Tuesday, July 22, 2014

பாபர் மசூதிச்சுவர்களில் பற்றிப் படர்ந்த விஷச்செடியின் வேர்கள்.

-சுகுணா திவாகர்- 

பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் மாதமொன்றில்தான். 1949, டிசம்பர் 22 அன்று முதன்முதலாக பாபர் மசூதியில் சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக ராமர் சிலை வைக்கப்பட்டது. அந்த சம்பவத்தின் பின்னுள்ள பின்னணிகள் குறித்து விரிவாக விவரிக்கும் நூல் கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே. ஜா எழுதிய ‘அயோத்தி : இருண்ட இரவு  - பாபர் மசூதிக்குள் ராமன் தோன்றிய ரகசிய வரலாறு’. 

இந்தியாவின் சமூக அரசியல் வரலாற்றை பாபர் மசூதி இடிப்புக்கு முன்பு, பின்பு என்று வகைப்படுத்திக் கொள்ளலாம். 1992 டிசம்பர் 6க்குப் பிறகு இந்தியாவின் முகம் நிறையவே மாறியிருக்கிறது. இந்திய மக்களின் மனநிலையிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியில் அமர்வதற்கு பாபர் மசூதி இடிப்பும் அதனையொட்டி எழுந்த இந்துத்துவ எழுச்சியும் உதவியிருக்கிறது. இதன் எதிர்வினையாக இஸ்லாமிய இளைஞர்களில் சிலர் ஆயுதக்குழுக்களோடு இணைந்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவில் எங்கெல்லாம் இந்துத்துவ இயக்கங்கள் வலுவாக இருக்கின்றனவோ அங்குதான் இத்தகைய பயங்கரவாதக் குழுக்களின் குண்டுவெடிப்புகள் அதிகளவில் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறத்தில் இதற்குமாறாக முஸ்லீம்கள் அதிகமும் அரசியல்மயப்படுத்தப்படுவதும் நடைபெறுவது. குறிப்பாக, தமிழகத்தில் வெறுமனே மார்க்கவிஷயங்களில் மட்டும் அதிகம் கவனம் செலுத்திவந்த முஸ்லீம்களும் அவர்களது பத்திரிகைகளும் சாதி, தீண்டாமை, ஈழப்பிரச்னை போன்றவற்றிலும் கவனம் குவிப்பதும் ஒருசில புள்ளிகளில் பெரியாரிய இயக்கங்கள், தலித் அமைப்புகள், தமிழ்த்தேசிய அமைப்புகளோடு இணைந்து சில அரசியல் செயற்பாடுகளை நிகழ்த்துவதும் அதிகரித்துவருகிறது. ஊடகங்களிலும் திரைப்படங்களிலும் முஸ்லீம்கள் குறித்த எதிர்மறைப் பிம்பங்கள் கட்டமைக்கப்படுவதும் பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பொய்வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கிற அவலமும் நடைபெறுகிறது. இதன் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் மேலும் தங்களுக்குள் இறுக்கமடைவதும் தங்களுக்கான தனித்த அடையாளங்களை இறுக்கமாகக் கடைப்பிடிக்கிற சூழலும் நிலவுகிறது. இப்படிப் பல்வேறுவிதமான சமூக மாற்றங்களுக்குக் காரணமான பாபர் மசூதி பிரச்னையின் வேர் தொடங்கிய நாள், அதே பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் மாதமொன்றில்தான். 1949, டிசம்பர் 22 அன்று முதன்முதலாக பாபர் மசூதியில் சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக ராமர் சிலை வைக்கப்பட்டது. அந்த சம்பவத்தின் பின்னுள்ள பின்னணிகள் குறித்து விரிவாக விவரிக்கும் நூல் கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே. ஜா எழுதிய ‘அயோத்தி : இருண்ட இரவு  - பாபர் மசூதிக்குள் ராமன் தோன்றிய ரகசிய வரலாறு’. 



பொதுவாக எல்லா அரசியல் புத்தகங்களும் சுவாரஸ்யமாக அமைந்துவிடுவதில்லை. பல்வேறுவிதமான கோட்பாடுகளின் அறிமுகம், மேற்கோள்கள், தத்துவார்த்த ரீதியான விஷயங்கள், சட்ட நுணுக்கங்கள் ஆகியவை அரசியல் புத்தகங்களின் அடிப்படையாக இருப்பதால் எல்லா நிலை வாசகர்களாலும் அரசியல் புத்தகங்களைப் படித்து உள்வாங்க முடிவதில்லை. ஆனால், இந்தப் புத்தகம் ஒரு சுவாரஸ்யமான நாவலைப் போன்றே அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. நூலின் இறுதிப்பகுதியில் இந்த சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் குறித்த சுருக்கமான அறிமுகங்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கு இடப்பட்டிருக்கும் தலைப்பு ‘பங்கேற்ற பாத்திரங்கள்’. விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலின் ஆசிரியர்கள் கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே.ஜா ஆகியோர் தனிப்பட்ட மனிதர்களின் பின்னணி வரை விரிவாக ஆய்வு செய்து இந்த நூலை எழுதியிருக்கிறார்கள். ஆனால் நூலாசிரியர்களான இவ்விருவர் பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லாதது இந்த நூலின் முக்கியக் குறை. அடுத்தடுத்த பதிப்புகளில் விடியல் பதிப்பகம் இந்தக் குறையைக் களையும் என்று நம்புகிறேன்.


நூல், குரு அபிராம் தாஸ் என்ற சன்னியாசி ஒருவரின் மரணத்தில் இருந்து தொடங்குகிறது. அவரது சொற்பச் சீடர்கள் அவரது சடலத்தைத் தூக்கிக்கொண்டு செல்லும்போது, ‘ராமஜென்ம பூமி உதாரக் நீடுழி வாழ்க’ என்ற முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர். உதாரக் என்றால் மீட்டவர். குரு அபிராம் தாஸ்தான் முதன்முதலில் பாபர் மசூதிக்குள் ராமர் சிலையையும் மற்ற கடவுள் சிலைகளையும் தன் சகாக்களோடு திருட்டுத்தனமாக வைத்தவர். பீகாரில் இராடி என்னும் சிற்றூரில் ஒரு மைதிலி பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர் அபிராம்தாஸ். இயற்பெயர் அபிநந்தன். சிறுவயதிலிருந்தே படிப்பு ஏறவில்லை. தந்தை உள்ளூர் கோயில் ஒன்றில் பூசாரி. மொத்தம் ஆறு குழந்தைகள். ஐந்து மகன்கள், ஒரு மகள். வறுமையும் கல்வியறிவின்மையும் அபிராம்தாஸை உடலுழைப்பில் ஈடுபடத் தூண்டின. ஆனால் பார்ப்பனர்கள் உடலுழைப்பில் ஈடுபடுவது கௌரவத்துக்கு இழுக்கு என்பதால் வீட்டை விட்டு ஓடிப்போகும் அபிநந்தன், தொலைதூரத்தில் உள்ள ஊர் ஒன்றில் கூலிவேலைகள் பார்க்கத் தொடங்கினான். அப்போது அவனுக்கு இருந்த ஒரே லட்சியம், தன் தங்கைக்குச் சிறப்பாக மணம் முடிக்கவேண்டும் என்பதே. கனவுகளோடும் கை நிறையப் பணத்தோடும் சில ஆண்டுகளுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்குத் திரும்புகிறான். ஆனால் அவலம் என்னவென்றால் அவனது தந்தை தன் மகளை ஒரு கிழவனுக்கு மணம் முடித்துக்கொடுத்திருந்தார். அப்போது அபிநந்தனின் தங்கைக்கு வயது வெறும் ஆறுதான். உடனே மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினான். மூன்று மாதங்களுக்குள் கணவன் இறந்துபோக, ஆறு வயதுச் சிறுமி கைம்பெண் ஆனாள். இத்தகைய வாழ்க்கைச் சூழல் இயல்பாகவே அபிநந்தனிடம் மதச் சனாதனங்களின் மீதும் ஆணாதிக்கமும் மூடத்தனமும் நிரம்பிய பார்ப்பனச் சூழலின்மீதும் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் அவனோ அதே சனாதனத்தைக் கட்டிக் காக்கும் இந்துத்துவத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது ஒரு வரலாற்று வினோதம்தான்.


அயோத்தியில் விட்டேற்றியாகத் திரிந்தவனை சரயுதாஸ் என்பவர் ஆற்றுப்படுத்தி துறவி ஆக்குகிறார். ஆனால் சரயுதாஸ் பார்ப்பனரல்லாதவர், யாதவர் என்பதால் ஜமுனாதாஸ் என்ற பார்ப்பனச் சாதுவிடம் அழைத்துச் சென்று சடங்குகள் நிகழ்த்தி சன்னியாசி ஆக்குகிறார். அபிநந்தன் அபிராம்தாஸ் ஆகிறார். ஆனால் இந்துத் தத்துவ நூல்கள் எதையும் அவர் கற்றுத் தேர்ந்தவராகத் தெரியவில்லை. அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவரது பேச்சில் அடிக்கடி கெட்டவார்த்தைகள் எட்டிப் பார்க்கும். மல்யுத்தத்தில் ஆர்வமுள்ளவர். அறியப்பட்ட சாமியார் ஆனபிறகு, தனது ஒன்றுவிட்ட சகோதரர்களை அயோத்திக்கே அழைத்துவந்து படிக்க வைத்தார். கணிசமான சொத்துக்களைச் சேர்த்தார். ஆக துறவியானபிறகும் ஒரு சராசரி மனிதராகத்தான் வாழ்ந்து மடிந்தார். வரலாற்றின் பக்கங்களில் அழியப்படாமல் தன் பெயர் எழுதப்படும் என்பதை அவர் அறிந்தாரா என்று தெரியவில்லை. அபிராம்தாஸிடம் இருந்து தொடங்கும் இந்த வரலாறு இந்திய அதிகார மய்யங்கள் பலவற்றின் வழியாகவும் ஊடுருவி விரிகிறது.


பாபர் மசூதிக்குள் ராமன் நுழைந்த வரலாற்றுக்கான மூன்று முக்கியக் காரணிகள் இவை :


* சாதுக்களின் அதிகாரப் போட்டி


* இந்து மகா சபையின் நெருக்கடி


* காங்கிரஸின் வலதுசாரி அணி


சாதுக்களின் அதிகாரப் போட்டி : அயோத்தியில் நிலவி வந்த சாதுக்களின் பிரிவுகள், அவர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டிகள் குறித்து நூலாசியர்கள் விளக்குவது நமது நிலப்பரப்புக்கும் கலாச்சாரத்துக்கும் முற்றிலும் தொடர்பற்ற ஒரு வாழ்க்கைமுறையைப் படிக்கிற வியப்புணர்வை ஏற்படுத்துகிறது. நிர்வாணி அகாரா, நிர்மோகி அகாரா, திகம்பரி அகாரா ஆகியவை முக்கியமான மூன்று சாதுப்பிரிவுகள். இவற்றில் செல்வாக்குள்ளவை நிர்வாணி அகாராவும் நிர்மோகி அகாராவும். அபிராம்தாஸ் நிர்வாணி அகாரா. மாற்று சாதுக்குழுவான நிர்மோகி அகாராக்களைச் செல்வாக்கிழக்கச் செய்வதும் தங்கள் பிரிவை வலுப்படுத்துவதுமே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. ஏனெனில் ராமன் ‘அவதரித்த’ அயோத்தியில் ஏற்கனவே ராமனை வழிபடுவதற்கான இடம் இருந்தது. அதுவும் பாபர் மசூதி வளாகத்திலேயே அமைக்கப்பட்டிருந்தது. ராமசபுத்திரா (சபுத்திரா என்றால் மேடை என்று பொருள்)வில் நாள்தோறும் ராமவழிபாடு நடைபெற்றது. இந்த ராமசபுத்திரா, நிர்மோகி அகாராக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. மசூதி வளாகத்தில் அமையப்பட்ட இடத்திலேயே ராமர் வழிபாடு நடந்தபோதும் அது இந்து & முஸ்லீம் நல்லிணக்கத்தில் எந்தக் குந்தகத்தையும் ஏற்படுத்தவில்லை. ராமசபுத்திராவில் பணிபுரிபவர் பகலில் பாபர் மசூதியில் உறங்கி ஓய்வு எடுத்ததையும் தொழுகை நேரம் தவிர மற்ற நேரங்களில் அவர் இயல்பாய் மசூதிக்குள் இருந்ததையும், அவரது பாய் உள்ளிட்ட பொருட்கள் மசூதியில் இருந்ததையும் நேர்காணல் மூலம் பதிவு செய்திருக்கிறார்கள் நூலாசிரியர்கள். அயோத்தியில் தங்கள் சாதுக்குழுவின் அதிகாரத்தை வலுப்படுத்துவது, தன் குடும்பத்தாருக்கான சிறப்பான வாழ்க்கையை அமைத்துத் தருவது, ராமசபுத்திராவுக்கும் மேல் ராமனுக்கான முக்கியத்துவமிக்க நிகழ்வொன்றைச் செய்து புகழ்பெறுவது, அதன்மூலம் அதிகாரத்தையும் சொத்துகளையும் ஈட்டுவது இதுவே அபிராம்தாஸின் நோக்கம்.


இந்து மகாசபையின் நெருக்கடி : காந்தி கொலைக்குப் பிறகு அரசுரீதியிலான நெருக்கடியும் மக்கள் மத்தியில் ஏற்பட்ட வெறுப்புணர்வும் இந்துமகா சபைக்கு ஒரு புறரீதியான அழுத்தத்தைக் கொடுத்தது. மீண்டும் இழந்த செல்வாக்கைப் பெறவேண்டுமானால், மதரீதியிலான பெரிய நடவடிக்கையில் ஈடுபட்டே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம். இந்து மகாசபையின் உத்திரப்பிரதேசச் செயலாளர் மகந்த் திக் விஜய்நாத் மற்றும் கோண்டா மாவட்ட நீதிபதி கே.கே.நாயர் ஆகிய இருவரின் பெருமுயற்சியால் நிகழ்ந்ததே அயோத்தியில் ராமன் சிலை வைக்கப்பட்ட நிகழ்வு. இதற்கு அவர்களுக்கு உதவியவர் அபிராம்தாஸ். இது முழுக்க முழுக்க ஓர் அரசியல் நடவடிக்கையாக இருந்ததே தவிர, மதநம்பிக்கை அடிப்படையிலானதாகவோ உணர்ச்சிவயப்பட்டு நிகழ்ந்த நிகழ்வாகவோ இல்லை என்பதை இந்த நூல் விரிவாக விளக்குகிறது. அகில இந்திய ராமாயண மகாசபை என்னும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு மதவெறியைத் தூண்டுவதற்காக ஒன்பது நாள் திருவிழா கொண்டாடப்பட்டது. இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த நாள் ராமனின் திருமண நாள். ஆனால் துறவிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள அயோத்தி எப்போதும் ராமனின் திருமணநாளுக்குப் பெரிதாக முக்கியத்துவம் அளித்ததில்லை. ராம நவமி, அனுமன் ஜெயந்தி போன்ற விழாக்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ராமனின் திருமண நாளுக்கு அளிக்கப்படாவிட்டாலும் ராமாயண மகாசபை அதைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், மதவெறியைத் தூண்டுவதைத் தவிர வேறில்லை. மாவட்ட நீதிபதியாக மட்டுமில்லாமல் அன்றையகாலகட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொறுப்பையும் கவனித்துவந்த கே.கே.நாயர் எந்தளவுக்கு இந்துத்துவச் சார்புடையவராக இருந்தார் என்பதையும் பின்னாளில் அவர், அவரது மனைவி மற்றும் அவரது உதவியாளர் அனைவரும் இந்துத்துவ அமைப்புகளில் ஈடுபட்டு தேர்தலில் நின்றதையும் இந்தப் புத்தகம் விரிவாக எடுத்துரைக்கிறது. மகந்த் திக் விஜய்நாத் விரும்பியபடியே பாபர் மசூதிக்குள் நுழைந்த ராமன், இந்துமகா சபைக்கும் இந்துத்துவத்துக்கும் புத்துயிர் அளித்தான்.


காங்கிரஸின் வலதுசாரி அணி : தேர்தல் பிரசார காலத்தில் நேருவைத் தாக்கியும் வல்லபாய் படேலைப் புகழ்ந்தும் மோடி பேசியது, உலகிலேயே படேலுக்கு மிக உயரமான சிலை அமைப்பதான அறிவிப்பு, கரசேவைக்கு செங்கல் சேகரித்ததைப் போல படேல் சிலைப்பு இரும்பு சேகரிக்கும் திட்டம், பிரதமராகப் பொறுப்பேற்றபின்பு பெண்களின் பாதுகாப்புக்கு 150 கோடியை ஒதுக்கிவிட்டு படேல் சிலைக்கு மோடி அரசு 200 கோடி ஒதுக்கியது ஆகியவற்றுக்கான காரணங்களை அறிய இந்தப் புத்தகம் உதவும். காந்தி கொலைக்குப் பிறகு படேலின் மரணம் வரை மிகத்தீவிரமாகச் செயல்பட்ட இந்த படேல் ஆதரவு வலதுசாரி அணியை நேருவால் வெல்ல முடியவில்லை. படேலின் தீவிர ஆதரவாளவரும் இந்துத்துவ உணர்வாளருமான உத்திரப்பிரதேச பிரதமர் (அன்றையகாலகட்டத்தில் பிரதமர் என்றே அழைப்பது வழக்கம்) கோவிந்த் வல்லப பந்த் இடைத்தேர்தலில் சோசலிஸ்ட் கட்சித் தலைவர் நரேந்திரதேவைத் தோற்கடிப்பதற்காகத் தூண்டிவிட்ட மதவெறி, பாபா ராகவதாஸ் என்னும் சாமியாரை அவருக்கு எதிராக நிறுத்தி வெற்றிபெற வைத்ததும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. மசூதிகளைக் கோயில்களாக மாற்றும் இந்துத்துவ அரசியல் திட்டத்தை வரலாற்றில் முதன்முதலாக முன்மொழிந்தவர் காங்கிரஸ்காரரான பாபா ராகவதாஸ் என்பது கவனங்கொள்ளத்தக்கது.


நேருவுக்கும் காங்கிரஸின் வலதுசாரி அணிக்கும் இடையிலான போராட்டங்கள் விரிவாக இந்நூலில் பதியப்பட்டுள்ளன. அதேபோல் அக்ஷய் பிரமச்சாரி என்ற மனச்சாட்சியுள்ள ஒரு மனிதரை அறிவதற்கும் மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவதற்காகவும் மத நல்லிணக்கத்தைப் பேணுவதற்காகவும் தன் உயிரையும் அளிக்கத் தயாராக இருந்த மதிப்புமிக்க மனிதரைத் தெரிந்துகொள்வதற்கும் இதைப் படிக்கவேண்டியது அவசியம். அக்ஷய் பிரம்மச்சாரி போன்ற மகத்தான மனிதர்கள்தான் இன்றளவும் மதவெறிக்கு எதிரான உணர்வை வரலாறுதோறும் தக்கவைத்துக்கொள்வதற்கு உதவியிருக்கின்றனர். 


இந்தப் புத்தகத்தின் அடிப்படையில் சில படிப்பினைகளையும் புரிதல்களையும் தொகுத்துக்கொள்ளலாம். இந்துத்துவ அரசியலுக்கும் சாதாரண மக்களின் மதநம்பிக்கைக்கும் இடையில் எப்போதுமே இடைவெளியும் வித்தியாசமும் இருந்துவருகிறது. அவர்களது மதவெறி தூண்டும் நடவடிக்கைகள் அனைத்துமே திட்டமிட்ட அரசியல் நடவடிக்கைகள்தான் என்பதை பாபர் மசூதிக்குள் ராமன் நுழைந்த ரகசிய வரலாறு மூலம் அறிந்துகொள்ளலாம். நிலவி வரும் மதநம்பிக்கைகளை மதவெறியாக மாற்றுவது, அல்லது புதிய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் விழாக்களையும் உருவாக்குவது, மதவெறியைத் தூண்டுவதற்காக எதிரிகளைக் கட்டமைப்பது ஆகிய அரசியல் நடவடிக்கைகளே அவர்களது தொடர்ச்சியான செயல்பாடுகளாக இருக்கின்றன. விநாயகர் ஊர்வலம் தொடங்கி ஒன்பதுநாள் ராமன் திருவிழா வரை வரலாற்றில் எத்தனையோ சான்றுகளைச் சொல்லலாம். இவை எப்படி சாதாரண மக்களின் இணக்கத்துடன்கூடிய வாழ்வுக்கு எதிரானது என்பதை மக்களுக்கு விளக்கி எடுத்துச்செல்லவேண்டியது இந்துத்துவ எதிர்ப்பாளர்களின் கடமை. 


பாபர் மசூதிக்குள் ராமன் சிலைகள் திருட்டுத்தனமாக நுழைக்கப்பட்டபோது அம்பேத்கர் மற்றும் பெரியாரின் எதிர்வினைகள் என்னவாக இருந்தது என்று அறியும் ஆர்வம் எனக்குள் தோன்றியது. ஆனால் அதேநேரத்தில் இந்த நிகழ்வு தேசிய அளவில் விவாதிக்கப்பட்ட நிகழ்வாக அல்லாது உள்ளூர் நிகழ்வாகவே ஊடகங்களில் பதியப்பட்டன என்பதையும் இந்தப் புத்தகம் சொல்கிறது. இன்றைய இடதுசாரிகள் அரசியல் களத்தில் இந்துத்துவ அரசியலை எதிர்த்துவருவது வரவேற்கத்தக்கதே. ஆனால் தொடக்ககால இந்துத்துவத்தின் தோற்றம், வளர்ச்சி, வழிமுறைகள் குறித்து இந்திய இடதுசாரிகளுக்கு என்னமாதிரியான புரிதல்களும் கணிப்புகளும் இருந்தன, அதைக் கடந்தகாலங்களில் அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்ற விரிவான வரலாறு எழுதப்படவேண்டியது அவசியம்.


மேலும் சுவாரஸ்யமும் கவனிக்கத்தக்கதுமான ஓர் அம்சம், காலந்தோறும் இந்துத்துவ வளர்ச்சிக்கு சாமியார்களின் பங்களிப்பு. அன்றைய காலகட்டத்தில் அபிராம்தாஸ் என்றால் இன்றையகாலகட்டத்தில் பாபாராம்தேவ் தொடங்கி ஏராளமான சாமியார்களைச் சொல்லலாம். ஆனால் தமிழகம் எப்போதுமே இதற்கு எதிர்த்திசையிலேயே இருந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு என்பதற்கு தமிழ்ச்சூழலில் நீண்ட நெடிய பாரம்பரியம் உண்டு. பௌத்தம், சமணம், சித்தர்கள், வள்ளலார், பெரியார் என்று செழிப்பான அவைதீக மரபு நமக்கு உண்டு. இன்றளவிலும் ஆங்காங்கே பீர் பாட்டிலைக் குடித்துவிட்டு பக்தர்கள் தலையில் உடைக்கும் சாமியார்கள், குழந்தைகளைக் குப்புறப்படுக்கவைத்து தாண்டும் சாமியார் என்று வினோதமான, விதவிதமான சாமியார்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்தான். ஆனால் இவை எல்லாம் தனிமனிதர்களின் நம்பிக்கைகளையும் அறியாமையையும் சார்ந்த விஷயங்களாகத்தான் இருக்கிறதே தவிர குறிப்பிட்ட அளவில் வரலாற்றின் போக்கை மாற்றியமைக்கக்கூடிய வல்லமையோ அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் செல்வாக்கோ சாமியார்களுக்கு இல்லை. தமிழ்மண்ணில் இந்துத்துவச் சக்திகள் காலூன்ற முடியாததற்கு இது ஒரு முக்கியக் காரணம் என்று கருதுகிறேன்.

(பனுவல் நடத்திய சமூக நீதிக் கருத்தரங்கில் ஆற்றிய உரை)

No comments: