- என்.சரவணன் -
சிங்களப் புனைகதை காவியங்களை திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர் நாடகங்களாகவும், மேடை நாடகங்களாகவும் உருவாக்கி ஜனரஞ்சகப்படுத்தி, இனவாத புனைவேற்றி, பரப்பி வரும் போக்கு சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது.
போர் முடிவுற்றதன் பின்னர் அதுவும் கடந்த 3 ஆண்டுகளுக்குள் இந்த போக்கு தீவிரம் பெற்றிருப்பதை பல உதாரணங்களின் மூலம் எடுத்துக் காட்டலாம்.
இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடென்று மீள மீள புனைந்து நிறுவுவது என்பது பேரினவாத நிகழ்ச்சிநிரலின் தலையாய திட்டம். தவிர்க்கமுடியாத வேலைத்திட்டமும் கூட. ஆயுதப் போரின் மூலம் தோற்கடிக்கப்பட்ட ஒரு விடுதலைப் போராட்டத்தை கருத்தியல் ரீதியிலும் தோற்கடிக்கும் தேவை நெடுங்காலமாக இருக்கிறது. போரின் பின்னரும் அந்த தேவை பேரினவாதத்துக்கு எஞ்சியிருக்கிறது. அதை அரச கட்டமைப்பு நேரடியாக செய்ய வேண்டியதில்லை. நிறுவனமயப்பட்ட பேரினவாத அமைப்புமுறை அந்த காரியத்தை செவ்வனே நிறைவேற்றும் வலிமையும், வலிமையான அனுசரணையும் கொண்டிருக்கிறது. இதனை நுகர்வதற்காகவே செயற்கையான “பேரினவாத இரசனை” வேகுஜனமட்டதில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுவே சந்தையையும் உற்பத்தி செய்திருக்கிறது.
“அந்த சந்தை போதுமானதில்லை சிங்களவர்கள் ஆதரவளிக்க வேண்டும், இதனைக் காணவேண்டும், உதவி செய்யவேண்டும், பரப்பவேண்டும் அன்று இந்தியாவில் இருந்து சோழர்கள் படையெடுத்து வந்து நம்மை ஆக்கிரமித்து ஆட்சி செய்தார்கள் ஆனால் இன்றோ இந்தியாவில் இருந்து இந்தி தொலைகாட்சி நாடகங்கள் வாயிலாக நம்மை சுற்றிவளைத்து ஆக்கிரமித்திருக்கிறார்கள். எனவே அதனைக் கைவிடவேண்டும். நமது சொந்த சிங்கள நிகழ்சிகளை மட்டும் பாருங்கள்” என்றார் “கெமுனு மாரஜ” (துட்டகைமுனு மகாராஜா) தொலைக்காட்சித் தொடரின் இயக்குனர் சரித்த அபேசிங்க.
கடந்த சில வருடங்களாக மகாபாரதக் கதைகளும், இராமாயணக் கதைகளும் இந்தி மொழியில் இருந்து சிங்களத்துக்கு மொழிமாற்றப்பட்டு தொடராக காண்பிக்கப்பட்டு வருகிறது. இவற்றின் பாதிப்பே சிங்கள இதிகாசங்களையும் அதுபோன்றே தயாரிக்க எடுத்திருக்கும் முயற்சி.
பன்முக வழிகளில் மகாவம்சத்தையும், துட்டகைமுனு – எல்லாளன் போரையும் பரப்பும் பணிகள் சமீப காலமாக அதிகமாகவே காண முடிகிறது. துட்டகைமுனுவின் இந்த புத்துயிர்ப்பு இன்றைய புதிய அரசியல் அவதாரமாகவும், அஸ்திரமாகவும், வடிவமாகவுமே காண முடிகிறது.
தமிழர்கள் வந்தேறு குடிகள், அன்னியர்கள், கள்ளத் தோணிகள், ஆக்கிரமிப்பாளர்கள், பௌத்த மதத்தை அழித்து இந்து மதத்தை நிறுவியவர்கள். பௌத்த விகாரைகளை அழித்தொழித்தவர்கள் என்றெல்லாம் புனைவது சிங்கள பௌத்த பேரினவாத இருப்புக்கு மிகவும் அவசியமானது. அதனை திரும்பத் திரும்ப பல்வேறு வடிவங்களில் புனைவதும், நிறுவுவதும், நம்பவைப்பதும், வெறுப்புணர்வை ஏற்படுத்துவதும் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்துக்கு பலம் சேர்ப்பவை.
அதுமட்டுமன்றி மாறாக இப்பேற்பட்ட தமிழர்களை எதிர்த்து நின்றவர்கள் சிங்களவர்கள், பௌத்தர்கள், தேச பக்தர்கள், மண்ணின் மைந்தர்கள், மா வீரர்கள், நல்லவர்கள், மனிதாபிமானமுள்ளவர்கள் என்றெல்லாம் இந்த கதைகளின் வாயிலாக புனைவதும், நிறுவுவதும் அவர்களுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது.