இரண்டு ஊடகங்கள், இரண்டு கலைஞர்கள், ஒரு கரு:
மணிரத்தினத்தின் "ராவணனும்", மௌனகுருவின் "இராவணேசனும்"-க. மோகனதாசன்-
(விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக் கழகம். இலங்கை) ஒரு கலைஞன் தான் பார்த்து கேட்டு அனுபவித்த விடயங்களை தனக்கு கை வந்த ஊடகத்தினூடாக வெளிப்படுத்தும் போது அது கலையாகின்றது. கலைஞர்களுக்கிடையே வெளிப்படுத்தும் முறையிலும் கையாளும் உத்திகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது அவர்களது அனுபவத்தினாலும் பயிற்சியினாலும் சூழலினாலும் வேறுபடுகின்றது. ஒரு கலைப்படைப்பில் சமூகத்திலுள்ள பிரச்சினைகளும் அதிலிருந்து மீள்வற்கான வழிமுறைகளும் கூறப்படும் போது அதன் பெறுமதி இன்னும் அதிகரிக்கின்றது. கலையாக்கங்களில் சமூகத்தின் நிலைமைகளை பிரதிபலிப்போரில் பழைய கதைகளுக்கு புதிய வியாக்கியானங்களையும் புதிய கருத்தேற்றங்களையும் செய்வோரும் உள்ளனர். இது தழுவலாகவோ அல்லது அதே கதையமைப்புடன் சிறு மாற்றத்தினை மேற்கொள்ளும் முறைமையுடையதாகவோ அமைந்து காணப்படும். இராமாயணம் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய பல விடயங்களை உள்ளடக்கி யுள்ளது. இதனால்தான் பல இராமாயணங்கள் (கம்பர், வால்மீகி, வசிட்டர், போதாயினர், துளசி, சம்பூர்ணர்,….இராமாயணங்கள்) உருவாயின. இராமாயணம் சமூகத்திற்கான பல்வேறுபட்ட கருத்துக்களை முன் வைக்கின்றது. அந்தவகையில் இராமாயணக் கதையினை அடிப்படையாகக் கொண்டு, 2010ல் இராமாயணத்தைத் தழுவியதான கதையமைப்புடன் மணிரத்தினத்தின் இராவணணனும் (சினிமா) இராமாயணத்தின் யுத்த காண்டத்தை அடிப்படையாகக் கொண்டு மௌனகுருவின் இராவணேசனும்(நாடகம்) படைத்தளிக்கப்பட்டுள்ளன.
இராமாயணக் கருவானது இரண்டு கலைஞர்களால் இருவேறு ஊடகங்களினால் (சினிமா, நாடகம்) கையாளப்படும் விதம், காட்சிப்படுத்தும் தன்மை, அதன் கருத்தியல், அதன் கலைப் பெறுமானம், தற்காலத்தின் பிரதிபலிப்பு என்பன இவ் ஆய்வுக் கட்டுரையில் ஆராயப்படுகின்றது.
ராவணர் கதையமைப்புஏற்கனவே சத்தியவான் சாவித்திரி கதையினை அடிப்படையாகக் கொண்டு ரோஜா எனும் திரைப்படமும் மஹாபாரதக் கதையினை அடிப்படையாகக் கொண்டு தளபதி திரைப்படமும் எடுத்திருக்கும் மணிரத்தினம் இம்முறை இராமாயணக் கதைக்கு புது வியாக்கியானத்தைக் கொடுத்திருக்கிறார். சந்தண மரக்கடத்தல் வீரப்பன் கதையும் இராவணன் கதையும் இணைந்ததாக இங்கு ராவணா திரைப்படம் உருவாக்கப்படுள்ளது.
பழங்குடி மக்களின் நாயகனாகத் திகழ்பவன் வீரா பொலிசுக்கும் மேட்டுக் குடியினருக்கும் அவன் தீவிரவாதி. ஆனால் அங்கிருக்கும் மக்களுக்கோ அவன் காவல் தெய்வம். அவனது தங்கைக்கு திருமணம் நடக்கும் போது அதிரடிப் படை அந்த இடத்தில் நுழைந்து அவனைத் தீர்த்துக்கட்டப்பார்க்கிறது. வீரா சூட்டுக்காயத்துடன் தப்பிக்கின்றான். இந்த ஏமாற்றத்தினால் வீராவின் தங்கை வெண்ணிலாவை(சூர்ப்பனகை) தூக்கிப் போகும் அதிரடிப்படையினர் அவளைச் சின்னாபின்னமாக்கின்றனர். வீடு திரும்பும் அவள் வீராவிடம் சகலதையும் கூறிவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். இந்த கோபத்தில் பொலிஸ் அதிகாரி தேவ்வைப்(இராமன்) பழி வாங்க அவன் மனைவி ராகினியை(சீதை) கடத்திச் செல்கிறான் வீரா.
இதனால் கடத்தப்பட்ட மனைவியை மீட்கவும் வீராவைப் பழிவாங்கவும் பொலிஸ் அதிகாரி தேவ் பெரும் படையுடன் காட்டுக்குச் செல்கிறான். காட்டில் ஆரம்பத்தில் வீராவை வெறுக்கும் ராகினி, அவன் தங்கைக்கு நேர்ந்த கொடுமையினை அறிந்து மனமாற்றம் அடைகின்றாள். இச்சந்தர்ப்பத்தில் வீராவிற்கு ராகினி மீது காதல் ஏற்பட அதை அவளிடம் வெளிப்படுத்தியபோதும் அவள் எதுவும் சொல்லாமல் அமைதி காக்கிறாள்.
இந்நிலையில் பொலிஸ் படையானது காட்டை நெருங்கிக் கொண்டு வருகிறது. ஒரு கட்டத்தி;ல் வீராவின் தம்பி சக்கரையை(விபீசணன்) தேவ் சுட்டுக் கொல்கிறான். இதைத் தொடர்ந்து கடும் சண்டை நடைபெறுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் ராகினியின் கணவன் தேவ்வினது உயிர் வீராவின் கையில் ஊசலாடுகிறது. இறுதியில் அவனைக் கொல்லாமல் விடுவதோடு ராகினியையும் அவனுடன் அனுப்பி விடுகின்றான்.
கணவனோடு ரயிலில் ஊர் திரும்பிக் கொண்;டிருக்கும் ராகினியின் கற்பை தேவ் சந்தேகப்படுகிறான். இதனால் கோபமடையும் ராகினி மீண்டும் வீராவிடமே திரும்புகிறாள். ராகினிக்குப் பின்னால் வரும் படையானது இறுதியில் வீராவைத் தீர்த்துக்கட்டிவிடுகிறது.
இராவணேசன் கதைக் கட்டமைப்பு
பேரா. சி.மௌனகுருவினால் உருவாக்கி நெறியாள்கை செய்யப்பட்ட இராவணேசன் கூத்துருவ நாடகமானது கூத்தின் அழகியலை பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக காணப்படுகின்றது. இவ் இராவணேசன் கதையமைப்பினை எடுத்து நோக்குவோமானால் ஆரம்பத்தில் இராவணன் கொலுவுடன் ஆரம்பிக்கும் நாடகம் அங்கதன் தூது வந்தவுடன் முரண் நிலைக்குச் செல்கின்றது. இதிலிருந்து படிப்படியாக யுத்தத்திற்கான நடிவடிக்கைகள் ஆரம்பமாகின்றன. இந்நாடகக் கட்டமைப்பினை பின்வருமாறு சுருக்கமாக நோக்க முடியும்.
1. இராவணன் கொலுவருதல்
2. அங்கதன் தூது வந்து திரும்புதல் - இதில் சீதையை விடும்படியும் இல்லாவிட்டால் சண்டை வரும் எனவும் இராம தூதனாக வந்த அங்கதன் கூறல், இராவணன் சீதையைவிட மறுத்தல். விட்டால் தனது வீரத்திற்குப் பங்கமென உரைத்தல்.
3. மண்டோதரி வருகை
4. மண்டோதரியை இராவணன் சந்தித்தல் - இராவணன், இராம படையெடுப்பு பற்றிக் கூறலும் சீதையை விடும்படி மண்டோதரி கூறுதலும் இராவணன் இதனை மறுத்து போருக்குப் புறப்படலும்.
5. இராமர் சேனை படையினைத் தயார் படுத்தல்
6. இராம, இராவண யுத்தம்
7. இராவணன் நிரயாயுத பாணியாதல்
8. இராவணன், மண்டோதரி வாதமிடல் - இராவணன் தோற்று வந்ததைக் காரணங்காட்டி சீதையை விடும்படி மீண்டும் வற்புறுத்தல். இராவணன் தனது நியாயங்களையும் பலத்தினையும் எடுத்துரைத்து மண்டோதரியின் கருத்தை ஏற்க மறுத்தல்.
9. கும்ப கர்ணன் வருகையும் இராவணனுடன் உரையாடலும் - கும்பகர்ணன் இராமன் பக்க நியாயப்பாடுகளைக் கூறி போரை நிறுத்த எத்தனித்தல். இராவணன் இதற்கு இணங்காததால் இறுதியில் செஞ்சோங்றுக் கடனுக்காக போருக்குச் செல்தல்.
10. இராமன், கும்பகர்ணன் யுத்தம் கும்பகர்ணன் வீழ்தல்
11. இராவணன் பல்வேறு படைகளையும் (சிங்கன், நீலன், குருதிக்கண்ணன், மகரக்கண்ணன்… படைகள்) போருக்கு அனுப்பித் தோற்றுப்போதல்.
12. இந்திரஜித் வருகை
13. இராவணன், இந்திரஜித் உரையாடல்
14. இந்திரஜித், இலக்குவன் யத்தம்
15. இந்திரஜித் திரும்பி வரலும் இராவணனுடன் உரையாடலும் - இந்திரஜித் தான் தோற்கடிக்கப்பட்டமையினைத் தந்தையிடம் சொல்லுதலும் சீதையை விடும்படி கூறலும் இராவணன் அதனை மறுத்தலும்.
16. இராவணன், மண்டோதரி, இந்திரஜித் உரையாடல் - மண்டோதரி தன்னைக் கேட்காமல் மகன் இந்திரஜித்தை போருக்கு அனுப்பியமைபற்றிக் கேள்வியெழுப்புதலும் இந்திரஜித் தந்தை, தாயினது வாதப் பிரதி வாதங்களில் மாட்டுப்பட்டுத் தவித்தலும்.
17.இந்திரஜித், இலக்குவன் யுத்தம் - இந்திரஜித் அம்பு பட்டு வீழ்தல்
18.இராவணன், மண்டோதரி உரையாடல் - மண்டோதரி இந்திரஜித்தின் இழப்பினால் அழுதல். மீண்டும் யுத்தத்தினைக் கையிடும்படி இராவணனை வற்புறுத்தியபோதும் இராவணன் மறுத்து போருக்குச் செல்லல்.
19.இறுதி யுத்தம் - இராவணன் வீழ்தல்
20.மண்டோதரி புலம்பல்
இரு கலைஞர்களும் இராமாயணத்தைக் கையாண்டுள்ள விதம்
இராவணாராவணா இராமாயணத் தழுவலாகவும் இராவணேசன் நேரடியாக இராமாயண யுத்த காண்டத்தைப் பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது. ராவணா தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குரலாக அமைந்து காணப்படுகின்றது. மேட்டுக் குடியினரால் பிரயோகக்கப்படும் அதிகாரத் துஸ்பிரயோகங்கள், குறிப்பிட்ட மக்களை கீழ்மட்ட நிலையில் மதிப்பிடுதல் இதனால் அச்சமூகம் ஒரு கட்டத்திற்கு மேல் அதிகாரத்தை, மேட்டுக் குடியினைரை எதிர்க்கத் துணிதல். இந்த இடத்தில் வீரப்பனது பாத்திரம் இன்னொரு நியாயப்பாட்டில் பார்ப்பது போன்று அமைந்துள்ளது. இவ்விடங்களை நேரடியாகக் கூறாமல் இராமாயணச் சாயத்துடன் தந்திருப்பது இராமாயணத்தை ஒரு வகையில் மீள் வாசிப்புச் செய்வதாக அமைந்துள்ளதோடு வீரப்பன், இராவணனது ஒன்றித்த தன்மைகளும் (இதனால் தான் வீரப்பனில் முதல் எழுத்தையும் ராவணனில் முதல் எழுத்தையும் சேர்த்து வீரா எனும் பெயரை மணிரத்தினம் உருவாக்கினாரோ?) அப்பாத்திரங்களுக்கான அவர்கள் பக்க நியாயப்பாடும் இங்கு வெளிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் ராவணாவில் இராமாயணத்துடன் இணைக்கும் பல்வேறு இடங்கள், வார்தைகள் ஆங்காங்கே வந்து செல்கின்றனஇராவணேசன்.
இராவணேசனைப் பார்க்கும் போது, பல்வேறு தளங்களில் பல்வேறு காலப் பகுதிகளில் இவ் இராவணேசன் அக்காலத்தின் குரலாக பல விடயங்கள் பற்றிப் பேசியிருப்பதனைக் காணமுடிகின்றது. குறிப்பாக யுத்தத்தினால் வரும் அழிவுபற்றி அழுத்திக் கூறப்பட்டுள்ளதோடு அதில் மக்களின் அவலம், பெண்களின் நிலை என்பன பற்றி இராவணேசன் - 2010 பேசுகின்றது. இராவணேசனில் வரும் பாத்திரங்கள் சமூகத்தின் வகை மாதிரிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளமையைக் காண முடிகின்றது.
*யுத்தம் செய்வதற்கான நிர்ப்பந்தங்கள்.
*மகனை யுத்தத்தில் தொலைத்து நிற்கும் தாய்
*கணவனை இழந்து துடிக்கும் மனைவி
என எல்லாமே (இராமாயணக் கதையாக இருந்தாலும்) சமகாலப் பிரச்சினையை பேசுவதாக அமைந்து காணப்படுகினறது. பொதுவாக இராமாயணம் இராமனது பெருமை கூறுவதாகவே அமைந்து காணப்படுகிறது. எல்லாக் குவிமையமும் இராமனுக்காக இராமனை ஒரு பெரிய கதாநாயகனாக சித்தரிப்பதையே மையமாகக் கொண்டது. ஆனால் பேராசிரியர் அவர்கள் தனது இராவணேசன் - 2010ல் குறுங்கதையாடலை ஆரம்பித்திருப்பதைக் காணமுடியும். பெருங் கதையாடல் அதிகாரத்தை சிருஸ்டிப்பதாகவும் அது ஒரு பக்க நியாயமாகவும் இருக்க இக் குறுங்கதையாடல் பல்பக்க நியாயப்பாடுகளையும் அதிகாரப் பகிர்வினையும் ஏற்படுத்துவதைக் காணலாம். இராவணேசனில் இராவணன், மண்டோதரி, இராமன், கும்பகர்ணன், இந்திரஜித், இலக்குவன் என எல்லாப்பாத்திரங்களுமே அப்பாத்திரங்களுக்குரிய நியாயப் பாட்டுடன் உருவாக்கப்பட்டிருப்பதும் அப்பாத்திரங்களை இக்காலத்தின் குறியீடுகளாகத் தந்திருப்பதும் இதில் சிறப்பம்சமாகும். இங்கு பாத்திரங்களின் தனிக்குணாதிசயங்களினூடே இறுதியில் இராவணனை ஒரு துன்;பியல் நாயகனாகச் சித்தரித்திருப்பதும் யுத்தினால் ஏற்படும் மனிதப் பேரவலத்தினை உணர்வு ரீதியாகச் சொல்லியிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். எனவே இரு கலைஞர்களும் சமகாலப் பிரச்சினையைப் பேசுவதற்கான ஊடகமாக இராமாயணத்தைப் பிரயோகித்திருப்பதைக் காணமுடிகின்றது.
காட்சிப்படுத்தும் தன்மை
இராவணாவில் ...
ராவணாவில் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு மிகவும் மணிரத்தினத்திற்கு கைகொடுத்திருக்கிறது. வழமையாக வார்த்தைகளை விட கருத்து நிறைந்த அசைவுகளையே தமது திரைப்படங்களில் முன்னிலைப்படுத்தும் மணிரத்தினம் இத்திரைப்படத்திலும் கவிதைத்தனமான அசைவுகளையும் காட்சிகளையும் இணைத்து தாம் சொல்ல வந்த கருத்திற்கு வலுச்சேர்த்திருக்கிறார். ஒரு சில அசைவுகளின் மூலமே பாத்திர குணாதிசயத்தினையும் அப்பாத்திரத்தினது கருத்து நிலையினையும் வெளிப்படுத்திவிடுகின்றார்.
* ஆரம்பத்தில் வீரா மலையிலிருந்து குதிக்கும் காட்சி
* வீராவிற்கும் ராகினிக்கும் லேசான சலனம் ஏற்படும் காட்சி
* தனது தங்கை தனக்கேற்பட்ட கொடுமையினை வீராவிடம் சொல்லும் போது வீராவிடம் ஏற்படும் மாற்றம்
என்பன எல்லாமே வார்த்தைகளை விட காட்சிகளே எம்முடன் அதிகம் பேசுவதனை உணரந்து கொள்ள முடிகின்றது.
இராவணேசனில்
பேராசிரியர் சி.மௌனகுருவின் இராவணேசனில் காட்சிப்படுத்தலானது காட்சித் தட்டிகளைக் கொண்டு வித்தியாசமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
* கோரஸாக
* பிரமாண்ட சாட்சிகளாக
* படைகளாக, படை வியூகங்களாக
* காட்சி மாற்றங்களைக் காட்டுபவைகளாக
* பாத்திரங்களது உணர்வுகளின் குறியீடுகளாக
* பிரச்சினைகளாக
* இடத்தின் பின்னணியாக
என பல கோணங்களில் இக்காட்சித் தட்டிகள் அசைவதனைக் காணமுடிகின்றது.
முடிவுரைராவணா, இராவணேசன் இரு படைப்புக்களுமே 2010ல் இருவேறு கலைஞர்களால் இரு கலை ஊடகங்களினூடாக வெளிப்படுத்தப்பட்டவை. ஆனால் இரண்டுக்குமே இராமாயணம் ஆதாரமாக இருந்திருப்பதைக் காண முடிகின்றது. அதாவது ஏற்கனவே இருந்த கதை ஒன்றிற்கு தற்காலத்தின் கதையும் உணர்வும் இருவேறு விதமாகப் பூசப்பட்டிருப்பதையும் அல்லது கருத்தேற்றம் செய்யப்பட்டிருப்பதையும் காணமுடிகின்றது. இந்த தற்காலக் கதையாடலானது சில இடங்களில் சோகம் நிறைந்த படிமங்களாகவும் சில இடங்களில் குறியீட்டுக் காட்சிப்படுத்தலாலும் இரு படைப்புக்களிலும் வெளிப்படுத்தியிருப்பதைக் காணலாம். இது படைப்பாளிகள் தான் சொல்லித்தான் ஆகவேண்டிய வேண்டிய விடயங்களை சொல்வதற்கும் இவ்விடயங்களைச் சொல்வதால் ஏற்படும் சில கஸ்டங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும். எனவே இப்படைப்புக்கள் எமக்கு கூறி நிற்பது ஏற்கனவே அறியப்பட்ட கதைகளினால் கூட, நாம் நமது இப்போதய வலிகளையும் சோகங்களையும் பேச முடியும் என்பதே.
No comments:
Post a Comment