Thursday, January 06, 2011

தினக்குரல், வீரகேசரி செய்தி

சர்வதேசதமிழ்  எழுத்தாளர் மகாநாடு 

சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு கொழும்புத் தமிழ்ச் சங்க ‘தமிழ்த்தூது’ தனிநாயகம் அடிகளார் அரங்கில் இன்று வியாழக்கிழமை கோலாகலமாக ஆரம்பமானது.
வெளிநாடு மற்றும் உள்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பேராளர்களின் பதிவினைத் தொடர்ந்து காலி வீதியிலிருந்து தமிழர் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் விதமாக எழுத்தாளர்களின் ஊர்வலம் இடம்பெற்றது. பாடசாலை மாணவர்களின் கலாசார நடனங்களுடனும் பக்திப் பாடல்களுடனும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு என்ற வாசகம் பொருத்தப்பட்ட அலங்கார ஊர்தியுடன் ஒற்றுமையுடன் பேராளர்கள் திரண்டிருந்ததைக் காணுகையில் மனம் பூரிப்படைந்திருந்தது.

யுத்தத்தால் உயிரிழந்தோருக்கான அஞ்சலி மற்றும் மங்கல விளக்கேற்றலுடன் மேடை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. நிகழ்ச்சிகளுக்கு பேராசிரியர் சபா.ஜெயராசா தலைமை தாங்கினார்.

தமிழ்மொழி வாழ்த்து, மாநாட்டுக் கீதம், அபிநயஷேத்ரா நடனப்பள்ளி மாணவியரின் வரவேற்பு நடனம் ஆகியன ஆரம்ப நிகழ்ச்சிகளாக இடம்பெற்றன.

மாநாட்டின் இலங்கைக்கான இணைப்பாளர் டாக்டர் தி.ஞானசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

“உலகின் முதலாவது சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் ஆரம்ப விழாவில் நாம் எல்லோரும் இங்கு கூடியிருக்கிறோம். இந்த மாநாடு இந்த மண்ணிலே தான் முதன்முதலாக நடைபெற வேண்டும் என்பதற்குப் பலதரப்பட்ட காரணங்களும் கட்டாயங்களும் இருக்கின்றன.

தமிழ் இலக்கியம் பயில்கின்ற ஏனைய நாடுகளான இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளோடு ஒப்பிடுகையில் இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் கடந்த காலங்களில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

போரின் காரணமாக பல கலை இலக்கியவாதிகள் புலம்பெயர்ந்தார்கள். தாம் பிறந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட இவர்கள், தாம் பிறந்த மண்ணை, இரத்த உறவுகளை, தமது சமூகத்தை தேடிவைத்த செல்வங்களை, இன்னோரன்ன பலவற்றை விட்டுப்பிரிந்த ஏக்கத்தை இலக்கியங்களாக்கினர்.

இந்த இலக்கியங்கள் புலம்பெயர்ந்தோர் இலக்கியங்கள் எனப்பட்டன.

அதேவேளையில், போரின் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துக்கொண்டு உள்நாட்டில் வாழ்ந்த எழுத்தாளர்களும் புலம்பெயர்ந்து சென்ற எழுத்தாளர் சிலரும் போரின் அனர்த்தங்கள் பற்றி இலக்கியம் படைத்தனர். இவை போர்க்கால இலக்கியங்கள் எனப்பட்டன.

இவற்றையெல்லாம் வெளிக்கொணரக்கூடிய சந்தர்ப்பத்தை இந்தச் சர்வதேச எழுத்தாளர் மாநாடு வழங்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே இலங்கை மண்ணில் இந்தச் சர்வதேச மாநாடு முதன்முதலில் நடைபெறுகிறது.

இந்த மண்ணில் மூன்று தசாப்த காலம் போரின் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துக்கொண்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருந்த தமிழ்பேசும் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டவும், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தமது தொப்புள் கொடி உறவுகளோடு கலந்து பேசவும் உறவாடவும் உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் தமிழர்களோடு கலந்து பேசவும் கருத்துப் பரிமாற்றம் செய்யவும் தம்மைக் கட்டியெழுப்பவும், வீழ்ச்சியுற்ற மன நிலையிலிருந்து எழுச்சி பெறவும் ஓர் ஆரம்பமாக இந்தச் சர்வதேச எழுத்தாளர் மாநாடு அமையும் என எதிர்பார்க்கலாம்” என அவர் தனது வரவேற்புரையில் தெரிவித்தார்.

வரவேற்புரையைத் தொடர்ந்து மாநாட்டின் பிரதம அமைப்பாளர் லெ. முருகபூபதி தொடக்கவுரை நிகழ்த்தினார்.

“செய்திகளை எழுதியவர்களே செய்திகளாகிப்போன தேசத்தில் - மொழிக்காகவும் பூர்வீக வாழ்விட உரிமைக்காகவும் உயிரிழந்து, சொத்திழந்து - இடம்பெயர்ந்து – புலம்பெயர்ந்து ஏதிலிகளாகிய போதிலும் அமெரிக்கா,அவுஸ்திரேலியா, கனடா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும், தென்கிழக்கு ஆசியாவில் சில நாடுகளிலும் தமிழை ஒலிக்கச் செய்கின்ற எம்மவரின் அடுத்த சந்ததியின் நாவில் தமிழ் வாழுமா என்ற ஐயப்பாட்டுடன் சில ஆய்வாளர்கள் பாதகமாகச் சிந்திக்கும் தருணத்தில், பனிபெய்யும் தேசத்தில் பிறந்த தமிழ்க் குழந்தைகள் தமிழ் மெல்லத் துளிர்க்கும் என்று கவிதை எழுதி பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

கொடிய யுத்தத்திலிருந்தும் எண்ணிலடங்கா இன்னுயிரிழப்புக்களிலிருந்தும் மீண்டெழுந்து உயிர்ப்புடன் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம். இதுவரையில் பெற்றுக்கொண்ட அனுபவங்களிலிருந்து காத்திரமான உரையாடல்களை ஆரோக்கியமான திசைநோக்கி வளர்க்க வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்” எனக் குறிப்பிட்டார்.

எழுத்தாளர் முருகபூபதியின் உரையில் காணப்பட்ட தெளிவும் ஆணித்தரமான கருத்துக்களும் அவையினரை சிந்திக்க வைத்தது எனலாம். (தொடரும்…)

-இராமானுஜம் நிர்ஷன்
படங்கள் - ஜே.சுஜீவ குமார்



சர்வதேச தமிழ்ப் படைப்பாளிகளின் சங்கமம்

-தினக்குரல் செய்தி-

சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலான முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு இன்று காலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெகு கோலாகலமாக ஆரம்பமாகிறது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவொன்றை இலங்கையில் நடத்துவது தொடர்பிலான ஆலோசனையைப் புலம்பெயர்ந்த தமிழ் கலை இலக்கியவாதிகள் கடந்தவருடம் இதே காலப்பகுதியில் முன்வைத்ததையடுத்து அமைக்கப்பட்ட மேற்படி ஒன்றியம் ஒருவருடகாலமாக முன்னெடுத்த அயரா முயற்சிகளின் விளைவாகவே இந்த நான்கு நாள் மகாநாட்டை நடத்துவது இயலுமாகியிருக்கிறது.
இலங்கையின் தமிழ் கலை இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பலதுறைகளையும் சார்ந்த கலைஞர்கள் எவ்வளவுதான் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்க வேண்டியிருந்த போதிலும், தங்களது ஆத்மாவைத் தொலைத்துவிடாமல் இடையறாது தங்களது எழுத்தூழியத்திலும் கலைப்பணிகளிலும் ஈடுபட்டுக் கொண்டே வந்திருக்கிறார்கள். அவர்களின் படைப்புகள் பல தளங்களில் இருந்தும் வெளிக்கிளம்பிய வண்ணமேயிருக்கின்றன. இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களும் கலைஞர்களும் தொடர்ச்சியான இடர்பாடுகளுக்கு மத்தியிலும் தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்திய வண்ணமேயிருக்கிறார்கள் என்பதற்கு கலை இலக்கிய இதழ்கள், பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பெருக்கம் பிரகாசமான சான்றாகும்.
மூன்று தசாப்த காலமாக நீடித்து ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் முடிவுக்குவந்த உள்நாட்டுப் போர் தமிழ் மக்களைப் பெரிதும் அவலத்துக்குள்ளாக்கியிருந்தது. அந்த அவலத்தில் இருந்து இன்னமும் கூட பெருமளவுக்கு விடுபட முடியாதவர்களாகவே அந்த மக்கள் இன்றும் விளங்குகிறார்கள். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்குப் புறம்பாக, இலட்சக்கணக்கானவர்கள் தாய்நாட்டில் இருந்து வெளியேறி உலகின் பல பாகங்களுக்கும் சென்று புலம்பெயர் வாழ்வைத் தொடங்க வேண்டியதாயிற்று. அந்த வாழ்வில் இருக்கக்கூடிய சஞ்சலங்களுக்கு மத்தியிலும் தமிழ் எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்களது ஆற்றல்களைக் கனதியுடன் பதிவு செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். புலம்பெயராமல் சொந்த நாட்டிலேயே இருந்து கொண்டு இத்துணை காலமும் கலை இலக்கியப் பணிகளை முன்னெடுத்து வருபவர்களை உண்மையில் போராளிகள் என்றுதான் அழைக்க வேண்டும். உள்ளார்ந்த கலை இலக்கிய, ஊடகத்துறை ஆற்றல் மிக்கவர்கள் உலகின் எத்திசையில் வாழ நேரிட்ட போதிலும், தங்களது படைப்புகளை வெளிக்கொணர்ந்த வண்ணமேயிருக்கின்றனர். கலை இலக்கிய முயற்சிகளுக்கு ஓய்வோ ஒழிவோ இல்லை என்பதே இந்தச் செயற்பாடுகள் எல்லாம் பிரகாசமாக வெளிப்படுத்துகின்ற செய்தியாகும்.
போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் தங்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயமொன்று இல்லாதவர்களாக வெற்றிடமொன்றில் விடப்பட்டிருக்கின்ற இலங்கைத் தமிழ் மக்கள் தங்களது நியாயபூர்மான அரசியல் அபிலாசைகளுக்காக புதிய சூழ்நிலையின் கீழ் குரலெழுப்புவதற்கான களமொன்றுக்காக ஏங்கித் தவித்த வண்ணமிருக்கின்றனர். கடந்த கால அனுபவங்களில் இருந்து முறையான பாடங்களைக் கற்றுக்கொள்ள முயற்சிக்காமல் அத்தகைய களமொன்றை உருவாக்குவதற்கு பயனுறுதியுடைய செயன்முறைகளில் ஈடுபடக்கூடியதாக இருக்குமென்று நாம் கிஞ்சித்தும் நம்பவில்லை. அரசியல் வெற்றிடத்தில் இருந்து தமிழ் மக்களை மீட்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணிக்கு கலை இலக்கிய வாதிகளினதும் எழுத்தாளர்களினதும் ஆக்கபூர்வமான பங்களிப்பு இன்றியமையாததாகும். இலங்கைத் தமிழ் மக்களின் எந்தவொரு எதிர்கால அரசியல் செயன்முறையிலும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் விவேகமான அணுகுமுறையுடன் கூடிய பங்களிப்பு பயனுறுதியுடையதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இலங்கையில் நிலவும் தற்போதைய அரசியல் சூழ்நிலையைத் தெளிவாகப் புரிந்து கொண்டு புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் தங்களின் இரத்த உறவுகளுக்கு உதவுவதற்கான மார்க்கங்களை வகுக்க வேண்டுமென்பதே நாம் வலியுறுத்த முன்வருகின்ற முக்கியமான விடயமாகும். அரசியல் ரீதியில் நடுவீதியில் நிற்கின்ற ஒரு சமூகத்துக்கு மேலும் இடர்பாடுகளைத் தரக்கூடியதான தான்தோன்றித்தனமான செயன்முறைகளை புலம் பெயர் சமூகம் தெரிந்தெடுத்தலாகாது என்பதே எமது வேண்டுகோளாகும்.
இத்தகையதொரு பின்புலத்திலேயே, இலங்கை வாழ் தமிழச் சமூகத்துக்கும் புலம் பெயர் தமிழ்ச் சமூகத்துக்கும் இடையேயான இதய சுத்தியுடனான ஊடாட்டங்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த நிலையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை நாம் வரவேற்கின்றோம். இலங்கைத் தமிழ்மக்களின் வாழ்க்கையின் தரப்பாட்டை அல்லது எதிர்காலவாய்ப்பு நிலையை மேம்படுத்துவதற்கு எந்தெந்த வழிகளில் ஆரோக்கியமாக உதவ முடியுமென்பதை புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தவர்களுக்கு தெளிவுற விளக்குவதற்கு அவர்கள் மத்தியில் இருக்கக் கூடிய படைப்பாளிகள் தங்கள் ஆற்றல்களைப் பயன்படுத்த முடியுமென்று திடமாக நம்புகிறோம். சகல சமூகங்களையும் போன்றே புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் வேறுபட்ட கருத்து நிலைகளையும் சிந்தனைப் போக்குகளையும் கொண்ட பிரிவினர்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டில் பங்கேற்பதற்காக புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள படைப்பாளிகளுக்குப் புறம்பாக, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளும் பெரும் எண்ணிக்கையில் தலைநகர் வந்திருக்கிறார்கள். இவர்கள் சகலரிலும் சங்கமம் இலங்கைத் தமிழ் மக்களுக்கு அவர்களின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுணர்வை ஊட்டுவதற்கான கருத்தாடல் களமாக அமையவேண்டும் என்பதே தினக்குரலின் எதிர்பார்ப்பாகும். வெறுமனே கூடிக்கலையும் உண்டுகளித்துப் பிரியும் மகாநாடாக அமையாமல் தொடர்ந்து அக்கறையுடன் முன்னெடுக்கப்படக்கூடிய செயற்பாடாக அமையக்கூடிய நடைமுறைச்சாத்தியமான ஆக்கபூர்வப் பணிகளை முன்னெடுக்க வேண்டுமென்று சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை வாழ்த்துகிறோம்!
நன்றி:தினக்குரல் 

No comments: