Tuesday, July 11, 2017

மண்வாசனைக்கு மகுடம் வைத்த நிலக்கிளி

-ஜீவகுமாரன் -


1973ல் வன்னி மண்ணின் வாசனையை இலக்கிய உலகத்திற்கு அறிமுகம் செய்த ’நிலக்கிளி’ நாவலின் ஆசிரியர். எழுத்தாளர் திரு. பாலமனோகரனின் 75வது பிறந்தநாள் தினக் கொண்டாட்டம் சென்ற சனிக்கிழமை மிக அமைதியான முறையில் குடும்ப உறவினர்கள் - நண்பர்கள் - இலக்கிய உலகுடன் தொடர்புடையவர்களுடன் நடந்தேறியது. டென்மார்க்கிற்கு வந்த காலம் தொடக்கம் அங்கிள் - அன்ரி என்ற உறவுமுறையே இப்போதும் தொடர்கிறது. மூத்த எழுத்தாளர் என்ற இடைவெளியுடன் ஏன் பழகவில்லை என்பதனை எனதுரையில் குறிபிட்டு இருந்தேன். எழுத்தாளர் பாலமனேகரனுக்கு ஒவியர் பாலமனோரன் என்று இன்னோர் பக்கம் உண்டு.
அவருக்கு எனது பரிசாக அவரின் சில ஓவியங்களையும் நிலக்கிளி நாவலின் அட்டைப்படத்தையும் தொகுத்து மிகச்சிறிய வாழ்த்தொன்றை எழுதியிருந்தேன்.இயற்கையும்  எழுத்தையும்  தன் சுட்டுவிரலுக்கும் பெருவிரலுக்கும்   இடையில் சிறைப்படுத்திய அங்கிளுக்கு  எமது 75வது பிறந்த தின வாழ்த்துகள்   ஜீவகுமரன் - கலாநிதி இந்த மிகச்சிறிய வாழ்த்தின் பொழிப்புரையே எனது 10 நிமிட பேச்சாக அமைந்திருந்தது. எனது பேச்சை எனது மனைவியார் டெனிஷ் நண்பர்களுக்காகவும் எம் இளம் தலைமுறையினருக்காகவும் டெனிஷ் மொழியில் மொழிபெயர்த்தார்.
இந்த அனைத்து ஓவியங்களிலும் உள்ள எளிமையும் கிராமியமணத்தின் தொகுப்புத்தான் நிலக்கிளி நாவல் என்றால் மிகையாகாது.


 இன்றும் என்னைத் தூக்கத்தில் இருந்து தட்டியெழுப்பி இலங்கையில் வெளியாகிய ஒரு 5 - 6 நாவல்களைக் குறிப்பிடுங்கள் என்றால் மண்வாசனையை எனக்கு அறிமுகம் செய்த வகையில் ’நிலக்கிளி’யையும்... பிரதேசவாசனையை அறிமுகம் செய்த வகையில் ’திரு. செங்கையாழியானின் ;வாடைக்காற்றையும் - காட்டாற்றையும்’.... அரசியல் போராட்ட நாவல் என திரு. ஞானசேகரனின் குருதிலையையும் .... சமூக போராட்ட நாவல் என திரு டானியலின் ’கானலை’யும் .... சமுதாய கவன யீர்ப்பு நாவல் என திரு. அருள்சுப்பிரமணியத்தின் ’அவர்களுக்கு வயது வந்துவிட்டது’ நாவலையும் குறிப்பிடுவேன்.  இது எனது கணிப்பு மட்டுமே.
மண்வாசனைக்கு மகுடம் வைத்த நிலக்கிளி நாவலில் வரும் வெள்ளாந்தி மனிதர்களும் அவர்களின் எளிமையும் இயற்கையும் முரலிப்பழங்கங்களின் வாசனையும் இன்றுவரை வீசுகின்றது என்றால் அது பேசிய கருப்பொருளும் அதற்கு களம் அமைத்துக் கொடுத்த வன்னி மணம் தான்.  பதஞ்சலி என்ற பெண் பாத்திரம் இன்று வாசகர் நெஞ்சில் வாழுகின்றாள். கூடவே கதிராமன் மலையார் சிறிய ஆற்றுப்படுக்கைகள் - காடுகள் இத்தியாதி… இத்தியாதி…
பின்னாளில் பல எழுத்தாளர்களுக்கு அருட்டுணர்வாய் நிலக்கிளி அமைந்தது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இந்த வாழ்த்தில் எழுத்தாளர் என குறிப்பிடாது வெறுமே அங்கிள் என்று குறிப்பிட்டது ஏன் என யோசிப்பீர்கள்.
மூத்த எழுத்தாளர்கள் என்ற அடையாளத்துடன் இருந்தவர்களை நான் நெருங்கிய பொழுது அல்லது அவர்கள் என்னை நெருங்கிய பொழுது எனக்கேற்பட்ட சில கசப்பான அனுபவங்களே. ஏதோ ஒரு இடத்தில் அவர்கள் குரு-சிஷ்யன் உறவை  எதிர்பார்த்திருதார்கள்; அல்லது திணித்திருக்கிறார்கள்.
பேராசிரியர் திரு. மௌனகுரு எனக்கு ஒருகால் கூறிய ” இந்த இலக்கிய உலகம் தெளிந்த நீரோடை போல் இருக்கும். இறங்கிப் பார்த்தால்தான் அதனுள் சுழிகளும் முதலைகளும் இருக்கின்றார்கள்” என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன் .
தொட்டால் தானே தெரிகிறது தொட்டால் சுடுவது நெருப்பென்று. அந்த அனுபவங்களோ என்னவோ என்றுமே எனக்கு இவர் அங்கிள் பாலமனோகரன் தான்.
இன்றும் எவராவது என்னை "சார்" என்று  விழிக்கத் தொடங்கினால் "அண்ணா " என்று அழையுங்கள் என்று சொல்வதற்கு இதுதான் காரணம்.
எனது எழுத்துகளை எப்போதும் ஊக்கிவித்ததில் அங்கிளுக்கு பெரிய பங்களிப்பு உண்டு. அவ்வாறே எனது மனைவியாரின் எழுத்துகளையும். 
குயிலோசை சஞ்சிகை வந்த காலத்தில் அங்கிளும் அன்ரியும் பக்கம் பக்கமாக விமர்சித்து பாராட்டுவார்கள்.
மற்றவர்களைப் பாராட்டவும்… மற்றவர்களைப் புறக்கணிக்காமல் இருக்கவும் நான் கற்றுக் கொண்டவர்களில் அங்கிள் நிச்சயம் ஒருவர்.
அவர் நீண்டகாலம் நோய் நொடியின்றி வாழ எங்கள் இருவரின் வாழ்த்துகள்.
இந்த நாட்டின் நான்கு கால நிலைகளையும் இரசித்தாலே வெகுசீக்கிரமாக காலம் ஓடிச்சென்றுவிடும் என எமக்கு வந்த காலத்தில் கூறியவற்றை எனது மனைவி நினைவு கூர்ந்தார். 

பிற்குறிப்பு:
ஆசிரியரின் பிற நூல்கள்.
நிலக்கிளி - நாவல் - வீரகேசரிப் பிரசுரம் (மிக விரைவில் ஆங்கிலத்திலும் - சிங்களத்திலும் - டெனிஷிலும்)
கனவுகள் கலைந்தபோது - நாவல் - வீரகேசரிப் பிரசுரம்
வட்டம்பூ – மித்ரா பதிப்பகம்
குமாரபுரம் - நாவல் - வீரகேசரிப் பிரசுரம்
தாய்வழித் தாகம் - தென்னிந்தியாவில் வெளியான நாவல்
நந்தாவதி - தென்னிந்தியாவில் வெளியான நாவல்
தீபதோரணங்கள்- சிறுகதைத் தொகுதி
நாவல் மரம் - டேனிஷ் மொழியில் இவரது
சிறுகதைத்தொகுதி
டேனிஷ்- தமிழ் அகராதி - டெனிஷ் அகதிகள் சங்க வெளியீடு
மிஸ்டர். மங்ஸ் (இணையத்தில் வெளிவந்ததும் நூல்வடிவலில் வரவிருப்பதும்)

No comments: