இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப் படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், ரச்சேல் ஹோரி தன் பெற்றோர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து… சில பகுதிகள்!
நான் பாலஸ்தீனத்துக்கு வந்து சரியாக இரண்டு வாரங்களும் ஒரு மணி நேரமும் ஆகி விட்டது. ஆனால் இங்கே நான் காண்பதை உங்களுக்கு விவரிக்க, அதாவது அமெரிக்காவுக்குப் புரிய வைக்க வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன்.
குண்டுகளால் துளைக்கப்பட்ட வீட்டுச் சுவர்கள், கழுகுப் பார்வையால் கண்காணிக்கும் இராணுவம் – இவையிரண்டும் இல்லாத ஒரு வாழ்க்கையை இங்குள்ள குழந்தைகள் வாழ்ந்ததேயில்லை. இருப்பினும் “வாழ்க்கை என்பது எல்லா இடங்களிலும் இந்த மாதிரி இல்லை” என்பதை இங்குள்ள சின்னஞ்சிறு பிள்ளைகள் கூடப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
நான் இங்கே வந்து இறங்குவதற்கு இரண்டு நாட்கள் முன் ஒரு 8 வயதுச் சிறுவனை இசுரேலிய இராணுவம் சுட்டுக் கொன்று விட்டது. “அவன் பெயர் அலி” என்று என்னிடம் கிசுகிசுக்கிறார்கள் இங்குள்ள குழந்தைகள். “ஷரோன் யாரு – புஷ் யாரு” என்று அரபியில் அவர்கள் கேட்க, “ஷரோன் கிறுக்கன் – புஷ் கிறுக்கன்” என்று நானும் எனக்குத் தெரிந்த அரபு மொழியில் பதில் சொல்கிறேன். அரபு மொழியை இப்படித்தான் எனக்குக் கற்றுத் தருகிறார்கள் இந்தச் சிறுவர்கள். உலக அரசியலின் அதிகாரம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நான் முன்னர் புரிந்து வைத்திருந்ததைக் காட்டிலும் இங்கே இருக்கும் 8 வயது வாண்டுகள் தெளிவாக அறிந்திருக்கிறார்கள்.
புத்தகங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள், செய்திப் படங்கள் போன்ற பல வழிகளில் பாலஸ்தீனத்தைப் பற்றி நான் சேகரித்த அறிவு அனைத்தையும் விஞ்சுகிறது இங்குள்ள எதார்த்தம். நேரில் பார்த்தாலொழிய நீங்கள் இதைப் புரிந்து கொள்ளவே முடியாது; ஒருவேளை நேரில் வந்து அனுபவித்தாலும் முழுமையாகப் புரிந்து விட்டதாக நான் சொல்லிக் கொள்ள முடியாது.
என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். இங்குள்ள கிணறுகளை இடித்தாலும் தண்ணீர் வாங்கிக் குடிக்க என்னிடம் பணம் இருக்கிறது; நினைத்தால் நான் உடனே அமெரிக்காவுக்குத் திரும்பி விடலாம்; என் குடும்பத்தினர் யாரையும் இராணுவம் ராக்கெட் வீசிக் கொன்றதில்லை; எனக்கொரு வீடு இருக்கிறது; நான் ஆற அமரக் கடலைக் கண்டு ரசித்திருக்கிறேன்; பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பும் வழியில் இராணுவத்தால் கொல்லப்படுவேனோ என்ற பயமின்றி சந்தோஷமாக நான் வீடு திரும்பியிருக்கிறேன்.
எனவேதான் இக்குழந்தைகள் வாழும் உலகத்திற்குள் கால் வைத்த மறுகணமே இந்தக் கொடூரங்களைக் கண்ணால் கண்ட மறுகணமே என் ரத்தம் கொதிக்கிறது. “ஒருவேளை ஒரு பாலஸ்தீனச் சிறுவன் அமெரிக்கா எனும் என்னுடைய உலகத்தை நேரில் வந்து பார்த்தால் அந்தப் பிஞ்சு மனம் எப்படித் துடிக்கும்” என்ற கேள்வி என்னை வாட்டுகிறது.
இவர்களைப் போலன்றி நான் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திருக்கிறேன். அமைதியான இடத்தில் வசித்திருக்கிறேன். கிணற்றை இடித்து குடிக்கும் தண்ணீரை இராணுவம் பறித்து விடும் என்று நான் கற்பனையில் கூட அஞ்சியதில்லை; இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் சுவர்கள் உட்புறமாக இடித்துத் தள்ளப்பட்டு நான் பதறி விழித்ததில்லை; தனது சொந்தங்களை இராணுவத்திற்கு காவு கொடுத்த யாரையும் நான் அமெரிக்காவில் சந்தித்ததில்லை; என்னுடைய வீட்டை நாற்புறமும் இராணுவக் கோபுரங்கள் கொலைவெறியுடன் குறிபார்க்கவில்லை.
ஆனால், இந்த பாலஸ்தீனச் சிறுவர்களோ நாம் வாழும் அமைதியான வாழ்க்கையை அறிந்ததே இல்லை. நினைத்துப் பாருங்கள். உங்கள் குழந்தைப் பருவம் முழுவதும் உயிர் வாழ்வதற்காக மட்டுமே நீங்கள் போராடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்குமென்று ! உலக வல்லரசின் ஆதரவுடன், உலகின் நான்காவது பெரிய இராணுவம் உங்களையும் உங்கள் வீட்டையும் துடைத்தெறிவதற்கு மூர்க்கத்தனமாக முனைந்து கொண்டேயிருக்க, அதையெதிர்த்து நீங்கள் போராடிக் கொண்டேயிருக்க வாழ்க்கை என்பதே இதுதான் என்றால்…
அதனால்தான் எனக்கு இப்படித் தோன்றுகிறது. இந்த பாலஸ்தீனக் குழந்தைகள் அமெரிக்கா எனும் என்னுடைய உலகத்தை உண்மையிலேயே நேரில் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற கேள்வி என்னை வாட்டுகிறது.
நன்றி: தமிழ்ச்சிறகு
நன்றி: தமிழ்ச்சிறகு
No comments:
Post a Comment