-கரவைதாசன்-
தமயந்தியின் ஏழு கடல் கன்னிகள் வாசிப்பு மனநிலை!
அலை ஒதுங்கிய கரையில் விசாரணை செய்! எனும் அரசியல் கோரிக்கையுடன் விரிகிறது பக்கங்கள்.
அட்டைப்படங்களுடன் இருநூறு பக்கங்களை கொண்ட இப்புத்தகத்தின் ஏழு கதைகளும் ஏதோ ஒருவகையில் நெய்தலினை சேர்ந்தவைதான். அந்த மக்களின் காதல் வாழ்வு, உணவுப் பழக்கம், கடல் சார்ந்தும் அதன் இயற்கை சார்ந்தும் அவர்கள் கொண்டுள்ள ஆழமான அறிவு, கடல் மிதவைகள் மீதான நுண்ணறிவுப் பகுதிச் சொற்கள், விரித்து வைத்த ஒரு அகராதியினைபோல் புத்தகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றது. கடலின் உள்ளும் வெளியும் வெளியோடொத்த கரையின் வனப்பினையும் லாவகமாக சொல்வதில் கதை சொல்லி முன்வரிசையில்தான் நிற்கின்றார்.
தமயந்தியின் ஏழு கடல் கன்னிகள் வாசிப்பு மனநிலை!
அலை ஒதுங்கிய கரையில் விசாரணை செய்! எனும் அரசியல் கோரிக்கையுடன் விரிகிறது பக்கங்கள்.
ஓலசுண்டின் அலை ஒதுங்கிய கரையொன்றில் தானை வைத்து கடல் நுகப்பினை கணக்கிட்டு தூண்டில் எறிந்த களைப்பு தீர முன்னே வங்கு நிறைந்த மீன் அளைந்த கைகளை உப்புநீரிலேயே அலம்பிவிட்டு ஈரமான கைகளை தன் சாரத்திலே துடைத்து விட்டு உழைப்பேறி மரத்துப்போன விரல் நீட்டி அழைக்கின்றார் . கதை சொல்ல...
மொழிகளில் யார் தேவதைகளை பிரசவித்தவர்களோ அவர்களே அறிவர், தேவதைகளை காண முடியாது, பேசமுடியாது, நுகர முடியாது, சுவைக்க முடியாது, தொட்டுணரவும் முடியாது.
எனினும் மாந்திரீக எதார்த்தம் செய்த காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் கதைகளிலே வருகின்ற ஒரு இருளுடனோ அல்லது இருண்ட வீட்டுடனோ அல்லது எச்.சி. அனசனின் கதைகளில் வருகின்ற ஏதாவது ஒரு அஃறினை பொருளுடனோ உறவாடுவதுபோல் இக்கதைகளினிலே வருகின்ற தேவதைகளுடன் சிரித்துப் பேசி கும்மாளமிட்டு குதூகலிக்க முடிகிறது, கண்டு வரத்துகள் வாங்க முடிகிறது, சேர்ந்து நுகர்ந்து சல்லாபிக்க முடிகிறது, கிள்ளி எறிந்து வாயினிலே விட்டு மென்றும் மீதியினை கொப்பளிக்கவும் முடிகின்றது. என்றால் பிள்ளைவாளும் பறையனாரும் சபையினில் விவாதம் செய்கின்றனர் என்பது போல் சமன் செய்யப்படுகின்றது . மையத்தினை உடைத்து உதைத்து உதைத்து விளிம்பினில் வைத்து அழகு செய்யப்படுகின்றது . இது தமயந்தி என்ற கதை சொல்லியால் முடிந்திருக்கின்றது. தமிழ் மொழியினிலே தேவதை என்ற சொல் உசத்தியானது என்ற ஆதிக்க மனோபாவத்துக்கே பட்டா ஆகிப்போயிருக்கும் மனோநிலையில் முட்டியை உசத்தி "எங்களதும் தேவதைகள் தான்! வயல் உனக்கு சாமி என்றால் கடல் எனக்கு தேவதை!" இதுவும் கர்வமான ஒரு இலக்கியச் செல்நெறிதான். அவர் உருவகித்த அந்த தேவதைகள் ராட்சத இரும்பு இயந்திரங்கள் கொண்டு உழுது கிழிக்கப்படுகின்றபோது வீசும் இரத்தவாடை, கந்தகம் விழுந்து வெடிக்கின்றபோது எழும் கரும் புகை போன்ற சொற் கூட்டங்கள் அவரின் எழுதுகோலினால் வரிகளில் குந்தி இருக்கச் செய்கின்றபோது வாசிப்போரின் கண்களை சிவக்க வைக்கின்றார்.
அட்டைப்படங்களுடன் இருநூறு பக்கங்களை கொண்ட இப்புத்தகத்தின் ஏழு கதைகளும் ஏதோ ஒருவகையில் நெய்தலினை சேர்ந்தவைதான். அந்த மக்களின் காதல் வாழ்வு, உணவுப் பழக்கம், கடல் சார்ந்தும் அதன் இயற்கை சார்ந்தும் அவர்கள் கொண்டுள்ள ஆழமான அறிவு, கடல் மிதவைகள் மீதான நுண்ணறிவுப் பகுதிச் சொற்கள், விரித்து வைத்த ஒரு அகராதியினைபோல் புத்தகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றது. கடலின் உள்ளும் வெளியும் வெளியோடொத்த கரையின் வனப்பினையும் லாவகமாக சொல்வதில் கதை சொல்லி முன்வரிசையில்தான் நிற்கின்றார்.
கதைகளிலே வருகின்ற அப்புவும், பவுணும், லூர்த்துராசனும் ஒரே மனங்கள் தான் எனினும் மையமானவராக அப்பு வருகிறார். லோன்சிக்கார விநாயகமூர்த்தி இன்னொரு மனிதம். முபராக் அலிநானா துரோகம் பட்டு அழிகின்ற ஒரு இனத்தின் நுட்பமான வரலாற்று விவரணையாகும். அப்பாத்திரத்தினை மனங்கொள்ளும்போது
"குற்றமற்றவர்கள் மீது கற்கள் வீசப்பட்டதனால்
நானும் சிலுவையை சுமந்து கொண்டுதான் நிற்கின்றேன்"
என்ற என் கவிதை வரிகள் எனது நினைவுக்குள் வந்தன. கதையின் பாடுகள் தாயகத்தில் வாழ்ந்து பார்த்துவிட்டும் புகலிடத்தில் வாழ்ந்து பட்டுக்கொண்டும் நகர்கின்றது. கிற்றார் பாடகன், நல்ல வடிவான கறுப்பி அல்போன்ஸா, மார்டின் அண்டர்சன் , நாரந்தனை கொர்ணலியஸ், கருகம்பனை கந்தையா, அல்லைப்பிட்டி தாசன், கரையூர் பெரியதம்பி, திட்டி பேரின்பநாயகம், உரும்பிராய் திருமேனி, கொட்டடி பெரிய செட்டி, காளிசக்தி, பெப்பெனியன் அம்மான், பெரியவளும், சின்னவளும் மெய்யாக வாழ்ந்த வாழும் பாத்திரங்கள் தான். ஆயினும் கதைகளில் வரும் தெறிப்பு பாத்திரத்தின் பின்னே வாசகனை ஓடவைக்கின்றது.
கதை இடுக்குகளில் செருகி வைத்துள்ள காலக் குறிப்புகள் கதையிலிருந்து வழுக்கிச் செல்ல முடியாது கவனமாக செருகப்பட்டுள்ளது. ஒவ்வொரு திகதியும் உலர்ந்து போகும் வரலாற்று ஆவணங்களில் ரத்தம் சொரியும் எதாவது ஒரு தருணத்தினை பதிவு செய்கின்றது. எனினும் ஐயோ! சிறு கதைக்கென போட்ட கதியால்களை கொஞ்சம் அகட்டிப்போடுகின்றாரே என்ற அங்கலாய்ப்பும் வரத்தான் செய்கின்றது.
ஆனாலும் ஏழு கதைகளிலும் வரும் பாத்திர வார்ப்புகளுக்கு இடையில் இழையோடும் ஒத்திசைவு சொல்லும் முறையின் ஓர்மை நூலினை படிக்கின்றபோது ஒரு குறுநாவலினை படிக்கின்ற உணர்வைத் தருகின்றது. வேறொருவகையில் ஒரு கலகக்கார கடலோடியின் டயரிக்குறிப்பினை படிக்கின்ற அனுபவத்தை தருகின்றது.
மீன்கலக்கிலை கொண்டுபோய் விடடி சீதேவி என்று தோணியோடும், வாரிக்கொண்டு வாடி முத்து, பவளம் என வலையோடும், கிளையாய் கொண்டு வந்து சேரடி அம்மா என்று கடல் அலையோடும், கொண்டல் கலைச்சுத் தணிஞ்சு வாடியம்மா, என்று காற்றோடும் கதை சொல்லும் முறையும், கருவும் நேர்த்தியான ஒரு கடலோடிக்கே உரிய பாசைதான். புத்தகத்தின் பக்கங்களில் பரத்திவிடப்பட்ட நெய்தலின் இவ்மொழிவழக்கின் வார்ப்பில் தமிழ்மொழி மேலும் அடர்த்தி பெறும் என்பது கண்கூடு.
கொஞ்சம் நீங்கலாக பார்த்தால் ஒருக்கால் அப்பு பணிசெய்த பணியகத்தில் அந்தோணி குரூஸ்,சோமபால, அலி நானா, அப்பு என நால்வகை பட்டினத்தாரையும் சில பக்கங்களில் உலாவவிட்டிருப்பார். இச்சந்தில் "உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்ககள் " எனும் கோசம் உய்த்தெறிந்தோ அல்லது தொகுத்தெறிந்தோ காணக்கிடையா. ஆனாலும் அந்த அரசியலின் தெறிப்பு துலாம்பரமாக காத்திரமான ஒரு குறும்படத்தினைப் போல் சிறுகதைக்குள் இன்னொரு உசுக்குட்டி கதைபோல் வெட்டிச் செல்கிறது. இது இத்தொகுப்பினை ஒரு படைப்பாக முன்தள்ளுகின்றது.
நிலாந்தனின் முன்னட்டை நூலுக்கு நனிய வழிகாட்டும் தெருப்பலகையாய் அமைந்துவிடுகின்றது. எஸ். சுசீந்தராவின் பின்னட்டையும் தான். தர்மு பிரசாத்தின் வடிவமைப்பில் எழுத்துப் பிழைகற்ற புத்தகத்தினை பார்ப்பது இன்னொரு நேர்த்தி.
தமயந்தியின் கதைகளை தொகுதியாகப் பார்கின்றபோது மகிழ்ச்சியாகவிருக்கின்றது. பிரித்துப் படித்தால் புத்தகம் முழுவதும் மீன் மணக்கின்றது. மூடிவைக்கின்றபோது விரல் இடுக்குகளில் இரத்தம் பிசுபிசுக்கின்றது. மீனும் இரத்தமும் சேர்ந்த ஒரே நெடில் .......
No comments:
Post a Comment