-ந.சுசீந்திரன் -
சாந்தி சச்சிதானந்தம் அவர்களின் மரணச் செய்தி அதிர்ச்சியளிக்கின்றது. முதன் முதலில் நான் அவரைச் சந்தித்ததை இன்று எண்ணிப்பார்க்கிறேன். சில காலங்களுக்கு முன்னர் காலமாகிவிட்ட இன்னொரு ஆளுமைமிக்க பெண் சுனிலா அபயசேகர அவர்களது தந்தை சார்ள்ஸ் அபயசேகர, நான் கொழும்பில் நின்றிருந்த வேளை விபத்தொன்றில் காலமானார். அவரது மரணச் சடங்கில் தான் நாங்கள் பரஸ்பரம் அறிந்து கொண்டோம். அவரது கணவர் காலஞ்சென்ற மனோ ராஜசிங்கம் மற்றும் அமரர் நீலன் திருச்செல்வம் ஆகியோருடனும் அன்று தான் அறிமுகமானேன். சர்வதேசப் பரிசொன்றினைக் கையேற்க அருந்ததி ராய் அவர்கள் பெர்லின் வந்திருந்தபோது நீலன் திருச்செல்வம் அவர்களோடு தனக்கிருக்கும் நட்பினை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். அன்பும் கவர்ச்சியும் ஆளுமையுங்கொண்ட சாந்தி அவர்களுடனான நட்பில் நான் எப்பொழுதும் பெருமை கொண்டிருந்தேன்.
வாழ்க்கை பற்றிய தீவிரமான விசாரணகள் கொண்டவர். பங்கேற்பு ஜனநாயகம், பெண்விடுதலை, பெண்களின் முன்னேற்றம், மனித உரிமைகள் போன்ற விடயங்களில் முற்போக்கான கருத்துக் கொண்டிருந்ததோடில்லாமல் சிவில் சமூகச் செயற்பட்டாளராகவுமிருந்தார். சமகால அரசியல் சமூக வாழ்க்கையில் தன் அனுபங்களினூடு தனக்குச் சரியெனப் பட்டதை துணிவாக முன்வைத்துச் செயற்பட்டு வந்தவர்.
விழுது என்ற அமைப்பின் மூலம் சாந்தி அவர்கள் முன்னெடுத்த பல்வேறு திட்டங்களில் எமது மக்கள் பலனடைந்தனர். இலங்கையின் பலவேறு சமுகப்பிரச்சினைகள் தொடக்கம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஏற்படும் சவால்கள் என்பது வரை விழுது வெளியிட்ட பல பிரசுரங்கள் மிகவும் பயன்பாடானவை. நண்பர் மதுசூதனன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ”அகவிழி” என்ற ஆசிரியத்துவத்துக்கான தரமான சஞ்சிகை பலகாலம் விழுது நிறுவனத்தினராலேயே வெளிக்கொணரப்பட்டது. “இருக்கிறம்” என்ற வெகுஜன சஞ்சிகை ஒன்றினையும் ஜனரஞ்சகமாகக் கொண்டுவர முயற்சித்தனர்.
சாந்தி அவர்கள் ஜெர்மனிக்கு, பெர்லினுக்கு வந்தபோதெல்லாம் எங்களுடன் தங்கியிருந்தார். இறுதியாக பெர்லினுக்கு வந்தபோது அவருக்கு முடியவில்லை. சுகவீனமாகிவிட்டார். எப்பொழுதும் உற்சாகமாக இருக்கும் சாந்தி நன்றாகப் பாடுவார். ஆனால் இறுதியாக நான் கண்டபோது சற்றே உற்சாகமிழந்தவராக, ஆன்மீகத் தேடல்களில் அமைதி கொள்பவராகத் தான் கண்டேன். அது புரிந்துகொள்ளக்கூடியதே.
”பெண்களின் சுவடுகளில்…” என்ற அவரது நூல் மூலமே 80களின் இறுதியில் அவரது பெயர் எங்களுக்கு தெரிந்திருந்தது. ஆனாலும் அந்த நூல் அதிகம் பேசப்படவில்லை. அதன் பின்னர் அவரது ”பெண்களும் வெகுஜன ஊடகங்களும்” மற்றும் ”வறுமையின் பிரபுக்கள்” என்ற நூல்களும் வெளியாகியிருக்கின்றன. அத்தனை விரைவில் ஓர் பெண் ஆளுமையின் இழப்பு, எம் சமூகத்தைத் தரித்திரமோ, சாபமோ பீடித்திருக்கின்றதா!!!
”பெண்களின் சுவடுகளில்…” என்ற அவரது நூல் மூலமே 80களின் இறுதியில் அவரது பெயர் எங்களுக்கு தெரிந்திருந்தது. ஆனாலும் அந்த நூல் அதிகம் பேசப்படவில்லை. அதன் பின்னர் அவரது ”பெண்களும் வெகுஜன ஊடகங்களும்” மற்றும் ”வறுமையின் பிரபுக்கள்” என்ற நூல்களும் வெளியாகியிருக்கின்றன. அத்தனை விரைவில் ஓர் பெண் ஆளுமையின் இழப்பு, எம் சமூகத்தைத் தரித்திரமோ, சாபமோ பீடித்திருக்கின்றதா!!!
No comments:
Post a Comment