Sunday, December 14, 2014

முன்றில் செய்திகள்

-மா.அரங்கநாதன்-
காவிய காலம் என்ற புத்தகத்தில் திரு. எஸ். வையாபுரி பிள்ளை அவர்கள் “ஆரியர் தமிழரை இகழ்ந்தனர் – தமிழர் விடவில்லை. அவர்களை மிலேச்சர் என்றனர்” என்று கூறியுள்ளார். அகராதிப்படி ஆரியம் – ஆரிய மொழி – ஆரியர் ஆகியவற்றிற்கு மிலேச்சர் என்றே பொருள் தரப்படுகிறது. மொழியில் உயர்வு தாழ்வு என்று எதுவுமில்லை. குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட மொழிகள் மேலான படைப்புகளை கொண்டிருக்கின்றன. ஆப்பிரிக்க கண்டத்து கென்யா நாட்டில் காட்டகத்தே உள்ள கிராமங்களில் ஆண்கள் ஒரு மொழியும் பெண்கள் ஒன்றுமாக பேசுகிறார்கள். அந்த நாட்டுப் பழங்குடி மக்கள் வாழ்க்கை குறித்து அந்த மொழிகளில் எந்த படைப்பும் இல்லை. அவற்றிற்கு எழுத்துருவும் இல்லை. கென்யா நாட்டு Ngũgĩ wa Thiong’o அவர்களின் நாவலான Devil on the Cross ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டது என்ற காரணத்துக்காக அந்த நாவலை கென்யா நாட்டு மக்களுக்குச் சொந்தமானது அல்ல என்று யாரும் சொல்லிவிடப் போவதில்லை. ஆசிரியர் கூகி ஏன் பிரஞ்சில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதினார் என்றும் யாரும் கேட்கப்போவதில்லை. தெரிந்த விசயம். தமிழகத்திற்கே அல்லது தென்னாட்டிற்கே சொந்தமான பரத நாட்டியக் கலை ஏன் வடமொழியில் எழுதப்பட்டது என்பது போலத்தான். சொல்லப்போனால் பல்லவர் காலத்தில் மன்னர்கள் தமிழை மதித்தாலும் தமிழ்க் கலைகளை – நாட்டியம், சிற்பம், இசை போன்றவற்றை – வடமொழியில்தான் எழுதும்படி பார்த்துக் கொண்டார்கள். ஆங்கிலேயர் காலத்தில் திருக்குறள் மற்றும் சங்க இலக்கிய ஆய்வு, தில்லை நடராசரின் ஊழிக்கூத்து, தமிழ் இசை பற்றிய நூல்கள் யாவும் ஆங்கிலத்திலேயே எழுதும்படி ஊக்குவிக்கப்பட்டது. இது எல்லா காலத்திலும் நடந்த விசயந்தான். இன்னொரு மொழியில் எழுதப்பட்டது என்ற காரணத்திற்காக அந்தக் கலைகள் தமிழுக்குச் சொந்தமானவை அல்ல என்று சொல்லிவிட முடியாது.

Wednesday, November 26, 2014

எஸ்.பொ .இன்று( 26.11.2014)காலமானார்.

 "எஸ்.பொ .இன்று( 26.11.2014)காலமானார்". எஸ்.பொ. என்னும் ஆளுமை இனி எம்மிடமில்லை.ஈழத்தினிலே பிறந்து உலகெங்கினும் பயணித்து அவுஸ்திரேலிய சிட்னி நகரினிலே அவர் உயிர் அடங்கி விட்டது.எஸ்பொ என அறியப்படும் ச. பொன்னுத்துரை (பிறப்பு: சூன் 4, 1932, நல்லூர், யாழ்ப்பாணம்) ஈழத்தின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர். யாழ் பரமேஸ்வராக் கல்லூரியிலும் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார். இலங்கையில் ஆசிரியராகவும் நைஜீரியாவில் ஆசிரியப் பயிற்சி கலாசாலையில் ஆங்கில இலக்கிய வரலாற்றுத்துறை விரிவுரையாளராகவும், வரலாற்றுத்துறைத் தலைவராகவும் பணிபுந்தார்.
ஈழத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடக்கி அதற்கு சமாந்திரமாக ஈழத்து  தமிழ் இலக்கியச் செழுமைக்கு சத்தாக நின்றவர். 1990 முதல் அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்து வருகிறார்.
அவுஸ்திரேலியாவில் வெளிவந்த "அக்கினிக்குஞ்சு" சர்வதேச இதழின் கௌரவ ஆசிரியராக விளங்கியவர். செம்பென் ஒஸ்மான என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய ஹால என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் நுகுகி வா தியங்கோ என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் "Weep Not Child" என்ற நாவலை தமிழில் "தேம்பி அழாதே பாப்பா" என்று மொழிபெயர்த்துள்ளார்.
இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய இனி ஒரு விதி செய்வோம் என்ற நூலும் வெளிவந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் பக்கங்களில் வரலாற்றில் வாழ்தல் என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார்.சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இவருக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010 க்கான வாழ்நாள் இயல் விருது வழங்கப்பட்டது.

Saturday, November 01, 2014

மண் மூடிய துயர வரலாறு -1964 -2014 சாஸ்திரி ஸ்ரீமா ஒப்பந்தம்:50 ஆண்டுகள் நிறைவு.

-இரா.வினோத்-

இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக் கதைதான். பஞ்சத்தாலும் வறுமையாலும் அடிபட்டு, இலங்கைக்குப் பிழைக்கச் சென்று, குத்திக் குதறப்பட்ட இந்தியத் தமிழர்களின் துயரக் கதை. இந்தியர்கள், இலங்கையர்கள் இரு தரப்பினராலும் பேச மறுக்கப்படும் கதை.

தமிழக வரலாற்றில் கொடூரமான காலகட்டம் 1835-40. நிலப்பிரபுத்துவ முறை, சாதிக் கொடுமைகள், கோரப் பஞ்சம், துரத்தும் வறுமை... பல்லாயிரக் கணக்கானோர் பசியால் செத்த காலகட்டம். ஆங்கிலேயர்கள் சூழலைத் தனதாக்கிக்கொண்டார்கள். இந்தியாவையும் இலங்கையையும் ஆண்ட அவர்கள், இலங்கையில் தங்களுடைய ஆட்கள் நடத்திய காபி, தேயிலை, ரப்பர் தோட்டங்களுக்கு ஏழைத் தமிழர்களைக் குறிவைத்தனர்.

கங்காணிகள் மூலம் நடத்தப்பட்ட வேட்டை இது. ஒரு ஊரில் நுழைவது. நல்ல வேலை, நல்ல சாப்பாடு, நல்ல கூலி என்று ஆசை காட்டுவது. கொஞ்சம் பணத்தை முன்பணமாகக் கொடுத்து ஆட்களைக் கூட்டிச் செல்வது. தனுஷ்கோடி வரை கால்நடையாகவே நடத்திச் செல்லப்பட்ட இவர்கள் அங்கிருந்து தோணிகள் மூலம் கடல் கடந்து, மீண்டும் கால்நடையாகவே இலங்கையின் தோட்டங்களுக்கு நடத்திச் செல்லப்பட்டனர்.

நடைப்பயணத்தின்போதே பலர் இறந்தனர். பணத் தாசையின் காரணமாக, கங்காணிகள் 100 பேரை ஏற்ற வேண்டிய தோணிகளில் 500 பேர், 1,000 பேர் வரை ஏற்றிச் சென்றதால், பல தோணிகளை ஆழி தின்றது. இப்படித்தான் ஆயிரக் கணக்கான ஏழைத் தமிழர்களுடன் பயணித்த ‘ஆதிலட்சுமி' கப்பலும் கரைசேர்வதற்கு முன்பாகவே கடலில் மூழ்கியது. 1841-49-க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 70 ஆயிரம் தமிழர்கள் இப்படிப் பலியானதைப் பதிவுசெய்திருக்கிறது ‘கொழும்பு அப்சர்வர்' பத்திரிகை.

Wednesday, October 29, 2014

எல்லோரும் ஏகலைவர் தாமோ

-கலாநிதி சி.ஜெயசங்கர்- 

நுண்கலைத்துறை கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. 

ஏகலைவன் தொன்மோடிக் கூத்துப் பிரதிக்கு வழங்கிய முன்னுரை. 




னது சிறுபராயத்தில் ஏகலைவன் எனக்கு அறிமுகமாகின்றான். அந்த அறிமுகம் எனக்கு துயரத்தைத் தந்தது. அத்துடன் தர்மம், அதர்மம் பற்றிய வகுப்பறைக் கற்பித்தல்கள், கதாப்பிரசங்கிகளின் கதையாடல்கள், நியாயப் படுத்தல்கள் எல்லாவற்றிலும் சந்தேகம் இழையோடத் தொடங்கிவிட்டிருந்தது.


சத்திரியருக்குச் சேவகம் செய்யும் பார்ப்பனத் துரோணரிடம் வேடர் குலத்தவனான ஏகலைவன் ஏன் வந்தான்? கட்டை விரலை வெட்டிக் குருதட்சணையாகத் துரோணரிடம் கொடுத்த கதை ஏன் பாடப் புத்தகங்களுள் உள்ளடக்கப்பட்டது? குருபக்தியின் பெயரில் ஏகலைவன் ஏன் பெருமைப் படுத்தப்படுகிறான்? என்ற கேள்விகள் என்னுடன் வளரத்தொடங்கிற்று.

ஆயினும் ஏகலைவனின் குருபக்தி பற்றிய அதே கதைகள் எங்கும் எதிலும் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்கின்றன. ஆங்காங்கே இந்தப் போக்கிரித்தனம் பற்றிய கேள்விகளும், பார்வைகளும் எழுந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் இவற்றில் எல்லாம் கடவுளும் கலந்திருப்பதால் பக்தியும், பயமும், சேர்ந்து இக்கேள்விகளை மழுங்கடித்து வருவதாகவும் இருக்கின்றது. பொதுப்புத்திக்கும் பயபக்திக்குமான போராட்டத்தில் பயபத்தியின் ஆதிக்கம் எதிர்கொள்ளப்பட வேண்டியது.

Sunday, October 26, 2014

குண்டுச் சட்டிக்குள் குதிரையோடுவோருக்கு எல்லாமே பூச்சண்டியாகத்தான் தெரியும்

-வன்னியசிங்கம் வினோதன் -

கூத்துமீளுருவாக்கம் என்பதன் பொருள் புலப்படாது அரைகுறையாகப் புரிந்துகொண்டு கூத்துமீளுருவாக்கத்தினைத் தவறானபார்வையில் பார்க்கின்றவர்களாக எம்மில் சிலர் உள்ளனர்.

“மீளுருவாக்கம்”எனும் சொற்பதத்திற்கு தமிழில் பலஅர்த்தங்கள் காணப்படுகின்றன. மறைந்துபோன கூத்துக்களை மீளக்கொண்டு வருவது தான் கூத்துமீளுருவாக்கம் என எண்ணிக் கொண்டிருக்கின்றவர்களும் உள்ளனர்.

உண்மையில் கூத்துமீளுருவாக்கம் என்பதுஅதுவல்ல. கூத்தின் அடிப்படை அம்சங்கள் மாறாது கருத்தியல் ரீதியானமாற்றங்களைச் செய்துகொள்வதாகும். கருத்தியல் ரீதியாகஎனும் போது தற்காலத்துக்கு முரணாக அமைகின்ற விடயங்களை மாற்றியமைப்பதாகும். உதாரணமாக சாதியச் சிந்தனைகள், பெண்ணியம், சிறுவர் வன்முறைகள் போன்ற விடயங்களைக் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப தற்கால சமூகம் ஏற்றுக்கொள்ளும் வகையிலான ஓர் செயற்பாடே தவிர கூத்துக்கலையினைத் தவறானபாதைக்கு இட்டுச் செல்கின்ற செயற்பாடல்ல.

கூத்துமீளுருவாக்கம் என்பது சமகால பூகோளமயமாக்கல் எனும் ஆபத்துக்களிலிருந்து நமது சமூகங்களைப் பாதுகாக்கும் பொறிமுறைகளைக் கொண்ட ஒரு சமூதாய அரங்காக கூத்தினைஅடையாளங் காட்டி அதனை ஆய்வு அறிவியலூடாக முன்மொழிகின்றது.

கூத்துமீளுருவாக்கம் என்பது ஓர் ஆராய்ச்சி என்பதால் இதற்குகாத்திரமான சிந்தனைகள்,தேடல்கள், கூத்துக்கலைசார் அறிவு, அதுசார் செயற்பாட்டு அனுபவங்கள் என்பன இருத்தல் வேண்டும். இது எதுவுமே இல்லாது“குண்டுச் சட்டிக்குள் குதிரைஓட்டுகின்ற”சிலஅரைகுறைஅறிவுள்ளோருக்கு கூத்துமீளுருவாக்கம் என்பது பூச்சாண்டிகாட்டுவது போல்தான் இருக்கும்.

உண்மையிலே பூச்சாண்டிகாட்டுகின்ற செயற்பாடு எது வென்றால் 1960களில் கூத்தினைச் செம்மைப்படுத்துகின்றோம், மறைந்து சென்ற கூத்துக்களை மீளக் கொண்டு வருகின்றோம் எனப் பாரம்பரியமாகக் களரியில் ஆடப்பட்டு வந்த கூத்துக்களைச் சுருக்கி மேடையில் ஆடவிட்டு கூத்துக்கலையினைத் தம் ஜீவனாக நினைக்கின்ற சமூகத்தின் வயிற்றில் அடித்தார்களே, அதுவேபூச்சாண்டி காட்டுகின்ற செயற்பாடுகள்.

Tuesday, October 14, 2014

காவலூர் அவர்களுக்கு அஞ்சலி

ஈழத்தமிழினத்தின் முற்போக்கு இலக்கியத்தளத்தின் பங்காளியும் மூத்த எழுத்தாளரும் கலைஞருக்கு கலைஞருமாகிய காவலூர் ராஜதுரை அவர்கள் அவுஸ்திரேலியாவில் காலமகிவிட்டதான செய்திகிடைத்தது. காவலூர் அவர்கள் சிறுகதை, நாவல் ,கட்டுரை, திரைக்கதைவசனம்,விளம்பரம் வானொலி நிகழ்ச்சி என பல்வேறு உருவங்களில்  படைப்பினை உருவாக்கும் திறன்கொண்ட படைப்பாளியாக திகழ்ந்தவர். இவரின் தேவ கிருபையை முன்னிட்டு வாழும் என்ற சிறுகதை இலங்கை தமிழ்ப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. முற்போக்கு  எழுத்தாளர் சங்கச் செயற்பாட்டளருக்கு எமது அஞ்சலி.

http://www.tamilauthors.com/01/296.html

Monday, October 06, 2014

மெட்ராஸ் - தலித் அரசியல் மீதான விமர்சனம்

-அ.ராமசாமி-
திருநெல்வேலி  ‘பாம்பே’யில் மெட்ராஸ். 

ஆயுத பூசையன்று இரண்டாம் ஆட்டம் பார்த்தேன். படம் பார்த்தவர்கள் பலரும்  ‘பார்க்க வேண்டிய படம்’ என்றே சொல்லியதை இந்த வாரம் முழுக்க என் செவிகள் கேட்டிருந்தன. ஒரு அரங்கில் ஓடுவதற்கே இப்போது வரும் படங்கள் திண்டாடிக் கொண்டிருக்கும் வேலையில் திருநெல்வேலி போன்ற இடைநகரங்களிலேயே இரண்டு அரங்குகளில் நிறைந்த காட்சிகளாக ஒருவாரத்தைத் தாண்டி விட்டது மெட்ராஸ். 

எதிர்மறை விமரிசனங்கள் அதிகம் எழுதப்பெறவில்லை. இயக்குநருக்கும், அவரோடு இணைந்து வேலை செய்த குழுவினருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் கிடைத்திருக்கின்றன. சிலர் பாராட்டுகளோடுகொண்டாடப்பட வேண்டிய சினிமா என்று கூடச் சொல்லியிருக்கிறார்கள்.  சினிமா போன்ற வெகுமக்கள் கலைக்கு வாய்- விளம்பரம்(Mouth-Ad ) மற்ற விளம்பரங்களைவிடக் கூடுதல் பலனளிக்கக் கூடிய ஒன்று. அதனால் தான் சினிமாவைப்பற்றிப் பேச வைக்க - பலரும் பலவிதமாகப் பேச வைக்க- முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.  படம் பார்த்த நானும் மெட்ராஸ் பார்க்க வேண்டிய படங்களுள் ஒன்று எனச் சொல்வதோடு பேச வேண்டிய படமாக இருக்கிறது என்றும் சொல்கிறேன். பேச வேண்டும்என்பதைவிட விவாதிக்கவேண்டிய - விமரிசனம் செய்யவேண்டிய படம் என நினைக்கிறேன்.

Saturday, September 27, 2014

பறை - தமிழரின் தோலிசைக் கருவி

-மா.அமரேசன் - 
பறை என்னும் இசைக் கருவி இசைப்பதால்  பறையன் என்ற பெயர் வந்த்தா? அல்லது பறையனாய் இருப்பதால் பறை என்ற இசைக் கருவியை இசைக்கின்றானா? இந்த கேள்வி 5 ஆம் வகுப்பு படிக்கும் போதே எனக்குள் உருவானது. விடை தேடியலைகின்றேன்.
அரசர்கள் வாழ்ந்த காலத்தில் தகவல் சொல்லுவதற்க்கு பறை பயன்பட்டிருக்கின்றது. அப்போது அதற்க்கு முரசு என்ற பெயரும் இருந்திருக்கின்றது. போர் குறித்த தகவல் பரிமாற்றத்திற்க்கு முரசு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. 

பொதுவாக நடக்கும் ஊர் திருவிழாக்கள், மற்றும் சடங்குகள் போன்ற நிகழ்ச்சியில் பறை இசையின் சத்தம் ஒரு செய்தியின் அடிப்படையில் இருக்கும். பறை இசைக்கப்பட்டால் அங்கு ஓர் நிகழ்வு நடக்கின்றது, நாம் அணைவரும் அங்கு செல்ல வேண்டும் என்ற புரிதலை உருவாக்குவதற்க்கு பறை பயன்பட்டிருக்கின்றது.
அண்மை காலத்தில் கூட அரசினர், தங்களின் அறிவிப்பை செய்வதற்க்கு கிராமந்தோறும் தண்டோரா போடுவார்கள். அந்த தண்டோராவை வருவாய்துறையின் கடைநிலை ஊழியராக இருக்கும் சிப்பந்தி போடுவார். பெரும்பாலான சிப்பந்திகள் தாழ்த்தப்பட்ட சாதியினராகவே இருப்பர். இந்த தொழில் செய்ய மற்ற சாதியினர் விரும்ப மாட்டார்கள் காரணம் அந்த தொழிலில் தண்டோரா என்னும் பறை இசை கருவியை இசைக்க வேண்டியிருக்கும். அரசு பணியில் ஓளிந்திருக்கும் சாதிய மனோபாவம் இது.

Tuesday, September 16, 2014

ஆசிரியர், புத்தக ஆசிரியர் -ஆயிஷா இரா நடராசன்

-கவின் மலர்- 
கண்ணீரில்லாமல் யாராலும் ஆயிஷாவை வாசிக்க முடியுமா? நம் குழந்தைகளை கூட்டுக்குள் அடைக்கும் கல்வி முறையின் மீதான சாட்டையடி கேள்வியாக வெளிவந்த ஆயிஷா என்கிற அந்த குறுநூல் தமிழ் வாசர்களிடையே ஏற்படுத்திய அதிர்வு இன்னமும் மறைந்துவிடவில்லை. எங்கோ ஒரு மூலையில் அந்நூலை வாசித்து தினமும் ஒருவருடைய விழிகளில் நீர் கசியவே செய்கிறது. ஆயிஷா ஒரு லட்சத்துக்கும் அதிமான பிரதிகள் விற்று எப்போதும் சந்தையில் கிடைக்கும் நூலாக உள்ளது. அதன் ஆசிரியர் இரா. நடராசன் அந்த நூலுக்குப் பின் ஆயிஷா நடராசன் என்றே அறியப்படுகிறார்.  இந்த ஆண்டு குழந்தைகள் இலக்கியத்துக்கு வழங்கப்படும் பால சாகித்ய அகாடமி விருது அவருடைய ‘விஞ்ஞான விக்ரமாதித்யன்’ கதைகள்’ நூலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கென ஏராளமான நூல்களை எழுதியுள்ள இரா. நடராசன் தமிழ்நாடெங்கும் உள்ள குழந்தைகள் சிறுவர் நூல்களை வாங்கிப் படிக்கிறார்க்ள் என்கிற உண்மைக்குக் கிடைத்த அங்கீகாரமே தனக்குக் கிடைத்துள்ள விருது என்கிறார்.

நடராசன் கடலூரில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். ஆசிரியப் பணி, எழுத்துப்பணி இரண்டிலுமே மிகச் சிறப்பான முறையில் செயல்படும் நடராசனின் சொந்த ஊர் கரூர். கல்லூரியில் பயிலும்போது இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பணியாற்றியவர் மார்க்சியத்தின்பால் ஈர்க்கப்பட்டு, தொடர்ந்த தீவிர இலக்கிய ஈடுபாடு என்றிருந்தவரை 20 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் நடந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கக் கூட்டம் ஒன்றில் நடந்த சம்பவத்தால் குழந்தைகளுக்காக எழுதத் துவங்கியதாகக் கூறுகிறார். “சிறுவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளச் சொல்லிக் கொண்டிருந்தோம். அப்போது எழுந்த ஒரு சிறுவன் என்ன புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று கேட்டான். அப்போது பதில் சொல்ல திண்டாடிப்போனோம். இதுவே என்னை குழந்தைகளுக்காக எழுதத் தூண்டியது” என்கிறார்.

இவருடைய முதல் நூல் நாகா. அன்று தொடங்கி இன்று வரை இவர் எழுதிக்குவித்தவைகளில் சிறுகதைகள், நாவல்கள், அறிவியல் புனை கதைகள், அறிவியல் நூல்கள் என்று அனைத்தும் அடக்கம். “குழந்தைகளுக்காக எழுதுவதில் சிரமங்கள் பல உண்டு. மொழி முதலில் கைவரவேண்டும். ஒரு ஊர்ல ஒரு மகாராஜா என்று தொடங்கினால் அடுத்து அவருக்கு இத்தனை மனைவிகள் என்று எழுதினால் அது பெரியவர்களுக்கான எழுத்து. இதையே குழந்தைகளுக்கு எழுதினால் மகாராஜா குண்டானவரா ஒல்லியானவரா என்று எழுதவேண்டும்.” என்கிறார்.

Sunday, September 07, 2014

தெணியானின் குடிமைகள் - ஒரு வாழ்வியலின் ஆவணம்

-முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்-
ஈழத்துத் தமிழ் நாவல்களின் வரிசையில் ஒரு புதிய வரவாக ‘குடிமைகள்’ வெளிவந்துள்ளது. சென்ற ஆண்டு ஜீவநதி வெளியிட்ட இந்த நாவலை எழுதியவர் தெணியான். ஈழத்து ஆக்க இலக்கியப் படைப்பில் சிறந்த பங்களிப்பை ஆற்றியவர். தலித் இலக்கிய முன்னோடியான கே. டானியலின் வழி வந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை நாவல் வடிவில் எழுதி ஆவணப்படுத்தியுள்ளார். தெணியானின் ஐம்பது வருட எழுத்துப் பணியில் குடிமைகள் நாவல் ஒரு மைல் கல்லாக நிற்கிறது. இந்த நாவலை உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஒரு முறை படிக்கவேண்டும். ‘அப்படி அந்த நாவலில் என்ன சிறப்பு இருக்கிறது?’ என்று கேட்க எண்ணுபவர்களுக்கு ஒரு விளக்கமாக இந்த நாவல் அறிமுகம் எழுத்துருப்பெற்றுள்ளது.
இந்நாவலின் வெளியீட்டாளர் நாவலின் இன்றியமையாத சிறப்பை மூன்றாகப் பதிவு செய்துள்ளனர். அவை நாவலைப் படிக்கத் தூண்டுவனவாயுள்ளன.
1. தெணியானின் ஐம்பது வருட எழுத்துலகப் பயணமானது இடையறாத தொடர்ச்சியான பயணமாக அமைந்தது என்பதற்கான சான்றாக இப்பயணம் ஐம்பது வருடங்களைக் கடந்த நிலையிலும் இந்நாவல் வெளிவருதல்.

Thursday, September 04, 2014

பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு.

- வெங்கட் சாமிநாதன்-
இவ்வாரம் காலச்சுவடு வெளியீடாக வெளிவரும் பொ.கருணாகரமூர்த்தின்யின் ‘அனந்தியின் டயறி ’ நாவலுக்கு இலக்கிய ஆசான் திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கள் வழங்கியுள்ள அணியுரை.
நான் பத்திரிகைகள் படித்து வந்த ஆரம்ப காலத்தில் கல்கி யாழ்ப்பாணம் சென்று வந்த கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்வார். ”யாழ்ப்பாணத் தமிழ் மணம் பற்றி மற்றவர்கள் எத்தனையோ குணம் கண்டு சொல்வார்கள். எனக்கு அது என்னவென்று யாழ்ப்பாணம் சென்ற பிறகு தான் தெரிந்தது. “யாழ்ப்பாண அன்பர்கள் பேசும்போது கமழும் யாழ்ப்பாணப் புகையிலை மணந்தான் அது” என்பார் அவர். கி.வா.ஜகன்னாதன் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. அங்கு தமிழ்ப் பத்திரிகைகளுக்கு நல்ல மார்க்கெட். அங்கு செல்லும் போதெல்லாம், அங்குள்ள எழுத்தாளர்களை உற்சாகப்படுத்த தம் பத்திரிகைகளுக்கு எழுதச் சொல்வார்கள். ஒரே ஒரு வேண்டுகோள். “எம் வாசகர்களுக்கு புரியும் தமிழில் எழுதுங்கள்,” என்பது தான் அது. அவர்களும் எழுதியிருப்பார்கள். 
என் நினைவில் நான் படித்த எதிலும் அவர்கள் வாழும் இடத்தின், மொழியின் , வாழ்க்கையின் பரிச்சயம் கிடைத்ததில்லை. மெரினா பீச்சில், காதல் புரியும் கதைகளாகவே, அன்றைய பத்திரிகைக் கதைத் தமிழில் பேசுவார்கள் காதல் செய்வார்கள். தமிழ் வாசகர்களுக்கு புரியும் விதத்தில் அவர்கள் விரும்பும் உலகைச் சொன்னார்கள். பத்திரிகைகள் அப்படி வேண்டின. லக்ஷ்மி என்று ஒருவர் அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் தொடர்ந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக எழுதி வந்தார். அவர் இங்கு மருத்துவ கல்வி பெற்று தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கிருந்து அவர் நிறைய எழுதினார். என் நினைவில் லட்சியவாதி, காஞ்சனா, மிதிலா விலாஸ் எனப் பல தொடர்கதைகள். அவ்வளவுதான் என் நினைவில் இருப்பது. அவ்வளவு கதைகளும் நடப்பது தமிழ் நாட்டில். ஊர் பேர் தெரியாத ஊரில். தென்னாப்பிரிக்க வாழ்க்கையோ அனுபவங்களோ எட்டிப் பார்த்ததே இல்லை. கடைசியாக எழுதிய, சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஒரு நாவல், ”காவிரியைப் போல,” என்று நினைவு. அதில் தான் தென்னாப்பிரிக்கா எட்டிப் பார்க்கிறது. தாமறிந்த வாழ்க்கையை, பழகிய மனிதர்களை எழுதுவது என்பதே அக்காலத்தில் இவர்கள் மனதில் தோன்றியதில்லை.
ஒரே ஒரு விதிவிலக்கு. எங்கும் நேரும் விதிவிலக்கு. ப.சிங்காரம். ஆனால் தமிழரே ஆனாலும் தமிழ்ச் சூழலால் பாதிக்கப்படாது எங்கோ, வாழ்ந்தவர். அவர் கொணர்ந்த வாழ்க்கையும் தமிழ் இலக்கியத்துக்குப் புதிது. விதிவிலக்கு விலகி நின்ற ஒன்றாகவே ஆகியது.

Wednesday, September 03, 2014

சாதி குறித்து மாக்ஸ்

-ரங்கநாயகம்மா (ஆங்கிலம்) தமிழில் கொற்றவை-

                 


‘மூலதனம்’ எனும் தலைப்பின் கீழ் ‘முதலாளித்துவம்’ குறித்து எழுதியது போல்   ‘சாதி’ குறித்து மார்க்ஸ் சிறப்பு அராய்ச்சி கட்டுரை ஒன்றை எழுதவில்லை தான்;  இருப்பினும், அவரது எழுத்துக்களில்,  இந்தியாவில் உள்ள சாதியமைப்பு    குறித்தும்மற்ற  நாடுகளில் நிலவும் சாதிக்கு இணையான சில ஏற்பாடுகள் குறித்தும் மார்க்ஸ் சில அவதானிப்புகளைச் செய்துள்ளார்.  இந்த அவதானிப்புகள் மூலம்சாதி கருத்தியல்களையும்அந்தப் பிரச்சனைக்குரிய தீர்வாக அவர் சுட்டிக் காட்டியுள்ளவற்றையும் நாம் புரிந்துகொள்ளவியலும்.

உலகின் மற்ற இடங்களில் உள்ளதைப் போல் மார்க்ஸின் கோட்பாட்டுகளை எதிர்க்கும் (தெரிந்தோதெரியாமலோ அல்லது அரைகுறை அறிவோடோமக்கள் இந்தியாவிலும் இருக்கிறார்கள்.  இந்தியாவில், அத்தகைய  எதிர்ப்பாளர்கள் மார்க்ஸின் கோட்பாடு குறித்து இரண்டுவிதமான கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் – (1) மார்க்சின் கோட்பாடு 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவுக்குப் பொருத்தமானதாக இருந்தது, ஆனால் அது அங்கும் தற்காலத்திற்கு பொருத்தமானதாக இல்லை. (2) மற்ற நாடுகளுக்கு வேண்டுமானால் மார்க்ஸின் கோட்பாடுகள் பொருத்தமானதாக இருக்கலாம்ஆனால் இந்தியாவுக்கல்லஏனென்றால் இங்கு சாதியமைப்பு நிலவுகிறது மேலும் அது மார்க்ஸின் கோட்பாட்டு எல்லையின் கீழ் வருவதில்லை.

Monday, September 01, 2014

ஒரு தமிழ்த் தேசிய சமூக ஆர்வலரான என் தந்தை பற்றிய நினைவுக் குறிப்புகள்.

-கலையரசன்-

"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்" - திருக்குறள் 

சிறு வயதில் இந்தக் குறளைச் சொல்லி வளர்த்த எனது தந்தை இப்போது இயற்கை எய்தி விட்டார். சில தினங்களுக்கு முன்னர், கடுமையாக நோய் வாய்பட்டு யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில், தனது 79 ஆவது வயதில் காலமான எனது தந்தைக்கு, தமது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்ட அனைவருக்கும், முதற்கண் எனது நன்றிகள். 

சின்னர் தர்மலிங்கம் ஆகிய எனது தந்தை, யாழ்ப்பாணத்தில் எங்களது கிராமத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பிரபலமாக அறியப் பட்ட ஒரு சமூக ஆர்வலர். அவரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களை இந்த இடத்தில் பகிர்ந்து கொள்வது, ஒரு மகனாக தந்தைக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட எனது அப்பா, கடைசி வரைக்கும் தனது கொள்கையில் இருந்து வழுவாது நின்றவர். அரசியலை வைத்து பிழைப்பு நடத்தாமல், மக்கள் சேவையை தலையாய கடமையாக கொண்டியங்கியவர். இறுதிக் காலங்களில், கடும் சுகயீனமுற்று வருடத்தில் பாதி நாட்கள் மருத்துவமனையில் காலம் கழிக்கும் வரையில், முதுமையிலும் தளராது தனது சமூகக் கடமைகளை நிறைவேற்றியவர். அவரைப் பற்றிய சுருக்கமான நினைவுக் குறிப்புகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

Sunday, August 31, 2014

மாதொருபாகன் - பாலியலின் ஒரு ரகசியக் கதவு

-சுரேஷ் கண்ணன்- 

பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்' புதினத்தை வாசித்தேன்.

இதன் உள்ளடக்கம் காரணமாகவே இந்தப் புதினம் தமிழ் சமூகத்தில் மிக அதிகமான சர்ச்சைகளையும் அதன் மீதான உரையாடல்களையும் அதன் மீதான கலாசார தெளிவுகளையும் பெற்றிருக்க வேண்டும். அதுவே இந்த நூலின் வெற்றியாக அமைந்திருக்க முடியும். ஆனால் அப்படியேதும் நடைபெறாதது நம்முடைய வாசிப்பின் போதாமையையும் ரசனை வறட்சியையுமே சுட்டுகிறது. ஒரு சமூகக் குழுவின் கலாசார பின்புலத்தையும் அதன் தொன்மத்தையும் வரலாற்றுக் குறிப்புகளையும் ஒரு புனைவின் பாவனையில் கடந்து செல்வது மிக சிக்கலானதொரு பணி. பெருமாள் முருகனின் பல படைப்புகள் இந்தக் கடினமான பணியை இலகுவான மொழியில் சாத்தியமாக்குகின்றன. திருமணமாகாமல் தட்டிக் கொண்டே போகும் ஒரு கவுண்டர் சமூகத்து இளைஞனின் உளச்சிக்கல்களை இதற்கு முந்தைய 'கங்கணம்' என்கிற நாவல் விளக்கிச் செல்கிறது என்றால் 'மாதொருபாகன்" குழந்தைப் பேறில்லா ஒரு தம்பதியினர் எதிர்கொள்ளும் சமூக மற்றும் உளச்சிக்கல்களை விவரித்துச் செல்கிறது.

Tuesday, August 26, 2014

சட்டங்களும் சம்பிரதாயங்களும்

-தேவா (ஜெர்மனி )-
சட்டங்கள் பாராளுமன்றங்களில் விவாதிக்கப்பட்டு, பெரும்பான்மை வாக்குகள் பெற்று அமுல்ப் படுத்தப்படுகின்றன. லஞ்சம் புரளும் நாடுகளில் சட்டம்  அமுல்படுத்தப்படுகின்றனவா  என்ற கேள்வி ஒரு கேள்விக்குறியாகவே  இருக்கிறது. ஐனநாயகநாடுகளில் சட்டங்கள் முறைப்படி செயல்படுத்த முடிகின்றது. மதக்கொள்கைகளை அடிப்படையாக கொண்ட அரசுகள், சமயநூல்களின் எழுதப்பட்டுள்ள முடிபுகளை சட்டங்களாக மாற்றி தீவிரமாக செயல்படுத்துகின்றன.
எப்படியோ சட்டங்கள் மக்களுக்கு மேலே ஏற்றப்படுகின்றன. ஐனநாயக நாடாய் இருந்தாலும், சர்வாதிகாரமான நாடாய் இருந்தாலும், சட்டங்கள் நடைமுறைப்படுத்த படுகின்றன. ஒரு அரசு வாழ்வதற்கு அதனுடைய முதுகெலும்பாய் சட்டங்கள் தேவைப்படுகின்றன. மக்களுக்கு மேல் நிர்வாகம்  திணிக்கப்பட்டிருப்பினும், மக்கள் தம்மை வழிநடத்திசெல்ல ஒரு தலைமையை ஏற்றுக்கொள்கின்றனர். தலைமை, அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டது. மக்கள் குழுக்களாக வாழத் தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த நடைமுறை பல்வேறு வடிவங்களாகி மாறி இருப்பினும் அடிப்படைத்தோற்றம் அங்கேயே நிற்கிறது

Sunday, August 24, 2014

யுவபுரஸ்கார் விருதினை ஒட்டி சில எண்ணங்கள்

-அபிலாஷ் சந்திரன்-
சாகித்ய அகாதமியின் சார்பில் இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் யுவ புரஸ்கார் விருதுக்கு, 21 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், கால்கள் என்ற படைப்புக்காக, எழுத்தாளர் .அபிலாஷும் இடம்பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளிப் பெண்ணின் வாழ்க்கையைச் சொல்கிறது கால்கள் நாவல். உயிர்மை பதிப்பகம் இந்நாவலை 2012ல் வெளியிட்டது. விருது பற்றி அபிலாஷ் பேசும்போது, ‘இளம்படைப்பாளிகள் வெகுஜென கவனம் பெற இதுபோன்ற விருதுகள் உதவும்’ என்று தெரிவித்தார். அபிலாஷ் ஆங்கில இலக்கியத்தில் ஆய்வு பட்ட மாணவர். நாவலோடு கவிதை, கட்டுரைகள் என பல தளங்களில் எழுதிவருகிறார்.
இவ்வருடத்திற்கான சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது தமிழில் எனக்கு “கால்கள்” நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது.
நான் பெறும் முதல் விருது இது. ஒருவேளை கனவோ என அரைநாள் யோசித்துக் கொண்டிருந்தேன். யாராவது என்னை வைத்து வேடிக்கை பண்ணுகிறார்களோ என சஞ்சலம் தோன்றியது. பிறகு மெல்ல மெல்ல என்னையே நான் நம்ப வைத்தேன்..
இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் சில முக்கிய சம்பவங்களை, நபர்களை நினைத்துப் பார்க்க விரும்புகிறேன்.

ஒன்று தக்கலை கலை இலக்கிய பெருமன்றம். அது தான் என் இலக்கியப் பள்ளி. பதினான்கு வயதில் கணக்கு டியூசனுக்காக ஹமீம் முஸ்தபாவின் புத்தகக்கடையின் ஒரு பகுதியாக இருந்த வகுப்புக்கு போய்க் கொண்டிருந்தேன். முஸ்தபா அப்படித் தான் நண்பரானார். ஒருநாள் மாலையில் அங்கு மாலையில் நடக்கும் கலை இலக்கிய பெருமன்ற கூட்டத்தில் எதேச்சையாக பங்கேற்றேன். எந்த இலக்குமின்றி வாழ்வில் பிடிப்பின்றி இருந்த காலகட்டம் அது. இந்த கூட்டங்கள் வழி நிறைய நல்ல நண்பர்கள் வாய்த்தார்கள். அந்த வயதில் பொன்னீலன், என்.டி ராஜ்குமார், நட.சிவகுமார், ரசூல் போன்ற எழுத்தாளர்கள், அனந்தசுப்பிரமணியம், சொக்கலிங்கம் போன்ற கோட்பாட்டாளர்கள் வழி இலக்கியம், கோட்பாடுகளை அறியக் கிடைத்தது ஒரு பெரும் அதிர்ஷ்டம்.

Wednesday, August 20, 2014

பாலஸ்தீனத்திலிருந்து அமெரிக்க பெண் ஊடகவியலாளரின் நெஞ்சையுருக்கும் இறுதிப்பதிவு

இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப் படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், ரச்சேல் ஹோரி தன் பெற்றோர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து… சில பகுதிகள்!
நான் பாலஸ்தீனத்துக்கு வந்து சரியாக இரண்டு வாரங்களும் ஒரு மணி நேரமும் ஆகி விட்டது. ஆனால் இங்கே நான் காண்பதை உங்களுக்கு விவரிக்க, அதாவது அமெரிக்காவுக்குப் புரிய  வைக்க வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன்.
குண்டுகளால் துளைக்கப்பட்ட வீட்டுச் சுவர்கள், கழுகுப் பார்வையால் கண்காணிக்கும் இராணுவம் – இவையிரண்டும் இல்லாத ஒரு வாழ்க்கையை இங்குள்ள குழந்தைகள் வாழ்ந்ததேயில்லை. இருப்பினும் “வாழ்க்கை என்பது எல்லா இடங்களிலும் இந்த மாதிரி இல்லை” என்பதை இங்குள்ள சின்னஞ்சிறு பிள்ளைகள் கூடப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
நான் இங்கே வந்து இறங்குவதற்கு இரண்டு நாட்கள் முன் ஒரு 8 வயதுச் சிறுவனை இசுரேலிய இராணுவம் சுட்டுக் கொன்று விட்டது. “அவன் பெயர் அலி” என்று என்னிடம் கிசுகிசுக்கிறார்கள் இங்குள்ள குழந்தைகள். “ஷரோன் யாரு – புஷ் யாரு” என்று அரபியில் அவர்கள் கேட்க, “ஷரோன் கிறுக்கன் – புஷ் கிறுக்கன்” என்று நானும் எனக்குத் தெரிந்த அரபு மொழியில் பதில் சொல்கிறேன். அரபு மொழியை இப்படித்தான் எனக்குக் கற்றுத் தருகிறார்கள் இந்தச் சிறுவர்கள். உலக அரசியலின் அதிகாரம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நான் முன்னர் புரிந்து வைத்திருந்ததைக் காட்டிலும் இங்கே இருக்கும் 8 வயது வாண்டுகள் தெளிவாக அறிந்திருக்கிறார்கள்.

Sunday, August 10, 2014

சம்ஸ்கிருத (வார)த்தை நாம் ஏன் எதிர்க்கிறோம்

- க.திருநாவுக்கரசு-
மத்திய அரசு சமீபத்தில் இந்தியைத் திணித்தார்கள். தமிழக மெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. தலையை உள்ளே இழுத்துக் கொண்டு ஏதோ சமாதானம் சொன்னார்கள். இப்போது சமஸ்கிருத வாரம் கொண்டாடும் படி மத்திய அரசுப் பள்ளிக்கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அந்தக் கொண்டாட் டத்தை ஆகஸ்ட் 7 முதல் 13-ஆம் தேதி வரை கொண்டாட வேண்டுமாம்! அந்த சுற்றறிக்கையின் தொடக்கமே எல்லா மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதம் என்று எழுதப்பட்டு இருக்கிறது.
சுஷ்மா சுவராஜூம், உமா பாரதியும் சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளட்டும். அதன் மூலம் அவர்கள் கட்சிக்காரர்களும், அவர்களும் இறும்பூது எய்தட்டும். நமக்கு கவலையில்லை.
கடந்த ஜூலை 19-ஆம் தேதி இந்து ஆங்கில நாளேட்டில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதாவது பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் போலோ என்பவர் நாடாளுமன்ற சபாநாயகரான சுமித்திரா மகாஜனை சமஸ்கிருத மயமான இந்தியில், நீங்கள் உங்கள் இருக்கையில் அமர்ந்து இருக்கிறபோது கடவுளைப் போல இருக்கிறீர்கள் என்று கூறினார்.
இப்படிப் பாராட்டியபோது எல்லா உறுப்பினர்களும் நிலை குத்தி நின்று விட்டனர். அவர் பாராட்டிய அந்த மூன்று வரிகளில் சமஸ்கிருதம், இந்தி, உருது அடங்கி இருந்தது என்று இந்து தெரிவிக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட்கட்சியில் பொது வாழ்க்கையைத் தொடங்கிய போலே காங்கிரசுக்குச் சென்றார். அதன் பிறகு ராஷ்டிரிய ஜனதா தளத்தில் சேர்ந்தார். பீகார் சட்டமன்றத்தில் எட்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இப்போது பா.ஜ.க.வில் இருக்கிறார். சமஸ்கிருதத்தில் பேச முயல்கிறார். முழு பா.ஜ.க. வாக பயிற்சி எடுக்கிறார். இதிலும் நமக்குக் கவலையில்லை. சமஸ் கிருதத்தில் பேசுகிறார்கள்;

Friday, August 01, 2014

விடுதலைக் குரல் வழிந்தோடும் சிம்பொனி.

-நாவுக் அரசன்-

அண்மையில் பின்லாந்து சும்மா சுற்றிப் பார்க்கப் போன போது,கொஞ்சம் சீரியஸ் ஆக பார்க்க நினைத்த ஒரு இடம் " பின்லான்டியா " என்ற ஒரு சிம்பொனி இசை வடிவத்தை இசை அமைத்த ஜோன் சிபிலிஸ் என்ற பின்லாந்து நாட்டவரின் நினைவிடம்.  அந்த நாட்டின் தலை நகரம் ஹில்சின்கியில் உள்ள அவரின் வீட்டை. வார இறுதி விடுமுறை நாளில் போனதால் தற்சமயம் முயூசியம் ஆக்கப்பட்டுள்ள  அவரின் அந்த வீடு மூடி இருந்தது. 
" பின்லான்டியா " சிம்பொனி எவளவு அதிசயமோ, அவளவு அதிசயம் அதை இசை அமைத்த ஜோன் சிபிலிஸ் இன் வாழ்க்கை, அதைவிட அதிசயம் அதை இசை அமைக்க அவர் பட்ட கஷ்டம். அதன்  பின்னால் உள்ள அடக்குமுறை சர்வாதிகார  பழிவாங்கல்கள். பிராந்திய வல்லரசுகளின் அட்டகாசம்.


பொதுவாக நாடுகள் சுற்றிப் பார்க்கப் போனால் அந்த நாடுகளின் பெண்டுகளை வேடிக்கை பார்பது தான் எப்பவும் முக்கியமா இருக்கும். கொஞ்சம் அங்கே இங்கே  படித்த உலக விசியங்களை நேரம் இருந்தால் ஆர்வக்கோளாரில நோண்டிப் பார்ப்பது." பின்லான்டியா "  என்ற பெயரில் ஒரு மயக்கும் வோட்கா குடிவகை உலகப் பிரசித்தம் என்று என்னைப் போன்ற கவுரவமான பெருங் குடிமக்களுக்கு நல்லாத் தெரியும்,ஆனால் அந்த " பின்லான்டியா " என்ற பெயரில் வோட்காவை விட மயக்கும்  ஒரு  உலகப் புகழ்  சிம்பொனி இருக்கு எண்டு பலருக்கு தெரியாது. அதுக்கு முக்கிய காரணம் அதை உருவாக்கியவர் வாழ்ந்த பின்லாந்து வடக்கு ஐரோப்பாவின் தொங்கலில் ,பால்டிக் கடல் விளிம்பில் உள்ள பின்லாந்து அதிகம் சென்ற நுற்றாண்டில்  மத்திய ஐரோப்பா கவனிக்கப்பட்ட அளவு கலை இலக்கிய வெளிச்சம் அதன் மீது விழாமல் இருந்தது எண்டு நினைக்கிறன். வெறும் எட்டு நிமிடம் மட்டும் இசைக்கப்படும் " பின்லான்டியா " மூலம் அந்த வெளிச்சத்தை இன்று உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள் மீது தாராளமாகவே வீச வைத்தார் ஜோன் சிபிலிஸ்.

Saturday, July 26, 2014

மனநிலை என்னவாக இருந்தாலும் அதை மாற்றக் கூடிய வல்லமை கவிதைக்கு உண்டு.

நெல்லை புத்தக விழாவில் கவிதை வாசிப்புக்கு அறிமுகமாக ஒரு சிறு கட்டுரைவாசிப்பு... 

அன்பான நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
சீரும் சிறப்புமாக நடை பெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், இந்தக் கவிதை வாசிப்பரங்கத்தில் பங்குபெறும் வாய்ப்பினைத் தந்தமைக்காக மாவட்ட நிர்வாகத்திற்கு என் வாழ்த்துகளும் அன்பும். குறிப்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கருணாகரன் அவர்களுக்கும் அவருக்கு துணையாகச் செயல் படுகிற என் அருமைச் சகோதரர் தேவேந்திரபூபதி அவர்களுக்கும் என் மனம் கனிந்த அன்பும் நன்றியும்.
நண்பர்களே, ”நினைவின் விருந்தாளியாக ஒரு கவிதை பிரவேசிக்கும்போது நம்முடைய உலகமே மாறிப்போகிறது”- என்று ஒரு மேல்நாட்டுப் பொன் மொழி ஒன்று உண்டு’. “இசைக்கு இளகாதவன் கொலையும் செய்வான்”என்று ஷேக்ஸ்பியர் சொல்லுவார். இசை எப்படி ஒருவனை மென்மையாக்குகிறதோ அதே போல் நம்முடைய மனநிலை என்னவாக இருந்தாலும் அதை மாற்றக் கூடிய வல்லமை கவிதைக்கும் உண்டு. ஒரு சம்பவம் சொல்வார்கள், வாழ்வில் விரக்தி மேலிட்டுத் தற்கொலை எண்ணம் மேலோங்கியிருந்த ஒரு பொழுதில் நண்பர் ஒருவர் தன் கையில் கிடைத்த நான்கு வரிக் கவிதை ஒன்றை வாசிக்கிறார்,

“இருந்து என்ன ஆகப்போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன ஆகப் போகிறது
இருந்து தொலையலாம்..”

Thursday, July 24, 2014

மதன் மோகன் மற்றும் நெளஷாத்- வெகுஜன இசையை மதிப்பிடுதல் பற்றி

-ஷாஜி-

இசையை உள்வாங்கும் கலை என்பது இசையை உருவாக்கும் கலை போலவே மேலானது. நாம் இசையைப் பயிலுவதில்லை. அதை உணர்கிறோம்.
தன்னுடைய வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின்போது லதா மங்கேஷ்கர் அவர்கள் அதுவரை பாடிய பாடல்களிலிருந்து மிகச்சிறந்த பத்து பாடல்களை தேர்வுசெய்து வெளியிட்டார். அதில் நௌஷாத்எஸ் டி பர்மன்அனில் பிஸ்வாஸ் ஆகியவர்களின் எந்தப்பாடலும் இடம் பெறவில்லை! ஆனால் அதில் சலில் சௌதுரிரோஷன், வசந்த் தேசாய் போன்றோர் இருந்தனர். அத்தொகுப்பில் இரண்டுமுறை தெரிவுசெய்யப்பட்ட ஒரே இசையமைப்பாளர் மதன் மோகன்.

இந்தி திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர் யார் என்று கேட்டால் மதன் மோகனின் பெயரை எத்தனைபேர் சொல்லக்கூடும்வெகுஜன மத்தியில் மிக மிக அபூர்வமாகவே அவர் குறிப்பிடப்படுகிறார். ரோஷன் பெயர் இன்னும் அபூர்வம். சூப்பர் ஹீரோ ரிதிக் ரோஷனின் தாத்தா என்றால் சிலர் நினைவுகூரக்கூடும். அதேசமயம் நௌஷாத் போன்றவர்கள் அடைந்த புகழ் மிகமிக பெரிது. அவர் மறைந்தபோது எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் அவரைப்பற்றிய பலமடங்கு பெரிதுபடுத்தப்பட்ட பிம்பம் முன்வைக்கப் பட்டதைத்தான் கண்டேன்.

திரை இசை என்பது மிகநுட்பமானது. அதே சமயம் மிகமிக பிரபலமானதும் வேகமாக மாறுவதும்கூட. ஆகவே தெளிவான திறனாய்வுகளோ கச்சிதமான மதிப்பீடுகளோ இங்கு உருவாவதில்லை. வெற்றியும் புகழும் பல்வேறு காரணங்களை ஒட்டி உருவாகி வருகின்றவை. அவ்வெற்றியின் பக்கவிளைவாக நாளிதழ்களில் மேலோட்டமாக எழுதிக்குவிக்கப்படும் கட்டுரைகள் மூலம் சில பிம்பங்கள் உருவாகி அவை விவாதிக்கப்படாமல் அப்படியே நினைவில் நிலைபெறுகின்றன. இதனால் மதிப்பீடுகளை விட பிரமைகள்தான் அதிகமும் நம்மிடம் வாழ்கின்றன.

Tuesday, July 22, 2014

பாபர் மசூதிச்சுவர்களில் பற்றிப் படர்ந்த விஷச்செடியின் வேர்கள்.

-சுகுணா திவாகர்- 

பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் மாதமொன்றில்தான். 1949, டிசம்பர் 22 அன்று முதன்முதலாக பாபர் மசூதியில் சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக ராமர் சிலை வைக்கப்பட்டது. அந்த சம்பவத்தின் பின்னுள்ள பின்னணிகள் குறித்து விரிவாக விவரிக்கும் நூல் கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே. ஜா எழுதிய ‘அயோத்தி : இருண்ட இரவு  - பாபர் மசூதிக்குள் ராமன் தோன்றிய ரகசிய வரலாறு’. 

இந்தியாவின் சமூக அரசியல் வரலாற்றை பாபர் மசூதி இடிப்புக்கு முன்பு, பின்பு என்று வகைப்படுத்திக் கொள்ளலாம். 1992 டிசம்பர் 6க்குப் பிறகு இந்தியாவின் முகம் நிறையவே மாறியிருக்கிறது. இந்திய மக்களின் மனநிலையிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியில் அமர்வதற்கு பாபர் மசூதி இடிப்பும் அதனையொட்டி எழுந்த இந்துத்துவ எழுச்சியும் உதவியிருக்கிறது. இதன் எதிர்வினையாக இஸ்லாமிய இளைஞர்களில் சிலர் ஆயுதக்குழுக்களோடு இணைந்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவில் எங்கெல்லாம் இந்துத்துவ இயக்கங்கள் வலுவாக இருக்கின்றனவோ அங்குதான் இத்தகைய பயங்கரவாதக் குழுக்களின் குண்டுவெடிப்புகள் அதிகளவில் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறத்தில் இதற்குமாறாக முஸ்லீம்கள் அதிகமும் அரசியல்மயப்படுத்தப்படுவதும் நடைபெறுவது. குறிப்பாக, தமிழகத்தில் வெறுமனே மார்க்கவிஷயங்களில் மட்டும் அதிகம் கவனம் செலுத்திவந்த முஸ்லீம்களும் அவர்களது பத்திரிகைகளும் சாதி, தீண்டாமை, ஈழப்பிரச்னை போன்றவற்றிலும் கவனம் குவிப்பதும் ஒருசில புள்ளிகளில் பெரியாரிய இயக்கங்கள், தலித் அமைப்புகள், தமிழ்த்தேசிய அமைப்புகளோடு இணைந்து சில அரசியல் செயற்பாடுகளை நிகழ்த்துவதும் அதிகரித்துவருகிறது. ஊடகங்களிலும் திரைப்படங்களிலும் முஸ்லீம்கள் குறித்த எதிர்மறைப் பிம்பங்கள் கட்டமைக்கப்படுவதும் பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பொய்வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கிற அவலமும் நடைபெறுகிறது. இதன் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் மேலும் தங்களுக்குள் இறுக்கமடைவதும் தங்களுக்கான தனித்த அடையாளங்களை இறுக்கமாகக் கடைப்பிடிக்கிற சூழலும் நிலவுகிறது. இப்படிப் பல்வேறுவிதமான சமூக மாற்றங்களுக்குக் காரணமான பாபர் மசூதி பிரச்னையின் வேர் தொடங்கிய நாள், அதே பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் மாதமொன்றில்தான். 1949, டிசம்பர் 22 அன்று முதன்முதலாக பாபர் மசூதியில் சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக ராமர் சிலை வைக்கப்பட்டது. அந்த சம்பவத்தின் பின்னுள்ள பின்னணிகள் குறித்து விரிவாக விவரிக்கும் நூல் கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே. ஜா எழுதிய ‘அயோத்தி : இருண்ட இரவு  - பாபர் மசூதிக்குள் ராமன் தோன்றிய ரகசிய வரலாறு’. 

Wednesday, July 16, 2014

ஏகலைவன் தென் மோடிக் கூத்துப்பிரதிக்கான கட்டியம்

-கரவைதாசன்-

தமயந்தியின் ஏகலைவன் நாட்டுக்கூத்து 1995ம் ஆண்டு பிரதியாக்கம் செய்யப்பட்டபோது கூத்துப்பிரதிககள் பிரதியாக்கம் செய்யப்படுவதன் அவசியம் குறித்து என்னால் வழங்கப்பட்ட கட்டியம் இது. இக்கூத்துபிரதி மீண்டும் இந்த ஆண்டு(2014) பிரதியாக்கம் செய்யப்படும் செய்தி மகிழ்வினை தருகிறது.

தமிழ்ச் சூழலில் ஆவணப் படுத்துதல் என்பது அருகியே வந்திருக்கின்றது. ஆயினும் கூத்துப் பற்றி தமிழ்நாட்டில் 11ம் நூற்றாண்டில் ராஜ ராஜ சோழனின் வரலாற்றினை நாடகமாக மேடையேற்றம் செய்ததாக கல்வெட்டுக்கள் உள்ளன. ஆனால் 18ம் நூற்றாட்டின் கூற்றுகளிலேயே சங்கரதாஸ் சுவாமிகள் புராணக் கதைகளை நாடகப் பிரதியாக்கம் செய்தாரென்றும் 19ம் நூற்றாட்டின் கூற்றுகளில் அன்று நீதிபதியாக இருந்த காசி விஸ்வநாதன் அவர்கள் "தம்பாச்சாரி விலாசம்" "கையூடு தாசில்தார் விலாசம்" போன்ற நாடகங்களை பிரதியாக்கம் செய்தார் என்றும் காணக்கிடைக்கின்றன. இப்படியாக நாடகப் பிரதியாக்கத்திற்கு ஒரு வரலாற்றுப் போக்கிருக்கின்றது. இருப்பினும் நாடகப்பிரதிகள் தமிழில் மிகவும் ஒறுப்பாகவே இருக்கின்ற நிலையிலே, நாடகப் பிரதியினை அச்சாக்கம் செய்வதன் அவசியம் கருதி, தமயந்தியின் "ஏகலைவன்" தென் மோடிக் கூத்துப்  பிரதியினை அச்சாக்கம் செய்வதென்பது மிகவும் ஆரோக்கியமான செயல் நெறியே. 


நாடகப்பிரதிகள் நாடகப்பாடமொழி நாடக அரங்கமொழி என இருவகைப்பட்டிருக்கும் இதில் நாடக அரங்கமொழிப் பிரதிதான் அரங்காட்டத்தில் முதன்மை பெறுகிறது. தமயந்தியின் ஏகலைவன் தென்மோடிக் கூத்துப்  பிரதியினை வாசிப்பிற்குள்ளாக்கும்போதே இதன் தன்மையை புரிந்துகொள்வீர்கள். 

மகாபாரதத்திலே வரும் உப பாத்திரமான ’ஏகலைவன்’ பிரதான பாத்திரமாக உருவாக்கம் செய்யப்பட்டு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறுபட்ட நாடகக் காரர்களால் ஆடப்பட்டும், மீள்வாசிப்பிற்கும் மீள்உருவாக்கத்திற்கும் உள்ளாகியுள்ளது. தமிழ்நாட்டில் பிரளயனினால் உபகதை என்ற தலைப்பில் மேடையேறிய நாடகங்களில் முதல்க் கதை ஏகலைவனாக அமைந்திருந்தது. அதில் ஏகலைவன் தோற்கடிக்கப்பட்டு இறுதியில் காணிக்கையாக வலது கட்டை விரலை வழங்குவதாகவும் அந்தக் கட்டை விரலை அர்ச்சுணன் அம்பு விட்டு அடிப்பதாகவும் அமைந்திருந்தது. 

ஈழத்து நெல்லியடி அம்பலத்தாடிகள் மன்றைச் சேர்ந்த இளைய பத்மநாதனினால் உருவாக்கம் செய்யப்பட்ட ஏகலைவன் நாடகத்தில் துரோணரின் காலடியில் ஏகலைவன் தன் வலது கை கட்டை விரலை தானே கோடரியால் வெட்டி காணிக்கையாக வழங்குவதாகவும் அதனை அவனது தந்தையும் நண்பர்களும் பார்த்து ஆத்திரமடைவதாகவும் அமைந்துள்ளது. 

Monday, June 09, 2014

அணிந்துரை: கோப்பிக்காலவரலாறு 1824 - 1893 (கண்டிச்சீமையிலே)

ஒரு சமூகம் முன்னோக்கிச் செல்லும்போது சற்று பின்னோக்கியும் பார்க்க வேண்டும். தான் இதுவரை காலமும் நடந்து வந்த பாதை; கடந்து வந்த பாதை; அதில் எதிர்நோக்கிய இன்னல்கள்; அவலங்கள் பற்றிய புரிந்துணர்வு என்பன முன்னோக்கிய நடைக்கு உதவும் என்பதால் தான் சமூக வரலாறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வரலாறு என்பதற்கு சுருக்கமான வரைவிலக்கணம் கடந்த காலம் பற்றிய அறிவுத்தொகுதி என்பதாகும். இந்தியாவின் பாதகமான சமூக, பொருளாதார நிலைமைகளால் அங்கிருந்து தள்ளப்பட்ட (கதண்ட ஊச்ஞிவணிணூ) அதேவேளையில், இலங்கையில் திறக்கப்பட்ட பெருந்தோட்டப் பொருளாதாரம் வழங்கிய வாய்ப்புகளாலும் ஈர்க்கப்பட்ட (கதடூடூ ஊச்ஞிவணிணூ) தமிழகத்து பின் தங்கிய தொழிலாளர்கள் வாழ்வாதாரம் தேடி 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் மலையகப் பிரதேசங்களுக்கு வந்து சேர்ந்தனர். ஆரம்ப கால கோப்பித் தோட்ட வாழ்க்கையில் அவர்கள் பட்டபாடுகள், எதிர்நோக்கிய அவலங்கள், இன்னல்கள், அவமானங்கள், பிரச்சினைகள் என்பன பற்றிய ஆதாரங்களின் உதவியோடு எளிமையான தமிழ் நடையில் தனது மக்கள் பற்றிய அனுதாப உணர்வுடன் கவிஞரும் சட்டத்தரணியுமான இரா.சடகோபன் ஓர் அருமையான, பாராட்டத்தகுந்த நூலை எழுதி வழங்கியுள்ளார்.

இலங்கை வாழ் இந்திய, வம்சாவழியினர் பற்றி ஏற்கெனவே வெளிவந்த சில நூல்கள் (எனது இலங்கை  இந்தியர் வரலாறு (1989) உட்பட இவ்விடயம் பற்றி இந்த அளவுக்கு ஆழமாக  நோக்கவில்லை. ஆயினும் பேராசிரியர்களான பஸ்தியாம்பிள்ளை, கிங்ஸ்லி டி சில்வா ஆகியோரும் திரு. பாலசிங்கமும் தமது ஆங்கில மொழியிலான ஆய்வேடுகளில் இவ்விடயத்துக்கு ஒரு அத்தியாயத்தை ஒதுக்கியிருந்தனர். அவர்களுடைய அம்மூன்று அத்தியாயங்கள்கூட சடகோபன் எடுத்துக் காட்டும் கோப்பிகால  அவலங்களை இந்த அளவுக்கு எடுத்துக்காட்டவில்லை. ஏனெனில் பஸ்தியாம்பிள்ளை பிரதானமாக  பார்ன்ஸ் தேசாதிபதி பற்றியும் பாலசிங்கம் பிரௌண்றிக் தேசாதிபதி பற்றியும் கிங்ஸ்லி.சில்வா  மிஷனரி அமைப்புகள் பற்றியுமே தமது ஆய்வேடுகளை தயாரித்திருந்தனர். எவ்வாறாயினும் அவர்களுடைய மூன்று அத்தியாயங்களும் ஆங்கில நாட்டில் கிடைக்கப் பெற்ற ஆவணங்களின் துணையுடன் பெருந்தோட்ட மக்களின் அவலங்களைத் தெளிவுபடுத்தின. சடகோபனின் இந்நூல் இம்மக்களின் அவலங்களை நுணுக்கமாக நோக்கும் ஒரு ஆய்வு (ஆடிஞிணூணிண்வதஞீதூ) எனலாம். இத்தகைய ஒரு நூல் தமிழில் வெளிவருவது இதுவே முதன் முறை என்பது இதன் சிறப்பம்சம்.

Saturday, May 31, 2014

எது ஹைகு

-ரீ.கே.கலாப்ரியா- 

ஹைகு பற்றி – ஒரு நண்பருக்குச் சொன்னவை :-

ஹைகுவின் தோற்றம் வளர்ச்சி இவை பற்றிப் பேசும் முன், தமிழ்க் கவிதைப் பரப்பில் அதன் தாக்கம் பற்றிய தகவல்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். பாரதியார்தான் முதன் முதலில் ஹைகு பற்றிப் பேசுகிறார். கல்கத்தா ’ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையை மேற்கோள் காட்டி அவர் வியக்கிறார். அவர் ஹைக்குவின் அசல்ப் பெயரான ’ஹொக்கு’என்று எழுதுகிறார். கல்கத்தா என்கிறபோது தாகூர் அது பற்றித் தெரியாமல் இருந்திருப்பாரா.தாகூரது ‘Stray Birds’ என்ற அற்புதமான நூலில் ஹைகு சாயலில் பிரமாதமான கவிதைகள் எழுதியிருக்கிறார். அது பற்றிப் பின்னால் காண்போம். நவீன தமிழில் கசடதபற இதழில் ஒரு ஹைகுவை மொழி பெயர்த்துப் போட்டிருந்தார்கள். ரைஸான் எழுதிய அந்தக் கவிதையைப் பின்னால் சொல்லுகிறேன். நான் ஹைகு பற்றி அப்போதுதான் அறிந்து கொண்டேன். அந்தப் பாதிப்பில்

“நேரங்கழித்துக் குளிக்கின்றன
மழை பெய்கையில்
மரத்தடியில் சிந்திய மலர்கள்” (1970)
*
”தொலைவில் புணரும் தண்டவாளங்கள்
அருகில்ப் போனதும்
விலகிப் போயின” (1970)

என்றெல்லாம் நானும் எழுதினேன்.

ஹைகு அல்லது ஹொக்கு, முதலில் ’டாங்கா’ என்ற கவிதை வடிவத்திலிருந்து பிறந்தது. அதில் ஐந்து வரிகள் இருக்கும். அது ஒரு போட்டிப் பாடல் போல. முதல் மூன்று வரிகளை ஒருவர் சொல்ல அதை முடித்து வைக்கும் கடைசி இரண்டு வரிகளை இன்னொருவர் சொல்ல வேண்டும். ’டாங்கா’வின் முதல் மூன்று வரிகளை ‘ஹொக்கு’ என்பார்கள். பிற்காலத்தில் இந்த முதல் மூன்று வரிகளே ஒரு அற்புதக் கவிதை வ்டிவமாக நிலைத்து விட்டது. அதனாலேயே ‘ஹொக்கு’ என்பது ’ஹைகு’வாக ஆனதாகவும் சொல்வார்கள். ஹைகுவுக்கென்ற இலக்கணம்: அதில் பதினேழு அசைகள் மட்டுமே இருக்கும்,முதல் மற்றும் கடைசி வரிகளில் ஐந்து அசைகளும்,நடு வரியில் ஏழுமாக மொத்தம் பதினேழு அசைகள் (Syllables). அநேகமாக கவிதையில் ஏதாவது ஒரு பருவம் அல்லது பருவத்தைக் குறிக்கும் ஒரு நேரடிச் சொல், அல்லது பருவத்திற்குரிய பூச்சிகள், பொழிவுகள் போல எப்படியும் ஒரு சொல் இடம் பெற வேண்டும். ஒரு நல்ல ஹைகு வெறும், இயற்கை அல்லது உணர்ச்சி பற்றிய ’வசன வாக்கியமோ’ அல்லது இயற்கைச் சித்திரமோ மட்டுமல்ல, ’மேம்போக்கான பார்வை’க்குத் தென்படாத, இரண்டு வெவ்வேறு விஷயங்களுக்கு இடையேயுள்ள அடையாளத்தைச் சொல்ல வேண்டும். நமக்கு உள்ள வெண்பா, கலிப்பா போன்ற பாவிலக்கணம் மாதிரியான ஒரு விஷயம் இது. அதனால்த்தான் சுஜாதா அடிக்கடி சொல்வார், தமிழில் வருபவை ஒரு வகை குறுங்கவிதைகளே தவிர ‘ஹைகு’ அல்ல, என்று. 70களின் பிற்பகுதியில் இருந்து தமிழில் நிறைய குறும்பாக்கள் வருகின்றன, அதற்கு முன்பே கூட குறள் வெண்பா போல ஏற்கெனவேயும் இருக்கின்றன. தாகூரை இதற்கு முன்னோடியெனச் சொல்லலாம்

எரியும் நினைவுகள்- யாழ் நூலகம்

ஓர் கலாச்சாரப் படுகொலையின் நினைவைத் தொடரும்
எம்.ஏ.நுஃமான் அவர்களின் கவிதை
(தமிழ், சிங்களம், ஆங்கிலம், காணொளி)
புத்தரின் படுகொலை!
----------------------------------
நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.
இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?'
என்று சினந்தனர்.
'இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்......
என்றனர் அவர்கள்.
'சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை'
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.
சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
சிகாலோவாத சூத்திரத்தினைக்
கொழுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
தம்ம பதமும்தான் சாம்பல் ஆனது.
- எம்.ஏ.நுஃமான்
-----------------------------------------------------
මම දිටිමි සිහිනයක් ඊයේ රෑ
මරන ලදහ බුදුහිමියෝ වෙඩි තබා
නීතිය රකින පොලිසිය විසින්
ලෙයින් පෙගුණු ශ්රී දේහය
වැතිර තිබිණි
යාපා පටුනේ පුස්තකාලය අභියස
පැමිණියහ ඇමතියෝ අඳුරට මුවා වීල
ප්රශ්න කළහ කෝපාවිශ්ට වල
,නැත මොහුගේ නම අපේ ලැයිස්තුවේ
වැරදීමක් වෙලාවත් ද?,
,නෑ නෑ ඇමතිවරුනිෟ
වැරදීමක් වෙලා නැහැල
නොයවා මොහු පරලොව
හානියක් කළ හැකි ද කුරා කුහුඹියෙකුටවත් ?,
තැතනූහ පොලිස්කාරයෝ
—හා හරි හරිෟ සඟවාපියව් සිරුර වහා ම,
කියමින් අතුරුදන් වූහ ඇමතියොA
එකෙණෙහි ම ඇදගෙන යනු ලැබිණ ශ්රී දේහය
පුස්තකාලය තුළට
සිවිල් ඇඳුමින් සිටි
පොලිස්කාරයෝත
ගොඩගැසූහ දේහය මත පොත්
ඉතා දුර්ලභ ඉතා අගනා
අනූ දහසක්
ඉක්බිති ගිනි තැබූහ චිතකයට
සිඟාලෝවාද සූත්රය ගිනි හුල ලෙස ගෙන
මෙසේ ගිනිබත් විය
රන් වන් බුදු බඳ
දම්මපදයත් සමඟ
--------------------------------------------------
Last night
I had a dream
Lord Buddha was shot dead
by the police-
guardians of the law.
His body lay drenched in blood
on the step
of the Jaffna Library
Under cover of darkness
came the ministers.
“His name-not in our lists
Why did you him?”
they ask in anger.
“No, sirs, no
There was no mistake.
Without bumping him off
it was impossible
to harm even a fly.
Therefore…,” they stammered.
“Okay, okay,
Hide the corpse.”
The ministers vanish.
The men in civvies
dragged the corpse
into the library.
They heaped the books,
rare and valuable,
ninety thousand in all.
They lit the pyre
with the Cikalokavada Sutta.
Thus the remains
Of the Compassionate One
were burned to ashes
along with the Dhammapada.