Monday, September 01, 2014

ஒரு தமிழ்த் தேசிய சமூக ஆர்வலரான என் தந்தை பற்றிய நினைவுக் குறிப்புகள்.

-கலையரசன்-

"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்" - திருக்குறள் 

சிறு வயதில் இந்தக் குறளைச் சொல்லி வளர்த்த எனது தந்தை இப்போது இயற்கை எய்தி விட்டார். சில தினங்களுக்கு முன்னர், கடுமையாக நோய் வாய்பட்டு யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில், தனது 79 ஆவது வயதில் காலமான எனது தந்தைக்கு, தமது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்ட அனைவருக்கும், முதற்கண் எனது நன்றிகள். 

சின்னர் தர்மலிங்கம் ஆகிய எனது தந்தை, யாழ்ப்பாணத்தில் எங்களது கிராமத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பிரபலமாக அறியப் பட்ட ஒரு சமூக ஆர்வலர். அவரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களை இந்த இடத்தில் பகிர்ந்து கொள்வது, ஒரு மகனாக தந்தைக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட எனது அப்பா, கடைசி வரைக்கும் தனது கொள்கையில் இருந்து வழுவாது நின்றவர். அரசியலை வைத்து பிழைப்பு நடத்தாமல், மக்கள் சேவையை தலையாய கடமையாக கொண்டியங்கியவர். இறுதிக் காலங்களில், கடும் சுகயீனமுற்று வருடத்தில் பாதி நாட்கள் மருத்துவமனையில் காலம் கழிக்கும் வரையில், முதுமையிலும் தளராது தனது சமூகக் கடமைகளை நிறைவேற்றியவர். அவரைப் பற்றிய சுருக்கமான நினைவுக் குறிப்புகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
.

வட இலங்கையில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சரசாலை எனும் கிராமத்தில் வாழ்ந்த, ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த "சின்னர்" எனும் ஏழை விவசாயிக்கு ஒன்பது பெண் பிள்ளைகளும், ஓர் ஆண் பிள்ளையும் பிறந்தன. அந்த விவசாயியின் ஒரேயொரு புதல்வன் தான், "தர்மலிங்கம்" என்ற பெயர் கொண்ட எனது அப்பா. பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில், 1935 ஆம் ஆண்டு பிறந்தார். வறுமை, அல்லது மரபு காரணமாக, எனது தாத்தா தனது மகனை மட்டும் படிக்க வைத்தார்.
அன்று யாழ் குடாநாட்டில் நிலவிய, கடுமையான நிலப்பிரபுத்துவ சுரண்டலில் இருந்து தப்புவதற்கான ஒரே வழி, கல்வி கற்பது தான். ஆனால், அது முழுவதும் ஆங்கில மயமாகி இருந்த படியால் ஒரு சிலரால் மட்டுமே நன்மை அடைய முடிந்தது. அந்த வகையில், படித்து உத்தியோகம் பார்க்கும் ஒருவர், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் உதாரண புருஷராக அல்லது வழிகாட்டியாக கருதப் பட்டதில் வியப்பில்லை. பாட்டாளி வர்க்கத்தில் இருந்து படித்து, உழைப்பால் உயர்ந்த எனது தந்தை, ஒரு கீழ் மத்தியதர வர்க்கப் பிரதிநிதியாக மாறிய பின்னர், தமிழ் தேசிய அரசியலுக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இலங்கை சுதந்திரமடைந்த காலகட்டத்தில், அரசாங்கம் மட்டுமே, நாட்டில் பெரும்பாலானோருக்கு வேலை வாய்ப்பு தரும் பெரிய நிறுவனமாக இருந்தது. அதனால், சிங்கள - தமிழ் இன முரண்பாடும், ஒரு மத்திய தர வர்க்கப் பிரச்சினையாக ஆரம்பித்ததில் வியப்பில்லை. இன்றைக்கும் "படித்தவர்களின் பிரதேசம்" என்று அழைக்கப் படும் யாழ் குடாநாட்டை சேர்ந்த முன்னேறிய பிரிவினர், பிரிட்டன் வரை சென்று உயர் கல்வி கற்கும் வாய்ப்பை பெற்று, அரசு நிர்வாகத்திலும் உயர் பதவிகளை பெற்றுக் கொண்டனர்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த, வறுமையான பின்னணி கொண்ட எனது அப்பா போன்றவர்கள், இடைத்தரக் கல்வியுடன் இடைத்தர அரசு ஊழியராக வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அவருக்கு அந்த வாய்ப்பு இராணுவத்தில் கிடைத்தது. முன்பு பிரிட்டிஷ் காலனிய இராணுவமாக இருந்து, சுதந்திரமடைந்த இலங்கையின் தேசிய இராணுவமாக மாறிய ஓர் அரசு நிறுவனத்தில், ஒரு சாதாரண எழுதுவினைஞர் (Clerk) பணியில் சேர்ந்து கொண்டார். பல வருட கால சேவை அனுபவம் காரணமாக, தலைமை லிகிதராக (Chief Clerk) பதவியுயர்வு பெற்றார். 

எனது தந்தை இராணுவத்தில் வேலை செய்து கொண்டே மருந்தாளராக (Pharmacist) தொழிற் கல்வி கற்று தேர்ச்சி பெற்றார். அதனால், கொழும்பு கொம்பனி வீதியில் உள்ள இராணுவ தலைமையகத்தின் மருத்துவப் பிரிவில் வேலை செய்யும் வாய்ப்புக் கிட்டியது.

அறுபதுகளில், ஆப்பிரிக்காவில் புதிதாக சுதந்திரமடைந்த கொங்கோவில் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. அங்கு சமாதானத்தை நிலைநாட்ட அனுப்பப்பட்ட ஐ.நா. சமாதானப் படையில், இலங்கை இராணுவமும் இணைந்து கொண்டது. எனது தந்தையும், கொங்கோ நாட்டிற்கு அனுப்பப் பட்ட ஐ.நா. சமாதானப் படையில் ஒரு வீரராக தெரிவு செய்யப் பட்டார். அவர் கொங்கோவில் பணியாற்றிய காலத்தில், எடுத்த புகைப்படங்கள், சேகரித்த தகவல்கள், எனது சர்வதேச அரசியல் தொடர்பான ஆர்வத்தை தூண்டி விட்டன எனலாம்.  

எனது அப்பா இராணுவத்திற்குள் வேலை செய்த படியால், எவ்வாறு இனவாதம் சிங்களப் படையினர் மத்தியில் நிறுவன மயப் படுகின்றது என்பதை நேரடியாக கண்டுணர்ந்தார். ஒரு காலத்தில் உற்ற நண்பர்களாக இருந்த சிங்கள ஊழியர்கள், குறிப்பிட்ட கட்டத்தில் தமிழர்களுக்கு எதிரான துவேஷத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். எனது தந்தை மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் சிலர் இனவாதத்தை வெளிப்படுத்தினார்கள்.

அப்பாவுடன் கூட வேலை செய்த சிங்கள ஊழியர்கள், தாம் பேசுவதை இனவாதமாக கருதாமல், அதை நியாயப் படுத்தி வந்தனர். சிங்களப் பிரதேசத்தில், சிங்களவர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகளை தமிழர்கள் தட்டிப் பறிப்பதாக குற்றம் சாட்டினார்கள்.   ஆனால், "தமிழர்கள் எல்லோரும் படித்தவர்கள், உத்தியோகம் பார்ப்பவர்கள்" என்பது ஒரு கற்பனையான வாதம் என்பதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர்கள் இருக்கவில்லை. இது போன்ற ஒரு பக்கச் சார்பான அரசியல் கருத்துக்கள், பிற்காலத்தில் பல இலட்சம் மக்களை பலி கொண்ட போருக்கு இட்டுச் சென்றது.

இராணுவ தலைமை அலுவலகத்தில், சிங்கள ஊழியர்களுடன் அடிக்கடி நடக்கும் அரசியல் வாக்குவாதங்கள், எனது அப்பாவையும் தமிழ் தேசியவாத அரசியலுக்குள் இழுத்துச் சென்றதில் வியப்பில்லை. இலங்கையின் புத்திஜீவிகள், மத்திய தர வர்க்கத்தினர், "சிங்களவர், தமிழர்" என்று இரு துருவங்களாக பிரிந்து சென்று, அவரவர் தமக்குரிய அரசியலை அமைத்துக் கொண்டனர். அந்தப் பிளவு இன்று வரை தொடர்கின்றது. 

தமிழர்களுக்கு தனிநாடு வேண்டுமென்ற அரசியல் கோரிக்கையை முன்வைத்த தமிழரசுக் கட்சித் தலைவர்கள் கொழும்பில் மட்டுமே பெருமளவு செயற்பட்டு வந்தனர். தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் இணைந்து, தமிழர் விடுதலைக் கூட்டணியாக வட-கிழக்கு தமிழர்களின் ஏகபோக பிரதிநிதித்துவம் பெற்ற பின்னரும், கொழும்பை மையமாகக் கொண்ட அரசியல் பெருமளவு மாறவில்லை. அதனால், அந்தக் காலத்தில் "கொழும்புத் தமிழர்களாக" வாழ்ந்து கொண்டிருந்த எங்கள் குடும்பமும், மிக இலகுவாக தமிழ் தேசிய அரசியலுக்குள் அமிழ்ந்ததில் வியப்பில்லை.

தமிழ் தேசிய அரசியல் பற்றிய கலந்துரையாடல்கள் பல எங்களது வீட்டிலேயே இடம்பெற்றுள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் உடுப்பிட்டித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இராசலிங்கம் அப்பாவின் நெருங்கிய நண்பர். அவர் அடிக்கடி எமது வீட்டிற்கு வந்து போயுள்ளார். அப்படியான தொடர்புகள் காரணமாகவும் எனது அப்பா கூட்டணி அரசியலை முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கலாம். 

கொழும்பில் நடந்த கூட்டணியின் அரசியல் பிரச்சாரக் கூட்டங்களில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். சிறுவனான எனக்கு அரசியல் சரியாகப் புரியாவிட்டாலும், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் போன்றவர்களின் தமிழ் இன மான உணர்ச்சியை தூண்டும் கவிதைகள், பேச்சுக்கள் கூறும் மொழி மட்டும் நன்றாகப் புரிந்தது. சிறு வயதில் நானும் ஒரு தமிழ் தேசியவாதியாக இருந்திருந்தால், அது அதிசயம் அல்ல. ஆறாம் வகுப்பு படிக்கும் காலத்தில் நானும் காசி ஆனந்தன் பாணியை பின்பற்றி, "தமிழ் இன உணர்ச்சிக் கவிதைகள்" எழுதி இருக்கிறேன். அன்றைய சூழல் அப்படித் தான் இருந்தது. 

எது எப்படி இருந்த போதிலும், எனது தந்தை, "தமிழர்களுக்கு தமிழீழம் என்ற தனிநாடு வேண்டும்" என்று மனப்பூர்வமாக நம்பிய ஒருவராக இருந்தார். அந்தக் கொள்கைப் பற்று காரணமாக, ஈழப் போராட்டம் தொடங்கிய காலத்தில், கூட்டணியை துறந்து புலிகளை ஆதரிக்கத் தொடங்கினார். அந்தக் காலத்தில் புலிகள் இயக்கம் தீவிர தமிழ் தேசிய அரசியலை முன்னேடுத்தமையும் ஒரு காரணமாக இருக்கலாம். 

1983 ஆம் ஆண்டு இனக் கலவரம் நடப்பதற்கு முன்னரே, கொழும்பு தமிழர்களுக்கு பாதுகாப்பான பிரதேசம் அல்ல என்று அப்பா உணர்ந்து கொண்டார். அதனால், சாவகச்சேரியில் பரம்பரைக் காணி ஒன்றில் வீடு கட்டி, ஒரேயடியாக தமிழரின் பூர்வீக பிரதேசத்தில் குடியேறி விட வேண்டுமென்று முடிவெடுத்தார். ஏறத்தாள வீடு கட்டி முடியும் நேரத்தில், 83 இனக் கலவரம் நடந்தது. 

நான் அப்போது யாழ் இந்துக் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தேன். அப்பாவும், அம்மாவும், தங்கையும் இன்னமும் கொழும்பில் தங்கி இருந்தார்கள். ஆடிக் கலவரம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர், சாவகச்சேரி வீட்டில் விடுமுறையை கழித்த படியால், தெய்வாதீனமாக உயிர் தப்பி விட்டனர். கொழும்பில் நாங்கள் குடியிருந்த வாடகை வீடும், அதனோடிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளும், சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு தப்பவில்லை. அந்தப் பிரதேசத்தில் இருந்த தமிழர்களின் வீடுகள் ஒன்று கூட விடாமல் எரிக்கப் பட்டன. ஒன்றுமறியாத அப்பாவிகள் பலர் கொல்லப் பட்டனர்.

1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர், எங்களது குடும்பம் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக தங்கி விட்டது. அந்தக் காலகட்டத்தில் ஐம்பது வயதான எனது அப்பா, இராணுவத்தில் பணிபுரிவோர் முன்கூட்டியே ஓய்வூதியம் பெறும் சலுகையை பயன்படுத்திக் கொண்டார். கொழும்பில் பாடசாலை ஆசிரியையாக பணியாற்றிய எனது அம்மாவும், ஊரில் உள்ள ஆரம்பப் பாடசாலைக்கு மாற்றலாகி வந்தார். அதற்குப் பிறகு, எங்களது குடும்பத் தொடர்புகளும், அப்பாவின் அரசியல் ஈடுபாடும் யாழ்ப்பாணத்தை சுற்றியே மையப் படத் தொடங்கின.

ஆடிக் கலவரத்திற்குப் பின்னர், யாழ் குடாநாட்டில் கூட்டணியினரின் பாராளுமன்ற தமிழ் தேசிய அரசியல் மங்கத் தொடங்கியது. அந்த வெற்றிடத்தில், ஆயுதமேந்திய தீவிரவாத தமிழ் தேசிய அரசியல் வளர்ந்து கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் ஈழ விடுதலை இயக்கங்களின் இராணுவத் தாக்குதல்கள், பிரச்சார நடவடிக்கைகள் யாவும், யாழ் நகரை அண்டிய பகுதிகளிலேயே அதிகளவில் இடம்பெற்றன. 

எண்பதுகளில், எனது தந்தை, யாழ் நகரில் ஒரு சிறு தொழில் வளாகத்தில் மனேஜராக வேலை செய்து கொண்டிருந்தார். அதனால், போராளிக் குழுக்கள் விநியோகித்த துண்டுப் பிரசுரங்கள், பத்திரிகைகள் போன்றன அவருக்கு இலகுவாக கிடைத்து வந்தன. அந்தக் காலகட்டத்தில் அப்பாவும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் நடவடிக்கைகளினால் கவரப் பட்டார். தமிழ்நாட்டில் அச்சிடப் பட்டு, யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப் பட்ட, புலிகளின் உத்தியோகபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" பத்திரிகை பிரதிகளை வீட்டிற்கு கொண்டு வருவார். அவர் மூலமாகத் தான் எனக்கும் புலிகளின் அரசியல், இராணுவ கொள்கைகள் அறிமுகமாகின.

1984 ஆம் ஆண்டு, திம்புப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சிறிலங்கா இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப் பட்டது. யாழ் குடாநாட்டிற்குள் மக்கள் வாழ்ந்த பிரதேசங்கள் யாவும், "விடுதலை செய்யப் பட்ட பிரதேசமாக" கருதப் பட்டது. எல்லா இடங்களிலும் ஈழ விடுதலை இயக்கங்கள் அலுவலகங்களை திறந்தனர். புதிய உறுப்பினர்களை சேர்த்து பல்கிப் பெருகினர். அன்றைய காலத்தில் ஒரு சிவில் சமூகமாக இயங்கிய பிரஜைகள் குழுவில், ஊரில் பெரிய மனிதரான அப்பாவும் பங்கு பற்றினார். பிற்காலத்தில் அது புலிகளின் வெகுஜன அமைப்பாக தவறாகக் கருதப் பட்டது.

புலிகள் அமைப்பில், சாவகச்சேரி பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப் பட்ட கேடில்ஸ் தலைமையில், அவர்களது அரசியல் நடவடிக்கைகளும் அதிகரித்தன. பிரஜைகள் குழு போன்ற வெகுஜன அமைப்புகளுக்குள் புலிகளின் தலையீடு அதிகரிப்பதற்கு, கேடில்சின் நிர்வாகச் செயற்பாடுகள் காரணமாக அமைந்திருந்தன. நான் யாழ் இந்துக் கல்லூரியில் படித்த காலத்தில், கேடில்ஸ் எனக்கு சீனியர் மாணவனாக ஒரே விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். இரண்டு வருடங்களுக்குப் பின்னர், அதே மாணவன் புலிகளின் சாவகச்சேரிப் பகுதிப் பொறுப்பாளராக வருவான் என்று நான் கனவிலும் நினைத்திருக்க முடியாது.

ஈழப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில், சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் புரியப் பட்ட மனித உரிமை மீறல்கள் ஆவணப் படுத்தப் பட்டன. எனது அப்பா அந்த துறையில் மிகவும் உற்சாகமாக செயற்பட்டு வந்தார். சர்வதேச மன்னிப்புச் சபையின் (Amnesty International) செயற்பாட்டாளராக மாறினார். அவர் சேகரித்துக் கொடுத்த தகவல்கள் பல, இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளன. 

ஒரு தடவை, சர்வதேச மன்னிப்புச்சபையின் இரண்டு வெளிநாட்டு ஆர்வலர்கள், எங்களது வீட்டிற்கு வந்து தங்கியிருந்து, விருந்துண்டு விட்டு சென்றுள்ளனர். அப்போது சிறுவனாக இருந்த நான், அவர்களுக்கு பல இடங்களை கூட்டிச் சென்று காட்டியமை நினைவில் உள்ளது. ஒரு வெள்ளையினத்தவரும், கருப்பினத்தவரும் எங்களது கிராமத் தெருக்களில் வலம் வந்த நேரம், மக்கள் கூடி நின்று விடுப்புப் பார்த்தமை ஞாபகம் இருக்கிறது. சில வருடங்களுக்குப் பின்னர், மேற்கத்திய அரசு சாரா நிறுவனங்களும், அவற்றின் வெள்ளையின பிரதிநிதிகளும் எங்கள் மண்ணில் நிரந்தரமாகத் தங்கி இருந்து  செயற்படத் தொடங்கினார்கள். ஆனால், அந்தக் காலத்தில் அதெல்லாம் மிகவும் அருமையாக நடப்பவை.

"சிறிலங்காப் படைகளிடம் இருந்து விடுவிக்கப் பட்ட யாழ் குடாநாட்டில்" ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இடையே ஆயுத மோதல்கள் நடந்து, இறுதியில் புலிகள் மட்டுமே முழுமையாக அதிகாரம் செலுத்த ஆரம்பித்தனர். 1987 ஆம் ஆண்டு, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் இந்திய இராணுவம் வந்திறங்கியது. சில வருடங்களுக்கு முன்னர் புலிகளால் தடை செய்யப் பட்ட பிற இயக்கங்கள், இந்திய படையினரின் பாதுகாப்பில் கொண்டு வரப் பட்டன.

தற்போது இந்திய இராணுவத்தின் துணைப் படைகளாக மட்டுமே செயற்பட்ட ஆயுதக் குழுக்கள், புலி உறுப்பினர்கள், ஆதரவாளர்களை வேட்டையாடிக் கொன்றன. வெகுஜன அமைப்புகளான பிரஜைகள் குழுக்கள் போன்றனவும் தப்பவில்லை. புலி ஆதரவாளர்களாக சந்தேகிக்கப் பட்ட புத்திஜீவிகள் சுட்டுக் கொல்லப் பட்ட காலத்தில், அப்பாவும் தலைமறைவாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

தொண்ணூறுகளுக்கு பிந்திய காலத்தில், வன்னிப் பகுதி புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது சில வருடங்கள், வன்னியில் அரசியல் ஆர்வலராக செயற்பட்டு வந்த அப்பாவும், பின்னர் யாழ் குடாநாட்டிற்கு திரும்பிச் சென்றார். ஆனால், காலம் மாறி விட்டிருந்தது. யாழ் குடாநாட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிறிலங்கா இராணுவம், அரசியல் செயற்பாட்டாளர்களையும் கண்காணித்து வந்தது. 

அதனால், அரசியல் பேசாத சமூக சேவைகள் என்ற மட்டத்தில் மட்டுமே அப்பா செயற்பட்டு வந்தார். இந்து மத தத்துவங்களில் நம்பிக்கை கொண்ட அப்பா, தனது வாழ் நாள் முழுவதும் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டு வந்தார். இறுதியாக நான் அவரை சந்தித்து விடை பெற்ற நாட்களிலும், தான் அறிந்த ஆன்மீக உண்மைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

சாதிய, பார்ப்பனிய சடங்குகளில் இருந்து இந்து மதத்தை மீட்டெடுத்து, தத்துவங்கள் மூலம் தூய்மைப் படுத்தலாம் என்று நம்புகிறவர்களில் அப்பாவும் ஒருவர். கொழும்பில் நாம் வாழ்ந்த காலங்களில், ஹரிதாஸ் எனும் இந்திய சாமியாரின் ஆன்மீக சொற்பொழிவுகளை விரும்பிக் கேட்பார். வெள்ளிக்கிழமைகளில் ஒழுங்காக கோயிலுக்கு சென்று வருவார். மாட்டிறைச்சி உண்ண மாட்டார். 

சிறுவயதில் நானும் இந்து மத சம்பிரதாயங்களை பின்பற்றி வந்திருக்கிறேன். எனக்குப் பதினாறு வயது இருக்கும் பொழுதே, ஒரு நாஸ்திகனாக மாறியதும், இந்து மத சம்பிரதாயங்களை பின்பற்றாததும் ஏற்கனவே அவருக்கு தெரியும். ஆனால், "பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொண்ட" சில பழமைவாத, மத சம்பிரதாயங்களை, நானும் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். அந்த விடயத்தில் மட்டும், இறுதிக் காலத்தில் என்னுடன் மனஸ்தாபப் பட்டார்.

அப்பா தனது வயோதிப காலத்தில், நோய்களால் உடல் பாதிக்கப் பட்டிருந்த போதிலும் சளைக்காமல் சமூகப் பணி செய்து வந்தார். யுத்தம் காரணமாக, யாழ் குடாநாட்டில் மருத்துவ வசதிகள் மோசமான நிலைமையில் இருந்தமையும் அவரது நோய்களுக்கு ஒரு காரணம். 

அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்ட படியால், பாதிக்கப் பட்ட நோயாளிகளில் அப்பாவும் ஒருவர். அவருக்கு நடந்த அறுவைச் சிகிச்சைகள் பல எதிர்மறையான விளைவுகளை தந்தன. ஒரு நோயை குணப் படுத்தி, இன்னொரு நோயை வாங்கிக் கொண்டு வந்தார். இறுதியில், சில வருடங்களுக்கு முன்னர் புற்றுநோயை குணப்படுத்துவதற்கு அளிக்கப் பட்ட சிகிச்சையின் எதிர்மறையான விளைவு அவருக்கு எமனாக வந்தது.

சாவகச்சேரியில் இருக்கும் எங்களது வீடு, 2000 ஆம் ஆண்டு நடந்த யுத்தத்தில் கடுமையாக சேதமடைந்திருந்தது. வீட்டில் இருந்த எங்கள் உடைமைகள் எல்லாம் அழிந்து நாசமாகி இருந்தன. இருப்பினும் சமாதான காலத்தில் அதைத் திருத்தி, அப்பா இறுதி வரை அங்கேயே வாழ்ந்து வந்தார். எங்கள் ஊரில் இருந்த பலர் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கும், இடம்பெயர்ந்து பெரிய நகரங்களுக்கும் சென்று விட்டனர். ஆனால் அப்பா மட்டும் அந்த வீட்டை விட்டுப் பிரிய மனமில்லாமல் ஊரிலேயே தங்கி விட்டார்.

எனது அப்பா ஊரை விட்டு வெளியேற விரும்பாமல், சாகும் வரை அங்கேயே இருந்தமைக்கு, சில உணர்வுபூர்வமான காரணங்கள் இருந்தன. சுமார் 20 வருடங்களுக்கு முன்னர், பருவ வயதை எட்டியிருந்த எனது தங்கை, எதிர்பாராவிதமாக இரத்தப் புற்றுநோய் வந்து இறந்தார். சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் அம்மா ஒரு விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அதனால் அப்பாவுக்கு அந்த வீட்டை விட்டுப் பிரிய மனமின்றி, அந்திமக் காலத்தில் நோய்களுடன் போராடிக் கொண்டே வாழ்ந்து வந்தார். இரண்டு தம்பிகள், இன்னொரு தங்கை அந்த வீட்டில் வாழ்ந்து வந்தனர். சில உறவினர்கள், நண்பர்களின் உதவியும் கிட்டியிருந்தது.

இருப்பினும், எனது தந்தை யாருடைய உதவியையும் எதிர்பாராமல், இறுதிவரையில் தனது சொந்தப் பலத்தில் வாழ விரும்பினார். ஓர் ஈழத் தமிழ் அரசியல் - சமூக ஆர்வலரான எனது தந்தைக்கு அஞ்சலி செலுத்தி, இந்தக் கட்டுரையை அவருக்கு சமர்ப்பிக்கிறேன். எனது தங்கையுடனும், அம்மாவுடனும், விண்ணுலகில் சேர்ந்து கொண்ட அப்பாவின் ஆத்மா சாந்தி அடைவதாக.

நன்றி:கலையகம் 

No comments: