இருப்பை தொலைத்தல் Ranjith Heneyaka வின் நாவல்
Mit dem Wind fliehen
தேவா- ஜேர்மனி
அதிகாரத்தின் கொடுவாள் தனக்கு எதிராக நிலைப்பாடு எடுக்கும் ஒவ்வொருத்தரின் கழுத்திலும் விழுகிறது என்பதற்கு இந்த அரசபயங்கரவாதம் ஒரு அத்தாட்சி -ரஞ்சித்
ரஞ்சித் Henayaka அவர்கள் முதன்முதலாய் ஜெர்மன் மொழியில் எழுரஞ்சித் Henayaka அவர்கள் முதன்முதலாய் ஜெர்மன் மொழியில் எழுதிவெளிவந்திருக்கும் முதல்நாவல் இது. இவர் ஏற்கனவே சிங்களத்திலும் ஜெர்மன் மொழியிலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 1968லிருந்து அரசியல்தீவிரசெயற்பாட்டயளராய் இருந்தவர். 1971யிருந்து ஜே.வி.பியின் இளைஞர்அணியில் பங்குபற்றியிருந்ததால் 1977வரை சிறைவாசத்தில் இருந்தது மட்டுமல்லாமல் சித்திரவதைகளையும் அனுபவித்தவர்.திவெளிவந்திருக்கும் முதல்நாவல் இது. இவர் ஏற்கனவே சிங்களத்திலும் ஜெர்மன் மொழியிலும் ஆயஇந்த நாவல் உருவத்தில் ஒரு கற்பனைக்கதையை முன்வைத்திருக்கிறது. யதார்த்தத்தை அது தன்னுள் கொண்டி ருக்கிறதை ஒரு வாசகனுக்கு எளிதில் புரியும். கற்பனைக்கும், நிஐத்துக்கும் இடையில் சங்கிலித்தொடர் இருப்பதாலேயே எழுத்தாளனுக்கு -கலைஞனுக்கு படைப்பு சாத்தியமாகிறது.
1980க்குப் பின்னான இலங்கை அரசியல் நிலைவரங்களிலிருந்து ஆரம்பிக்கிறது; இந் நெடும்கதை. கதைநாயகனோடு-நாயகியோடும் பயணிக்கும் கதை ஐரோப்பாவரை நீண்டு பின்னர் தொடர்ந்தும் அதனுடைய அரசியல் பார்வையோடு வாழ்தல்தான் இதன் சிறப்பு. பொதுவாகவே அரசியல் நெடுங்கதையாடல்களின் வாசிப்பில் ஒரு மந்தநிலைமை உள்ளது;. சிக்கலான அரசியல் சம்பவங்கள்-நிலைமைகளை ஒரு கோர்வைக்குள் கொண்டுவருவதற்கு விசேடமாய் வாசகன் புரிந்துகொள்ளக்கூடிய இலகுமொழி அவசியமானது. கரடுமுரடான வார்த்தைகளை கொடுத்து வாசிப்புக்கு ஒரு எரிச்சலை தரக்கூடாது. ஒரு கதைக்குள் இன்னொரு கதையைப்பொருத்தி அதற்குள் வேறொன்றை புகுத்தி உருவாக்கும் ஒரு மகாபாரத சிக்கலை ரஞ்சித் புனையவில்லை. தன்னுடைய பிரச்சார தொனியை புகுத்தவில்லை.
ஒரு அமைதியான வேகத்தோடு அதேசமயம் கொண்டிருக்கும் அரசியல் கொள்கையோடு கொஞ்சமும் விட்டுக்கொடுத்தல் இன்றி இந்நெடுங்கதை நகர்கிறது. நாவலின் இறுதியிலும் கூட அது தொடர்ந்து நகர்ந்துகொண்டிருப்பதான உணர்வே மேலோங்கி நிற்கிறது.
கதை இதுதான்,
இனத்தின் உரிமைக்காக ஆயதமேந்தி போராடும் தமிழ்இளைஞனாக நாதன் அறிமுகப்படுத்தப்படுகின்றான். பல்வேறு இயக்கங்களும் தமக்குள் மோதி அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டிருக்கும் காலகட்டத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. இவன் சார்ந்த குழுவும் நாதன் நேசித்த விடுதலையை நோக்கி நகரக்கூடவில்லை என்பதை புரிந்துகொள்ள நேர்கிறது. ஆனால் இயக்கங்களின் மூர்க்கமான அதிகாரவெறி இவனது தாமதமான புரிதலுக்காக காத்திருக்கவில்லை. சொந்த ஊரிலிருந்து தப்பிஓடவேண்டியதான கட்டாயம் நாதனுக்கு ஏற்படுகிறது. தோழன் கண்ணிவெடியால் உயிர் இழக்கின்றான். காட்டிக்கொடுப்புகளின் கோரம் நாதனை துரத்துகிறது. தன் உயிரையும் காப்பாத்திக்கொள்ளவேண்டி அவனது முதலாவது தப்பியோடுதல் தலைநகரைநோக்கி ஆரம்பிக்கிறது. கொழும்புக்கு போகிறான். அங்கு தன் மனைவியையும் குழந்தையையும் அழைப்பித்து ஒரு நிம்மதியான வாழ்வு தொடரலாம் என்றால் அது தொடரு முன்னமேயே நாதன் இலங்கை ராணுவத்தால் வீதிச் சோதனையிடும் ஒரு சந்தர்ப்பத்தில் கைது செய்யப்படுகின்றான். சித்திரவதைமுகாமுக்கு கொண்டு போகப்படுகின்றான்
இங்கு நடைபெறும் கற்பனைக்கு கூட எட்டமுடியாத பயங்கரங்களை வாசிக்க ரஞ்சித்தின் நாவலுக்குள் நுழைந்துபாருங்கள். சித்திரவதைமுகாமின் குரூரங்கள் நம் நினைவிலிருந்து கழற்ற முடியாதவையாகின்றன.
அதிகாரத்தின் கொடுவாள் தனக்கு எதிராக நிலைப்பாடு எடுக்கும் ஒவ்வொருத்தரின் கழுத்திலும் விழுகிறது என்பதற்கு இந்த அரசபயங்கரவாதம் ஒரு அத்தாட்சி.
ஓன்று உயிர்வாழ்தல் வேண்டி நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் அதாவது உயிரைப்பணயம் வைத்து தப்பிஓடவேண்டும் இதுவும் அதிட்டம் இருந்தாலே முடியும். இது நடக்காவிட்டால் சித்திரவதைமுகாமிலே இறுதிமூச்சை விடவேண்டும்.
தன் இளமைக்காலத்திலேயே அதிகாரவர்க்கத்தின் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருந்த ரஞ்சித் இந்த நாவலை எழுதுவதற்கு மிகதகுதியானவர். காயம்பட்டவனுக்குத்தான் தெரியும் வலியின் வேதனை. வேதனையின் முனகல்களை துயரங்களின் இறுதிமூச்சுகளை நாவலில் உணரக்கூடியவாறு மிக அருகாமையில் அல்ல உங்களுக்குள் கேட்கின்றது. இம்மரணவேதனைகள் எதற்காக? ஏன் இந்த துன்பங்கள்? காரணங்களே இல்லாமல் ஒருமனிதனை அதிகாரவர்க்கம் காவுகொண்ட நிஐங்களை; இங்கு மிகநெருக்கத்தில் உணரலாம்.. வக்கிரபுத்தி கொண்ட அடக்குமுறையாளர்கள் கைதுசெய்திருந்த ஆண்பெண்பாலாருக்குமேல் நடாத்திய பாலியல்வன்முறைகளை; வாசிக்கும்போது மனிதக்கொடூரங்கள் இப்படியும் நடக்கின்றனவா-நடைபெற்றதா-நடைபெறுமா-என உயிர் கலங்குகிறது.
நாதன் என்கிற இலங்கை இளைஞன் ஒரு கேவலம்கெட்ட அரசியல் சகதியில் மூழ்கடிக்கப்பட்டு அதிலிருந்து அவன் மீட்டெழுந்தாலும் அந்த சாக்கடை அவனை அதிலேயே புரட்டி எடுக்கிறது. அதிலிருந்து தப்புதல் என்பதாவது இறுதியில் நாட்டைவிட்டே தப்பியோடுதலில் முடிகிறது. நாவல் இத்தோடு; முற்றுப்பெற்றிருந்தால் அதனுடைய அரசியல் நுணுக்கமே அரைகுறையாய் போயிருக்கும். 315பக்கங்களை தன்னுள் கொண்டுள்ள இந்நாவலின் தனித்தன்மையே அரசியல் பேசுவது. மனிதவாழ்வே அரசிய்ல் நீரோட்டத்தில் சுழல்வது;; அதிலிருந்து அவன் விடுபடமுடியாதபடி போராட்டங்கள் தொடருகின்றன..
ஈழத்தில் தமிழினத்துக்கென்று பொதுவான பயங்கரமொன்று நடைபெற்றதும்-பெறுகிறதும்-பத்திரிகைசுதந்திரமறுப்பு;- அரசுக்கு எதிரான கருத்துமறுப்புகளையும் தன்னுள் கொண்டு இந்த நாவல் ஆவணமாக உங்கள் முன்னே விரிகிறது.
வாழ்வுக்கும் எழுத்துக்கும் கொண்ட கொள்கைக்கும் இடையே முரண்பாடற்ற ஒரு பாதையை ஒரு எழுத்தாளன் கொண்டிருந்தால் அது அவனின் படைப்பாற்றலுக்கு குறுக்கே வராது. ரஞ்சித் நாவலில் விபரித்துக்கொண்டுபோகும் சம்பவங்களை; சம்பவங்கள் என்பது சரியான வார்த்தையில்லை. அவைகள் வரலாறு.
கிட்லருடைய ஆட்சியின் இனஅழிப்பை மறுக்கிறவர்கள் மறைக்கமுயல்பவர்கள் அதன் தடயங்களை திரிபுபடுத்துபவர்கள் இன்னும் தர்க்கரீதியும் நியாயமும் இல்லாத வாதங்களை முன்வைக்கிறார்கள். இலங்கையில் போர் ஓய்ந்துபோனாலும் இனஅழிப்பு வேறொரு கோணத்தில் கையாளப்படுகின்றது என்கிற உண்மை எமக்கு முன்னாலிருக்கும் யதார்த்தம். எல்லாதரப்பிலுமே அடாவடித்தனமாக நிகழ்த்தப்பட்ட கொலைகளுக்கும் கைதுகளுக்கும் பாலியல்சித்திரவதைகளுக்கும் யார் பொறுப்பு? ஆயுதம்-அதிகாரங்களின் சுவடுகளை- அதன் கொடுமைகளை எதிர்காலசந்ததிக்கு அறிவிப்பதில் ஒரு முக்கிய பொறுப்பு சமூகநலனில் அக்கறை கொண்டவர்களுக்கு உண்டு.
ரஞ்சித்துடைய நாவல் ஈழத்தின் தற்போதய நிலைப்பாட்டை புரிந்துகொள்வதற்கு ஒரு புரிதலை தருகிறது.
சுவிசின் சிலமாநிலங்களிலேயும் ஜெர்மன் ஆசுரேலிய்நாடுகளிலே வளரும் இளைஞருக்கு அவர்களுடைய தாய்மொழியான ஜெர்மன் மொழியில் ;(இந்தமொழியில்தான் அவர்களால் சிந்திக்கிறார்கள் என்பது தெரிந்தவிடயமே)வாசிக்க வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறதன் மூலம் இவர்களுக்கு பெரியவர்கள் தெரியப்படுத்தும் அவர்களது தாய்நாட்டுஅரசியல்-சமூகபார்வைகளை பிறிதொரு கோணத்தில் பார்ப்பதற்கு வழிசமைத்திருக்கிறது. இங்குவாழும் இளம் சந்ததி இந்நாவல்பற்றி தங்கள் கருத்துபரிமாறலை செய்வது ஆரோக்கியமானது. பாடசாலைகளில்- கருத்தரங்குகளில் இப்புத்தகம் பற்றிய விமர்சனம் மேற்கொள்ளப்படவேண்டும். இவர்கள் உலகில் சந்திக்கும்- சந்திக்கப்போகும் இனத்துவேசரீதியான நடைமுறைகளை எவ்வாறு கையாளலாம் என்கிற சிந்தனைக்கும்- செயல்பாட்டுக்கும் வழிஏற்படுத்தலாம். தவிரவும் வாழும்நாட்டின் மொழிப்யிற்சி இல்லாத பெற்றோரிகளிடத்தும் கலந்துரையாடலும்-விழிப்புணர்வு நிகழ்வுகளும்கூட ஒழுங்குசெய்யலாம். புகலிடங்களில் நடாத்தப்படும் தமிழ்பாடசாலைகள் மூலம் இவ்வாறான நிகழ்வுகள் நடாத்துவதற்கு வாய்ப்புண்டு.
இந்நாவலின் கதாநாயகன் வடகிழக்கை தாயகமாக கொண்டு வாழந்தபோது இவனிடம் இருந்த இனஉணர்வு தலைநகரில் வாழநேர்கையில் அவனுக்கு கிடைக்கும் நட்புகளால்- பெரும் உதவிகளால் அவன் தலையில் திணிக்கப்பட்டிருந்த கருத்துக்களுக்கு எதிராக நடைமுறை இருப்பது புலனாவது மட்டுமல்ல. இனத்துவேசம் பரப்பப்படும் அரசியல் ஆதாயங்களின் நச்சுக்கொள்கையை வெளிச்சமாக்குகிறது. மனிதநேயம் இனம்-மொழி-சாதி என்பவைகளை கடந்து நிற்பது. நாதனை இலங்கையிலிருந்து தப்பிக்கவைப்பதற்காக சிங்களநண்பர்கள் செய்யும் செயற்கரிய உதவிகள் செய்கின்றனர். தம்முடைய உயிரையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் நாதனை தப்பிக்க வைக்கின்றனர். காலம்காலமாய் இவ்விரு இனங்களும் ஒற்றுமையோடு வாழ்ந்ததும்-இன்னும் வாழுவதும் நாவலில் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளாதார கேந்திர நிலையமாக தலைநகர் இயங்குவதால் பல்லினமக்களும் ஒன்றுகூடும்- பழகும் வாய்ப்பினை அது பெற்றுத்தருகிறது. பெருநகரங்களில் வாழ்வோர் எல்லாவர்க்கத்திலும்- பல்கலப்பினமக்களோடும் நெருக்கமாய் வாழ்வதை பார்க்கலாம். ஒருஇனத்தோடு இன்னொருஇனம் சேர்ந்து வாழவோ பழகவோ வாய்ப்பில்லாததையும்-இன-மத-சாதிவெறியையும் இத்தோடு கலந்து பயன்படுத்தி-அரசியல்ஆதாயம் பெறுவதற்காக எதிரியாக மற்றவனை கொல்வதற்கான சாணக்கியங்களை இனவெறிஅரசுகள் மேற்கொள்ளும் தந்திரங்களை உலகம்பூராக உதாரணங்களாக காட்டலாம்.
இனக்கலவரம் என்ற நச்சுஅரசியல்கொள்கையால் மக்கள் தூண்டிவிடப்படுகின்றனர். இனவெறி மனிதனிடத்து பரம்பரைபரம்பரையாய் ஊட்டபட்டிருக்கும் ஒரு விசம் என்றே புரியப்படவேண்டும். தாயகத்திலே 55.னதும் 83னதும் கலவரங்களின்போதான அட்டூழியங்கள் இந்த விசத்தினால் கக்கப்பட்டவை.
மனிதஉரிமை என்பதை அடிப்படையான சட்டமாக உருவாக்கிவைத்திருக்கும் ஜெர்மன் நாட்டிலே இனத்துவேசம் தொடர்ந்து வளர்க்கப்படுகிறது என்பதற்கு போதிய சாட்சியங்கள் உண்டு. நீறுபூத்த நெருப்பாய் இவ்வரசு கொண்டிருக்கும் நிலைப்பாட்டை 90களில் இங்கு அரசியல் அகதியாய் வாழநேர்ந்திருக்கும் நாதனுக்கு இழைக்கப்படும் அநீதியான செயல்பாடுகளில் இருந்து வெளிச்சமாக்கப்படுகிறது. நிறத்தில்- மொழியில்- இனபாகுபாட்டில் வேறுபட்ட அனைவருக்குமே; இந்நாடு கொண்டிருக்கும் சூழ்ச்சியான அரசியலை புரிந்துகொள்ளமுடிகிறது. மேலும் இக்காலகட்டத்தில் அகதிமுகாம் தீ வைக்கப்பட்டது- அகதிகள் உயிர்தப்பமுயன்றபோது சொந்தநாட்டின் இனவெறியின் குரூரமுகம் வேடிக்கை பார்த்தது- இத்தீவைப்பை கைகொட்டி சிரித்து வரவேற்றது ஆகியவை செய்திகளில் இடம்பெற்றன. இவ்வுண்மைநிகழ்வுகளை மீண்டும் வாசிக்கும்போது இனவெறி தன் முகத்தை வேறொருகோணத்தில் வெளிப்படுத்துவதை கவனிக்கமுடிகின்றது. ஈழத்திலே 83களில் நடைபெற்ற இனக்கலவரத்தையும் யூதர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு- இரவுக்கொடுமைகளையும் இவைகள் நினைவுபடுத்துகின்றன.
பொதுவாகவே வளர்ந்த நாடுகளிடம் தம்மிடம் அகதியாய் வந்துசேரும் அகதிகளைப்பற்றி வஞ்சனையான கருத்துக்கள் உள்ளன.அரசியல் அகதி அல்ல.பொருளாதாரஅகதி,எங்கள் வேலைவாய்ப்பு பறிபோகிறது,எங்கள் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது, எங்கள் கலாச்சாரம் அழிந்துபோகிறது,, என இனவாதமொழி கூப்பாடு போடுகிறது. இனவாத அரசியல்பின்னணி பற்றிய கேள்வி எழுப்பப்படவேண்டும். என்ற சிந்தனைகளை, இதற்கெதிரான போராட்டங்களை முன்னெடுக்கிற உள்ளூர்-வெளியூர் அமைப்புக்களின் முன்னெடுப்புக்களையும் நாவல் முன்வைக்க தவறவில்லை.
ரஞ்சித்தின் மொழியில் சம்பவங்கள் நேர்மையோடு பேசப்பட்டுள்ளன.
வாழ்ந்த நிலத்தைவிட்டு வெளியேறும் நிர்ப்பந்தமே கொடூரமானது. அதுவும் தாய்நாட்டிலிருந்து உயிர் தப்புவதற்காக வெளிநாடொன்றுக்கு எப்பாடுபட்டாவது வந்துசேர (இந்தப்பாட்டை அனுபவித்தோருக்கு தெரியும!) என்னென்ன மனிதக்கொடுமைகள் வழிநெடுக காத்திருக்கின்றன என்பவைகளும் தப்பிக்கிறவரை மன-உடல்ரீதியாக அழிக்கிற ஆக்கினைகளும் அகதிகளை துரத்திக்கொண்டே இருப்பவை. ஈழஅரசியல் பெண் அகதிகளின் அகதிப்பயணத்தின்போதான பாலியல்வன்முறைகள் பெண்ணின் உயிரையே உறிஞ்சுபவன. நாதனின் மனைவி கமலாவும் மிகமோசமானபாலியல் வன்முறைக்குள்ளாகுகிறாள். இயக்கங்களின் அதிகாரபோட்டியின்போதும் இவள் உடல்மீதான வன்முறை ஆயதமாக்கபட்டுள்ளது. போரற்ற சூழ்நிலையிலும்கூட இவளும் இன்னும் ஆயிரமாயிரம் பெண்களும் தம்முடல்களை வன்முறைக்கு காவு கொடுத்திருப்பதை-இன்னும் கொடுப்பதை நாவல் தோல் உரித்துக்காட்டுகிறது. நாவல்பாத்திரங்களாக நம்முன்னே தோன்றியிருக்கும் இபபெண்களுக்கு மேல் நிகழ்த்தப்படும் பாலியல்கொடுமைகள் இதயத்தை வருத்துகின்றன.
ரஞ்சித்தின் இவ்ஆக்கம் மிக இலகுவான நடையில்-மொழியில்; உருவாக்ப்பட்டிருக்கிறது. ஜெர்மன் மொழியில் ஆரம்பவாசிப்புடையோராலும் இந்நூல் கவனம் பெறவேண்டும்.
நாவலாசிரியர் தன் ஆக்கத்தை தன்சொந்தமொழியிலும் அதேசமயம் தமிழிலும் வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. இது ஒரு பாரிய வேலை. சிலவேளை இப்பணி ஒரு மொழிபெயர்ப்புமாதிரி தோற்றம் கொள்ளக்கூடியதாக தெரியப்படலாம். பல்வேறு பரிமாணங்களுடைய இந்நாவல் புகலிட- அரசியல் -விவாதங்களுக்கு பலதிறப்பட்ட கருத்தாளர்களையும் ஈர்க்க முனைகிறது.
கதை சொல்லும்பாணி-வேடிக்கை உரையாடல்-சொந்த நாட்டுப்பண்புசார் ஒழுக்கம்- ஒரு ஆற்றங்கரையோடு நடந்துசெல்லல் போன்ற நிதானமான வேகம்- ஆகியவைகள் ஒரு ஆசிய எழுத்தாளக்குரிய தனித்தன்மையாக(முத்திரையாக) நாவலில் புரியப்பட்டுள்ளது.
தாய்நாட்டை துறந்து காற்றில் - வானத்தில் தத்தளித்து திரியும் காற்றாடி போல கடைசியில் எங்கோயோ விழுந்து வாழ நேர்ந்த அகதியின் வாழ்வுப்பயணம்-எதிர்கொள்ளும் அவலம்-அனுபவம் புகலிடத்திலும் (தாயகத்திலும்தான்!) பேசப்படவேண்டிய அவசியம் உண்டென்பதை மறுக்கமுடியுமா?.
நாவலிலே உண்மைகள் உருவம் பெற்றிருக்கின்றன என்பதுதான் உண்மை.
No comments:
Post a Comment