Tuesday, January 31, 2017

“இரண்டாம் இடம்” (மொழியெர்ப்பு நாவல்)

-ரவீந்திரன்.பா-
வரலாறு முக்கியம் அமைச்சரே !
* * ******************************
குறிப்பு: 29.01.2017 அன்று சூரிச் "வாசிப்பும் உரையாடலும்" நிகழ்ச்சியில் உரையாடலுக்காக "இரண்டாம் இடம்" நூல் எடுக்கப்பட்டது. தோழர் யோகராஜா வினால் இந் நூல் இன்னொரு கோணத்தில் விரிவாக அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து எல்லோரினதும் உற்சாகமான உரையாடலாக விரிந்தது. அதில் நான் வைத்த கருத்துகளை கொஞ்சம் விரிவாக செழுமைப்படுத்தி இங்கு பதிவிடுகிறேன்.

மலையாள எழுத்தாளர் வாசுதேசன் நாயர் அவர்களால் எழுதப்பட்டது. குறிஞ்சிவேலன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்
மகாபாரதக் கதையின் மீதான ஓர் மறுவாசிப்பாக உருவாகிய நாவல் “இரண்டாம் இடம்”. மகாபாரதத்தில் அதன் கதைமாந்தர்கள் மீது சூட்டப்பட்ட ஒளிவட்டங்கள், புனிதங்கள் மனிதஜீவியிடமிருந்து மிதப்பாக அவர்களை நிலைநிறுத்துகிறது. இந்தப் புனிதங்களையும் ஒளிவட்டங்களையும் சிதைத்து அவர்களின் மனிதப் பாத்திரத்தை வெளிக்கொணருகிற வேலையை “இரண்டாம் இடம்” நாவல் செய்கிறது. எல்லோரும் தவறுகளோடும் சரிகளோடும் இயங்குகிற மனிதத் தளத்தில் அவர்கள் காண்பிக்கப்படுகிறார்கள்.
கிருஸ்ணன், கர்ணன், தர்மன், குந்தி... என எல்லோரினது பிம்பங்களும் மனிதக் கட்டமைப்புக்குள் இறக்கிவைக்கப்படுகிறது.
திரௌபதையின் துகிலை துச்சாதனன் உரிகிறபோது ஈஸ்ட்மென் கலரில் சீலைகள் படையெடுத்துவந்து அவன் களைத்து விழுந்ததாய், கிருஸ்ணனின் சீலைவிடலை கண்டு நிம்மதிகொண்ட வாசக மனதுக்கு மாதவிடாயுடன் இரத்தம் ஒழுக அவளது ஒற்றைச் சீலையை துச்சாதனன் இழுத்துக்கொண்டபோது ஏமாற்றமாய் இருத்தல் கூடும். சரி..ஒரு விஜய் ஒரு ரஜனி புயலாய் வருவதுபோல் வீமன் களத்தில் இறங்கமாட்டானா என நாசமாய்ப்போன இன்னொரு மனசு எதிர்பார்க்கவும்கூடும். எதுஎப்படியோ கிருஸ்ணனின் புனித பிம்பம் காணாமலே போய்விடுகிறது.

பாரதப் போரின் வெற்றிக்கு மையமானவனாக பீமன் நிலைநிறுத்தப்படுகிறான். எதிர்பார்ப்புகள் அற்றவன். மற்றவர்களின் திறமைகளை அங்கீகரித்து நடப்பவன். கடைசியில் சொர்க்கத்தை நோக்கிப் போகிற பாண்டவர்கள் அதை அடைவதானால் திரும்பிப் பார்க்காமல் நடந்து போய்க்கொண்டு இருக்க வேண்டும் என்ற நியதி அவனுக்கு பொருட்டாக இல்லாமல் போகிறது. அவன் பின்னால்வந்த திரௌபதையின் அலறல் சத்தம் கேட்டு திரும்பிவிடுகிறான். அவளிடம் சென்று ஆதரவவாக நடந்துகொள்கிறான். சொர்க்கத்தை புறந்தள்ளுகிற அளவுக்குஅவனது மனிதாபிமானம் இருக்கிறது. அவன் மல்யுத்த வீரன் மட்டுமல்ல வில்வித்தையிலும் சிறந்து விளங்குகிறான். துரியோதனன் துச்சாதனன் எல்லோரையும் அவன்தான் கொல்கிறான். அந்த வீரனின் பிறப்பு அதன் சாதியப் பின்னணிதான் மகாபாரத கதையில் அவனை இரண்டாம் இடத்துக்கு தள்ளிவிடுகிறது.
குந்தியின் கணவனான பாண்டு ஆண்மையற்றவன். ஆனால் குந்திக்கு பிள்ளைகள் உண்டு. குந்தியின் மூத்த பிள்ளை கர்ணன் ஒரு தேரோட்டிக்கு பிறந்தவன் (சூரிய பகவானுக்கல்ல). யுதிர்ஸ்டன் (தர்மன்) விதுரனின் மகனாக பிறந்தவன் (எமதர்மனுக்கல்ல). பீமன் ஒரு அரக்கர்குல பலம்பொருந்திய உடற்கட்டுடைய அழகனுக்கு பிறந்த பிள்ளை. (வாயுபகவானுக்கல்ல) அர்ச்சனன் ஒரு வில்லாளிக்கு பிறந்தவன் (தேவர்குலத்தவனான இந்திரனுக்கல்ல). சத்திரியர்களே அரசாட்சி புரிய தகுதியுள்ளவர்கள் என்பதால் இந்த உண்மைகள் எல்லாம் குந்தியால் மறைக்கப்படுகிறது.
கர்ணனின் (ஒருமுறை மட்டும் பாவிப்பதாக உறுதிகொடுத்திருந்த) நாகாஸ்திரம் -பீமனின் முதல் அரக்கர்குல மனைவிக்கு பிறந்து காட்டில் வளர்ந்த பிள்ளை- கடோற்கஜன் மீதே பாவிக்கப்படுகிறது. கடவுள்தன்மை வாய்ந்தவனாக மகாபாரதம் புனிதப்படுத்தி வைத்திருக்கும் கிருஸ்ணனின் சூழ்ச்சியால்தான் கடோற்கஜன் கொல்லப்படுகிறான். போரில் கர்ணன் அருச்சுனனோடு கடுமையாக போர்புரிந்து கொண்டிருந்தபோது (பீமனைப் போன்றே பலசாலியான) கடோற்கஜனை கர்ணனோடு போர்புரிய இடம் மாற்றிவிடுகிறான் கிருஸ்ணன். கடோற்கஜனை இலகுவில் தோற்கடிக்க முடியாத கர்ணன் அவன் மீது நாகாஸ்திரத்தை ஏவுகிறான். அவன் இறக்கிறான். இந்தக் கவலையில் பீமன் அருச்சுனன் உட்பட எல்லோரும் துக்கம் தோய்ந்து இருந்தபோது கிருஸ்ணன் "யாரும் கவலையுறத் தேவையில்லை. இல்லாவிட்டால் அர்ச்சுனன்தான் பலியாகியிருப்பான். எல்லாம் நன்றே நடந்திருக்கிறது. அதுமட்டுமல்ல கடோற்கஜனை கர்ணன் கொன்றிருக்காவிட்டால் நான் அவனை கொன்றிருப்பேன்" என்கிறான். "துக்கமுறுவதை விட்டுவிட்டு இதை விழாவாகக் கொண்டாடுங்கள்" என்கிறான். ஆக அரக்கர்குலத்தில் பிறந்தல் கடோற்கஜன் கொல்லப்பட வேண்டியவனாகிறான்.
குந்திதேவியும் ஓரிடத்தில் பிச்சை கேட்டு வந்த காட்டுவாசிகள் அறுவரை வரவேற்று சாப்பாடும் கொடுத்து தமது காட்டு அரண்மனைக்குள் தங்கவைக்கிறாள். அன்று இரவு கௌரவர்களால் எரியுசூட்டப்படப்போகிற (ஒற்றர்மூலம் அறிந்திருந்தாள்) அந்த அரண்மனைக்குள் பாண்டவர்கள் இறந்துவிட்டதான சாட்சியமாக, எரியுண்டுபோன மனித எச்சங்களாக, அந்த காட்டுவாசிகளை பலியிடுகிற சூழ்ச்சி நிறைந்தவளாக இருக்கிறாள்.
குந்தியும் திரௌபதையும்தான் இந்தப் போரின் முதுகெலும்பாக இருக்கின்றனர் என்பதை நாவல் பல இடங்களில் எடுத்துக் காட்டுகிறது.
இன்றைய பாலியல் சார்ந்த ஒழுக்க மதிப்பீடுகளோடு இந்த நாவலை வாசிப்பது அபத்தமானது. குந்தி இப்படி பலபேருடன் உறவுகொண்டதையோ, திரௌபதி பாண்டவர் ஐவருக்கும் மனைவியானதையோ இந்த ஒழுக்க மதிப்பீடுகளால் புரிந்துகொள்ள முடியாது. அன்று நிலவிய பாலியல் சுதந்திரம் இதற்கு இயல்பாகவே இடமளித்தது. அர்ச்சுனன் வில்வித்தைப் போட்டியில் வென்று திரௌபதையை மணமகளாக வென்று வருகிறான். வீட்டுக்குள் இருக்கும் குந்தியிடம் தாம் பரிசொன்றை கொண்டுவந்திருப்பதாக சொன்னபோது (அர்ச்சனனின் வில்வித்தையில் எந்த சந்தேகமுமில்லாத குந்தி பரிசுப்பொருள் திரௌபதைதான் என (வீட்டுக்குள் இருந்தபடியே) உறுதியாகவே முடிவெடுக்கிறாள். "அந்தப் பரிசை எல்லோரும் பகிர்ந்துகொள்ளுங்கள்" என்கிறாள். பாண்டவர்கள் ஐவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்ற ஒரு எளிய காரணத்துக்கு எல்லோருக்குமான மனைவியாக (வருட ரீதியில்) திரௌபதையை குந்தி தீர்மானிக்கிறாள் திரௌபதைக்கும் இது ஆட்சேபத்துக்கு உரியதாக இல்லை. இதை இன்றைய பாலியல் ஒழுக்க மதிப்பீடுகளுடன் புரிந்துகொண்டால் அதிர்ச்சிதரும். பெண்களை இழிவுபடுத்துவதான காட்சிப்புலம் தோன்றவும்கூடும்.
யுத்தங்கள் என்பதே அதிகாரம், புகழ், குலப்பெருமை (அல்லது இனப் பெருமை) என மனிதவிரோத காரணிகளுக்காக நிகழ்த்தப்படுகையில்... யுத்தத்தை பலப்பரீட்சையாக நடாத்திய மகாபாரதப் போரில் கௌரவர்கள் பக்கத்தில் மட்டும் அநியாயம் இருப்பதாகவும் பாண்டவர் பக்கத்தில் நியாயம் இருப்பதாகவும் கட்டமைக்கிற சுத்துமாத்தை இந் நாவல் குலைத்துப் போடுகிறது.
சத்திரிய குலமே நாடாளத் தகுதியுள்ளது என்ற சாதிய மேலாண்மை அரக்கர்குலத்தோடு இரத்தஉறவுகொண்ட பீமனை இரண்டாம் இடத்துக்கு தள்ளுவதோடு அவனது விம்பத்தை ஒரு மாவீரனின் உடற்கட்டை சதைப்பிதுக்கமுள்ள வயிறுபெருத்த ஒருவனாக கட்டமைத்தும் விடுகிறது. அதை துரியோதனன் தனது அஸ்தினாபுர மாளிகையில் பீமனை அவ்வாறாக உருவமாகச் செய்து அதனுடன் மல்யுத்தம் செய்து பயிற்சி எடுத்ததாக ஒரு கதையைவிட்டு சாதித்துவிடுகிறது. பாண்டவரால் அஸ்தினாபுரம் கைப்பற்றப்பட்ட போதும்கூட அந்த உருவம் அங்கு இருக்கிறது.
அடிமையுடைமைச் சமூகத்துக்காக அசாதாரணமான ஓர் எதிர்ப்புப் போராளியாக வீரனாக எழுந்த யேசுவை எலும்பும் தோலுமாக சிலுவையில் கொழுவியதைப் போலவே, பீமனை மறுதலையாக சதைப்பிண்டமாக விம்பமாக்கினார்கள்.

"வரலாறு முக்கியம் அமைச்சரே" என வடிவேலு சொல்வது நகைச்சுவை மட்டுமல்ல !

No comments: