Monday, February 13, 2012

தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தில் தமிழ் மனம்



உறைபனி இடுக்கில் அடம்பன் கொடி வேர் பின்னும்

-ந. சுசீந்திரன்-

„ Ihr, die ihr auftauchen werdet aus der Flut 
 In der wir untergegangen sind 
 Gedenkt 
 Wenn ihr von unseren Schwächen sprecht 
 Auch der finsteren Zeit 
 Der ihr entronnen seid…“
                                  -Bertolt Brecht

‚தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்‘ என்னும் தொடரில் வருகின்ற தாயகம் என்ற பதம்  இக் கட்டுரையில் இலங்கையை மட்டுமே சுட்டுகின்றது. ‚தமிழ் மனம்‘ என்பது தமிழ் அடையாளம், தமிழ் நிலைப் பட்ட உணர்வு மற்றும் தமிழ் பண்பாடு, தமிழ்  மனப்போக்கு போன்ற கருத்தமைவுகளில் எழுதப்படுகின்றது.   
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் உருவாகிய இலக்கிய முயற்சிகளை, குறிப்பாக இலக்கிய சந்திப்பு என்ற தொடர் நிகழ்வை முன்வைத்து,  அதனூடாக  தமிழ் மனம் என்பது  முற்றிலும் புதிய சூழலை எதிர் கொண்டு எவ்வாறு செயற்பட்டிருக்கின்றது? தன் சுயத்தை இப் புதிய சூழலுக்கேற்ப தகவமைப்பதன் மூலம் ஏற்படுகின்ற மாற்றங்களைத், தன்  இருப்புக்கு எவ்வாறு  சீரமைத்துக்கொண்டது என்பதையும், புகலிடக் காலத்தின் பல்வேறு நிலைகளில்  அடையாளத்தின் மாறுபடு தன்மையை இலக்கியத்தின் துணைகொண்டு  இனங்காணமுனைவதுமே  இக்கட்டுரையின் நோக்கமாகும். கவிதைளே எடுத்துக் காட்டுக்களுக்கு அதிகம் பயன்படுத்தப் படுகின்றன

தாயகச் சூழலும் புலப்பெயர்வும்

„…நாங்கள் நடந்த நகரத் தெருக்களில்
காக்கி உடையில் துவக்குகள் திரிந்தன…“[2]

இலங்கையின் இனப்பிரச்சினை எண்பதுகளின் தொடக்கத்தில் கவலைதரு பரிமாணத்தையடைந்திருந்தது. 1956, 1958, 1970, 1977 என்று தொடர்ந்த இனக் கலவரங்கள்  1981 இல் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தீவிரமடைந்தது. இலங்கைத் தமிழர்களுக்கு தனித் தமிழ் ஈழமே தீர்வு என்ற அடிப்படையில் அதனை அடைவதற்கு பல்வேறு  ஆயுதம் தாங்கிய போராளிக் குழுக்கள்  ஏற்கனவே எழுபதுகளின் தொடக்கத்தில் இருந்தே தோன்றியிருந்தன. தமிழ் இளைஞர்கள் மீதனா அரச படைகளின் கெடுபிடிகளும் அடிக்கடி நிகழ்ந்தபடி இருந்தன. பின்னர் 1983 இல்  மிகக் கோரமான இனக்கலவரம் வெடித்தது. இலங்கையில் வடமாகாணத்தில் இருந்து தமிழர்கள், குறிப்பாக இளைஞர்கள் அனேகம்பேர் இலங்கையை விட்டு வெளியேறினர். அத்தோடு அதிகளவில் ஆயுதம் தாங்கிய போராளிக் குழுக்களிலும்  இணைந்தனர்.
கடவுச் சீட்டு எடுத்தல், வேலை தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லுதல் போன்றவை சாதாரண இலகுவான காரியங்களாயின. இலங்கை அரசினால் ஏற்படுத்தப்பட்ட தரப்படுத்தல்  என்ற கல்வியில் பின்தங்கிய பிரதேசங்களுக்கு பல்கலைக் கழக அனுமதியில் வழங்கபட்ட சலுகைகள், கல்வியையே தமது முதலீடாகவும், உயர்வுக்கான ஒரே வழியாகவும் கொண்ட தமிழ் சமூகத்தில், குறிப்பாக யாழ் சமூகத்தில் கற்றலில் பாரிய போட்டியை உருவாக்கியது. இதனால் பாடசாலைக் கல்விக்கும் அப்பால் மேலதிக காலை, மாலை  வகுப்புக்களை வழங்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் நகரங்களில்  பல்கிப் பெருகின. இதன் காரணமாக கிராமங்களில் இருந்து பெரிய, சிறிய நகரங்களை நோக்கிய இளைஞர்களின் வருகை அதிகரித்திருந்தது. இதனால் மேற்குறித்த கடவுச் சீட்டுப் பெறுதல், வெளிநாடுகளுக்குச் செல்லுதல் போன்ற விடயங்கள் இலகுவாகிப் போயிருந்தன.

ஜெர்மனியில் அரசியல் தஞ்சம்

„மனித வேட்டையரால்
கொலை செய்யப்பட்டு
வீசி எறியப்பட்ட
எங்கள் தேசத்து இளைஞர்களின்
சடலங்களின் மேல் நடந்து
பெர்லின் விமான நிலையத்தில்
வந்து இறங்கும்
அகதிகள் கூட்டத்தில்
என்னைத் தேடி நீ அலையாதே
கிழக்கு ஜெர்மனிக்குச் செல்வதற்கு விசா பெறவேண்டிய தேவை இல்லாதிருந்ததும், அங்கு சென்று பின்னர் மேற்கு பெர்லினுக்கோ, மேற்கு ஜெர்மனிக்கோ அல்லது மேற்கு ஐரோப்பாவிற்கோ செல்வது தெரிய வந்தபின்னர் பெருமளவு தமிழர்கள் ஜெர்மனிக்கூடாக ஐரோப்பா நோக்கிப் பயணமாகினர். மேற்கு ஐரோப்பாவின் பல பாகங்களிலும் அரசியல் தஞ்சம் கோரி அகதிகளாக  வாழ்வைத் தொடங்கினர். இவ்வாறு வெளியேறிய இளைஞர்கள் தமது கல்வியின் இடைநிலை 10ஆம் வகுப்பினையோ அல்லது உயர்தரம் என்ற 12 ஆம் வகுப்புவரையோ படித்துமிருந்தனர். பெருமளவு அகதிகள் வந்தடைந்த நாடுகள், தத்தம் நாட்டில் அரசியல் தஞ்சம் கோருபவர்களின் மற்றும் குடியேறுபவர்களின் எண்ணிக்கையினைக் குறைத்து விடச், சட்டங்களை அவ்வப்போது இறுக்கமாக மாற்றியமைத்தன. பராமரிப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் மேலும் மேலும் இறுக்கமும் கண்டிப்பும் மிக்கதாக மாற்றப்பட்டன. உதாரணமாக ஜெர்மனியில் கடைப்பிடிக்கப்பட்ட சில நடைமுறைகள்: 
                                    1. அரசியல் தஞ்சம் கோருபவர்கள், அரசியல் தஞ்சம் கோருபவர்களுக்கான ஜெர்மன் மாநிலங்களின் கூட்டுக் குடியரசின் மத்திய அலுவலகத்தில் தமது  விண்ணப்பங்களுடன் அவர்களது கடவுச் சீட்டுக்களையும் ஒப்படைத்துவிடவேண்டும். அக்கணத்தில் இருந்து ஒரு குறித்த மாநிலத்திற்கு அவர் செல்ல வேண்டுமென்று  பணிக்கப்படும்வரை கட்டாயமாக ஒரு உடனடிப் பொது முகாமொன்றிலேயே தங்கியிருக்க வேண்டும். அகதிகளுக்கான பொது முகாம் எனும்போது அங்கே பல்வேறு மொழிகளைப் பேசும் பலநாட்டு அகதிகள் வந்தடைந்திருப்பர். ஆண், பெண், குடும்பம் என்ற பகுப்பினடிப்படையிலேயே அறைகள் பகிர்ந்தளிக்கப்படும். ஒரே தேசத்தினர், ஒரே இனத்தவர் ஒரே மொழியினர்,  என்று பிரிக்கப்படுவதில்லை. பல மாதங்களின் பின்னர் விண்ணப்பதாரி ஒருவர் அரசினர்களால் தீர்மானிக்கப்படும்  ஜெர்மனியின் மாநிலங்கள் ஒன்றுக்கு அனுப்பிவைக்கப்படுவார். அங்கேயும் சில காலங்கள் ஓர் பொது முகாம் ஒன்றில் வசிக்கவேண்டும். பின்னர் மாநில அரசு தீர்மானிக்கும் நகரத்திற்கோ அல்லது சிறிய கிராமமொன்றிற்கோ அனுப்பி வைக்கப்படுவார். இந்த இடமே இறுதியிடம் என்று ஆசுவாசப்படுவதற்கிடையில் வருடங்கள் ஆகிவிடும்.    ஒரு விண்ணப்பதாரியின் அரசியல் தஞ்ச விண்ணப்பத்தின் மீதான தீர்ப்பு பல கட்டங்களில் விசாரிக்கப்பட்டு வெளியாகும் வரை அவர் அந் நகரத்திலோ அல்லது அச் சிறிய கிராமத்திலோ அமைந்துள்ள முகாமொன்றிலேயே கட்டாயமாக வாழவேண்டும். விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அரச தரப்பின் இன்னொரு அலுவலகம் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுச்செய்துவிடும். நிராகரிக்கப்பட்டால், முக்கியமாக மேன்முறையீடு செய்ய அனுமதியளித்து நிராகரிக்கப்பட்டால் மட்டும் விண்ணப்பதாரி மேன்முறையீடு செய்ய வேண்டியிருக்கும். எப்படியோ விண்ணப்பம் நீதி நிர்வாகத்தில் உள்ள அனைத்துக் கட்டங்களையும் தாண்டியே ஆகவேண்டும். எனவே இந் நாட்டில் சட்டப்படி வசிக்கலாம் அல்லது இந் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு என்ற ஒரு இறுதித் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு பல வேளைகளில் எட்டுத் தொடக்கம், பத்து  வருடங்கள் வரை சென்றது.
                        2. ஒரு விண்ணப்பதாரி மேலே குறிப்பிட்டபடி,  அவருக்கு வதிவிடமாக வழங்கப்பட்ட நகரம் அல்லது சிறு கிராமம் எந்த நிர்வாக அலகிற்குள்  அமைந்திருக்கின்றதோ அதன் குறுகிய எல்லைக்குள் மட்டுமே நடமாடலாம், மீறுபவர்கள் அபராதம் கட்ட வேண்டும்.   
                        3. பணம் என்பதற்கு பதிலாக  முத்திரைகள் மட்டுமே வழங்கப்பட்டு நாட்செலவுக்கான சொற்ப பணத்தினைத் தவிர வேறெந்தப் பணத்தையும் பெற்றுக்கொள்ளாதபடி   சமைத்த உணவு அல்லது உணவுப் பொருட்கள் பின்னர் முத்திரைகள் என்று வழங்கப்பட்டன. ஒரு பொருளின் விலை இம் முத்திரைகளின் பெறுமதிக்கு மேலாகக் காணப்படுமானால் மேலதிகமாகப் பணம் செலுத்த முடியாது. எனவே முத்திரைப் பெறுமதிக்கு உட்பட்ட மலிவில் கிடைக்கும் பொருளை மட்டுமே பெறலாம்.  அவ்வாறே பொருளின் விலை முத்திரையின் பெறுமதிக்குக் குறைவானதெனின் அதற்கு மீதியும் கிடைக்காது.   
                        4. ஐந்து வருடங்களுக்கு வேலை செய்யத்தடை. அதன் பின்னர் வேலை தேடிக் கிடைத்து விண்ணப்பித்தால் குறித்த சில மணி நேரங்கள் மட்டும் வேலை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
                        5. புகல்நாட்டு மக்களுக்குத் அசௌகரியங்கள் ஏற்பட்டுவிடாதவாறு அகதி முகாம்கள், குடியிருப்புக்கள் அற்ற தனித்த பகுதியிலேயே பெரும்பாலும் அமைக்கப்பட்டன. இதனால் புகல் நாட்டு மக்களுக்கும் அகதிகளுக்கும் தொடர்புகள் ஏற்படுவதற்கும் சமூக கலாசார அறிதல்களுக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கவில்லை.
அகதிகளை அரசியல் தஞ்சம் கோருபவர்களுக்கான ஜெர்மன் மாநிலங்களின் கூட்டுக் குடியரசின் மத்திய அலுவலகம் ஜெர்மன் மாநிலங்களுக்குப் பங்கிட்டு வழங்கியமையால் உறவினர்கள், ஊரவர்கள் நண்பர்கள் என்று ஒரு இடத்தில் சேர்ந்து வாழமுடியாது போனது. இடைத் தங்கல் முகாம்களில் ஏற்படும் நட்புக்கள் கூட நிரந்தரமற்றவையாகின. அகதி யென்பவன்/ள் ஒரு முடிவற்ற பயணத்தின் கைதியென்பதும், இடைநடுவில் வருகின்ற உறவுகள் தற்காலிகமானவையே என்பதும் நிதர்சனமாகியது. பெர்லின் சுவர் தகர்ந்து, 1990 களின் தொடக்கத்தில் மேற்கு ஜெர்மனி கிழக்கு ஜெர்மனி இணைவுக்குப் பின்னர் அரசியல் தஞ்சம் கோரியவர்களின் நிலை இன்னும் பரிதாபகரமானது. ஜெர்மன் மாநிலங்களின் கூட்டுக் குடியரசுடன் (மேற்கு ஜெர்மனி) புதிதாக இணைக்கப்பட்ட கிழக்கு ஜெர்மனின் மாநிலங்களில் வெளிநாட்டவர்கள் மிக மிக அரிதாக இருந்தமையால் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை சமமடையும் வரை அந்த மாநிலங்களுக்கே அகதிகள் தொடர்ந்தும் அனுப்பப்பட்டார்கள். அங்கே நிறவெறியர்களான புதிய நாசிகளின் தொல்லைகள் தாக்குதல்களுக்கு அகதிகள் அதிகம் முகங்கொடுக்க வேண்டியவர்களானார்கள். மேலும் அம் மாநிலங்களில் வெளிநாட்டவருக்கு உதவும் கிறீஸ்தவ ஸ்தாபனங்களோ, பசுமைக் கட்சி போன்ற சிறிய கட்சிகளோ, பாசிச எதிர்ப்புக் குழுக்களோ இருக்கவில்லை. இப் புதிய மாநிலங்களின் மக்களும் தமக்கு கிடைக்கவிருப்பதை ஆக்கிரமிக்க வந்த திருடர்கள் போன்றே கறுப்பு நிற அகதிகளை மிக மோசமாக எதிர்த்துப் புறக்கணித்தனர்.

கேள்…
கண்ணீர்த்துளிகள் சிறைக்கூடங்களாக
மாறியது எப்படி என்பதை அகதிகளிடம்

பயம் என்பது என்ன என்பதை
நடு இரவில் இந்த நகரில் நடக்க நேர்கிற
கறுப்புத் தோல் மனிதர்களிடமும் பெண்களிடமும்
….
மொழியின் தனிமையில் இருந்து
பிறப்பது என்ன என்பதைத்
திசை தொலையப் புலம் பெயர்ந்தவர்களிடம்…“

என்று கவிஞர் சேரன் பாடுகளின் சோகத்தை சொல்லிச் செல்கிறார்.

இரண்டாம் உலக மகா யுத்ததின்போது நாசிகளின் ஆட்சியில் இருந்து ஜெர்மானியக் கலைஞர்கள் எழுத்தாளர்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். லியோன் பொயிஸ்ட்வாங்கர்  (Lion Feuchtwanger), அன்னா சேகேர்ஸ்(Anna Seghers), ஏரிக் மரியா இறேமார்க்(Erich Maria Remarque), ஹைன்றிஸ் மான் (Heinrich Mann), தோமாஸ் மான் (Thomas Mann), கூர்ட் டுகொல்ஸ்கி (Kurt Tucholsky), ஏர்ன்ஸ்ட் பிளொஃ (Ernst Bloch), பெர்டோல்ட் பிரெஸ்ட், என்று பலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அன்றைய அவர்களது அகதி நிலைநிலைப்பட்ட வாழ்நிலை நிபந்தனைகளுக்கும் எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து மேற்கு ஜெர்மனியில் அரசியல் தஞ்சம் கோரிய இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்களின் வாழ்நிலை  நிபந்தனைகளுக்கும் அதிக வித்தியாசம் எதுவுமில்லை.

„சுவரில் ஆணி அடிக்காது
அந்தச் சட்டையை இந்த இருக்கையில் போடு
நாலு நாளுக்கு எதுக்குத்தான் ஏற்பாடு
நாளைக்கு நீயோ திரும்பிப் போகிறாய்…“

என்று 1937 இல்   பெர்டோல்ட் பிரெஸ்ட் கவிதையொன்றில் குறிப்பிடுகின்றார்.

ஒரு நிரந்தமற்ற எதிர்காலமே, கேள்விகுறியான வாழ்வே இந்த எட்டுப் பத்து வருடங்களுக்கு எஞ்சி நின்றது. இதனால் அந்த நாட்டு மொழியினைப் படிக்க வேண்டும், இங்கே தான் இனி என் வாழ்வு; எனவே அதற்காக தயார்நிலைகளைத் தேடுவோம் தேட்டம் பெறுவோம்  என்ற மனோநிலைக்கு அரசியல் தஞ்சம் கோரியவர்களால் வரமுடியவில்லை. அதிஸ்டமும் நம்பிக்கையும் உள்ள மனிதர்கள் இவற்றால் ஏற்படுகின்ற மனக் காயங்களை ஆற்றுவதற்கான நிவாரணிகளைச் சுயமாகவே தேடவேண்டியதாயிற்று. துரதிஸ்டமும் நம்பிக்கை இழப்பும், சலிப்பும், நன்கு சுவர்களுக்குள் வயதேறிப் போவதையும் காண்கின்ற மனிதர்கள் மதுப்பழக்கம், போதைப்பொருட் பாவனை, மனப்பிறழ்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவது இன்று ஒரு சமூகப் பிரச்சினையாகவே உருவெடுத்து நிற்கின்றது. ஆனால் அதனை அவ்வாறு இனங்காண்பது இன்னமும் நடைபெறவில்லை.

காலனித்துவத்திற்குப் பிந்திய நம் சமூகங்களில் கட்புலச், செவிப்புலக் கலைகளுக்கான அரசியல் முக்கியத்துவம் உணரப்பட்டிருப்பதாகத் தோன்றினாலும், அவற்றின் சமூக முக்கியத்துவம் உணரப்படவில்லை என்றே கூறவேண்டும். இசையும், இலக்கியமும் மற்றும் அவைக்கு ஆற்றும்  நிகழ்த்தற் கலைகளும் நோய்க்கு மருந்தாக அல்லது ஆகக் குறைந்தது முற்காப்பு நிவாரணியாகவேனும் செயற்படுதிறன் வாய்ந்தவை என்ற சமூகப் பிரக்ஞை புகலிட சமூகங்களில் உருவாக வேண்டும். உகண்டாவில் ஒரு குழந்தைப் போராளியாக இருந்து  இன்று டென்மார்க்கில் ஒரு புகலிட எழுத்தாளராக வாழும் சீனா கைடெட்சி என்ற பெண்ணின் புகழ் பெற்ற நூலான „என் தாயைப் பறித்து என்னிடம் ஒரு துப்பாக்கி தந்தனர்“[6] என்ற சுயசரிதை தனக்கு நடந்ததை உளவியல் மருத்துவருக்கு ஒப்புவித்த வாசகங்களின் தொகுப்பே என்பது இச் சந்தர்ப்பத்தில் எண்ணிப் பார்க்கப்பட வேண்டும். இங்கே வெறுமனே மத நம்பிக்கை, மத மாற்றம், போன்றவையே சிக்கல்களில் இருந்து குணம்பெற உதவுகின்றன என்ற எண்ணம் தமிழ் மனங்களில் ஆழவேரூன்றிக்  காணப்படுகின்றது.


இவ்வாறு மேலே காட்டப்பட்ட மிகவும் நெருக்கடியான வாழ்வினூடே அரசியல் தஞ்சம்கோரிய தமிழர்கள் இங்கே ஒரு புதிய மொழிச் சூழலை எதிர்கொண்டனர்.  புகல்நாட்டு மொழியைப் பயிலவோ அன்றிப்  பேசவோ வசதிகள் ஏற்படவில்லை. ஜெர்மனியில் அமலில் இருந்த  சிறுவர்கள் கட்டாயக் கல்வி என்பதும் அகதிச் சிறுவர்களுக்குச் செல்லுபடியற்றது. அகதி விண்ணப்பதாரிகள் உண்ணவும் உறங்கவுமே படைக்கப்பட்டவர்கள் போலேவே நடத்தப்பட்டனர். ஆனால் இவையெல்லாவற்றையும் சகித்தபடியேதான் ஒரு சமூக உருவாக்கம், ஒரு சமூகம் தன்னை நிலையூன்றுவது நடைபெற்றது.   
புகலிடத்தின்  பருவகாலங்கள் புதியவை, உடலும் மனமும் இந்தப் புதிய கால நிலைக்குள் திணிக்கப்பட்டன. சக மனிதர்களை எதிர் கொள்வது தொடக்கம், மன உணர்வுகளின் உடல் மொழி வெளிப்பாடு மற்றும் உணவுமுறை, சமையல் முறை, போன்றவையும் இன்னும் எமது ஐம்புலன்கள் யாவும் எதிர்கொள்பவையும் புதியவையானது.
இவ்வாறு புகல்நாட்டின் பல்வேறு நகரங்கள் கிராமங்களில் அமைந்திருந்த முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்கிடையில் ஆயுதக் குழுக்களின் ஆதரவாளர்கள் ஒன்று சேர்வதும் கூட்டங்கள் நடத்துவதும், செய்திகள் பரிமாறப்படுவதும் இலகுவாயிருந்தன. பிரான்ஸ் போன்ற நாட்டில் இந்த முகாம் வசதிகள் அதிகம் இல்லாதிருந்ததனால் ஒரு சிறிய அறைக்குள் பலர் வசிப்பதும் ஒரு கட்டிலை பகலில் ஒருவரும் இரவில் இன்னொருவரும் பயன்படுத்தியதும் வரலாறு. எண்பதுகளின் மத்திய பகுதியில் சில இடைத்தங்கல் முகாம்களில் சுமார் எண்ணூறு தமிழர்கள் வரை ஒரே காலத்தில் வசித்துமுள்ளனர். ஒல்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், நோர்வே மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இன்று வாழும் இலங்கைத் தமிழர்கள் பலர் இவ்வாறான அனுபவங்ளை ஆரம்பத்தில் ஜெர்மனியில் பெற்றவர்களாகவோ அல்லது ஏறத்தாழ இவற்றையொத்த  நடைமுறைகளை தத்தம் புகல்நாடுகளில் பெற்றவர்களாகவோ இருக்கின்றனர். ஜெர்மன் மாநிலங்களின் கூட்டுக் குடியரச (Fedaral Republic of Germany) புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையின் படி  1990 இன் ஆரம்பங்களில் இலங்கையைச் சேர்ந்த அகதிகள் 32 705 பேர் ஜெர்மனியின் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பைத்திருந்தனர். இவர்களின் விண்ணப்பங்களில் 85% முதற் கட்ட விசாரணையில் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.[7] அவ்வாறெனில் அவர்களது வாழ்வின் அலைச்சலும் ஓடுகாலி நிலையினையும் எண்ணிப் பார்க்கலாம்.

   
தொடக்ககால அரசியல்- இலக்கிய முயற்சிகள்  

முகாம் வாழ்வின் போது இவர்கள் தமது வழிபாட்டிற்காகச் சில கடவுள் படங்களை அறைகளின் மூலைகளில் கொண்டு  வந்து வைத்தார்கள். சிலர் பொது வழிபடு மண்டபம் கேட்டுப் பெற்றார்கள். சிலர் தமது வசதிகேற்ற வகையில் கையெழுத்துப் பத்திரிகைகள் ஆரம்பித்தனர். சில காலங்களின்  பின்னர் மிகவும் சிரமப்பட்டு தமிழ் தட்டச்சு இயந்திரம் கொள்வனவு செய்து தட்டச்சில் பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கின. அவற்றை வாசிப்போர் தொகை,  விநியோகம் மிகவும் மட்டுப்படதாகவே இருந்ததது. 50 தொடக்கம் 100 பிரதிகளே அவர்கள் விநியோகித்தனர்.  அனேக மாநிலங்களில் அகதிகள் முகாம்களைப் செஞ்சிலுவைச் சங்கம், சிறீஸ்தவ நலன்புரிச் சங்கள் போன்றவை பொறுபேற்று நடத்தினார்கள். அவர்கள் சில இடங்களில் இது போன்ற இரண்டொரு சஞ்சிகையின்  50 பிரதிகள்  பிரதி செய்வதற்கான செலவினங்களைக் கொடுத்துவினார்கள் என்று கூறப்படுகின்றது. இவற்றைவிட சிறு சிறு அகராதி ஆக்கங்கள், கையால் எழுதப்பட்ட கட்டுரை நூல்கள், குறு நாவல்கள், சிறுகதைத் தொகுப்புக்கள், ஆயுதக் குழுக்களின்   பல பிரசுரங்கள் என்று பலவும் வெளிக்கொணரப்பட்டன. பொங்கல் விழாவின் போதும் கிறிஸ்மஸ் தின ஒளிவிழாவின் போதும் கருத்தரங்குகள், பட்டி மன்றங்கள், கவிதை வாசிப்பு போன்றவையும் இடம்பெற்றன.

இலக்கியச் சந்திப்பு

 1988 ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து வெளியாகிய சிறு சஞ்சிகைகள் 20 க்கும் மேற்பட்டவையாகும். இவற்றில் அனேகமானவை கையெழுத்துப் பிரதிகளாகவும் ஒரு சில தட்டச்சில் எழுதப்பட்டவையாகவும் காணப்பட்டன. கலைவிளக்கு, சிந்தனை, தூண்டில், வெகுஜனம், புதுமை, பெண்கள் வட்டம், ஏலையா, அறுவை, வண்ணத்துப்பூச்சி, யாத்திரை, நம்நாடு, தாயகம், யதார்த்தம் போன்றவை அவற்றுட் சில. இந்தச் சிறு பத்திரிகை ஆசிரியர்கள், இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் என்போரை சந்திக்க ஏற்பாடுகள் ஹேர்னெ (Herne) என்ற இடத்தில் அமைந்துள்ள  புரட்டஸ்தாந்து மூன்றாநூலக தகவல் நிலையத்தைச் சேர்ந்த பீட்டர் ஜெயரத்தினம் மற்றும் தென்னாசிய நிறுவனதைச்(Suedasien Buero) சேர்ந்த பார்த்திபன் என்போரால் ஒழுங்கு செய்யப்பட்டது. பார்த்திபன் அவர்கள் தூண்டில் என்ற சஞ்சிகையின் ஆசிரியர் குழுவான கடலோடிகளில் முக்கியமானவர். தூண்டில் என்ற சஞ்சிகை 50 இதழ்கள் வரை வெளியாகியிருகின்றது. இவற்றைவிட நிஜங்கள் (நான்கு சிறுகதைகள், 1986), ஜனனம்(மூன்று சிறுகதைகள், 1986), வித்தியாசப்படும் வித்தியாசங்கள்(குறுநாவல்,1987), பாதி உறவு (குறுநாவல்,1987), ஆண்கள் விற்பனைக்கு(நாவல்,1988) என்ற தான் எழுதிய குறு நாவல்கள், நாவல் நூல்களை ஜெர்மனியில் இருந்து தட்டச்சின் மூலம் வெகு நேர்த்தியாக வெளியிட்ட முன்னோடியாவார். இவரது சிறுகதைகள் ஆழ்ந்த மனித நேயங் கொண்டவை. கதைகளின் மொழி, உரையாடல், நகைச்சுவை போன்றவை புகலிடத்தின் பொது முகாம்களில் இளைஞர்களுக்கு இடையில் நடைபெறும் அன்றாட சம்பாஷனையில் இருந்து பெறப்பட்டவை போன்றிருக்கும். பார்த்திபன் இப்பொழுது அதிகம் எழுதுவதில்லை. இவரது தீவு மனிதன் என்ற சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றது.

ஹெர்ன என்ற இடத்தில் முதன் முதலில் சந்தித்தவர்கள் தொடர்ந்தும் சந்திப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டனர். இவ்வாறு உருவாகியதே "இலக்கியச் சந்திப்பு" என்ற தொடர்ந்து நடைபெறுகின்ற நிகழ்வாகும்.

தொடக்கத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஜெர்மனியின் பல பாகங்களில் இந் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சி நிரல்களில் அந்த மூன்று மாதங்களில் தமிழில் வெளியான படைப்புக்கள் பற்றிய விமர்சனம் முக்கியமாக அம்சமாக இடம் பெறும். காலப்போக்கில் பெண்கள், பெண்ணியம் தொடர்பானவை, இலங்கை அரசியல் நிலவரங்கள் பற்றிய கலந்துரையாடல் என்று  ஒரு பரந்த அளவிலான விடயங்கள் பேசுபொருள்களாகின. இச் சந்திப்பு ஆரம்பித்துச் சில காலங்களிலேயே ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் அதிகம் தமிழர்கள் புகலிடம்தேடிய கனடாவிலிருந்தும் ஆர்வலர்களும் சிறுசஞ்சிகை ஆசிரியர்களும் பங்குகொண்டனர். இதனால்  அகதிநிலைப்பட்ட தமிழர் வாழ்வின் பல்வேறு நாட்டு அனுபவங்களையும் இலக்கிய வெளிப்பாடுகளையும் ஓரிடத்தில் தொகுத்து அறியவும் மதிப்பிடவும் வழி பிறந்தது. இன்றுவரை 38  சந்திப்புக்கள் ஜெர்மனி, பிரான்ஸ், ஒல்லாந்து, சுவிற்சலாந்து, நோர்வே, டென்மார்க், கனடா, இங்கிலாந்து, ஆகிய நாடுகளில் நடந்திருக்கின்றன. ஆக்கங்களும் அவை மீதான அபிப்பிராயங்களும் மற்றும் விமர்சனங்களும் மேலும் மனித நேயக் குரல்களும், பல்வேறு முரண்பட்ட கருத்துக்களும் ஓர் இடத்தில் ஒலிக்கும் இடமாக இலக்கியச் சந்திப்பு இருந்து வருகின்றது.

இலக்கியச் சந்திப்பு, தலைமை; நிர்வாகக் குழு அற்ற ஒர் ஒன்றுகூடல் நிகழ்வு. பேச்சாளர்களும் கேட்போரும் ஒன்றாக வட்டமாகவோ அல்லது சதுரமாகவோ அமர்ந்து கொள்ளுமாறே மண்டபம் ஒழுங்கமைக்கப்படுகின்றது. ஓர் தலைப்பில் தொடக்கவுரை நிகழ்த்துபவருக்கான விசேட மேடையமைப்பு எதுவும் காணப்படுவதில்லை. இதனால் கருத்துச் சொல்பவருக்கும், கேட்போருக்கும் சமநிலை நிலவுவதுடன் கருத்துக்களைப் பறிமாறிக்கொள்வதும் இலகுவாக இருக்கின்றது.. அதிகமாக மேடைப்பேச்சு மொழி, எழுத்து மொழியைத் தவிர்த்து சாதாரண பேச்சு நடையே நட்போடு பரிமாறிக்கொள்ளப்படுகின்றது. பல்வேறு கருத்துக்கள் எல்லாம் காரசாரமாக விவாதிக்கப்படும்போது முட்டிக்கொள்வார்களோ என்று தோன்றினாலும் நிகழ்வின் முடிவில் சாந்தமான அற்புத மனிதர்களாக மகிழ்ந்து கொள்கின்றனர். மனிதனை, கருத்தை, பெண்ணை, இழிவுபடுத்தும் வகையில் அமைபவை மூர்க்கமாக எதிர்க்கப்படுகின்றது. இலக்கியச் சந்திபினை நடத்தவும் முன்னெடுக்கவும் நிரந்தரமான ஓர் குழு இல்லையென்பதால் இப்படியொரு சந்திப்பினை தன் நாட்டில் அல்லது தான் வாழும் பிரதேசத்தில் நாடாத்த விரும்புவோர் தாமாகவே முன்வந்து ஒழுங்கு ஏற்பாடுகளைச் செய்கின்றனர். சிரமங்களையும், பணக்கஸ்டங்களையும் தாங்கும் பக்கும்வம் பெற்றவர்களாகவே இவர்கள் இருக்கின்றனர்.

தமது ஆர்வ மேலீட்டினால் தமது சொந்தச் செலவிலேயே  இவர்கள் இலக்கியச் சந்திப்புக்களில் கலந்து கொள்கின்றனர். ஆரம்பங்களில் பல நூறு கிலோமீட்டர் தூர இடங்களில் இருந்து ஒரு நாள் வரை பயணப் பட்டும், பலர் தம் பிரதேசத்தைவிட்டு வெளியேற தடையிருந்தபோதும் இச் சந்திப்புக்களில் கலந்துகொண்டனர். சுதந்திரமான வெளிப்படையான கருத்துப் பரிமாற்றத்திற்கும் ஜனநாயக முறையிலான கருத்தாடலுக்கும் இலக்கியச் சந்திப்பு களமாக அமைந்தது.
   
தாயக இழப்பின் சோகம், குழந்தைமை, இளமை, மகைமை, ஆண்மை, பெண்மை போன்றவற்றை பகிர்ந்து கொள்ள முடியாத தனிமை உணர்வு; தொலைத்து விழுந்து வேற்று நிலமொன்றில் வேர் கொள்ளும் விதையாகிப்போகின்றோம் என்ற தொலைவும் பிரிவும் சேர்ந்த உணர்வு, எதிர்கால வாழ்வின் இருண்மைப் பயம் போன்றவை அழுத்தும் ஆரம்ப நிலையில் ஒரு புகலியின் படைப்பு மனமும் செயற்பாட்டு மனமும் தொழிற்படுவதற்கு ஒரு சிறிது நம்பிக்கை மட்டுமே உந்து சக்தியை வழங்குகின்றது. இதுவரை பெற்ற கல்வியும் சமூக ஈடுபாடும் இவற்றுக்குக் கைகொடுத்திருக்கின்றன.  சில காலங்களின் பின்னரே மேலே சொல்லப்பட்ட புகலிடத்தின் பொதுவான எதிர்மறை அனுபவங்கள், உணர்வினைத் தாக்குகின்றன. புகலிட எழுத்தாளர்கள் என்போர் புகல் நாட்டில் தொடக்கத்தில் உற்சாகமாக எழுத்திப் பின்னர் எழுதாமலேயே விட்டுவிட்டமை இவற்றை உணர்த்தி நிற்கின்றன. பிரான்சில் புகலிடம் தேடிய க.கலாமோகன் „அகதி நிலம் என்னை எரிக்கின்றது“, „நான் யாரோ ஒருவன் வீட்டுக்குள்…“ என்று யதார்த்தங்களை உணர்புபூர்வமாகப் பதிவு செய்து பின்னர் மிக அரிதாகவே எழுதுகின்றார். ஜெர்மனியில் வசிக்கும் பார்த்திபன், ந.ராகவன், இரா. றஜீன்குமார்,பிரான்சில் வசிக்கும் மணிவண்ணன்  போன்றோவர்கள் இப்போது எழுதாமலேயே விட்டுவிட்டனர்.  

எண்பதுகளில் தமிழ் இலக்கியப் பரப்புக்குப் புதிய வரவாக, முகிழ்க்கும் மொட்டாக, நறுமண விகசிப்பாக விதந்தோதப்பட்ட புகலிட இலக்கியங்களுக்கான எதிர்வு கூறல்கள், ஒரு இருபது ஆண்டுகளின் பின்னர் அடங்கிப்போயின. நல்ல எழுத்தாளர்களாக அடையாளங்காணப்பட்ட பல படைப்பிலக்கிய எழுத்தாளர்கள்  எழுதாமல் விட்டுவிட்டார்கள் அல்லது கவனம் பெறக்கூடியவர்களாக இல்லாது போனார்கள். இதனை இரண்டாம் உலகப் போரின் போது நாசிகளின் ஆட்சிக் கொடுமையால் நாட்டைப் பிரிந்த பல எழுத்தாளர்களின் வரலாற்றோடு  ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

„…பெரும்பாலானோருக்கு புகலிடம் மட்டுமே கை கொடுத்தது. புகலிடமென்பது நாடுநாடாக ஓடுவது அல்லது தற்கொலையிடம் தஞ்சம் புகுவது. புகலிடத்தில் தற்கொலை செய்துகொண்ட இலக்கிய விமர்சகரும், பிரங்போர்ட் சிந்தனைப் பள்ளியின் நவீன சிந்தனையாளர்களில் ஒருவருமான வால்டர் பெஞ்ஜமீனை(Walter Benjamin) இந்த இடத்தில் நினைவுகூரலாம். மக்கள் பேசும் மொழியின் ஓசையைக் கேட்டும், அவர்கள் உதடுகளின் அசைவைப் பார்த்தும், பேசும் மொழியோடும் அதன் இயல்போடும், வாழ்ந்த சூழலோடும் இரண்டறக் கலந்தவர்களான எழுத்தாளர்கள் என்ற கலைஞர்களின் அனுபவங்கள் இன்னும் கசப்பானவை. புலம்பெயர்ந்தபோது அவர்களால் மேற்கொண்டு எழுத முடியவில்லை. எழுத்து வாழ்க்கை, எழுத்தாளன் என்பது குறுகிப் போனது. ஒருவன் எவ்வளவு காலத்திற்குத்தான் மொழியைத் தன்னுட்    தேக்கி வைக்கமுடியும்? எவ்வளவு புத்தகங்களால் அவன் மொழியின் நினைவுகளை உள்ளபடி மீட்டுவரமுடிகிறது?...“


புகலிட இலக்கியம் - புலம்பெயர் இலக்கியம்

இன்று நாம் ஒரு புகலிட இலக்கிய நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருகின்றோமோ என்று ஒரு கணம் எண்ணிப் பார்க்கும் அளவிற்கு உலகின் அரசியல் நிலவரங்களும் மனிதர்களின் புலப்பெயர்வுகளும் அடிக்கடி நிகழும் சம்பவங்களாக இன்றைய உலக வரலாற்றில் காணப்படுகின்றன. ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, தென்னமெரிக்கா என்று கண்டங்கள் முழுவதும் புகலிடம் தேடுவோர் தொகை அதிகரித்தே வருகின்றது. இன்று காணக்கிடைக்கின்ற எல்லாவகை அரசியலமைப்பிலும் மாற்றுக்கருத்துக்கள் மீது அதிகாரத்தினது சகிப்பின்மையை, மனிதர்கள் மீது தடை, தணிக்கை, சிறை, படுகொலை போன்றவற்றால் நசுக்கிவிடலாம் என்ற போக்கே காணக்கிடைக்கின்றது.  புகலிடத்தில் தோன்றும் அனேக எழுத்துக்கள் தனிமனித அனுபவத்தின் வெளிப்பாடே எனினும் அது வார்த்தைகளைப் பதிவாக்கி இலக்கியமாக்காத ஒரு கூட்டம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் எழுத்தாகவும் பல வேளைகலில் காணப்படுகின்றன. இங்கே இலக்கிய கர்த்தா ஒர் பகுதி வரலாற்றாசிரியராகவும்  பாத்திரமாற்றமடைதலைக் காணலாம். சுதந்திர இருப்பின் மீது காதலும், மனித இறைமை மீதான நுண்ணுணர்வும், மனிதத்துவத்திற்குப் பலிக்கடாவாகி போகும் அர்ப்பணிப்பும் கலைஞர்கள், கவிஞர்கள் தம் மண்ணின் அதிகாரத்துடன் ஒத்துப்போக முடியாத காரணங்களிற் சிலவாகும்.

      ஆரம்பத்தில் ஐரோப்பாவிற்கு இடம் பெயர்ந்து வந்த தமிழர்கள் மத்தியில் தோன்றிய ஆக்க இலக்கியங்கள் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றுத் தடயங்களில் காணப்பெறும் எதிர்ப்பு இலக்கியப் பண்பினை அதிகம் கொண்டிருக்கவில்லை. எந்த அரசியல் தங்கள் வாழ்வின் இருப்பினை வேரோடு கிள்ளியெறிந்ததோ அதன் தாற்பரியங்கள் கண்டு அறச் சீற்றம் கொள்ளவில்லை. 1989 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பிராங்போட்டில் நடைபெற்ற 5ஆவது இலக்கியச் சந்திப்பில் புகலிட இலக்கியங்கள் என்ற தலைப்பில் ஜெர்மன் நாட்டின் நாசி ஆட்சியில் எவ்வாறு புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் தமது இருப்பிற்கும் எதிர்பிற்கும் செயற்பட்டார்கள்;  ஜெர்மன் இலக்கிய வரலாற்றில் புகலிட இலக்கியத்தின் இடம்; அதன் பங்களிப்பு போன்றவற்றை எடுத்துக் காட்டி தமிழில் புகலிட இலக்கியத்திற்கு ஒர் வரைவிலக்கணத்தைப் பெற முற்பட்டோம். இலங்கை மலையக நாட்டார் பாடல்களில் தெரிகின்ற அன்றைய நிஜங்கள்…

„ஊரான ஊரிழந்தோம் ஒத்தைப் பனைத் தோப்பிழந்தோம்
பேரான கண்டியில பெத்த தாய நான் மறந்தேன்“  என்பதுவும்

„கோணக் கோணமலையேறிக் கோப்பிப் பழம் புடுங்கையிலே
ஒரு பழம் தப்பிச்செண்ணு உதைத்தாண்டி கங்காணி…“ என்பதுவும்

„தெம்மாங்கு பாடித் தெருவழியே போனாலும்
அன்பான வார்த்தை சொல்லி அழைப்பாரு யாருமில்ல“ என்பதுவும்

இன்று எங்களது வாழ்வாகிவிட்டதை உணர்ந்தோம். பாரதியின் காத்திரமான  எழுத்துகளில் பலவும் புதுச்சேரியில் அவன் தலைமறைவு வாழ்வில் ஆக்கப்பட்டிருப்பதை இனங்கண்டோம். கம்பனிடம்
„மன்னவனும் நீயோ வள நாடும் உன்னதுவோ…“ என்று அதிகாரத்தை நோக்கிய தார்மீக நியாயங்கோரல், ஔவையின் எதிர்ப்புணர்வு, மோசிகீரனின் புனிதங்களைப் போட்டுடைத்தல்,  மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனாரின் எள்ளல், கபிலரின்

  „.அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில் எந்தையும் உடையோம்
எம் குன்றும் பிறர் கொளார்…“

என்ற பாரிமக்கள் நிலை என்று இன்ன பிற இலக்கிய சாட்சியங்களை முன்னிறுத்தி புகலிட இலக்கியத்தின் அடிப்படைகளைக் காண முற்பட்டோம். ஓவிட் (Ovid), தாந்தே (Dante), பீர்டூசி (Firdusi), விக்டர் ஹியூகோ (Victor Hugo), செஸ்லாவ் மீலொஸ் Czeslav Miloz,   என்று உலக புகலிட இலக்கியத்தின் கொடுமுடிகள் பற்றிய அறிமுகங்கள் இலக்கியச் சந்திப்பில் மேற்கொள்ளப்பட்டன. முன் நூறு முப்பாட்டன் முப்பாட்டிகள் வாழ்ந்து வளமாக்கி ஊராக்கிப் பேராக்கி, வேரூன்றி விழுதெறிந்து  இதுவே நிந்தம் இதுவே நிரந்தரம் இதுவே சொந்தம் இதுவே சுதந்திரம் என்றிருந்த சமூக வாழ்வும், எமது மண்ணும், அதனோடிணைந்த அனைத்து முதிசங்களும் ஒற்றைப் பயணத்தில் தொலைந்து போனது எங்கள் உணர்வுகளில் உறைத்தது. அகதியாகவும், அந்நியராகவும், கறுப்பராகவும், கடைநிலை விளிம்பராகவும் எங்கள் அடையாளங்கள் மாறிப்போயின. இந்த அடையாளங்கள் திணிக்கப்பட்டவையாகவே இருந்தபோதும் அவை எமது இருப்புக்கும் மீள் உயிர்புக்குமான காரணிகளாகியது.

சிதைவுகள்

“…the things fall apart; the centre cannot hold…”
-W.B.Yeats, „The Second Coming“

தமிழின் தொன்மங்களும், விழுமியங்களும், கலாசாரம், பண்பாடு என்பவற்றைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் சடங்குகள் எல்லாமே தமிழர் என்ற தொல்குடிச் சமூகத்திற்கு அப்படியே ஒழுகமுடியாது புகலிடத்தின் சால்புகளோடு ஒப்பிட்டு உகந்தவற்றை  மட்டுமே அனுசரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் தான் சமூக விழுமியங்களின் பெறுமதி மாறிப்போனது.  

ஜெர்மன் மொழியில் எழுதிய ரூமேனியப் புகலிடக் கவிஞர் பௌல் சேலான் ( Paul Celan) அவர்கள் சொல்வதுபோல்
“...Sprachwaage, Wortwaage, Heimatwaage Exil…” புகலிடம் என்பது எமது மொழி, எமது வார்தைகள், எமது பண்பாட்டு எடுகோள்கள் போன்றவற்றைத் தவிர்க்கமுடியாது சீர்தூக்கிப் பார்க்கும் களமாகவும் இருந்துவிடுகின்றது.     புவியமைவுக்கும், கால நிலைக்கும் ஏற்ப எமது கலாசாரம் அதனூடு நெகிழ்வையும், மாற்றங்களையும் கொண்டு வந்தது. பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப் பட்ட சமூக உறவுகளின் இலக்கணங்கள் தலைகீழாக மாறிப்போயின. சமூகத்தில் பெண்ணின் பாத்திரம் புதிய வடிவம் பெற்றது. குழந்தைகளுடனான அணுகுமுறையில் முற்றிலும் புதிய (கலீல் கிப்ரான் குழந்தைகளைப் பற்றிக் குறிப்பிடுவதைப் போன்ற[) போக்கு நிர்ப்பந்தமாகியது. இந்த புதிய அல்லது சீரமைக்கப்பட்ட அடையாளதை உள்வாங்கியவையாகவே ஆக்க இலக்கியங்கள் இனிச் செயற்படலாம் என்ற செய்தி புகலிட சமூகத்தின் முன் வைக்கப்பட்டது.
இலக்கியச் சந்திப்பின் நிகழ்ச்சி நிரல்களை இன்று பகுத்துப் பார்க்கும்போது இந்த மாற்றங்களுக்கு சமூகத்தைத் தயார் செய்யும் பயிலரங்கமாக, முதியோர் கல்விக்கூடமாக அவை செயற்பட்டிருப்பதை காணமுடிகிறது. தமிழுக்குப் புதிய வருவுகளான தலித் இலக்கியம், பின் நவீனத்துவம் போன்றவை பற்றிய கருத்தாடல்கள்  அடிக்கடி இடம் பெற்றன.. அவற்றைப் பற்றிய தொகுப்புக்கள் பலவும் வெளிக்கொணரப்பட்டன.

பெண்ணொடுக்குமுறை, சமூகமாற்றத்தில் எழுத்தாளனின் பங்கு, பெண்ணடிமைத்தனத்தின் தோற்றம், புகலிட இலக்கியம், தமிழ் மக்களின் புலப்பெயர்வு, மொழியும் எழுத்தும், மலையகத் தமிழர்கள், சிறுகதை இலக்கியம், தமிழ் நாடகங்கள், சிறுவர் இலக்கியம், புதுக்கவிதை-புதிய பிரக்ஞை, எதிர்ப்பு இலக்கியம், மனித உரிமை மீறல்களை எதிர்த்தல், பெண்கள் மீதான வன்முறை, இலங்கையின் மலையக மக்களின் வரலாறு, ஐரோப்பிய இலக்கியங்களும் நாமும், மனிதனும் மாசுபடும் சூழலும், யாழ்ப்பாணத்தில் சாதியமைப்பு நாடகமும் மரபுகளும், யாழ்பாணத் தென்மோடி நாடகக் கலை, எதிர்க்கிறோம் அதனால் இருக்கிறோம், முஸ்லிம் மக்களும் தேசிய இனப்பிரச்சினையும் என்று பலவகைத் தலைப்புக்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இன்றைய இலக்கியப்பரப்பில் நன்கு அறியப்பட்டவர்களும் அதிகம் அறியப்படாதவர்களுமாக 200க்கும் அதிகமானோர் பலர் உலகின் பல பாகங்களிலிருந்தும் கலந்து கொண்டு தத்தம் துறைசார்ந்த ஆய்வுரைகள் நிகழ்த்தியுள்ளனர். அவர்களில் மு.நித்தியானந்தன், சேரன், சி.பத்மமனோகரன், சி.சிவசேகரம், சோ.சிவபாதசுந்தரம், என்.சண்முகரத்தினம், வ.ஐ.ச.ஜெயபாலன், ஜமுனா ராஜேந்திரன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், எம்.ஏ.நுஃமான், அ.யேசுராசா, சு.வில்வரத்தினம், டொமினிக் ஜீவா, நா. கண்ணன், திலகபாமா, மைதிரேயி கிருஷ்ணராஜா, சியாம் செல்வத்துரை, செல்வா கனகநாயகம், காமினி வியாங்கொட, அம்பை, றஜனி, மூன்றாவது மனிதன் பௌஸர், இந்திரா பார்த்தசாரதி, அருள் இரத்தினம், இளைய அப்துல்லா என்று அறியப்பட்ட அனஸ், தாரகி என்று அறியப்பட்ட சிவராம், சுமதி, என். ஆத்மா என்று நீண்ட பெரிய பட்டியல் இருகின்றது.

„…முல்லையும் திருவாதிரையும்
வில்வமும் நெல்லியும்
தெய்வ மரங்களும், தெய்வீக மனிதரும்
எங்கோ இருக்க
கார்ட் ஆரஞ்சு மனிதனாய் எனது இயக்கம்
கார்ட் ஆரஞ்சுகளோடு மனிதர்கள் சந்திக்கின்றனர்
கார்ட் ஆரஞ்சுகளோடு மனிதர்கள் சிரிக்கின்ரனர்
கார்ட் ஆரஞ்சுகளோடு மனிதர்கள் தூங்குகிறார்கள்
பூங்காவனத் திருவிழாவும் கோயிற் கடவுளரும்
என்றோ தொலைத்தேன்…“
   
புகலிடத்தில் பச்சாதாப உணர்வுகளை வெளிப்படுத்தும், நனவுகளைச் சோகமாகப் பார்த்து சுகமடைதலின் வெளிப்பாடாக அனேக கவிதைகள், சிறுகதைகள் ஆக்கப்பட்டன. ஆனாலும் அவற்றினூடு காலச் சோகம் பதிவாகியிருக்கின்றது.

1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி தொடக்கம் 24ஆம் தேதிவரை பெர்லினில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் க.ஆதவன், இளவாலை விஜயேந்திரன், இரா. ரஜீன்குமார் ஆகியோரது கவிதா நிகழ்வும், பின்னர் வந்த இலக்கியச் சந்திப்புகள் சிலவற்றில் லண்டன் அவைக்காற்றுக் கலைக் கழகம் வழங்கிய கவிதா நிகழ்வுகளும் மனங்களில் ஆழப் பதிந்தன. பாரிஸ் முற்றவெளி குழுவினரும் கவிதா நிகழ்வொன்றினை இலக்கியச் சந்திப்பில் ஆற்றியிருக்கின்றனர். கவியரங்கப் பாணிக் கவிதைகள் கிளத்தல், கேட்டல் களித்தல் தாண்டி அப்பால் செல்லமுடியாத போது கவிதா நிகழ்வு பிறந்தது. கவிதைகளுக்கு கதாபத்திரங்களும் அவற்றின் சொற்களுக்கு கூருணர்வேந்தும் வலிமையும் உருவாகி நின்றமை இக் கவிதா நிகழ்வுகளில் உணரப்பட்டன.

லண்டன் அவைக்காற்றுக் கலைக் கழக க. பாலேந்திராவின் நெறியாள்கையில் ஹாரால்ட் பின்ரர் (Harald Pinter) அவர்களின் „போகிற வழிக்கு ஒன்று“ (One for the road) என்ற நாடகம் எங்கெங்கு சித்திரவதைக் கூடங்கள் இருக்கின்றதோ அங்கெல்லாம் பொருந்திப் போகக்கூடிய ஒரு நல்ல நாடகமாகும். அவரது நெறியாள்கையில் சி.மௌனகுருவின் „நம்மைப் பிடித்த பிசாசுகள்“ சிறுவர்களுக்கான நாடகமாகும். ஆனால் பிசாசுகள் எப்போதும் ஏன் கறுப்பாக இருக்கவேண்டும் என்ற மல்கம் எக்ஸ் கேள்வி இப்போது புகலித் தமிழரும் கேட்க வேண்டியதாக மாறிபோயிருகின்றது ஜதார்த்தம்.

லண்டன் களரி அரங்க இயக்க அ.தாசீசியஸ் அவர்கள் நெறிப்படுத்திய குழந்தை ம. சண்முகலிங்கத்தின் „எந்தையும் தாயும்…“ என்ற நாடகம் பரதேசம் போய்விட்ட பிள்ளைகளின் „போதலிலும்அவர்கள் புகுந்த நாட்டின் பெயர் சொல்லலிலும் பெருமை கொள்ளும் ஏக்க மூச்சினை உள்ளிழுத்து போலி இறுமாப்பு மூச்சினை வெளியேற்றும் ஈழத்து  மனிதன் ஒருவன் மூப்படைந்து மூன்று பொழுதும் துயில் விரும்பி அனாதரவாகவே மடியும் துயரத்தை எடுத்துக் காட்டியது.  பெற்றோரை மதித்தலும் அவர்கள் வயதான போது பேணுவதும் நம் சமூகத்தில் காலாதிகாலமாக வந்த சமூக ஒழுகலாறு. ஆனால் இன்று அச் சமூகக் கடமை நிறைவேற்றபடமுடியாத, எதிர்பார்க்கப்படமுடியாத ஒன்றாக உணரும் கையறு நிலையே புகலிட சமூகத்தில் காணப்படுகின்றது.

ஜெர்மனியின் “கொஞ்சம்பேர்“ குழுவினர் தயாரித்து அளித்த ராமன் எத்தனை ராமனடி மற்றும் பஞ்சதந்திரக் கதைகளை நினைவூட்டுகின்ற  ஜார்ஜ் ஆர்வல் ( George Orwell) அவர்களின் இன் விலங்குப் பண்ணை பாணியிலான „காட்டுக்குள் ஒரு நாடு” ஆகியவை இரண்டும் அரசியல் உருவக நாடகங்களாகும்.
பிரான்சில்-பாரிசில் இருக்கின்ற வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்துக் கலா மன்றம் „அர்ஜுனன் தபசுஎன்ற நாட்டுக்கூத்தினை இலக்கியச் சந்திப்பில் சில தடவைகள் நிகழ்த்தியிருகின்றனர். மகா பாரத்திலே அர்ஜுனன் ஒற்றைக் காலில் நின்று கடுந்தவம் புரிந்து, எதுவந்தபோதும் அதைவென்று வரம் பெறுகின் கதையைச் சொல்வது இந் நாட்டுக்கூத்து. இதனை ஆற்றும் இக் கலைஞர்கள் தம் பால்ய வயதில் தமது பாட்டன்கள் தந்தையர்கள் ஆடியதை பார்த்துப் பழகியவர்கள், பிரான்சில் காட்டுக்குள் சென்றே கூத்துப் பயிற்சி செய்கின்றனர். பிரான்சில் அதுவும் பாரிஸ் நகரத்தில் மாடிகளின் நான்கு சுவர் முட்டுக்குள் குரலெடுத்துப் பாடத்தான் முடியுமா இல்லை காலை உதைத்துக் கூத்துப் பழக முடியுமா என்ன!
கவிஞர் சு. வில்வரத்தினத்தின் „காற்று வழிக் கிராமம்” என்ற கவிதையை அரங்குக்கான அளிக்கையாக மாற்றி தமயந்தி மேடையேற்றினார்.
புகலிட சமூகக் கலைஞர்களின் ஓவியக் காட்சிகளும், புகைப் பட, குறும்படக் காட்சிகளும் இலக்கியச் சந்திப்பில் அவ்வபோது நிகழ்த்தப்பட்டிருகின்றன. கே.கே.ராஜா, காமினி தன்வத்த, தமயந்தி, பிரதீபன், வாசுகன், சி.புஸ்பராஜா, பரா குமாரசாமி ஆகிய கலைஞர்கள் இதில் பங்காற்றினர்.    
எவ்வாறு பாலஸ்தீனர்கள் இழந்து போன பாரம்பரிய பிரதேசத்தையும், அற்றுப்போன தாயகத்தையும் புகலிடத்தில் சடங்குகளினூடு தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று எட்வார்ட் சையீத் குறிப்பிடுகின்றாரோ அதே நிலைமைகள் தான் இன்று புகலிடத் தமிழர்கள் மத்தியிலும் காணப்படுகின்றன. முற்றிலும் புதிய அந்நிய தேசத்தில் நிரந்தரமாகிப்போன வாழ்வில் தாயகப் பதிலீடாகவோ அன்றிப் பிரதேசப் பதிலீடாகவோ வைபவங்களும், பழைய மாணவர் சங்கங்களும், கிராம அபிவிருத்திச் சங்கங்களும் செயற்படுகின்றன. தொலைத்துப் போனதும் தொலைந்து போனதுமான தேசம், இனம் , மொழி பற்றிய தகவல்கள் அடுத்துவரும் தலைமுறையிடம்    இவற்றினூடாகவே கையளிக்கப்படுகின்றன.

„…Where should we go after the frontiers?
Where should the birds fly after the last sky?…”
-Mahmoud Darwish, „The Earth is closing on us”

இன்று ஜெர்மனியில் சுமார் 40,000 தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களில் அரைப்பங்கினர் நோர்ட் றைன் வெஸ்ட்பாலன் (Nordreihen Westfallen) போன்ற ஒரு சில மாநிலங்களில் செறிவாக வாழ்கின்றனர். இவர்களது இரண்டாவது தலைமுறை தன்னை இந்த நாட்டில் ஸ்திரப்படுத்திவிட்டது. கறுப்பு நிறம், அன்னியம், வர்க்கப் படிநிலையின் கீழ் நிலை என்ற அனைத்து தடைகளயும் தாண்டி இரண்டாவது தலை முறையின் இன்றைய உறுதியான இருப்புக்கும், அதற்குக் காரணமான முதல் தலைமுறையின் அர்ப்பணிப்பு வாழ்க்கைக்கும்  தமிழ் மனத்தின் ஆழப் புதைந்த அடையாளத்தின் எச்ச சொச்சங்களும் காரணிகளாக அமைந்துவருகின்றன என்று துணியமுடியம்,. ஒரு 30 வருட காலத்தில் ஒரு சமூகத் திரட்சி தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டதன் அகக் காரணிகள் சமூகவியலாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றது. இலக்கியச் சந்திப்பு என்ற நிகழ்வின் தோன்றலுக்குப் பின் பெண்கள் சந்திப்பும் அதே முறையில் வளர்ந்து வருகின்றது. பெண்களின் பால்நிலை விடயங்களில் கவனம் கொள்ளும் பெண்களின் ஒன்று கூடலினால் காத்திரமான சமூகப் பங்களிப்புக்கள் புகலிட சமூகத்திற்கு வழங்கப்ப்படுகின்றது.
 
ஒப்பீட்டளவில் இங்கே அரசியல் தஞ்சம் கோரிய இலங்கை முஸ்லிகள் மிகக் குறைவு. அவ்வாறே மலையக மக்களும் மிக மிகக் குறைந்த தொகையினரே. கணனியின் பாவனை உலகில் அதிகரித்த பின்னர், ஜெர்மனியில் கணனி மற்றும் செய்தித் தொழில் நுட்பத்துறை வல்லுனர்களுக்குப் பற்றாக் குறை ஏற்பட்டது. வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக மூன்றாம் உலக, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வல்லுனர்களை மலிவு வேதனத்தில் வேலைக்கு அமர்த்தும் திட்டம் தொண்ணூறுகளின் மத்திய பகுதியில் ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்போது முடுக்கி விடப்பட்ட சில கிறீஸ்த்தவ அரசியல் கட்சிகளின் இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம் „Kinder statt Inder“    -இந்தியர்களுக்கு மாறாகப் பிள்ளைகள் (பெறுவோம்) என்பதும் அகதிகள் மீதான நிறவாதத்தை ஊக்குவித்தது. அரசு எதிர் பார்த்த அளவு இந்தியர்கள் ஜெர்மனிக்கு வந்து சேரவில்லை. அறுபதுகளில் இந்தியாவின் கர்நாடக மாநில  பங்களூரைச் சேர்ந்த தமிழர்கள் சிறு தொகையினர் ஜெர்மனியில் பெர்லின், பிராங்போர்ட் நகரங்களில் வசிக்கின்றனர்.   இலங்கைத் தமிழர்கள் சைவக் கோவில்களையும், கிறீஸ்தவ வழிபாட்டுக் குழுக்களையும் அமைத்து தமது நம்பிக்கைக் கலாசாரத்தில் ஆழமாகவே வேறூன்றி வருகின்றனர்.
இன்று தமிழர்களோடு ஏற்பட்ட உறவின் காரணமாக ஜெர்மன் மொழியை முதன் மொழியாகக் கொண்ட பலர் இங்குள்ள தனியார் கல்வி நிலையங்களிலும் பல்கலைக் கழகங்களில் தமிழ் பயில்கின்றனர். பெர்லின், கொல்ன், ஹைடல்பேர்க் போன்ற இடங்களின் பல்கலைக் கழகங்களில் பயில்வதற்கான ஏற்பாடுகள் இருகின்றன. அன்று வண. கார்ல் ஆகுஸ்ட் ஹேர்மான் பெய்த்தான் (Rev. Karl August Hermann Beythan), பிரைட்ஹௌப்ட்(Breithaupt), ஜோஹான் பிலிப் பாப்றிசியுஸ்(Johann Philipp Fabricius), வண கார்ல் கிறவுல்(Rev. Karl Graul), வண. குறுண்ட்லர் (Rev. Grundler), வண. சார்ள்ஸ் தெயோபிலுஸ் ஏவால்ட் றேனியுஸ்(Rev. Charles Theophilus Ewald Rhenius), வண. ஸ்வார்ட்ஸ் ( Schwartz), வண. ஸ்சுல்ற்ச( Rev.Schultze) , பார்த்தோலோமியுஸ் ற்சீகன்பால்க்(Bartholomaues Ziegenbalg)  என்ற தமிழ் தமிழ் ஆர்வம் மிக்க அறிஞர்களின் தமிழோடு தொர்புடைய தடயங்கள், ஆவணங்கள் ஹல, லைப்சிக், பிரண்டபேர்க், பெர்லின் போன்ற நகரங்களில் ஆவணக் கழஞ்சியங்களிலும் நூதன சாலைகளிலும் இருக்கின்றன. அவை பற்றிய தேடல்கள் அண்மைக் காலத்தில் தீவிரமடைந்து வருவதற்கும் தமிழர்களின் இன்றைய ஐரோப்பிய இருப்பும் ஓர் காரணியாக அமைகின்றது.
    
முடிவுரை
சமூக உள்முரண்பாடுகளினதும்(சாதியப் பாகுபாடு), பிற்போக்குத் தனங்களினதும் (ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம்) காவியாகத் தொழிற்படும் வார்தைகளை எமது மொழியின் பாவனையில் இருந்து நீக்குவது சமூக முறைமையாகும். உதாரணமாககற்பழிப்பு‘ (நவீனமாக: பாலியல் பலத்காரம், வன்புணர்ச்சி) என்கிற பாதிக்கப்பட்டவரையே பொறுப்பளியாக்கும் மோசமான சொற்கள் எமது சிந்தனைப் பரப்பிலிருந்து நீங்க ஊடகங்கள், இலக்கிய கர்த்தாக்கள் மத்தியில் இலக்கியச் சந்திப்பின் தொடர் விவாதங்கள் பெருமளவு உதவியிருக்கின்றன.
எந்த அமைப்புக்கும் சார்பற்று எல்லாவகைக் கருத்துகளையும் பரிமாற்றக்கூடிய ஆனால் ஒரு புலமைத்துவ நிறுவனமாக அல்லாமல் ஒரு வெகுஜனக் களமாகச் இலக்கியச் சந்திப்பு செயற்படுகின்றது.
ஒரு மரபார்ந்த முறையில் ஒரு அமைப்பு உருவாகும் போது அதற்கான நிர்வாக சபை, சந்திப்புக்கு அப்படியொன்றில்லை. இலக்கியச் சந்திப்பொன்றில் பங்குகொள்பவர்களில் அக்கறையும், ஆர்வமும் உள்ள ஒருவரோ அல்லது ஒரு குழுவோ அடுத்துவரும் சந்திப்பை ஏற்பாடு செய்வதான ஒரு சுய உடன்பாட்டில் இது வரை இலக்கியச் சந்திப்பு நடைபெற்று வருகின்றது. அன்றியும் அது தமிழ் இலக்கியச் சந்திப்பு என்றுங்கூடப் பெயர் கொண்டிருக்கவில்லை. தன் அடையாளத்தை நெகிழ்ச்சியுடையதாக வைத்திருக்க வேண்டிய தேவையும், ஒருமைத் தன்மையினை அழித்து அடையாளத்தில் பன்முகத்தன்மைக்கு வெளிப்படையாக இருக்கவேண்டிய தேவையும் புகலிடத்தில் ஏற்பட்டுள்ளதையே இது காட்டுகின்றது. அதாவது தமிழ் என்ற அடையாள வார்த்தையின் வழி வழி மனோவிம்பம்; அது சுட்டி நிற்கின்ற மரபார்ந்த உட்பொருள்; கட்டவிழ்க்கப் படும் போது காணக்கிடைக்கும் மேலாதிக்க மற்றும் சமூகப் பாகுபாடுகள் போன்ற பண்புகள் கெட்டழிந்து நவீன காலத்துக்கேற வகையில்  முற்றிலும் புதிய தமிழின் அடையாளம் வார்க்கப்படுவதற்கு புகலிகளின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படவேண்டும்.

உதவிய மூலங்கள் மற்றும் மேலதிக வாசிப்பிற்கு:
4. 6 ஆவது இலக்கியச் சந்திப்பு அறிமுகத் தொகுப்பு,பெர்லின் 1989
5. 16 ஆவது இலக்கியச் சந்திப்பு மலர், நெதர்லாந்து 1993
6. சித்திரலேகா மௌனகுரு,இலங்கைத்தமிழரின் புலம்பெயர் இலக்கியம்,கொழும்பு, மே 1995
7.  Santhiapillai Guy de Fontgallend, Sri Lankans in Exile,Madras, 1988
8.  . சுசீந்திரன், சர்வதேசப் புகலிட இலக்கியங்கள், தாயகம், கனடா, மே 1991
9. புலம் பெயர்ந்த தமிழர் நல மகாநாட்டுச் சிறப்பு மலர், திருச்சி, 1994



[1] Bertolt Brecht, Hundert Gedichte 1918-1950, Berlin, 1958, Pg. 305

„…நாங்கள் மூழ்கிப்போன அதே பெருவெள்ளத்தில்
வெளிக்கிளம்பி வருவோரே
எங்கள் பலவீனங்களைப் பற்றி நீங்கள் பேசும் போது
நீங்கள் தப்பித்துவிட்ட அந்த இருள் சூழ்ந்த
எங்கள் காலத்தைப் பற்றியும் பேசுங்கள்…“             - பெர்டோல்ட் பிரெஸ்ட்

[2] எம்.ஏ.நுஃமான், மழை நாட்கள் வரும், சிவகங்கை, 1983, பக்.70
[3] செழியன், மரணம், 1985
[4] கேள், சேரன், எக்ஸில், இதழ்:2,1998
[5] Claus Gigl, Lyrik Heimatverlust und Exil, Stuttgart 2006, page 74
[6] China Keitetsi, Sie nahmen mir die Mutter und gaben mir ein Gewehr  Mein Leben als Kindersoldatin, Berlin, 2003
  சைனா கெய்ரெற்சி, குழந்தைப் போராளி, சென்னை 2007
[7] Margit Gottstein, Richter u.a, Handbuch ethnischer Minderheiten in Deutschland, Berlin, July 1992
[8] R. Pathmanaba Iyer, கண்ணில் தெரியுது வானம், London, 2001, பக்.153
[9] The lIttle magazine favourite fiction II VI:6,Delhi,2007, p:279
[10] Günter Grass, .சுசீந்திரன், „எதுவரை தொடரும் மனிதரின் கதை“,பெர்லின்,1992

[11] சினுவா ஆச்சிபி, சிதைவுகள்,டொறண்டோ,1998
[12] Paul Celan, Die Niemandsrose, Frankfurt am Main, 1963
„…மொழித்தராசு, சொற்தராசு, தாயகத்தராசு புகலிடம்…“ 
[13] பா.தேவேந்திரபூபதி, நாடோடிகள் விட்டுச் சென்றிருப்பது, மதுரை,2009, பக்கம்:98
[14] Carte orange - பிரான்சின் மாதாந்த பிரயாணச் சீட்டு
[15] சுகன், நுகத்தடி நாட்கள், பெர்லின், 1998, பக். 23
[16] வே.மு.பொதியவெற்பன், கவிதா நிகழ்வு ஓர் அறிமுகம்,
[17] Edward W. Said, „After the last sky Palestinian Life“,   
[18] „…எல்லைகளுப்பால் நாம் எங்கு போவது?
வான் இறுதிக்கப்பால் பறவை எங்கு போய்ப் பறக்கும்?...”    

[19] K.Meenakshisundaram, The contribution of European scholars to Tamil, Madras, 1974 P.:25-76


No comments: