Sunday, January 16, 2011

மாட்டுப்பொங்கல் நினைவாக 
-ஜீவமுரளி -


தடைசெய்தல், நிராகரித்தல் என்ற உளவியல் மூலங்களை கண்டடைதல்



எல்லாவற்றையும் நிராகரித்தல் என்ற அரசியல் உளவியலின் மூலங்களும், எல்லாவற்றையுமே தடைசெய்தல் என்ற அரசியலின் மூலகங்களும், எங்கிருந்து தொடங்குகின்றன என்ற கேள்விகள் என்னை பாடாய் படுத்திக்கொண்டிருக்கின்றன.

கண்ணை மூடினால் போதும் மாடுகள் மட்டும்தான் என் கனவில் அடிக்கடி வந்து போகின்றன. அவைகள் ம்ம்மா என்று மட்டுமே தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. ம்ம்மா என்று மட்டுமே கதறுகின்றன. ம்ம்மா என்றுமட்டுமே தங்கள் பசியை வெளிப்படுத்துகின்றன. ம்ம்மா என்ற மாடுகளின் மொழி இனிமையாகவும் வாஞ்சையாகவும் முன்னொருகாலத்தில் என் காதுகளில் ஒலித்தன. இப்பொழுதெல்லாம் கனவுகளில் வந்துபோகும் மாடுகளின் "ம்ம்மா" என்ற மொழி குரூரமாகவும், ஈனமாகவும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. என் பொருங்குடலையும், சிறுகுடலையும் வாயால் வாந்தி எடுப்பது போல் உணர்கிறேன்.

மாடு ஒரு சாதுவான பிராணி
மாடு ஒரு தாவர பட்சணி
மாட்டிற்கு நான்கு கால்கள் உண்டு
ஒரு வால் உண்டு
இரண்டு காதுகள் உண்டு
மாடு புல் தின்னும்
மாடு அசை போடும்
மாடு குட்டி ஈனும்
மாடு பால் தரும்
மாடு அம்மா என்று கத்தும்
என முதலாம் வகுப்பிலிருந்து ஆசியர் சொல்லித்தரவும் அதையே மனப்பாடம் செய்து முதலாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை கட்டுரையாக எழுதி சித்தியடையும் பாடசாலைக் கலாச்சாரத்தை தமிழர்கள் கொண்டிருநதனர். ஆறாவது வகுப்பில் புலிகள் எங்களுக்கு ஆசிரியர்களாயினர். அதன்பின்பு புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது எனவும் சிங்கம் பதுங்கி நின்று பாயும் எனவும் மனப்பாடம் செய்து பல்கலைக்கழகம் வரை கட்டுரைகள் எழுதி சித்தியடையும் பாய்க்கியத்தை தமிழர்கள் பெற்றனர். ஆனல் மனிதர்களின் வரலாற்றோட்டத்தில் புலி புல் தின்றது. சிங்கம் பதுங்காமல் பாய்தது. பழமொழிகள் ஏன் மனிதர்களிடம் தோற்று போகின்றன என யோசிக்கும் பொழுதெல்லாம் ம்ம்மா என்ற மாடுகளின் மொழி ஈனக்குரலாகவும் கடூரமாகவும் குரூரமாகவும் கலந்து ஒலிக்கின்றன.

ஒரு சனநாயக அரசியல்ச் சூழல் எப்படி இருக்க வேண்டும்? ஒரு மாற்றுக்கருத்தை, கருத்தை தெரிவிப்பதற்கான அல்லது எதிர் கொள்வதற்கான அரசியல் சூழல் எப்படி இருக்கவேண்டும்? ஒரு ஒற்றைத்தனிமனிதன் தனக்குத்தானே சுயதணிக்கை செய்து கொள்ளாமல் தும்மலும் கொட்டாவியும் விடுவதற்கான ஒரு சனநாயகச்சூழல் எப்படி இருக்க வேண்டும்? என்ற கனவும் ஏக்கமும் விருப்பமும் ஆசையும் ஒவ்வொரு தனிமனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கின்றன.

ஆடுகிற மாட்டை ஆடித்தான் கறக்க வேண்டும் பாடுகிறமாட்டை பாடித்தான் கறக்கவேண்டும் என்ற புகழ் பெற்ற தமிழ்ப்பழமொழி ஒன்று உண்டு. ஒரு மாட்டினுடைய சனநாயக உரிமைகள் குறித்தும் அடிப்படை வாழ்வுரிமை குறித்தும் முன்னொரு காலத்திலே தமிழ்பேசும் சமூகம் சிந்தித்தும் பேசியுமிருக்கிறது. இந்தப் பழமொழியை நான் மனதில் மீட்கும் பொழுதெல்லாம் தமிழ் பேசும் மக்களிடம் இவ்ளவு செளிப்பான சிந்தனைமுறையும் உறவுமுறைகளும் இருந்திருக்கின்றனவா? என ஆச்சரியமும் திகைப்பும் ஏற்படுகின்றன.

ஒருமாட்டினுடைய அடிப்படை வாழ்வுரிமையை மதித்த ஒரு சமூத்தினது, கன்றுக்குட்டி பால்குடித்த பின்தான் மாட்டிலிருந்து தன் தேவைக்காக பால் கறந்த ஒரு சமூகத்தினது மனித விழுமியங்கள் எப்படி காணமல்போய்விட்டது? யாரால் இல்லாது ஒழிக்கப்பட்டன? என்ற கேள்விகளை நாம் திரும்பத்திரும்ப கேட்பதன் மூலம் இல்லாதொழிக்கப் பட்டவையை மீட்டெடுக்கவும் காணாமல் போனவையை கண்டடைவதற்குமான வாய்ப்புக்களை ஒருக்கால் பெற்றுத்தரலாம் என்றே நம்புகிறேன்.

இலங்கையில் தமிழ் சிங்கள தேசியவாத அரசியலின் எழுச்சியின் பின்னால்தான் ஆடுகிறமாட்டை அடித்துக் கறக்கின்ற, பாடுகிற மாட்டை பயமுறுத்திக் கறக்கின்ற அரசியல்கலாச்சாரம் தொடங்குகிறது. மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான பாலை உதாசினப்படுத்திவிட்டு தமிழ்மொழி பேசுபவர்களுக்கு தமிழ்ப்பாலும் சிங்களவர்களுக்கு சிங்களப்பாலும் அருந்தக் கொடுக்கப்பட்டது. பாலுக்கு பிரதியீடாக தமிழும் சிங்களமும் இரு தேசியவாதிகளினால் பரிந்துரைக்கப்பட்டன. பாலுக்கு பாலகர்கள் அழுதிட பாற்கடலை புலிகளும் சிங்கங்களும் கடைந்து கொடுத்தன. பாலுக்குப் பதிலாக விசத்தைதான் இரு தேசியவாதிகளும் அருந்தக்கொடுத்தார்கள் என்பதை இன்றுள்ள இனமுரண்பாட்டு அரசியலின் தலைகீழ்வளர்ச்சி மிகத் தெளிவாக காட்டியிருக்கின்றது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை இலங்கையிலுள்ள சிறுபான்மை இன மக்கள் எல்லோரும் இன்று நன்றாகவே அனுபவித்து உணர்ந்திருக்கின்றார்கள்.

புலிகளுக்கான புதைகுழியை தமிழ்த் தேசியவாதிகள் எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்தே வெட்டிக் கொடுத்தார்கள். ஆடுகிறமாட்டை அடித்தும் பாடுகிறமாட்டை பயமுறுத்தியும் பால்கறந்த புலிகளை விசிலடித்தும் கைதட்டியும் காசும் கொடுத்த தமிழ் அரசியல் கலாச்சாரம் கடைசியில் பாலே குடிக்காத பலவீனமான அரசியற் குழந்தைகளை சர்வதேசமெங்கும் பிரசவித்திருக்கின்றது. ஆடுகிற மாட்டையோ பாடுகிற மாட்டையோ இவர்கள் தங்களின் வாழ்நாளில் பார்த்தே இருக்க மாட்டார்கள். ஆடுகின்ற பாடுகின்ற மாடுகள்பற்றிய பழமொழியின் அந்த அற்புதமான எல்லாச் சாத்தியங்களையும் புலிகளும் சிங்கங்களும் நஞ்சை உண்ட பாலகரை வைத்தே இலங்கையில் இல்லாதொழித்துவிட்டன.

இந்த வரலாற்று சூழலில்தான் கொழும்பில் சர்வதே தமிழர் மாகாநாடு நடந்து முடிந்திருக்கின்றது. சர்வதேசத்தமிழரை முதலில் குத்தகைக்கு எடுத்தவர் தமிழ்நாட்டை சேர்ந்த மு.கருணாநிதி என்பவர். அதற்குபோட்டியாக குத்தகை எடுத்தவர் வே பிரபாகரன். கருணாநிதி தனது பங்குக்கு தமிழ் உணர்வுமாடுகளை உருவாக்கினார். பிரபாகரன் தனது பங்கிற்கு தமிழ் வெறிமாடுகளை உருவாக்கினார். இதில் நகைச்சுவை என்னவென்றால் உலகத்தில் உள்ள எல்லா மாடுகளாலும் ஒரு பொதுவான மொழியே பேசப்படுகின்றது. அவை பாலைமட்டுமே மனிதர்களுக்கு கொடுக்கின்றன விதிவிலக்காக கருணாநிதியும் பிரபாகரனும் மட்டுமே தமிழ்மொழி பேசும் மாடுகளையும் தமிழுக்காக உயிரைக் கொடுக்கும் மாடுகளையும் உருவாக்கிக் காட்டினார்கள். இப்படி உருவாக்கப்பட்ட மாடுகளால்தான் ஆடுகிற மாடும் பாடுகிற மாடும் ஆடிபாப்பாடி பால் கறக்கின்ற சனநாயக விழுமியங்களும் அடியோடு இல்லாததொழிக்கப்பட்டன. ஆடுகிற மாட்டை ஆடிக்கறத்தல், பாடுகிறமாட்டை பாடிக்கறத்தல் என்பது தந்திரம் என்பதன் குறியீடாக கற்பிக்கப்பட்டது. ஆடுகிறமாட்டை அடித்துக் கறத்தல் பாடுகிறமாட்டை பயமுறுத்திக் கறத்தல் வீரத்தின் குறியீடாக கொள்ளப்பட்டது.

இந்தத் தமிழ் தலைமாடுகளால் உருவாக்கப்பட்ட தமிழ்க்குத்தகை உளவியல் நோய்தான் இன்றுள்ள சர்வதேசத்தழிழர்கள் ஒவ்வொருவரையும் பீடித்திக்கின்றது. இந்த நோயின் முதன்மையான அறிகுறி என்னவென்றால் எவற்றையுமே வரவேற்காது. ஒரு ஒற்றைத் தமிழனுக்கு இந்த நோய் ஏற்பட்டால் அது சர்வதேசத் தமிழர்களின் சிந்தனைகளை தடைசெய்யும் அல்லது நிராகரிக்கும்.

தமிழனெண்டு சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்ற வசனமும், புலிகளின் துப்பாக்கிகளும் முள்ளிவாய்காலில் தமிழ்போசும் மக்களுக்கெதிராக திரும்பிய பின்னர், கருணாநிதி தனது தமிழ்ப்பற்றையும், சர்வதேசத்தமிழ் குத்தகையையும் மறுஉறுதி செய்வதற்காக உலகத் தமிழர் மாநாட்டை கூட்டினார். உடனேயே சர்வதேசத் தமிழ்புலிகள் நிராகரித்தனர்.

நிராகரிப்பு அரசியல் தடைசெய்யும் அரசியல் என்பது புலிகளின் காலத்தில் அபரிமிதமாக வளர்ச்சியடைந்தது. ஒவ்வொரு தனிமனிதனின் சிந்தனைகளையும் அசைவுகளையும் நிராகரித்தது. அடிப்படை வாழ்வுரிமைகளான தொழில்செய்தல், கல்வி கற்றல், ஓட்டுப்போடுதல், கட்சி கட்டுதல், கூட்டம் போடுதல், மறுவார்த்தை பேசுதல் எல்லாவற்றைம் நிராகரித்தது. தடைசெய்தது.

ஒவ்வொரு தனிமனிதனின் அசைவியக்கத்தையும் புலிகள் கட்டுப்படுத்தினார்கள். அது தன்னை மையப்படுத்தியே உலகத்தை பார்த்தது.
சுயாதீன இயக்கங்களை சுயாதீனக்கூட்டத்தை எல்லாவற்றையுமே நிராகரித்தது.
இந்த நிராகரிப்பு தடை அரசியலில் புலிகள் கொடிகட்டிப்பறந்த காலங்களில் எதிர்ப்பரசியலும் எதிர்ப்பிலக்கியங்களும் மக்கள் மத்தியில் தோன்றத் தொடங்கிவிட்டன. இவ்வளவுகால எதிர்பிலக்கியத்தினது ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே கொழும்பில் நடந்த இன்னுமொரு சர்வதேச தமிழ்மாகாநாட்டை பார்க்கமுடிகிறது.

தமிழ்ப்பால் குடித்த பண்டிதர்களென்ன, தமிழ்பால் குடித்த புலிகளென்ன யார் நிராகரித்தாலும் தடைசெய்தாலும் மாநாட்டை நடத்திக் காட்டுவேன் என்ற எதிர்ப்பரசியலுக்கான முருகபூபதியின் அறைகூவல் ஒரு வரலாற்று பதிவு.
அதை ஒருவர் வரவேற்பது சர்வதேச தமிழ் குத்தகை நோய் பீடிக்காதவர் என பொருள்படும். முருக பூபதி மகிந்தவிடம் காசுவாங்கி மாநாட்டை நடத்தியிருந்தால் அதன் பலாபலன்களை எப்படி திரும்பப் பெற்றுக்கொள்வது என்பது மகிந்த அரசுக்கு நன்றாகவே தெரியும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். புலிகளுக்கு மகிந்த அரசு கொடுத்த கோடி ரூபாய்களை வட்டியும் முதலுமாகச் சேர்ந்து பெற்றுக்கொள்ளவில்லையா??

எதிர்காலத்தில் சிறூபன்மை மக்களை மீள உறவுகொள்ளவும், புரிந்து கொள்ளவும் ஒரு தொடக்கப் புள்ளியாக இந்த மாநாடு கொள்ளப்படவேண்டும் என்ற கோட்பாடு சாத்தியமாக்கப்பட வேண்டுமென்றால், இந்த தமிழ்ப்பற்றாளர்கள் முதலில் ஆறுமுகநாவலரையும், தமிழ்மொழி வெறியையும், சாதித்திமிரையும், திருநீற்றுப்பட்டையையும், கோமணத்தையும், கோமணத்தின் உள்ளே இருப்பதையும் தூக்கி குப்பைக்குள் போடவேண்டும். யாழ்மையவாத அரசில் சர்வதேசத் தமிழர்களையும் தமிழையும் குத்தகைக்கு எடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இலங்கையிலுள்ள சிறபான்மையினங்களை யாழ்மையவாதம் துருப்புச்சீட்டாக பாவித்து அரசியலாட்டம் போடாத வரைக்கும் தமிழ் தண்ணி ஊற்றாமல் தானக வளரும்.
என் கனவு கூட நீர்மேல் எழுதிய எழுத்துப்போல் தொடர்கிறது.
மாடு ஒரு சாதுவான பிராணி என்ற பழமொழி ஒருநாள் பொய்த்துப் போய்விட்டது என்ற கனவின் வருகைக்காகவும், அவை ஆடிப்பாடும் காலத்திற்காகவும் நான் காத்திருக்கிறேன்.

No comments: