Sunday, August 31, 2014

மாதொருபாகன் - பாலியலின் ஒரு ரகசியக் கதவு

-சுரேஷ் கண்ணன்- 

பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்' புதினத்தை வாசித்தேன்.

இதன் உள்ளடக்கம் காரணமாகவே இந்தப் புதினம் தமிழ் சமூகத்தில் மிக அதிகமான சர்ச்சைகளையும் அதன் மீதான உரையாடல்களையும் அதன் மீதான கலாசார தெளிவுகளையும் பெற்றிருக்க வேண்டும். அதுவே இந்த நூலின் வெற்றியாக அமைந்திருக்க முடியும். ஆனால் அப்படியேதும் நடைபெறாதது நம்முடைய வாசிப்பின் போதாமையையும் ரசனை வறட்சியையுமே சுட்டுகிறது. ஒரு சமூகக் குழுவின் கலாசார பின்புலத்தையும் அதன் தொன்மத்தையும் வரலாற்றுக் குறிப்புகளையும் ஒரு புனைவின் பாவனையில் கடந்து செல்வது மிக சிக்கலானதொரு பணி. பெருமாள் முருகனின் பல படைப்புகள் இந்தக் கடினமான பணியை இலகுவான மொழியில் சாத்தியமாக்குகின்றன. திருமணமாகாமல் தட்டிக் கொண்டே போகும் ஒரு கவுண்டர் சமூகத்து இளைஞனின் உளச்சிக்கல்களை இதற்கு முந்தைய 'கங்கணம்' என்கிற நாவல் விளக்கிச் செல்கிறது என்றால் 'மாதொருபாகன்" குழந்தைப் பேறில்லா ஒரு தம்பதியினர் எதிர்கொள்ளும் சமூக மற்றும் உளச்சிக்கல்களை விவரித்துச் செல்கிறது.

தமிழர்களின் நுட்பமான கலாசார பின்புலங்களுக்கும் நாகரிகங்களுக்கும் எத்தனையோ விஷயங்கள் மிகையுணர்ச்சியோடும் பெருமையோடும் மேடைகளில் உதாரணம் காட்டப்படுகின்றன. ஆனால் பாலியல் விஷயங்கள் என்றால் மாத்திரம் ஒரு அசூயையோடு அதைக் கடந்து ஆனால் ரகசியக் கண்களால் உற்று  நோக்கிக் கொண்டேயிருக்கும் ஒரு போலித்தனம் இச்சமூகத்தில் எப்போது நுழைந்தது என்று தெரியவில்லை. பாலியல் சமாச்சாரங்களை மேற்குலகு விஞ்ஞான ரீதியாக அணுகுவதற்கு முன்பாகவே அதை ஆன்மீகத்துடன் இணைத்து இலைமறை காயாக புரிந்து கொள்ளும் வண்ணம் பல புடைப்புச் சிற்பங்களும் பாடல்களும் உருவாக்கப்பட்டிருந்தன.அதன் நுட்பத்தை பொறுமையாக திறந்து பார்க்கும் ஞானம்தான் நமக்கு வாய்க்கவிலலை. குழந்தைப் பேறின்மைக்கு நூலாசிரியர் விவரிக்கும் சமூகத்திலேயே ஒரு நுட்பமான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதைக் குற்றவுணர்ச்சியில்லாமல் கையாள்வதற்கு ஏதுவாக ஆன்மீகத்துடன் பிணைத்தும் வைக்கப்பட்டிருக்கிறது. 'ஒருவனுக்கு ஒருத்தி' என்கிற போலியான ஒழுக்க மதிப்பீடுகள், மனித குலம் ஏற்படுத்தியிருக்கும் கற்பிதங்கள் இயற்கைக்கு எதிரானவை. நிலவுடமைச் சமுதாயச் சிந்தனையின் தொடர்ச்சியாக திருமணம், குடும்பம், வாரிசு போன்ற நிறுவனங்களை தோற்றுவித்த மனித குலம் தான் விரித்து வைத்திருக்கும் வலையில் தானே மாட்டித் தவிப்பது பரிதாபத்துக்குரிய விஷயம்.

ஒருபக்கம் பெண்களை தெய்வமாகப் போற்றி பாவனை செய்து இன்னொரு பக்கம் இரண்டு வயது பெண் குழந்தைகளிடம் கூட பாலியல் வன்முறையை நிகழ்த்தும் பாலியல் வறட்சி கொண்ட ஒரு சமூகத்தில் நான் எப்போதும் நினைத்துக் கொள்வது இதுதான். "ஓர் ஆணும் பெண்ணும் மனதார இசைந்து விரும்பி பழக விரும்பினால் அந்த அந்தரங்கம் மதிக்கப்படவேண்டும். அதற்கு எந்தவொரு கற்பிதமும் நிறுவனமும் அமைப்பும் தடையாக இருக்கக்கூடாது,போலியான ஒழுக்க மதீப்பீடுகளைக் கொண்டு அந்த உறவு கொச்சைப்படுத்தப்படக்கூடாது" என்பது. நம் ஆதி காலத்து தாய்வழிசமூகம் இவ்வாறுதான் இருந்தது. பாலியல் வறட்சிகளோ உளச்சிக்கல்களோ வன்முறைகளோ இல்லாமல் அது நிம்மதியாகவே இயங்கியிருக்கக்கூடும். ஆணாதிக்க சுயநலங்கள் உள்நுழைந்தவுடன்தான் பல குழப்பங்கள் ஏற்பட்டன. 'நாகரிக உலகத்திலிருந்து கற்காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டுமா என்று நீதி சார்ந்த கூச்சல்கள் ஒலிக்கக்கூடும் என்றாலும்  கலாசாரம் என்பது சமூகத்திற்கு சமூகம் வேறுபடும் நிலையில்லாதது என்கிற மேல்நோக்குப் பார்வையில் நோக்கினால் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தப் புதினத்தின் உச்சத்தை நோக்கி பெருமாள் முருகன் தனது வாசகர்களை மிக நிதானமாக தயார்ப்படுத்தி அழைத்துச் செல்கிறார். விடுதலைக்கு முன்பான காலனியாதிக்க காலத்தில் இயங்கும் இந்தப் புதினத்தில் கொங்கு சமுதாயத்தின் பல்வேறு தொன்மங்களை கடந்து செல்ல வேண்டும். என்னதான் பெருமாள் முருகன் கடிவாளத்தை இறுகப் பற்றி சாவகாசப்படுத்தியிருந்தாலும், குழந்தைப் பேறிற்கான பதினான்காம் திருவிழா பற்றிய விவரணையைத் தொட்டதுமே ஒரு திரில்லர் நாவலின் சாகசத்திற்கு இணையாக பரபரக்கிறது. ஒரு கச்சிதமான தருணத்தி்ல் புதினம் நிறைவு பெறுகிறது. தாகூரின் 'சிதைந்த கூடு' என்கிற நெடுங்கதையையொட்டி சத்யஜித்ராய் உருவாக்கிய சாருலதா திரைப்படம், பரஸ்பரம் நம்பிக்கையை இழந்ததொரு தருணத்தில் நிறைவுபெறும்.அதன் தொடர்ச்சியை நாம் இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டியதுதான். அவ்வாறான வாசக பங்கேற்பையே இந்தப் புதினமும் கோருகிறது.

குழந்தைப் பேறின்மைக்கு டெஸ்ட் ட்யூப் பேபி, வாடகைத் தாய் என்று பல தீர்வுகளை சமகால விஞ்ஞானம் ஏற்படுத்தி வைத்திருக்கும் போதிலும் அது குறித்தே நாம் பல மனத்தடைகளையும் சந்தேகங்களையும் கொண்டிருக்கும் போது பல ஆண்டுகளுக்கு முன்பு இயங்கிய ஒரு தொன்ம சமூகத்தில் வைக்கப்பட்டிருக்கும் நடைமுறை சார்ந்த யதார்த்தமான தீர்வின் முற்போக்குத்தனம் வியக்க வைக்கிறது.

சமீபத்தில் வந்த மிக முக்கியமானதொரு, அதிகம் உரையாடப்பட வேண்டிய புதினமிது. திருச்செங்கோடு குறித்தான களஆய்வில் கிடைத்த பல அனுபவங்களில் ஓர் உந்துதல்தான் இந்த நாவல் என்கிறார் பெருமாள் முருகன்.ஆய்வின் போது கிடைத்த தரவுகளை வரலாறு சாாந்து விரிவாக எழுதும் எண்ணமிருப்பதாக முன்னுரையில் தெரிவித்திருக்கிறார். அது சாத்தியப்பட்டால் அது தமிழின் முக்கியமானதொரு கலாசார ஆவணப் பதிவாக இருக்கும் என்கிற நம்பிக்கையை இந்தப் புதினம் ஏற்படுத்துகிறது. 

ஆசிரியர்: பெருமாள்முருகன்
பக். 192. விலை ரூ. 140 (2010)
வெளியீடு
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. சாலை
நாகர்கோவில்.

No comments: