Tuesday, February 28, 2012

இன்னுமொரு வானத்தைப் பிளந்த கதை

-கற்சுறா-

ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் எனும் ஐயரின் புத்தக வெளியீட்டிற்குச் சென்றேன்.  செழியனின் பேச்சு மிகுந்த அசௌரியமாக இருந்தது. நண்பர்கள் மிகவும் ஏமாற்றுவார்கள் என்பதற்கு உதாரணம் செழியனாக தற்போது இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. செழியன் முன்னைநாள் போராளி தான் சார்ந்த இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினர் ஈழத்துக் கவிஞர் என அடையாளம் கொண்டவர். மிகுந்த பொறுப்புடன் பேசவேண்டும். அங்கு குமரன் பேசியளவுக்கு கூட செழியனின் பேச்சில் ஒன்றுமிருக்கவில்லை. அதைவிட இறுதியில் பாருங்கள் இலங்கையில் இன்னுமொரு ஆயுதப்போராட்டம் வெடிக்கும்  நிச்சயம் உருவாகும் என சத்தியம் செய்துவிட்டுப் போகிறார். மிகுந்த கவலையளித்தது. 30வருட போராட்டம்  எனச் சொல்லப்பட்டதை ஒரு அழுகிய யுத்தத்தின் மூலம் அரசு முடித்திருக்கிறது.  அரசும் புலிகளும் தமது அரணாக மக்களை காவுகொண்டு முடித்திருக்கிறது. கடந்த 30வருடங்களும் உட்கட்சி  மற்றும் சகோதரப் படுகொலை என்றும் தடுப்பு முகாம் வதைமுகாம் சிறைச்சாலை என்றும் தமது பிள்ளைகளைக் காவுகொடுத்து  மக்கள்  மனநோயாளிகளாக வாழும் சூழல் அதற்குள் அரசின் கண்மூடித்தனமான  தாக்குதல்களால் ஊனமுன்றவர்கள் பெற்றோரை இழந்த குழந்தைகள் என்று இன்னும் இரண்டு  மூன்று தலைமுறைக்கு தொடரும் வலிகளாக  வாழ்ந்து வரும் மக்கள் ஆயுதம் திரும்பவும் தரிப்பார்கள் என்று சொல்ல செழியனுக்கு எப்டி மனம் வந்தது. இதுவும் இன்னொருமுறை வானத்தைப் பிளந்த கதைதானே செழியன்?
மற்றும்  போராட்டம் முளைவிட்ட ஆரம்ப காலத்தின் நேரடி சாட்சியாக வெளிவரும் நூல் இதுஎன புத்தகத்தின் பதிப்புரையில் இனியொருவினர் சொல்கிறார்கள். அப்படியாயின் கோவிந்தனின் புதியதொரு உலகம். டேவிட் ஐயாவின் கொலைகார முகுந்தனும் கூட்டாளி வாசுதேவாவும் புஸ்பராசாவின் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்பன எத்தனையாவது? இந்த நம்பர் ஒன் வியாபாரத்தைவிட்டு ஐயரை தன்னிச்சையாக எழுத விடுங்கள். அவர் எழுதவேண்டியவை அதிகம் உண்டு. எழுதுப்படும் தளங்களின் அரசியல் நிலைப்பாடுகளுக்குள் அவை மங்கிவிடக் கூடாது.

No comments: