து வெகுதூரத்திலிருந்து வந்து அந்த மக்கள் வேலையில் சேர்ந்து கொண்ட வரலாற்றினை நான் பதிவுசெய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டதும் என் நினைவுப் புலவுக்கு வந்து எட்டி நிற்கின்றன. அது வடபுலத்து நிலவுடமைச் சமூகத்தின் எச்சங்களின் நாகரிகமற்ற கரிய பகுதி. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிராக குற்றப்பரம்பரைச் சட்டத்தினை அமுலுக்கு கொண்டு வந்து கள்ளர்சாதியினர் போன்ற ஒடுக்கப்பட்ட பகுதி மக்களை தொடர்ந்தும் ஒடுக்கியபோது அது போன்ற சட்டங்களை இங்குள்ள அதிகாரத்திலிருந்த ஆதிக்க சாதியினர் இங்கேயும் கொண்டு வர விரும்பினர். ஆனால் யாழ்ப்பாணராச்சியத்தில் அங்கம் வகித்த அந்திராசு போன்ற (கரையார) இடைச்சாதியினைச் சேர்ந்த முதலிகளினால் அவை முற்றுப்பெறாமல் போய்விட்டன. ஆனாலும் யாழ்ப்பாணத்து ஆதிக்க மையம் வடபுலத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களை தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி தொடர்ந்தும் ஒடுக்கி வந்தனர். யாழ்ப்பாணத்து தேசவழமைச் சட்டம் இதன் விரிந்த பகுதி என்பது இங்கு கண்கூடு. இலங்கையில் டொனமூர்திட்டத்தின் கீழ் சர்வசன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டபோது சேர்.பொன்.இராமநாதன்  போன்ற சாதிவெறி பிடித்த தலைமைகள் தமிழில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு வாக்குரிமை வழங்கப்படக் கூடாது என எவ்வளவு ஊழிக்கூத்து ஆடினார்கள் என்பதும் எங்களது இருண்ட பக்கங்கள் தான்.

Wednesday, January 04, 2017

துட்டகைமுணுவின் அவதாரம்

- என்.சரவணன் -


சிங்களப் புனைகதை காவியங்களை திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர் நாடகங்களாகவும், மேடை நாடகங்களாகவும் உருவாக்கி ஜனரஞ்சகப்படுத்தி, இனவாத புனைவேற்றி, பரப்பி வரும் போக்கு சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது.

போர் முடிவுற்றதன் பின்னர் அதுவும் கடந்த 3 ஆண்டுகளுக்குள் இந்த போக்கு தீவிரம் பெற்றிருப்பதை பல உதாரணங்களின் மூலம் எடுத்துக் காட்டலாம்.

இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடென்று மீள மீள புனைந்து நிறுவுவது என்பது பேரினவாத நிகழ்ச்சிநிரலின் தலையாய திட்டம். தவிர்க்கமுடியாத வேலைத்திட்டமும் கூட. ஆயுதப் போரின் மூலம் தோற்கடிக்கப்பட்ட ஒரு விடுதலைப் போராட்டத்தை கருத்தியல் ரீதியிலும் தோற்கடிக்கும் தேவை நெடுங்காலமாக இருக்கிறது. போரின் பின்னரும் அந்த தேவை பேரினவாதத்துக்கு எஞ்சியிருக்கிறது. அதை அரச கட்டமைப்பு நேரடியாக செய்ய வேண்டியதில்லை. நிறுவனமயப்பட்ட பேரினவாத அமைப்புமுறை அந்த காரியத்தை செவ்வனே நிறைவேற்றும் வலிமையும், வலிமையான அனுசரணையும் கொண்டிருக்கிறது. இதனை நுகர்வதற்காகவே செயற்கையான “பேரினவாத இரசனை” வேகுஜனமட்டதில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுவே சந்தையையும் உற்பத்தி செய்திருக்கிறது.

“அந்த சந்தை போதுமானதில்லை சிங்களவர்கள் ஆதரவளிக்க வேண்டும், இதனைக் காணவேண்டும், உதவி செய்யவேண்டும், பரப்பவேண்டும் அன்று இந்தியாவில் இருந்து சோழர்கள் படையெடுத்து வந்து நம்மை ஆக்கிரமித்து ஆட்சி செய்தார்கள் ஆனால் இன்றோ இந்தியாவில் இருந்து இந்தி தொலைகாட்சி நாடகங்கள் வாயிலாக நம்மை சுற்றிவளைத்து ஆக்கிரமித்திருக்கிறார்கள். எனவே அதனைக் கைவிடவேண்டும். நமது சொந்த சிங்கள நிகழ்சிகளை மட்டும் பாருங்கள்” என்றார் “கெமுனு மாரஜ” (துட்டகைமுனு மகாராஜா) தொலைக்காட்சித் தொடரின் இயக்குனர் சரித்த அபேசிங்க.

கடந்த சில வருடங்களாக மகாபாரதக் கதைகளும், இராமாயணக் கதைகளும் இந்தி மொழியில் இருந்து சிங்களத்துக்கு மொழிமாற்றப்பட்டு தொடராக காண்பிக்கப்பட்டு வருகிறது. இவற்றின் பாதிப்பே சிங்கள இதிகாசங்களையும் அதுபோன்றே தயாரிக்க எடுத்திருக்கும் முயற்சி.

பன்முக வழிகளில் மகாவம்சத்தையும், துட்டகைமுனு – எல்லாளன் போரையும் பரப்பும் பணிகள் சமீப காலமாக அதிகமாகவே காண முடிகிறது. துட்டகைமுனுவின் இந்த புத்துயிர்ப்பு இன்றைய புதிய அரசியல் அவதாரமாகவும், அஸ்திரமாகவும், வடிவமாகவுமே காண முடிகிறது.

தமிழர்கள் வந்தேறு குடிகள், அன்னியர்கள், கள்ளத் தோணிகள், ஆக்கிரமிப்பாளர்கள், பௌத்த மதத்தை அழித்து இந்து மதத்தை நிறுவியவர்கள். பௌத்த விகாரைகளை அழித்தொழித்தவர்கள் என்றெல்லாம் புனைவது சிங்கள பௌத்த பேரினவாத இருப்புக்கு மிகவும் அவசியமானது. அதனை திரும்பத் திரும்ப பல்வேறு வடிவங்களில் புனைவதும், நிறுவுவதும், நம்பவைப்பதும், வெறுப்புணர்வை ஏற்படுத்துவதும் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்துக்கு பலம் சேர்ப்பவை.

அதுமட்டுமன்றி மாறாக இப்பேற்பட்ட தமிழர்களை எதிர்த்து நின்றவர்கள் சிங்களவர்கள், பௌத்தர்கள், தேச பக்தர்கள், மண்ணின் மைந்தர்கள், மா வீரர்கள், நல்லவர்கள், மனிதாபிமானமுள்ளவர்கள் என்றெல்லாம் இந்த கதைகளின் வாயிலாக புனைவதும், நிறுவுவதும் அவர்களுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது.

Wednesday, December 28, 2016

குதித்த குதியும் ஆடியபாதங்களும்! நினைவில் நிற்கும் நாட்டுக்கூத்து கலைஞர்கள்

- கரவைதாசன் - 

தமிழிலே மேலைத்தேயவரின் வருகையும் அவர்களின் வருகைக்கு பிற்பட்ட புனைகதை (Fiction) முறையும் அறிமுகமாவதற்கு முன்பு வரலாறு, சோதிடம், வைத்தியம், இலக்கியம் என எல்லாம் கவி வடிவிலேயே இருந்திருக்கின்றன. முன்னெல்லாம் சபைகளிலே கவிதையிலேதான் கதைத்தார்கள் என்று  காணக்கிடக்கின்றது. அந்தவகையில் பாடற்கலையும் ஆடற்கலையும் இணைந்து கூத்து அல்லது நாடகம் என்ற வடிவம் மிகச் சிறப்பான ஓர் இடத்தில் அமைந்திருந்ததாக அறியக்கூடியதாக விருக்கின்றது. பழம்பெரும் நூல்களான சாத்தனாரின் கூத்த நூலிலும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திலும், பரதருடைய நாட்டியசாஸ்திரத்திலும் நாடகம் பற்றிய பல செய்திகள் காணக்கிடக்கின்றன. சிந்து, தரு, ஓடம் தண்டகம், விருத்தம், பத்யம், சுலோகம், ஓரடிதரு, ஓரடிபதம் எனப் பல்வேறு இசைவடிவங்களை இசைநாடகங்களில் கையாண்டதாகக் காணக்கிடக்கின்றது. 

கூத்து என்பது இசையோடு இணைந்த ஆட்டமாகும். ஈழத்திலே தமிழர் பாரம்பாரியமாக வாழ்ந்து வரும் பகுதிகளிலே கூத்து பல்நெடும் காலமாக ஆடப்பட்டு வந்திருக்கின்றது. இவை வடமோடி, தென்மோடி, வட்டக்களாரி, காத்தான்கூத்து, மகுடிக்கூத்து, வீரபத்திரா; ஆட்டம், காமன்கூத்து எனப்பல வகைப்படும். உண்மையில் கூத்து தமிழர்கள் வாழ்வில் எப்போதும் சிறப்பான ஓர் இடத்தில் அமைந்திருந்ததாக அறியக்கூடியதாகவிருக்கின்றது. 

ஆனால் கிராமங்கள் நகரங்களாகியபோதும், பார்சிய வடிவிலான ஸ்பெசல் நாடகமுறையின் வருகையாலும், சினிமாவின் வருகையாலும் கிராமத்தினிலேயே இக்கூத்து வடிவம் வித்தூண்டி நின்றபோது நகரத்து மக்களால் இக்கூத்து வடிவம் நாட்டுக்கூத்து என அழைக்கப்பட்டது. 

Monday, November 21, 2016

"எங்களை கொல்வதை எப்போது நிறுத்தப்போகிறீர்கள் ?" கக்கூஸ் என்றொரு ஆவணப்படம்!

மதுரையைச் சேர்ந்த சமூக-அரசியல் செயற்பாட்டாளரான திவ்யபாரதி, மலக்குழியில் இறந்தி உயிர்விட்ட தொழிலாளிகள் குறித்து  ‘கக்கூஸ்’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.  மக்களிடம் நிதி பெறப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் படமாக்கப்பட்டது இந்த ஆவணப்படம்.

“நானும் ஒளிப்பதிவாளர்களாக குமார், கோபால் என மூவருமாக மட்டுமே தமிழகம் முழுக்க சுற்றி இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறோம். நண்பர்கள், தோழர்கள், முகநூல் மூலமாக நிதி திரட்டினோம். நிறைய கடன் வாங்கியிருக்கிறேன். என்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்திருக்கிறேன். ஒரு ஊருக்குப் போகும்போது குறைந்த பட்சம் ரூ. 3 ஆயிரமாவது செலவாகும்.  இத்தனைக்கும் ஒரு நண்பர் கேமராவையும் இன்னொரு நண்பர் மைக்கையும் ஆவணப்படம் முடியும்வரை பயன்படுத்தக் கொடுத்தார்கள்.

படப்பிடிப்பில் குழுவினருடன் திவ்யபாரதி...

மதுரை, தலப்பாகட்டு, நெய்வேலி போன்ற இடங்களில் நடந்த ஒரு சில மரணங்கள் மட்டுமே ஊடகங்களில் பதிவாயுள்ளன.  அக்டோபரில் தொடங்கி இதுவரைக்கும் எனக்குத் தெரிந்து 16 மலக்குழி மரணங்கள்.  மறைக்கப்பட்ட மரணங்கள் இன்னும் இருக்கலாம். ஒவ்வொரு மரணத்தின் பின்னணியையும் படமாக்கும் பொருட்டு 15 மாவட்டங்களுக்குப் பயணமானோம். மலக்குழி இறப்புகளை மட்டுமல்லாது, துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் ஆவணப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. அதையும் செய்திருக்கிறோம்.”

நன்றி: The times tamil 
‘கக்கூஸ்’ ஆவணப்பட டிரெயிலர் இங்கே:

Monday, October 17, 2016

மல்லிகை தொடர்ந்தும் வரும்

ல்லிகை சஞ்சிகை வராத காலத்தில் கூட மல்லிகை ஆசிரியர் என்று நெஞ்சை நிமிர்த்தி பெருமை கொள்கிறேன் என மல்லிகை சஞ்சிகையின் ஆசிரியர் டொமினிக் ஜீவா தெரிவித்தார்.

மேலும் நான் இல்லாத காலத்திலும் மல்லிகை வரும், மணம் வீசும். தமிழ்பேசும் இம்மண்ணில் மிகவும் அதிகமாக நேசிக்கப்பட்ட சஞ்சிகை மல்லிகை ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் கலை இயக்கியப் பெருமன்றத்தின் ஏற்பாட்டில் நானிலம் இணையத்தின் ஊடக அனுசரனையில் ‘ஜீவாவுடன் ஓரு மாலைப் பொழுது’ நிகழ்வு  16.10.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி தொடக்கம் 6 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்…
இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு யாழ்ப்பாணத்தில் இருந்த காலகட்டத்தில் திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்களில் இருந்து வந்திருந்த தமிழ்இன சிப்பாய்கள் மல்லிகை சஞ்சிகையை 30 சதம் கொடுத்து வாங்கி வாசித்தார்கள்.

Saturday, October 15, 2016

பாலியல் லஞ்சம் கொடுத்த மனைவியின் உண்மைக் கதை


பிரசன்ன விதானகே அவர்களின் உருவாக்கத்தில்  "silence in tha courts" உசாவிய நிஹண்டாய்  " நீதிமன்றத்தில் அமைதி " என்ற சிங்கள  திரைப்படம் திரையிடலுக்கான  அனுமதி மறுப்பினை  நீதி மன்றத்திலிருந்து  எதிர்நோக்கியுள்ளது. இலங்கையின் நீதித்துறையில்   இருள் படிந்த  சம்பவங்களை  ராவயின் முன்னாள் ஆசிரியர்  விக்டர் ஐவன்  அவர்கள் தனது நொனிமி அரகலய  என்ற  நூலில்  விரிவாக எழுதியிருந்தார் .  அதில்  லெனின்  ரத்நாயக  என்ற முன்னாள் நீதிபதி  மஹவ நீதி மன்றத்தில்  கடைமை ஆற்றிய காலத்தில்  ஒரு ஏழைப் பெண்ணிடம் கட்டாயத்தின் பேரில்  பாலியல் லஞ்சம்  பெற்றதினை  குறிப்பிட்டுள்ளார் .  இந்த  உண்மையினை அடிப்படையாக வைத்து  எடுக்கப்பட்ட  திரைப்படமே  தடையை  எதிர்கொண்டுள்ளது.

Sunday, October 09, 2016

தீண்டப்படாத முத்தம் - கொடூரத்தை மீண்டும் உரத்து ஒலித்து நிற்கின்றது.

-ந.சுசீந்திரன்-
சுகிர்தராணியின் „தீண்டப்படாத முத்தம்“ என்ற கவிதைத் தொகுப்பில் முதலாவது இடம்பெறும் கவிதை –விடுதலையின் பதாகை. 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி மகாராஷ்டிராவில் நிகழ்ந்த „கயர்லாஞ்சிப் படுகொலைகள்“ நினைவாக இக் கவிதை எழுதப்பட்டிருகின்றது. மிக நன்றாக எழுதப்பட்டிருக்கும் இவ் வரலாற்றுப் பதிவு, கழிந்துவிட்ட பத்து வருடங்களின் பின்னரும் „கயர்லாஞ்சிப் படுகொலையின் கொடூரத்தை மீண்டும் உரத்து ஒலித்து நிற்கின்றது.
அண்ணல் அம்பேத்கார் அவர்களின் ‚சாதி ஒழிப்பு‘ என்ற நூலின் விளக்கங்களும் விமர்சனங்களும் கொண்ட நவீன பதிப்புக்கு ”டாக்டரும் புனிதரும்” என்ற தலைப்பில் அருந்ததி ராய் அவர்களால் மிக நீண்ட முன்னுரை ( அடுத்த வருடம் இது ஒரு தனி நூலாகவும் வெளியிடப்படுகின்றது.) எழுதப்பட்டிருக்கின்றது. இந் நூல் பற்றிய ஓர் அறிமுகக் கூட்டத்தில் இதே தலைப்பில் அருந்ததி ராய் அவர்கள் சிறப்புரை யாற்றும்போது கயர்லாஞ்சிப் படுகொலை பற்றி மிக விபரமாகக் குறிப்பிடுகின்றார். எவ்வாறு கயர்லாஞ்சிப் படுகொலை இன்றைய சந்தை-ஜனநாயக உலகால் கவனங்கொள்ளப்படாமல் விடப்பட்டது என்பதை பாக்கிஸ்தான் நாட்டின் மாணவி மலலாவிற்கு கிடைத்த அங்கீகாரத்துடன் ஒப்பிட்டு, இன்றும் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்திய சாதி அமைப்பின் குரூரத்தையும் கொடூரத்தையும் விளக்கியுள்ளார்.
‚விடுதலையின் பதாகை‘ என்ற தலைப்பிடப்பட்டிருக்கும் இக் கவிதை ஜெர்மன் மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் இக் கவிதையின் மூலத்தில் காணப்படும் சுகிர்தராணியின் படிமங்களையும் சொல்லாட்சியையும் இம் மொழிபெயர்ப்பில் காணமுடியவில்லை. எடுத்துக் காட்டாக:
“… மூங்கில் கூடையில் வெளிச்சம் வாரப்பட்ட
வீட்டின் முற்றத்தில்
நிர்வாணமாய்க் கிடத்தப்பட்டிருக்கிறேன்
கால்களும் கட்டப்பட்டிருக்கின்றன …”

Monday, July 25, 2016

கபாலி - வரலாற்றினை மாற்றும் உரிமை ரஞ்சித்துக்கு இல்லை

-முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன்


கபாலி படத்தில் விவேகானந்தர், அம்பேத்கர், சேகுவேரா, கார்ல் மார்க்ஸ்,பாப் மார்லி போட்டோக்கள் எல்லாம் செட் பிராப்பர்ட்டியாக வருகிறது ஆனால் இவர்களில் எவரும் மலேஷிய தோட்டத்தொழிலாளர்களுக்காக போராடியவர்கள் இல்லை. ஆனால் செட்பிராப்பர்ட்டியில் ஒருவர் படம் இல்லை அது பெரியார்... ஆனால் வேடிக்கை மலேஷிய தோட்டத் தொழிலாளர்களுக்காக போராடியது தந்தை பெரியாரே!

கபாலி திரைப்படம் ஒடுக்கப்பட்டவர்களுக்கானது என்றும், அடிமைப்படுத்தப்பட்ட சமூகத்தின் போராட்டங்களை பதிவுசெய்திருக்கும் ஒரு அரும்பெரும் படைப்பு என்றும் எங்கும் போற்றப்பட்டுவருகிறது. ஒரு சினிமாவாக மட்டுமே கபாலியை முன்னிலைப்படுத்தும் வரையில், அதில் நாம் எந்தவொரு அரசியல் காரணங்களையும் கற்பிக்கத் தேவையில்லை. ஆனால், கபாலி திரைப்படம் இதிலிருந்து வேறுபட்டது. விவேகானந்தர், அம்பேத்கர், சேகுவேரா, கார்ல் மார்க்ஸ் ஏன், பாப் மார்லியின் படத்தைக்கூட வைத்திருக்கிறார்கள் படத்தில். இவற்றையெல்லாம் மனதில்கொண்டு அடுத்துவரும் கட்டுரையைப் படியுங்கள்.

1833ஆம் ஆண்டு, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அடிமை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, பல்லாயிரக்கணக்கான ஆப்பிரிக்க நாட்டு அடிமைகள் விடுதலை பெற்றனர். ஆனால், ஆப்பிரிக்க அடிமைகள் உதறிச்சென்ற அடிமைச் சங்கிலியில் பூட்டப்படுவதற்குப் பொருத்தமானவர்களாக, உலக வல்லாதிக்கங்கள் தேர்வுசெய்த இனம் தமிழினம். அன்று தொட்டு, ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்க நாடுகளின் கரும்பு வயல்கள், ஈயச் சுரங்கங்கள், தேயிலை, ரப்பர்த் தோட்டங்களில் தமிழர்களை நாற்றாக நடும் பணி இருநூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்து நடைபெற்றது. இவ்வாறு தமிழர்கள் லட்சக்கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகளுள் மலேசியாவும் ஒன்று. இரப்பர்த் தோட்டங்களில், கூலிகளாகத் திரிந்த இத்தமிழரின் வரலாறு கண்ணில் நீர் கசிய வைப்பதாகும்.

Monday, July 18, 2016

இணுவையூர் சக்திதாசன் எழுதிய ‘தொட்டுவிடும் தூரத்தில்’

புலம்பெயர்ந்து டென்மார்க் தேசத்தில் வசிக்கும் இணுவையூர் சக்திதாசன் எழுதிய ‘தொட்டுவிடும் தூரத்தில்’ கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது, 17.06.2016 ஞாயிற்றுக் கிழமை, பிற்பகல் மூன்று மணிக்கு வவுனியா நகரில் அமைந்துள்ள குடியிருப்பு பூங்காவில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு பண்டிதர் வீ.பிரதீபன் தலைமை தாங்கினார். தமிழ்மொழி வாழ்த்து இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து வரவேற்புரையினை ஜெசிதா ஆனந்தமூர்த்தி வழங்கினார்.

ஆசியுரையினை தமிழ்மணி அகளங்கன் அவர்கள் வழங்கினார். வாழ்த்துரையினை தமிழ்மணி மேழிக்குமரன் அவர்கள் வழங்கினார். நூலின் அறிமுக உரையினை கவிஞர் வே.முல்லைத்தீபன் நிகழ்த்தினார்.

நூலின் வெளியீட்டு நிகழ்வுகளை செல்லமுத்து வெளியீட்டகம் இயக்குநர் யோ.புரட்சி நெறிப்படுத்தி வழங்கினார்.

நூலினை திரு.திருமதி இணுவையூர் சக்திதாசன் ஆகியோர் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை வவுனியா அறிவாலயம் புத்தகசாலை உரிமையாளர் ஜெ.கோபிநந்தன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் உரையாடல்கள்



தமிழ்ச் சூழலில் காத்திரமான கலந்துரையாடல்கட்கும் அறிவுப்பகிர்வுக்குமான களமாக தேசிய கலை இலக்கியப் பேரவை பௌர்ணமி தோறும் நிகழ்த்தும் 'உரையாடல்கள்' நிகழ்வின் இம்மாத நிகழ்வு'பிரிக்ஸிட்டும் இலங்கையும்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றமும் இலங்கையில் அதன் தாக்கமும்;' என்ற தலைப்பில் நிகழவிருக்கிறது

காலம்: செவ்வாய்க்கிழமை 19ம் திகதி மாலை 05.00 மணிக்கு
இடம் : 121. ஹம்டன் லேன், வெள்ளவத்தையில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடம். 

தயாபரன் ரெஷாங்கன் நெறியாள்கை செய்ய கருத்தாளர்களாக சுதாகரன் பேரம்பலமும் அனோஜன் திருக்கேதிஸ்வரநாதனும் பங்குபற்றுகின்றனர்.

பொதுவெளியில் பயனுள்ள உரையாடல்கள் நிகழ்தற்கான களத்தை உருவாக்கும் முயற்சியில் பங்கேற்கவும் கலந்துரையாடவும், கருத்துப் பரிமாறவும் தேசிய கலை இலக்கியப் பேரவை அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.   

Sunday, July 17, 2016

கன்தீல் பலூச் அவரது சகோதரனினால் "கெளரவக் கொலை" செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானிய Social Media ஸ்டாரான கன்தீல் பலூச் அவரது சகோதரனினால் "கெளரவக் கொலை" செய்யப்பட்டுள்ளார். தமது சமூக, கலாச்சார, மத நெறிமுறைகளை "மீறும்" பெண்களை குடும்ப கெளரவத்தை பாதுகாத்தல் என்ற பெயரில் கொலை செய்வது இறுக்கமான கட்டமைப்பு கொண்ட, சனாதன கீழைத்தைய சமூகங்களில் ஒரு வழமையாகவே இருந்து வருகிறது. நாம் வன்மையாக கண்டிக்கத்தக்க, இழித்துரைத்து அழித்தொழிக்கப்பட வேண்டிய மனிதாயமற்ற பயங்கரவாத பண்பாடு இது.

பாகிஸ்தான் போன்ற நாடுகளின் சமூக அமைப்புகள் மிகவும் பழமைவாத தன்மை கொண்டவை. பின்தங்கிய சமூக மதிப்பீடுகளை கொண்டவை. இந்தியாவில் காலனித்துவத்துக்கு எதிரான Anti Thesis போன்று தேசியம் உருப் பெற்றது போன்று (இது வரலாற்றாய்வாளர் பிபின் சந்திராவின் கருத்து) பாகிஸ்தானில் முற்போக்கான நவீனத்துவ பண்பாடு உருப் பெறவில்லை. காந்தி, நேரு, ராஜாராம் மோகன்ராய், அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களும் பாகிஸ்தானில் உருவாகவில்லை. இமாம் அபுல் அஃலா மெளதூதி போன்றவர்களின் செயல்வாதங்கள் பாகிஸ்தானின் மைய நீரோட்டத்தை விட்டு விலகி விளிம்பில் தள்ளப்பட்டே இருந்தன. ஆக பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடாக இருந்தும் இஸ்லாத்தின் அகிலத்துவ மதிப்பீடுகளிலிருந்து உருவான சமூக செயல்திட்டம் பாகிஸ்தான் சமூகத்தில் ஆளப் பதியவில்லை. அஹ்லே ஹதீத் ஸலபிகளும், பிரேலவி சூபிகளும், தேவ்பந்திகளும் தான் பாகிஸ்தான் மைய நீரோட்டத்தை வழிநடாத்தும் தீர்மானகரமான சக்திகள். இவை Dogmatic ஆனவை. Literal Interpretation களை தாண்டி வெளிவர முடியாதவை. எனவே இந்த சிந்தனை போக்குகளினால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒரு போதுமே தடுத்து நிறுத்த முடியாது. காரணம், இவர்களின் புனித பிரதிகளின் மீதான வாக்கியவாத அணுகுமுறை ஒரு போதுமே பெண்களை சமூக களத்தில் ஆண்களுக்கு நிகராக நடை போட ஒவ்வாதவை. பிற்போக்கான, தந்தை வழி சமூக மதிப்பீட்டில் ஆழ வேர்விட்டு நின்றிருக்கும் பாகிஸ்தானிய சமூகத்தில் அல் குர்ஆன் முன் வைக்கும் பால் சமத்துவம் மற்றும் சமூக நீதி இரண்டுமே சரி வர உருப் பெறவில்லை என்பதே உண்மை. ஸெய்யித் குத்ப் கூறுவது போல இவை இஸ்லாத்திற்கு முற்பட்ட அநாகரீக காலகட்டத்தை ஒத்த "ஜாஹிலிய்யத்" சமூகங்களே. இது சட்ட ரீதியான தீர்ப்பல்ல, மாறாக இதுவொரு Value Based அடிப்படையில் உலகியல் விவகாரங்களை அணுகிடும் பார்வையை கொண்ட அணுகுமுறை.

Sunday, July 10, 2016

இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
வடமாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்படும் நியமனங்களில் அரசியல்வாதிகளின் தேவையற்ற தலையீடுகளும் பிரதேசவாதங்களும் செல்வாக்கு செலுத்துவதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கிளி/சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் அதிபர் நியமனம் வழங்கப்பட்டிருந்த பெருமாள் கணேசனுக்கு - கல்வியமைச்சின் செயலாளருடைய கடிதத்தின் பிரகாரம் கலைமகள் வித்தியாலயத்தில் கடந்த 07.07.2016 அன்று கடமையைப் பொறுப்பேற்கவிருந்த நிலையில் - அவருக்கு தொலைபேசி மூலமாக ஒரு இடைநிறுத்த அறிவித்தல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மூலமாக  வந்திருப்பதாக - அவை தொடர்பான செய்திகளும் தகவல்களும் ஏற்கனவே ஊடகங்களிலும் பரவலாக வந்துள்ளன.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட அநீதி கண்டனத்துக்குரியது.

 இத்தகைய செயற்பாடுகள் வடமாகாண கல்வி அமைச்சின் முறைகேடுகளின் மற்றுமொரு பரிமாணமாகவே பார்க்கப்படவேண்டியுள்ளது.  இந்தத் தவறான - முறையற்ற நடவடிக்கைகளால், சமூகத்தில் பகையும் மோதலும் அணிபிரிதல்களும் உண்டாகக்கூடிய பொறுப்பற்ற செயற்பாடுகளில் வடமாகாண கல்வியமைச்சு ஈடுபட எத்தனித்துள்ளதாகவே பார்க்கவேண்டியுள்ளது.

அரசியல் அதிகாரங்கள் தேவையற்ற விதமாக கல்வியில் குழப்பங்களை உருவாக்க முயலுமாயின் - அது வடமாகாண கல்வியில் இனியும் மீளமுடியாத பின்னடைவை உருவாக்கிவிடும்.
எனவே - இவ்விடயத்தில் வடமாகாண முதலமைச்சர் தலையிட்டு - பாதிக்கப்பட்ட அதிபருக்கு நீதியான தீர்வை வழங்கவேண்டும்.

ஜோசப் ஸ்ராலின்
பொதுச்செயலாளர்,
இலங்கை ஆசிரியர் சங்கம்.

Sunday, April 24, 2016

இருள் இன்னும் முற்றாக விலகவில்லை

(இது புனைகதை அன்று உண்மை)
இக்கதை நிகழ்ந்த காலம் 2007
-சி மௌனகுரு -


சந்திரகுப்த தேனுவர இலங்கையின் நவீன பாணி ஓவியர்களுள் புகழ் பெற்ற ஒருவர். தனக்கென ஓவியத்தில் ஒரு பாணியைத் தோற்றுவித்ததுடன் தனக்கென ஒரு மாணவ பரம்பரையையும் கொண்டவர். சிங்கள மக்கள் மத்தியில் கௌரவத்துடன் கணிக்கப்படுவர். கொழும்பிலுள்ள கட்புல அவைக் காற்றுக் கலைப் பல்கலைக்கழகத்தில் (University of Visual and Performing Arts ) கட்புலக்கலைத் துறைத் தலைவர் நெருக்கமான என் நண்பர்களுள் ஒருவர்.விடுமுறையைக் கழிக்க அவர் தன் மனைவி குமுதினியையும் ஒன்பது வயது மகனான சாருதத்தனையும் மட்டக்களப்பிற்கு அனுப்பி வைத்தார். “ஆட்கடத்தல்கள், கொலைகள், அடக்குமுறைகள் மலிந்திருக்கும் இடம் என்றும் ஊடகங்களால் வர்ணிகக்கப்படும் மட்டக்களப்புக்கு இப்போது போகத்தான் வேண்டுமா” என்ற கொழும்புச் சிங்கள நண்பர்களின் பயமுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாது ஒரு அதிகாலையில் மட்டக்களப்பு ரெயிலில் தன் மகனுடன் எம் வீட்டுக்கு வந்தார் குமுதினி. இரண்டு நாட்களும் மிக அருமையாகக் கழிந்தன. என் மனைவி சித்திரலேகாவும் நானும் அவர்களை மட்டக்களப்பின் இயற்கை வளம் நிறைந்த இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றோம்.மட்டக்களப்பு வாவி (ஆறு) கடலோடு கலக்கும் கழிமுகமான முகத்துவாரம், அதனருகே நிறைந்து கிடந்த மிருதுவான வெண்மணல், எழுவான் கரைத் தீவும் அதன் கடல் அழகும், டச்சுபாரின் அழகிய கடற்கரை, மட்டக்களப்பு வாவியின் இருபுறமும் மதாளித்து வளர்ந்து காற்றிலே அசைந்து நின்ற இளம் தென்னைகள் கண்ணாப் பத்தைகள்,

Thursday, April 07, 2016

அமரர் சி.சண்முகநாதன்!

-மா.சித்திவிநாயகம்-

மாவோயிஸ்டுகள் வர்க்கம் பற்றி மாத்திரம் சிந்திக்கவில்லை; தேசியம் குறித்தும் சிந்தித்தார்கள் என்பதற்கு தோழர் சி.சண்முகநாதன் மகத்தான உதாரணம்


நெடுந்தீவு தந்த தன்னேரில்லா முற்போக்குச் சிந்தையாளர் தோழர் சி. சண்முகநாதன் அவர்கள் இன்று கனடாவில் இயற்கையெய்தினார் என்கின்ற துயரச் செய்தியை துயரத்தோடு பதிவிடுகின்றேன்.தன் இளவயது முதல் சக மனிதர்களின் நலனுக்காய் குரல்கொடுத்து மக்களை மலினப்படுத்தும் அனைத்து அடக்கு முறைகளுக்கும் எதிராகப் போராடி வந்த கம்யூனிசச் சிந்தாந்தவாதிகளுள் முதன்மையானவர் இவர்.சாதியத்தின் கொடூர அடக்குமுறைக்கு ஆட்பட்டிருந்த குடாநாட்டுத் தமிழர்களின் வாழ்வில் தீண்டாமை ஒழிப்பு,பெண்ணுரிமை போன்றவற்றின் முக்கியத்துவங்களைத் தொடர்ந்து பேசியவர் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டவர் அதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் போராடியவர். அண்மையில்தான் அவர் கனடாவிற்குப் புலம் பெயர்ந்திருந்தார். மிகச் சிறந்த மானிட நேயனை இழந்த துயர் நெஞ்சத்தைத் தின்கின்றது .

ஒப்பாரி புலம்பல் ஓயாத அழுகை ஒலி என
எப்போதும் இழவே எம் தமிழர் விதி எனினும் 
பத்தோடு ஒன்றா இவர் பாதியிலே போவதற்கு 
வித்தல்லோ ஊரை உறவுகளை 
வேரை விழுதுகளை ஒன்றிணைக்கப் பாடுபட்ட 
சொத்தல்லோ 
வல்ல உழைப்பால் வளமார் தமிழினத்தை 
வாழவைக்கப் பாடுபட்ட நல்ல மனிதரை 



-நந்தினி சேவியர்-  அனுபவக்குறிப்பு

1971 இல் யாழ் / தொழில் நுட்பக்கல்லூரியில் நான் வணிகத்துறையில் ஒரு மாணவன். எனது சகமாணவன் நெடுந்தீவில் இருந்து வந்த சண்முகநாதன்.!.
இடதுசாரி சிந்தனயால் நாம் இருவரும் ஒன்று பட்டோம்.
அம் முறை தொழில் நுட்பக்கல்லூரி வணிக மாணவர் மன்ற தேர்தலில் தலைவர் செயலாளர், பொருளாளர் பதவிக்கான வாக்கெடுப்பு.. உடனடியாக ஆட்களின் பெயர் பிரேரித்து வழி மொழியப்பட்டு கைகள் உயர்த்தி வாக்கு எண்ணப்படும் தலைவர் பொருளார் பதவிகளுக்கு பெயர்கள் ஏகமனதாகத் தெரிவிக்கப் பட்டுவிட்டன.
நான் எதிர்பாராதவண்ணம் சண்முகநாதன்.!எனது பெயரை செயலர் பதவிக்கு முன் மொழிந்து விட்டான். “நயினை நாக.பஞ்சாட்சரம்” என்னும் தமிழ் அபிமானியை செயலாளராக்குவதாக உள்ளூர தீர்மானிக்கப் பட்டிருந்தது அதிலும் முதலாண்டு மாணவர்கள் தேர்தலில் நிற்கக் கூடாது என்கின்ற எழுதாச்சட்டமும் இருந்து..
எனது பெயர் முன் மொழியப்பட்டு பத்து நிமிடங்கள் வழி மொழிய யாரும் முன் வரவில்லை. அப்போது நான் ஈழநாடு நாவல் போட்டியில் பரிசு பெற்று எனது வகுப்பு மாணவர்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தேன். சடுதிஎன எனது வகுப்பு மாணவி ஒருவர் (ராஜிவி) எழுந்து என்னை வழி மொழிந்தார்....வாக்கெடுப்பு நடந்தது.
190 வாக்குகள் எனக்கும் 10 வாக்குகள் நயினை நாக.பஞ்சாட்சரம் அவர்களுக்கும் கிடைத்தது.(முழு பெண் வாக்குகளுமேஎனக்குத்தான் கிடைத்தது எனது அபிமானத்தினால் அல்ல ராஜீவிக்காக கிடைத்தது ) . முடிவை அறிவித்ததும்.....வணிகப் பகுதி பொறுப்பாளர் ஒரு வேண்டுகோளை என்னிடம் பகிரங்கமாக விடுத்தார்.
“முதலாம் ஆண்டு மாணவர்கள் இந்த பதவிகளுக்கு போட்டியிடக்கூடாது
என்கிற எழுதா விதிக்கமைய “சேவியர்” இபோட்டியில் இருந்து விலகி மற்றைய போட்டியாளருக்கு இடம் வழங்குமாறு கேட்டுகொள்ளுகிறேன்..”
ஒலிவாங்கி என்னிடம் தரப்பட்டது. நான் பேசத்தொடங்கினேன்.....
அனைவருக்கும் வணக்கம் ! உண்மையில் இந்த பதவிக்கு போட்டியிடும் எண்ணம் எனக்கு கிஞ்சித்தும் இருக்கவில்லை. நயினை நாக.பஞ்சாட்சரம்..என்து நல்ல நண்பர். வணிகப் பகுதி பொறுப்பாளரின் கருத்து நியாயமானதுதான்......அனால் இந்தப் பதவிக்கு என்னை முன் மொழிந்த சண்முகநாதனையும், வழி மொழிந்த ராஜீவியையும்....எனக்கு வாக்களித்த 190 சகோதர சகோதரிகளையும் ஒரு கணம் நினைத்துப் பார்கிறேன்...நான் வாபஸ் பெறுவதன் மூலம் அவர்களுக்கு ஒரு தலைக் குனிவை ஏற்படுத்த நான் விரும்பவில்லை..எனவே இப்பதவியை நான் ஏற்றுக்கொண்டு செயல்ப் படுவேன் என்றேன்.
கைதட்டலால் மண்டபம் அதிர்ந்தது.
பின்நாட்களில் . வணிக மன்ற செயல் பாடுகளில் நான் பலவித நெருக்கடிகளை அனுபவித்தேன் சண்முகநாதன் எனக்கு உறுதுணையாக இருந்தான்.. இன்று அவனது மரணச் செய்தி எனக்குக பழைய நினைவை கிளறி விட்டது.
அவனும் நானும் இருவேறு அணிகளாக அரசியலில் இறங்கினோம்...மிக நீண்ட பிரிவு..... அவன் எங்கோ.....நான் எங்கோ....இன்று தான் அவன் கனடாவில் வாழ்ந்தான் இறந்தான் என அறிகிறேன்..
.கனடாவில் எனது “நந்தினி சேவியர் படைப்புகள்” நூலை அவன் வாங்கி இருக்கலாம்..வாசித்தும் இருக்கலாம் ...
அவனுக்கு எனது மௌன அஞ்சலி.! அவனது குடும்பத்தாருக்கு என்ஆழ்ந்த அனுதாபங்கள்!!