Saturday, December 12, 2015

பழையகடுதாசி

-கரவைதாசன் -  
பேரூந்தின் பின்னே அலைந்து திரிதல் சருகுகளிற்கின்பம் எனின் காற்றிடையே பறந்து திரிந்து கம்பியிற் சிக்குண்டல் எனக்கின்பம். அதனிடையே என்பழைய செய்தி இன்னும் இருக்கிறது ஆதலால்.
-கரவைதாசன் -

இக்குறுகிய  கவி வரிகள் பல வருடங்களின் முன்னால் என்னால் எழுதப்பட்டு கிடப்பில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. அது  என் உணர்வு எனின், பல நினைவுகளும் அப்படித்தான். ஆண்டு சரியாக ஞாபகத்துக்கு  வருகுதில்லை அதை கண்டடைவதில் அப்படியொன்றும் கடினமில்லை ஞாபகத்துக்கு வரும்போது குறித்துக்கொள்கின்றேன். இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான சமாதானத்துக்கான கலந்துரையாடல் ஜேர்மன் சுட்காட் நகரின் புறநகர் பகுதியான பாட்போலில் நடைபெறுவதாகவிருந்து பின் இடம் மாற்றலாகி  ஜேர்மன் பேர்லின் நகரில் நடைபெற்றது.  நிகழ்வினை அவதானிப்பதற்காகவும் நிகழ்வில் கலந்துரையாடவும் அழைக்கப்பட்டிருந்தேன். பகல் முழுவதும் அரசியல் கலந்துரையாடல் மாலை உணவுவேளையின் பின் கலாசார நிகழ்வுகளின்போது இலங்கைத்தீவின் மக்கள் கலைஞர்  தோழர் ஜயதிலக பண்டாரவும் நானும் இன்னும் சில தோழர்களும் சில பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தோம் கிற்றார் வாத்தியத்துடன் ஒரு சிங்களத்தோழன், ரஞ்சித்தின் கையில் டோல்க்கி, முரளியிடம் பொங்கஸ், கரோக்கி இசையுடன் இணைந்து சில பாடல்களென இசையிலும்  நட்பிலும் தோழமையிலும் மிதந்து கொண்டிருந்தோம். தமிழ்ப் போராளிகளின் நியாயப்பாடுகளை வலியுறுத்தி தானே எழுதி  தானே இசையமைத்து  சிங்களக் கிராமம் கிராமமாக நடைப்பயணத்திலும்  கொண்டு சென்ற  பாடல்களில் சிலவற்றையும் ஜெயதிலக பாடினார் .  அப்போது இலங்கை சீனசார்பு  கம்யூனிசக் கட்சியின் தேசிய கலை இலக்கியப் பேரவைக்காக கவிஞர் முருகு இரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட இரண்டு பாடல்களை நான் பாடினேன். அதிலொன்று நெல்லியடிப்பகுதியில் தேனீர்க்கடைகளில் இரட்டைக்குவளை (இரட்டைப்பேணி) முறையினை ஒழிப்பதுக்காக போராடிய தோழன் நல்லதம்பி இளையதம்பி (கிளி ) (கன்பொல்லை) அவர்களின் மறைவுக்காகப் பாடப்பட்ட பாடல் அது. இப்பாடல் எழுபதுகளில் வெளிவந்த பாடல், துலாபாரம் திரைப்படத்தில் வரும் "காற்றினிலே பெரும் காற்றினிலே" என்ற பாடலின் மெட்டில் அமைந்துள்ளது அப்பாடல்.  

கடையினிலே நெல்லியடிக் கடையினிலே 
கறள்ப்பேணி யாவுமே கிடைக்கவில்லையே, 
உடைத்தெறிந்தான் போத்தலை 
உள்ளமர்ந்தான்  கிளியனே 
கடையினிலே நெல்லியடிக் கடையினிலே. 
சாதி வெறி தகரவே 
சஞ்சலங்கள் தீரவே 
சாட்சி வைத்தான்  சமூகம் தன்னிலே 
பாதியிலே போட்டியால் பழுது தூக்கி மாண்டானே
பாரில் அவன் வீரன் அல்லவா 
கிளியனும்  பகலவனாய்  ஒளி தருவானே. 
கடையினிலே நெல்லியடிக் கடையினிலே...

இப்படியாக அமைந்திருந்தது அப்பாடல் இப்பாடலை நான் பாடிமுடித்ததும் மண்டபத்தின்  மறுமுனையிலிருந்து  ஒரு குரல் once more, once more என குரல் எழுப்பிய வண்ணமே என்னை அண்மித்துக்கொண்டிருந்தது. அதுவுமன்றி "இது எங்களது பாடல், நீ தோற்றத்தில் மிகவும் சின்னவனாக இருக்கின்றாய் உனக்கு எப்படி இந்தப் பாடல் தெரியும்" எனவும் கேள்வி எழுப்பினார் . அவர் முகத்தில் லெனின் பணியில் அமைந்த தாடியுடன் காணப்பட்டார். அவர் பேராசிரியர்  ந.சண்முகரத்தினம் (சமுத்திரன்) என அடையாளம் காண்பதில் எனக்கு சிரமம் எதுவும் இருக்கவில்லை. அவரின் விருப்புக்கு இணங்கி எல்லோரினதும் கரகோசத்துக்குமிடையில் அப்பாடலை நான் மறுமுறை பாடிமுடித்தேன். பாடலின் நடுவே  அவர் திராட்சை ரசத்தினை ஒரு குவளையில் ஏந்திய வண்ணமே இது தங்களது பாடல் என்னும் மிடுக்குடன் நடனம் செய்ததினை நானும் பெரிதும் ரசித்துக் கொண்டே பாடிமுடித்தேன். ஆனால் அவர் என்னை விட்டகலவில்லை. நான் யார் என்பதுவும் அப்பாடல் என்னை வந்தடைந்த விடயத்தினை கேட்டறிவதிலும் அவர் விருப்புடன் காணப்பட்டார். நான் என்னை எனது பெரியப்பா இராசரத்தினம் மாஸ்டர், மாமனார் வீ.எஸ்.சிவபாதம், எனது தந்தையார் தவம் எனப் பின்புலத்துடன் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். "அட எங்கட தவத்தின்ர மகனா நீர்? அப்பா எப்படி இருக்கிறார்? அவரை கடைசியாக  நாட்டைவிட்டு  வெளியேற முன்பாக மட்டக்களப்பில் சந்தித்தேன். அவர்கள் எங்களின் தோழர்கள். ஒரு காலத்தின் கதாநாயகர்கள்.  போர்க்கருவிகளை எப்படிக் கையாள்வது? போர்க்காலங்களில் எப்படி மக்களை காப்பாற்றுவது? போர்முறையின் தந்திரங்கள் என்றால் என்ன? என்ற அரசியல்ப் பட்டறிவு கொண்ட மனிதர்கள்." எனக் கூறிக் கொண்டே இவர் எங்களின் தோழர் தவத்தின் மகன் என  தனது நண்பர்களுக்கு  என்னை அறிமுகம் செய்து வைத்தார். அதில் பாதிக்கும் அதிகமானவர்கள் எனக்கும் நண்பர்களாய் இருந்தார்கள். ஆனாலும் அவர்களின் தோழமை உணர்வும் அதனால் பீறிட்டெழும் நட்பின் உணர்வினையும் கண்டு நான் மகிழ்ந்தேன். கூடவே பேராசியரிடம் ஒரு கேள்வினை நான் கேட்டு வைத்தேன். "நீங்கள் தோழர் சண்ணின் சீனசார்பு கட்சியில் இருந்தீர்கள் ஆனால் ஐயா ரஷ்யாசார்பு கட்சியில் இருந்தார் அல்லவா, எப்படி  இந்த நட்பும் தோழமையும்?" ஒரு சின்ன சிரிப்புடன் "தம்பி அவர்கள் தலைவர் பொன் கந்தையாவின் பாசறையில் வளர்ந்த தோழர்கள். தோழர் எம்.சி.சுப்பிரமணியத்தின் நீங்காத தோழர்கள், அதனால் அப்படியே இருந்துவிட்டார்கள். அவர் ஒரு உண்மையான போராளி சமத்துவத்துக்கான தேனீர்க்கடை உட்பிரவேசப் போராட்டமோ அல்லது  சமத்துவத்துக்கான ஆலயப்பிரவேசப்  போராட்டமோ  முன்வரிசையில்  நிற்கின்ற ஒரு முதன்மைப் போராளியல்லவா அவர்!" என எனக்கே விளக்கம் தந்தார். அவரின் வெளிப்பாட்டினை உன்னிடமிருந்து காணுகின்றபோது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கின்றது எனக் கூறி  நீர் கட்டாயம் தொடர்பில் இருக்க வேண்டும் எனத்தொலைபேசி இலக்கங்களை பகிர்ந்து கொண்டார். பின் என்னால் கொண்டுவரப்பட்ட இனி  சஞ்சிகை பற்றி கதை திரும்பியபோது தான் எழுதி  இதுவரை பிரசுரமாகா இரண்டு கட்டுரைகளை என்னிடம் தந்து இவற்றை நீரே பிரசுரித்துக்கொள்ளும் என அனுமதி தந்தார். அவை அவரின் கையெழுத்துப்  பிரதிகளின் கொப்பிகளாக இருந்தன.

இந்நினைவலைகளின் பின்னணியில் ஒரு விடயம்  இன்று என்னை  எழுத உந்துகின்றது. "அவர்கள் போர்முறையின் தந்திரங்கள் என்றால் என்னவென்ற அரசியல்ப் பட்டறிவு கொண்ட  போராளிகள். " நான் கேட்டு பார்த்து அறிந்த இரண்டு போர்முறையின் தந்திரங்கள் கொண்ட நிகழ்வுகளை  உங்களிடம் பகிர்ந்துகொள்கின்றேன். கன்பொல்லையில் சாதியக்கொடுமைக்கு எதிரான வெகுசனமயப்பட்ட ஆயுதம் ஏந்திய போராட்டம் 1966ம் ஆண்டு தொடங்கி  1971ம் ஆண்டுவரை நடைபெற்றது. அக்காலகட்டத்தில்    யாழ்ப்பாணம் ஆரியர் குளச்சந்தியில் வைத்து ஆதிக்க சாதியைச் சேர்ந்த சாதிவெறியன் ஒருவரின் வாகனத்துக்கு கைக்குண்டு வீசி தாக்கிய வழக்கில் கன்பொல்லையைச் சேர்ந்த சின்னவன் காசியன் (ஜெயம்) என்பவர் மீது வழக்குத் தொடரப்பட்டு அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார். அவரின் வழக்கு விசாரணை பருத்தித்துறை நீதிமன்றில் நடந்தது. சாதியத்துவத்துக்கு எதிரான  போராட்ட காலத்தில் கிராமத்தினைவிட்டு கிராமத்துமக்கள் வெளியே சுதந்திரமாக நடமாட முடியாத சூழலில் சாதிவெறியர்கள் அவர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தார்கள்.  போலிசும்  அரச அதிகாரமும் ஆதிக்க சாதியினருக்கு சாதகமாக  அவர்கள் வைத்துக் கொண்டார்கள். அரச அதிகாரிகள் முழுக்க முழுக்க ஆதிக்க சாதியினைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். இந்தவேளையில்  சின்னவன் காசியன் (ஜெயம்) என்பவரின் வழக்குத் தவணை ஒன்றுக்கு கன்பொல்லை தவம் அவர்கள் வழக்கின் நிலையறிய பருத்தித்துறை நீதிமன்றுக்குச் சென்றிருக்கின்றார். அவர் வந்திருப்பதினை அறிந்துகொண்ட சாதிவெறியர்கள்  அவரைக்  கொல்வதற்கு திட்டமிட்டு பருத்தித்துறை ஸ்ரீஸ் கபேயில்  துப்பாக்கியுடன்  பதுங்கி இருந்திருக்கிறார்கள். வயதானவரான சண்முகப்பா என்பவர் பருத்தித்துறைச்  சந்தியில் ஸ்ரீஸ்கபே செய்தியறிந்து வந்து தவத்தின் காதில் சொல்லியிருகின்றார். ஆனால் சண்முகப்பாவின்  காதில்  தவம் வினயமாக ஒரு பொறுப்பினை   ஒப்படைத் திருக்கின்றார் . வெளியில்  யாருக்கும் தெரியாமல் ஒரு சிறிய  தடித்த பையில் ஒரு இறாத்தல் தக்காளிப்பழம் வாங்கி வந்து தன்னிடம் தரும்படியாக. அவர் கேட்டுக் கொண்ட படியே  சண்முகப்பா ஒரு இறாத்தல் தக்காளிப்பழம் வாங்கி தனது வேட்டிக்குள் மறைத்து வந்து நீதி மன்ற வளவில் வைத்து தவத்திடம் கொடுத்திருக்கின்றார். வழக்கு இன்னொரு தவணைக்கு ஒத்திவைக்கவே தவம் அந்த தக்காளிப்பழ பையினை வெளித் தெரியவே இரண்டு விரல்களால் பவ்வியமாக பிடித்துக்கொண்டு நீதிமன்ற வளவினை விட்டு வெளியே வந்திருக்கின்றார். துவக்குடன் நின்றவர்கள்  தவத்தான் கோட்டுக்குள்ளேயே கைக்குண்டோடு வந்திருக்கின்றான் என ஓடி ஒளிந்து கொண்டார்களாம். இன்னொரு சம்பவம்  போராட்ட காலத்தில் எந்த வேளையிலும் எதிரி வருவானென ஆயுதங்களை வீட்டில் வைத்திருப்பார்கள். இப்படியாக கைக்குண்டையும் கோழிக் குஞ்சையும்  அருகருகே வைத்து நார்க் கடகத்தினால் மூடி வைத்திருந்தபோது .  ஒரு தடவை தவம் வீட்டில் போலிஸ் வந்து கடகத்துக்குள் என்னடி மூடிவைத்திருக்கிறீர்களென அங்கிருந்த பெண்களை அதட்டிக் கேட்கவே  அது கோழிக்குஞ்சென அவர்கள் கோழிக் குஞ்சை மூடி வைத்திருந்த கடகத்தினை திறந்து காட்ட, அவர்களும் குஞ்சு பறந்து சென்ற திசையைப் பார்த்து கைக்குண்டினை கண்டுபிடிக்காமலே சென்றுவிட்டார்கள். இன்னும் வரும் .......... 

No comments: