-பேராசிரியர்.சி.மௌனகுரு-
பத்தண்ணா எனப் பலராலும் அழைக்கப் படும் இளைய பத்மனாதன் இன்றும் நாடகம் கற்றுக்கொண்டிருக்கும் ஒருவர்.
78 வயதினர்.
நாடக நடிகர்,
நெறியாளர்,
நாடக எழுத்தாளர்,
நாடக ஆய்வாளர்
1970 களில் காத்தான் கூத்துப் பாணியில் கந்தன் கருணை என்ற சமூகப் பிரச்சனை சார்ந்த நாடகம் போட்டதன் மூலம் ஈழத்து நாடக உலகில் அறியப்பட்டவர். தொடர்ந்த அவர் யாழ்ப்பாணத்தில் நெல்லியடி மகா வித்தியாலய மாணவிகளைக் கொண்டு தயாரித்த மரபு வழி நாடகமான ஏகலைவன் அவரை மேலும் நாடக உலகுக்கு அறிமுகம் செய்தது. அதில் அவர் யாழ்ப்பாண,மன்னார் மரபுவழி நாடகக் கூறுகளை இணைத்திருந்தார். அதற்கு அவர் புது மோடி நாடகம் என்று பெயர் இட்டிருந்தார்
1970 களில் நடிகர் ஒன்றியம் தயாரித்து தாஸீசியஸ் நெற்யாள்கை செய்தகந்தன் கருணையில் நான் கந்தனாக நடித்தேன் அவர் பக்தராக வந்தார். காத்தான் கூத்துப் பாணியை அங்கு அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். எனக்குத் தெரிந்த வடமோடிப் பாணியை அங்கு அவர் பெற்றுக் கொண்டார்.
1980 களில் இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்த இவர்,இந்தியாவில் தமிழ் நாட்டில் பல்கலை அரங்கு என ஒன்றை பேராசிரியர்களான அரசு,மங்கை ஆகியோருடன் இணைந்தும் நாடகி மங்கையுடன் இணந்தும் தீனீப்போர் ,ஒரு பயணத்தின் கதை,முதலான நாடகங்களை புதுவகை அரங்கு மூலம் அங்கு அறிமுகம் செய்து முத்திரை பதித்தார்.
தமிழகத்தில் வாழ்ந்தபோது மு.ராமசாமி.அ,ராமசாமி முதலான நாடகக் கலைஞர்களுடன் உறவு கொண்டதோடு ஈழத்து நாடக மரபை அவர்களுக்கு முறையாக அறிமுகமும் செய்து வைத்தார்
1990 களில் அவுஸ்திரேலியாவாசியான இவர் அங்கு தனது நாடக மேற்படிப்பை மொனாஸ் பலகலைக் கழகத்தில் தொடர்ந்து பட்டம் பெற்றார். நாடகம் சம்பந்தமாக ஆழ்ந்த புலமையுடையவர். சிறப்பாக கூத்தனூலிலும் சிலப்பதிகாரத்திலும் ஆழ்ந்த புலமையுடையவர். இத்தகையதொரு ஆளுமைமிக்க இவர் மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத்திற்கு 08.10.2015 சனிக்கிழமை விஜயம் செய்து ஆய்வுகூட மாணவர்களைச் சந்தித்து உரையாடியதுடன் ஆய்வுகூடத்தையும் பார்வையிட்டார்..மிக மகிழ்ச்சியடைந்தார். மாணார்க்ளுக்கு அவரை நான் அறிமுகம் செய்து வைத்தேன்.
பத்தண்ணாவும் நானும் நாங்கள் நடித்த கந்தன் கருணையிலிருந்து பாடல்களைப் பாடியும் காட்டினோம். இருவரும் எமது முன்னாள் நாடக அனுபவங்களை மாணாக்கருடன் பகிர்ந்தும் கொண்டோம்
1998 இல் நான் எழுதிய வனவாசத்தின் பின் என்ற நாடக நூலை பத்தண்ணாவிலும் தாஸீசியசிலும் நான் கொண்ட பெரு மதிப்பு காரணமாக அவர்கள் இருவருக்கும் அந்நூலைச் சமர்ப்பணம் செய்திருந்தேன், அதில் அவர் இவர்கள் இருவரையும் " மரபு வழி நாடகங்களில் காலூன்றிப் புதிய திசைகளில் பயணிப்பவர்கள்" எனக் குறிப்பிட்டிருந்தேன்.
அரங்க ஆய்வு கூட மாணவர்கள் அந்நூலைப் பத்தண்ணாவுக்கு அளித்து மகிழ்ந்து அவரது ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டனர்.
No comments:
Post a Comment