- லெனின் மதிவானம் -
மலைநாட்டு தமிழ்
மக்களின் உரிமைப் போர்த் தளபதிகள்: திருமதி கோகிலம்
சுப்பையா, ஸி.வி.
வேலுப்பிள்ளை.
(ஸி.வி.
வேலுப்பிள்ளையின் இக்கட்டுரை திரு. லெனின்மதிவானம் அவர்களால் சேகரிக்கப்பட்டது.பாக்கியாபதிப்பகத்தின் வெளியீடாக வரவுள்ள ஸி.வி.யின் 'மலைநாட்டு தலைவர்களும்
தளபதிகளும்' என்ற தொகுப்பிலிருந்து பிரசுரிக்கின்ற கட்டுரை).
திருமதி கோகிலம்
சுப்பையா தோட்டங்களுக்குப் புதியவர். திரு.சுப்பையாவின் மனைவியாயிருப்பதனால்
காங்கிரஸில் சேர்ந்தார். காங்கிரஸிலே கணவன்மாரின் வேலையைப் பகிர்ந்துகொள்ளும் வெகு
சில பெண்களில் அவரும் ஒருவர். ஏனென்றால், மற்றும் காங்கிரஸ்காரர்களின் மனைவிமார்
திருமதி சுப்பையாவைப்போலன்றித் தங்கள் கணவன்மாருக்குச் சுறுசுறுப்பாக உதவி செய்யப்
பல்வேறு வசதிக் குறைவுகளைக்கொண்டுள்ளனர்.
தலைமை வகிக்கப்
பேராற்றல்
''மாதர்
காங்கிரஸ்'' எனப்படும் காங்கிரஸின் மாதர் பகுதி தேவையான பணிபுரியப் போதிய
திறமைசாலிகளின்றி நெடுங்காலமாகச் செயலாற்றாதிருந்து வந்தது. ஆனால் திருமதி கோகிலம்
சுப்பையா வந்து சேர்ந்ததும், இந்த நெடுங்காலத் தேவை நிறைவேறியது. 1948ம் ஆண்டு
முதல் அவர் மாதர் காங்கிரஸில் சுறுசுறுப்பாகச் சேவைசெய்து வருகிறார்.
திரு.சுப்பையாவுடனும் தாமே தனியாகவும் சகல தோட்டங்களுக்கும் சென்று, பெண்களைச்
சந்தித்து, அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றி அவர்களுக்குச்
சொற்பொழிவாற்றியுள்ளார். இவ்விதமாகத் திருமதி கோகிலம் சுப்பையா பெண்களிடையே மட்டுமன்றி
ஆடவர்களிடையேயும் பிரபலமடைந்துவிட்டார்.
காங்கிரஸ்
காரியக் கமிட்டி அங்கத்தினராகவும் மாதர் காங்கிரஸ் தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்ட
காலத்திலிருந்து, அவர் கமிட்டி ஆலோசனைகளிலும் பொதுமேடைகளிலும் சமூக வைபவங்களிலும்
தமது பங்கையெடுத்துள்ளார். இப்பங்கெடுப்பதற்காக முன்னணிக்குச் செல்வதில் ஒருவேளை
அவர் காட்டிய துணிவையும் விரைவையும் கண்டு ஆடவர்கள் கூடப் பொறாமைப்பட்டனர் எனலாம்.
தலைவரென்ற
முறையில், அவர் மற்றும் ஸ்தாபனங்களில் தம்மைப்போன்று தலைமை வகிப்பவர்களுக்கு
எவ்விதத்திலும் சளைத்தவரல்லர். அவர் திருமதி தேஜா குணவர்த்தனாவுடன்
அரசியலைப்பற்றிப் பேசியுள்ளார்@ திருமதி குளோதா ஜயசூரியாவுடன்
அரட்டையடித்திருக்கிறார்@ கைத்தொழில்களில் சமாதானத்தைச் சீராக்க வேலைநிறுத்துங்கள்
அத்தியாவசியமாகுமெனக் கவர்ச்சிகரமான இங்கிதங்களுடன் திருமதி சதுரு குலசிங்காவிடம்
அவர் சொல்ல முடிந்தது. அவர் ஓரிடத்துக்கு வந்து போகும்போது விட்டுச் செல்லும்
வசீகரத்தின் நறுமணமும் கலகலப்பான சிரிப்பொலியும் 'யார் அந்தப் பெருமாட்டி?"
என்று மற்றவர்களைக் கேட்க வைத்துவிடும். வேறெவரும் பதிலளிக்கு முன்பு திருமதி
கோகிலம் சுப்பையாவே சொல்வார் "நான் திருமதி கோகிலம் சுப்பையா - மாதர் காங்கிரஸின்
தலைவர்."
மாதர் சங்கம்
பெற்ற புத்துயிர்உண்மையில், அவர்
வந்து சேர்ந்தபிறகுதான் மாதர் காங்கிரஸ் புதிய தோற்றத்தைப் பெற்றது. அவர்கள்
தங்கள் ஆண்டு மகாநாட்டுக்கு அணியும் ஜாக்கெட்டுக்கும் போர்க்கோலமுள்ள சிவப்பு
நிறத்தைத் தெரிவுசெய்தனர்; தங்களுடைய சுலோகங்களைப் பெருமிதத்துடன் இசைக்க
முஷ்டியைக் காட்டத் தொடங்கினர்.
திருமதி கோகிலம்
சுப்பையா மாதர் சங்க மகா நாட்டுக்கு வந்து சேரும் காட்சி ஆடம்பரமும் மகத்துவமும்
பொருந்திய கண்கொள்ளாக் காட்சியாகும். விழிப்புணர்ச்சியும் அஞ்சா நெஞ்சத்துடன்
குரலெழுப்பும் துணிவும் படைத்த அங்கத்தினர்கள் பின் தொடர, அவர் தமது தொண்டர்
படையின் அணிவகுப்பைப் பார்வையிடுவதற்காக வந்து சேர்வார். வழக்கமாக மகாநாடு அவருடைய
பாடலுடனேயே ஆரம்பமாகும். நன்கு பேசுவதைப் போலவே அவருக்குப் பாடவும் தெரியும்.
ஆடவர்களின் மகாநாட்டில் பேசும்போது, பெண்களுக்கு ஆறு மணி நேர வேலையும்
சமவேலைக்குச் சமசம்பளமும் வழங்கப்படவேண்டுமென்று வற்புறுத்துவார்.
மாதர் சங்க
மகாநாட்டில் அவர் கடந்த வருடத்தில் செய்யப்பட்ட வேலைகளின் முன்னேற்றத்தைப் பற்றித்
தமது அச்சடிக்கப்பட்ட தீர்மானங்களின் மீது பேசுமாறு தமது பிரதிநிதிகள் குழுவை
வற்புறுத்துவார். இச்சடங்காசார சம்பிரதாயங்களெல்லாம் வெறும் அலங்காரத்துக்காகவல்ல, ஆனால் மாதர் காங்கிரஸின் அந்தஸ்த்தை நிலைநாட்டுவதற்கும் அதன் ஆற்றலை எடுத்துக்
காட்டுவதற்குமாகும்.
பரந்த அரசியல்
கண்ணோட்டம்
திருமதி கோகிலம்
சுப்பையாவின் அரசியலுக்கும் காங்கிரஸின் அரசியலுக்கும் எவ்வித வித்தியாசமுமில்லை.
ஆனால் சமீபத்தில் அவர் தமது அரசியல் கண்ணோட்டத்தை விரிவாக்கியுள்ளதாகத்
தோன்றுகிறது. அதை இப்பொழுது 'முற்போக்கானது" என வர்ணிக்கலாம். அவர் இடதுசாரி
இயக்கத்தின் சகல தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்புகொண்டுள்ளார். இந்நாட்டு
மக்களுக்குச் சோஷலிஸப் பாதைதான், உள்ள ஒரே இராஜபாட்டையாகுமென அவர்களுக்குத்
தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவிலும்
எகிப்திலும் நடைபெற்ற சர்வதேச மகாநாடுகளில் தோட்டப் பெண்களின் பிரதிநிதியாகக்
கலந்து கொண்டுள்ள திருமதி கோகிலம் சுப்பையா ஐக்கிய அராபியக் குடியரசு ஜனாதிபதி
நாஸர் உட்படப் பிரபல அரசியல்வாதிகளைச் சந்தித்திருக்கிறார். விரிவான சுற்றுப்
பிரயாணங்களை வெற்றிகரமாகச் செய்துள்ள அவர் ஐரோப்பாவிலுள்ள பெரும்பாலான
நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் விஜயம் செய்து, பெண்களின் சேமாபிவிருத்திக்காக
ஆங்காங்கு செய்யப்பட்டுள்ள வேலைகளை நேரில் அவதானித்துள்ளார். ஆனால் தோட்டங்களில்
அச்சேமநலப் பணிகளைப் பரீட்சார்த்தமாக நிறைவேற்றிப் பார்க்க அவருக்கு இதுவரை
சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
ஏராளமான
நண்பர்கள்
திருமதி கோகிலம்
சுப்பையாவுக்கு இந்தியாவில்போலவே இலங்கையிலும் நலன்கள் உண்டு. இந்தியாவுடன்
நெருங்கிய தொடர்புகொண்ட 'இலங்கை இந்தியர்" என்றே அவரைக் கூறவேண்டும்.
இலங்கையிலுள்ள தோட்டங்களிலே இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சேவை செய்யும்
அரசியல் ஊழியரென்ற முறையிலும் அவர் சிறிதளவு பிரபலமடைந்திருக்கிறார். அரசியல்
உலகிலும் சமூக உலகிலும் அவருக்கு ஏராளமான நண்பர்கள் உண்டு. உதாரணமாக அவருடைய
நண்பர்களில் காலஞ்சென்ற கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் டி.ஏ.மதுரமும் சிலராவர்.
திருமதி கோகிலம் சுப்பையா திரைப்படங்களின் வளர்ச்சிக்குச் சிறிது சேவை
செய்துள்ளாரென்று நம்பப்படுகிறது.
இன்று நன்கு
விளம்பரப்படுத்தப்படும் மாதர் தலைவர்களில் அவரும் ஒருவர். பத்திரிகைகளிலே திருமதி
விவியன் குணவர்த்தனாவுக்கோ அல்லது திருமதி மாட்கெனமனுக்கோ கிடைத்துள்ள
விளம்பரத்தைவிட அதிகமான 'விளம்பரத்தை' அவர் பெற்றுள்ளார். பத்திரிகைகளிடமிருந்து
இவ்வளவு கவனத்தை ஈர்த்துள்ளது, அவருடைய வேலையின் அளவா அல்லது தரமா என்று ஒருவர்
ஆச்சரிப்படுகின்றார். சில காங்கிரஸ் தலைவர்களைப்போலத் திருமதி கோகிலம்
சுப்பையாவும் தம்மை விளம்பரப்படுத்திக்கொள்ளும் முறையை நன்கறிந்தவர் என்பதுதான்
இதற்கு விடை. உண்மையில் இன்று மாதர் காங்கிரஸ் என்றால் அவர்தான்.
தைரியமும்
விவேகமும்
அவருடைய
'அலட்சிய" மனப்பான்மை அவருக்கு ஆடவர்களின் விரோதத்தையும் பெண்களின்
பொறாமையையும் சம்பாதித்துள்ளது. இதன் விளைவாகச் சில பழுத்த காங்கிரஸ்வாதிகள், பெண்
தலைமைதாங்காத மாதர் காங்கிரஸைக்கொண்டிருப்பது மேலேனக் கருதுகின்றனர். ஏனென்றால்
திருமதி கோகிலம் சுப்பையா ஆண்களுக்கெதிராகத் தமது படைகளை நிறுத்திவைத்து,
அவர்களைக் கீழான அந்தஸ்துக்குத் தாழ்த்திவிடக் கூடும்!
திருமதி கோகிலம்
சுப்பையா தமது இனம் மேற்கொள்ளும் புதுப்புது 'பாஷன்களையும் கூர்ந்து
அவதானிக்கிறார். தமது ஆபரணங்களையும் உடைகளையும் விவேகமாகத் தெரிவுசெய்கிறார்.
பம்பாய் மாதர்களிடமும் கறுவாக்காட்டு மாதர்களிடமும் காணப்படும் சிறந்த அம்சங்கள்
அவரிடம் இரண்டறக் கலந்துள்ளன. இதனுடன், அவர் விருந்துக் கூட்டத்திலோ அல்லது சமூக
வைபவத்திலோ ஒரு திருமதி இராஜகோபாலுக்கெதிராகத் தமது நிலைவிடாதிருக்கிறார்.
இத்தனை விதமான
நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும், அவர் தமது புதல்விகளுடனும் குடும்பத்தை
வெற்றிகரமாக நடத்தியுள்ளார். குழந்தைகள் சமீபத்திலேதான் தங்கள் கல்வியின்
நிமித்தம் சென்னைக்குச் சென்றனர்.
ஆண்டுதோறும்
புனித யாத்திரை
திருமதி கோகிலம்
சுப்பையா தக்க நேரத்தில் ஒரு ஆணுக்குப் பதிலுக்குப் பதில்; சுடச் சுடக்
கொடுக்கவும் தவறியதேயில்லை. இந்துவான அவர் சமய பக்தியுள்ளவர்; இல்லத்தில் பூசை
செய்வதுடன் அவ்வப்பொழுது உபவாசமுமிருக்கிறார். ஆண்டுதோறும் கதிர்காமத்துக்கும்
தென்னிந்தியாவிலுள்ள புண்ணிய சேத்திரங்களுக்கும் யாத்திரைசெய்ய அவர் தவறுவதில்லை.
No comments:
Post a Comment