Tuesday, March 30, 2010

கட்டுரை


ஆண்கள் -பெண்கள் மற்றும் அவதூறின் அரசியல்
-அம்ருதா-

இருண்ட கர்ப்பக்கிரகங்களுள் இருள்நிறத்திலான பெண் தெய்வங்கள் கருணைபொலிய, பொழிய காலகாலமாக அமர்ந்திருக்கிறார்கள். ‘ஆணும் பெண்ணும் சகவுயிர்கள்’ என்று, கைதட்டலைக் கறக்கும்விதமாக குரலுயர்த்தி மேடைகளில் முழங்கும்போது, பார்வையாளர்கள் பழக்கம் காரணமாக உணர்ச்சிவசப்பட்டு கைதட்டுகிறார்கள். பட்டிமன்றங்களோவெனில் ‘பெண்களே குடும்பத்தைக் கட்டிக்காக்கிறார்கள்’என்ற பெருந்தன்மைத் தீர்ப்பளித்து நிறைவுறுகின்றன. ‘இட ஒதுக்கீடு’ இன்னபிற சொற்கள் அரசியல் வட்டாரங்களில் அடிக்கடி புழங்கிக்கொண்டே இருக்கின்றன.இருந்தபோதிலும் பெண்கள் இன்னமும் இரண்டாம் பாலினமாக நடத்தப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

பெண்ணாகப் பிறந்ததை ஒரு துருப்புச்சீட்டாக, பிழைப்பின் கருவியாக, ஏமாற்றும் தொழிலின் மூலதனமாகப் பயன்படுத்தும் ஒரு சில பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அது அந்தந்த நபர்களின் தனிப்பட்ட குணாதிசயம் சார்ந்ததாகும். அத்தகையோர் ஆணாகப் பிறந்திருந்தாலும் அவ்விதமே நடந்துகொண்டிருப்பர். சமுதாயத்தின் பாரபட்சங்களால், அடக்குமுறைகளால், ஓரவஞ்சனையால், ஒழுக்கவிதிகளால் உண்மையிலும் உண்மையாக பாதிக்கப்பட்ட-பாதிக்கப்பட்டுவரும் பெருவாரியான பெண்களைக் குறிக்கவே ‘பெண்’என்ற சொல் இந்தப் பத்தியில் பிரயோகிக்கப்படுகிறது.

சொத்துரிமையைக் கையகப்படுத்த விரும்பிய ஆண்களால், தாய்வழிச் சமூகக் கட்டமைப்பு சிதைக்கப்பட்டு, பிறந்த குடும்ப அமைப்பிலிருந்து பெண்ணின் வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டதாக வரலாறு சொல்கிறது. குடும்பம் ‘அருளிய’ தாய், மனைவி என்ற தெய்வீகப் பீடங்களில் புளகாங்கிதத்தோடு அமர்ந்து சுயத்தினை இழந்துபோன பெண்களின் வரலாறு பரிதாபகரமானது. அவ்வாறான அடிமைச்சுகவாசிகளது மனதின் அடியாழத்துள்ளும் விடுதலைக்கான வேட்கை நிலத்தடி நீராக இருக்கக்கூடும். பழக்கப்பட்ட கூண்டுச்சுகம் விரும்பும் கிளிகளுக்கு வானம் சிறகெட்டாத தூரமே. ஆனால், ‘நானும் நீயும் ஒன்றாகவே படைக்கப்பட்டோம்… உனக்குரியவை அனைத்தும் எனக்குரியவையே’என்று பேசப் புறப்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் எண்ணற்றவை.

ஒரு குடும்பத்தில் வளரும் பெண்பிள்ளை மனைவி, தாய் எனும் உருமாற்றங்களுக்குத் தயார்ப்படுத்தப்படுகிறாள். சிமொன் தி பொவார் சொன்னதுபோல, “பெண்கள் பிறப்பதில்லை… அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்” ஆனால், ஆண்பிள்ளை திருமணத்தின் முன்னும் பின்னும் ‘ஆணாக’வே நிலைத்திருக்கிறான்.குடும்பம், கலாச்சாரம், மதம் போன்ற கிடுக்கிப்பிடிகளிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு பொதுவெளிக்கு வரும் பெண்கள் எதிர்கொள்கிற பிரச்சனைகள் விசித்திரமானவை.கலாச்சாரத்தின் பெயரால், மதத்தின் பெயரால் மிகச் சாதாரணமாக ஒரு பெண்ணைக் குற்றஞ்சாட்டமுடிகிறது. அவளுடைய நடத்தையை, உடையை, சிந்தனையை, எழுத்தை, பேச்சை கேள்விகேட்க முடிகிறது. ‘நீ இந்தச் சமுதாயத்திற்குரிய பெண்ணல்ல’என்று ஒதுக்கிவைப்பதன் வழியாக, மனவுளைச்சலையும் அயர்ச்சியையும் ஏற்படுத்தி, அவளுடைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க வைக்கவும் முடிந்திருக்கிறது. பெண் கவிஞர்கள்‘ஆபாசமான சொற்களைப் பிரயோகித்து ஆபாசமான கவிதைகளை எழுதுகிறார்கள்’என்றொரு குற்றச்சாட்டை, அதன் ஆழம் புரியாமல் போகிறபோக்கில் பேசுகிறவர்களைப் பார்த்திருக்கிறோம். ‘கவிதை ஒன்றை எழுதிவிட்டு ஆங்காங்கே சில கெட்டவார்த்தைகளைச் செருகிவிடுவார்களாயிருக்கும்’என்று அண்மையில் ஒருவர் சலித்துக்கொண்டார். வார்த்தைகளுள் கெட்ட வார்த்தை எது? நல்ல வார்த்தை எது? கெட்ட வார்த்தைக்கான வரைவிலக்கணந்தான் என்ன? என்ற கேள்விகளைப் பற்றி இன்னொரு நாள் பேசலாம். (அப்படியொருநாள் வரவே போவதில்லை என்பதே உண்மை) தன்னுடைய உடலை, உணர்வுகளை, தன்னுடைய படைப்புகளில் வெளிக்கொணர ‘அவளே’தகுதியுடையவள் என்பதை இப்படிப் பேசுகிறவர்கள் உணர்வதில்லை. ஒரு படைப்பின் கருவாக்கமும் உருவாக்கமும் எவர் மனதில் நிகழ்கிறதோ அவரே சொற்களைத் தேர்ந்தெடுக்கிறார். ‘ஆகச்சிறந்த படைப்பாளி’ என்று வியக்கப்படுகிற கடவுளுக்கு (அப்படி ஒருவர் இருந்தால் - ஒருத்தி என்று சொல்வது வழக்கமில்லையே…) மயிலையும் -காட்டெருமையையும், மலரையும் - முள்ளையும் படைக்க முடியுமெனில், ‘அவளுக்கு’ மட்டும் அவ்வுரிமை கிடையாதா? வலிந்து திணித்தலற்று இயல்பாக முகிழ்த்து வருகின்ற படைப்பினுள் கெட்டவார்த்தை என்று சமூகத்தினால் சுட்டப்படுகிற ஒன்று இருக்குமாயின், அது கேலிக்குரியதோ கேள்விக்குரியதோ அன்று.
ஆறாத காயத்தைப் பிரித்துப்பார்க்கும்போது அதிலிருந்து குருதி கொப்பளித்துப் பாய்வதுபோல, இதுநாள்வரை கிடைக்காத சந்தர்ப்பம் கிடைக்கும்போது காலங்காலமாக அடக்கிவைக்கப்பட்ட உணர்வுகள் எழுத்தாக, பேச்சாகப் பீறிடுகின்றன। பாசாங்கற்ற கண்ணீர்,கோபம்,காமம் தன்னியல்போடு எழுத்தில் வெளிப்படும்போது, அது கவனிக்கப்படுகிறது. மாற்றாக, சில தன்துருத்திகளும் விளம்பரமோகிகளும் அதை மடைமாற்றி, பொதுவெளியில் இயங்குகிற அத்தனை பெண்கள்மீதான வெறுப்பாகத் திசைதிருப்பிவிடுவது துர்ப்பாக்கியமானது.

‘சில பெண்கள் ஆபாசமாக எழுதுகிறார்கள்; இப்படியான எழுத்துக்கள் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன’ என்று கூச்சலிடுபவர்களிடம் கேட்பதற்கென்று ஒரு கேள்வியுண்டு. நீங்கள் சொல்கிற சமுதாயம் உண்மையில் நீங்கள் சொல்கிற ஒழுக்க விழுமியங்களோடு இயங்கிக்கொண்டிருப்பதாக நீங்கள் நெஞ்சறிய நம்புகிறீர்களா? அவ்வாறெனில் எய்ட்ஸ் போன்ற உயிர்கொல்லி நோய்கள் நமது சமூகத்தில் குறிப்பிடத்தக்க விகிதாசாரத்தில் பரவியிருக்கக் காரணந்தான் என்ன?

‘முலைகள்’என்ற தலைப்பை ஒரு கவிதைத் தொகுப்பிற்குச் சூட்டிய காரணத்தால் அளவிறந்த விமர்சனங்களுக்கு ஆளானவர் கவிஞர் குட்டி ரேவதி। அதே தலைப்பை ஒரு ஆண் சூட்டியிருந்தால் இத்தனை சர்ச்சைகள், இருட்டடிப்பு, ஓரங்கட்டல்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கும் பல கவிஞர்களின் (ஆண்) கவிதைகளிலும் கதைகளிலும் பல ‘யோனிகள்’வருகின்றன. பல நூறு ‘முலைகள்’இடம்பெறுகின்றன. கலவிக் காட்சிகள் சித்தரிக்கப்படுகின்றன. அண்மையில் வா.மு.கோமுவின் புத்தகம் ஒன்றைக் குறித்து உயிர்மை வெளியீட்டு விழாவில் விமர்சித்துப் பேசிய எழுத்தாளர் முருகேச பாண்டியன் “இதைப் படித்தபோது இங்கேயுள்ள பெண்களில் பலர் பாவாடை நாடாவைக் கழற்றிக் கையில் பிடித்துக்கொண்டிருப்பதான சித்திரம் தோன்றிமறைந்தது”என்றார். ‘சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்’என்ற நாவலை ஒரு பெண் எழுதியிருந்தால் என்னவாகியிருக்கும் என்று நினைத்துக்கொண்டபோது, சமூகத்தின் பாரபட்சம் சீற்றமளிப்பதாக இருந்தது.

பெண்களைப் பற்றி அவதூறு பேசுவது என்பது தமது பிறப்புரிமைகளுள் முக்கியமானதொன்று எனச் சில ஆண்கள் (குறித்துக்கொள்ளவும் சில ஆண்கள்) நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இவள் ‘சீதை’எனவும், இவள் ‘பரத்தை’எனவும் முத்திரை குத்தவும் தாங்கள் உரித்துடையவர்கள் என்பது அவர்களது எண்ணமாயிருக்கிறது. ஒருவனின் உதடுகளால் வேசியென முன்மொழியப்படுமொரு பெண், அவளைத் தொடரும் கலாச்சாரக் கண்களனைத்தாலும் வேசியாகவே வழிமொழியப்படுகிறாள். அவர்களது கீழ்மனம் விதம்விதமான கற்பனைச்சரடுகளை இழுத்துவிட்டுக்கொண்டேயிருக்கிறது. ‘விடுதியில் அழகிகள் கைது’என்று மொண்ணையாகச் செய்தி வெளியிடுகிற ஊடகங்களுக்கும், ‘அவள் ஒரு தேவடியாள்’என்று, கூடிக் குடித்துவிட்டுப் பேசுகிற ஆண்களுக்கும் வேறுபாடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. விபச்சாரம் என்பது ஒரு பெண்ணால் தனியாக நிகழ்த்தப்படுவதில்லை. அப்படியானால், அங்கே அந்தப் பெண்களோடு கலவியிருந்த ‘அழகன்கள்’செய்திகளிலிருந்து மறைந்துபோவது எப்படி? பொதுப்புத்தி சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கிற சாதாரண சமூகத்தினரைக் காட்டிலும், இலக்கியமும் தத்துவமும் இன்னபிறவும் படித்து அறிவுஜீவிகள் என்று தம்மை அறிவித்துக்கொண்டிருக்கும் சிலர் அவதூறுகளைப் பரப்புவதன் வழியாக அதிகப்பட்ச வன்முறையைப் பெண்கள்மீது செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். பொதுவெளியில் இயங்கும் பெண்களைப் பற்றிய கட்டுக்கதைகளைச் செவியுறும்போது மனசு துணுக்குறுகிறது. உறுதியும் தெளிவுமற்ற பெண்களை அத்தகைய அவதூறுகள் மீண்டும் வீட்டுக்குள் விரட்டிப் புண்ணியம் கட்டிக்கொள்கின்றன.

பெண்ணை, குடும்ப அமைப்பு தாயும் மனைவியுமாக்கி முடக்குகிறது.கலாச்சாரம் பதிவிரதையாக்கிப் பதுக்குகிறது. இலக்கியம் கண்ணகி என்கிறது. கணவன் பிறபெண்ணுடன் கலவி முடித்துத் திரும்பிவரும்போது அவனது கால்களைக் கழுவி ஏற்றுக்கொள் எனக் கற்பிக்கிறது. இதிகாசம் சீதையாக்குகிறது. கணவன் கீறிய கோட்டைத் தாண்டினால் ‘ஐயோ ஐயோ என்று போவாய்’ என்கிறது. செவியுறும், வாசிக்கும், பார்க்கும், அனுபவிக்கும் எல்லாமும் மனிதனின் ஆறறிவைச் சந்தேகிக்கத் தூண்டுகின்றன. பாரபட்சங்களும் தளைகளும் நிறைந்த இந்தக் குடும்ப அமைப்பின், சமூகத்தின் அடிப்படைப் பிறழ்வுகள் குறித்து முதலில் கேள்விகள் எழுப்பக் கற்றுக்கொள்வோம். அடுத்த, அதற்கடுத்த தலைமுறைகளிலாவது நமது ஆறாவது அறிவு ஓரவஞ்சனைகளற்று இயங்கவாரம்பிக்குமென பிரார்த்திப்போமாக!
நன்றி :தமிழ்நதி

No comments: