Wednesday, November 26, 2014

எஸ்.பொ .இன்று( 26.11.2014)காலமானார்.

 "எஸ்.பொ .இன்று( 26.11.2014)காலமானார்". எஸ்.பொ. என்னும் ஆளுமை இனி எம்மிடமில்லை.ஈழத்தினிலே பிறந்து உலகெங்கினும் பயணித்து அவுஸ்திரேலிய சிட்னி நகரினிலே அவர் உயிர் அடங்கி விட்டது.எஸ்பொ என அறியப்படும் ச. பொன்னுத்துரை (பிறப்பு: சூன் 4, 1932, நல்லூர், யாழ்ப்பாணம்) ஈழத்தின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர். யாழ் பரமேஸ்வராக் கல்லூரியிலும் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார். இலங்கையில் ஆசிரியராகவும் நைஜீரியாவில் ஆசிரியப் பயிற்சி கலாசாலையில் ஆங்கில இலக்கிய வரலாற்றுத்துறை விரிவுரையாளராகவும், வரலாற்றுத்துறைத் தலைவராகவும் பணிபுந்தார்.
ஈழத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடக்கி அதற்கு சமாந்திரமாக ஈழத்து  தமிழ் இலக்கியச் செழுமைக்கு சத்தாக நின்றவர். 1990 முதல் அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்து வருகிறார்.
அவுஸ்திரேலியாவில் வெளிவந்த "அக்கினிக்குஞ்சு" சர்வதேச இதழின் கௌரவ ஆசிரியராக விளங்கியவர். செம்பென் ஒஸ்மான என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய ஹால என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் நுகுகி வா தியங்கோ என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் "Weep Not Child" என்ற நாவலை தமிழில் "தேம்பி அழாதே பாப்பா" என்று மொழிபெயர்த்துள்ளார்.
இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய இனி ஒரு விதி செய்வோம் என்ற நூலும் வெளிவந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் பக்கங்களில் வரலாற்றில் வாழ்தல் என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார்.சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இவருக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010 க்கான வாழ்நாள் இயல் விருது வழங்கப்பட்டது.

No comments: