Monday, October 06, 2014

மெட்ராஸ் - தலித் அரசியல் மீதான விமர்சனம்

-அ.ராமசாமி-
திருநெல்வேலி  ‘பாம்பே’யில் மெட்ராஸ். 

ஆயுத பூசையன்று இரண்டாம் ஆட்டம் பார்த்தேன். படம் பார்த்தவர்கள் பலரும்  ‘பார்க்க வேண்டிய படம்’ என்றே சொல்லியதை இந்த வாரம் முழுக்க என் செவிகள் கேட்டிருந்தன. ஒரு அரங்கில் ஓடுவதற்கே இப்போது வரும் படங்கள் திண்டாடிக் கொண்டிருக்கும் வேலையில் திருநெல்வேலி போன்ற இடைநகரங்களிலேயே இரண்டு அரங்குகளில் நிறைந்த காட்சிகளாக ஒருவாரத்தைத் தாண்டி விட்டது மெட்ராஸ். 

எதிர்மறை விமரிசனங்கள் அதிகம் எழுதப்பெறவில்லை. இயக்குநருக்கும், அவரோடு இணைந்து வேலை செய்த குழுவினருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் கிடைத்திருக்கின்றன. சிலர் பாராட்டுகளோடுகொண்டாடப்பட வேண்டிய சினிமா என்று கூடச் சொல்லியிருக்கிறார்கள்.  சினிமா போன்ற வெகுமக்கள் கலைக்கு வாய்- விளம்பரம்(Mouth-Ad ) மற்ற விளம்பரங்களைவிடக் கூடுதல் பலனளிக்கக் கூடிய ஒன்று. அதனால் தான் சினிமாவைப்பற்றிப் பேச வைக்க - பலரும் பலவிதமாகப் பேச வைக்க- முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.  படம் பார்த்த நானும் மெட்ராஸ் பார்க்க வேண்டிய படங்களுள் ஒன்று எனச் சொல்வதோடு பேச வேண்டிய படமாக இருக்கிறது என்றும் சொல்கிறேன். பேச வேண்டும்என்பதைவிட விவாதிக்கவேண்டிய - விமரிசனம் செய்யவேண்டிய படம் என நினைக்கிறேன்.

.
மெட்ராஸ் என்ற சினிமாவைப் பற்றிப் பேச ஒவ்வொருவருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் இருக்கக்கூடும்; விவாதத்திற்கான மையங்களை அடையாளப்படுத்திப் பேசக் கூடும். அவர்கள் பேச நினைக்கும்காரணங்களுக்கேற்ப பேசும் முறை மாறலாம்; ஒரு சினிமாவைப் பற்றிய ஆதரவு அல்லது எதிர்ப்புப்பேச்சாக அது தோற்றம் தரலாம். 

மெட்ராஸ் -  சினிமாவின் மொழி, பார்வையாளர்களோடு உறவுகொள்ளும் கோணம், போன்றவற்றை முன்வைத்துப் பேச நினைக்கும்போது, கூடுதல் வாய்ப்புகளைஉருவாக்கித் தரும் படமாக இல்லை.  காதல்,காதலுக்கு உதவும் நண்பன், அதற்காக அடிதடி, உதவிய நண்பனின் கொலை, அதற்காகப் பழிக்குப்பழி. நாயக நடிகரை மையப்படுத்திப் பேசநினைத்தால் கார்த்தியின் பத்தோடு பதினொன்று தான் என்று ஒதுக்கிவிடும் வாய்ப்பைஅதிமாகக் கொண்ட படம். 

மெட்ராஸ் கார்த்தியின் படம் மட்டுமல்ல இயக்குநர் பா.ரஞ்சித்தின் படமாகவும் இருக்கிறது.ஒரு படத்திற்கான இடப் பின்னணியை உருவாக்குவதிலும், அந்தப் பின்னணியில் நகரும் பாத்திரங்களின்இயல்பான நடவடிக்கைகளைக் காட்சிப் படுத்துவதிலும் கவனம் செலுத்தித் தனது வரவைத் தனித்துஅடையாளப்படுத்திக் கொண்ட இயக்குநர் பா.ரஞ்சித். அந்த அடையாளத்தை இந்தப் படத்தில் உறுதிசெய்யக் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது. ஆனால் அவருக்கு ஒளியமைப்பாளர்உதவிய அளவு பின்னணி இசையமைப்பாளர் உதவவில்லை. நடிகர்களின் வசன உச்சரிப்பு கூடக் கவனத்துடன் பதிவு செய்யப்படவில்லை.  இருட்டும் வெளிச்சமும்கலந்த கலவையாக வடக்கு மெட்ராஸைக் காட்ட நினைத்த இயக்குநர் மெட்ராஸின் வடபகுதியில் எந்நேரமும்சத்தமும் கத்தலும் மட்டுமே நிரம்பியிருக்கும் என்ற எண்ணத்தை உண்டாக்க நினைத்திருக்கிறார்.அப்படி நினைப்பது கலையின் பாற்பட்டதல்ல.  அதுஉண்மையாகவே இருந்தபோதிலும் கலையின் உருவாக்கத்திற்கு உதவும் அமைதியையும் மென்மையையும்தேடிக் கண்டுபிடித்துத் தருவதில் தான் கலைஞனின் காரியம் கைகூடும். அதை நோக்கி நகர்வதில்கவனம் செலுத்துவதற்குப் பதிலாக இந்தப் படத்தில் வேறொன்றில் கவனம் செலுத்தித் தன்னைநிறுவியிருக்கிறார். 

படத்தின் மையமாக மனிதப் பாத்திரமொன்றை வைக்காமல் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான வரலாறு கொண்டமதிலை நிறுத்திக் காட்டியதின் வழியாக மெட்ராஸ் படம் தமிழ்ச் சினிமாவின் வரலாற்றில் நிற்கிறது. 

இந்தப் படத்தில் மதில் என்பது மதிலாக இல்லை. மதில் பல பரிமாணங்கள் கொண்ட குறியீடாக இருக்கிறது.மதிலைக் கைப்பற்றுவது என்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.ஆனால் காட்சிப்படுத்தப்பட்ட மதில் மெல்லமெல்ல நகர்ந்து  கைப்பற்றுவது என்பதற்குப் பதிலாக  “கையாள்வது” என்பதாக மாறிய பின் அரசியல் சொல்லாடலுக்குள் நுழைகிறது. அந்த அரசியலைப் பொத்தாம் பொதுவான ‘தலித் அரசியல்’ என்ற சொல்லால் குறித்து விட முடியாது. அம்பேத்கர், ஜோதிபா பூலே தொடங்கிய சமூகநீதி அரசியலைத் தலித் அரசியலாக மாற்றியசொல்லாடல் கடந்த கால் நூற்றாண்டுக் காலத்துக்குரியது. 

மெட்ராஸ்-என்ற சினிமா 1990 களுக்குப் பின் உருவான தலித் அரசியலை நேர்மறைத் தன்மையோடு அணுகாமல்,எதிர்மறைத் தன்மையோடு பேச முனைந்திருக்கிறது ஒன்றுபடு; போராடு; அத்துமீறு;அடங்க மறு;கலகம் செய் எனக் கோஷங்களை முன்வைத்து இயக்கமாக மாறிய தலித் அரசியல் கையாளப்படும் அரசியலாகஆகிவிட்டது என்ற கடுமையான விமரிசனத்தை வைத்துள்ளது. சமரசமற்ற சாதியொழிப்பு அரசியலைப்பேச நினைத்த தலித் அரசியல் அராஜக அரசியலுக்கு ஆள் சப்ளை செய்யும் அரசியலாக, வசதி வாய்ப்புகளுக்காகப்பணத்தைப் பெற்றுக் கொண்டு விட்டுக் கொடுக்கும் அரசியலாக, மக்களுக்கான அதிகாரத்திற்குப்பதிலாகச் சில தனிநபர்களின் சொகுசு வாழ்க்கை அரசியலாக மாறிவிட்டது என்று விமரிசனம் செய்கிறது. காட்டிக் கொடுக்கும் அரசியல், கையூட்டுப் பெறும் அரசியல் என்று கடுமையான விமரிசனங்களைவைக்கிறது படம்.

இந்தவிமரிசனம் சரியான விமரிசனம் தானே எனப் பலரும் நம்பக்கூடும்; சொல்லக்கூடும். சரியானபார்வையோடு இயக்குநர் பேசியிருக்கிறார் எனப் பாராட்டவும் கூடும்.இதுவரை பாராட்டியவர்கள்இதை மனதில் கொண்டுதான் பாராட்டியிருப்பார்கள் என நான் நினைக்கவில்லை.  ஆனால் நான் அப்படிப் பாராட்டப் போவதில்லை. அதற்காகக்குறை சொல்லப் போகிறேன் என்றும் அர்த்தமில்லை. இந்த விமரிசனத்தை முன்வைப்பதற்குரிய அரசியல்பார்வை கொண்டவரா? இயக்குநர் ரஞ்சித் என்ற ஆராய்ச்சிக்குள் இறங்கிப் பதில் சொல்லும்வேலையை நான் செய்யப் போவதில்லை.  உள்ளிருந்துவரும் விமரிசனங்களுக்கு உள்ளே இருப்பவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். தலித் அரசியல்மீது வைக்கப்பட்டுள்ள இந்த விமரிசனங்களுக்கு தலித் அரசியலை நம்பிக்கையோடு முன்னெடுப்பவர்கள்பதில் சொல்வார்கள்.  

ஒரு படைப்பு முன் வைக்கும் விமரிசனத்திற்கான காரணங்களைப் படைப்பு தனக்குள்ளேயே கொண்டிருக்கவேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். மெட்ராஸ் என்ற பொதுச் சொல்லால் குறிக்கப்படும் வடசென்னைக் குரியவர்கள் அன்புவும் காளியும். இவ்விருவரில் அன்பு முழுமையானஅரசியல் பிம்பம், மதிலைக் கைப்பற்றியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன்; ஆனால்காளி அதற்கு மாறானவன்; அரசியலாக எதையும் பார்க்க விரும்பாதவன்; தனிமனிதனாக அடைய நினைக்கும்உச்சம் கலை என்னும் அழகான மனைவி; நடுத்தர வர்க்க வாழ்க்கை. அதே நேரத்தில் அவனுக்குள்ளும்யோசிக்காமல் வெளித்தெறிக்கும் மூர்க்கமும் இருக்கிறது. அந்த மூர்க்கம் அரசியலுணர்வுகொண்ட  மூர்க்கமல்ல; தன் மனம் எடுக்கும் முடிவுசார்ந்த மூர்க்கம். அந்த மூர்க்கமே அன்பை நண்பனாக நினைக்கிறது; வழிகாட்டியாகக் கொள்ளத்தூண்டுகிறது; அவசரப்பட்டு அன்பைப் பழி கொடுக்கிறது. 

அன்புவின் அரசியல் பிம்ப உருவாக்கமும், காளி என்ற அரசியலற்றபிம்ப உருவாக்கமும்  என்ற எதிர்வால் வளரும்கதை அன்புவின் மரணத்திற்குப் பின் மதில் பற்றிய சொல்லாடலைத் திசை மாற்றுகிறது. மதிலைக்கைப்பற்றும் அரசியலைச் செய்த அன்புவின் இடத்தை நிரப்ப இன்னொரு அரசியல் பிம்பத்தால்முயற்சி செய்யாமல் அரசியலற்ற காளியின் கதையாக நகர்கிறது படம். நண்பனுக்காகப் பழிவாங்கும்நபராக மாறி நிற்கும் மூர்க்கம் எல்லாவற்றையும் சந்தேகம் கொள்ளும் திசையில் பயணிக்கிறது. மையநீரோட்ட அரசியலில் நெளிவு சுளிவுகளோடு அரசியல் செய்த மாரியையும் அவன் பின்னிருக்கும் கூட்டத்தையும் சின்னாபின்னமாக்கிவிடுகிறது. திரும்பவும் அம்பேத்கர், ரெட்டைமலை சீனிவாசன் என்ற ஆரம்பங்களிலிருந்து கல்வியையும்அரசியலையும் உருவாக்குவோம் எனப் பேசுகிறது. 

கால் நூற்றாண்டுத் தமிழ்நாட்டுத் தலித் அரசியல் மீது, “ கையாளப்படும் அரசியல் ” என்பதானவிமரிசனத்தை வைக்கும் ரஞ்சித் பாராட்டுக்குரியவர். உள்ளிருந்து விமரிசனங்கள் வைக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தொடக்ககாலத் தலித் அரசியலை முன்னெடுத்தவர்கள்கூட சொல்லவே செய்தார்கள் என்பது கூட எனக்கு நினைவில் இருக்கிறது.

சொந்த சாதிகளுக்குஎதிரானவர்களாய் வருக!  என விடப்பட்ட அறைகூவல் கூடக் காதுகளில் ஒலிக்கவே செய்கின்றன. ஆனால் இந்தியாவில் வேறு எந்த சாதி அறிவாளியும் -கலைஞனும் தங்கள் சாதிக்கெதிரான அரசியலோடு- படைப்போடு வரவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். சாதிக்கெதிரான படைப்பு மட்டுமல்ல;தங்களின் அமைப்புகளின் மீதான - இயக்கங்களின் மீதான் - அரசியல் கட்சிகளின் மீதான - விமரிசனங்களோடுவரவில்லை. ரஞ்சித் நீங்கள் வந்திருக்கிறீர்கள்; அதற்காகப் பாராட்டலாம். ஆனால் ஒட்டுமொத்தமாகத் தலித் அரசியலைச் சந்தேகப்படுவதை ஏற்க முடியாது.

No comments: