Sunday, September 07, 2014

தெணியானின் குடிமைகள் - ஒரு வாழ்வியலின் ஆவணம்

-முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்-
ஈழத்துத் தமிழ் நாவல்களின் வரிசையில் ஒரு புதிய வரவாக ‘குடிமைகள்’ வெளிவந்துள்ளது. சென்ற ஆண்டு ஜீவநதி வெளியிட்ட இந்த நாவலை எழுதியவர் தெணியான். ஈழத்து ஆக்க இலக்கியப் படைப்பில் சிறந்த பங்களிப்பை ஆற்றியவர். தலித் இலக்கிய முன்னோடியான கே. டானியலின் வழி வந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை நாவல் வடிவில் எழுதி ஆவணப்படுத்தியுள்ளார். தெணியானின் ஐம்பது வருட எழுத்துப் பணியில் குடிமைகள் நாவல் ஒரு மைல் கல்லாக நிற்கிறது. இந்த நாவலை உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஒரு முறை படிக்கவேண்டும். ‘அப்படி அந்த நாவலில் என்ன சிறப்பு இருக்கிறது?’ என்று கேட்க எண்ணுபவர்களுக்கு ஒரு விளக்கமாக இந்த நாவல் அறிமுகம் எழுத்துருப்பெற்றுள்ளது.
இந்நாவலின் வெளியீட்டாளர் நாவலின் இன்றியமையாத சிறப்பை மூன்றாகப் பதிவு செய்துள்ளனர். அவை நாவலைப் படிக்கத் தூண்டுவனவாயுள்ளன.
1. தெணியானின் ஐம்பது வருட எழுத்துலகப் பயணமானது இடையறாத தொடர்ச்சியான பயணமாக அமைந்தது என்பதற்கான சான்றாக இப்பயணம் ஐம்பது வருடங்களைக் கடந்த நிலையிலும் இந்நாவல் வெளிவருதல்.

2. இலங்கை அரசினால் இவ்வருட ‘சாகித்யரத்னா’ என்ற உயர் விருது தெணியானுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்ட வேளையில் அவ்விருதுக்கான தகைமைக்கான அத்தாட்சியாக அமைதல்.
3. சமூக ஏற்றத் தாழ்வின் பின்னணியில் மக்களின் வாழ்வியற் கோலங்களை உணர்வுகளை சிறுகதைகளினூடாகவும் நாவல்களினூடாகவும் எழுத்தாளர் தெணியான் வெளிப்படுத்தி வரும் நிலையில் ஒடுக்;கப்பட்ட மக்களின் வாழ்வியலை முற்றுமுழுதாகக் களமாகக் கொண்டு கவனமாகப் படைக்கப்பட்ட ‘உச்சப் படைப்பாக’ (Master Piece) பேசப்படவுள்ளமை.
இம்மூன்று கருத்துநிலையான தேடல்களுக்கு குடிமைகள் நாவல் உறுதியாக உட்படுத்தப்பட வுள்ளது. எனவே பரணீதரனின் தெணியான் பற்றிய மதிப்பீடும் ஆய்வுசெய்யப்படவுள்ளது. மேலும் பரணீதரன் குடிமைகள் நாவலை வாசகர்களுக்கு ஒரு தேடல் உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடனும் வெளியிட்டுள்ளார்.
1. நாவலின் கட்டமைப்பு
ஒரு நாவலை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும்போது அதன் கட்டமைப்பை முதலில்
எடுத்துரைக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் குடிமைகள் நாவல் 24 காட்சிப் புலங்களை உள்ளடக்கி 192 பக்கங்களில் வெளிவந்துள்ளது. பஞ்சமர்களுள் ஒரு பகுதியினரான சவரத் தொழிலாளரின் வாழ்க்கைக் கோலங்கள் சொற்புள்ளிகளால் துல்லியமாகக் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. கதைக்களம் இலங்கையில் யாழ்ப்பாணத்தையே மையமாகக் கொண்டிருந்தாலும் மலைநாடு வரை விரிந்து கிடக்கிறது. கதை மாந்தராக சவரத் தொழிலாளரும் வேளாளரும் மையமாக அமைய ஏனைய பஞ்சமரும் இணைந்திருக்கின்றனர். நாவலின் கதை கூறும் உத்தியில் ஆசிரியர் கூற்று நிலையே பரவிநிற்கிறது. ஆண்கள், பெண்கள் என்ற வகையில் பல பாத்திரங்களின் உணர்வும் உரையாடலும் நாவலில் பின்னிப் பிணைந்துள்ளன. நாவலின் கதை முத்தனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பலருடைய வாழ்க்கையோடு இணைந்து செல்கிறது. குடிமைகளின் கதையாக உருவம் கொண்டுள்ளது. ஆசிரியரின் மொழிநடை நாவலின் ஓட்டத்தை நிதானமாகக் கொண்டு செல்கிறது.

இந்தக் கட்டமைப்பை வாசகர் தெளிவாக அறியச் சில விளக்கங்கள் தேவை. எனவே சுருக்கமாகத் தருவது பயனுடைத்து.
2. நாவலின் காட்சிப்புலம்:
ஆசிரியருடைய எண்ணத்தில் நாவலின் காட்சிப் புலங்களை அமைக்கும்போது இன்றைய மாற்றமான தோற்றம் முன்னின்றுள்ளது. அதனால் கதைப்புலத்தை வெகு நுணுக்கமாகக் காட்சிப் படுத்தியுள்ளார். பொன்னி என்னும் பெண் பாத்திரமே முதலில் நாவலில் ஆசிரியர் அறிமுகம் செய்யும் பாத்திரமாகும். அப்பாத்திரம் ஒரு விடியற்பொழுதை எதிர்கொள்ளும் நிலையே நாவலின் தொடக்கமாக அமைந்துள்ளது. அக்காட்சிப் புலம் வருமாறு அமைந்துள்ளது.
‘சேவல் ஒன்று வெகு தூரத்தில் முதற்குரல் எழுப்பி கதிரவன் வரவுக்கு கட்டியம் கூறுகிறது. அந்த ஒரு குரலுக்காக் காத்திருந்தவைகள் போல அதனைத் தொடர்ந்து நான்கு திசைகளிலும் இருந்து சேவல்கள் விழித்துக் கொண்டு ஆரவாரமாகக் குரல் கொடுக்கின்றன. முதற்குரல் செவியில் விழுந்த பின்னர் அடுத்த குரல்கள் தொடர்ந்து எழுமென்று நம்பிக்கையாக அவள் அறிந்து வைத்திருக்கின்றாள்.
எப்பொழுதும் முதற்குரல் கொடுப்பதில்தான் ஒரு தயக்கம். சேவல்களின் குரலைத் தொடர்ந்து கோயில் மணியோசை ஒலிக்கிறது.’
இந்தக் காட்சிப்புலம் நாவலின் தொடக்கமாக அமைந்திருந்தாலும் இதனூடாக ஆசிரியரின் நோக்கும் இலக்கும் வெகு நுட்பமாக உள்ளே பதிவுசெய்யப்பட்டுள்ளன. குடிமைகளின் வாழ்வி லிருந்து இருள் விலகவேண்டுமாயின் அவர்களிடையே ஒரு முதற்குரல் வெளிப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து அனைவரும் குரல் கொடுக்கலாம். தெணியான் ஓர் ஆசிரியர். மாணவருக்கு அறிவு புகட்டும் பணியைச் செய்தவர். அவர் தனக்கு ஒரு சமூக அறிவூட்டல் கடமையும் இருப்பதை நன்கு உணர்ந்திருந்தார். அதனை நாவலின் ‘என்னுரை’ என்னும் பகுதியில் வருமாறு எழுத்திலே பொறித்துள்ளார்.
‘இருளில் கிடந்து துன்பப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுநிலையை வெளி உலகம் அறியத் தகுந்த வண்ணம் எடுத்துச் சொல்ல வேண்டும். விழிப்புணர்வை ஊட்டவேண்டும் என்னும் அக்கறை எப்பொழுதும் எனக்கு உண்டு. அதனால் குடிமைகளாக வாழ்ந்து வரும் சவரத்தொழிலாளர் சமூகம்பற்றிச் சித்திரிக்கும் இந்த நாவலை எழுதியிருக்கிறேன்.’
ஆசிரியர் தனது எழுத்தின் தேவையை நேரடியாகவே கூறுவது நாவலின் பக்கங்களை விரைந்து படிக்கத் தூண்டுகிறது. காட்சிப்புலம் நாவலின் பணியை நன்கு உணர்த்த கதாபாத்திரங்களின் இயக்கமும் செயற்பாடும் நாவலை முழுமையாக நிறைவித்துள்ளன. அவை குடிமைகளின் வாழ்க்கைக் கோலங்களாக வாசகர் நெஞ்சத் திரையில் பதிகின்றன.
3. நாவலின் கதைக்களம்
குடிமைகள் நாவலின் கதைக்களம் யாழ்ப்பாணத்தையே மையமாகக் கொண்டுள்ளது. ஏறக் குறைய 75 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்து யாழ்ப்பாணம். வடமராட்சியை குவியப்படுத்தும் நிலைப்பாடு. ‘கரணவாய்’ என்ற ஊர்ப்பெயர் நாவலின் கதைத்தளத்தில் ஒருவழித் தடமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை காங்கேசன்துறை வீதி இன்னொரு தடத்தை இனங்காட்டு கிறது. குடத்தனைக் கிராமம் பிறிதொரு வழித்தடத்தை இணைத்து நிற்கிறது. ஊறணிச் சுடலை கதைக்களத்தைக் குறிப்பாகச் சுட்டிநிற்கிறது. இன்னும் நாவலின் முக்கிய கதாபாத்திரமான முத்தனின் வசிப்பிடம் அவன் தாயின் குடியிருக்கும் வீடு எனக் கூறும் ஆசிரியர் அவள் குடியிருக்கும் இடத்தை வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
‘அந்தப் புளிய மரத்தைத் தாண்டினால் பெரிய நிலப்பரப்பு ஒன்று பரந்து கிடக்கின்றது.
கண்களுக்கெட்டிய வரை அந்த நிலப்பரப்பு விரிந்து கொண்டு போகிறது. அந்த நிலப்பரப்பின் தெற்கு எல்லை கிழக்குத் தெருவிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பெருந்தெரு. கடற்கரை ஓரமாகப் பிரதான வீதியில் பள்ளன் மடத்தில் ஆரம்பித்து வளைந்து வளைந்து வரும் தெரு பெருந்தெருவில் சந்திக்கின்றது. அந்த இரண்டு தெருக்களும் வந்து கூடும் சந்தி மூலையில் அந்தப் பெரிய நிலப்பரப்பின் ஒரு மூலையில் அவள் குடியிருக்கிறாள்.’
ஆனால் நாவலின் இன்னொரு கதாபாத்திரமான மணியன் கதை மலைநாட்டில் தொடர்கிறது. பின்னர் கொழும்பு வரை நீள்கிறது. இக்கதைக்களம் நாவலாசிரியரின் தீர்வை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
4. கதாபாத்திரங்கள்
குடிமைகள் நாவலில் உலாவரும் கதாபாத்திரங்கள் எண்ணிக்கையில் அதிகமானவை. ஆண்பாத்திரங்களும் பெண்பாத்திரங்களும் என அவற்றைப் பகுத்து நோக்கும்போது அவற்றில் பல்வேறு சாதிகளின் பிரதிநிதிகளைக் காணலாம். சவரத்தொழில் செய்யும் முத்தன், மணியன், வல்லி, சின்னான், குட்டியன் என்னும் ஐவரும் கோணனின் மக்களாக கதையில் வருகின்றனர். இன்னும் உயர்சாதிப் பாத்திரங்களாக வேலுப்பிள்ளை, சோமசுந்தரம், விதானையார், சுந்தரமூர்த்தி, பொன்னம்பலம், முதலியார், குப்பையர், கந்தவனம், ஏரம்பமூர்த்தி, குமாரசாமி, இராமநாதன் என்போர் உள்ளனர். இன்னும் பஞ்சமர் சாதியின் பிரதிநிதிகளாக கதிரன், நாகன், வாரி, மயிலன், முத்தன் போன்றோர் உள்ளனர். பெண் பாத்திரங்களில் பொன்னி, முத்தி, சரசு, வள்ளிக்கொடி போன்றோர் சவரத்தொழில் செய்யும் சாதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இப்பாத்திரங்கள் நாவலில் பல பகுதிகளில் நடமாடுகின்றனர். ஆனால் உயர் சாதிப் பெண் பாத்திரமான வள்ளியம்மை நாச்சியார் என்னும் பாத்திரம் சிறப்பாக ஆசிரியரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
‘அவள் நெல்லியடிச் சந்தையில் வியாபாரஞ் செய்யும் வள்ளியம்மை நாச்சியார். அவளும் இன்னும் இரண்டு நாச்சிமாருந்தான் நெல்லியடிச் சந்தையை ஆட்சி செய்துகொண்டிருக்கின்றார்கள். அவர்கள் போட்டதுதான் அழியாத சட்டம். அவர்கள் விதித்த விதிமுறைகளை மீறி அங்கு எவரும் அதிகாரம் பண்ண இயலாது. ஆனானப்பட்ட ஆம்பிளையும் அடங்கி ஒதுங்கி நடந்தாக வேண்டும். சந்மையில் வைத்து எந்தப் பெரிய மனிதனையும் ‘எடே’ என விளிக்கும் வல்லமை படைத்தவர்கள்.
அவர்கள் மூவருக்குள்ளும் வள்ளியம்மை நாச்சியாரின் குரல் சற்று உயர்ந்தால் மற்ற எல்லோரும் மெல்ல அடங்கிப்போய் விடுவார்கள். அவள் சந்தையைக் கட்டி ஆளுகி றவள். அவளை மீறி அங்கு எவரும் வாலாட்ட இயலாது,’
நாவலில் வரும் பாத்திரங்களின் குண இயல்புகள் கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு தனித்துவமாக உள்ளது. சரசு, வள்ளிக்கொடி என்னும் இரு பாத்திரங்களும் துணிவும் செயல் திறமும் கொண்டவையாக உள்ளன. பெண்மையின் உள்ளார்ந்த உணர்வு நிலைகள் வெகு நுட்பமாக புலப்படுத்தப்பட்டுள்ளன.
5. கதைப்பின்னலும் மொழிநடையும்
கதை நாவலின் இலக்கை அழகாக வெளிப்படுத்தியுள்ளது. முத்தனின் கதை கூறுமுகமாக சவரத் தொழிலாளிகளின் இடர் பொருந்திய வாழ்க்கை பேசப்படுகிறது. குடும்பத்தைப் பேணல், உறவுகளை இணைத்தல், சமூக நடைமுறைகளைப்பேணல், சுயதொழில் தேடல், பொழுதுபோக்கு என பலவிடயங்கள் கதையோடு பின்னப்பட்டுள்ளன. குடிமைகளாக வாழும் கோணன் குடும்பத்தின் கதை மனதில் இடம் பிடித்துக்கொள்கிறது. அதற்கு ஆசிரியருடைய மொழி நடை பெரிதும் துணை நிற்கிறது. யாழ்ப்பாண மக்களின் பேச்சு வழக்கிலே பயன்படுத்தப்பட்ட பழமொழிகளை ஏற்ற இடத்தில் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அக்காலத்துச் சமூகத்தின் திருமணம், இறப்பு, வழிபாடு தொடர்பான செயற்பாடுகளும் ஏற்றவாறு இணைக்கப்பட்டுள்ளன. கதையோடு அவற்றையும் வாசகர் மனங்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சவரத் தொழிலாளர் வாழ்வில் திருமண நடைமுறை மிகவும் எளிமையானது. சோறுகுடுப்பதோடு மரபான திருமணம் முடிந்துவிடும். மணமகள் கையினால் சோற்றை மணமகனுக்குப் பரிமாறுவதுடன் சடங்கு நிறை வேறிவிடும். ஆனால் உயர் சாதியினரின் இறப்பு நடைமுறைகள் விரிவானவை. அதில் குடிமை களின் செயற்பாடு எத்தகைய தென்பதை ஆசிரியர் வருமாறு காட்சிப்படுத்தியுள்ளார்.
‘மாத்தளை முதலாளி கந்தசாமியின் பிரேதம் ஒரு தண்டிகையில் சமாதி இருத்தி ஆழ்வானும் அவன் ஆட்களும் தோளில் சுமந்துவர சலவைத் தொழிலாளர்கள் நிலபாவாடை விரிக்க பிரேதத்தை நோக்கி முத்தன் பொரி அரிசி எறிந்து கொண்டு நடக்க பறைமேளம் முன்னே முழங்க மரணச் சடங்குகளில் கலந்து கொண்டவர்கள் முன்னும் பின்னும் தொடர கடற்கரை ஓரத்து ஊரணிச் சுடலை நோக்கிப் பிரேதம் வந்து கொண்டிருக்கிறது.’
6. நாவலின் பங்கும் பயனும்
ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றில் ‘குடிமைகள்’ நிலையான இடத்தைப் பெறும் என்பதில் ஐயமில்லை. கே. டானியல் தொடக்கிவைத்த ஒரு புதிய பொருள் மரபைத் தெணியானும் பின்பற்றியுள்ளார். ‘தண்ணீர்’ என்னும் நாவலுக்கு எழுதிய முன்னுரையில் கே. டானியல் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.
‘பெயரளவில் பெருமை தரக்கூடிய பல இலக்கிய ஏட்டுப் பிரதிகள், நீதி நூல்கள், வேதாந்த சித்தாந்தங்கள், வீரகாவியங்கள் என்ற வரிசையில் எமக்குப் பல உண்டு.
ஆனால் அவனது வாழ்க்கையோடு அவைகள் ஒனறிப்போய் இருப்பதாக யாரும் விரல் அசைத்துச் சொல்லிவிட முடியாது. இத்தனை கலை வடிவங்களுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பினை நெருக்கப்படுத்தும் கடமை இனிமேல்தான் தமிழ் கலை இலக்கியகாரரால் தொடங்கப்பட வேண்டும்.’
இந்த வேண்டுகோளைத் தெணியான் ஏற்று குடிமைகள் நாவலை எழுதியுள்ளார். குறிப்பாகத் தலித் இலக்கியம் என்ற புதிய இலக்கியம் பற்றிப் பேசுவோர் கே. டானியலை விட்டுப் பேச முடியாது. ஏனெனில் அவர் தொடக்கமாகத் திகழ்பவர். அவர் வழியில் செல்பவர் தெணியான் என நாவல் அடையாளம் காட்டுகிறது. கே. டானியலின் அடிமைகள் நாவல் முன்னுரையில் தெணியானின் எழுத்துப் பற்றி டானியல் குறிப்பிட்டுள்ளார். ‘தெணியான் சாதி விவகாரத்தின் வேர்களைத் துருவிப் பிடிக்கும் ஆற்றல் உள்ள படைப்பாளியாக வளர்ந்து வருகிறார்.’ எனத் தெணியானை ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கு முன்னரேயே இனங்காட்டியுள்ளார். அவரது கணிப்பீட்டைக் குடிமைகள் நாவல் மூலம் தெணியான் நிரூபித்துள்ளார். இந்த வகையில் குடிமைகள் நாவல் கே. டானியலின் ‘பஞ்சமர்’ நாவலின் ஒரு கூறாக விரிவாக உருவம் பெற்ற தெனலாம். ஏனைய பஞ்சமர் பற்றியும் விரிவான படைப்புகள் வெளிவருவதற்கு வழிகாட்டியாக குடிமைகள் நாவல் அமைகிறது.
யாழ்ப்பாணச் சமூகத்தின் பொய்மையான தோற்றத்தைத் தெணியான் இந்த நாவலின் என்னுரையில் வெளிப்படுத்தியுள்ளார். அது நாவலின் தோற்றத்திற்கான காலக்கடப்பைக் கூறுகிறது.
‘நாவல் இலக்கியப் படைப்பு என்ற வகையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் குடிமைகள் என்னும் எனது இந்த நாவல் இன்று வெளிவருகின்றது. கூர்மையான சமூகப் பார்வையுடன் பரந்துபட்ட சமூக விபரிப்புச் சித்திரமாக நாவல்களை எழுதத் தகுந்த ஒரு சூழல் கடந்த காலத்தில் இல்லாமற் போனமையே இந்த இடைவெளிக்குரிய காரணம். சாதியம் பற்றிப் பேசுவது, எழுதுவது விரும்பத் தகாத ஒன்றாக அப்போது கருதப்பட்டது. சாதியக் கொடுமைகளுக்கு எதிரான எழுச்சி மேலெழாதவாறு அடக்கிவைக்கப்பட்டது. அதனால் சாதியக் கொடுமைகள் யாவும் தீர்ந்துபோய்விட்டன என்றவிதமான ஒரு பொய்த் தோற்றம் வெளிக்காட்டப்பட்டு வந்திருக்கிறது. இன்றும் அந்தக் காட்சிப்படுத்தலே சமூகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.’
ஆனால் ‘எல்லாம் நன்மைக்கே நடக்கிறது’ என்ற முதுமொழியின் விளக்கமாக ‘குடிமைகள்’ வெளிவந்துள்ளது. சமூகக்கட்டமைப்புப் பற்றிய விரிவான தேடல் பற்றிய கற்கைநெறியில் ஈடுபட் டுள்ள எமது இளைய தலைமுறைக்கு குடிமைகள் நல்ல ஆவணத் தொகுப்பாக காலத்தின் தேவையை நிறைவேற்ற உள்ளது. நமது முன்னோர் வாழ்வியற் கோலங்களை எழுத்திலே காண்பதற்கு குடிமைகள் நாவல் பெரும்பங்கு ஆற்றவுள்ளது.
தெணியானின் குடிமைகள் இன்று உலகம் எங்கும் சிதறிக் கிடக்கும் தமிழரின் எதிர்காலப் பணியையும் நுட்பமாகச் சுட்டிநிற்கின்றது. அடக்குமுறைகளால் அல்லற்பட்ட முத்தன் குடும்பம் வாழ்ந்த இடத்தைவிட்டுப் பெயர்ந்து சென்று தமது வாழ்வை உயர்த்தியது போல புலம்பெயர்ந்த தமிழரும் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்ற உணர்வுடன் வாழும் பக்குவ நிலை ஒரு புதிய உலகத்தையே உருவாக்கவல்லது. குறிப்பிட்ட ஒரு தொழிலைச் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. அவரவர் திறமைக்கு ஏற்ற தொழிலைச் செய்யும் வாய்ப்பைப் பெறவேண்டும். குடிமைகள் நாவல் கூறும் சமூக நலனுக்கான தீர்வு இன்று தமிழரை நாடி வந்துள்ளது.
இந்த வகையில் இந்த நாவல் ஒரு புதிய தெளிவை வாசகர் மனதில் ஏற்படுத்த வல்லது. மேலும் புலம்பெயர்ந்து பல்வேறு மொழிப் புலமை பெற்ற எமது இளைய தலைமுறை இந்த நாவலை அந்த மொழிகளில் பெயர்க்கும் பொறுப்பை ஏற்கவேண்டும். ஒடுக்கப்பட்டு வாழ்ந்த எமது மூதாதைத் தமிழர் வாழ்வியலை உலகம் அறியச்செய்ய வேண்டும். அந்தப் பணியைச் செய்ய தெணியான் இன்னும் மற்றைய தொழிலாளரின் ஒடுக்கப்பட்ட அவல வாழ்க்கை பற்றிய நாவல்களை எழுதவேண்டும். இது காலத்தின் கட்டளை. நாவல்கள் வெறுமனே பொழுது போக்கிற்குரியது அல்ல. அவை மனித வாழ்வியல் பற்றிய காட்சிப் புலங்கள். அதiனைக் குடிமைகள் நாவலைப் படிக்கும் அனைவரும் உணர்வர். ‘குடிமைத் தொழில்’ என்ற தொழில் மரபை வேரறுத்து எல்லாத் தொழிலும் கற்கைநெறியாக அமைந்துவிட்ட இந்த நூற்றாண்டில் குடிமைகள் நாவல் ஒரு தொழிலின் பண்டைய நிலையைப் பதிவு செய்துள்ளது என்பதே நாவலின் பங்கும் பயனுமாகும்.

No comments: