Sunday, December 06, 2015

அம்பேத்கரின் இறுதி நாட்கள் குறித்து சில வரலாற்று பகிர்வுகள்

இன்று தோழர் அம்பேத்கரின் நினைவு தினம்!
அம்பேத்கரின் இறுதி நாட்கள் குறித்து சில வரலாற்று பகிர்வுகள்:
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
பத்து ஆண்டுகளாகவே பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் உடல் நல்ல நிலையில் இல்லை. சிறிது காலம் குடல் அழற்சியினாலும், இரத்தக் கொதிப்பினாலும் வேதனைப் பட்டார். ஆண்டுகள் செல்லச் செல்ல, அவர் உடல் நிலையை மிகவும் பாதிக்கும் வகையில் நீரிழிவு நோயும் உருவாகியது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவரின் நீண்ட நாள் போராட்டங்களும் படிப்பும், எழுத்தும் அவரின் உடல் நிலையை வெகுவாகப் பாதித்தன.
டாக்டர் அம்பேத்கர் நடத்திய இயக்கத்தை அவருக்குப் பிறகு வழிநடத்திச் செல்லுவார்கள் என்று அவர் நம்பியிருந்த துணை நிலைத் தலைவர்களின் நம்பிக்கையற்ற செயல்களினாலும், அவர்களுக்குள் தலைமைப் பதவிக்கு நடந்த போட்டிகளாலும், அவரது போராட்டங்களினால் கிடைத்த அரசு உயர் பதவிகளில் அமர்ந்தவர்களின் வெட்கக்கேடான நடத்தைகளினாலும் அவர் மனம் உடைந்து போனார். ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சிறிதும் அக்கறையின்றி, அவரது அமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களின் நடத்தைகளினால் அவருடைய உடல்நலக் குறைவு இன்னும் தீவிர மடைந்தது.
அவருடைய மருத்துவர் பரிந்துரைத்த மருந்து மாத்திரைகள், எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. சனவரி 1955 முதல் அவர் உடல்நிலை மேலும் கவலையை உருவாக்கியது. அவர் எடை குறைந்து தளர்ச்சியுற்று, சுருங்கிக் காணப்பட்டார். அவரது கோடை மற்றும் பனிக்கால உடைகள், இப்போது அவருக்குப் பெரிதாக இருந்ததால் சுருக்கித் தைக்கப்பட்டன. அவரது கம்பீரமான உடம்பை அவரது மெல்லிய கால்கள் தாங்க முடியாமல் போனதால் உடம்பின் எடை குறைந்தது.
அவரது மிகப் பெரிய நூலகத்தில் நடமாடும் போதும், தோட்டத்தில் உலவும் போதும், காரில் ஏறி அமரவும் - இறங்கவும், நாடாளுமன்றத்திற்குச் செல்லவும், வேறு எங்கேயும் செல்வதற்கும், குளிப்பதற்கும், படுக்கைக்குச் செல்வதற்கும், எழுவதற்கும், உடையணிந்து கொள்வதற்கும் அவருக்கு மற்றவரின் உதவி தேவைப்பட்டது. சில சமயங்களில் சாப்பிட மனமில்லாமல் அவர் படுக்கையில் படுத்திருப்பார். அப்போது அவருக்கு நான் உதவ வேண்டியிருந்தது.
டாக்டர் அம்பேத்கரின் மகிழ்ச்சியற்ற வாழ்நிலை, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தது. அவ்வப்போது அவர் அழுவது, எனக்கு மிகப் பெரும் வேதனையாக இருந்தது. அவரது அழுகைக்கானக் காரணத்தை அறிய நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். எதிர் கொள்ள முடியாத எரிமலையின் சீற்றம் போன்ற அவரது கோபத்திற்குப் பயந்து நான் அதுபற்றி கேட்கத் தயங்கினேன்.

சூலை 30 ஆம் நாள், என் அலுவலகத்திலிருந்து சற்று முன்னதாகவே அம்பேத்கர் மாளிகைக்குச் சென்றேன். அன்றையச் செய்தித்தாள்களையும், நான் கொண்டு வந்திருந்த மாலை நேரச் செய்தித்தாளையும் படித்து எனக்குச் சில குறிப்புகளை அம்பேத்கர் கொடுத்தார். பிறகு கையால் எழுதப்பட்ட, சில புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டு தட்டச்சு செய்யப்பட்டிருந்த 50 பக்கங்களைக் கொடுத்துக் கொண்டே “இந்த ஆவணங்கள், புத்தரும் காரல் மார்க்சும், பழைய இந்தியாவின் புரட்சியும் எதிர்ப் புரட்சியும் மற்றும் இந்து மதத்தின் புதிர்கள் ஆகிய நூல்களுக்காகத் தயாரிக்கப்பட்டவை. என் வாழ்நாளில் இந்தப் புத்தகங்களை என்னால் வெளியிட முடியாது என்று நினைக்கிறேன்” என்று சொன்னார். அப்போது அவர் கண்களில் நீர் திரண்டிருந்தது.
மேலும், அவர் என்னைப் பார்த்தபடியே, “நீ எனது தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்காக நிறைய இழந்திருக்கிறாய். வேதனைகளையும் சந்தித்திருக்கிறாய். உனது நலத்தைப் பற்றிக் கூட அக்கறைப்படாமல் புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலைத் தட்டச்சு செய்ததற்கு சிறிதும் பலன் எதிர்பாராமல் முடித்துக் கொடுத்ததையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து துடிப்புடனும், தியாகத்துடனும் செயல்பட வேண்டியிருக்கிற எனது சூழ்நிலையை நீ புரிந்து கொள்வாய் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.
அடுத்த நாள் செவ்வாய் சூலை 31, 1956. 26, அலிப்பூர் சாலைக்கு மாலை 5.50 மணிக்குச் சென்று வழக்கம் போல, அன்று வந்திருந்த அனைத்துக் கடிதங்களையும் எடுத்துக் கொண்டு அவரிடம் சென்றேன். என் அறைக்கு எதிரே உள்ள நடைவெளியில் நாற்காலியின் மேல் உள்ள சிறு மெத்தையில் காலை வைத்துக் கொண்டு அமர்ந்தவாறு குறிப்புகள் சொல்ல ஆரம்பித்தார்.
ஆனால், இடையிலேயே கண்களை மூடி, தலையை நாற்காலியில் சாய்ந்தவாறு கண்ணயர்ந்து விட்டார். நான் அமைதியாக உட்கார்ந்து அவரது களைத்த முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து அவர் எழுந்தார். கடிதங்களை நான் வாசிக்க, விரைவாக அடுத்தடுத்து பதில் குறிப்புகள் கொடுத்தார். அதன் பின்னர் என் தோள் மேல் கை போட்டுக் கொண்டு படுக்கை அறைக்குச் சென்றார். மறுகையில் உள்ள புத்தகம் கீழே விழ படுக்கையில் படுத்துக் கொண்டார். சிறிது நேரம் அவர் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. அதற்குள் நான் அவரது தலையையும் காலையும் பிடித்து விட்டேன். அது அவருக்கு ஓரளவு தெம்பைக் கொடுத்தது.
அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். அவரிடம் கேட்பதற்கு நான் தயக்கப்பட்ட அந்தக் கேள்வியை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவரது படுக்கைக்கு அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்த படியே அந்தக் கேள்வியைக் கேட்டேன். “அய்யா, கொஞ்ச நாட்களாக ஏன் நீங்கள் அதிக வருத்தத்துடன் இருக்கிறீர்கள். சில சமயங்களில் அழுகிறீர்களே ஏன்? இந்தக் கேள்வியைக் கேட்டதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று பணிவுடன் அவர் பாதத்தைத் தொட்டு கொண்டே கேட்டேன்.
கொஞ்ச நேரத்திற்கு அவர் எவ்வித பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். சிறிது நேரம் கழித்து, எனது கேள்வியால் பாதிக்கப்பட்ட அவர், உணர்ச்சி வயப்பட்ட குரலில் கைகளை உயர்த்தி, அவரது நெற்றியில் வைத்துக் கொண்டு சொன்னார். “இந்தப் பையன் பிடிவாதக்காரனாய் இருக்கிறான், ரொம்பப் பிடிவாதக்காரனாய் இருக்கிறான்”
அதற்குப் பிறகு கொஞ்ச நேரம் முற்றிலும் அமைதி நிலவியது. நான் அவரது முகத்தை ஆராய்ந்தேன். கண்களை வெறித்தபடி அவர் கூறினார், “நீங்களோ அல்லது வேறு யாருமோ எனது வருத்தத்தைப் பற்றியும், எனது வேதனைகளைப் பற்றியும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கிருக்கும் முதல் கவலை, என் வாழ்க்கையில் நான் எடுத்துக் கொண்ட சேவையை என்னால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. என் மக்களை ஆளும் வர்க்கமாக, அரசியல் அதிகாரங்களை மற்ற வகுப்பினரோடு சமமான முறையில் பகிர்ந்து கொள்ளும் நிலையில் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.
நான் இப்போது எனது உடல் நலமின்மையால், ஊனமாகிப் படுக்கையில் வீழ்ந்து கிடக்கிறேன். நான் எனது போராட்டங்களினால் சாதித்துக் காட்டியவற்றையெல்லாம் அனுபவித்து வரும் படித்தவர்கள், தங்களது இரக்கமற்றத் தன்மையாலும், வஞ்சகத்தாலும், தங்களை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று மெய்பித்து வருகிறார்கள். அவர்களுக்கு, ஒடுக்கப்பட்ட அவர்களது சகோதர்கள் மேல் எவ்வித இரக்கமும் இல்லை. நான் எண்ணியிருந்ததை விட அவர்கள் கேடு கெட்டவர்களாய் இருக்கிறார்கள்.
அவர்கள் முழுவதும் தங்களது தன்னலத்திற்காகவே வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவர் கூட சமுகத் தொண்டில் அக்கறை காட்டவில்லை. அவர்களை அழித்துவிடும் பாதையில் அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இப்போது நான், கிராமங்களில் மாற்ற முடியா வறுமையில் தொடர்ந்து உழன்று கொண்டிருக்கும் படிப்பறிவற்ற என் மக்களுக்காகப் பாடுபட விரும்புகின்றேன். ஆனால், என் வாழ்நாள் குறுகியதாய் இருக்கிறது.
என் வாழ்நாளில், தாழ்த்தப்பட்ட மக்களிலிருந்து யாரேனும் ஒருவர் முன்னேறி வந்து அம்மக்களுக்காக நடத்தப்படும் இயக்கத்தில், பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்வதைப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் இப்போது வரை அச்சூழ்நிலைக்கு யாரும் வரவில்லை. இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தலைவர்களில் நம்பிக்கைக்குரியவராகவும், உண்மையானவராகவும் யாரையெல்லாம் நினைத்தேனோ, அவர்களெல்லாம் பதவிக்காகவும், தலைமைக்காகவும் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அவர்களின் மேல் விழுந்த அந்த மிகப் பெரும் பொறுப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல், அப்படி நடந்து கொள்கிறார்கள்” என்றார். இப்படி அவர் பேசுகிற போதெல்லாம் அவரது கண்கள் கோபத்தில் கனன்று கொண்டிருந்தன.
மேலும் அவர் “என் வாழ்நாளுக்குள் எனது எல்லா புத்தகங்களையும் வெளியிட்டு விட வேண்டும் என எண்ணுகிறேன். வரலாற்று முக்கியத்துவமிக்க எனது “புத்தரும் கார்ல் மார்க்சும்”, பழைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்” மற்றும் “இந்து மதத்தின் புதிர்கள்” போன்ற புத்தகங்களை வெளியிட எனக்கு யாரும் உதவ முன்வரவில்லை. எனக்குப் பிறகு இவற்றை யாரும் வெளியிடப் போவதுமில்லை என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்” என்று மிகவும் உணர்ச்சி பொங்கக் கூறினார். நான் இடையில் பேச முற்பட்ட போதும் அவரே தொடர்ந்து பேசினார்.
அவரது கண்கள் வெறித்த படியிருந்தது. கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. அவர் என்னைத் திரும்பிப் பார்த்த போது, நானும் அழுது கொண்டு அவரைப் பார்த்தேன். இதற்கு முன்னால் பலமுறை அவர் கவலையோடு அழுது கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்போது நான் பார்த்தவை, என் கற்பனைகளையும், கடந்த கால அனுபவங்களையும் தாண்டியதாக இருந்தது.
நான் எழுந்து அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினேன். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, களங்கமற்ற முகத்தில் வேதனைகளை வெளிப்படுத்தியபடி, கம்மிய குரலில், “தைரியமாக இரு. மனம் தளர்ந்து விடாதே. ஒரு நாளில்லை ஒருநாள், வாழ்க்கை ஒரு முடிவுக்கு வரும்” என்றார். நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏன் அவர் இப்படியெல்லாம் பேசுகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வெறுமையோடு அவரை உற்றுப் பார்த்தேன்.
சிறிது இடைவெளிக்குப் பிறகு, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சொன்னார், “என் மக்களுக்குச் சொல் நானக்சந்த், என் மக்களுக்காக நான் சாதித்தவைகளெல்லாம், தனி ஆளாக நின்று கொடுமையான துயரங்களையும், முடிவற்ற சிரமங்களையும் கடந்து எல்லா பக்கங்களிலிருந்தும், குறிப்பாக இந்துப் பத்திரிக்கைகளிடமிருந்து வந்த அவதூறுகளுக்கு எதிராகவும், என் எதிரிகளுக்கு எதிராகவும் என் வாழ்நாளெல்லாம் போராடிப் பெற்றவையே. என்னோடு சேர்ந்து போராடிய சிலரும் இப்போது தங்களது தன்னலத் தேட்டங்களுக்காக என்னை ஏமாற்றத் துணிந்து விட்டனர்.
ஆனால் என் வாழ்நாளின் இறுதி வரை ஒடுக்கப்பட்ட எனது சகோதரர்களுக்காவும், இந்நாட்டிற்காகவும் எனது பணியைத் தொடர்வேன். என் மக்கள் பயணிக்கும் இந்த ஊர்தியை மிகவும் சிரமப்பட்டே இப்போது இருக்கும் இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறேன். வழியில் வரும் தடைகளையும் மேடு பள்ளங்களையும், சிரமங்களையும் பொருட்படுத்தாமல் இந்த ஊர்தி முன்னேறிச் செல்லட்டும். மாண்புடனும், மரியாதையுடனும் என் மக்கள் வாழ நினைத்தால், இச்சமயத்தில் அவர்கள் கிளர்ந்தெழ வேண்டும். என் மக்களும், என் இயக்கத்தினரும் அந்த ஊர்தியை இழுத்துச் செல்ல முடியாது போனால், அது இப்போது எங்கே நிற்கிறதோ அங்கேயே அதனை விட்டு விட்டுச் செல்லட்டும். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் அந்த ஊர்தியைப் பின்னோக்கித் தள்ளிவிட வேண்டாம். இதுவே என் செய்தி.
உண்மையில் எல்லா வகைகளிலும் தீவிரம் மிகுந்த எனது இந்தக் கடைசிச் செய்தி நிச்சயமாக கவனிக்கப்படாமல் போகாது. போய் என் மக்களுக்குச் சொல்; போய்ச் சொல்; போய்ச் சொல்”. என்று மூன்று முறை திரும்பத் திரும்பக் கூறினார். இவ்வாறு சொல்லிக் கொண்டே, கண்ணீர் திரண்டு முகத்தில் வழிய தேம்பித் தேம்பி அழுதார். பெரிதும் நம்பிக்கை இழந்து காணப்பட்டார். அவரது தாங்க முடியாத அந்தத் துயரத்தை, கசப்பு மிகுந்த நோயின் தீவிரத்தை வெளிக்காட்டிய அவரது முகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அழுகையுடனும் பெரு மூச்சுடனும், தனது ஒடுக்கப்பட்ட சகோதரர்களுக்காக அவர் கூறிய, நெஞ்சை உலுக்கக் கூடிய அவரது கடைசிச் செய்தியைக் கேட்டுத் திகைத்து நின்றேன். அதற்குப் பிறகுதான் அதுவே டாக்டர் அம்பேத்கரின் கடைசிச் செய்தி என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
- நானக்சந்த் ரட்டு
- தமிழில்: அகன் கிளாடிஸ்
(நன்றி: தலித் முரசு)

No comments: