Sunday, July 05, 2015

பிரத்தியேகம் (சிறுகதை)

-கரவைதாசன்-
எனக்குத்  தெரியும் தூரத்தில் அவர்கள்  அந்த தொடு கடலை அண்டி நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கிடையில்  அண்டளவாக ஒரு இரண்டு மீட்டர் இடைத்தூரம் இருக்கலாம். அவர்கள் எதையோ  சம்பாசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் அநாதரவற்றுக்  கிடக்கும்  கல்லொன்றினையோ அல்லது  பனிக் கட்டியொன்றையோ உதைக்கின்றார். இருப்பிலிருந்து  பிரிய விரும்பா ரீங்காரத்துடன்  அது நகர்ந்து செல்கின்றது. நேற்றிரவு பூத்த பனிகள் இறுகித் திண்மையாகி வெள்ளைச் சல்லிக் கற்களைப்போல் கடற் கரையோடு பரந்து கிடக்கின்றன. வானம் கரும் முகில்களால் சூழ்ந்தே கிடக்கின்றது. இடையிடையே வெள்ளியிலான முகில்கூட்டங்களும். மொய்க்கின்ற குளிரும்,  வசந்த காலத்தினிலே இலையும் கணுவும்  பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய் குடை விரித்துநின்ற மரங்கள் விறகாகி  உயிர் ஒளித்து மீண்டும் ஒரு பிராப்தத்துக்காய் வான் நோக்கி விரல் நீட்டி தவம் கேட்க  அவற்றிலும்  பனி குந்தியிருந்தன.  இவை  டென்மார்க் நாட்டின்  குளிர் காலத்தின்  இயற்கை வனப்புகள்.

எனக்கு இரசிக்க நேரமில்லை கைகோடரியினை ஓங்கி மரக்குத்திகளியிடையே  இறக்கினேன். எதிரே காற்று மெல்ல வந்து விலகிப் போனாபோது  குளிர் முகத்தில் அறைந்தது.  உள்ளே சென்று வழைமைபோல் அப்பா பாவிக்கின்ற அந்தக் கூடையை எடுத்து வந்து கொத்திப்பிரித்தெடுத்த விறகுகளை அதில் அடுக்கத்தொடங்கினேன். அப்பாவுக்குத் தெரிந்த  அதே நுட்பம் பெரிய துண்டுகள் கீழாகவும் சிறுதுண்டுகள் மேலாகவும்  அடுக்கி முடித்தேன். பலம் கொண்டவரை கூடையை இழுத்துச் சென்று கொட்டிலின் நடுவே விட்டேன். 
இரண்டொரு விறகுத்துண்டுகளை என்னோடு எடுத்துக் கொண்டு வீட்டின் பின்கதவினைத் திறந்து சமையல் அறையினைக் கடந்து வராந்தவை நோக்கிச் சென்றேன். அங்கே அம்மா லீற்ஸ் கிழங்கினை பிரித்துச் சுத்தம் செய்துகொண்டு நின்றாள். நான் எடுத்துச்  சென்ற விறகுகளை போறணையில் இட்டேன். நெருப்பு சூழ்ந்து கொண்டு சுவாலைவிட்டு எரியத்தொடங்கியது சிறு கணங்களில் அவை தணலாய் பூக்கத்தொடங்கும். ஆனாலும் இப்போதே வராந்தாவை இதமான வெப்பம்   சூழ்ந்திருந்தது. அப்போதான்  கோட்டைக் கழட்டத் தோன்றியது.


திரும்பி பின் அறைக்குச்சென்று கோட்டினை கழற்றி கொக்கியில் மாட்டிவிட்டு திரும்பவும் வாராந்தாவுக்கு வந்தேன்.  சன்னல் அருகே சென்று திரையை விலக்கி சன்னலூடாக கடற்கரையை நோக்கினேன். அவர்கள் அங்கேயே நின்று கொடிருந்தார்கள். இப்போது அவர்கள் இரு பிம்பங்களாகத்தான்  தெரிந்தார்கள். குளிர்காலங்களின் உறைநிலை காலநிலைப் பொழுதுகளில் கடல் நீரின்மேல் பனிபடர்ந்துபோய் திண்மமாகி இறுகிப்போய் இருக்கும். அதனை உடைத்து ஓட்டையிட்டு தூண்டில் போட்டு மீன் பிடிப்பது ஒரு சுகமே. எனது அப்பாவுக்கும் இது  பிடித்தமான பொழுதுபோக்கு. அவரிடமிருந்து என்னையும் பற்றிக்கொண்டது. அப்பாவுக்கு கடல், காடு ,வேட்டை, கிராமிய கூத்து, மொழி பேதமற்ற இசை பிடிக்கும். அவர் ஒரு இயற்கையான மனிதன். கடலினை அண்டி வாழவிரும்பியே இங்கே இந்த வீட்டினையும் கட்டினார்.

பின் திசையிலிருந்து அம்மாவின் குரல் வந்தது. "சிமோன் எனக்கு  உன்னால் உதவ முடியுமா"  அவ கிளாசில் பதனிடப்பட்ட கடலைப்  போத்தலுடன் நின்றுகொண்டிருந்தாள். "ஆம்" என நான் விருப்பத்துடன் போத்தலை வாங்கி திறந்து கொடுத்தேன். அவ எனக்கு நன்றி சொல்லிச்  சென்றாள். அம்மாவைத் தொடர்ந்து நானும் சமயலறைக்குச் சென்றேன். சுத்தம் செய்யப்பட்ட லீற்ஸ் சிறுசிறு துண்டுகளாக நறுக்கப்பட்டு இருந்தன. கரட்டும் அவ்வாறே நறுக்கப்பட்டு இருந்தன. "மேலும் ஏதாவது உதவி தேவையா" என அவரிடம் கேட்டேன். தேவை  என்றால் திரும்ப அழைப்பதாக அவர் சொன்னார்.

நான் வராந்தாவின் வழியே படிகளில் ஏறி மாடியை அடைந்தேன். அங்கே படத்தில் அப்பா சிரித்துக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்துக்கொண்டே அங்கே அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த அப்பாவின் தொலைநோக்கியை   எடுத்து அதனூடே அவர்களைப் பார்த்தேன். அது ஒரு அதிசயமான பொழுதுதான் பனிமொய்த்து கடல் உறைந்து வெள்ளி விரிப்பாய்க் கிடந்தது இப்போ முகில்கள் தங்க  நிறம் பூசிக்கிடந்தன, ஆதவன் மறைக்கப்பட்டே கிடந்தான். ஆனாலும் முலாம்  பூசிய முகில்களைக் கிழித்துக்கொண்டு ஒளிக்கதிர்கள் நீரினையும் ஒறுப்பாகவே தெரிகின்ற  நிலத்தினையும் கந்தர்வம் செய்து கொண்டிருந்தன.

நோக்கியினுடே  பார்த்த போது அவர்கள் பின்புறமாகத் தெரிந்தார்கள்.அவர்கள் கைகளையும் தலைகளையும் அசைத்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள் எதையோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்வதில் எனக்குச்  சிரமம் எதுவும் இருக்கவில்லை. ஒருவர் செம்படைத்தலையை கொண்டிருந்தார். மற்றவர் இருண்ட தாடி வைத்திருந்தார். மீண்டும்  பனி பெய்யத் தொடங்கியது. மொய்க்கின்ற பனியில் அவர்கள் இருவரும் இரண்டு கரடிகள் குந்தி இருப்பதுபோல் எனக்குத் தோன்றினார்கள். தாடிக்காரன் மற்றவனின் பிடரியிலே விழுகின்ற பனியினை முடிந்தவரை தட்டிக்கொடுத்தான். மற்றவன் போத்தலிலிருந்து எதோ பானத்தினை எடுத்துக் குடித்தான் அதில் பாதியை தாடிக்காரனுக்கும் பருக்கினான்.

இப்போ ஒருவன் எழுந்து நின்றுகொண்டான். மற்றவனும் எழுந்து தமது பொருட்களை சேர்த்துக் கொண்டார்கள். ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு முத்தம் கொடுத்தார்கள். முத்தம் என்றால்....? ம் அவை முத்தம் தான்.

என்னை அம்மா  அழைக்கும் குரல் கேட்டது. நான் "வருகிறேன்" என சத்தமிட்டுச் சொன்னேன். நோக்கியை அலுமாரியில் வைத்துவிட்டு கீழே சென்று  சாப்பாட்டு மேசையருகிலுள்ள கதிரையில் அமர்ந்துகொண்டேன். இரண்டு குண்டுக் கோப்பைகளில் இருவருக்கும் சூப்பை கொண்டுவந்து மேசையில் வைத்தார். மிகுதியாய் இருந்த  சூப்பை இன்னொரு சிறிய மாபிள் குவளையில் கொண்டுவந்து வைத்தார். உள்ளி சேர்த்த பானை ஒரு சிறிய பிரப்பன் கூடையில் கொண்டுவந்து வைத்தார். வழமைபோல் கண்களை மூடிக்கொண்டு இந்தவேளை கிடைத்த உணவுக்காக இறைவனுக்கு நன்றி சொன்னார். நான் ஆமென் சொன்னேன். வலது கையினால் கரண்டியில் சூப்பை எடுத்து மிகவும் அவதானமாக  உட்கொண்டார். இடது கையில் ஒரு வெள்ளைத்துணி வைத்திருந்தார். அதனால் ஓசைப்படாமல் ஒவ்வொரு தடைவையும் உதடுகளைத் துடைத்துக்கொண்டார். எனது இடது கையில் துணிக்கு பதிலாக உள்ளி சேர்த்த பாண் இருந்தது. நான் ஆறுதலாகவே சூப்பை உட்கொண்டேன்.

அம்மா தான் சூப்பை குடித்து முடித்ததும் வெற்றுச்  சூப்கோப்பையை மேசையின் நடுப் பகுதிக்கு தள்ளிவிட்டார். பின் எழுந்து சென்று தன் கோட் பையில் சிகரெட் பெட்டியிலிருந்து ஒரு சிகரெட்டினை உருவி எடுத்துக்கொண்டார். வராந்தவழி சென்று வரந்தாக் கதவினை சிறிதாக திறந்துவிட்டு உருவி எடுத்த சிகரட்டினை வாயில் வைத்து பற்ற வைத்துக்கொண்டார்.

நான் அமைதியாக இருந்து சாப்பிட்டுகொண்டிருந்தேன். முடிந்ததும் ஒவ்வொரு கோப்பைகளாக எடுத்துக்கொண்டுபோய்  சமயலறையில் வைத்தேன். அம்மாவின் விரல்களின் இடுக்குகளினிடையே இருந்த சிகரெட் முழுவதுமாக கரைந்திருந்தது. சமயலறையில் வந்து தனது கைகளைக் கழுவிக்கொண்டார். பாத்திரங்களை தான் கழுவிக்கொள்வதாக என்னிடம் சொன்னார். நான் திரும்பவும் வராந்தாவுக்கு வந்தபோது அவர் முழுவதும் தோல் அகற்றப்பட்ட அப்பிள் பழத்துடன் வந்தார். பழத்தினை சிறு சிறு  கீற்றுகளாக வெட்டி  பெரும்  பகுதியினை எனக்குத் தந்தார். வெட்டித்தந்த கீற்றுக்களை   ஒன்றன் பின் ஒன்றாக நான் சாப்பிட்டேன். இதன் சுவையில் சூப்பின் சுவை அறவே மறைந்து போய்விட்டது. அப்பிள்  கொட்டை அகற்றிச் சாப்பிட வேண்டும். அப்பிள் கொட்டையில் கான்சர் வருவதற்கான  வேதியல் பொருட்கள்  இருக்கின்றன. இந்த விடயங்களை உய்த்து அறிகையில்   அப்பா ஒரு இயற்கை விஞ்ஞானி தான்.

அம்மா நேரடியாகச்சென்று வராந்தாவின் மூலையில் இருந்த  ரீவியை முடக்கினார்.  ஒரு சிறிய தலை அணையை எடுத்துக்கொண்டு  சோபாவில் அமர்ந்துகொண்டார்.

நான் மேல் மாடிக்குச்சென்று எனது அறையிலுள்ள எனது கட்டிலில் விழுந்தேன். வெளியே பனி  பெய்துகொண்டிருந்தது. அயர்ந்து தூங்கிவிட்டேன். விழித்தபோது சுவரிலுள்ள மணிக்கூடு நான்கு  மணி பதினைந்து நிமிடங்கள்  காட்டியது. கீழே ரீவியில் மக்கள் கலைஞன் கிம்லார்சனின் பாடல் இசை கேட்டது. கீழே நான் வந்து பார்த்தபோது. அம்மா சோபாவில் கழுத்தினை ஒருக்களித்த நிலையில் அயர்ந்துபோய்க்  கிடந்தார். அவர் விரல்களின் இடுக்களுக்கிடையே செய்தித்தாள் ஒன்று இருந்தது. கட்டம் கட்டபட்டிருந்த செய்தி ஒன்று பேனாவினால் அடியில் கோடிடப்பட்டிருந்தது. முதலில் ரீவியை அணைத்துவிட்டு  அச்செய்தியினை படித்தேன். "பழைய திருமண உறவிலிருந்து சட்டரீதியாக விலக்கப்பட்ட பெண்ணுக்கு  தொடரும் வாழ்வில் சினேகிதி ஒருவர்  தேவை............"

 நன்றி: எதுவரை இதழ் 17

No comments: