-கரவைதாசன் -
பேரூந்தின் பின்னே
அலைந்து திரிதல்
சருகுகளிற்கின்பம் எனின்
காற்றிடையே பறந்து திரிந்து
கம்பியிற் சிக்குண்டல்
எனக்கின்பம்.
அதனிடையே என்பழைய செய்தி
இன்னும் இருக்கிறது
ஆதலால்.
-கரவைதாசன் -
-கரவைதாசன் -
இக்குறுகிய கவி வரிகள் பல வருடங்களின் முன்னால் என்னால் எழுதப்பட்டு கிடப்பில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. அது என் உணர்வு எனின், பல நினைவுகளும் அப்படித்தான். ஆண்டு சரியாக ஞாபகத்துக்கு வருகுதில்லை அதை கண்டடைவதில் அப்படியொன்றும் கடினமில்லை ஞாபகத்துக்கு வரும்போது குறித்துக்கொள்கின்றேன். இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான சமாதானத்துக்கான கலந்துரையாடல் ஜேர்மன் சுட்காட் நகரின் புறநகர் பகுதியான பாட்போலில் நடைபெறுவதாகவிருந்து பின் இடம் மாற்றலாகி ஜேர்மன் பேர்லின் நகரில் நடைபெற்றது. நிகழ்வினை அவதானிப்பதற்காகவும் நிகழ்வில் கலந்துரையாடவும் அழைக்கப்பட்டிருந்தேன். பகல் முழுவதும் அரசியல் கலந்துரையாடல் மாலை உணவுவேளையின் பின் கலாசார நிகழ்வுகளின்போது இலங்கைத்தீவின் மக்கள் கலைஞர் தோழர் ஜயதிலக பண்டாரவும் நானும் இன்னும் சில தோழர்களும் சில பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தோம் கிற்றார் வாத்தியத்துடன் ஒரு சிங்களத்தோழன், ரஞ்சித்தின் கையில் டோல்க்கி, முரளியிடம் பொங்கஸ், கரோக்கி இசையுடன் இணைந்து சில பாடல்களென இசையிலும் நட்பிலும் தோழமையிலும் மிதந்து கொண்டிருந்தோம். தமிழ்ப் போராளிகளின் நியாயப்பாடுகளை வலியுறுத்தி தானே எழுதி தானே இசையமைத்து சிங்களக் கிராமம் கிராமமாக நடைப்பயணத்திலும் கொண்டு சென்ற பாடல்களில் சிலவற்றையும் ஜெயதிலக பாடினார் . அப்போது இலங்கை சீனசார்பு கம்யூனிசக் கட்சியின் தேசிய கலை இலக்கியப் பேரவைக்காக கவிஞர் முருகு இரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட இரண்டு பாடல்களை நான் பாடினேன். அதிலொன்று நெல்லியடிப்பகுதியில் தேனீர்க்கடைகளில் இரட்டைக்குவளை (இரட்டைப்பேணி) முறையினை ஒழிப்பதுக்காக போராடிய தோழன் நல்லதம்பி இளையதம்பி (கிளி ) (கன்பொல்லை) அவர்களின் மறைவுக்காகப் பாடப்பட்ட பாடல் அது. இப்பாடல் எழுபதுகளில் வெளிவந்த பாடல், துலாபாரம் திரைப்படத்தில் வரும் "காற்றினிலே பெரும் காற்றினிலே" என்ற பாடலின் மெட்டில் அமைந்துள்ளது அப்பாடல்.
கடையினிலே நெல்லியடிக் கடையினிலே
கறள்ப்பேணி யாவுமே கிடைக்கவில்லையே,
உடைத்தெறிந்தான் போத்தலை
உள்ளமர்ந்தான் கிளியனே
கடையினிலே நெல்லியடிக் கடையினிலே.
சாதி வெறி தகரவே
சஞ்சலங்கள் தீரவே
சாட்சி வைத்தான் சமூகம் தன்னிலே
பாதியிலே போட்டியால் பழுது தூக்கி மாண்டானே
பாரில் அவன் வீரன் அல்லவா
கிளியனும் பகலவனாய் ஒளி தருவானே.
கடையினிலே நெல்லியடிக் கடையினிலே...