Thursday, February 23, 2012

சுதந்திரத்துக்கான விடுதலைப்போராளி பியா (Per Mortensen)

-கரவைதாசன்- 

சுதந்திரத்துக்கான விடுதலைப்போராளி Per Mortensen கடந்த வெள்ளிக்கிழமை 17.02.2012 இறப்பெய்தினார்.  நீண்ட நாட்களாக  நோய் வாய்ப் பட்டிருந்த  பியாவின்  இருதயம் தனது எண்பத்தி ஏழாவது வயதில்  தன் துடிப்பை நிறுத்திக் கொண்டது. 

1924ம் ஆண்டு யூன்மாதம் 2ந் திகதி டென்மார்க்கின் தலை நகர் கோபன்ஹேகனின்  நகரப் புறப் பகுதியான வன்லூசாவில்  போராட்ட குணாம்சம் மிக்க குடும்பத்தில் பிறந்து , தொழிலாளர்கள் சேரி ஒன்றில்  வளர்ந்து வந்தார்.  இவரது பேரனார் ஒரு போர் வீரனாவார். இவரது குடும்பத்தில் பலர் கடல்படை வீரர்கள் ஆவார்கள். 

தொழில் முறையில் இயந்திர பொறியிலாளரான இவர், சுதந்திரம், விடுதலை, அடிபணியாமை பற்றியும்,  நாசிகளின் ஆக்கிரமிப்பு பற்றியும் புத்தகங்களை எழுதியுள்ளார்.

இரண்டாம் உலகமாக யுத்தக் காலப் பகுதியில் கிட்லரின் நாசிப் படைகளால் டென்மார்க் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தவேளை  நாசிகளுக்கு எதிராக ஆர்த்தெழுந்த  BOPA எனும் விடுதலை அமைப்பில் 1943ம் ஆண்டு தனது 19வது  வயதில்  முன்னனிப்போரளிகளின் வரிசையில் இணைந்து  ரோம் Tom  எனும் இயக்கப் பெயரினை தன்னகத்தே கொண்டு நாசிகளுக்கு  எதிரான சிறு சிறு தாக்குதல்களை மேற்கொண்டவர். 

அந்நாட்களில்  நாசிகள்  அணுகுண்டு  தயாரிப்பதற்கான தாதுப்பொருட்களை   நோர்வேயிலிருந்து  சரக்குவண்டிகளில்  டென்மார்க் ஊடாக  எடுத்துச் சென்ற வேளை, அச்சரக்குவண்டிகளை தகர்த்து, அவர்களுக்கு அத்தாதுப்பொருட்கள்  சென்றடையாமல் BOPA எனும் விடுதலை அமைப்பு மேற்கொண்ட தாக்குதலை தலைமை ஏற்று  பியா செயல்ப்படாது போயிருந்தால், ஜேர்மன் நாசிகளின் கையில் அன்று அணுகுண்டு இருந்திருக்கும். இன்று இந்த உலகப்பந்தும் அதில் உயிர்களும் இருந்திருக்கா.

இன, சாதி, பால், வர்க்கம் , தேசியம் போன்ற காரணிகளில்  தோன்றும் ஆதிக்கவெறிபிடித்த  ஆக்கிரமிப்பாளர்களே அதிகாரத்துவப்போட்டியில்  "பியா" போன்ற சுதந்திரத்துக்கான விடுதலைப்போராளிகள் தோன்றுவதற்கான வெளிகளை தோற்றுவிக்கிறார்கள்.


குறும் படத்தயாரிப்பாளரான இவர் தனது இறுதிக் காலத்தில் தயாரித்து வெளிக் கொணர்ந்த குறும்படத்தில் "Bomben i boyesgade" தானே தோன்றி நடித்துள்ளார். அக்குறும்படத்தில் "ஆக்கிரமிப்பாளர்கள் சொல்வது போல் நாங்கள் தீவிரவாதிகளோ, அல்லது நாசகாரிய வேலைகள் செய்பவர்களோ அல்ல. எங்களது தொழில்சங்கங்களுக்கு ஒழுங்காக சந்தாவும் அரசுக்கு வரியும் கட்டுபவர்கள் நாங்கள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக தாக்குதல் செய்யும்போது பொதுமக்களுக்கு ஒரு சிறு சிராப்பு காயம் தானும் ஏற்படாமல் பார்த்துக் கொள்பவர்கள் " எனச்சொல்வார். இந்த வாசகங்கள் அவர் நம்மை விட்டுப் பிரிந்தாலும்,  அவரின்  அரசியலைப் பிரசங்கப்படுத்திக் கொண்டே வாழும்.

Per Mortensen bliver bisat torsdag den 23. februar kl. 13.30 fra Holmens Kirkegårds Kapel, Upsalagade 25, Kbh. Ø.

 குறும்படம்  இணைக்கப்பட்டுள்ளது 
 

No comments: