வாழும், வாழவிடும்
-வ.அழகலிங்கம்-
துனெசியாவில் தற்கொலை செய்த மாணவனான மோகமட் பவ்ஆசிசி இனிமேல் வறுமையும் இல்லை, வேலையில்லாத் திண்டாட்டமும் இல்லை' என்ற தனது மரணசாசனத்தை எழுதி வைத்துவிட்டே தற்கொலை செய்தார். படித்துவிட்டு வேலையில்லாமல் றோடுடோக அலைந்து திரியும் உலகம் முழுதுமுள்ள இளைஞர்களைத் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது இவ்வாசகம்.
2010.12. 17 ந்தேதி படித்த பட்டதாரியான 26 வயதேயான மொகமட் பவ்ஆசிசி பலநூறு தடவை வேலைகளுக்கு மனுப்போட்டுக் கிடைக்காததால் ஈற்றில் தெரு ஓரத்தில் காய்கறி பழங்கள்விற்று அதால் கிடைக்கும் சிறு வருவாயால் உயிர் தப்பிப் பிழைத்துக்கொண்டிருந்தார். பொலீஸ் அவர் சரியான அனுமதிப் பத்திரம் பெறமால் தெருவியாபாரம் செய்தார் என்ற பேரில் அவரது அற்ப தளபாடங்களையும் அவரது காய்கறி பழங்களையும் பறித்துவிட்டது. இந்தக் கொடுமையைத் தாங்காத அந்த இளைஞன் உள்துறை அமைச்சின் காரியாலயத்திற்கு முன்னால் தனக்குமேல் பெற்றோல் ஊற்றிக் கொழுத்தித் தற்கொலை செய்து கொண்டான். உலகிலுள்ள லட்சோப லட்சம் இளைஞர்கள், இந்த நிலமையானது தங்கள் எல்லோருக்கும் உள்ள பரிதாப நிலமை என்றே உணருகின்றனர்.
துனெசியாவில் 17 வீதம் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. வேலையில்லாத படித்த பட்டதாரிகள் மட்டும் 200000 பேர் ஆகும். புதுமை என்னவெனில் இன்றய துனேசிய எழுச்சியில் இஸ்லாம்வாதம் முன்னணிக்கு வரவில்லை.
'சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்
வேலையற்றதுகளின் சிந்தையிலே விபாரீத எண்ணங்கள். இது தான் காலக் குறி'
சி.என் அண்ணாத்துரையின் பிரபல்யமான அடுக்குமொழி இதுவாகும்.
மோகமட் பவ்ஆசிசியின் தற்கொலைச் சம்பவத்தை அடுத்து மடைஉடைத்த காட்டாற்று வெள்ளம்போல மாணவர்கள் றோட்டுக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யத் தலைப் பட்டனர். அவர்கள் போராடத் தயாராக இருப்பதிலும்பார்க்கச் சாவதற்குத் தயாராக இருந்தனர். இதுவே புரட்சியின் காலக் குறியாகும்.
துனேசியாவை விட்டோடிய ஜனாதபதி 23 வருடமாக ஆட்சியில் உள்ளார். கடைசியாக வந்த 1990 ஆம் ஆண்டுத் தேர்தலில் அவர் 90 வீதப் பெரும்பான்மையால் வென்றார். 13 ஜனவரியில் அவர் தொலைக்காட்சியில் உரையாற்றும்போது பொலீஸ் ஒடுக்குமுறைக்காக மன்னிப்புக் கேட்டதோடு மக்களின் வேதனைகளைத் தான் செவிமடுத்ததாகவும் தான் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு தேர்தலி;ல் நிற்கப்போவதில்லை என்றும் கெஞ்சினார்.
சர்வாதிகாரியை அகற்றுவது போல சர்வாதிகார ஆட்சியதிகாரத்தை உற்பத்தி செய்யும் முதலாளித்துவ அமைப்புமுறையை அகற்றுவது இலகுவானதல்ல. அதற்கு மிக அரசியல் உணர்மையுள்ள சமுதாயம் ஒன்று உருவாக வேண்டும். புரட்சி ஒன்றன் குழப்பம், நிலநடுக்கத்தைப் போன்றோ, பெரு வெள்ளப் பெருக்கைப் போன்றோ, சுனாமியைப் போன்றோ இருந்தாலும் அதையடுத்து புதிய ஒழுங்குமறையொன்று உடனடியாக உருவாகத் தொடங்கும். மக்களும் கருத்துக்களும் இயற்கையாகவே தம்மைப் புதிய செல்வழியில் செலுத்திக் கொள்வர். பாட்டாளி வர்க்கம் எதிரியை மிதித்துத் துவைத்துத் தூளாக்கித் தூர எறிய ஓர் இறுக்கமான ஸ்தாபனமும் இரக்கமற்ற முயற்சியும் தேவை என்பதைக் கண்டறிவதற்கு முன்னர் பிற்போக்குவாதிகள் ஆழம்வர்க்கத்தின் மற்றொரு கன்னையை அல்லது கட்சியை ஆட்சியில் அமர்த்திவிடுவர். ரூசிய ஒக்டோபர் புரட்சி ஒன்று விதிவிலக்காக இதுவே மீண்டும் மீண்டும் நடந்தேறிய வரலாறாகும்.
துனெசியவின் நோய் முழு மத்திய கிழக்கிலும் தொற்றுகிறது. இதுவே இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஸ்சவுக்கும் ஓர் எச்சரிக்கையாகும். அவர் அண்மையில்தான் 18 வது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து தான் காலம் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கக் கனவு கண்டார். ராஜபக்ஸ்சவின் ஆட்சியை ஏதோ அசைக்க முடியாத பலமான ஆட்சி என்று புழுகுகின்ற ஒரு தமிழர் கூட்டத்திற்கு துனெசியாவின் நிகழ்ச்சியை ஞாபகப் படுத்துகின்றோம்.
உலகத்திலே இப்படிப் பல பலமான ஆட்சிகளை மக்கள் வெள்ளம் துடைத்தெறிந்துள்ளது.
1905 இல் ரூசியாவின் சாருக்கு கிறீஸ்தவப்பாதிரி கோபன் என்றவரின் தலைமையில் ஒரு மகயரை மக்கள் கொண்டு சென்றார்கள். ஊர்வலத்தில் சென்றவர்கள் பைபிள் நூல்களையும் போகும்பொது கிறீஸ்தவ கீதங்களையும்தான் பாடிக் கொண்டு சென்றனர். சாரின் அருண்மனைக்கு முன்னால் போலீஸ் மக்களைச் சுடவே முதலாவது றைஸ்சியப் புரட்சி வெடித்தது. ஊர்வலத்தைத் தயாரிக்கும்போது பாதிரியார் கோபன் சொன்னார், சார் நல்ல மனிதர். உங்களது துன்பங்களை அரச அதிகாரிகள் சாருக்குச் சொல்வதில்லை. ஆதலால் சார் மன்னனுக்கு அது தெரியாமல் இருக்கிறது. தான் போய் நேரில் மன்னனைப்பார்த்து உங்களது துன்பங்களை எழுதிய இந்த மகயரைக் கையளிக்கிறேன் எனறு சொல்லியே ஊர்வலம் தொடங்கப் பட்டது.
1953 இல் ட்டலி சேனனாயக்காவின் ஆட்சி பலமான ஆட்சியாக இருந்தது.
1952 தேர்தலில் யூ.என். பி மிகப்பெரும்பான்மையால் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பாராளுமன்றப் பெரும்பான்மை அரசியல் அமைப்புச்சட்டத்தையே மாற்றக் கூடிதாக இருந்தது. ஆனால் தேர்தலிலே நாட்டின் பொருளாதார நிலமையை மறைத்துத் தன்னால் நிறைவேற்ற முடியாத பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது யூ.என்.பி. அன்றய இலங்கைமக்கள் பொய்களைச் சகிக்காத கலாச்சார மேன்மை உடையவர்களாக இருந்தார்கள். தேர்தலிலே தமது ஆட்சிக்காலம் முழுவதும் அரிசி விலையை 25 சதமாக வைத்திருப்பதாக உறுதி கூறியது.
ஆட்சிக்கு வந்ததும் அரிசி விலை 72 சதமாகவும் சீனியின் விலை 15 சதத்தாலும் கூட்டப்பட்து. 1953 ஆகஸ்ட் 12 இல் சமசமாஜக்கட்சி இந்த நடவடிக்கையை எதிர்க்க கர்த்தாலுக்கு அறை கூவியது.
கர்த்தாலிலே முதலாளி வர்க்கத்தைத் தவிர எல்லா வர்க்கங்களும் பங்குபற்றின. எல்லாத் தேசிய இனங்களும் பங்கு பற்றின. எல்லா மதங்களும் பங்கு பற்றின. எல்லாச் சாதிகளும் பங்கு பற்றின. எல்லா மனிதசமுதாய ஓடைகளும் சிற்றாறுகளும் வர்க்கப்போராட்டம் என்ற பேராறாக நீக்மறக் கலந்து ஏகவினப் பெருக்காகப் பெருக்கெடுத்து டட்லி சேனனாயக்காவையும் அவரது மந்திரி சபையையும் வாரிக் கொண்டுபோய் கொழும்புத் துறைமுகத்தில் தயார் நிலையில் நங்கூரமிட்டிருந்த பிரித்தானியக் கடற்படைக் கப்பலினுள் போட்டது.
அவர்கள் அவசரகாலச் சட்டப் பிரகடனத்தையும் நாட்டின் எல்லாச் சட்டங்களையும் துச்சமாகத் தூறு செய்தனர். வரலாற்றில் ஒரேயொரு தடவை அதில் யாழ்ப்பாணமும் பங்கு கொண்டது. மந்திரி சபைக் கூட்டம் கப்பலிலேயே நடைபெற்றது. இன்று பென் அலி துனேசியாவை விட்டுப் பறந்தது போல அன்று திடீரென்று பறப்பதற்கு விமான வசதி இருக்கவில்லை. துர் அதிஷ்டம் அன்று சமசமாயக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் முன்னோக்கு அற்று இருந்தது. வர்க்கமும் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் முன்னேறி இருந்த மட்டத்திற்கு சமசமாஜக் கட்சி முன்னேறி இருக்கவில்லை. புரட்சிக்குத் தலைமைதாங்கும் தகுதியையும் அது அதனோடு இழந்துவிட்டது.
பென் அலியின் விமானத்தை அவரின் எஜமான நாடான பிரான்சில் தரை இறங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதுதான் வெகு சீக்கிரத்தில் ராஜபக்ஸ்சவுக்கும் நடக்க இருக்கிறது. 1953 போல அல்ல. 1917 ஒக்டோபர் போல.
1968 மே 10 இல் அன்றய பிரெஞ்சு ஜனாதிபதி மாணவர் போராட்டத்தின் மடைதிறந்த காட்டாற்றுக்குப் பயந்து பறந்தோடி ஜேர்மனியில்; அன்று நிலைகொண்டிருந்த பிரெஞ்சுப் படைத்தளத்தில் ஒழித்துக் கொண்டார்.
1979 டிசெம்பரில் ஈரானின் பல்லவி ஷ நாட்டைவிட்டு ஓடினார். அவரை அவரது எஜமான நாடான அமெரிக்கா அனுமதிக்க மறுத்தது.
1986 இல் பிலிப்பைன் ஜனாதிபதியாக இருந்த பேர்டினன் மார்க்கஸ் நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டார். அவரும் சர்வாதிகாரியாக ஊழல் நிறைந்து மனித உரிமைகளை மீறுபவராக இருந்தார். ஈற்றிலே நாட்டிலே இருக்க முடியாமல் ஹவாய்தீவில் தஞ்சம் புகுந்து கொண்டார். அவரதும் அவரது மனைவியின்பேரிலும் பில்லியன் கணக்கான டொலர் நாட்டுச் செல்வங்கள் சூறையாடப்பட்டு அமெரிக்காவிலும் சுவிற்சலாந்திலும் மற்றும் 20 நாடுகளிலும் இருந்தது பின்னாளில் அம்பலமானது.
இதுவே வெகு சிக்கிரத்தில் மிகப்பலசாலி ராஜபக்ஸ்சவுக்கும் நடக்க இருக்கிறது. ராஜபக்ஸ்சவையும் அவரது குடும்பப் பரிகலங்களையும் ஏற்றிக் கொண்டுபோக இலங்கையிலுள்ள விமானங்கள் காணுமோ தெரியாது. அவர் இன்று ஆசியாவின் முதலாவது பணக்காரராகிவிட்டார் என்று பலரவலாக இலங்கை மக்கள் கதைக்கிறார்கள். அவரது ஊழலின் கணக்கு வழக்குகழும் எதிர்காலத்தில் வராமல் போகாது. பிரபாகரனுக்ககு அமைந்தது பொலவே ராஜபக்ஸ்சவுக்கும் உடன் பிறந்த பகையாளியாகத் தன்னைப் பற்றி மிகைப்படுத்திக் கொள்ளும் கர்வம் இருக்கிறது. அழிவின் தேவதூதன் மேட்டுமையாகும். ராஜபக்ஸ்சவின் தன் மூப்பாட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. மக்களின் கருத்தாணையையும் அவர் சட்டைசெய்வதில்லை.
பென்னலி விழுவதற்குச் சிலநாட்கள் முன்னரே அமெரிக்கா துனேசியாவுக்கு 12 மில்லியன் டொலர்களை இராணுவ உதவியாக வழங்கி இருந்தது. அது உள் நாட்டு யுத்தத்தை முடுக்குவதற்காகும்.
துனேசிய சம்பவம் காட்டுத் தீயாக உலகம் முழுவதும் தொற்ற இருக்கிறது. அரபுத் தேசங்களில் ஆட்சிக்கு வாற சர்வாதிகாரிகள் ஒரு நாளும் தாங்களாக விலகுவதில்லை. விலகுவதற்கு அவர்களது ஏகாதிபத்திய எஜமானர்களும் அனுமதிப்பதில்லை. துனேசியாவின் பக்கத்து நாட்டு அல்ஜீறியாவில் வியாதி ஏற்கனவே தொற்றிவிட்டது. அங்கே வேலையில்லாத்திட்டத்திற்கு எதிராகவும் உணவு விலையேற்றத்திற்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்துவிட்டன. அங்கே 5 பேர் கொல்லப் பட்டுள்ளார்கள். சீனிவிலையும் சமையல் எண்ணெய் விலையும் திடீரெனக் குறைக்கப் பட்டுள்ளது.
எகிப்திலே 'பென்னலியெ சொல்லு முபாரக்குக்காகவும் விமானம் ஒன்று காத்திருக்கிறதென்று.
துனேசிய எழுச்சியானது உலக அரசியலின் திருப்பு முனையாகும். 2008 ஆகஸ்ட் வங்கி நெருக்கடி தோற்றுவித்த அதிர்ச்சியின் முதலாவது எதிரொலியாகும். இந்த அதிர்ச்சியானது பூகோளம் முழுவதையும் அதிர வைத்தது. பூகோளம் முழுவதுமே நெருக்கடிகள் ஏற்பட்டன. பூகோளம் முழுவதுமே வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது. பூகோளம் முழுவதுமே நிதிமந்திரி கடன் சுமையைப் பெருக்கினார்கள். ஏல்லாமே வோல்ஸ்றீற என்ற ஒரு நிதிநிறுவத்தால் ஏற்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் சூறாவளியாகப் பரவியது. பூகோளம் முழுவதுமே நிதிச் சூதாட்டங்கள் நிகழ்ந்தன.
அண்மையில் ஊலகச் சந்தையில் உணவு விலையோ உயர்ந்தது. சோழத்தின் விலை 60 வீதத்தால் உயர்ந்தது. சோயாவின் விலை 45 வீதத்தால் உயர்ந்தது. எண்ணையினதும் சீனியினதும் விலை அரிசிவிலை என்று கட்டுக் கடங்காமல் உயர்ந்தன. மனிதர்களின் உழைப்பின் 60 தொடக்கம் 70 வீதமானது உணவுப்பொருட்களை வாங்கச் செலவாகிறது. இந்தியா சீனா முழு ஆபிரிக்காவும் இந்தோனெசியா என்று பலநூறு மில்லியன் மக்கள் வரலாறு கண்டு கேட்டிராத வறுமையில் வாடுகிறார்கள். இலங்கையில் இது சொல்லும் தரமன்று. அதன் மத்தியில் இயற்கை அனர்த்தம். ராஜபக்ஸ்சவின் கொண்டாட்டத்திற்கோ குறைவில்லை.
இந்த சர்வவியாபக நெருக்கடியை எப்படித்தீர்ப்பதென்று எவருக்கும் தெரியாத போதும் பிஸ்னெஸ் ஆஸ் யூசுவல் (Buissiness as usual) என்றே முதலாளித்துவ உலகம் மக்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதன் விளைவாக 2010 இல் மட்டும் அமெரிக்காவில் 157 வங்கிகள் வங்குறோட்டு அடைந்துள்ளது என்று அமெரிக்கசேமிப்பக் காப்பீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. சராசரி மாதத்திற்குப் 13 வங்கிகள் வீதம் மூடப் பட்டுள்ளன. நிதி நெருக்கடிக்குப் பிறகு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்ததே இதற்குக் காரணம் என்று அந்தச் செய்தி கூறியுள்ளது.
இந்தியாவிலே ஜி2 ஸ்பெக்றம் 8 பிலியன் அமெரிக்க டொலர் ஊழலையடுத்து பாராளுமன்றம் மூன்றுமாதத்திற்கு மேலாகக் கூட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஊழலை விசாரிக்க ஒரு பாராளுமன்றக் கொமிசனை ஏறபடுத்தும்படி கேட்டதை மன்மோகன் அரசாங்கம் மறுத்து வருகிறது.
இலங்கையில் 34 வருடம் அவசரகாலச் சட்டத்தின் கீழும் பயங்கரவாதத் தடைச் சட்டத்த்தின் கீழும் ஆட்சி நிலவுகிறது. துரையப்பா கொலையையடுத்து 1979 இல் பண்ணைப்பாலத்தின் கீழ் இன்பம் விசுவசோதிரத்தினம் என்ற இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடக்கம் இன்று வரைக்கும் இரண்டு லட்சம் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் சட்டவிரோதமாகக் கொல்லப்பட்ட போதும் இன்றுவரை கொலைஞர் ஒருவராவது சட்டத்தின் முன் நிறுத்தப் படவில்லை. இதுதான் இன்றய இலங்கையின் ஜனனாயகம். தமிழ் அரசியற் கட்சிகளோ தேர்தற் கும்மாளத்தில் குதூகலிக்கின்றன.
எந்த மேற்கத்தைய, தம்மை ஜனனாயக நாடென்று சொல்லி மார் தட்டுகின்ற நாடோ அன்றேல் ஐக்கிய நாடுகள் சபையோ இந்தியாவோ இலங்கையின் அவசரகாலச் சட்டத்தை எடுக்கும்படி கோரியது கிடையது. அண்மையில் அமெரிக்க ராஜதந்திரி ஒருவர் பட்டும் படாததுமான ஒரு கருத்தைத் தெரிவித்து ஓய்ந்து விட்டார். மேற்கு நாடுகளின் நேரடி முதலீடுகளுக்கும் எல்லைகள் அற்ற சுறண்டலுக்கும் இலங்கையில் முடிவில்லாத காலத்திற்கு அவசரகாலச் சட்டம் நிலவ வேண்டும். நித்திய நிரந்தர கொலை நிகழ்வுகளும் நீடிக்க வேண்டும்
பூகோளமயமாக்கல் என்ற நிகழ்வுப்போக்கானது உற்பத்தி வளர்ச்சியையும் வாழ்க்கைத்தர உயர்ச்சியையும் மாத்திரம் தந்ததல்ல. அது கட்டுக்கடங்காத முட்டிமோதல்களையும் பொருளாதார அரசியல் ராஜதந்திர நெருக்கடிகளையும் தந்துள்ளது.
பாராழுமன்ற ஜனனாயகமானது தவிர்க்கமுடியாதபடிக்கு சுதந்திரமான போட்டி என்ற பாதுகாப்பு அரணாலும் சுதந்திரமான சர்வதேச வர்த்தகம் என்ற பாதுகாக்கப்பு அரணாலும் பாதுகாக்கப் படுவதாகும். இது தங்குதடையின்றி நடைபெறும் காலங்களில் முதலாளித்துவமானது வேலைநிறுத்தம் பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் கூட்டம் கூடும் சுதந்திரம் போன்றவற்றைச் சகிக்கும். உற்பத்திச் சக்திகள்மேலும் வளரக்கூடிய சூழலும் விற்பனைச் சந்தையானது தொடர்ந்து வளர்ந்தும் கொண்டு போனால் மாத்திரம்தான் முதலாளித்துவ தேசங்கள் வெகுசனங்களின் கல்வி, வைத்தியசேவை, ஓய்வுசூதியம் ஊனமுற்றோர்உதவி போன்ற சமூகசேவைகளைப் பாதி அழவுக்காவது அனுமதிக்கும். அப்பொழுது முதலாளித்துவம் தானும் வாழும். மக்களையும் வாழவிடும். இப்பொழுதோ இந்த நிலமைகள் முற்றாக மாறி விட்டன.
துனேசியாவில் ஒரு இளைஞன் தன்னை எரித்ததைத் தொடர்ந்து நாட்டின் ஜனாதிபதியோ விட்டோடும் சூழல் ஏற்பட்டுவிட்டது. அவனது சுலோகத்திலே மற்றய சக மனிதன் எவனுக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. எத்தனை புலிகள் எரிந்தார்கள். வெடித்துச் சிதறினார்கள். ராஜபக்ஸ்ச இன்னும் நாட்டைவிட்டு ஓடவில்லை. காரணம் துனேசிய இளைஞன் எரியும்பொழுது அவன் எழுதிவிட்டுப்போன சுலோகம் 'இனிமேல் வறுமையும் இல்லை. வேலையில்லாத் திண்டாட்டமும் இல்லை.' இதையடுத்து வேலயற்றவர்களும் வறுமையில் வாடுபவர்கள் நாம் எல்லோரும் ஒருமித்துத் தற்கொலை செய்வதா? என்ற கேள்வியை எழுப்பி ஈமெயில் மூலமும், இண்டர் நெற்மூலமும் சர்தேச வலத்தளங்கள் மூலமும், பேஸ் புக் மூலமும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். கட்சியும் இல்லை. இயக்கங்களும் இல்லை. ஆயுதமும் இல்லை. எல்லோரையும் பாதிக்கும் சமூகப் பிரச்சனையை மையமாகவைத்து அறைகூவல் விடுத்தார்கள. நாமோ, நமது தமிழர்களது சுலோகமோ, 'தமிழரது தாகம் தமீழத் தாயகம் இன்றுவரை இலங்கை அரசு ஒரு மில்லிமீட்டரால் கூட அசையவில்லை. இலங்கையில் மொத்த சமூகங்களின் தலையாய உடனடி வாழ்க்கைப் பிரச்சனைகளை மையமாக வைத்துப் போராடும் காலம் அதாவது மீண்டும் 1953 கர்த்தால் போன்ற கர்த்தாலை அறைகூவுவதற்கான அத்தனை புறநிலைச் சூழல்களும் கணனிபோன்ற தொழில் நுட்பமும் தயாராகவே உள்ளது. அந்தக் கட்டுப்படுத்த முடியாத வெகுசனக் காட்டத்தீயைப் பற்றவைப்பதற்கு ஒரு பொறி தேவைப் படுகிறது.
வாழு!வாழவிடு!!
2011.01.18
No comments:
Post a Comment