Monday, January 24, 2011

பிரகித் எக்னலிய கொட

பிரகித் எக்னலிய கொட இலங்கை அரசால் 


கடத்தப்பட்டு இன்றுடன் ஒரு வருடமாகின்றது.



-உமா-  
ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியருமான, மனித உரிமைவாதியுமான பிரகித் எக்னலியகொட இலங்கை அரசால் கடத்தப்பட்டு இன்றுடன் (24.01.2011) ஒரு வருடமாகிறது.

இலங்கையில் கருத்துச்சுதந்திரம் மறுதலிக்கப்பட்டு, ஊடாகவியலாரினதும், மாற்றுக்கருத்தாளர்களினதும் வாழ்வு அச்சம் தருவதாகவுயுள்ளது. அரசின் மனிதவுரிமை மீறல்களிற்கு குரல்கோடுப்போருக்கு எதிரான தாக்குதல்கள் மும்முரப்படுத்தபட்ட சூழலில் சுதந்திரமாக கருத்து வெளியிடும் உரிமை மறுக்கப்பட்டுவருகின்றது. 2006 ஆண்டிலிருந்து 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல ஊடகவியலாளர்கள் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும், தாக்குதல்களிற்கு உள்ளாக்கப்பட்டுமுள்ளனர்.Sunday Leader   ஆசிரியர் லசந்த விஜேதுங்க கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகள் மறைந்துள்ளன.

ஊடகவியலாளரும், கேலிச்சித்திரகாரருமான, மனித உரிமைவாதியுமான பிரகித் எக்னலியகொட இலங்கை அரசால் கடத்தப்பட்டு இன்றுடன்(24.01.2011) ஒரு வருடமாகிறது. பிரகித் பல ஆண்டுகாலமாக தனது செயற்பாடுகள் மூலம் இலங்கையில் நிலவும் அரசபயங்கரவாதத்திற்கும், மனிதவுரிமை மீறல்களிற்கும் எதிராக குரல் கொடுத்து வந்தவர். இவரது மனைவி சந்தியாவிற்கும், அவரது இரண்டு மகன்மாருக்கும் இவர் பற்றிய எந்தத் தகவலும் இன்றுவரை கிடைக்கவில்லை. இவரது மனைவி சந்தியா, தனது கணவனைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் அதேசமயம்;, யுத்தத்தத்தினால் வன்னியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களினதும் உரிமைகளிற்காகவும்;, யுத்தத்தின் போது காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க அவர்களின் உறவுகளுடன் இணைந்து பல போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தியாவிற்கு . .

எங்கோ தொலைவில் கேட்கும்
துப்பாக்கிச் சன்னம்,
திடீரென்று ஒலிக்கும் தொலைபேசி
வாசலில் கேட்கும் வாகனச்சத்தம்,
அச்சம் தரும் நிகழ்வுகளாக . .
வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும்
எழுதப்படும் ஒவ்வொரு வரியும்
கீறப்படும் ஒவ்வொரு சித்திரமும்
மௌனிக்கப்படும்
துர்ப்பாக்கிய தேசத்தின்
புதல்வி நீ

உனது கனவுகள் நொருக்கப்பட்டு
உனது சிறு குருவிக்கூட்டின் அழகு சிதைந்தது.
துயரும், கண்ணீரும் கலந்த
வெறுமையும் உன்னை நெருக்க,
அப்பாவைப் பற்றிக் கேட்கும்
உன் குழந்தைகளிற்கு பதில்களைத் தேடும்
உன் பிரயத்தனங்கள்.

உனது கணவனைத் தேடியும்
உன்னைப் போன்ற தோழிகளின்
சுமையையும் சுமந்து
நீ எடுக்கும் எத்தனங்கள்,
சீற்றத்துடனும் நம்பிக்கையுடனும்
எழுந்து வரும் அலையென
அதிகாரப ;பாறையிற்;பட்டு
நிசப்தமாய் மீளவும் தொடர்கின்றன.


உனது உறுதியும்,
நம்பிக்கையும, கோபமும்
நீதித் தாயின் கண்கட்டைக்
கிழித்தெறிந்து
அசமத்துவ தராசுகளை
உடைத்தெறியும்.


அந்தப் பொழுதில்
உதிக்கும் சூரியனின் கதிர்களின் வெப்பம்
விழிநீர் பொசுக்கி
உனது முகத்தில்
புன்னகையின் சித்திரங்களைக் கீறிச் செல்லும்.

24 .11 .2011











No comments: